Thursday, 25 August 2016

ஏகாதசியும் பாட்டியும் ...

சின்ன  வயசில் அதிஷ்டவசமாக   நான்  என்  பாட்டியுடன்தான்  வளர்ந்தேன். என் பாட்டி  எலிசபெத் மகாராணி போன்ற ஒரு  றோயல்  ஹைனஸ்  லேடி. என்  மூளை  ஆமை வேகத்தில்  வளர்வதைப்  பார்த்து  இவன்  உருப்படுவனா  என்ற  சந்தேக்கதில்  என்  அம்மா என்னைப்  பாட்டியுடன் தள்ளிவிட்டுப் போய்  இருக்கலாம். அதில்  நான் பெற்றுக்கொண்டாதே  அதிகம், இழந்துபோனதென்று எதுவுமே  இல்லை.  பாட்டியைத் தவிர...

                                             தில்லுமுல்லுகள் திருகுதாளங்கலுடன்  இன்றும்  வாழ்ந்துக்கொண்டு  இருக்கும்  என்  முரட்டுக்காளை வாழ்கையில் பாட்டி என் இதயத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் பதிந்து விட்டுப்போன அன்பு பாசம் கருணைதான்  என் முக்கிய அடையாளமாக வெளிவரும் நேரங்களில் நானும்  எல்லார் போலவும் இந்த உலகத்தில் வாழமுடியும் என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றை  ஏற்றிவைத்த பாட்டி இறக்கும்போது நான் அருகில் இருந்து இருக்கிறேன். இதைவிட  வேறென்ன வேண்டும் ,,சொல்லுங்க பார்ப்பம்.


                                           எங்களின் பாட்டி மிகவும் கிருஸ்ன பக்தையாக இருந்தா, அதுக்கு அவா பல காரணம் சொல்லுவா ,முக்கியமானது அவா மலேசியாவில் இருந்த போதே ,இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது ,ஜப்பான் ஆர்மி அப்போது இங்கிலீஷ்காரன் ஆண்ட மலேசியாவுக்கு வந்து அந்த நாட்டைக் கைப்பற்றிய போது, பாட்டி ,தாத்தா ,என்னோட சின்ன வயது அம்மா, அந்த யுத்தத்தில மயிர் இழையில் உயிர் தப்பி இருக்குறார்கள், அவர்களைக் காப்பாற்றியது, யாழ்பாணத்தில இருந்த வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் என்ற பெருமாள் கோவிலில் இருந்த கிருஷ்ண பரமாத்மா எண்டு சொல்லுவா !

                                பாட்டி வருசத்தில வாற எல்லா ஏகாதசி விரதமும் பிட்டிப்பா,  அதுக்கு அவா சொன்னது இப்பவும் நினைவு இருக்கு,                             " காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை. தாய்க்கு சமமான தெய்வங்கள் இல்லை, கங்கைக்கு நிகரான தீர்த்தங்கள் இல்லை, ஏகாதசியை மிஞ்சிய விரதம் இல்லை "                          எண்டு சொல்லி , வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்  கோவிலுக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போய் அந்தக் கோவிலில் மவுனமாக இருந்து பிராத்தனை செய்வா, அந்தக் கோவிலில் இருந்த நவக்கிரகங்களை என்னையும் இழுத்துக்கொண்டு சுற்றுவா, நான் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்  புண்ணியத்தில் அந்தக் கோவிலுக்கு வரும் சன்ம்களை விடுப்புப் பார்ப்பேன் ,


                                           துவாரகையில்  கிருஸ்னர்  பிறந்த  கிருஸ்ன ஜெயந்திக்கு  வீடு முழுவதும் விளக்கு  ஏற்றி  வைத்து " ஜெய ஜெயாயார்தனா  கிருஷ்ண கோபிகாபாதி  ஜென்ம மோகனா
ஜெய ஜெயாயார்தனா  கிருஷ்ண ராதிகாப்பதி "   என்று 
  பயகொவிந்தம்  பாடி அமர்களப்படுத்துவா .  எங்களுக்கு  அந்த  நேரம்  கிருஷ்ணபரமாத்மாவின் அஸ்கு பிஸ்கு  பிகருகள்  தான்  ராதிக்காவும்  கோபிக்காவும்  என்பது  தெரியாமல்  அவர்கள்  என்னவோ  பெண் தெய்வங்களாக  இருக்கவேண்டும்  என்று  நினைத்து  பக்தியோடு  பாட்டியுடன்  சேர்ந்து  பாடுவோம்.  


