Wednesday, 14 September 2016

அனாமிக்கா,,இறுதிக்கு முந்திய கவிதைகள்.

...............................................................  061
அனாமிக்கா
அவள்பாட்டுக்கு
ஒரு கல்யாணமேடை
ஒரு சுகமான பொழுதென்று
அரிதாகக் கிடைப்பதில் 
சந்தர்பங்களை வரமாக்கி
இருப்பைத்தேடிக்கொள்கிறாள்
எனக்குத்தான்
நேற்று இன்று நாளை
கண் கெட்டுப்போய்
இடத்தையும் காலத்தையும்
தணியாத ஆசைகளாக்கி
தேவையில்லாத வேகத்தில்
நீட்டிவைக்குது

கற்பனைகளின்
தொடர்ச்சி முடியுதேயில்லை
இங்கே காண்பதெல்லாம்
இன்னொரு உலகம்
நெஞ்சமெல்லாம் நினைவிருந்தும்
எதையும் எதனோடும்
பொருத்தவே முடியவில்லை

ஒரேயொரு
நிகழ்தகவில் அவளுக்கு
தேர்வுகள் முக்கியமில்லை
நிகழ்காலமே எனக்கு
நிமிடங்களைக் கொல்லும்
அநாவசியமான சுமை
உன்
கடப்பு அனுபவங்களே
நடப்பு நிலவரத்தில்
இடைஞ்சல்கள் என்பாள் அனாமிக்கா
இதுக்குமேலே விளக்கம் கேட்டால்
மவுனமாக இருப்பாள்
நான் என்ன
கவுதம போதிசத்துவனா
நிசப்தத்தைப் பிரபஞ்சஅளவில்
மொழிபெயர்க்க ?
..............................................................062
வாழ்தலின் மீது
அழுத்தமாகவே நெரிக்கும்
விலத்திநகர முடியாத
அபத்தங்களைக் குறிவைத்து விவாதிக்கிற
அனாமிக்காவின் 
எப்போதுமான தெரிவுகள்
மென்நீலநிற ஆடைகளே


நிறங்களின்

விருப்பத்தடங்களை
பின்தொடர்ந்து போகும்போது
அழிந்து போய்விடுகிறது
ஆதாரமான செய்திகள் என்பவள்
இன்றுவரையில்
நீலநிறத் தேர்ந்தெடுப்புக்கான
உறவுச்சமன்பாட்டை
நிறுவிப் பதிவுசெய்ததில்லை

அலையிழந்த ஆழக்கடல்
லீலைசெய்த மாயக்கண்ணன்
பாற்கடலின் விஷம்
மேகமில்லாத வானம்
தோகைமயிலின் கழுத்து
துருவப்பெண்னின் கண்கள்
சாமந்திப் பூக்கள்
பிசாசின் நீண்ட நாக்கு
எல்லாமே எப்போதும் நீலநிறம்தானே

பரவசங்கள்
பிணைந்திருக்கின்றதான
இளமைத் திருவிழாக்களில்
அடியும் நுனியும் தேடிக்கொண்டு
அந்த நிறத்தில்
ஏதாவது இருப்புகளை
மேற்கோள்காட்டிவிடலாமென
நினைக்கிறாளா ?
அதுவும் கணிக்கமுடியவில்லை
என்
புரிதல்களின்
போதாமைகள் வெளிப்படையாகி
திமிர் அடங்கமறுத்து
வயதுக்குவந்த பாலினச்சுரப்பிகளுக்கு
வடிகாலாகிய வயதின்
நீலப்படங்கள்
நினைவுக்குள் தத்தளிக்க
காமமும் நீலநிறமா? என்று கேட்டேன்
அனாமிக்கா
அன்று ஒருநாள்தான்
நாணிக்குறுகி வெட்கப்பட்டாள் !
...........................................................063

