Sunday, 7 February 2016

அந்தோன்...

மேகங்கள் ஓடிக்கொண்டிருப்பது  போலவே  காலமும் கடந்து கொண்டே போய்க்கொண்டிருக்கு. அதில் சந்திக்கும் சம்பவங்களில் அந்த அந்த நேரமே வாழ்க்கை கொஞ்சநேரம்  ஒட்டிக்கொண்டு  இருக்கும். அதில் இன்பம் இருக்கலாம், துன்பமும் இருக்கலாம். திரும்பிப் பார்க்கும்போது நினைவுகள் மட்டுமே ஓடிப்போய் அதனுடன் இன்னொரு முறை இயல்பாகச்  சேர்ந்துகொள்ளும்.  

                                                 சென்ற வருடக் கோடைகாலம் , அளவுக்கு அதிகமா ஒஸ்லோவில் வெயில் வெளிச்சம் விழுத்தி  நகரம் எங்கும் வெப்பம் எரிச்ச ஒரு நாள், வெளிநாட்டுக் குடிபெயர்வாளர் அதிகம் நடந்து திரியும், பாகிஸ்தானியர் டாக்சி ஓடிக் காசைத் திரத்தும் ,கிழக்கு ஆபிரிக்க அரசியல் அகதிச் சோமாலிகள் வேலை செய்யாமலே அலுப்பில் ஓய்வு எடுக்கும், கச கச எண்டு பல்லினக் கலாச்சார மக்கள் தள்ளி விழித்தி நெருக்கி பல்லினக் கலாச்சாரம் முட்டி மோதிக் கொண்டு நிற்காமலே ஓடிக்கொண்டிருக்கும் குருன்ட்லான் சேரி வெளிச்சமாக இருந்தது 

                                       ஒஸ்லோ நகரத்துக்கு நடுவில் உள்ள  அந்த இடத்தில் பஞ்சாபித் தந்தூரிக் கோளிக் கால் வாசம் காற்றில் மிதக்கும் ஒரு சேவல் போலக் கொண்டை வைச்ச சர்தார்ஜி சிங்கின், சிக்கென் ரேச்ற்றோறேன்டின் முன்னால் இருந்த நடை பாதையில் அவன் அரை வாசி தூங்கி விழுவது போல இருந்த போதும் ,என்னைக் கண்டதும் விழித்து கையைக் தூக்கிக் காந்தி தாத்தா போலக் கும்பிட்டு, ஆங்கிலத்தில்

                       " மூன்று நாள் சாப்பிடவில்லை " 

                                           எண்டு வயிற்றை தடவிக் கேட்டான்.  

                                                  நான் குருன்ட்லான் சேரிக்கு அப்போது தண்ணி அடிக்க போய்க்கொண்டிருக்கிற நல்ல சுப முகூர்த்த நேரம் அவன் இடைமறித்து " மூன்று நாள் சாப்பிடவில்லை " எண்டு வயிற்றை தடவிக் என்னைக் கேட்டது மனிதாபிமானத்தை கொஞ்சம் உரச , அதில நிண்டு ஜோசிதேன். இந்த உலகத்தில் ஒன்றுமே உருப்படியாக இல்லை.  ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை என்று  எப்பவோ படித்த வாசகம் நினைவு வந்தது . 

                                   சுவாரசியம் இல்லாத என்னோட கோடை விடுமுறை நாட்களை கொஞ்சம் வெளி உலகத்தோடு ஐக்கியமாகி சுவாரசியம் ஆக்குவது என்ற உயர்ந்த சிந்தனையோடுதான் நானே தண்ணி அடிக்கப் பப்புக்குப் போய்க்கொண்டிருக்கிற நேரம் , இவனுடன் சேர்ந்து இன்றைய நாளை ஏன் செலவு செய்யக் கூடாது எண்டு நினைத்தேன். யாருக்கு தெரியும் இவனே இந்த உலகத்தின் மிகவும் சுவாரசியமான மனிதனாக இருக்கலாம், 

                                   விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையில்  எப்பவுமே அடுத்தவர் கற்றுக்கொள்ள நிறைய விசியம் அதன் பாட்டில் சொல்லிக் கொடுக்க இருக்கும்  என்று சுவிடனில் பல வருடம் முன் அல்கஹோளிஸ்ட் என்ற மடாக்குடியர் பலர் சொல்லக் கேட்ட போது உணர்ந்து இருக்குறேன் . ஆனாலும்,. நான் ,திட்டமிட்டு உருப்படியா நீண்ட நாள் பலன் கொடுப்பது போல ஒண்டும் செய்வதில்லை,பதிலாக " ஒன் த ஸ்பாட் " இல மட்டும் உதுவுவேன் ,

                                         நானே ஒரு விதத்தில் பிச்சைக்காரன் இந்த பணக்கார நாட்டில், அதால்  பிச்சைக்காரருக்கு காசு எப்பவும் சில்லறைக் காசு கொடுப்பேன், காரணம் எனக்கு வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் " இரக்க குணம் எல்லாம் ஒண்டும் இல்லை. பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து, மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்  என்று  தெரிந்தாலும்  அதைவிட வலுவான வேற ஒரு காரணம் இருந்தது  . 

