Tuesday, 25 April 2017

மனப்பிறழ்வுக்கவிவலிகள் ..

மனப்பிறழ்வுக்கவிதைகள் ஒருவிதமான தனிமனித உணர்வுகளோடு பேசிக்கொண்டிருக்கும் வகை. அப்படியான ஸ்டைலில் பல கவிதைகள் சில வருடங்கள் முன்னர் எழுதியிருக்கிறேன். அவை எவ்வளவுதூரம் தரமானவை என்று சொல்ல முடியவில்லை. எனக்கே ஒரு கட்டிடத்தில் அலுப்பு அடிச்சதால் அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். பதிலாக  வேறு சில வடிவங்களில் புது முயட்சிகள் செய்தேன். 

                                                    பலநேரங்களில் கவிதை ஒரு கட்டுக்குள் அடங்காமல் நதிபோல ஓடிக்கொண்டிருக்கும், அதை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவந்து சேர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. ஒரு நல்ல கவிதை கமண்டலத்தில் இருக்கும் கங்கைத்  தீர்த்தம் போல என்று எப்பவுமே நான்  நினைப்பது , ஏன்  என்றால் அவ்வளவு  பெறுமதி அந்தக் கவிதையின்   " conceptual framework "." writing style " , " manner of expressing ", " specific contex thoughts," " language characteristic ", " way of approaching ", " reflection of personality, " " Word choice ", " sentence fluency " இவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கலாம்
                                                              
ஒரு
மோசமான கவிஞனை
ஒரு சிறந்த கவிதை
எழுத வைத்தது
எதுவாக இருக்கும்
அவன் மனைவி
அகாலமாக இறந்து போனதோ,
பெற்ற பிள்ளைகள்
அக்கறையில்லாமல்
இருந்ததோ,
நல்ல நண்பர்கள்
தோற்றபோது ஒடிப் போனதோ,
உறவினர்கள்
மறுபடியும் வென்றபோது
திரும்பி வந்ததோ,
அயல் வீட்டுக்காரர்
அவனின்
இயலாமையைப் பரிகசித்ததிலோ,
மேலதிகாரி
பதவி உயர்வு கொடுக்காததிலோ,
மோட்டு எதிரிகள்
குருட்டுத்தனமா விமர்சித்ததோ,
வசதியான பெற்றோர்
வேண்டுமென்றே
ஒதுக்கி வைத்ததோ ,
கூடப்பிறந்தவர்கள்
அவன் கூடப்பிறந்ததை
கேவலமாக நினைத்தோ,
வசித்த தெருக்கள்
திருட்டுத்தனமா
உண்மைகளை மறைத்ததோ.
வாழ்ந்த நகரம்
வாழ்க்கையை நேசிக்கக்
கற்றுக்குடுக்காததோ
வளர்த்த நாய்க்குட்டி மட்டும்
கடைசிவரை அளவில்லா
அன்பு காடியதோ,
இதில் எதோ ஒன்று,
அல்லது
இது எல்லாமே
காரணமா இருக்கலாம்
அவன் எழுதிய
அந்தச் சிறந்த கவிதைக்கு!.
.............................................................................

தொலைந்த
கனவைத் தேடி,
திடமாகத் திட்டமிட்டு,
நிதானமாக ஜோசித்து,
நின்று ஓய்வெடுத்து,
நிமிர்ந்து பார்த்து ரசித்து
ரகசிய  சந்திப்புகளுடன்,
புதுப்பிக்கும்
சிநேகிதங்களுடன்,
தளாராத
தன்னம்பிக்கையுடன்
தொடரும் உன்
நேரான பயணத்தின்
குறுக்குப் பாதையை
பயத்தோடு பரிதாபமாகப்
பார்த்துக்கொண்டு
நான்...
மூளையை கசக்கிக்
கஷ்டப்படாமல்
எழுதுவதுக்கு விசியங்கள்
அதில் இருந்தாலும்,
இப்போதைக்கு
எழுதப் போவதில்லை
நீ
நீயாகவே
திரும்பி வந்து
இயல்பாகக் கேட்கப்போகும்
முதல் கேள்வி
சந்தர்ப்பமாகவே
சிதறாமல் வருமென்ற நம்பிக்கை
வேதனையுடன்
சேர்த்து வைத்து
நீ  சொல்லப்போகும்
முதல் பதிலில்
மறுபடியும் தொடங்கலாம்,
அல்லது
நிரந்தரமாய் நின்று விடலாம்
ஒரு கவிதை !