விரத நாளை 
நினைக்க மறந்து 
ஆட்டுக்கால் குழம்புக்கும் 
வெள்ளை ஆனப் பாயாவுக்கும் 
என்ன வித்தியாசமென்று 
அனாமிக்காவிடம்
வாய்தவறிக் கேட்டேன்
.
அவள் பதில் முடியமுன்
மவுலானா ஹோட்டல்
நினைவில் வந்து
நாக்கு வேற
முன்னேப்பதுமில்லாதவாறு
நனைந்து தொங்கியது
.
ஏதோவொன்று
மீண்டெழுகிறது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்து
இதுவரையில்
நிறுத்தப்பட்ட காலத்தை
உயிர்ப்பித்தத்துக்கு
அன்புள்ள நன்றி.என்றேன்
.
அனாமிக்கா
கோபமாகவே இருந்த போதும்
எலும்புகளைக்
கையளைந்த விரல்கள்
ஒவ்வொன்றின் துவக்கத்திலும்
முகமறியா வாசனைக்கு
அழைப்பு வந்தபடியே இருந்தது.
.
ஏழைகளின் பசியைப்
படித்துக்கொள்ள
இன்னொருவராகி
இச்சைகளை
அடக்கி வைக்கும்
சோதனைக்களமே விரதங்களென்றாள்
.
நானோ
பரிசீலனை செய்யவேண்டிய
நோன்பின் மகத்துவத்தை
அனாமிக்காவின்
விளக்கத்துப் பிறகுதான்
வேதாந்தியின் புரிதலென்பது
எனக்குப்
போதவே போதாதென்று
முடிவாக்கிக்கொண்டேன் .

.................................................................064

உலகத்தின் 
அழகெல்லாம் 
அவள் நெஞ்சு விழிம்பில் 
தஞ்சமடைந்த மாதிரி 
அனாமிக்கா 
ஸ்பானிஷ் டுனிக்காவை
வேன்றுமென்றே
இறக்கி விட்டுருந்தாள்

உடுப்புகளில்
கலையம்சரசனை இருக்கென்று
தெரிந்து வைத்திருக்கிறேன்
ஆனாலுமதில்
ஒருவித பணிவு, பாவம்
உன்னைப்போலவே
எவராலும் கொடுக்கவே முடியாதென்றேன்

பின் அந்தி மாலை
முதலிரவு போலவே
பாலும் பழமும்
பாதாம் பருப்புகளோடு
முக்காடு போட்டுக்கொண்டு
நெருங்கிக்கொண்டிருந்தது

பார்த்துத் தேடியலங்கரித்தேன்...
என்னைப் போல்
அதுவுமுன் பார்வை தொடவில்லை
என் மூச்சுப் போல்
உனக்கு ருசிக்கவில்லை.
சொல்லத் துணிவில்லாமல்
அதை உணரும் பிரியம்
உன் உள்ளத்திலுமில்லை என்றாள்

உன் நேசமான பார்வையிலே
வாழ்கிறேன்
கருணை உள்ள விழிகளை
ஓசை இல்லாமல்க்
காதலிக்கிறேன்
நீ வழங்கும் சந்தோஷம்
முடிவில்லா  இன்பம்.
இதுவே எனக்குப் போதுமடி என்றேன் ..

இரவெல்லாம்
இருட்டு உறங்கவில்லை
ஸ்பரிசங்கள் நிறையவில்லை
தலையணையில்
எதையோ இழந்த காலம்
சில்வண்டுகளின் ரீங்காரத்தில்
எதையுமே
நினைக்கவிடவில்லை
என்ற போது
போடி விசரி போய்ப் படுடி என்றேன்.

.......................................................................065

ஒடிக்களைத்து 
மூச்ச்சு வாங்கிய முகத்தில் 
அனாமிக்கா
முத்துக்கள் விழ விழ 
குளித்துப் போயிருந்தாள் 

உல்லாசமாக
உருண்டு பிரள
வில் போல
எம்பிக் குதிக்கும்
பஞ்சு அடைத்த படுக்கை
இடுப்பின் பலத்தை
சோம்போறியாக்குதென்கிறேன்

ஓய்வான
சோம்பல் முறித்து
குஷியாக
முதுகை நிமிர்த்தும்
சாய்மனைக் கதிரை
முழங்காலின் முயற்சிகளை
ரசிக்கவில்லையென்றும் சொன்னேன்

கும்மாளம் போட்டு
நாரியை
நிமிர்த்தும்
அகன்ற குஷன் சோபா
பாதங்களுக்குப்
பவுசு தடவி விட்டு
பந்தா போடுது என்றபோது
அனாமிக்கா அமைதி இழந்தாள்

எல்லாத்தையும் நீயே
கேவலப்படுத்திவிடுகின்றாய்
வாவென்றழைக்கும்
காற்றுவெளியில்
எம்பிக் குதித்து
கடைசி தப்பி ஒடுதலுக்காவது
உன் கால்களைப்
பலப்படுத்தி வை என்றாள் ..