                                              என்னோட பாட்டி சின்ன வயசில் " பிச்சைக்காரருக்கு உதவுவது ஏகாதசியில் விரதம் இருந்தாக் கிடைக்கும் பலன் போல புண்ணியம், நாங்க செய்யும் பாவங்களை அது நீக்கி அடுத்த பிறப்பிலும் மானிடப்பிறப்பு கிடைக்கும் " எண்டு சொன்னதாலும், நான் கொஞ்சம் அதிகமா பாவங்கள் செய்வதாலும், கடவுள் நம்பிக்கை இல்லாடியும் ,பாட்டி மீது நிறைய நம்பிக்கை இருந்ததாலும் எப்பவும் கொடுப்பேன், என் பாவங்கள் அப்படியாவது அறுபடட்டும் எண்டு அப்படி செய்வேன், 

                                        இந்தப் பிச்சைகாரன் பார்பதுக்கு ஒஸ்லோ முழுவதும் தெருவோரம் படுத்து உறங்கும் ,பாவப்பட்ட கிழக்கு ஐரோப்பிய ரோமானிய நாட்டுக்காரன் போல இருக்க ,அவன் தலை மயிர் அலுமினியம் சட்டிய தலையில கவிட்டு அளவெடுத்து வட்டமா வெட்டிய மாதிரி வட்டமா இருக்க ,வறுமைக்கு முகவரிபோல கொஞ்சம் அலங்கோலத் தாடி வளர்த்து அது முகத்தை இருட்டாக்க ,அவன் தாடைகள் உள் ஒடுங்கி,முகவாய் தட்டையா, கை விரல்கள் நடுவே ஒரு பாதி சிகரட்டை இறுக்கிப்பிடித்துக் கொண்டு, மறுகையில் ஒரு புலி ஸ்டிகர் ஒட்டிய ஒரு லைட்டர் வைச்சுக்கொண்டிருந்தான் 

                                     ஒஸ்லோவின் குளிரை வீடு வாசல் இல்லாமல் தெருவோரம் திறந்த வெளியில் சமாளிக்க ,வடமராட்சி பருத்தித்துறையில் பணங்காய்ப் பினாட்டு விக்கும் பெண்கள் கட்டுவது போல ஒரு மொத்த துணியை இடுப்புக்கு கீழே சுற்றி , ஒரு குளிர் காலக் கம்பளியை பைபிள் காலத்தில் செம்மறி ஆடு மேப்பவர்கள் சுற்றுவது போல மேல் உடம்பில் சுற்றிக்கொண்டு, கழுத்தில வெள்ளி ரோமன் கத்தோலிக்க ஜேசுநாதர் சிலுவை தொங்கவிட்டு, ஏறக்குறைய அவன் உருவம் அந்தோனியார் சுருவம் போல அமத்தி அடக்கமா இருக்க பார்த்துப்போட்டு

                           " உன்னைப் பார்க்க அந்தோனியார் போல இருக்குறாய் " எண்டேன் சிரித்துக்கொண்டே.

                              அவன் கொஞ்சம் ஜோசித்துப் போட்டு சிரித்துக்கொண்டே, " என்ன சொல்லுகின்றாய் " என்றான்,

                                 நான் அவன் கொழுவி இருந்த ஜேசுநாதர் சிலுவையைக் காட்டி,

                                               " உன்னைப் பார்க்க பைபிள்ள வரும் அந்தோனியார் என்ற அப்போஸ்தலர் போல இருக்குறாய் " எண்டேன்,

                      அவன் கொஞ்சம் கஷ்டப்பட்டு விளங்கி , சட்டார் எண்டு அவன் கொழுவி இருந்த ஜேசுநாதர் சிலுவையைக் காட்டி,

                                                     " என்னோட பெயர் அந்தோன், அது சரிதான் ,,ஆனால் நீ விளங்காமல் என்னமோ சொல்லுறாய் "

                                               " வேறென்ன பிரச்சினை "

                                       " அதுதான் என்னவோ அப்போஸ்தலர்  என்றாயே "

                                     " ஓம்,, ஜேசுநாதரின் சீடர்கள் "

                                       " அதுதான் பிரச்சினை "

                                    " என்னப்பா  குழப்பம் நீயே சொல்லுப்பா "

                                            " நீ சொன்ன  மாதிரி அந்தோனியார் அப்போஸ்தலர்  இல்லை,, அவர் ஒரு புனித துறவி,,, திருநிலைப்படுத்தப்பட்ட துறவி "

