Friday, 29 July 2016

அனாமிக்கா மேலும் பதினோரு கவிதைகள்

.......................................................................011

அசதிபோல 
முகத்தைத் தூக்கிவைத்து 
அதிகம் பேசாத நாட்களில் 
அனாமிக்கா 
சிதிலமான கனவுகளை 
ஒருங்கினைத்தெழுதுவாள்

உரையாடலுக்கும்
உரைநடைக்குமிடையில்
அப்படி என்னதான் வரைவென்று
வண்ணாத்திப்பூச்சிகள்
திட்டமாகத்
தற்கொலைக்கு முயற்சித்த
ஒரு நாளின் முடிவில் கேட்டேன்

ஊரைச் சுற்றிவரும்
வார்த்தைமொழி
கன்னித்தன்மையைக்
உத்தியோகபூர்வமாகக்
களவு கொடுத்துவிடுமென்றும்
பதியும் சொல்வரிகள்
அங்கீகாரமெடுத்து
ஆவணமாகிவிடுமென்றாள்

நடைபாதை முடிவில்
போட்டிருந்த மரவாங்கில்
கோடுகள் குழப்பமாகியே
வயதாகிப்போன
பிளவுகளின் நடுவில்
விரிசலாகுவதைப்
பார்வையில்த் தொடர்ந்துக்கொண்டிருந்தேன்

தனது
மரணசாசனத்தையும்
எழுதித்தரும்படி
ஒரு மஞ்சள் இலை அவள்
புறங்கையில் ஆடிப்போய்
அடங்குவது போலவே
வந்திறங்கியது

இயற்கையின்
ஏற்புடைய உடன்பாடுகள்
முரண்டு பிடிப்பதில்லையென்று
அனாமிக்கா
ஆவேசமாக காற்றுக்குச் சொல்லி
புதியவொரு வெள்ளைத்தாளில்
இடஞ்சுழி போட்டு
எழுதத்தொடங்கினாள்.


......................................................................012

தள்ளிவைக்கும்
நாட்கள் முந்திப் பிந்தினாலும்
நான் எப்போதும்
வழித்துனையாக வருவேன்
என்பதிலெல்லாம் 
அனாமிக்காவுக்கு சற்றேனும்
அப்போதெல்லாம்
சந்தேகமில்லை

இயல்பான சுரப்பிகள்
இலக்கணம் தவறியதால்
எண்ணங்களின் நடுவில்
அப்போதும் தனிமை தள்ளாடுது
என்பது தெரிந்து வைத்தும்
பிரத்தியேகங்களில்
புரிந்துணர்வோடுதான்
விலத்திப்போவேன்

அடி வயிற்றில்
கரு தடம்புரண்டு
இறுக்கிப்பிடிக்கும் போது
மனவுளைச்சலை
அடங்காமல்அவிழ்த்துவிட்டு
என்னை அவசரமாய்
உதறிஎறியும்உதேசங்களில்
பார்த்துக்கொண்டிருக்கமாட்டாள்

ஒருபொழுதேனும்
உறைந்து போகாத
புதிரான வாசனை வேறு
அவள்வியர்வையில் இருக்க
என் கால் மடியில்
இழுத்துச் சாயவைத்து
தலைகோதிக்கொடுப்பேன்

ஆதரவை அதிகம் தேடும்
வலிகள்நிறைந்த
சின்ன விழிகளில்
என் சிநேகிதம் இன்னொருமுறை
மூச்சு தருகிறது என்ற போதும்
அனாமிக்காவுக்கோ
இன்னுமின்னுமாய்
பசியோடு மாதவிடாய்கள்
ஈரமாகிக் கொண்டிருக்கலாம்.


...................................................................013

தெரிவுகள் பற்றிய 
வரன்முறைகள் 
நியதியற்ற கொள்கைகள் 
ஒருபோதும் குறுக்கிடவிடாபடி 
புதிய பாதைகளையே 
அனாமிக்கா
எப்போதும் தேர்வுசெய்கிறாள்

ஆனாலும்
அவள் நடக்கும் பாதையில்தான்
ஏதோவொரு ஜென்மபந்தத்தில்
முடிச்சுப் போட்டது போல
இலைவளர்காலத் துளிர்களுக்கும்
உற்சாகம் பற்றிக்கொள்கிறது

உங்களுக்கும்
எனக்குமிது குழப்பமாகவிருக்கும்
காரியங்களில்
அவளின் உள்ளுணர்வு
காற்றின் போக்கில்தான்
அத்தாசிப்படுத்தும்
திசைகளைத் தேர்வு செய்யுது

பழைய பாதைகள்
முடிவது பற்றியோ
பாதைகளே இல்லையென்பதோ
அவளின் பாதங்களைப்
பொறுத்தவரை
எந்தப் பொல்லாப்புமின்றி
எப்பவோ முடிந்த காரியம்