........................................................................


குடியிருக்க ஒழுங்கான
வீடில்லாத போதும் ,
உன்
வாக்குறுதிகளை நம்பி
ஒரு கோவில் கட்டினேன் ,
அதுக்கு ராஜ கோபுரம்
கட்டி சிலைகள் வைத்தேன்,
அதன் மாட வீதிகளில்
வண்ண விளக்குகள் பொருத்தினேன்,
உன்
அழகுக்கு அழகு சேர்க்க
ஆயிரம்கால் மண்டபம் நிர்மானித்தேன்,
உன் குரல் போலவே
ஆலயமணி அலங்காரமா அமைத்தேன்,
நீ
தீர்த்த நீராடவே
செங்கழுநீர்க் குளம் வெட்டி
அதில்
தாமரைகள் தழைக்க விட்டேன் ,
நீ
பந்தா போட்டு பவனிவர
சித்திர தேரும் வடிவமைத்தேன் ,
அந்த
இதயக் கோவிலுக்கு
கும்பாவிசேகம் செய்து,
அதன்
கருவறையில் உன்னை
காலமெல்லாம் வைக்க நினைக்கக்,
கடைசி காலம் வரை
கங்கைக் கரையில்
காத்திருக்க வைத்துவிட்டு,
" கனவுகள் வெறும்
கனவுகளே....."என்று
காற்றுக்கு சொல்லியனுப்பிக்
கடவுள் போலக்
காணாமலே போயிட்டாய்
.
................................................................


நடுச்சாம ஒஸ்லோவில்
வெளிறிய குளிர்காற்று
திகில்படம் வீசியடிக்க,
கடைசி இரவு ரெயிலில
கடைசியாக ஏற
தூக்கம்,
தள்ளிக்கொண்டுபோய்
ஜன்னலோர இருக்கையில்
விழுத்தியது
முன்சீடில முகத்தைக்
குனிந்து கொண்டிருந்து
விரல்களில் நாட்களை
எண்ணிக்கொண்டிருந்த
பெண்ணை,
அமைதியாக
முகத்துக்கு முகம்
முழிஞ்சு பார்க்க
சக்தியிருக்கவில்லை .
நேர்மையாகவே
நேராகவே நெற்றியில்
நிமிர்ந்து பார்க்கப்
பயந்து
துணிவோடு
நிமிடங்களுக்கு
ஆசைவரவில்லை
கடைகண்ணால
களவாகப் பார்க்க
கவுரவம் விடாமல்
ஒரு கட்டத்தில்
பேச்சோடு பேச்சா
பேசிப்பார்க்க முடிவெடுத்து
"உன் பெயர் என்ன?" என்று தொடங்கினேன்
அவள் சடார் எண்டு
நிமிர்ந்து பார்க்காமலே எழுந்து
கால்கள் இரண்டும்
பூமியோடு முட்டாமல்
" மரண தேவதை "
என்றவள்
மிதந்து மிதந்து போய்க்கொண்டே
"உன்னை மறுபடியும் ஒருநாள்
சரியான தருணத்தில் சந்திப்பேன் " என்றவள்
சத்தியம் போலச் சொல்ல,
நான்
பதறியடிச்சு எழுந்தோட
என் கால்களும்
மிதந்து மிதந்து மிதக்கத் தொடங்கியது!


.....................................................................

கதைத்துக்கொண்டிருந்த
கனிவான குரலொன்று
கொஞ்சநாளாய்க்
காணாமல்ப் போய்விட்டது ...
வெளிப்படையாகச்
சொல்லமுடியாத
அதன் காரணங்கள்
கனதியாக இருந்தாலும் ,
கடும் கோபத்தின் விளிம்பிலும்
கருணை காட்டிய,
ஆத்திரத்தை அடக்கமுடியாமல்
அழுது வடித்த,
சின்னதாகச் சிரித்து சிரித்தே
சிந்திக்க வைத்த,
மகிழ்ச்சியில்  மறந்து
மனம் திறந்து மகிழ்ந்த ,
எல்லா எதிர்மறைகளையும்
 எதிர்த்து
எதிர்பார்ப்பு எப்போதும் தந்த,
நடக்கப்போறதெல்லாம்
 நடக்குமென
நம்பிக்கைகளை நம்ப வைத்த,
சின்ன சின்ன நன்றிகளில்
மறக்கமுடியாமல்
சித்திரவதை செய்த,
மவுனத்திலும் மயங்க
மொழிகள் அர்த்தத்துடன் பேசிய
அந்தக்
கனிவான குரல்,
இல்லாமலே இருந்துகொண்டு
இதயத்தை இயங்க
மனம் ம் எதிரொலித்து
மணிக்கணக்கில்
கதைத்துக் கொண்டேயிருக்கும்
மரணம்வரை.......