                                          " அப்படியா , எனக்கு  கிறிஸ்தவம் பற்றி சரியாக தெரியாதுப்பா ,"

                                                " என்னோட பெயர் அந்தோன், எங்கள் நாட்டில் அந்தப் பெயர்தான் அதிகம் பேருக்கு  "

                                         " அந்தோன்,,நீ என்னப்பா நிறைய விசியம் விரல்நுனியில் வைச்சுக்கொண்டு ஒஸ்லோ வந்து தெருமுனையில் பிச்சை எடுக்கிறாயே "

                                                     " அதுக்கு அதுக்கு என்று கொடுப்பினை இருக்குப்பா,,,நான் பூசாரஸ்ட் இல்  ஒரு ஓர்தொடோக்ஸ்   கிறிஸ்தவ செமினறி பாடசாலையில் படிச்சவன் பா "

                                                   எண்டு ஆச்சரியமாகச்  சொன்னான், நானும் கொஞ்சம் திடுக்கிட்டேன்,

                             அவன் " நீ முன்னம் பின்னம் அறியாமல் இப்படி என் பெயரைக் கண்டு பிடித்தது முற்பிறப்பில் நீயும் நானும் ஏதோ தொடர்ப்பு உள்ளவர்கள் போல இருக்கே " என்றான்  ,

                                  யாருக்கு தெரியும் போன பிறப்பில் நான் பிச்சைகாரணாகவும், அவன் எனக்கு உதவிய ஒரு பணக்காரனாகவும் இருந்து இருக்கலாம் எண்டு ஜோசித்துப் போட்டு,....

                     அவனிடம் , " உனக்கு இப்ப என்ன வேண்டும் அந்தோன் ,சொல்லு சாப்பாடு வேண்டுமா, நான் இப்ப பப் க்கு தண்ணியடிசுக் கும்மாளம் அடிக்கப் போறேன்,போகமுதல் உனக்கு சாப்பாட்டு வேண்டிதாறேன் " எண்டேன்,

                      அந்தோன் நான் சொன்ன பப்,தண்ணி,கும்மாளம் என்ற வார்த்தைகளை என் முகத்தில காசு வடிவில பார்த்திட்டு,

                               " பிரதர் எனக்கு கை நடுங்குது சாப்பிட முதல் இந்தக் குளிருக்கு கொஞ்சம் கணகணப்பு ஸ்ப்ரிட் போல நல்ல மது உள்ளுக்க விட்டா நாக்கு நனையும் உன்னால் முடியுமா அது வேண்டித் தர "

                             எண்டு நாக்கை தொங்கப்போட்டு அப்பாவியா அந்தோன் கேட்டு , எழும்பி , கையோட அணைச்சு வைச்சிருந்த ஒரு பெரிய பிளாஸ்டிக் பையை வீதி மூலையில் இருந்த குப்பைக் கொண்டைனரில் எறிஞ்சு போட்டு, என்னோட போக வெளிக்கிட்டான்.

                              ஒஸ்லோவில் அந்தோன் போன்ற ஏழை எளிய மக்களை பப் இக்குள் விடமாட்டார்கள், முதல் அவனோட போனால் என்னையும் உள்ளே விடமாட்டார்கள், அதைவிட ஸ்ப்ரிட் போல நல்ல மது உள்ளுக்க விட்டு நாக்கு நனைக்கும் தண்ணிப் போத்தல் வேண்ட அரசாங்கம் நடத்தும் வின்மோனோ போல்ட் என்ற கடையைத் தவிர வேற எங்கையும் நோர்வேயில் தலை கீழா நிண்டாலும் வேண்டமுடியாது. அல்லது குருன்ட்லான் சேரியில், கள்ளமா கசிப்பை வோட்கா போத்தலில் விட்டு ஒரியினல் ரஷியன் வோட்கா போதலை விட ஒரிஜினல் போல விற்கும் ஒரு இருட்டுக் கடை இருக்கு, அந்தோன் என்ன குடிப்பான் எண்டு முதலில் தெரியாதே எண்டு போட்டு,

                                  " அந்தோன் நீ என்ன குடிப்பாய் " எண்டேன் ,

                    அவன் ஒரு நல்ல குடி மகன் போல , " ஜக் டானியல் தான் குடிப்பேன்,,அதுவும் ஏழு வருஷம் ஓல்ட் தான் எனக்கு ஒத்துவரும் " எண்டான்,