வழியின் திருப்பத்தில்
ஒரேயொரு பூ மலர்ந்து
காவுகொடுக்கக் காத்திருந்தால்
அவளே அவளுக்கான
இரட்சிப்பு உலகத்தில்
அதையே முகர்ந்து பார்த்து
நீண்ட நேரம்
நின்று சிலையாகிவிடுவாள்


................................................................014

தூண்டில்போடும் 
பார்வைகளோடு அணைத்து 
ஏரிக்கரை நகரும் 
பொழுதுகளிலெல்லாம் 
அனாமிக்கா 
கவ்வவேண்டுமென்று
எதையுமே தேடுவதில்லை

காலப்பிரஞ்ஞை
பிதற்றித் தடுமாறும்
வளைந்த மரங்களின்
கிளைகளில்
மஞ்சள் இலைகள்
இன்றோ நாளையோவென்று
பிரிவுக்குக் காத்திருக்கும்

கோடை மலர்களை
மார்போடு சூடிக்கொண்ட
ஆற்றம் கரையில்
அயோக்கியன் போலவே
சுழித்து ஓடும் திருப்பங்களில்
அகப்பட்ட கஞ்சல்களோடு
மறுகரையில்
வெய்யில் விளையாடும்

உலர்ந்த உதடுகளில்
அனாமிக்கா
வசந்தகாலம் கசிந்துவிடும்
முதல் முதலான
தேனைப்போலவே
சில்லென்ற குரலெடுத்துப்
பாடிக்கொண்டிருப்பாள்

பகல்களையே
உறங்க வைக்கும் வித்தை
அவளுக்கு அத்துப்படி
அந்தப் பாடலின் அர்த்தம்
வலிகளையெல்லாம் சேர்த்தே
வெள்ளம் போல இழுத்துவர
நான் கால்களை
நதியோடு நனைத்துக்கொண்டிருப்பேன் 


...............................................................................015

அனாமிக்காவை
ஒரேயொருகணத்தில் 
புகைப்படமெடுக்க 
ஒரேயொருமுறை 
புன்னகை செய்துவிடு என்று 
கெஞ்சிக்கூத்தாடிக் கேட்டேன்

நிழலைப்போல
ஒளிப்பதிவு செய்யும் மொழியில்
உன்னால் எதுவரை
ஒரேயொரு காட்சியில்
ஊடறுத்து உள்நுழைந்து
நிரூபிக்க முடியுமென்கிறாய் என்றாள்

முடியாதுடி என்றபோது
ஒரேயொரு செய்தியை
இரண்டுமுறை
அழுத்திப்பிடித்துக்கொண்டு
பதிவுசெய்யும் நிலைப்படங்களுக்கு
முகங்கள் தேவையில்லையே
என்றபோது இருட்டத் தொடங்கியது

முகம் காட்ட விரும்பாத
இளம் பெண்ணின்
மூகாந்திரங்கள் போடும்
முடிச்சுக்கள்
முகவரியைத் தவறவிட்ட
விசித்திரங்கள் என்றேன்

முன்னிரவு சோம்பலாகிப்
பின்னிரவாகும் வரை
நளினமான நகரத்தில்
இஸ்டப்படி இரவு
ஓலைப்பாயை விரித்து
ஓசைகளில் யாரோவொருதியின்
காமத்தைக் களவாடிக்கொண்டிருந்து

அனாமிகா
நகரம் உமிழுந்து துப்பும்
மின்மினிப்பூச்சி வெளிச்சங்களை
விழுங்கிக்கொண்டு உலாத்தினாள்
நானோ அவள் பின்னே
காற்றின் பழியில் அவள்
அலைபாயும் கூந்தல்
செய்யும் ரகளைகளை
இரசித்தபடி நடக்கிறேன் 


.................................................................016

மெழுகுதிரி வெளிச்ச 
இருட்டறையில் 
சாம்பல் நிறப் பூனை 
எங்கிருக்கிறது என்பது 
அனாமிக்காவுக்கும் 
அவள் பூனைக்கும் மட்டுமே
தெரியும்

எப்போதாவது
கதவைத்திறந்து உள்ளிடும் போது
ஒரு மூலையிலிருந்து
சத்தம் வரும்
அந்த வீட்டில் அந்த மூலை
எந்தப் பக்கமென்றும்
உறுதியாகச் சொல்ல முடியாது

அவள்
எழுதிக்கொண்டிருக்கும் போது
அந்தப் பூனை
அவள் முகத்தை
வரிக்கு வரி
பின் தொடர்ந்து
வாசித்துக்கொண்டிருக்கும்

