Monday 10 October 2016

ஓவியங்கள் வரையும் கவிதைகள்

வரைந்த ஓவியங்கள்  எப்போதும் கவிதை எழுதுவதுக்கு  நிறைய மறந்துபோன  விசியங்களைக்  கிளறிவிடும். ஓவியங்களே முக்கால்வாசிசிக் கவிதைகள்  மிச்சக் கால்வாசியை கவிதைமொழி  வார்த்தை ஜாலத்தில் சிலாகித்து எழுதுவது எப்பவுமே அலாதியாக  இருக்கும் . அப்படி எழுதிய சில கவிதைகளை ஒன்றாக்கிப் போட்டுள்ளேன்.  இன்னும்  நிறைய அங்காங்கே முகநூல் சுவரில்  இருக்கு. அவற்றையும் இப்படி ஒரு தொகுப்புக்குள் கொண்டுவர வேண்டும். இந்த ஓவியங்களை வரைந்த அருமையான ஓவியர்களுக்கு  எப்போதும் மிகுந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன் ..



இப்ப நினைக்கும் போதும் 
ஈர நினைவுகள்
பக்குப்பக்கென்று அடிக்குது 
அப்போதெல்லாம்
மெலிஞ்சிமுனையும்
தரவைக்கடலும்
விஷமத்தனமாக
அமைதியாகவிருந்தது

காதல்
உயிரின் கயிற்றில்
முடிச்சுப்போட
காலம் என்னவோ
வேறுமாதிரியிருந்ததென்று
சொன்ன ....... ர்களும்
இப்போது இல்லை

வரலாற்றை
யாரும் எழுதிப்போட்டுப்
போகட்டும்
இன்னொருமுறை
வாழ்ந்து பார்க்க
என்னிடம் உயிர்ப்பு இல்லை

எதுக்காக
எதுவும்சொல்லாமல்
மாடப்புறாபோல
சும்மா லயித்துக்கொண்டிருந்தாய்
நெஞ்சு மட்டும்
விம்மி விம்மியதன்
முடிவிலா அர்த்தம்
ஆயுளுக்கே விஷமடி

ஏதாவது
சொல்லுவேனென்று
பார்த்துக்கொண்டேயிருந்தாய்
சைகைகளில்
சேதியை முடிந்துவிட்டு
அடிமைகள் போலவே
சரணாகதியடைந்தோம்

அதுக்குப்பிறகு
தேவாலயப் போதகர்
பொறுப்பெடுத்த கணத்திலிருந்து
உனக்கு என்னவெல்லாம்
தெரியாதோ
அதுவெல்லாம்
எனக்கும் தெரியாது

உன்
கர்த்தரின்
பிராத்தனைகளில்
கடல் கடந்து
நான் என்னவோ
உயிரோடு இருக்கிறேன்

வீணாய்ப்போன
ஒவ்வொரு நிமிடத்திலும்
கெஞ்சிய
கருவாட்டு வாசமும்
விடத்தல்தீவும்
அன்பேதிருவானவர் கோவிலும்
இன்னொருமுறை
வரவே வராதடி

சரி
நான் இப்போது
ஒஸ்லோவில் இருக்கிறேன்
நீ இப்போது
எங்கே இருக்கிறாய்
அல்லது
உயிரோடுதான்
இருக்கிறாயா ?



உனக்கு
இருட்டுக்கடை
அல்வா பிடிக்குமென்று
வெளிச்சத்திலேயே
வேண்டிவைத்தேன்
மல்லிகைப்பூ
காத்திருந்து பூத்திருந்த
நேரமெல்லாம்
நீ வரவில்லை
அது மழையில் நனைந்த
மாலையும்
உன் முகமில்லை
இப்ப
இரகசிய இரவு
வாசமெல்லாதையும்
அள்ளிக்கொண்டுபோய்
யாரோ ஒருத்தியின்
கூந்தலில்
ஒதுக்கிவைத்த பின்
வந்து நின்று காளிபோல
என்னையும்
மரத்தையும்
உலுப்புகிறாய்
குங்குமப் பொட்டு வைத்து
அதை சிதறவிடும்
கோலங்கள்
எப்படி இருக்குமென்று
நாள் பார்த்த நேரங்கள்
நழுவியே போய்விட்டதடி
மோட்டுக் கழுதை
சரி விடு
நாளைக்கு விடியமுதல்
காதலுக்கும் காலுக்கும்
வெள்ளிச்சலங்கை வேண்டித்தாறேன்