                                            ஜக் டானியல் , அதுவும் ஏழு வருஷம் ஓல்ட் விஸ்கி எண்டு ஒண்டு இருக்கு எண்டு தெரியும்,ஆனால் நான் அது ஒருநாள் தன்னும் சொண்டில தடவித் தன்னும் பார்த்ததில்லை ,அந்தோன் நான் ஜோசிப்பதைப் பார்த்து " ஜக் டானியல் ஏழு வருஷம் ஓல்ட் விஸ்கி " ஏன் குடிக்க வேண்டும் எண்டும்,அது செய்யப்படும் " ஸ்ப்ரிங் மினிரல் வாட்டர் " ,அதன் " மால்ட் ரெசிப்பி " எல்லாம் நாக்கால் சொண்டைத் தடவி தடவி அரை குறை ஆங்கிலத்தில சொல்ல,எனக்கு குழப்பமா இருந்தது இதில யார் பிச்சைக்காரன் எண்டு,கொஞ்சம் துணிந்து உண்மைய சொன்னா நான் தான் பிச்சைகாரன் போல இருந்தேன்.

                                         என்னதான் அந்தோன் போன்ற ஏழை எளிய மக்கள் ஜக் டானியல் ஏழு வருஷம் ஓல்ட் விஸ்கி குடிச்சாலும் அவர்களை ஒஸ்லோவில் அரசாங்கம் நடத்தும் வின்மோனோ போல்ட் என்ற கடை வாசலுக்கே விடமாட்டார்கள், முதல் அந்தோனோட போனால் என்னையும் வாழ்க்கை முழுவதும் கள்ளன் எண்டு உள்ளே விடமாட்டார்கள், அதால ஜோசிதுப்போட்டு அந்தோனைக் குருன்ட்லான் சேரியின் நடுவில் உள்ள சோம்போறிகள் பூங்காவில் இருக்க சொல்லிப்போட்டு,

                               " அந்தோன் ,உனக்கு என்ன சாப்பாடு வேண்டும் அதையும் கையோட வேண்டிக்கொண்டு வாறன் சொல்லு " எண்டேன்,

                       அந்தோன் நாடியதைத்  தடவி, நீண்ட மதுரை வீரன்  சாமியின் ஆட்டுக் கிடாய்  மீசையை நீவி விட்டுப் போட்டு , ஹோசிமின்  போல தொங்கிக் கொண்டு இருந்த  சின்னத்  தாடியை  உருவி விட்டுப்போட்டு 

                                  " சாப்பாடா இப்ப முக்கியம், வாழ்கையை மனிதன் என்ஜாய் பண்ண வேண்டும் அதுதான் முதல் முக்கியம், சரி, நீ விரும்புறதால ஒரு பொரிச்ச முழுக் கோழி வேண்டி, ஒரு பெரிய பாணும் வேண்டித்தா " என்றான், 

                                         நான் சிட்டிக்கு நடந்து போய் நோர்வேயில் மதுபானம் விற்கும் ஒரே ஒரு  அங்கீகரிக்கப்பட்ட  அரசாங்க கடையான  வின்மோனோபோலட் கடைகுள் வாழ்கையில் முதல் முதல் ஜக் டானியல் ஏழு வருஷம் ஓல்ட் விஸ்கி போத்தலை தொட்டு, எப்பவும் போல போத்தலை தொடும் போது சொல்லும் ரிக்கு வேதத்தில் வரும் 

                                              " ஏகம் தத் அகம் பிரம்மாஸ்மி "

                                          என்ற சமஸ்கிரத மந்திரத்தைச் சொல்லி, மாஸ்டர் காட் இழுத்து வேண்டிக் கொண்டு, அரபிக் கடையில் ஒரு பெரிய மால்பரோ சிகரெட் பெட்டி,ஒரு பெரிய கோக்க கோலா போத்தல்,உருளைக்கிழங்குப் பொரியல், வேண்டி எல்லாத்தையும் ஒரு கடதாசி பையில போட்டு தூக்கிக் கொண்டு சோம்போறிகள் பூங்கா வந்த நேரம் பூங்கா சோம்போறி போல இருந்தது, 

                                  அந்தோன் மிகவும் உற்சாகமாஒரு வில்லோ மரத்துக்கு கீழ இருந்து கொண்டு," இங்க வா ,இங்கே இருந்தால் தான் கண்காணிப்பு கமராவில் விழாது " எண்டு சொல்லி சோம்போறிகள் பூங்காவில் எங்கே எங்கே கண்காணிப்பு காமரா ரகசியமா பொருத்தி இருக்கு எண்டு விபரமாகச் சொன்னான்.

                         அந்தோன் ஜக் டானியல் ஏழு வருஷம் ஓல்ட் விஸ்கி போத்தலை,சுடலை முனியாண்டி போல நடுவில வைச்சிட்டு திறந்து,ஒரு கப்பில ஊற்றி, ஒண்டும் கலக்காமல் பச்சைத் தண்ணி போல வாயில விட்டான், விட்டுப் போட்டு ரோமானியப் பாசையில் என்னவோ சொன்னான்,நான் என்ன எண்டு கேட்டேன்,

                    " கெட்ட வார்த்தை, ஓடிப் போன என்னோட பொஞ்சாதியைத் திட்டினேன் "

                    "  அப்படியா,,சொறி,,உன்  நிலைமைக்கு அந்தோன் "

                     "  பிள்ளை பெற இயலாதவனின் மனைவி பிள்ளைக்காக அந்நியனிடம் உறவு கொள்கிறாள்..

