Tuesday, 13 November 2018

பிஞ்சில்ப் பழுத்த வெய்யில் !


 ஒரு அமைதியான இடத்தில மரத்துப் போய்விட்ட மனதின் ரம்மியமான அலைவரிசையை ஒருமுறை  மவுனத்துக்கு சமாந்தரமாகப் பயணிக்கவைத்து , காலம் என்பதை  வாழ்க்கையிலிருந்து  ஒதுக்கி வைத்துவிட்டு  எவ்வளவுநேரம் நிம்மதியாக இருந்து நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்கமுடிகிறது  என்றால் கொஞ்சம்  " எதையுமே  பிடிக்க முடியாமல்,  விட்டத்தை சுட்டிக் காட்டி பெருமூச்சு விட்டுச்   சமாளிக்கும் "   களேபரமான பதில்தான் வருகிறது.  
                 
                                               ஏனென்றால் பலசமயம் கவிதை எழுத்துவத்துக்கான உயிரோட்டமான சில அம்சங்கள் நம்மைச் சுற்றி நடக்கும், என்னதான் முக்கியத்துவம் கொடுக்கும்  கட்பனைப்புனைவுகளை நீட்டி வைத்தாலும் வாழ்வியலில் உள்ள ஒரு காட்சியை ஜோசித்து எழுதமுடியாது , அது  இதயத்திலிருந்து வந்தது போலிருக்காது .


                                                                   அதனால  ஒருநாள்  மெல்லிய குளிரிலும் ஸ்டோக்ஹோலாம் நகரத்தில் ஒரு  சதுக்கத்தில் ரோமேனிய ஜிப்ஸி நாடோடி ஒருவர் நின்று கொண்டு   வயலின் வாசித்துக் கொண்டிருந்தார் . கொஞ்சநேரம் இருந்துபார்த்தேன் . சிலர்  போகிற போக்கில் சில்லறை வீசிவிட்டுப் போகிறார்கள். அவரின்  இசை க்ளாசிக்கல்  அமர்க்களம்  . ஆனால் நின்று கவனிக்கவோ, கேட்டு ரசிக்கவோ  யாருக்கும் நேரமில்லை.                                                                                          
                                                                                  அவசரத்தில் பரபரத்துக் கொண்டிருக்கும்  எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சூழ்நிலையில்  ,  மனிதர்கள் கங்காருபோல  தாண்டிச் செல்கிறார்கள். சுதேசிய  வெள்ளையர்கள், வந்தேறிய  கறுப்பர்கள். நாடுதாண்டிய  ஆசியர்கள். கண்களை அகலவிரித்தபடி  சுற்றுலாப்பயணிகள்,உட்சாக   இளைஞர்கள், வயதான  முதியவர்கள். இன, நிற, வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரும் ஒரு இடத்தைக் கடந்தபடி   புகுந்து எதுவுமே நடக்காததுபோல், எதுவுமே கேட்காதது போல் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.                                            ஆண்ட்ராய்டு  வைத்திருக்கும் இளையவர்கள் இரண்டு  காதிலும் இரைச்சலை அடைத்துக்கொண்டு நடக்கிறார்கள்;  செயற்கயான  ஓசைகளில் கரைந்து நிஜத்தைப்  புறக்கணிக்கிறார்கள்.
விசிஷ்யங்களை   நின்று கவனிக்க விரும்பிய குழந்தைகள் மட்டும்தான் அலாதியான அனுபவம் . அவர்களை அவசரப் பெற்றோர்கள் தரதரவென்று இழுத்துப் போகிறார்கள் , அவர்கள் ஏதோவொரு அதிசயத்தைத்   திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போகின்றனர் .


