Sunday 21 February 2016

பித்துக்குளி காட்டின புத்தகம்

சில வருடங்களின் முன் ஜெர்மனி போனபோது டுசில்டோப் என்ற நகரத்தில் பித்துக்குளி வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவனைச் சந்திக்கப் போனேன். வூப்பெற்றால் என்ற புறநகரத்தில் அவன் ஒரு பலசரக்குக்  கடைவைச்சு இருந்தான். அந்தக் கடையைச் சும்மா நோட்டம் விட்ட்டபோது   கடையின் கதவு திறந்து உள் நுழையும் போது அருகில் இருந்த காட்ச்சிப்படுத்தல் தட்டில் நிறைய மகஸின் அடுக்கி இருந்தது. அதைப் பார்க்க முதலில் சிரிப்பு வந்தது, பிறகு காலம் ஒரு முப்பது வருடங்கள் பின்னுக்கு ஓடியது... 

                                                                         அந்தரங்கம் எவளவு  புனிதமானதோ அவளவு   புதிர்கள் நிறைந்த ஒன்றாக ஆண்களின்  இளவயதில் இருந்து இருக்கும் . அதைக் கடந்து வராதவர்களே இல்லை என்பது போல அதன் வீச்சு ஆழமான ஒரு பதிவாக எப்பவும் இருக்கும் .அதைக் காட்டுமிராண்டித்தனமானது ,அசிங்கமானது என்று சொல்லிக்கொண்டு  இருந்தவர்களும் இருந்த ஒரு காலத்தில்  கலாச்சாரக்கதிரவன் ஒளிவீசி பகல் வேளைகளைத்  தவிர்த்து இரவில் எப்பவுமே  அது ஏதோவொரு  விதத்தில்  பிரகாசித்துக்கொண்டுதான் இருந்தது  

                                            இது உண்மைக் கதை என்று சொல்லவும் இல்லை, முழுவதும் கற்பனை என்று  இப்பவே எப்படி முடிவாகச்  சொல்ல முடியும் என்றும் சொல்லமுடியவில்லை .அதனால் வசதிபோல  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையோடு தான்  எழுதவேண்டி இருக்கு.  ஆனாலும் ஒன்று சொல்கிறேன்   எல்லாக் கதைகளில் வரும்  உண்மை மனிதர்களின் கற்பனைக் கதை இதனுள்ளே உண்மையாகவும் இருக்கலாம்,,, 

                                 எங்களின்  ஊரில  இருந்த  குளத்தடியில்  இயங்கிய குளத்தடிக்  குழப்படிக் குருப்பில் இள வயசிலேயே  பூனை மயிர் போல மீசை அரும்பிக்கொண்டு இருந்த காலத்தில வாழ்க்கை  ஒருவித அலட்சியமான ஆரவாரங்களில் அதிகம் இழுபட்ட  வயதில் ,  ஆனால் எங்கள் எல்லாரிலும் பார்க்க பாலியல் இனப்பெருக்க விஞ்ஞான ஆராச்சி விசியன்களில் முன்னோடியா பழுத்த பழங்களையும் மிஞ்சி வெம்பிப் பழுத்துப் போய் இருந்தவன் பித்துக்குளி .

                               அவன்தான் முதல் முதல் ஒரு நல்ல நாள் எங்களுக்கு குளத்தங் கரையில் தேய்வேந்திரம் பண்டி வளர்கிற காணியின் மூலையில் இருந்த புளியமரத்துக்கு கீழே இருட்டின நேரம் பளபளப்பான தாள்களில் வெள்ளைகார காராம்பசு போன்ற பெண்கள் உடுப்பு எல்லாத்தயும் கழட்டி எறிஞ்சு போட்டு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு  எல்லாத்தியும் சுழட்டி எறிஞ்சு போட்டு வஞ்சகம் இல்லாமல் தாராளமாக தங்களின் அங்கங்களைக் காட்டிக்கொண்டு வெவ்வேறு கோணங்களில்,காண்டீப வில்லுப் போல வளைந்து  நிக்கும் படங்கள் உள்ள மேலைநாட்டு சஞ்சிகையை காட்டி எங்களின் அறிவுக் கண்ணைத் திறந்த குளத்தடி வாத்தியாயனர்.

                                        இனி நான் சொல்லபோறது கோவிலில் மூன்றுகால சமய அனுஷ்டானப்  பிரசங்கம் வைக்கும் அப்பனுக்குத் தப்பி பிறந்த பித்துக்குளி எங்களுக்கு காட்டிய அந்த செக்ஸ் சஞ்சிகையின் பலனை "காறுதடி கம்பரிசி கசக்கிறது கானுத்தண்ணி இனிக்குதடி நம்ம சீமை இனிப்பயணம் தப்பாது " என்று நாங்கள் அதை அனுபவித்து ஜென்ம சாபல்யம் அடைந்த சம்பவங்கள் .

                                  அதுக்கு முதல் பிள்ளையாருக்கு பிடிச்சு வைச்ச கொழுக்கட்டை போல கொழுக்கு மொழுக்கு எண்டு குண்டாக  இருந்த , பித்துக்குளியின் கரக்டர் ,அவனின் " நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு " போன்ற அவனது அலட்சியத் துணிவு பற்றி சொன்னால்தான் உங்களுக்குக் கதை கைலாசம் போற மாதிரி வடிவா விளங்கும். 