                         "   ஹ்ம்ம்,,,இதென்ன  ஒரு   மாதிரியா இருக்கே  "

                         " ஹ்ம்ம்....பிறகு  கர்ப்பம் வெளிப்படும்போது அவள் விரட்டியடிக்கப் படுகிறாள் , பின் ஓரிடத்தில் கூலி வேலைக்குப் போகிறாள், அங்கு தெரிந்தவர் பார்த்து அவளைத் திரும்பவும் வீட்டுக்குக் கூட்டி வருகிறார்,.."

                              " அடி சக்கை,,இதென்னவோ சினிமா  படம் போல இருக்கே அந்தோன் "

                             " ஹ்ம்ம்,,,,கணவன் ஊராரை எதிர்த்து அவளை ஏற்றுக் கொள்வது தான்.  ,,கதை,,,கதை  தான்  திரைக்கதை,,,அதுதான்  சினிமா,,,அதுவே  வெள்ளித்திரையில்   வாழ்க்கை ."

                     "  இதென்ன கதை  அந்தோன்,,படு  சுவாரசியமா  இருக்கே,,"

                           "  ஹ்ம்ம்,,இது  நாட்டுப்புறக்  கதை..இப்பெல்லாம் இது நகரப்புறக் கதை  ஆகிவிட்டது ...,ஒருவரின்  வாழ்க்கைக்கதை  இன்னொருவருக்கு  சுவாரசியமா இருக்கும்,,,ஹ்ம்ம்,,,,கேடுகெட்ட  உலகம் "

                             " அதென்னவோ உண்மைதான்   "

                         " நமது பதவியா.?.நாம் சேர்த்த சொத்து சுகங்களா.?. நமது படிப்பா.?. நமது வீடா.?. நம் முன்னோர்களின் ஆஸ்தியா.?. நமது அறிவா.?.நமது பிள்ளைகளா.?. எது நம்மைக் காப்பாற்றப் போகிறது.?."

                           "என்னாச்சு  இப்பிடி  விரக்தியாகக்  கிளினிக்கல் டீப்பிரசன்காரர்  போலக் கதைகுறாய் அந்தோன்  " 

                            "அது என்னோட  கூ டப் பிறக்கவில்லை,,ஆனால் அனுபவமாக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது ,,ஏன்  என்று  தெரியுமா  உனக்கு  " 

                          " சரி  உனக்கு  சொல்ல விருப்பம் இல்லைப்போல  ,,சொல்லாதை "

                          " The way u got her  is the way u lose her  - that saying is probably best described,,ஹ்ம்ம்  "

                           " அடப்பாவி,,நீ பயங்கரமா இங்கிலிஸ் கதைக்கிராயே ,,அந்தோன் "

                           " இல்லை,,எனக்கு  அந்த  ப்ரோவேர்ப் மட்டும்  தெரியும்,,ஏனோ  நல்லாவே  தெரியும்,,,மறக்க முடியாதவாறு  நல்லாவே  தெரியும்,,,"

                                 எண்டு சிரித்து சொன்னான்,வில்லோ மரத்தில முதுகை நல்லா முண்டு கொடுத்துக்கொண்டு, கால் ரெண்டையும் நீட்டி விட்டு ,மால்பரோ சிகரட்டை கிளின் ஈஸ்ட்வுட் வெஸ்டர்ன் கவ் பாய் படத்தில குதிரையில் இருந்து கொண்டு வட்ட வட்டமா விடுற மாதிரி அலாதியாய்ப் மூக்காலும் வாயாலும் ஒரேநேரத்தில புகை விடுக்கொண்டு அந்தோன் முதல் பெக்கிலையே அவன் தாய் நாடு ரோமேனியாவுகுப் போயிட்டான்......

                                         நான் கோக்க கோலாவோட கலந்து விட்டேன், ஜக் டானியல் வாயில வைக்க முதலே விசில் அடிச்சுது , தொண்டைக்குள்ள இறங்க முதலே பாட்டுப்பாடி, போறவழி எல்லாம் விளக்குமாத்தாள தடவுற மாதிரி தடவி இறங்கி, எரிநச்சத்திரம் போல எரிசுக்கொண்டு போக, ஒரு சிகரட்டை வாயில வைச்சுப் பத்தி,

                            " அந்தோன் ஜக் டானியல் ஏழு வருஷம் ஓல்ட் விஸ்கி ரசித்துக் குடித்துக் கொண்டு இருந்த நீ பிச்சைகாரனா மாறிய உன் கதையைப்பற்றி சொல்லேன் " என்றேன்.