கனவில மழை
" குளிக்கலாம்
வாவேண்டா "என்றது
தூக்கம் தூறலாக
இழுத்துமூடிக்கொண்டு
நனையாமல்ப் படுத்திருந்தேன்

அவளும்
நித்தியகல்யாணி மலர்களின்
வாசத்தைத்
ஈரமாக்கித் தெளித்துக்கொண்டு
குடையைப்பிடித்து
நளினமாக
விலத்திக்கொண்டிருந்தாள்

கால்களை மெல்லத்
தொடக்கிடைத்த
சின்ன இடைவெளி
தூவானங்களின்
கிளுகிளுப்புக்கு
பின்னணி இசை சேர்த்தது

என்னைப்போலவே
அவளுக்கும்
துளிகள்
தொட்டுச்செல்லும்
எல்லா உணர்வுகளும்
உள்ளுக்குள்ளேயே
சில்லென்று இருக்கலாம்

எழும்பிப்பார்க்க
ஜன்னலில் திரண்ட
முத்துக்கள் தவிர
அவளும் இல்லை
குடையும் இல்லை
வாசங்களுமில்லை

மழை மட்டும்
ஈனக்குரலில்
" அணைக்க யாருமில்லையே
என்கனவு
பெருமூச்சுடன் முடிகிறதே " என்று
திட்டிக்கொண்டே
வெளியோடு
பெய்துகொண்டிருக்கு



ஒரு
தேக விருப்பத்தின் 
தேர்ந்தெடுப்பு
இப்படித் தொடங்கலாம்,
பறவைகளின்
ஒருமித்த சிறகடிப்பு,
பூனைக்குட்டியின்
ரோம உரசல்,
ஆற்றின்
மையமான சலசலப்பு,
செவ்வரளிகளின்
மொட்டவிழ்ப்பு,
நீறு பூத்த
பொய்மைத் தணல்,
நாசியில்
வருடும் குங்கிலியம்,
நாணதிரும்
உருத்திர வீணை,
பார்வையிழந்த
தேவையற்ற ரகசியம்,
எரிமலையின்
வெளிச்சுவாச மூச்சு,
பிசுபிசுக்கும்
ஈரலிப்பு வியர்வை,
காதையடைக்கும்
கனதியான கூக்குரல்,
ஜிவ்வென்று பறக்கும்வரை
தேடியதெல்லாம்
அவ்வளவுதான்
அதன் பின்
இரவே கலைந்து கிடக்கும் !

ஒரு
வழிப்போக்கன் போலவே
பார்த்தேன்
யாருக்குத் தெரியும்
உன் பார்வை
என் திமிர் பிடித்த
ஆணவ ஆண்மை எல்லாத்தையும்
நொடிப்பொழுதில்
சரணடைய வைத்து
நொண்டியாக்கி
ஒரு யுகத்துக்கே
ஒருவழிபண்ணிவிட்டுத்தான்
போகுமென்பது
அப்போது தெரியாமல்
இப்போது
வாடி வாடி வாடி வாடி என்று
வசந்தகாலம் வருவதை
தேரோடிச் சொல்லும்
காற்றோடு கெஞ்சுகிறேன்
நீயோ
நேற்றோடு போனவள்தான்
வரவேயில்லை
ஹ்ம்ம்
எங்கேயாவதொரு
நல்ல இடத்தில போய்ச்சேர்ந்து
நல்லாவேயிரு
உன் எல்லாச் சந்தோஷங்களிலும்
அப்போதும்
நானிருப்பேன் உன்னோடு
மறக்காமல்
வளைகாப்பு விருந்துக்கு
எனக்கும்சொல்லிவிடு



