Thursday, 5 November 2015

நிலவே என்னிடம் நெருங்காதே...

வாழ்கையில் சில சமயம் நல்ல செயல்கள் என்று சொல்லப்படும் வரன்முறைகள்,சமூகநீதி , நியாயம் இவைகளைக் வரையறுத்துக் கீறிவைத்த கோடுகளை  வேண்டுமென்றே தாண்டுவதில் ஒரு " த்ரில் " இருக்கு. வயசான காலத்தில் இளவயதில் செய்த அட்டகாசங்களை நினைத்துக் கொள்ளவாவது கொஞ்சம் குழப்படி செய்ய வேண்டி இருக்கு. இல்லாட்டி வாழ்க்கை சப் எண்டு ஊசிப்போன உளுந்துவடை போல நரைவிழும் வயதில் இருக்கலாம். 

                                        அப்படி ஒரு சம்பவம்தான் " நிலவே என்னிடம் நெருங்காதே ,நீ நினைக்கும் இடத்தில். நான் இல்லை ," பாடல் கேட்கும் போதெல்லாம் பழைய ஒரு சம்பவம் எனக்கு நினைவுவரும்.  உண்மையில்ப் பழைய பாடல்கள் எப்பவுமே பழைய சம்பவங்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமை உள்ளவை ! ஒரு பாடல் நாங்கள் கேட்கும்  சூழ்நிலை, மனதின் நிலையை பொறுத்து அதன் அர்த்தங்கள் வேறுபடும்.

                                         வடக்கு ஐரோப்பாவில் உள்ள  சுவீடன் என்ற நாட்டில் பல வருடங்களின் முன் ,செய்யும் தொழிலே தெய்வம் எண்டு சமையல் வேலை செய்துகொண்டு இருந்த போது , "தலையிடி " எண்ட பெயர் உடைய நண்பர்  ஒருவர் " போர்டர் ஸ்மாக்கிளிங் " என்ற கவுரவமான " எல்லைக் கடத்தல் " தொழில் கொஞ்சநாள் அமோகமா செய்துகொண்டு இருந்தார்.  ஒரு நாள்  தனக்கு உதவியா , அதில வந்து என்னோட பங்களிப்பைச் செய்ய முடியுமா எண்டு கேட்டார் , 


                                           நானும் அதில் இலகுவா பணம் அள்ளிக் கட்டலாம் என்பதால்,அப்போது செய்துகொண்டு  இருந்த ரெஸ்ரோரன்ட் வேலைக்கு லீவு போட்டுட்டு கொஞ்சநாள் ஐரோப்பா நரக வீதிகள், காட்டுப் பாதைகள் முழுவதும் நேரம்,காலம், இல்லாமல் " போர்டர்கள் " தாண்டி, அவரோடு அலைந்தேன்! 


                                       அன்று குடிக்கத் தண்ணி  இல்லாத  அம்பாரி  ஆனைக்மேல ஏறிப்போக  நினைத்து   அடியும் உதையும் வேண்டின கதை   போலவே நிறைய ரிஸ்க் உள்ள விடயம் தான் . எனக்கு அந்த மாதிரி வேலைகள் திட்டமிட்டு செய்யும் திறமை இல்லை . நான் சும்மா அசிஸ்டன்ட் போல தான் இயங்கினேன், தொழில் ரகசியம், நெளிவு,சுளிவு , அதன் மர்மமான நுட்பம் எல்லாம் எனக்கு தெரியாது..

                                              அந்த நண்பர் சுவீடனுக்கு என்னைவிடப் பல வருடம் முன்னர் அரசியல்அகதியாக வந்தவர். என்னைப்போலவே யாழ்பாணத்தவர். பழகுவதுக்கு இனிமையானவர். ஆனால் சிம்பிள் மைன்டட் பெர்சன் . உதவி செய்வதில் கர்ணனை மிஞ்சியவர்.ஆனால் வரவுக்கு மீறிய செலவில் அள்ளி விசுக்குபவர் , யாருக்கு விசுக்கிறவர்  என்று  பார்த்தால் வேற யாருக்கு  பெண்களுக்குத்தான் . 