                                                        இந்த நடைமுறை  அனுபவம்  எழுப்பும் முக்கியமான கேள்வி, அனுபவித்தல்  என்றால் என்ன ? அதைக்   கவிதையாகவோ, கதையாகவோ, பதிவாகவோ .  மொழிபெயர்தல்  என்றால் என்ன ? அது  அனுபவித்து, அளவிடக் கூடியதா, அல்லது உள்வாங்கப்படும்  அந்த நேரத்து மன நிலையின் பிரதிபலிப்புதானா ?
                                                                       
                                                      கொஞ்சம் ஆழமாகவே சொல்வதென்றால்   ஒரு மேலை நாட்டின்     நவீன நகர வாழ்க்கையின் அவசரமும் அலட்சியமும் அபத்தமும் கலந்த சரியான கலவைக்குள் சமாளிக்க முயன்று  மோதி மோதி விலகுகிற ஒரு கவிதையைக் கண்டுபிடித்து வெளியே எடுப்பத்துக்கு நிறையவே சாமர்த்தியம் தேவையாக இருக்கு.
எதிர்பார்ப்புகளற்ற
பிரமிப்புகளும்,
ஒழுங்கிலிருந்து விலகும்
பரவச உணர்ச்சிகளும்
மர்மமாகவே போய்க்கழிந்துவிட்டது !

இத்தனையாண்டுகளில்
திரும்பிப்பார்க்க
மதிப்பீடுகளேதுமின்றி
இயல்பாகவே வாழ்க்கையுமிருந்திருக்கு !


இப்போதெல்லாம்
இயலாமை திகட்டும்
சொற்கள் புதைந்து கிடக்கின்ற
ஆதர்சமொழியொன்றின்
பாவனைகள் தொடங்கிவிட
இன்றைய மதிப்பீட்டில்
பிறப்பை அடித்தளமாகக் கொண்ட
தினந்தினம்
காலாவதியாகிக்கொண்டிருக்கலாம் !


ஆனால்
வேறோர் அனுபவ மதிப்பில்
வாழ்நாளின் வயதென்பதும்
முக்கியமானதாகத்தான் தெரிகிறது !*

வழிந்தோடும் ஆற்றுநீரில்
படிந்திருக்கும் பாசியைப்போல
கொண்டாடா  குறையாத
பெருநினைவுகளை மீட்டெடுக்கும்
ஞாபகங்கள்
கண்களிண் நீரோடை !

அதில்
ஒரு கூழாங்கல்லை
அலையெழுப்ப விசிறி எறியும்போது
சிலநொடிகள் வானவில்லை
வேப்பமரத்தின்
குளிர்மையான மூச்சுக்காற்றை
மீண்டுமொரு மழையை
கவர்ந்துசெல்லும்
செண்பகப்பூ வாசத்தை
சட்டெனக் கண்டெடுக்கலாம் !


*பின்நிழலாக தொடர்ந்து
பேரன்பை
மனதாரத் தூக்கிக்
கொண்டாட வைத்த
உரையாடல்களுக்கெல்லாம்
என்ன நடந்தது ?


தலைமுறைகள் முதிர்ந்த
காலகட்டமொன்றை
நிர்மூலமாக்குகிறதுக்கென்றே
தூரமாகிப்போன
காலம் காத்திருக்குதா ?


சந்திப்புக்களின் இடைவெளிகள்
நீண்டதாயிருப்பதென்னவோ உண்மைதான் !
ஆனாலும்
பிரிக்கக்கூடாத உறவின்
அத்தனை பெருமிதங்களையும்
கவிழ்த்து
கேள்வி கேட்கிறதுபோல
அவமானப்படவைக்கிறது
சடுதியில் முறித்துக்கொள்ளும்
மவுனம் !


*மல்லாந்து கிடந்தவாறு
பின்தங்கிய
நட்சத்திரங்களை
ஒன்றுவிடாமல் எண்ணுவது ,
அவ்வப்போது
தொடர்வழி வாகனங்கள்
வேகமெடுக்கும் போது
உதறிக்கொள்வது ,
பக்கங்களில் வழிந்து
ஈரத்தரையில் கிடந்தது நெளியும்
மழைத்தண்ணி ,
இரவுகள்
அலைவரிசைகளை
மாற்றிவைத்தபடி
எல்லாவற்றையும் இயக்குகிறது,
ஒரு காரணமுமின்றி
அன்பளிப்பாகக் கிடைத்தது போல
தினம்தினம்
விடியும்போதெல்லாம்
எப்படி இருந்ததோ
அப்படியே !
ஒரு வித்தியாசமும் இல்லை. !