......................................................................


அவள்
பேசத்தொடங்கிய
முதல் வரியில்
எதற்காகவோ ஏங்கும்
இதயமிருந்தது,
இரண்டாவது வரியில்
அந்த
இதயத்தைத் திறந்தாள்,
மூன்றாவது வரியில்
முக்கியமானவைகளைத்
தொடங்க
மனதை விழுத்தும்
அதில்க் கோபமிருக்க
நான்
கேட்டுக்கொண்டுருந்தேன் ....
அவள் சொன்ன
நியாயங்களின்
நின்மதியைக் குலைக்காமல் ,
முறைப்பாடுகளோடு
முரண்டு பிடிக்காமல் ,
குற்றசாட்டுக்களோடு
குற்றவுணர்வாகி,
அவள் அழுத
கண்ணீரோடு கருணையாக
அப்பவும் நான்
கேட்டுக்கொண்டுருந்தேன் ....
"இனிக் கதைக்க ஒண்டுமில்லை ,
நீ உன் கதையைச் சொல்லு ..... "
என்ற போதும்
பேசாமல்க்
கேட்டுக் கொண்டிருந்தேன்..
அவள் பேசத்தொடங்கிய
முதல் வரியில்
இருந்தது போலவே
அந்தக் கடைசி வரியிலும் இருந்தது
அன்புக்காக ஏங்கும்
இதயம் !.

...........................................................


வெற்றிகள்
வாசல்ப்படியோடு
நின்றன
உள்ளுக்கு வரவேயில்லை,
அதிஸ்டங்கள்
அழைப்பு மணிகளை
அமுக்கியபோதும்
அசட்டையாகவே இருந்தேன்,
சந்தர்ப்பங்கள்
ஜன்னல் வழியாக
சைகை காட்டிய போது
சரியாகக் கவனிக்கவேயில்லை,
இலட்சியங்கள்
இன்று வரை
இதயத்தில் தன்னும்
இருந்ததே இல்லை ,
எழுந்து
ஓடவேண்டிய நேரம்
மெதுவாக
நடந்து போனேன் ,
பாடவேண்டிய நேரம்
மவுனமாக
வார்த்தை தேடினேன்,
துணியவேண்டிய
நேரம்
தூங்கிக்கொண்டுடிருந்தேன்,
சிரிக்க வேண்டிய
நேரம்
சிந்தித்துக் கொண்டிருந்தேன் ,
இருந்தாலும்
இன்றைவரை ஏதாவது
உருப்படியாச் செய்ய
உதவிக்கொண்டிருப்பது
விழுந்த போதெல்லாம்
வலியோடு பாடம் நடத்திய
என்தோல்விகள்.
.
.........................................................

நீ
போனபோது சொன்னதை
சொல்லாமலே
ரகசியாமாகக்
கொண்டு போயிருக்கலாம்,
நீ
இல்லாமலப் போனபின்
நானும்
இல்லாமல்ப்
போய்கொண்டிருந்தபோது,
திடீரெண்டு
திரும்பி வந்து
நூறு கேள்வி கேட்டாய்
என்னிடம்
பொருத்தமாக
ஒரு பதிலும் இருக்கவில்லை
" நீ போன போது சொன்னதை
நன்றாகச் செய்தாயா ? " என்று
ஒரேயொரு
கேள்வி கேட்டேன்
நீ சடுதியாகச் சமாதியானாய்.
பின்ன என்ன
விட்ட இடத்தில இருந்து
தொடங்காமல்
வேறு எங்கிருந்து தொடங்கிறது ?
.
........................................................