நீதான் 
சிரித்திருக்க வேண்டும்
வேறயாருமே
அந்த இடத்தில இல்லை
குறுக்கே
எது வந்தபோதும்
எதிர்பார்க்கவே இல்லை
வெள்ளிப் பாத்திரங்கள்
உருண்ட
சத்தத்தை
இந்த முகத்தில்
இனியொருமுறை
மழை தூவும்
மேகம்
ஒதுங்கிக்கொள்ள
இடமிருந்தால்
சுற்றுவட்டாரத்தில்
எந்தப்
பறவைகளும்
முயல்க்குட்டிகளும்
வணங்கிவிடும்
இதுக்குமேலும்
உனக்கு
என்னடி குறை
கண்ணாடிச்சில்லுகள்
பல்வரிசையில்
பதிக்கபட்டிருக்கும்
ஒரேயொரு
பிரமிப்பில்
படைத்தவனே
லயித்துப்போன நேரம்
சிரிப்பு !


எனக்குத் தெரிந்த
எல்லாவற்றிலும்
என் ரத்தமும் சதையுமாக 
சிலதைத்தான்
நான் சொல்லமுடியும்
மற்றவர்களின்
காலத்தைக்கேட்டும்
கடன்வேண்டமுடியாது

பட்டுத் தாவணி
ஒருநாள் சொல்லாமல்
சைக்கிளிலில் செருகி
அழுக்குப்பிடிக்குமென்ற
ஆதங்கங்கள்
தெருப்புபுளுதியைக் கூட
சரியவிடாமாலிருக்க
யாரோ ஒருத்திக்கு
நான் பிறந்த நாட்டில் காதல் சொன்னேன்

அப்போதெல்லாம்
புரிதலற்ற பார்வைகள்
எங்கள் இருவரையும்
விலத்திப்போய்க்கொண்டு இருந்தாலும்
என் எதிர்கால மனைவி
எப்படியிருப்பாள் என்றதுக்கு
உத்தரவாதமான
உறுதிகள் இருந்ததில்லை

சவுக்காலைகளைத்
தயாராக்கிக்கொண்டு
எனக்கென்று
எதுவுமே இல்லாத போது
வெள்ளையாகவே வந்தாள்
புது மொழியில்இன்னொருத்தி

நான்செய்தபுண்ணியம்
எங்கோவொரு
வட துருவ நாட்டில்
ஏதோவொரு கணிப்பில்
அவள்ஜனித்த போது
இழந்த எல்லாவற்றையும்
வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு
என் அம்மா போலவே பிறந்தாள்
என் மகள்


இரகசியமான 
வேண்டுதல்களின் 
விருப்பப் பட்டியல் 
யாரும் கவனிக்காத 

தேவார 
சன்னதியில்
ஆராதனைகளாகிறது

மஞ்சள்
காத்திருக்கும் நாளின்
குங்குமத்தில்
ஒன்றுசேரும்
சந்தோஷத்துக்காக
இப்போதைக்கு
சந்தனப் பொட்டை
வைத்துக் கொள்கிறாள்

அவனோட
விரத நினைவுகளின்
கைகளைப் பிடித்து
அடியழித்து முடிக்க
சுற்றுப்பிரகாரம்
முழுவதையும்
தியானமாக்கி விடுகிறது
ஊதுபத்தி வாசம்

அர்ச்சனைப்பூக்களின்
நம்பிக்கை
தோல்வியில் மட்டும்
கை வைக்கக்கூடாது
என்பதுவே
இப்போதும் அவளின்
ஒட்டுமொத்தப்
பிராத்தனை

காதலின்
எதிர்பார்ப்புக்கள்
ஒரு நீண்ட
திருவிழாப்பருவக்
கன்னி மனதுக்குள்
வேண்டியபடியே
பிரசாதம் போல
இருந்துவிட்டுப் போகட்டும்
என்று
விட்டுவிடுகிறார்
பிள்ளையார்.