*

வாழ்வெனும் பெருநதி
நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதில் ஒரு துளி.
இன்று போலிருக்கிறது
மற்றொரு துளி

நாளை போலிருக்கலாம்
“அப்போது ” எனும் விழிப்பில்
இறந்த காலங்களின் நிகழ்வுகள்,
அவை
உண்மையில் நடந்ததா ?
அல்லது
நாம் கண்ட கனவா?
யாருக்குத் தெரியும்?


*

வாடிக்கையாகவே
அதிர்வுணர
நன்றாகவே தெரிந்துவைத்திருக்கும்
அனுபவம்,
பேச்சுவாக்கில்.

வேடிக்கைக்காக ஆரம்பித்து
அழுத்தமாக
உபதேசங்களின்றி
சுயபுத்தியில் தேர்ந்தெடுக்கும்
பொறுமை ,
அவரவருக்குரிய
நீள்வட்டப்பாதையை ஏற்றுக் கொண்டு
இடராக
எதிர்ப்படுவதையெல்லாம்
தவிர்ப்பதபடியே
நமக்குள்
தகவலைப் பரிமாறிக் கொள்கின்ற
நம்மை
உங்களுக்கு
அவ்வளவாகத் தெரிந்திருக்க
நியாயமில்லை !


*

ஆழத்துக்குள் இறங்கி
வைரம்பாய்ந்த 
 மனதை
அசைத்துத் தங்கி விடுகிற
ஒரு 

போதிமர
தரிசனத்தைச் சொல்லி
மஞ்சள்வெளி நெடுகிலும்
சுள்ளிகள் போட்டுத் தீவைத்து
அத்தனை இயல்பாய்
அத்தனை இயற்கையாய்
குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது

பிஞ்சில்ப் பழுத்த
வெய்யில் !


*


ஒரு
மிகப்பெரிய மாற்றத்தின்
ஆரம்பப்புள்ளியென்று
எதுவுமில்லை !
முழுமையான மனத்திருப்தி...

களிமண் பொம்மையாகியிருக்கும்
இன்றைக்கெல்லாம்
சுவாரசியங்களும்
விட்ட குறை
தொட்ட குறையாகப்
பாதிதூரம்தான் கடந்திருக்கிறது !
புரிந்துணர்வு சமயங்களில்
நமக்குளே
ஒருவரையொருவர் தேற்றி
முன்னகர்ந்திருக்கிற
இத்தனை வருடங்களில்
வாழ்க்கையோடு
எப்போதுமில்லாதவாறு
ஒப்புமை செய்துகொண்டேயிருப்பது
சலிப்புத்தருகிறது!


*

லயிப்போடு ஈடுபடும்
நகர்விலிருந்து
எத்தனை மாற்றங்களைக்
கடந்து வந்திருக்கும்
ஒரு இசைக்குறிப்பு ?


ராகங்களில்
கனமாக சுரங்களிருக்கும்போது
அடர் காடுகளில்
அபத்தமான தாளநடையை
எப்படித் தேர்வுசெய்கிறது
ஒரு புல்லாங்குழல் ?


ஒழுங்கமைப்பில்
சிதறல்கள் இருந்தாலும்
ஒரு
இளமூங்கிலொன்றின்
சிறு முனகல்களையும்
கேட்கக்கிடைக்கும்
ஆலாபனையாக்கிவிடுகிறது
காற்றின் குரல் !


*

திட்டமிடப்படாத
பயணங்கள்
கிளைத்தெடுத்ததில்
எவைகளை ஸ்வீகரித்தேன் ?
விளங்காத விஷயம்தான்!