                             அந்தோன் பேசவில்லை, இன்னும் கொஞ்சம் வசதியா வில்லோ மரத்தில முதுகை நல்லா முண்டு கொடுத்துக்கொண்டு, இன்னும் கொஞ்சம் வசதியா கால் ரெண்டையும் நீட்டி விட்டு ,இன்னுமொரு சிகரட்டைகொஞ்சம் வசதியா வாயில வைச்சுப் பத்தாமல் இருந்தான். முதல் எனக்கு கொஞ்சம் சுருதி ஏற திருப்பியும் கேட்டேன் அதுக்கு அந்தோன்

                                " நீ கேட்ட கேள்வி எனக்கு நன்றாகவே விளங்கியது ,கொஞ்சம் பொறு, வெள்ளை நரி வாத்துக்கு கலியாணம் பேசின மாதிரி அவசரப்படுத்தாதே சொல்லுறன் "

                                               எண்டு போட்டு, ஜக் டானியல் ஒரு பெக்கை பச்சைத் தண்ணி போல வாயில விட்டான்.

                                      "அதென்ன வெள்ளை நரி வாத்துக்குக் கலியாணம் பேசின கதை ,அதையாவது சொல்லு அந்தோன்,எனக்கு கலியாணக் கதைகள் என்றால் உசிர் " 

                            என்று  அப்பாவி போலக்  கேட்டேன். அவன் ஜோசித்து போட்டு,

                                 " அது எங்களின் ரோமானிய நாட்டுப்புறக் கொசப்புக் கதை, அதில வார நரி பயங்கர குள்ள நரி ஆனால் அதுக்கு காது கேட்காது , முதல் எனக்கு கொஞ்சம் சுருதி ஏறட்டும் ஏறினப் பிறகு சொல்லுறேன் " 
                              
                              " ஏன்,,அதை முதல் சொல்லேன்,, நீ இப்பிடி தொடக்கிப்போட்டு இடையில விடக்கூடாது "

                               " ஹ்ம்ம்,,,ஏன் அப்படி விடக்கூடாது  என்று  என்னவும் சட்டம்  இருக்கா "

                       " இல்லை,அந்தோன்,,உனக்கே  தெரியும்,இப்பிடிக் கதைகள் படுக்கையை அறை வாசல் வரை வந்து போட்டு எட்டிப் பார்க்காமல்  போறது போல "

                               " அப்பிடி என்றால் என்ன சொல்லுறாய்.."

                                 " ஒரு விதமான ஆர்வத்தை கிளப்பும் ,,இல்லையா "

                               " சரி,,பொறு  ,,நான் சொல்லுறேன்,,இண்டைக்கு எப்படியும் சொல்லுவேன் "

                                          நான் இன்னொரு பெக் அவன் போலவே பச்சைத் தண்ணி போல வாயில விட்டன், அந்தோன் பேசவில்லை ஜோசிதுக் கொண்டு இருந்தான் ,கொஞ்ச நேரத்தில் எனக்கு சோம்போறிப் பூங்கா ஒருக்கா சுழன்டது, ராமகிருஷ்ணா பரமஹம்சர் முன்னுக்கு வந்தார், பூவரசம் பூ வாசம் வர,காதில யாழ் தேவி ரயில் ஓடுற சத்தம் கேட்க, கொஞ்சம் எழும்பிப் பறக்கிற மாதிரி இருக்க, இன்னும் கொஞ்சம் அதிகம் பறக்க ஆசைப்பட்டு, இன்னொரு பெக் அவன் போலவே பச்சைத் தண்ணி போல வாயில விட்டன்,

                            அந்தோன் பேசவில்லை ஜோசிதுக் கொண்டு இருந்தான், விட்டுப்போட்டு சேட்டைக் கழட்டி சுழட்டி ஆக்கிஸ் எல்வா ஆற்றுக்குள் எறிஞ்சு போட்டு, ஒரு தமிழ்ப் பாட்டு பாட அப்பவும் அந்தோன் பேசவில்லை அப்பவும் ஜோசிதுக் கொண்டு இருந்தான்,நான் அவனிடம்  

                           " அந்தோன்  உனக்கு ஒஸ்லோ மட்டுமா தெரியும் "

                        "  ஹ்ம்ம்,,இந்த சிட்டி,,இந்தப் பூங்கா மட்டுமே தெரியும் "

                            " ஓ... எக்கிபேர்க் என்று ஒரு பெரிய பூங்கா இருக்கு ஒஸ்லோவுக்கு வெளியே நீ கேள்விப்பட்டு இருகிறியா "

                                " இல்லை,,எக் கி பே ர் க் ,அதில என்ன விசேஷம் "