                                       ஒவ்வொரு புரட்டாதி மாதமும் ,சனிக்கிழமை ,விரதம் இருக்க, வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்  கோவிலில் இருந்து அவாவைத் தேடி ஒரு வயதான சாமியார் போல இருப்பவர்வருவார் வந்து , நம்மாழ்வார்  போலவே                                                " வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிந்தா கோ ....கோவேறு வலன்சேர் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிந்தா  "                               எண்டு சொல்லிக்கொண்டு ,ஒரு பித்தளைக் குடத்தை கொண்டுவர அதில அவா படி அரிசி போடுவா, அந்த சாமியார் துளசி இலை எங்களுக்கு தருவார் ,                           பாட்டி புரட்டாதி சனிகிழமை காகத்துக்கு பைவ் ஸ்டார்  ஹோட்டல் மெனு போல  சாப்பாடு வைத்துப்போட்டுதான் சாபிடுவா, ஆனால் அன்றைக்கு எண்டு ஒரு பஞ்சத்தில அடிப்பட்ட சனியன் பிடிச்ச  பரதேசிக் காகமும் வராது ,வாற காகமும் வெத்திலை பாக்கு வைச்சு மடியில  அணைச்சு   வைச்சு  ஹோர்லிக்ஸ்  விளம்பரத்தில்  வரும் அமுல்
பேபி   போல  வாயில ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவன் என்டுரது போல அடம் பிடிக்கும்கள் .

                                  பாட்டியப் போல ,எங்கள் வீட்டில் வேறு ஒருவருக்கும் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்த கிருஷ்ண பரமாத்மாவில் அதிகம் ஆன்மீக ஈடுபாடு இல்லாத போதும், எனக்கு கிருஷ்ண பரமாத்மா கோகுலத்துப் பெண்களுடன் செய்த லீலைகளை அறிவதில் ரெம்பவே ஆர்வம் அந்த நாட்களில் இருந்தது, பாட்டி அதுகளைக் கேட்டால் சமயம் சார்ந்து சொல்லுவா ,ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் உள்ளது எண்டும் ,அந்த ஏகாதசிக்கு உள்ள பெயர்களே,கிருஷ்ணரின் கேர்ள் பிரெண்ட்ஸ் களின் பெயர் எண்டு படித்ததை அவாவிடம் ஒருநாள்  சந்தேகத்தில கேட்க அவா அதுக்கு

                        "கிருஷ்ணருக்கு ருக்மணி, காளிந்தீ, மித்ரவிந்தா, ஸத்யா, ஜாம்பவதி, பத்ரா, சத்யபாமா, சாருஹாஸினி என எட்டு மனைவிகள்,  ஏகாதசி கிருஷ்ணபட்சத்தில், சுக்லபட்சத்தில் வரும். சில ஆண்டு ஓர் ஏகாதசி அதிகமாக வர அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள்........... ".

                           எண்டு சொல்லி மளிப்பிட்டா ,

                      நாங்கள் சின்னவர்களாக இருந்த போது எப்பவுமே குழந்தைக் கண்ணன் கதைகள் சொல்லுவா, அந்தக் கதைகளின் முடிவில் எப்பவுமே ஒரு பெரிய தத்துவத்தையும் சேர்த்தே சொல்லி அந்தக் கதையை முடிப்பா ,ஆயர் பாடிக் கோகுலத்தில் மாயக் கண்ணனின் குழப்படிகளை எப்படி யசோதை பொறுத்துக்கொண்டாள் என்றதுக்கு ,

                                "   கிருஷ்ண பரமாத்மா, தன் தாய் யசோதை வெண்ணெய் உண்டாயா? எங்கே உன் வாயைக்காட்டு என்று அதட்டியபோது அப்பாவித்தனமாக வாயைத் திறந்து காட்டினார். வாய்க்குள் உலகத்தையே கண்டு யசோதை திகைத்துப் போனாளாம். அப்படித்தான் பகவான் தான் யார் என்பதை தன் தாய்க்குக் காட்டியிருக்கிறார்  "  

                  என்று சொல்லி முடிப்பா.