இறுக்கங்கள் 
பலவற்றையும் 
சரி செய்து விடும்
விழாக்கால 

வீதி அலங்கார 
மின்மினி விளக்குகள்
பறப்பதற்கு
சிறகுகளைத் தருகிறது

மனம்
பூக் கூடையைப் போல
லேசாக இருக்க
ஏதாவது ஒரு காரணம்
இருக்க வேண்டுமென்பது
அவசியமில்லாமல்
தெருவின் சத்தங்கள்
தலையை வருடிவிடுகிறது ,

பூசு மஞ்சள்
வர்ணதில் உலாவும்.
மாலைப்பொழுதின்
நேசமான வாசம்
அலைகளைப் போலத்
தொடர்ந்து பரவி
விரல்களைப் பிடித்து
அணைத்துக் கொள்ளுது

அமைதியாக
உள்நோக்கியபடி
மின்னல் போல
வாசலில் காலெடுத்து வைக்கும்
அடி மனதின் ஆசைகள்
மலராகும்
மொட்டின் கோலமாகி
ஏங்க வைக்கும்
சின்னவளுக்கு
உலகமாக இருக்கலாம்
ஜன்னல்.


உன் 
கால்களில் 
ஒட்டியிருந்த 
மணல் மண் 

விருப்பமில்லாமல் தான் 
குளத்து தண்ணியில்
கரைகிறது

முகத்தின்
பின் நிழலை
கலைக்க விரும்பாமல்
அலைகள்
அளவுக்கதிகமான
முன் எச்சரிக்கை
அமைதியில்

சந்தனப் பூக்களின்
இளமை வாசம்
உன் கைகளை
உதறிவிட்டுப்
போகமாட்டோமென்று
அந்தரித்து
அடம்பிடிக்குது

நிகழ்வுகள்
சந்தேகமாக
இறங்கிக்கொண்டிருக்க
சின்னவளோ
ஒரு
கேணியடிப்
படிக்கட்டிலிருந்து
அடுத்த கட்டுக்கு
படிப்படியாக
சந்தோஷமாக
ஏறிக்கொண்டுடிருக்கிறாள்.


இகல் 
இருளாகி விழ 
அறிவுடைமை 
இல் வாழ்க்கையை 

வெளிச்சமாக்கி 
விட்ட இடத்தில
நலம்புனைந்துரைத்த
நன்மைகள்
அறத்துப்பாலாகத்
திரண்டு விடும்

பொருள் செயல் வகை
குறிப்பறிந்து
பிறனில் விழையாமை
தேர்ந்தெடுத்த
குடும்ப
விருந்தோம்பலில்
பொருட்பால்
ஒப்புரவறிந்து
பரிமாறப்பட்டு விடும்

புணர்ச்சி விதும்பிய
தாமரை முகத்தில்
அடக்கமுடைய
அந்தரங்கம்
கடக்க நினைக்காத
வரைவின்மகளிர்
போலவே
இடனறிந்த
காமத்துப்பாலில்
ஒழுக்கமுடமையின்
எல்லைகள் வகுக்கப்படும்

அதிகாரங்கள்
அதிகம் உள்ள
குறளோவியத்தில்
பெண்ணிண்
அன்புடைமையை
மட்டும்தான்
வலியறிந்த
பிறனில் விழையாமையில்
மெய்யுணர்த்தி
வான்சிறப்பாக்கி விடுகிறாள்
வாசுகி.


சேமக்கலமும் 
வெண் சங்கும் 
பொழிந்துவிட்டுப் போன 
மங்கலங்கள் 

திரு விழாக் காலம் 
முழுவதும்
மனமலைந்து
மல்லிகைப்பூ மாலைப்
பார்வை போல
நிறைவாயிருந்தது

அருச்சனைத் தட்டில்
வில்வம் இலைகளோடு
பிரகாரமெங்கும்
விரதமிருந்து தேடிய
தரிசன வேண்டுதல்
சட்டென்று
செங்கழுநீர்த்தொட்டியில்
நிரம்பித் ததும்பியது

அவல் கடலை சுண்டல்
அடி நெரிபட்டு
உள்ளங் கைகளில்
சிதறி வழிந்து வந்ததை
விலகித் தூர நின்றே
ரசித்துச் சுவைத்து
ரகசியமாகச் சிரித்து
பஞ்சாமிர்தம் ஆக்கினாய்...