                                " அது பெரிய பூங்கா....அழகான பூங்கா பணக்காரர்களின் பூங்கா "

                           " ஒ அப்படியா ,,ஒரு நாளைக்கு  அங்கே போவமா,,எனக்கு அந்த இடத்தைக் காட்டேன் "

                           " ஹ்ம்ம்,,ஆனால் இப்படி சுதந்திரமாய் இருக்க முடியாது "

                             " அதென்ன அப்படி ஒரு சட்டம் "

                            " உனக்கு  ரிங்க்னஸ் பியர் விருப்பமா,,நோர்வேயின் பிரபலமான பியர் "

                             *"  ஹஹஹஹா,,,அது  மாட்டு மூத்திரம் போல மணக்கும்,,அதை நான் மணந்துகூடப் பார்ப்பதில்லை,,மனுஷன் குடிப்பானா அந்த மாட்டு மூத்திர வாசம் அடிக்கும் பியரை "

                                " ஹ்ம்ம்,,,அதென்னவோ உண்மைதான்,,ஆனால் அந்த பியர்க் கொம்பனி உரிமையாளர் தான் தன்னோட சொந்த நிலமாக இருந்த  அந்த எக்கிபேர்க் பூங்காவை பொது மக்களுக்குக் கொடுத்தார் "

                                " ஒ அப்படியா ,,அது நல்ல விஷயமே "

                              " ஹ்ம்ம்,,கிறிஸ்டியான் ரிங்க்னஸ் அதுதான் அவர் பெயர் ,,ஆனால் அந்த பூங்காவில் பிச்சை எடுக்க முடியாது,,தடை செய்யப்பட்ட இடம் அது "

                           " ஒ ,,அப்படியா  நீ என்னை பிச்சைக்காரன் என்று நினைச்சு எனக்கு சொல்லுறியா "

                                 " இல்லை ,,பொதுவாகச் சொன்னேன் அந்தோன் "

                           "  நான் பிச்சைக்காரன் இல்லை அதைப் புரிந்துகொள்,,நான் ஒரு டெக்னிசியன் ருமேனியாவில் ,,இப்ப அந்த நாட்டு பொருளாதாரம் விழுந்துவிட்டது அதனால் ஒஸ்லோ வந்து கை ஏந்துகிறேன் "

                               " ஹ்ம்ம்,அது எனக்கு தெரியும்  அந்தோன் " 

                                அதுக்குப்பிறகு   வெறியில என் வாய் கொன்றோல் இல்லாமல் உளற, புல் நிலத்தில படுத்து கிடந்தது ,

                    " ஒஸ்லோவில் வசிக்க வைச்சான் ,எங்களைத் தண்ணிரில் மிதக்க வைச்சான்,,,,," ,

                           எண்டு தமிழ்ப் பாட்டு பாட, ஒரு வயதான் நோர்வே நாட்டு பெண்மணி என்னைப் பார்த்துக் கிட்ட வந்து ,

                                 " ஐயோ பாவம் ,பிச்சைகாரனின் நிலைமை ஒரு சேட்டு வேண்டவே வழி இல்லாமல் இருக்கே, ஜேசுவே நற்கருணை மரியாவே

                             எண்டு வாயில கையை வைச்சு எனக்கு ஜெபம் சொல்லி , " எனக்கு முன்னால கொஞ்சம் சில்லறை எடுத்துப் போட்டா, அந்தோனுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை அதைப் பார்க்க,

                                       " என்ன பிச்சைக்காரப் பிழைப்புடா இது " எண்டு எனக்கு சொன்னான், நான் நோர்வே பாசையில்

                          " நன்றி, உங்களைக் கடவுள் ஆசீர்வதிப்பான் " எண்டு அழகான நோர்க்ஸ் உச்சரிப்பில் சொன்னேன். அந்த பெண்மணி ஆச்சரியமாகி,

                              " நீ ஜிப்சி நாடில்லாத நாடோடி பிச்சைகாரன் போல இருக்குறாய், எப்படி நோர்க்ஸ் கதைகுறாய் "

                                           எண்டு கேட்டா......நான் என்னைப்பற்றி  விபரமாக  சொன்னேன், எனக்கு வெறி என்றால் நோர்க்ஸ் நோர்வே நாட்டவர் போல சுருதி சுத்தமா வாயில வழுக்கிக்கொண்டு வரும்,அந்தப் பெண்மணிக்கு அந்தோனின் நிலைமை யையும்,நான் உண்மையில் பிச்சைகாரன் இல்லை என்பதையும் அழகாக நாக்கு உளற உளற சொன்னேன் ,அந்தப் பெண்மணி பற்றிய விபரம் எல்லாம் எடுத்தேன். 