...............................................................066

சருகுகள் சருகுகளுடன்
சாகாவரம் பற்றி விவாதிக்கொண்டிருந்த
முன் கோடை நாளில்
சுவாரசியங்கள்
வற்றிப்போய்க்கொண்டிருக்கு 
இனியென்னவெல்லாம்
வருமென்பதில்
வசந்தகாலம்
கடைசியாகவே இருக்கென்றேன்

அனாமிக்கா
மூக்கைக் காற்றோடு உரசி
நடை வழியில்
குழைந்தைகள்
தவறவிட்டுப் போயிருந்த
லவண்டர் வாசங்களை
உறிஞ்சிக்கொண்டிருந்தாள்

நேசத்தை
விபரித்துவிட
வேஷங்கள் தேவையில்லை
நிரந்தரமாகவே
விட்டுப் போவதென்பது
நீண்ட காலம்
அர்த்தப்படுத்தும் எதையும்
இட்டு நிரப்பவில்லை என்றால்
இப்பவே சொல்லாமல்
போய்விடு என்றாள்

வார்த்தைகளில்
வெடிமருந்தை
சரியான நேரத்தில்
ஏற்றிவைக்கத் தெரிந்தவள் அனாமிக்கா
அதனால் தான்
விலதிப் போவதிலும்
நெஞ்சாங் கூட்டுக்குள்
நெருக்கத்தை
நெருக்கடியாக உண்டுபண்ண
அவளால் மட்டும் முடிகிறது

...........................................................................067

நீண்டுகொண்டே
நொடிகளை விழுங்கிய
இரவு நேரம்
அனாமிக்காவுக்கு
இருப்புப் பற்றிய பயமின்றி 
மிகத் தெளிவான விடைகள்
முடிச்சு அவிழ்க்கும்

உயிர்
வெள்ளையா கறுப்பா
சொர்கத்துக்கும் நரகத்துக்கும்
இடை நடுவில்
குறுக்கு வழிகள் இருக்கா
என்பதை அறிய
இறந்து பிறக்க நினைக்கிறேன் என்றேன்

உறைபனிப் பிஞ்சுகள்
வீதியில் நிறைந்து வழிய
ஆத்மாவின்
அடுத்தடுத்த பரிமாணம்
என்பதையவள்
உபநிதஷங்களின் உதவியோடு
விளக்கி இருக்கிறாள்

விபரிப்புக்கள்
எல்லை அழிந்து போகும்
எதுவுமே வெறுமையான
இன்னொரு அருவ நிலையில்
மனம் லயித்துவிடும்
மவுனத்தின் பின்னர்

யாரெல்லாம்
நேசிப்பில் உண்மையாக
நின்றார்கள் என்பதறிய
ஒரேயொருமுறை
இறந்து பார்க்க வேண்டுமென்றாள்
அனாமிக்கா

.................................................................................068


நகரத்தின்
கலகலப்பான இரைச்சல்
எல்லாவிதமான வாசனைகளோடும்
கலவரமாகும் இடங்கள்தான்
அனாமிக்காவுக்கு 
பருவகாலங்களைப் புறம்தள்ளி
எப்பவும் விருப்பம்

நானோ
அதீதமாக வரவேற்புக்கள்
நட்பு நாய்வாலை ஆட்டி
வாசல்படியில் இருந்தாலும்
அனுபவத்தில்
அதிகம் ஓட்டவிரும்பாத
அந்தரங்கமான மனிதன்

காற்றில் பறக்கும்
குப்பைகளையே நின்று ரசிப்பாள்
மண்புழுவின் பாதைகளையே
குனிந்து கவனித்துப் பின்தொடர்வாள்
புரியாத மொழிபேசும் மனிதர்களின்
இதயமிறுகிய வாசல்களில்
காதலைத்தேடுவாள்
வேற்றுநிறத் தோற்றங்களில்
வேதனைகள் இருக்காவென்று
விசாரிப்பாள்