உங்களைப் போலவே எனக்கும்
ஒரு வீடு
அதிலக் கூரை,
ஒரு குடும்பம்
அதில் சந்தோசம் ,
ஒரு வாழ்க்கை
அதில் நம்பிக்கை,
ஒரு கனவு
அதிலக் காட்சிகள்,
உங்களைப் போலவே எனக்கும்
ஒருகாலத்தில்.......
இன்றெனக்கு
யாசிக்க வாழ்நாள் முழுவதுமே இருக்க
உங்களுக்கு
ஜோசிக்கவே நேரம் இல்லை.
இன்றோடு
நினைவுகளே நம்பிக்கையற்று
தவறிப்போகும்போலிருக்க,
நீங்களோ
கனவுகளை நம்பிக்கையோடு
துரத்துகிறீர்கள்.
இங்கே
வசதியில்லாமல் மண்டியிடிருப்பது
என் வயதான
முழங்கால்கள் மட்டுமில்லை
என் வாழ்கையின்
வசதியான சுயகவுரமும்தான்,
இருந்தாலும்
சில சமயம்
மனசாட்சியை
நேருக்கு நேர் பார்க்க
கட்டாயம் தேவையாய் இருக்கிறது
ஒரு
இளகிய இதயம் !

..............................................................

உனக்கும் எனக்கும்
இடையில்
அடிக்கடி நடக்கும்
"நீயா நானா " சண்டைகளில்
என் கேள்விகளும்
அதற்கு
உன் பதில்களும்,
என் பிடிவாதமும்
அதில்
உன் தற்பெருமையும்,
என் விளக்கமும்
அதில்
உன் நிராகரிப்பும்,
என் ஏக்கமும்
அதில்
உன் நம்பிக்கையும்,
என் சமாளிப்பும்
அறுதியா
உன் சமாதானமும் ,
எப்போதுமே
சின்ன சேதாரத்துடன்
தப்பினாலும் ,
உண்மையில்
அதிகம்
அடிவேண்டிக் காயப்படுகுது
உண்மையானவைகளின்
ஆழமான அன்பு !

.....................................................

மறந்து போனதுக்கும்
அதற்காகக் கேட்கப்பட்ட
மன்னிப்பிட்கும்
மறைவில்
ஒரு
குற்றவுணர்வும்
நடந்து முடிந்ததுக்கும்
இனிமேல்
நடக்கப் போறதுக்கும்
நடுவிலொரு
நம்பிக்கையும்
திருப்பிக் கிடைக்குமென்று
கொடுத்ததுக்கும்
அதுவே கிடைக்காமல்
போனதுக்கு
அருகில்
ஒரு இயலாமையும்
எல்லாம் இருந்தும்
ஒண்டும் இல்லாதவர்களுக்காய்
இரங்காத இதயத்தின்
இடையே
ஒரு பேராசையும்
வெறுத்து
வெளியேற வழியின்றி
நசுங்கிக்கொண்டே
பொறுத்து வாழ்வதுக்கு விளக்கமாக
ஒரு தியாகமும்
எங்கேயும்,
எப்போதும்,
யாரோ ஒருவருக்கு ,
ஏதோ ஒரு கணத்தில்
நிகழத்தான் செய்கின்றது!


...............................................................................

எதிர்காலக் கனவில்
இதமாக மிதந்த
ஒரு குளிர் மாலைப்பொழுது,
என்
நிழலான கடந்தகாலம்,
சாடாரெனக் குறுக்கிட்டு
கழுத்தில கத்தி வைச்சமாதிரி
ஒரே ஒரே கேள்வி கேட்டது!
திடுக்கிட்டு,
திமிராக அதுக்கு நான்
முதலில்
சிரித்து சமாளித்தேன்
,பிறகு
வழக்கம்போல மழுப்பினேன்,
பிறகு
தர்க்கரீதியா தர்க்கித்தேன்,
பிறகு
தெரிந்தே மனசாட்சியை
மறக்கடிசேன்,
பிறகு
தெரியாமல் விளக்கமா
விளக்கப்படுத்தினேன்
பிறகு
கடவுள் கண்மூடி விட்ட
பிழையெண்டேன்,
பிறகு
முற்பிறப்பு வினையெண்டு
முறுக்கினேன்,
பிறகு
வழியில்லாமல் விதியில
பழியப்போட்டேன்,
பிறகு
வெறுத்துப்போய் வெருட்டினேன்,
கடைசியில்
மடையனாகி,
மவுனமாகி மண்டியிட்டு
உண்மையை
ஒத்துக்கொண்டேன்!.