                                                  அவருக்கு  எத்தினை மனைவி  எண்டு எனக்கு தெரியாது. ஆனால் எப்பவும் மனுசியள்  என்று பன்மையில் தான் அவர் வாழ்க்கைத்துணைகளைச் சொல்லுவார்.   அதால் செலவு இயல்பாகவே  கையைக் கடிக்கும் . அதனால்  எப்பவும் 

                                  " இவளுகளோட  தலையிடி , தலையிடி பிடிச்ச வாழ்க்கை,,ஒவ்வொருத்தியும்  என்னைத் திண்டு போட்டுதான் விடுவாளுகள் போல நிக்குராளுகள் ,,நானும் எவளத்துக்கெண்டு அவிச்சு அள்ளிக் கொட்டுறது  சொல்லும் பார்ப்பம் ஐசே   " 

                                                  என்று சலித்துக்கொள்வார் .அதால் அவர் பெயரை  நான் தலையிடி எண்டு தான் எனக்குள் மட்டும் நினைப்பது. மற்றப்படி ஒருவரின் பெர்சனல் வாழ்க்கை பற்றி நான் ஆராய்வதில்லை. ஆனாலும்  கொஞ்சம் கவலையாக இருக்கும் அவர் மனுசியள் எண்டு சொல்லும் போது. ஏன்னென்றால் அந்த நேரம் நான் என் சுவுடிஷ் வெள்ளைக் குதிரையோடு மட்டுமே இருந்தேன்.  எனக்கும் விதம் விதமா வடையோடு  பால்பாயாசம் சாப்பிட்ட  ஆசை  இருக்கும்தானே ,,இல்லையா  சொல்லுங்கோ  பார்ப்பம்  
                                                

                                        தலை இடி என்னை அந்த தொழிலில் " பாட்னரா " இணைத்ததுக்கு , மூன்று காரணம் இருந்தது, முதலாவது ,எனக்கு ஆங்கிலம் நல்லா வைச்சு விளாசுவதோட சில ஐரோப்பிய மொழிகளும் உல்டா பண்ணிக் கதைப்பன் , இரணடாவது மாறி மாறிக்  கார் ஓடிக்கொடுப்பேன். மூன்றாவது எந்த எந்த எல்லைக் காவல் நிலையங்கள், எந்த எந்த நேரம் கடக்க உகந்தது எண்டு மூக்குச் சாத்திரம் பார்த்து சொல்லுவேன்! 


                                     இப்ப போல    " யி பி எஸ் " என்ற " சட்டலைட் நேவிக்கேசன் " போன்ற ஒரு மண்ணும் அப்ப இல்லை. வெறும் " மப் " வைச்சு ஓடுவதால் சில நேரம் எந்த நாட்டில,எந்த ரோடில நிக்கிரம் எண்டே குழப்பமா இருக்கும்,  ஊர் உலகம் சுற்றிப்பார்ப்பது எப்பவுமே எனக்கு விருப்பமான ஒன்றுதான், ஆனால் குதிகாலில் குத்துற பதட்டத்தில் ஐரோப்பாவின் கலாச்சார அழகு நகரங்களைக் கட்டப்பதால் அவற்றை ரசித்துப் பார்க்க முடியாமல் தான் இருந்தது

                                   அவருக்கு சட்டப்படி ஒரு மனைவி இருந்து இருக்கிறா. ஆனால் அந்த அம்மணியுடன் அவருக்கு இப்ப தொடர்பு இல்லை எண்டு வேற நண்பர்கள் சொல்லுவார்கள். முன்னரே சொன்ன மாதிரி  அந்த நண்பருக்கு ,நல்லா சம்பாதிததாலோ என்னவோ சுவிடனில் ஒரு தமிழ் காதலி. இலங்கையில் ஒரு சிங்களக் காதலி,,  வேறு ஒரு சுவுடிஷ் இன  ரகசியக் காதலி என்று  அவர்களின் காதல் சோலிகள்  தலைக்குமேல ஏறி நிண்டு ஆட , அவரே நெடுக ஒவ்வொரு பயணத் திட்டத்திலும்  ,


                                        " என்ன ஐசே தலையிடி வாழ்க்கை, என்ன ஐசே வாழ்கை ,நாயைப் பிடி பிச்சை வேண்டாம் எண்ட வாழ்க்கை, எவளவுதான் உழைச்சாலும் கையில நிக்குதில்லை ,ஒவ்வொருத்திக்கும் சுளையா உருவிக் கொடுக்கவே சம்பாரிப்பு சரியா இருக்கு .. " 


                                            எண்டு கொம்பிளைன் பண்ணிக்கொண்டு இருப்பார், அதலா அவரை " தலையிடி " எண்டு காரணஇடுகுறிப் பெயரில் நான் நினைப்பது  பொருத்தம் போலதான் இருந்தது ! 