                                             பித்துக்குளிக்கு பள்ளிக்கூட வரவு டாப்பில் இருந்த உண்மையான பெயர் திருநீலகண்டன். ஆனால் நாங்க எல்லாரும் அவனைப்  பித்துக்குளி என்றுதான் சொல்லுவோம், அதுக்கு காரணம் அவனோட அப்பா ஒரு பிரசங்கி.எங்கள் ஊர்க் கோவில்களில் புராணபடனம் சொல்லுவார், கந்தபுராண விளக்க உரை பிரசங்கம் போல வைப்பார், வள்ளி திருமணம் நாடகத்தை வில்லுப்பாட்டு போல மேடையில் நடத்துவார். அருணாசலக் கவிராயரின் ராமநாம கீர்த்தனைகளை ராகம் தாளம் பல்லவியுடன் நாதப் பிரம்மம் போலப் பாடுவார் .

                                  அதை விட அவர் எப்பவும் சைவ சமய தேவாரங்களை ஓதுவார் போல பண்ணோடு பாடுவார், அவர் அப்படி கோவில்களில் பாடும் போது தலையில் ஒரு மஞ்சள்துணி கட்டிக்கொண்டு,நிறைய உருத்திராட்ச மாலை கொழுவிக்கொண்டு,கறுப்புக் கண்ணாட்டி போட்டுக்கொண்டு பார்க்க இந்தியாவில் இருக்கும் ஆன்மிகப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் போல குரலில் தம் பிடிச்சு பாடிக்கொண்டு இருப்பார். அதனால அவரோட இரண்டாவது மகன் திருநீலகண்டனுக்கு நாங்க பித்துக்குளி என்று பெயரை வைச்சோம்.

                                              குளத்தடி வயல்க் கிரவுண்டில் கிரிகெட் விளையாடி முடிய இருட்டின மம்மல் நேரம் தான் நாங்கள் புளிய மரத்துக்குக் கீழே வட்டமா குந்தி இருந்து கதைப்பம், அதிகம் ஆரம்பகால வீர தீர இயக்க அரசியல், இளையராஜாவின் சினிமாப் பாடல்கள், ஊருக்குள்ள யாரை யார் சைட் அடிக்கிறது, யாரை யார் வைச்சு இருக்கிறது போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு முக்கியமான விசியங்கள் கதைப்போம், பள்ளிக்கூடம், படிப்பு, எதிர்கால வேலை சாத்தியங்கள், முன்னேறும் கனவுகள் இதுகள்  பற்றி மட்டும் கதைக்கவே மாட்டோம்.

                              ஆனால் எப்பவுமே எல்லாத்தயும் இழுத்து மூடிக்கொண்டு பெண்களை நிமிர்ந்து பார்த்தால் பொறுக்கி என்று நினைக்கும் சூழ்நிலையில் உள்ள ஊரில வாழ்ந்ததால்  பெண்களின் அங்கங்கள் எப்படி இருக்கும் என்று குத்து மதிப்பா குருடன் யானையைத் தடவிப் பார்த்த மாதிரி ஒவ்வொருத்தனும் தாறு மாறா ஒவ்வொரு விதமான கருத்துக்கள் சொல்லிக்கொண்டு ஆக்கமாட்டாத பெண்டாட்டிக்கு  அடுப்புக் கட்டி பத்தாம் போல அதை விவாதித்திக் கொண்டு இருப்போம்,

                                 காரணம் சயன்ஸ் பாடப் புத்தகத்தில் மட்டுமே இனபெருக்க பாடத்தில் பெண்களின் அங்கங்கள் குறுக்கு வாட்டில் வரைந்து அதுக்கு அம்புக்குறி போட்டு கருப்பை, கருப்பைச் சுவர், சூலகம் ,சூல்வித்துப்பை, பலோப்பியன் வழித் தடம், என்று பிராக்டிகலா அஞ்சு சதத்துக்கு பிரயோசனம் இல்லாத தகவல்கள்  அதன் பெயர்கள் எல்லாம் குறித்து  அநோட்டோமி என்ற அறிவியல் அளவில் இருக்கும், 

                              அதை வைச்சு விடிய விடியப்  பாடமாக்கி சப்பித் துப்பி சயன்சில் நல்ல மார்க்ஸ் வேண்டும் என்றால் எடுக்கலாம். அவளவுதான் அதுக்கு அறிவியலில்  பெறுமதி.  வேற வாழ்க்கைக்கு சமாந்தரமா அதன் தகவல்களை வைச்சு ஒண்டுமே செய்ய முடியாது.  அவளவுதான் எங்களின் கொடுப்பினை அந்த நேரம் வேற என்னத்தை சொல்லுறது நீங்களே சொல்லுங்க பார்ப்பம்.