பூனைக்கண்களுக்கும்
என் கேள்விகளுக்கும்
அனாமிக்காவுக்கும்
நடுவில்
மேசையில் திறந்தபடியுள்ள
புத்தகங்களின் எழுத்துக்கள்
நடமாடிக்கொண்டிருக்கும்

கடல் போல
அவளுக்குரிய சிந்தனைகள்
அலையடிக்கும் போது
ஒரு கோப்பையை துலாவி
அதில் மீன் இருக்கா என்று பார்ப்பேன்
அதை மட்டும் வைத்துக்கொண்டு
கடலில் மீனே இல்லையென்ற
முடிவுகளுக்கு
ஒரு நாளும் வரவே முடியாது 


..................................................................017

அனாமிக்கா
நிறைய சொற்களைப்
பொக்கிஷம் போல 
வார்த்தையாக்குவாள் 
அதற்கெல்லாமே 
ஆதர்சங்கள் எப்போதுமே
அச்சிடப்பட்ட புத்தகங்களேயென்பாள்

அவற்றின்
முதல் பக்கம் முதல்
கடைசி பக்கம் கடைசியாக
முகத்தைக் கொடுத்து வைத்து
வாசனைகளில்
நிரவி எம்ப்பிப் பறந்து
முகர்ந்து பார்ப்பாள்

பலசமயங்களில்
கவிதைகளின்
இறுதித் தடத்தை
அளவுகோலாக்கி
சைடோனியா விலியம்ஸ்சை
அறிமுகம் செய்தவளே
அவள்தான்

கதைகளையவள்
கண்டுகொள்வதேயில்லை
புனைவுகள்
சுய இன்பம் போன்ற
பொய்களின் போலி என்றும்
சுயசரிதைகளை
சவுகரியமாக்கும் அளவுக்கதிகமான
அலட்டல் என்பாள்

ஆழமற்றிருக்கின்ற
வியாக்கியானங்கள்
வெறும் அற்ப வியாபாரம்
திசைகளைத் தேடிக்கொண்டேயிரு
தேடல் திணறும் கடலில்
முழ்கிப் போவாய்
நான் அலை போல வந்து
காப்பாற்றுவேன் என்பாள்

நானவள்
மைதான அகலமான
கன்னம் இரண்டிலும்
சைபிரஸ் கிரேப்புருட் நிறத்தில்
கலிங்கு பாயும்
கண்களை வர்ணித்து எப்போது
ஒரேயொரு
கவிதை எழுதலாமென்பது பற்றி
மேலோட்டமாகச்
சிந்தித்துக்கொண்டிருப்பேன்.


....................................................................018

பின்னிரவெல்லாம் 
அனாமிக்கா
இருட்டின் மறைப்பில் 
பூக்களின் வாசம் தேடி 
பூங்காக்களில் உலாவுவதாக 
இயல்பாகச் சொன்னாள்

உன் வயதுக்கும்
மை வைக்கும் இளமைக்கும்
அதெல்லாம்கூட
எவளவு ஆபத்துகளை
வீட்டுக்குகே
வாசல்தேடிக் கொண்டு வருமென்று
நோர்ஸ்க்கில் சொன்னேன்

மிகஅலட்சியமாக இருந்தாள்
புரியும்படியாக
சுவுடிஷ் மொழியில் சொன்னேன்
அதுக்குமவள்
மூக்கை உறிஞ்சிச்சுழிக்க
ஆங்கிலத்தில்
அடுக்கி அடுக்கிச் சொன்னேன்

அதையும் உதறிப்போட்டு
சொரணை இல்லாமலிருக்க
மண்டையில் இறங்கிற மாதிரி
தமிழில் சொன்னேன்
கழுத்தை நெரிப்பது போல
அவள் ங்கே என்று
எதற்காக இப்ப நாலு மொழியில்
திட்டுகிறாய் என்றாள்

வயதுப் பெண்
பருவம் தவறாத
இரவெல்லாம் அலைந்தால்
நாலு பேர்
நாலு விதமாகப் பேசுவார்களென்று
சிம்போலிக்காகச் சொன்னேன் என்றேன்

அனாமிக்கா
ஹஹஹஹ என்று சிரித்தாள்
பிறகு கொஞ்சம் ஜோசித்து
ஹிஹிஹிஹி என்று இழித்தாள்
பிறகு அடக்க முடியாமல்
ஹோஹோஹோ என்று நெளித்தாள்
பிறகு என்னவோ நினைவு வர
ஈஈஈஈஈஈஈ என்றாள்

கடைசியாக
கழுதை போலப்
பல்லைக்காட்டிய போதுதான்
வரிசை தவறாத
ஆரோக்கியமான
பாண்டிய நாட்டு முத்துக்களை
முதன் முதலாகப் பார்த்தேன்