                        நான் பாடசாலையில் படிக்கும் நாட்களில் ராமாயணத்தில் வரும் கிருஷ்ணரும் ,மகாபாரத்தில் வரும் கிருஷ்ணரும் வேறு வேறு விதமாக மாண்டார்கள்,என்று படித்த போது மிகவும் குழப்பமாக இருந்து ,ஒரு முறை அதைப் பாட்டியிடமே கேட்டேன் ,

                                " " மஹாபாரதத்தில் , கிருஷ்ணர் தியானத்தில் இருந்தபோது ஒரு வேடனிற்கு மறைவாக அவரது பாதம் தெரிந்தது. அவரது பாதத்தை ஏதோ விலங்கு என நினைத்து மறைவில் இருந்து அம்பு எய்தான் வேடன். அதன் காரணமாக கிருஷ்ணர் இறந்தார்..ராமாயணத்தில் , விஷ்ணுவின் அவதாரமாகிய ராமன் வாலியை மறைவில் இருந்து அம்பு எய்து கொன்றார் .பின்னர் வாலி ஒரு வேடனாக மறுபிறப்பு எடுத்து விஷ்ணுவின் அவதாரமாகிய கிருஷ்ணரை மறைவில் இருந்து அம்பு எய்து கொன்றான் " 

                                             என்று விபரமா சொல்லுவா,
                          
                                    பரசுராமர், தேவகி வயிற்றில் வளர அந்தக் குழந்தையை ,கம்சனுக்குப் பயந்து வாசுதேவர் அந்தக் குழந்தையை , தேவகியின் கர்ப்பப் பையில் இருந்து எடுத்து வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர வைத்த கதையை பாட்டி சொல்ல சயன்ஸ் பிக்சன் கதைகள் படிப்பது போல இருக்கும் ,ஆதிசேஷன் என்ற பாம்பை பிடிசுக் கொண்டுவந்து பாற்கடலைக் கடைந்த கதையில் ஆதிசேஷன் எண்ட பாம்பு உண்மையில் மனிதர்களின் ஆணவம் எண்டு அர்த்தப்படுத்தி,மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும், வேதவியாசர் எழுதிய விசித்திர மனிதர்களின் வாழ்கைத் தத்துவம் எண்டு சொல்லுவா ,

                     " ஆணவம் அழிவுக்கு அஸ்திவாரம் "

                         எண்டு எனக்கு மென்மையாக எப்பவும் சொல்லுவா, பாட்டி மென்மையாக,மெதுவாக அதைச் சொன்னது அந்த நாட்களில் தெளிவாக எனக்கு கேட்காததால், அதால என்னோட வாழ்கையில் பிட் காலத்தில் பிரசினைகள் வந்தது உண்மை.. 

                                  மகா பாரதக் கதைகளில் ,பாண்டவர்களையும் ,கவுரவர்களையும் பற்றி எந்தக் கதை சொன்னாலும், அவர்களின் அப்பாவுக்கும் அரண்மனை வேலைக்காரிக்கும் தப்பான   உறவில்  பிறந்த அவர்களின் சகோதரமான விதுரனை எப்பவுமே விட்டுக்கொடுக்காமல் உயர்வாக சொல்லுவா, மஹா பாரதத்தில் பாண்டவர்களையும், கவுரவர்களையும் விட விதுரன் ஒழுக்கமானவன் எண்டு தான் எல்லாக் கதையின் முடிவிலையும் சொல்லுவா, விதுரனுக்காகா பாட்டி எப்பவுமே இரக்கப்படுவா. அது  இப்பவும்  எனக்கு  ஆச்சரியமா  இருக்கு 