                                             ஒருநாள் ஆர்வமாக  பெண்களின் அநோட்டோமி அறிவியலை ஒரு மண்ணும் விளங்காமல் அலசி ஆராந்து கொண்டு இருந்த நேரம், பித்துக்குளியும் கேட்டுக்கொண்டு இருந்தான். ஆனால் அவன் ஒரு கருத்தும் சொல்லவில்லை, " நீங்கள் எல்லாம் மாங்கா மடையார் " என்பது போல எங்களைப் பார்த்து சிரிச்சுக்கொண்டு இருந்தான். அந்த உரையாடல் நடுவில் ஜேசுதாசன் எழும்பிப் போயிட்டான், அவன் கிறிஸ்தவ பாதருக்கு பின் நாட்களில் படிக்கப் போறதா சொல்லிக்கொண்டு இருந்ததால், அவனுக்கு இந்தக் கதைகள்

                         " மாம்சதுக்காக அலையும் சத்துருக்களுடன் ஜீவிதம்  செய்யும் விஷப் பரீட்சை ......நீங்கள் எங்கயடா உருப்படப் போறிங்கள் மூதேசிகள் " 

                              எண்டு சொல்லி எப்பவும் திட்டுவது போலவே  திட்டிப்போட்டுதான் போவான், பித்துக்குளி அவனுக்கு

                      " போடா போய் அல்லேலுயா  அல்லேலுயா என்று கத்திக்கொண்டு , பரிசுத்த ஆவிக்கும் பங்குத்தந்தைக்கு முன்னுக்கும் பின்னுக்கும் சாம்பிராணி போட்டா "

                             என்று பேசுவான். அன்றைக்கும் ஜேசுதாசன் எழுப்பிப் போக பித்துக்குளி முதல் முதல் இந்த சப்ஜெக்டில் அவனோட கருத்தை தெளிவா சொன்னான்,எங்களுக்கு அது ஆச்சரியமா இருந்தது. பித்துக்குளி அதுவரை நாங்க  அறியாத பல விசியங்களை என்னவோ பக்கத்தில் நிண்டு தொட்டுத் தடவிப்பார்த்த மாதிரி சொன்னான். பிறகு எங்களின் ஊகமான  கேள்விகளுக்கு  முகத்தில அறைஞ்ச மாதிரி பதில் சொன்னான். ஸ்கூலில் படிக்கிற  விஞ்ஞான வகுப்பிலேயே  எங்களுக்கு அப்பிடி ஒரு விளக்கம் கிடைத்ததில்லை 

                        " பித்துக்குளி நீ சொல்லுறதுக்கு உறுதிப்படுத்த என்ன ஆதாரம் இருக்கு "

                      என்று குறுக்கு விசாரணை செய்யிற வக்கீல் போலக் கேட்டான் பின் நாட்களில் " ......  " என்ற இயக்கத்துக்கு போய்  சிலிண்டருக்கு சக்கை அடையும் போது டிக்னேடர் இறுக்கி அந்த இடத்திலையே பீஸ் பீசாக வெடிச்சு சிதறிப்போன நொள்ளைக் கண்ணன்.  அதுக்குப் பித்துக்குளி குழம்பாமல்,

                                " என்னட்ட ஒரு வெளிநாட்டு மகஸின் இருக்கு ,வீட்டில மோட்டு வளையில் ஓட்டை போட்டு சீலிங் சீட்டுக்க மடிச்சு ஒளிச்சு வைச்சு இருக்கிறேன்,"

                                  "  டேய்,,உண்மையாவா சொல்லுறாய்,,பித்து "


                                  " ஓமடா  உண்மைதான்,,வேண்டும் என்றால் நாளைக்கே கொண்டு வந்து காட்டுறேன் , நொள்ளை "


                                      " டேய்,, பித்து,,நீ சும்மா  பேய்க் காட்டாதை, வீராளி அம்மாளாச்சி மேல சத்தியம் பண்ணி சொல்லடா "


                                      " உனக்கு  இப்ப என்ன பிரச்சினை,,நொள்ளை,,,கையில கொண்டுவந்து அடைஞ்சா தான் நம்புவியா "


                               " டேய்,,அதில  தமிழிலய  எழுதி  இருக்கும் "


                                 "இல்லை,,அது  என்னவோ வெளிநாட்டு மொழி,,ஆனால் உலகத்தில உள்ள எந்த மொழியும் தேவை இல்லாமல் அதை விளங்கிக்கொள்ளலாம் டா நொள்ளை "

                                     
                              "டேய்,,பித்து,,நீ தெய்வமடா,,உன்னை போல வேறு ஒருவன் இல்லையடா "
                                  
                               " சும்மா வளுக்கு வளுக்கு எண்டு பேபரில் படம் எல்லாம் நேர்ல பார்க்கிற மாதிரி ஒவ்வொருத்தியும் செம்பம்புளி போட்டு தேச்சு விளக்கின பித்தளைக் குத்துவிளக்குப்  போல மினுக்கிக் கொண்டு......." 