..............................................................


நெருக்கமான
மாலைநேர ஒஸ்லோ
சென்ட்ரல் ஸ்டேசன்
முதலாவது
நிலத்தடி ட்ரெயின்
வந்திறங்கிய
நிமிர்ந்து பார்க்க
நேரமில்லாதவர்களை
அவசரம்
இடது கோடியில் இருந்து
வலது கோடிக்கு தள்ளியது
அவர்கள் கடந்த
பாதையின் நடுவே,
உடைந்து போன
வாத்தியத்துடன்,
அதில்
அறுந்துபோன தந்திகள் தொங்க,
அழுக்கான
கிழிந்துபோன ஜக்கட்
சகிக்க முடியாத வாசத்துடன்
தலையைக் குனிந்துகொண்டு
இரண்டாவது
நிலத்தடி ட்ரெயின்
வந்திறங்கிய
நின்றுபார்க்க நேரமில்லாதவர்களை
அலங்கோலம்
வலது கோடியில் இருந்து
இடது கோடிக்கு தள்ளியது
கடந்த
விரைந்தவர்களின்
கவனிப்பில்
தலை குனிவதைத் தவிர
செய்வதுக்கு வேற
ஒண்டுமில்லை என்பதுபோலஅவன்
நான்
நிதானித்து
அவனுக்கு சில்லறை
எடுக்கமுன்
மூன்றாவது
நிலத்தடி ட்ரைன்னுக்குள்ள
என் மனசாட்சியை
இடிச்சு விழுத்திப்போட்டு
என்னை மட்டும்
தள்ளி ஏற்றியது  வாழ்க்கை !

...................................................................


ஒருநாள்
உருக்கமான சம்பவமொன்று
என் காலைப்பிடிச்சு
கண்ணீர்விட்டு,
அதன் அவலத்தைக்
கவிதையாக்கச் சொல்லி
சுருக்கமாக சொல்ல தொடங்க,
என் காதிரண்டும்
கழண்டு போயிட்டுது,
"எந்தக் கவிதையும்
இதுக்கு உயிர்கொடுக்க
முடியாதென்றேன்,"
சம்பவம் சடாரெண்டு
வலியுள்ள மொழியைத் தேர்ந்தெடு,
அதில்
பிழியவைக்கும்
வரிகளை வசனமாக்கு,
அதையே
கண்ணீரில் நனைத்து ,
கசப்பில் கரைத்து
பெருமூசில் காயவைத்து,
கோபத்தில் சூடாக்கி
அறுதியாக
நெஞ்சைத் திறந்து
மானத்தை விட்டு
எழுதடா மூதேசியெண்டு திட்ட,
அவமானம் தாங்காமல்
அதை
".ஒருநாள்
உருக்கமான சம்பவமொன்று
என் காலைப்பிடிச்சு
கண்ணீர்விட்டு....."
எண்டு
எழுதத் தொடங்க
முன்னமே
எழுத்தெல்லாம்
ஓடி ஒளிஞ்சிட்டுது!.

............................................................


நியாயத்
தீர்ப்பு நாளில்
பாவங்கள்
பட்டியலிடப்பட்டு,
மன்னிப்பு மறுக்கப்பட்டு,
நரகத்தின் முகவரிக்கு
கடைசியாகாக்
காத்திருந்தவர்களை
கண் திறந்து பார்க்க
கடவுள் வந்தார்
சந்தேகங்களில்
சந்தோசங்களை
தொலைத்தவர்கள்
கதறியழ,
விரும்பியே
சோரம் போனவர்கள்
விம்மியழ,
துணிந்தே
துரோகம்செயதவர்கள்
துக்கித்தழ,
அந்தப்
பெண்ணாகப்
பிறந்தவர்களுக்கு நடுவே
ஒருத்தி மட்டும்
விழுந்து விழுந்து
சிரித்துக்கொண்டிருந்தாள்...
படைத்துப் பார்த்த கடவுள்
காதருகே வந்து
காரணம் கேட்க
அவள் அப்பவும்
இளித்துக்கொண்டே
"விரும்பியே
மனதளவில்
சபலமானேன் " என்றாள்
குழம்பிப் போன கடவுள்
குனிந்து கேட்ட
" ........ ........ ...... ........."
என்ற கேள்விக்கு
"......... ......... ...... ............"
என்ற பதில் வரக்
கடவுளுக்கு
மூச்சு நிண்டு போச்சு!!!