                         சொல்லி முடிய அந்தோன் என்னிடம்

                                " நீ என்ன கதைத்தாய்  எண்டு கேட்டான், நான் சொன்னேன்,

                         " அந்தோன் , அந்தப்  பெண்மணி நல்ல காசுக்காரி போல இருக்கிறாள்,,அதைவிடக்  கடவுளையும் நம்புறால் ,,அதால்  உன் நிலைமையைச் சொன்னேன்,,உதவி செய்யச்சொல்லி "

                               " உதவி செய்வாளா "

                             " அது தெரியாது, ஆனால் செய்யலாம்  போலவும் இருக்கு "

                            " சரி,,நீ என்ன உதவி எனக்கு தேவை என்று அவளிடம் கேட்டாய் "

                          " உனக்கு இருக்க  ஒரு சின்ன இடம்  முதலில்  எடுக்க முடியுமா என்று கேட்டேன் "

                            "  அவள் என்ன சொன்னாள்  அதுக்கு,,இடம் இருக்கு என்று சொன்னாளா "

                             " இல்லை, அந்தோன் , அவள் இருக்கு என்றும் சொல்லவில்லை,,இல்லை என்றும் சொல்லவில்லை,,ஜோசித்து சொல்கிறேன் என்றாள்  "

                             " ஹ்ம்ம்,, அப்ப கைவிட்ட கேஸ் தான் போல "

                          "  அப்பிடி இல்லை,,நோர்வே மக்கள் சும்மா வாய்க்கு வந்தபடி உறுதிமொழி கொடுக்க மாட்டார்கள் , ஏதாவது   வாக்குக் கொடுத்தால் கட்டாயம் செய்வார்கள்,,அதானால் எப்பவுமே ஜோசிதுதான் பதில் சொல்லுவார்கள் "

                              " அப்படியா ,,ஆனால் நிறைய நேரம் கதைத்துக்கொண்டிருந்தாய் ,,அப்பிடி என்னதான்  கதை அளந்துகொண்டு இருந்தாய் அவளுடன்  "
                             
                                 " நீ ரொமேனியாவில் ஒரு டெக்னிசியன் ஆக வேலை செய்த கதை. ரொமேனியா காசின் பெறுமதி குறைய வேலை இழக்க உன்னை  விட்டுப் போட்டு  நல்ல  வேலை உள்ள ஒருவனுடன் ஓடிப் போன உன்னோட  பொஞ்சாதியின் கதை  , அப்புறம் வெள்ளை நரி வாத்துக்கு கலியாணம் பேசின கதை,.." 

                                 " அடப்பாவி  வெள்ளை நரி வாத்துக்கு கலியாணம் பேசின கதைதான் நான் இன்னும் உனக்கு சொல்லவே  இல்லையே அப்புறம் எப்படி அதை சொன்னாய் , "

                                " ஹஹஹஹாஹ் , கதை விடுறது பெரிய வேலையா சொல்லு அந்தோன் ,,,"

                                    " இல்லைப்பா,,அது எல்லாருக்கும் முடியாது , உன்னைப்போல பொம்புளை  மடக்கும்  கில்லாடிகளுக்கு சிலநேரம்  முடியும்.."

                               " நான் பொம்புளைக் கில்லாடி என்று எப்படி சொல்லுறாய் அந்தோன் "

                               "  உன்னைப்  பார்க்கவே தெரியுதே, நீ அந்த நோர்வேகாரிக்கு கதை சொல்ல அவள் வழிஞ்சு வழிஞ்சு உன் முகத்தைப்பார்த்து கொண்டு பரலோகத்தில் பறக்கிறாளே,,அப்பிடி என்னதான் மை  போட்ட மாதிரி மாயம்  காட்டுறியோ  தெரியலை "

                                " ஹஹஹா,,நான் கில்லாடி தான்,,, சுய கவுரவம் உள்ளவன் அந்தோன்..சோத்தில உப்பு போட்டுத் தின்னுறவன் தெரியுமா,,ரோச,,மானம்  இருக்கு "

                      "  ஒ அப்படியா அதென்ன  சோத்தில உப்பு போட்டுத் தின்னுற கதை "

                             " அதுதான் நாங்க  சுயமரியாதையை விட்டுக்கொடுக்காம இருக்கும்போது சொல்லும் டயலக் "

                              " சோத்தில் உப்பு போட்டு உண்பதால் சூடு சுரணை இருக்குமெண்டு  எந்த அறிவியியல்  ஆராய்ச்சி சொல்லுது ... சோடியம் உடம்புக்கு கெடுதல் ... அக்சுவல்லி  நீ  சோடியத்தைக்  குறை அதாவது சோத்தில உப்பு போட்டு சாப்பிடாதை  அதால தான் உனக்கு  இரத்த கொதிப்பு அதிகமாகுது...."

                               " ஹஹஹா,,அடப்பாவி  தெரியாம உன்னட்டை வந்து மாட்டி நிக்குறேனே "


..............தொடரும் .....