                              என்று இதுக்கு மேல இங்கே எழுத முடியாத விசியங்களை  அவனே சொந்தமா அணு அணுவா ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை எழுதின மாதிரி சொன்னான். அதைக் கேட்க எங்கட மண்டை வீராளி அம்மன் கோவில் மாவிளக்கு சொக்கப் பானை போல பத்தி எரியத் தொடங்க, ஜெகதீஸ் வெக்கத்தை விட்டு

                      " பித்துக்குளி அப்ப  நீ நாளைக்கு அதைக் கொண்டு வந்து எங்களுக்கும் கட்டடா, "

                           என்று கெஞ்சி பித்துக்குளிக்கு  கப்பூரம் கொழுத்திக் காலில விழுந்து கும்பிடாத குறையாகக் கேட்டான்.. கொஞ்சநேரம் பித்துக்குளி ஜோசித்துப் போட்டு 

                            " சரி நாளைக்கு கொண்டு வாறன் ஆனால் முதல் எல்லாரும் என்னட்டை அந்தப் புத்தகம் இருக்கு எண்டு யாருக்கும் சொல்ல மாட்டம் என்று தலையில அடிச்சு சத்தியம் செய்து தர வேண்டும் ,ஏதும் பிசகு வந்தால் நீங்கள் தான் பொறுப்பு, " 

                               என்றான்,நாங்க இருந்த விசருக்கு அவனுக்கு தலை கீழா நிண்டு என்றாலும் " உமாசுதம் சோக விநாஸ காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் " என்று சத்தியம் செய்து கொடுக்கும் ஆர்வக்கோளாறில இருந்ததால் ,சத்தியம்செய்து கொடுத்தோம். சில நேரங்களில்  பின்வாங்குவதே ஒரு வித டக்டிஸ் மறுபடியும் முன்னேறித் தாக்குதல் செய்ய  என்று ....  என்ற இயக்கத்தில் லோக்கல்  ட்ரைனிங் எடுத்த  நொள்ளைக்கண்ணா வேறு சொன்னான். 

                                    பித்துக்குளி அடுத்தநாள் கிரிகெட் விளையாட வரமாட்டான் என்றும், பின்னேரம் அப்பாவோடு திருஞானசம்பந்தர் குருபூசைக்கு அறுவத்தி மூன்று நாயன்மார் சமாதி மடத்தில பஜனை பாடிப்போட்டு அது முடிய , இருட்டின நேரம் தேய்வேந்திரம் பண்டி வளர்கிற காணியின் மூலையில் இருந்த புளியமரத்துக்கு கீழே வைச்சுக் காட்டுறதா சொல்ல, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை தலையே போனாலும் பரவாய் இல்லை அதை நடத்தியே காட்டுறது எண்டு நாங்கள் பிளான் போட்டம்..

                            பித்துக்குளிக்கு அந்தப் புத்தகம் புதையல் போல எங்கே இருந்து கிடைத்தது என்று அவன் போனபிறகு நாங்கள் கிடந்தது மண்டையப் போட்டு கசக்கினாலும், அவனோட ஒரு மாமா வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கிறார் என்று ஒரு முறை சொல்லி முதல் முதல் அவர் வேண்டிக் கொடுத்த சோலாப்பூர் செருப்பு போட்டுக்கொண்டு வந்து காட்டி இருக்கிறான்,அதால அவரிடம் இருந்து அதை அவர் அசந்து மறந்த நேரம்  அவன் சுட்டு இருக்கலாம்,

                                 அதால கொஞ்சம் அவனிடம் சரக்கு இருக்கு என்பதை  உறுதிப்படுத்த முடிந்தது, ஆனாலும்  பித்துக்குளி அவனா அது எங்க இருந்து கிடைத்தது என்ற விபரத்தை வீராளி அம்மன் மேல சத்தியமா சொல்லமாட்டேன் என்று சொல்லிப்போட்டான் .அந்த நேரம் இருந்த அவசரகால நிலைமையில் நாங்களும் அந்த புத்தகம் எங்க இருந்து வந்தது என்ற ஆராய்சியைப் கொஞ்சம் ஒத்திப்போட்டு வைச்சோம்.

                                     அடுத்த நாள் எப்படியோ இந்தக் கதை குளத்தடிக்  குழப்படிக் குருப்பில் எங்களோடு ஒவ்வொரு நாளும் கிரிகெட் விளையாட வராத சிலருக்கும் கசிந்திட்டுது. அவங்கள் எல்லாரும் அன்றைக்கு எங்களுக்கு முதலே வயல் வெளிக் கிரவுண்டில வந்து நிண்டு, ஆளை ஆள் பார்த்து பம்மிக்கொண்டு, " பித்துக்குளி ஏன் இன்னும் வரவில்லை "  என்று ரகசியமா விசாரித்துக்கொண்டு ,  

                            " நாங்களும் இன்றைக்கு கிரிகெட் விளையாடப் போறம், பெட்டிங்   போலிங்   தாராட்டியும் பரவாயில்லை ,,பீல்டிங் மட்டும்  தந்தாலும் பரவாயில்லை,,உங்களோட ஒவ்வொரு நாளும் விளையாட வராததுக்கு இப்ப நினைச்சாக் கவலையா இருக்கு  "

                                 எண்டு எங்களுக்கு ரெண்டு காதிலையும்  செவ்வரத்தம் பூ வைச்சு  அமளிதுமளியா நிக்க. உண்மையில் எங்கள் எல்லாருக்குமே கிரிகெட் விளையாடும் உற்சாகம் இல்லை, கிரிகெட் விளையாடி என்னத்தைக் கிழிகிறது, இப்ப கிரிக்கெட்டா ஒரு கேடு  என்ற மனநிலையில் எப்படா இருட்டும் என்றுதான் ஜோசிதுக்கொண்டு நேரத்தோட விளையாட்டை நிற்பாட்டிப் போட்டம் .