                                                   பெண்களின் காதலில் விழுந்தாலே நாயைப் பிடி பிச்சை வேண்டாம் எண்ட வாழ்க்கை தானே எண்டு நான் அவருக்கு விளக்கம் எல்லாம் சொல்லும் அளவுக்கு அப்போது நானும்  அனுபவம் உள்ள ஒரு ஆள் இல்லை ,சும்மா அவர் நேரம் காலம் இல்லாமல் அவர்  பிசத்திறதைக் கேட்பேன். ஆனாலும் அவர் சொல்லுறதுக்கு எல்லாம் ஓம் ,எண்டும் இல்லை எண்டும்,சில நேரம் எதுக்கு தலை ஆட்டுறேன் எண்டு எனக்கே தெரியாமலும், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு வாய திறந்து ஒண்டுமே சொல்லமாட்டேன் ,அவர் என்னை


                                  " நீர் நல்ல இண்டரெஸ்டிங் ஆன ஆள் ஐசே கதைக்கிரதுக்கு,ஆனால் கதைச்சா அதுக்கு பதில் கதை சொல்லாமல் எப்பவும் இருகிர்ரீர்ர் ,அது  உம்மோட கதைக்க ஆசையா இருக்கு...எண்ட பெண்டுகள் ஒவ்வொருத்தியும் நான்  வாயத்திறக்க முதலே அவளுகள் வாயைத்திறந்து சுளகில புழுங்கல்  அரிசி புடைச்ச மாதிரி  கவிட்டுக் கொட்டுவாளுகள்,,கேட்டுக்  கேட்டுக்கொண்டிருக்க  ஒரு கட்டத்தில காது ரெண்டும் கிழியும்  " 


                         எண்டு கார் ஓடிக்கொண்டு  எனக்கு சொல்லுவார் ,நான் காதுகிழியாமல் வேற என்ன கிழியும்  எண்டு சொல்ல நினைப்பது ,,ஆனால் சொல்வதில்லை ,அவனவனுக்கு ஆயிரம் பிரசினை இருக்கும் அதெல்லாம் எனக்கு தனிப்படப் பிரசினைகள் இல்லையே,

                                         நான் அப்போது சட்டப்படி கலியாணம் கட்டி இருந்தேன். என்னோட ஸ்வீடிஷ் மனைவிக்கு நான் சட்டதை மதிக்காமல், அதைக் காலுக்க போட்டு மிதிக்கும் அந்த "தொழிலில் " விருப்பம் இல்லை, தலையிடியோடு டெலிபோனில் தமிழில் கதைப்பதால் அவளுக்கு என் மாஸ்டர் பிளான் ஒன்றும் விளங்காது. கடவுள் எண்டு ஒருவன் இருக்கிறான் தானே அவன் பல நேரம் நம்மைக் காப்பாற்றுவான்  ,,இல்லையா  சொல்லுங்கோ பார்ப்பம் ,


                                " ஏன் சிவனே எண்டு சோலி இல்லாத சமைக்கிற வேலையை விட்டுப்போட்டு இப்படி கள்ளன் பொலிஸ் விளையாடுற வேலை செய்யுறாய். உன்னோட நன்மைக்குதான் அட்வைஸ் செய்யுறேன், உனக்குத்தான் மண்டைக்கு உள்ளுக்கு ஏறுது இல்லையே  "


                                   எண்டு சில நேரம் என் தர்மபத்தினி  திட்டுவாள். ஒருவேளை ஆசிய நாட்டில் இருந்து நான் வந்ததால் இவங்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என்று நினைச்சோ  தெரியவில்லை பொறுமையா என்னோட திருகுதாளங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.நானும் புளியடி புளியடி எவடம் எவடம் எண்டு அதை சொரணை இல்லாமல்  கேட்டுக்கொண்டு ஓடுப்பட்டுக்கொண்டு திரிஞ்சேன்  


                                               ஆனால் ஒவ்வொரு முறையும், "அலுவலுக்குப் " போய்ட்டு வெற்றியோட வரும்போது, பிரான்சில இருந்து "சம்பெயின்" வைன் போதில்களும்,பெல்யியத்தில் "கொனியாக்" விஸ்கி போத்தில்களும், ஜெர்மனியில் "Bratwurst" இறைச்சி உருண்டையும்,டென்மார்கில் "கசெல்லோ " சீஸ் கட்டிகளும், வேண்டிக் கொண்டு வந்து கொடுத்து, வின்டருக்கு சுவிஸ்லாந்தில் அல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்க ஹோட்டல் புக் பண்ணி, டிக்கட் போட்டுக் கொடுத்ததால் அவள் ஒண்டுமே சொல்லவில்லை! அவளைத் கையுக்க வைச்சிருக்க ஒரு எமிரல் கல்லு வைச்ச விலை அதிகமான மோதிரம் வேற வேண்டிக்கொடுத்து இருந்தேன் அந்த நேரம் ,

                                  என் சுயபுராணம் அதை டெலிவிசன் சீரியல் போல இழுத்து நீட்டினாலும் அதில ஒரு மண்ணும் இல்லை ,அதை வைச்சு அறுக்காமல் , அந்த தொழில் விட்டத்துக்கு காரணதையும் , கடைசியில டென்மார்கில் "போர்டரில்" மாட்டி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டு இருந்தது போன்ற  பிரயோசனமான  கதையை தள்ளிக்கொண்டு வாறன் 