...........................................................................019


பெண்ணுரிமைக்குரிய
அதியுட்ச வரம்புளின்
தத்துவார்த்த கற்பிதங்களை
அனாமிக்கா
ஒருநாளும் என்னோடு 
விவாதித்ததில்லை
அவளுக்கது
முக்கியமில்லாத நாட்களின்
தொடக்கம் போலவே
எனக்கும் முடிவுறாத கேள்விகளின்
விடைகள் ஏற்கனவே
ஏதோவொருதத்தில்
நம்பிக்கையாகவே
நிரப்பப்பட்டிருந்தது
அவளுக்கு விரும்பியபடி
உடுத்திக்கொண்டு
வேண்டிய விதங்களின்மாதிரி
நடந்து கொள்வது
நட்பாக கதைத்துக்கொள்வது
போன்ற எல்லாவற்றிலும்
அக்கினிச்சுவடுகளைத் தேடாமல்
அன்னிச்சையாக
அத்தியாவசியமான
சிறகுகளை விரித்துக்கொண்டாள்
நாலு திசைகளின்போக்கில்
போய்க்கொண்டிருக்கும்
எனக்கோ
அதன் சூட்சுமம் பிடிபடவில்லை
ஒரேயொருநாள்
மறுதலித்துக் கேள்விகேட்டேன்
எதேச்சையாக அன்றவள்
ராகமாலிகா சேலை கட்டியிருந்தாள்
முழங்கால்களை
மேசைக்கு மேலே போட்டு
அதை ஆட்டிக்கொண்டு
அனாமிக்கா விளக்கிக்கொண்டிருந்தாள்
நானோ
சீமெந்து நிலத்தில்
சப்பாணி கட்டிக்கொண்டு
பணிய இருந்து
கேட்டுக்கொண்டிருந்தேன்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''020
நாட்கள்
அலட்சியமாகப் போவதை
நானோ கணக்கெடுக்கவில்லை
நிமிடங்கள் கழிவதை
காலப்பிரமாணத்தில் 
அனாமிக்கா
யுகங்களாய் நினைக்கிறாள்
வருடங்கள்
வயாதாகிப் போவதன்
நேரடிச் சாட்சி என்றேன்
அனுபவங்களின்
முதிர்ச்சிகள்
அதில்தான் எப்போதும்
ஒத்திகைபார்க்குதென்றாள்
எது கேட்டாலும்
அதில் உள்ளே இறங்கித்
தேடலாக்கி
கடைநிலையில் எதையாவது
தேடியெடுத்து
நிரூபித்துக்காட்டுவாள்
" எடியே
அகராதிக்குப் பிறந்தவளே
இவளவு கதையளக்கிறாயே
நாலுபேர் கேட்கும்
நாலு விதமான கேள்விக்கு
உன் அடையாளம் மட்டும்
சொல்லிவிட்டுப் போய்விடுவென்று "
கோபமாகக் கேட்டேன்
என்னைத்
தின்னுவது போலப் பார்த்து
" இப்பவல்ல எப்பவுமே
அனாமிக்கா
அநாமதேயமாகவே
இருபாள் " என்றாள்.
நான் பேச்சில்லாமல்
வாயடைத்துப்போனேன்

................................................................................021


எழுதிக்கொண்டேயிருப்பது 
முதுகைக் குனிய
விருப்பமில்லாத
அடிமைகளின்
விட்டுப் பறக்கவிரும்பும்
விடுதலையின்
பரிசோதனை ஆடுகளம்
என்பாள் அனாமிக்கா

யாரோவொருவரின்
தந்திரங்கள்
யாரோவொருவரின்
சுதந்திரங்களைப்
பறித்துக்கொண்டு போவது
அதில் தான் நடக்காதென்பாள்

மோதிக்கொள்ளும்
முஸ்தீபுகள்
தூங்கி எழுந்தது போல
யாரையும் ஒதுங்கவைக்காத
வெற்றிச்செய்திகளும்
நேற்றுப்போலவே
இன்றும் நிலைத்தகவலாகலாமென்றாள்

நாளைக்குக்
கசப்போடு காத்திருந்தால்
திருகுதாளங்கள்
பின் வினையாகுமுன்
நெஞ்சுறையும் உண்மைகளை
இன்னுமதிகமாக அவை
நிருபித்துவிடும் போலிருக்கு என்றேன்

கவனமாக இருக்கச் சொல்லு
எல்லா விளையாட்டுக்கும்
முடிவைத் தீர்மானிக்கும்
விதிமுறைகள்
இருக்கிறதென்கிறாள்அனாமிக்கா.
அவள் எது சொன்னாலும்
சரியாகத்தானிருக்கும்.


..
.