                                  பிறகு  வெள்ளைச் சொண்டன் வீட்டு பனை மட்டை வரிச்சு வேலிக்கால இறங்கி விளாங்காய் பிடிங்கிக் கொண்டு நல்ல பிள்ளைகள் போல தேய்வேந்திரம் பண்டி வளர்கிற காணியின் மூலையில் இருந்த புளியமரத்துக்கு கீழேபோய் குந்தி இருந்து கொண்டு  பித்துக்குளி எப்பவும் வாற மசுக்குட்டி மாமியின் வீட்டுக்கு பின்னால உடையார் வளவுக்கு அருகில் உள்ள கண்ணாப் பத்தைகள் மறைக்கும் குளத்து  வாய்க்கால் மணல் தள்ளிய மண் பாதையைப்  பார்த்துக்கொண்டு இருந்தோம்.

                              அன்றைக்கு என்று  சூரியன் மேற்கில் பண்ணை வளவு பனை மரங்களுக்கு மேலாக மறைந்து இருட்டு படுகுதே இல்லை.அதுக்குள்ள அவனவன் பாலுமகேந்திரா படம் போல அந்த புத்தகம் எப்படி இருக்கும் என்று சொந்தக் கற்பனையில் திரைகதை எழுதிப் படம் ஓட்டிக்கொண்டு இருக்க, பித்துக்குளி வாற சிலமன் இல்லை, சிலருக்கு பொறுமை இழந்து " கண்டறியாத பஜனை பாடிக்கொண்டு இருக்கிறானே பித்துக்குளி " என்று வெறுப்பாக சொல்ல ,எங்களுக்கு அப்பத்தான் கொஞ்சம் சந்தேகம் வந்தது,  

                         " பித்துக்குளி சும்மா அனுமான் வெடி போட்டு புத்தகம் இருக்கு என்று எங்களுக்கு சொல்லிப் போட்டு புலுடா விட்டுப் போட்டு போட்டான் போல இருக்கடா ....," 

                                  என்று பின்நாளில் ஒரு விளக்கீட்டு  நாள் எங்கள் வயல்க் கிரவுண்ட் அருகில் இருந்த குளத்தில் நீந்தப் போய் சரணவாதம் வந்து கால் இழுத்து குளத்தில் செத்து மிதந்த ஜெகதீஸ் என்ற ஜெகன் சொல்ல , அப்பத்தான் ஜேசுதாசனுக்கு இன்றைக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போறதே தெரிய வந்தது,

                                      " பித்துக்குளி என்னடா காட்டப்போறன் , அவன் கொப்பனோட சேர்ந்து  படிக்கிறது தேவாரம், படிச்சுப் போட்டு  இடிக்கிறது சிவன் கோவில் , சரி அதென்ன புத்தகம் அதயாவது சொல்லுங்கடா  " என்று ஜேசு கேட்டான்,

                      அதுக்கு நொள்ளைக் கண்ணன்,

                              "பாம்பு மரத்தில இருந்து  இறங்கி வாயில அப்பிள் பழத்தைக் கவ்விக் கொண்டு வந்த கதையில வாற  ஆதாமும் ஏவாளும் இருந்த மாதிரியே மனிதர்கள் மறைக்க ஒண்டும் இல்லாத காலப் படம் உள்ள புத்தகம் " என்று சொன்னான்,

                             ஜேசுதாசனுக்கு கோபம் வந்திட்டுது சடார் என்று எழும்பினான், நோள்ளைக்கண்ணனை அடிக்கப் போனான் ,

                         " அந்த அப்பிளைத் திண்டதாலதான் மனிசருக்கு அறிவு வந்து  இப்படிக் கிடந்தது சீரளியுரிங்கடா மூதேசிகளே ,  நொள்ளைக் கண்ணா,  நீ என்ன எண்டாலும் கதை பரிசுத்த பைபிளை கேவலப்படுத்தி என்னோட மட்டும் கதைக்காதை,வீண் பிரசினை வரும்  " 

                               என்று சண்டை பிடிச்சாங்கள்.மற்ற எல்லாருக்கும் அந்த சண்டை அந்த நேரம் முக்கியமே இல்லாத மாதிரி பித்துக்குளி எப்பவும் வாற கண்ணாப் பத்தைப் பாதையை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

                                       " இவங்களோட உத்தரிக்கிரது ஓடிப்போன பெஞ்சாதியைக் கூ ட்டிக்கொண்டு வந்து வைச்சுக் குடும்பம் நடத்துறது போல இருக்கேடா " 

                        என்று நொள்ளை கண்ணனையும் ,ஜேசுதாசனையும் அடிக்கப் போனான் ஜெகதீஸ். 