அனாமிக்கா
எதையும் சமாளிப்பாள்
அவள் இதயம் மிகப்பெரிது
அவள் எண்ணங்கள்
வெள்ளைநிறத்தைவிடத் தூய்மையானவை
அவளின் முதல் அணுகுமுறை
அன்பின் அடைக்கலம்
கருணைதான் அவள்
கடைசிக் காவல் தெய்வம்
மோசமானவொரு நகரத்தின்
எச்சில்வடியும் காழ்ப்புணர்ச்சிகள்
எனக்கு
நன்றாகவே தெரியும்
அனாமிக்கா அநியாத்துக்கு
இளமைக்கு உரை எழுதும்
அழகுப் பாயிரம்
அதைவிட வெகுளியான அப்பாவி
அதையும்விட
இரைதேட விஷம்கக்கும்
நல்ல பாம்பையும் நம்புவாள்
இதெல்லாம்
உங்களுக்கு அன்றாடமாகவிருக்கலாம்
எனக்கு
அதுதான் பயமாயிருக்கிறது !
................................................................069
வருடங்களின்முன்னெழுதிய
மரணத்தின் தொடக்கம் என்ற
அனாமிக்காவின்
இறுதிக் கவிதையை
நீங்கள் இன்னும் வாசிக்கவில்லை
அதற்காகவாவது
என்னைவிட சந்தோஷப்படுங்கள்
எனக்கும்தான்
குழப்பமாகவே இருக்கு
திடகாத்திரமாக இருக்கும்போது
எப்படித்தான்
இடம்மாறியும் அவளால் அப்படி
நிலையிழந்து தடுமாறாமல்
இறப்பை ஆதங்கமாக்கி
உயிரைக்கொடுத்து
எழுதமுடிந்தது என்று
கவனித்துக்கொள்ளுங்க
அனாமிக்கா
இப்பவும் என்னைவிட
நொடிப்பொழுதிலும்
கனவுகளை நனவுகளாக்கி
தெற்கு நடைப் பயணத்திலும்
உயிரோடிருக்கிறாள்
மிகமிக நேர்த்தியான
வரிசை ஒழுங்கின் முடிவில்
மயான அமைதியான
இடத்தைத்தேர்வுசெய்தவள்
குறுக்கிடும் பறவைகளின்
வசந்தகால சத்தங்களையும்
இலையுர்த்திர்கால மஞ்சள் இலைகளையும்
சில்வண்டுகளையும்
ஏதுமறியாஉறைபனியையும்
வரவேற்றே எழுதியிருக்கிறாள்
என் கல்லறையில்
வாசனைமலர்களைவைத்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல் போய்விடுவென்ற
கடைசிவரிகளைத்தான்
இன்றுவரை என்னால்
புரிந்துகொள்ளவேமுடியாமல்
இனி இன்னொருமுறை அதை
வாசிப்பதேயில்லை என்ற
முடிவெடுத்தேன்.
......................................................................... 070

பலநேரங்களில்
சோம்பலாகவே
ஜன்னலை அகலத்திறந்தால்
உற்சாகமாக
அஞ்சுநிமிட நடைதூரத்தில்
ஐந்நூறு வருடத்தேவாலயத்தில்
கோபுரமணி அடிக்கும்,


ரெண்டுமணிகள்
ஒன்றுக்குமேலே ஒன்றுஏறி
அருச்சனையாக வரும்போது
தேவனின் திருச்சபையில்
புண்ணியகாலம்,


இதயத்துடிப்புப்போல
அடித்துக்கொண்டு
சாவின் வாசத்தை பூசிக்கொண்டு
மெல்லனவே ஒடுங்கும் போது
மரணத்திருப்பலி,


படுக்கைவிரிப்புக்கள்
முதலிரவில்
அசந்து கசங்குவதுபோல
மஞ்சள்குங்கும மஞ்சத்தில்
இதமும் பதமுமாகக் கலக்க
கல்யாணவைபோகம்,


ஞாயிற்றுக்கிழமைகளில்
உயிர்வாழ்வதுக்கு துடிப்புப்போல
இயல்பாக அடிக்கும்
நின்று ரசிக்கமுடியாமல்
துண்டைக்காணோம்
துணியைக்காணோமென்று
வேலைக்கு ரெயில்பிடிக்க
ஓடிக்கொண்டிருப்பேன்,


தேவாலய பின் வீதியில்
அனாமிக்கா
ஒரு நாள் வந்து
ஒரு பொழுதில் நின்று
கைகளில் இறுக்கிப்பிடித்து
நெஞ்சோடு நெருக்கி வைத்து
முதுகை உருட்டிப் பிரட்டி
முகத்தை மயக்கி எடுத்து
போதைவஸ்து முத்தம்கொடுத்தாள்

அப்போதும்
அள்ளி எடுத்து அந்த மணி
மனசார வாழ்த்தி
அடித்ததின் அர்த்தம் என்ன?