ஒவ்வொரு பேருந்திலும்
தலைக்குமேலே
கரகரக்கும் சப்தங்கள்,
ஒவ்வொரு புகையிரதத்திலும்
உள்நோக்கி நுழையும்
ஜன்னலோரத் தெறிப்புகள்,
ஒரு நிகழ்வில்
இரவாகட்டும்,
பகலாகட்டும்
பழகிப்போன
மழையிருட்டுகளே
துண்டுக்காட்சிகளாகக்
கசிந்து கொண்டேயிருக்கிறன !


*

சமயங்களில்
தீர்மானிக்கமுடியாத
விபரீதமான முடிவைத் தேடிக்கொள்வது
எனக்குள் துருவும் !
பின்தொடர்ந்து 

அதற்குத் தகுந்தாற் போல்
அவளாகவே
எதிர்வினை செய்வாள்
அது முழுதும் உண்மையா?
முடியிற காரியமா ?
எனக்குத் தெரியாது. !
ஒரு முறை
“என் இறுதிக்கணம் இதுவாகவிருக்குமா ?” என்று
இதயத்தை மூடிவிடுவதுபோல
நினைத்துக் கொண்டே
அந்தரத்தில் அமர்ந்திருந்தேன்.
அவளோ
முகத்தை உற்று நோக்கி
“அப்படியெல்லாம் நடக்காது ” என்றாள் !
நினைத்த நேரத்தில்
என்னைப் படித்தாளா
அல்லது
நினைத்த இடத்தில
என் எண்ணத்தைப் படித்தாளா ?
அதுவுமெனக்குத் தெரியாது !


*

அவகாசமேயின்றி
சந்தித்தவர்கள் ,
இன்னும் சந்திக்காதவர்கள்
நாளைக்கும் நிலைக்கிறவர்கள்
பேரமைப்பில்

அனுபவத்தின் சுவடுகளை சுமக்கிற
உறவாடுதல் என்பது
மொத்தத்தின் ஒரு இயல்பு
அது
நிலப்பரப்பில் புழுதிமண்டி
அமைதியாய்க் கிடக்கிறது.
உணர்வு கவிந்திருக்கிற
அதனுள்ளும்
ஏதோவொரு அளவுக்குதான்
மழை பெய்கின்றது
ஏதோவொரு அளவுதான்
மண்ணைத் தடயமாக்குக்கிறது
ஏதோவொரு அளவுதான்
நிலம் நனைகிறது
ஏதோ ஒரு அளவுதான்
அன்பும் கிட்டுகிறது.!


*

நீரோட்டத்தில்
இறகுகள் உதிர்ந்து விழுந்த
மஞ்சள் இலைகளை
படபடத்தபடியான பயத்தில்
சரிகைக் கறைபோல மிதக்கவிடுகின்றது

நீல நதி !


வெற்றுச் சமாதானங்கள்
தேய்ந்து விடுகின்ற
பாய்ச்சலுடன்
அலைமேல் விழுந்து மோதி 
திடீரென அந்நியப்பட்டு
மூச்சுத் திணறல்களுக்கு நடுவே,
நெருங்கி
 பின்பறந்து அலைந்து 
 இலைகளைக்
கையளவில் வாரியணைத்து
கிடைத்ததை பற்றிப்
பின் உதறி விலகிக்கொண்டிருக்கிறது
நீளக் கரை .!
*

நீங்கள் தான்,
இன்றைய நீங்களேதான்
ஒவ்வொரு
இற்றை நிமிடத்திலும்
நினைவுக்காட்டின் மாமழையில் ...

அன்புள்ளம் சிந்திய கண்ணீரையாவது
தடம்புரளும் கன்னங்களில்
வழிந்தோடிவிடவிடாமல்
மறுபடியும் மறுபடியும்
வயதான பின்னொரு நாளைக்காக
தேடியெடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.!
ஏனென்றால்
புத்திப் பிரஞ்ஞையின்
நிழலையே நீர்வாணமாக்கி
அத்துமீறல் செய்தபடி
தன்
கோரமுகத்தைப் பதிவுசெய்ய
உள்நுழைந்துவிடலாம்
நினைவிழப்பு !


*