அபிஷேகங்களில்
அளப்பெரிய
வேண்டுதல்களை
அள்ளிக் கொடுத்த
உற்சவம்
ஏனோ
தேர் முட்டியில்
வடம் இழுத்து இரதம் வந்து
இருப்பாகியதோடு
இல்லாமலே போனது.



மோகம் 
கலந்துரையாடிய 
பாதையெல்லாம் 
வேப்பிலை தோரணம்

மஞ்சளாக 
வானமெங்கும்
தேடியது
இளமை எழுதிய
பங்குனித் திங்கள்

அலகு குத்திய
தீர்த்தக் காவடி
ஞாபகங்கள்
சேர்த்து வைத்த
சித்திரைக்
கோலமெல்லாம்
அதிசயமாக
வைகாசி விசாகம்

தீ மிதிக்க
ஓடிவந்து நின்று
எள்ளெண்ணை
ஊற்றிக்கொண்டே
விசாலமான உலகத்தை
நீ நினைப்பதுபோல
எரிப்பதில்
புரட்டாதிச் சனி

பால் குடம்
புள்ளி புள்ளியாக
தளும்பி
கன்னமெல்லாம்
வழிந்து
சொல்லி வைச்சுக்
கொள்ளை அடிக்குது
ஆடி வெள்ளி.



 
சிம்மினி 
விளக்கின் பின் 
வெளிச்சத்தை விட 
பட்டுச் சேலை

மொட்டு விரிக்கும் 
வாசம் அதிகம்

சில்வண்டுகளுக்குப்
போட்டியாக
மென்மையான
அபஸ்சுரங்களில்
ஏறி மிதிக்குது
மூச்சுச் சத்தம்

அரை இருட்டான
மூலைகளில்
தட்டு முட்டுச்
சாமான்களோடு
முட்டிமோதியது
வியர்வை வாசம்
.
விழிகளில்
வியப்பு ஆரவாரம்
அடங்கியும்
விடியும் வரை
மருதாணிக் கைகள்
தூங்கவில்லை
.
சிரித்து சிரித்துக்
களைத்துப்போன
நிசி நேரத்தில்
ஒவ்வொரு அசைவும்
ஒவ்வொரு கதையும்
நிலவிரிப்பில் வரைபடம்

வளர்ந்து கொண்டே
பெரியவள்கள்
ஒவ்வொருவராகப்
புகுந்த வீடு போக
சின்னவளுக்கு
ஒவ்வொரு இரவிலும்
இந்த அறை
நினைவுகள் தரும்
நேரம்
நின்றுபோக !




மவுனமான 
ஏக்கங்கள் தந்த சென்ற
பார்வையில்
இவளுக்கும் 

அவளுக்கும் 
வேற்றுமைகளை
விடவும்
ஒற்றுமைகள் அதிகமிருந்தது

இவள்
அரபியில் தன்
பாலைவன இதிகாசத்தை
மொழிபெயர்த்தாள்
அவளோ
காட்டில் பிறந்து
கண்வ முனிவரின்
காப்பியத்தில்

பளிங்குமாளிகை
பவளக் கற்களில்
நட்போடு கால்கள் உரசிய
மாடப்புறாக்கள்
இவளின்
எண்ணமாகிச் சிறகடிக்க
அவளோ
சகுந்தலைப் பறவைக்களால்
செறிந்த மரங்களின் நடுவே
வளர்க்கப்பட்டாள்

வாழ்கையின்
சமனின்மைக்கு இடையே
புதையலாகக் கிடைத்து
புதியதாய்த்
தொடக்கி வைத்த
கனவுகளைக் கையில் தந்து
மறந்து போன
ஒரு
துஷியந்தன்
இருவருக்கும்
எப்பவுமே சவாலாக
இருந்திருக்கலாம்.