                                            மம்மல் இருட்டி, ஆட்காட்டி குருவி குளத்துக் கரையில் ஆரவாரப் பட பித்துக்குளி எப்பவும் வாற மசுக்குட்டி மாமியின் வீட்டுக்கு பின்னால உள்ள உடையார் வளவுக்கால வராமல் தெய்வேந்திரம் பண்டி வளர்கிற மாந்தோப்புக் காணிக்கால விழுந்து எழும்பி வந்தான் .ரெண்டு கையையும் விசிக்கிக் கொண்டு வர சந்தேகமா இருந்தது. அனால்  பித்துக்குளி கிட்ட வர அவனோட இடுப்பு பொம்மிக் கொண்டு இருக்க அவன் கொடுத்த வாக்கை தவறவில்லை போலதான் இருந்தது ,பித்துக்குளி வந்துவுடன

                            " என்னடா இண்டைக்கு தேர்த்திருவிழா மண்டகப்படிக்கு கும்பலா வந்து விழுகிற மாதிரி எல்லாரும் வந்து நிக்குரான்களே  " 

                                        என்று ஆச்சரியமாக் கேட்டான். கொஞ்ச நேரம் அங்கால இங்கால் பார்த்தான் , முக்கியமா தெய்வேந்திரம் மாந்தோப்பு  கிணத்துக் கட்டில வெறியப் போட்டு படுத்து இருக்கிறாரா  என்று பார்த்தான்,பிறகு வெள்ளைச் சொண்டன் வீட்டு வேலிக்க அவரோட நாய் நிக்குதா என்று பார்த்தான், நாய்  நிண்டால் வெள்ளைசொண்டன் கள்ள விளாங்காய் பிடுங்க வாறவங்களைப் பிடிக்க பதுங்கி இருப்பார், அவர் நாய் கிடந்தது கத்தும் ,வெள்ளைச் சொண்டன் கோவத்தில 

                                " அடி சனியனை பிளக்கி,  ஏன் கிடந்தது கத்துறாய், விளாங்காய் களவு போறதுக்கு கையும் மெய்யுமா இவங்களைப் பிடிக்க பதுங்கி இருக்கிறன்,சனியன் கிடந்தது ஊளை இடுகுதே..." என்று ஒளிச்சு இருந்து அவர் சொல்லுறதும் எங்களுக்கு கேட்கும்.

                         பித்துக்குளி குளத்தடியில்,வயல் வெளியில்,கிரவுண்டில் வெளி ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு , ஒரு மாட்டுத் தாள் பேபரில் சுற்றி சேட்டுக்க வைச்சு இருந்த அந்த வெளிநாட்டு சஞ்சிகையை வெளிய எடுத்து பேபரைக் கழட்டாமல் அதை வைச்சுக்கொண்டு முதல்க் குண்டை தூக்கிப் போட்டான்,

                               எங்கள் குளத்தடி கிரிகெட் டீமில் அவன் இருந்தாலும் பித்துக்குளி கிரிகெட் விளையாடமாட்டான், அவனை சும்மா பொலிவுக்கு எதிர் அணிகளுக்கு அவன் தோற்றம் கொஞ்சம் எங்களின் டீம் பயங்கரமான விளையாட்டு வீரர்கள் உள்ள டீம் என்று காட்டத்தான் அவனை வைச்சு இருந்தம்.பந்து காலுக்கால சாரைப்பாம்பு போல மெதுவாகப் போனாலும் குனிஞ்சு பிடிக்க மாட்டான், அவளவு சோம்போறி,  

                                மச் தொடங்க முதலே  பிள்ளைப் பெத்த பெண்டுகள் போல நாரிக்கு கையை முண்டு கொடுத்துக்கொண்டு நிற்பான். ஆனால் சுனில் கவாஸ்கர் போல ஒரு தொப்பி போட்டுக்கொண்டு,சுனில் கவாஸ்கர் போட்டிருப்பது போலவே ஒரு தனி உருத்திராட்ச கொட்டை வைச்சு செய்த தங்கச் செயின் போட்டு இருப்பான் ,  பித்துக்குளி மாட்டுத்தாள் பேபரைக் கழட்டாமல், 

                             "  இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும்,அதுக்கு எல்லாரும் கையெழுத்து போட்டு தர வேண்டும் "

                                    " ஆனால்  பித்து  ,,நீ  ஒழுங்கா  விளையாட  மாட்டாய்,,உன்னைக்  கப்டன்  ஆகப்  போட்டா  மற்ற  ஒருவனும்  நீ  சொல்லுறது  கேட்க  மாட்டாங்கள்  டா "

                         " எனக்கு அந்த  இந்தக்  கதை  தேவை  இல்லை , டேய் ஜெகதீஸ் ,இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும் 2

                          " பித்து நீ இப்ப போடுற கொண்டிசன்  அநியாயம் டா,,உனக்கே  நல்லா  தெரியும்  நீ  கப்டனா  வர  தகுதி  இல்லை  என்று "  

                             " டேய்,நொள்ளைக்  கண்ணா, நீ  என்ன  பெரிய  சுனில் கவாஸ்கரா ,,எனக்கு அந்த  இந்தக்  கதை  தேவை  இல்லை , டேய் ஒண்ணரைக் கண்  காகம்   ,இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும்"