                                           பாட்டி ,எப்பவுமே பஞ்சாங்கம் பார்த்துதான் எல்லாம் செய்வா, ரகுநாத  ஐயரின்  வாக்கிய பஞ்சாங்கத்தில்  சாத்திரம் பார்ப்பா,  ராகுகாலம் பார்க்காமல் வெளிய இறங்க மாட்டா, புண்ணியகாலம்  பார்க்காமல் எதுவுமே  செய்ய மாட்டா , வெளிய போட்டு வீட்டுக்குள்ள வர முன்பு கிணற்றடிக்குப் போய் காலைக் களிவிபோட்டு தான் வீடுக்க உள்ள வருவா, இல்லாட்டி

                       " உச்சனை உச்சன் பார்தால்ப் பிச்சை,  தப்பி  ஓடிப்போனவனுக்கு  ஓம்பதில  வியாழன்  அகப்பட்டவனுக்கு  அட்டமத்துச் சனி  என்று   சனியன் எப்பவுமே குத்திக்  காலோடுதான் ஒட்டிக்கொண்டு வரும் "

                                       எண்டு சொல்லுவா.பாட்டி அம்மாவாசை, பறுவதுக்கு எங்களின் வீட்டில மடி ஆசாரம் பார்த்து ,தை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியானது ‘ஸபலா’ ஏகாதசி இல் தான் அவா அதைப் பொங்கல் போல கொண்டாடுவா .

                                பாட்டியின் கடைசிக் காலத்தில் ,வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் மறந்து எங்கள் வீடில் நிறைய மாற்றம் வந்து, நாங்கள் அதிகம் அவாவின் ஆன்மீகத்தைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை ,பாட்டி தான் இறந்தால் ஒரு ஏகாதசியில் தான் இறக்க வேண்டும் எண்டு சொல்லுவா ,அவா இறந்தபோது எங்கள் வீடில் நிறைய மாற்றம் வந்து, நாங்கள் எல்லாருமே தலையால தெறிச்சு " எந்தப் புல்லை திண்டால் பித்தம் தெளியும்" எண்டு அல்லாடிக்கொண்டு இருந்ததால், ஆன்மிகம் வீட்டை விட்டுப் போய் , கடைசியில் எங்களிடம் பஞ்சாங்கமே இருக்கவில்லை , 

                                  எங்களின் வீட்டில ஒரு பிரம்பு " ஈஸி செயர் நாற்காலி "இருந்தது, அதில் ஜோகர் சுவாமிகள் வந்து படுத்து இருப்பாராம் எண்டு பாட்டி சொல்லி இருக்கிறா , அவாவே கடைசி காலத்தில் அந்த பிரம்பு நாற்காலியில் இயலாமல்ப் படுத்து..... பாட்டி இறந்துகொண்டிருந்த போது நான் அம்மாவிடம் ,

                                       " பாட்டி தான் இறந்தால் ஒரு ஏகாதசியில் தான் இறக்க வேண்டும் எண்டு சொல்லுவா "....என்ற .   அதை சொன்னேன் , அம்மா அதை பெரிசாக எடுக்கவில்லை.  எனக்கு  சின்ன  வயசிலேயே  விசர்  முத்தி விட்டது  என்பது போல  என்னைப்  பார்த்தா.  என்  அம்மாவுக்கும்  ஆன்மீகத்துக்கும்  பதினஞ்சு  கிலோமீட்டர்  தூரம் என்று  அப்போதுதான்  கண்டு  பிடிச்சேன் 

                          பாட்டி தைப் பூசத்துக்கு முதல் நாள் இறந்தா எண்டு பின்னாட்களில் நான் அறிந்தேன், வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஏன் பாட்டி விரும்பிய இறுதி விருப்பத்தை நிறைவு செய்யவில்லை என்று இன்று வரை எனக்கு விளங்கவேயில்லை.

                                    எங்கள் வீடில என்னோட அம்மாவழிப் பாட்டிய தவிர யாருக்குமே சங்கீதம் தெரியாது! என்னோட அம்மாவுக்கு அடுப்பு ஊதுற இரும்பு குழலுக்கும், புல்லாங்குழலுக்குமே வித்தியாசம் தெரியாது.