................................................................


எப்பவுமே முடிகிறது
வளர்ந்தவர்களின்
முதிர்ந்த உலகத்தில்,
ஒரு சில நிமிடமாவது
ஒரு
சர்வாதிகாரியை
நிபந்தனையின்றி
சரணடைய வைக்க,
ஒரு
பணக்காரனை சிந்திக்க வைத்து
ஒன்றுமில்லாதவனாக்க,
ஒரு
ஏழையை ஒன்றும் இல்லாமலே
கோடிஸ்வரணாக்க,
ஒரு
நாத்திகனை நம்பவைத்து
ஆத்திகன் ஆக மாற்ற,
ஒரு
பாதகனை சில கணங்கள்
புனிதமான புத்தணாக்க,
ஒரு
அறியாமை அலங்கோலத்தை
அறியாமலே அழகாக்க,
ஒரு
இருட்டை சில நொடிகள்
சந்தோஷ வெளிச்சமாக்க ,
ஒரு
பிறப்பின் ரகசியத்தை
வழிப்படுத்தி வெளிப்படுத்த,
ஒரு
அன்பின் அடையாளத்தை
அர்த்தமுள்ளதாக்க,
ஒரு
சின்னக் குழந்தைகளின்
சின்னச் சிரிப்பால்
எப்பவுமே முடிகிறது.......

............................................................................

உங்களை நானோ,
என்னை நீங்களோ,
இப்பிறப்பில்
தற்செயலாகவும்
சந்திக்கப் போவதில்லை,
அப்படி இருக்க ,
மொழியிருந்தும்
வசனம் பேசாமல்,
விழியிருந்தும்
திரும்பிப் பார்க்காமல் ,
மனமிருந்தும்
சேர்த்து வைக்க
இடமில்லாமல்,
வெட்கத்தை
விட்டுச் சொன்னால்
நினைவிருந்தும்
கனவில்லாமல்,
அப்புறம்
எப்படி,
முழங்கினால்
மழை பெய்தும் ,
நெருப்பிருந்தால்
புகை கிளம்பியும் ,
அழுத பிள்ளை
பால் குடித்தும்
ஆக வேண்டும்,
என்று
அடித்துச் சொல்லுறீங்கள்?

...............................................................


இனிமேல்
கதைக்க போறதில்லை
என்று முடிவான
கசப்பான நிகழ்வை
அவன்
நேராக எழுதியபோது
எதுவுமே வரவில்லை
உணராமல்
எழுதிய போது
உரைநடை வந்தது
அதையே தர்க்கித்து எழுத
தத்துவம் வந்தது
கவலையா
எழுத தொடங்கவே
கண்ணீர்
அஞ்சலிபோல அழுதது,
புதுமையா ஜோசிக்க
புதுக்கவிதை பாய்ந்து
மரபோடு ஜோசிக்க
மரபுக் கவிதை மயங்கியது ,
முடிவாக
வேண்டுமென்றே உடைத்து
மனிதாபிமானத்தை
நிராகரித்து,
குற்றவுணவு இல்லமால் ,
குறுக்கு வழியில்
ஜோசிக்க,
சடார் எண்டு
அபத்தமான
சர் ரியலிஸ்டிக்
கவிதை வந்தது!
...............................................................................

ஒரு குளிர் கால
இருட்டு இரவில்,
ஒன்றுமே
எழுதாமல்,
பேசாமல் ,
உணராமல்,
பகிராமல் ,
நிர்ணயிக்காமல்,
ஒத்துக்கொள்ளாமல்,
சபிக்காமல்,
இயலாமையின்
இறுதிக்கணத்தில்
நடந்த
கடைசிப் பிரிவின்,
கசந்த வலிகளின்,
கடைசி வரிகளை,
நினைவுகொள்ளவே
நினைவு வருமா
என்ற
நம்பிக்கையில்லாத
சம்பவத்தை,
முடிந்தவரை
ஒரு கவிதையாக
எழுதச் சொல்லி
ஒரு
வெள்ளைப் பேப்பரும்,
ஒரு
கறுப்புப் பேனாவும்,
வருசங்களாய்
நம்பிக்கையோடு
காத்திருக்கிறது!