                              " அய்யோ  ,பித்து  ஏண்டா  ,,இப்பிடி  போய்  ஒரு  புத்தக்கம்  காட்ட  இவளவு டிமாண்ட் விடுறாய்,,சும்மா  காட்டிப்போட்ட்டுப்  போவேன் டா '"

                               " ஹஹாஹ்,,டேய், உழவாரம்,,நீதாண்டா பெரிய  கள்ளன்,,தந்திரமா  நுழைஞ்சு  வேலையை முடிக்கிற ஆள்..ஆனால் உண்ட  பருப்பு வேகாது,,முதல் எனக்கு அந்த  இந்தக்  கதை  தேவை  இல்லை , டேய் இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும்,,அது  முக்கியம் "

                                " நாங்கள் நாளைக்கு மீட்டிங் போட்டு முடிவு எடுத்து சொல்லுறம்  " 

                               " டேய்..டேய்  ஜெகதிஸ்  பார்த்தியே நீ பெரிய புத்திசாலி எண்டு நினைக்கிறாய்  என்ன,,வடுவா ..எனக்கு அந்த  இந்தக்  கதை  தேவை  இல்லை , டேய் ஜெகதீஸ் ,இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும்"

                              " பித்து,,இதெல்லாம்  சின்னத் தனமான  கோரிக்கை டா "

                              " டேய்,, நொள்ளை,நீ முதல் வாயைப்பொத்திக்கொள்ள பழகு,,பிறகு  எனக்கு  விசர்   வரப்பண்ணாதை ..,இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும் "

                                  என்று பொறுத்த நேரத்தில எங்களின் வீக் பொயிண்டைப் பிடிச்சு கழுத்தில கத்தியை வைச்சு உலுப்பினான், உண்மையில் நிலைமை கூளுக்கும் ஆசை  மீசைக்கும் ஆசை போல இருக்க எல்லாவிதமான பேர்ச்சுவார்த்தை முயற்சிகளும் தோற்றுப்போக எங்கள் தலை எழுத்தோடு விதி விளையாட இது நேரம் இல்லை என்று உடனே எல்லாரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தோம்,

                                  பித்துக்குளி அதுக்கு பிறகுதான் அந்தப் புத்தகத்தைக் காட்டினான். நாங்கள் எல்லாருமே ஆர்வமாய்,கொஞ்சம் ஆச்சரியமாய்ப் பார்த்தோம் . மூளையின் ஹிப்போதலமஸ்  பிரதேசத்தில் மின்னல் அடிக்க தெஸ்தெஸ்திரோன் ஹோர்மோன் கொஞ்சம் அதிகமா இடி முழக்கம் போல எல்லார் ரத்தத்திலும் பாய ,காதுக்குள்ள கீர்ர்ர்ர் எண்டு மொரிஸ் மைனர் கார் ஓட, மெதேன் வாயு போல புளியமரக் காற்றுக் கனமாக, நெற்றியில், உள்ளங்கையில் வியர்க்கக் கை நடுங்க ,நாக்கில் தண்ணி இல்லாமல் போய் பேப்பர் போல நுனி நாக்கு உலர , உலகம் அநியாயத்துக்கு  கலர் கலரா தெரிய , முள்ளம் தண்டில ஊசியால குத்தினது போல இருந்தது. 

                                         இரவு வீட்டை வந்த நேரத்தில் இருந்தே ஒரே குழப்பமா இருந்தது, நான் நினச்ச மாதிரி அந்தப் புத்தகம் தவறாக எதையுமே காட்டவில்லை போல இருந்தது. அதெப்படி உலகத்தின் வேற ஒரு திசையில் மனிதர்கள் வேறு விதமான சிந்தனையில் இப்படி வெளிப்படையான சுதந்திரமாக வாழ முடியும் என்பதை நினைக்க குழப்பமா இருந்தது, இதெல்லாம் உண்மையா என்று வேற குழப்பமா இருந்தது . 

                                               ஒருவனுக்கு ஒருத்தி என்று கழுத்தில தாலி ஏறினால் தான் காட்சியே ஆரம்பிக்கும் என்ற  கலாசார விழுமியங்களில் கட்டிக் காக்கும் ஒரு கட்டுப்பெட்டி சமுதாயமாக  நாம் வென்றுவிட்டதாக  நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்  போலவும் ஆனால் அறிய வேண்டிய விடயங்களை மறைக்கும்  தனி மனித சுதந்திரத்தில்  நாம் தோற்றுவிட்டோம் போலவும் இருந்து  ,அதை ஜோசிதுக்கொண்டு புரண்டு புரண்டு படுத்திட்டேன்  

                                                    அந்தப் புத்தகத்தில் இருந்தவள் போலவே ஒரு வெள்ளைக்காரி மாதுளம் பழ நிறத்தில ,ஒரு உடுப்பும் இல்லாமல் ஏவாள் போல வந்தாள் ,நான் ஆதாமை அருகில் தேடினேன், ஆதாம் பூவாளி மார்க் சரம் கட்டிக்கொண்டு மேலுக்கு மைக்கல் ஜாக்சன் போல மினுங்கல் மினுங்கல் வைச்ச கோட் போட்டுக்கொண்டு வர,  ஜேசுதாசன் ஒரு ஓரமாக பாதிரியார் போல வெள்ளை உடுப்பு போட்டு உக்காந்து இருந்து உறுமி மேளம் அடிச்சுக்கொண்டு அதில " ராத்திரி நேரத்துப் பூசையில் ரகசிய தரிசன ஆசையில்....."  என்று பாடிக்கொண்டிருந்தான் 