                   அப்பா M .K தியாகராஜ பகவதர் பாடல்கள் மட்டும் பாடுவார், திருநீலகண்டர் எண்ட படத்தில வார ",நீல கருணாகரனே நடராஜா " , என்ற பாடலை நீல கண்டன் போலவே அப்பா இழுக்க அம்மா முறைத்துப்பார்ப்பா ,அவர் குரலை உயர்த்தி "சராசரங்கள்..சராசரங்கள் .. வரும் சுழண்டு " எண்டு பாடதொடங்க , அம்மா தோசைக்கல்லை எடுத்து, அதை சராசரங்கள் போல  சுழட்டி

                                 "இப்ப இதை நிப்பாடாப் போறிங்களா ,இல்லை நான் உடுத்த சேலையோட வீட்டை விட்டு இப்பவே போகவா? " 


                                   என்று கேட்பா, அவர் சமாளித்து, மென்மையாக கீழ் ஸ்தாயியில் 


                                       "ராதை உனது கோபம் ஆகாதடி...." எண்டு சமாளிக்க,,இப்படிதான் M .K.T பகவதரின் பெயரால சங்கீதம் சின்னவயசில எங்க வீடில அறிமுகமானது!.

                             பாட்டியின் சங்கீத உலகம் அவாவோட சின்ன வயசில " வயலின்" என்ற வாத்தியத்தில் தொடங்க்கி இருக்கு, ஆனாலும் பாட்டி இளவயதில் கலியாணம் கட்டி, தாத்தாவோட வெள்ளைக்காரனுக்கு கீழ, வேப்பம் குழை அடிச்சு, இங்கிலிஸ் காரனுக்கு இங்கிலிசில சாம்பிராணி போட்டு உத்தியோகம் பார்க்க, அந்த வயலினையும் தூக்கிக்கொண்டு அந்தகால மலாயா ,,இந்தகால மலேசியாவில உள்ள பண்டார் சிரம்பான் போனவா, அங்கெ ரப்பர் தோடத்தில சுப்போவேசியர் வேலை செய்த தாத்தாவோட வாழ்ந்தபோதுதான் என்னோட அம்மா மலேசியாவில இருக்குற சிரம்பான் என்ற இடத்தில்தான் பிறந்தா!

                                பல வருடனகளின்பின் இரண்டாம் உலகயுத்த அலங்கோலத்தின் பின் "டீன் ஏஜ் " வயசில் இருந்த என்னோட அம்மாவையும் கூட்டிக்கொண்டு அவர்கள் தாய்த்திரு நாடு இலங்கைகே திரும்பி வந்துவிடார்கள், ஆனால் அவர்கள் வந்த கப்பல் நடுகடலில ,புயலால் இழுத்து எறிந்து , அலைகளுடன் அலைக்கழிந்து ,நாகபட்டினம் என்ற துறைமுகத்தில கரைஒதுங்க, அதில் பிரயாணம் செய்த பலரின் பிரயாணப் பெட்டிகளை கடல் காவுகொண்டு விட்டது, பாட்டியின் பெட்டியும் மிஸ்ஸிங் அதில இருந்த அவாவோட வயலினும் " மிஸ்ஸிங் இன் அக்சன் "!

                                               பாட்டி அதுக்கு பிறகு வயலினே வாசிக்கவில்லை,ஆனால் அவா பல பாடல்களை "ஏழு சுர வரிசையில் " ச  பா ,ரி க ம ப த  னிச ,எண்டு  ஆரோகண அவரோகன சுரம்  எல்லாம் சொல்லி வாயால் பாடுவா, சிலநேரம் அவா பாட அவாவின் கை வயலினில ஓடுவதுபோல நளினமாகா அசையும்! பாட்டி சின்ன வயசில் சொல்லித்தந்த மகாத்மா காந்தியின் பாடல் ஒன்றுதான் நான் இன்னும் நினைவுவைத்து இருக்கிறேன்.