மறுபடியும் 
சந்திப்பேன் என்ற 
பழைய நான் 
தடயமில்லாமல் போனது பற்றி 

காத்திருக்கும் உனக்கு 
எதுவுமே தெரியாது..

கொஞ்சம் கூட
இரக்கமுமின்றி
எப்படி
நேரம் குறித்துக்
காலத்தால் மட்டும்
இருவரையும்
பிரிக்க முடிந்தது

எந்தவித முன்னறிவுப்புமில்லா
இது வேடிக்கையாகத்
தோன்றும் போதெல்லாம்
இந்த
அவநம்பிக்கையின்
பிடியில் தான்
பாதைகள் வளைந்து
சென்று கொண்டிருக்கிறது

எப்போதுமே
உறுதிப்படுத்தப்பட்ட
முடிவுகளோடு வருகிற
உனக்கு
எதுவும் தெரியக்கூடாதென்றே
நானும்
அப்போது விரும்பினேன் .

கொஞ்சம் கொஞ்சமாக
விடுவித்துக்கொண்டு
என்னை
மாற்றிக்கொள்ளவும்
மோட்டுக் கழுதை
என்னுடைய
உலகம்
உன்னுடையதாகத் தான்
மாறியதடி.







கூடவே பிறந்த 
உறவுகளின் 
சுப முகூர்த நேரம் 
வயதாகிப் பிந்தி 

மாங்கல்யமாக 
நீயுன் தருணத்துக்காக
விட்டுக் கொடுத்துக்
காத்திருந்தாய்

அதிகார மனிதர்களின்
சின்ன எண்ணங்களில்
உன்
முதல் காதல்
பிடுங்கி எறியப்பட்டது
யாருக்கும்தெரியாது

படிகளைத் தாண்ட
ஜோசித்தவளே
பகலில் உன் விதியை
ரகசியமாக வாசித்தவர்களின்
வேண்டுதல்களில்
உன் சுதந்திரம்
கடைசியாக இருந்தது

உன்னைச் சுற்றி
எல்லாமே அம்சமாக அமைய
விடியாத உன்
உன் விருப்பங்களோடு
நீ எங்கேயோ
அங்கேயே
தங்கிவிட்டாய்

அதனாலென்ன
போனாப் போகுதடி
இப்பவும் நினைத்துக்கொள்
உன் திசை
ஒருவனுக்கு
இன் இசையாகி
ஆத்மாவை இன்னும்
உயிர்ப்பித்துக்கொண்டிருக்கலாம்.


மவுனமாகவிருக்க 
எவ்வளவு முறை
முடிகிறதோ
அவ்வளவு தடவை
மல்லிகையைக்  
கோர்த்து கொண்டே 
மாலைக்குள் முடிக்கிறாள்

ஒற்றைச் சரமாலை  
எவ்வளவு
நீளமாகிறதோ 
அது வரை நீண்டு 
மொட்டுக்கள்
கூந்தலோடு 
முத்தமிடுகின்றன 

பூக்களின்  
சுவாசம் உள்ளே
செல்லும்போது
அதனுடன் உள்ளே சென்று 
வெளியே வரும்போது
அதனுடன்
நந்தவனமாகி 
வெளியே வருகிறாள்

ஆண்டாள் மாலைக் 
கனவுகள் 
கல்யாண மாலையாகி 
வருவதற்க்கு முன்
ஒரு கணம்
சுவாசத்தில்
இடைவெளி வரும்

புத்துணர்வு தரக்கூடிய
வேறுபட்ட
குணத்தில் இருக்கும்
நேரம் வரை
சின்னப் புன்சிரிப்பு 
தொடர இந்தக்  கவனித்தல்
புறாக்களால் 
தொடரப்படுகிறது

கனவு 
மாலைகள் 
கை மாறிய பின் 
வாடா மல்லிகையின்  மனதில்
எங்கோ ஆழத்தில்
இங்கிதங்கள் நிரப்ப 
இரவு முழுவதையும் 
தியானமாக்கி விடுகிறது
விரல்களில் 
மொட்டுக்கள்
விட்டுச் சென்ற
வாசம்.