                                            நான் பித்துக்குளி எங்கே என்று தேட அவன் உருத்திராட்ச்சம் மாலை போட்டு " புற்றிலார்  அரவம்  கண்டேன் ,,ஐயனாம்  அஞ்சுமாறே  " என்று  " மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் ஒரு மணிவாசகம் " என்று குளத்தடி புளியமரத்துக்கு கீழே இருந்து பிரசங்கம் வைச்சுக்க கொண்டிருக்க , அந்தத் துகிலுரிந்த இளம் வெள்ளைப் பெண் என்னை நோக்கி மலையாளப் பிட் படம் நடிக்கும்  ஷகிலா போல கண் வெட்டிவிட  

                                               வயல் வெளிக்கால    வாயில வாழைப்பழத்தை கவ்விக்கொண்டு   ஒரு புடையன்  பாம்பும்  அவளுக்கு கிட்டவா வந்துகொண்டு இருக்க, பக்கத்தில் நின்ற வேப்ப மரத்தில இருந்து செண்பகம் மசுக்குட்டியை உதறி உதறி வாயில வைச்சு ருசி பார்க்க ,ஆச்சரியமாகி அவளை முழுவதும் பார்க்க வெக்கப்பட்டு , பாம்பைப் பார்த்திட்டு அவளிடம்

                         " பைபிள் ஆதியாகமத்தில் பாம்பு அப்பிள் பழம் எல்லா கொண்டு வந்தது , இதென்ன வாழைப்பழத்தைக் கவ்விக்கொண்டு வருகுதே " என்று தமிழில் கேட்டேன்  

                    அவள் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவாள் என்று நினைக்க  வெட்கமே படாமல் என்னை நெருங்கி நெருங்கி நெருங்கிக் கிட்ட வந்து, தமிழில் 

                               " இது நீர்வேலி இதரை வாழைப்பழம், 

                                "  என்னது  நீர்வேலி அச்சுவேலிக்கு  பக்கத்தில் எல்லா இருக்கு..நீ வெள்ளைகாரியாக இருக்கிறியே "


                                   " ஹஹஹா,,அவிச்ச றால் போல  இருக்கிறேன் என்று சொல்லு,,உங்க  ஆட்கள் அப்படிதானே சொல்லுவார்கள் "


                                    "  ஆமாப்பா,,அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் "


                                   "ஹஹஹஹா,,அதவிடு,,வாழைப்பழம்  இப்ப உனக்கு வேணுமா ,,உரிச்சுத் தரவா "


                               " உரிச்சுத் தாறதில  உங்களை அடிக்க இந்த உலகத்தில் ஆட்களே  இலையே "


                                 " ஹஹஹா,, உனக்கு இப்ப  வேணுமா இதைத் திண்டால் முதலில் மண்டையில் உள்ள பித்தம் இறங்கும் "

                               
                                 " வேற என்ன எல்லாம் இறங்கும்,,அதயும்  சொல்லேன் "

                             " வேணுமா உனக்கு ,கஜாந நம்பூத கணபதி ஸேவிதம்  க  பித்த ஜம்பு பலஸார பக்‌ஷிதம் , "


                                  " அட விநாயகர் காப்பு  மந்திரம் எல்லாம் தெரியுமா உனக்கு "


                              " சொல்லடா ,,கந்தர்வா ,, இதரை வாழைப்பழம்  வேணுமா உனக்கு " 

                                   என்று தமிழில்  சொல்லிக்கொண்டே எனக்கு மேல பாய 

               நான்  " அய்யோ அய்யோ எனக்கு  வாழைப்பழம் வேண்டாம் "

                              என்று பிசதிக்கொண்டு எழும்ப. அம்மா எழும்பி ஓடிவந்து

                           " என்னடா  இதரை வாழைப்பழம் எண்டு வாய் உளருறாய், இதுதான் நான்  ஒவ்வொருநாளும் சொல்லுறது இருட்டினப் பிறகு தெய்வேதிரதிண்ட புளிய மரப் பக்கம் போகாதை எண்டு  ,என்னவோ காத்துக் கருப்பு பட்டு இருக்கு,அந்த மரத்தில மோகினிப் பிசாசும் ,சுடலை மாடனும் இருக்கு என்டு குஞ்சரம் எப்பவும் சொல்லிக்கொண்டு தெரியிறது உண்மைதான் போல கிடக்கு,,நீ என்னதையடா பாத்தனி "

                                     என்று எனக்கு பிள்ளையார் தட்டில இருந்து திருநீறு எடுத்துக் கொண்டு வந்து நெற்றியில் பூசிக்கொண்டு கேட்டா, நான் கொஞ்சநேரம் கண்ணை உருட்டி உருட்டி பாம்பைத் தேடிப்போட்டு .

                            " ம்ம்ம்ம் ..மோகினியைத் தான் பார்த்தேன்.. அம்மா " 

                        என்று சொன்னேன்.

.