                                        பாட்டி, அவாவோட வாழ்க்கையே சத்திய சோதனைபோல இருந்ததாலோ என்னவோ, மகாத்மா காந்தியின் அகிம்சையின் தீவிரவிசுவாசி, அகிம்சை எப்பவுமே வெல்லும் என்று உறுதியா சொல்லுவா ! எனக்கு அந்தக் காலத்திலேயே அகிம்சை உறுதியா வெல்லுமா எண்டதில நிறைய சந்தேகம் இருந்திச்சு ,,ஆனால் பாட்டிக்கு இருக்கவில்லை ! அவா அகிம்சையின் பலத்தை எங்களுக்கு விளங்கப்படுத்த காந்தியின் தண்டி யாத்திரை, உப்பு சத்தியாக் கிரகம், கதர் சட்டை , போன்ற சம்பவனகளை எல்லாம் சின்ன சின்ன கதைகளாக சொல்லுவா!

                              ரவீந்திரநாத் தாகூர் எழுதிய  கீதாஞ்சலியை  ஆங்கிலத்தில்  படித்த பாட்டி    மகாத்மா காந்தி சுடப்பட்ட போது  அவர்  படத்துக்கு  மலர்மாலை  அணிவித்து ஒரு  நிகழ்வில்  இந்தியாவின்  தேசிய கீதம்  ஜனகனமனவை  யாழ்பாணத்தில்   பாடியே  அசத்தி இருக்கிறா . பாட்டி  என்னைபோல  வாயால வடை  சுடுற  ஆள்  இல்லை.அக்சன்  அக்சன்  எப்பவுமே  அக்சன்.

                                          பாட்டி காலையில ஒவ்வொரு நாளும் "ரகுபதி ராகவ ராஜாராம் " என்ற பாடலை மனமுருகிப் பாடுவா , அந்தப் பாடலில் " ஜெசுவே அல்லா தேரே நாம் , பயகொவிந்தம் மேரே நாம் " எண்டு வார வரியில் , அல்லா, ஜேசு,கிருஷ்ணர், என்று எல்லா கடவுளும் ஒரே பாடலில்வர, கொஞ்சம் குழம்பிப் போய், 

                                " இந்தப் பாடலின் அர்த்தம் என்ன பாட்டி ?"

                                  என்று கேட்ருக்கிறேன், பாட்டி குழம்பாமல் , நல்ல தெளிவா , அமைதியாக 

                                           " அல்லா, ஜேசு,கிருஷ்ணர் எல்லாரும் ஒண்டுதான் ,முஸ்லிம்,கிறிஸ்டியன், இந்து எல்லாரும் ஒரே கடவுளின் படைப்புகள் ,அவர்களை ஒருநாளும் பிரித்துப் பார்க்கக் கூடாது " 

                                      என்று "அட்வைஸ்" போல சொன்னா!

                                    நான் அதை நல்லா மனதில பதித்துக்கொண்டேன் ,அந்த நல்ல ,உயர்ந்த சிந்தனை பிட்காலதில பாட்டியின் பெயரால  உதவி செய்தது .....எப்படி ?

                                 நான் கொஞ்சம் வளர்ந்து , மீசை முளைக்கத் தொடங்கி, தோள் மூட்டு விரிந்து , என்னோட "டீன் ஏஜ் " வயதில் நான், என்னோட பாட்டி சொன்ன அட்வைஸ் போலவே, பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணையும், மேரி பிலோமினா என்ற கிறிஸ்டியன் பெண்ணையும், உமா மகேஸ்வரி என்ற ஐயர் வீட்டுப் பெண்ணையும், ஒரே நேரத்தில, ஒருத்திக்கி ஒருத்தி தெரியாம, உசிருக்கு உசிரா காதலித்தேன் !.

                                                 அல்லா, ஜேசு,கிருஷ்ணர், முவரும் தான் அந்தப் இருக்கிறார்கள் ,அந்தப் பாடலில் புத்தரும் ,,பவுத்த சமயமும் வரவில்லை எண்டு இப்ப சரியாக் கவலைபடுரன்....அந்த மூன்று சொப்பன சுந்தரிகளையும் பற்றி 3 சிறுகதை எழுதியுள்ளேன் ,பாட்டியின் ஆவி வந்தாலும் என்ற பயத்தில இன்னும் வெளிவிடவில்லை ...

                           இதுக்கு மேல இனி என்னத்தைச் சொல்லுறது . ஏதோ என்னால பாட்டியின் அட்வைசுக்கு செய்ய முடிஞ்சது அவளவுதான் அந்த நேரத்தில!.
 .