                                      ஸ்பெயின் இல் இறங்கி பிரான்ஸ்க்குள் வந்து நின்ற இரண்டு பெடியங்களை ,பரிஸில் இருந்துநோர்வே கொண்டுவருவதுதான் அந்த  கொன்றாக், தமிழ் பொடியன்கள்  அதுவும் தாய்த் திருநாட்டு ரத்த உறவுகள் அவங்களுக்கு உதவாமல் வேற யாருக்கு உதவுறது எண்டு உடனயே சரியெண்டு ஒத்துக் கொண்டோம் 


                                  பரிசில் காருக்க ஏத்தும் போதே  நாங்கள் பொடியன்களுக்கு விளக்காம எப்படி போலிசுக்கு கதைக்க வேண்டும் என்று சொன்னோம். முக்கியாமா எங்காவது மாட்டினால்,  


                               " இடம் வலம் தெரியாமல் தடுமாறிக்கொண்டு ரோட்டில நிண்டம்,இந்த ரெண்டு அண்ணையும் தமிழ் கதைச்சினம் ,  எங்களை இடம் காட்டி சொந்தக்காரரிடம் கொண்டுபோய் விடுறம் எண்டு சொல்லிச்சினம் அதாலதான் இவயிண்ட காருக்க ஏறினணாங்கள்,,வேற இவையைப்பற்றி வேற  ஒண்டுமே எங்களுக்கு தெரியாது "


                                          இதுதான் நாங்க சொல்லிக்கொடுத்த நாடக வசனம்.பொடியளுக்கு திருப்பி திருப்பி சொன்னோம்,,இதைத்தான் திருப்பி திருப்பி போலிசுக்கு பிடிபட்டால் சொல்லவேண்டும் என்று.அவங்களும் ஓம் ஓம் என்று  மண்டையை மண்டையை ஆட்டினாங்கள் 


                                     ஜமகண்ட நேரத்தைத் தவிர்த்து ராகுகாலம் தேர்ந்தெடுத்து ,ரூட்டுக்கு  மூக்குச் சாத்திரம் பார்த்து, பிரான்ஸ் போடரை வடக்குப் பக்கமாக் கடந்து , ஹோலாந்து போடருக்க மேற்க்குப் பக்கமா இறக்கி ,அதன் காட்டு பாதையில் ஓடி கிழக்கு போடரில் ஜெர்மனிக்க இறக்கி ஓட்டோ பாணில தெற்குப் பக்கமா ஓடு ஓடெண்டு ஓடி ,ஸ்பீட்  ட்ராபிக்  கமரா  எல்லாம் சுளிச்சு ,வடக்கால டென்மார் "போர்டர்" வரை கொண்டு வர, அந்த "போர்டரில் தான் சகுனம் பிழைச்சுது .அதில  மோப்ப நாயோட எதிர்பாரா நேரத்தில் ,குறுக்காலபோன போர்டர் பொலிஸ் நிண்டு எங்களை மறித்தான் , 

                               
                           நானும் ,தலையிடியும்  பல வருடம் முன்னமே உலகத்துப் பொய் எல்லாம் சொல்லி ஐரோப்பாவில் அரசியல் அகதி ஆனதால் எங்கள் ஆவணங்களை நோண்டிப் பார்த்து ஓகே என்றார்கள் ! பொடியன்கள்  யார் எண்டு கேட்க 

                                   " எங்களுக்கு தெரியாது,ரோடில நின்றார்கள், பார்க இலங்கை தமிழர் போல இருந்தார்கள்,யாழ்ப்பாணத் தமிழில் கதைத்தார்கள் அதால்  எங்கள் ரத்த உறவுகள் இடம் வலம் தெரியாமல் ஒரு ஐரோப்பிய வீதியில் அநாதைகள் போல வீதியோரம்  நிண்டு தத்தளிப்பதைப் பார்க்க நெஞ்சு வெடிக்கும் போல வந்தது, அதல அவர்கள் கேட்டபடி, உங்களின் போடருக்கு அங்கால விடுறதுக்கு ஏத்திக்கொண்டு வந்தோம் " 


                           எண்டு இதுக்கு மேல கேட்டால் பொல பொல வென்று கண்ணீர் விட்டு அழுவம் என்பதுபோல சொல்ல,பொலிசுக்காரன் முழிச்சு முழிச்சுப் பார்த்துக்கொண்டு இருந்த பையன்கள் இருவரையும் இறக்கிப் போட்டாங்கள். அவங்கள் பதினெட்டு வயசுக்குக் குறைந்த மைனர் போல இருந்ததால்  "பதின்வயது அகதிகளுக்கான  குடிவரவு  "அதிகாரிகளை  இடம் அந்த இடத்துக்கே வரவளைத்துக்  கையில பொறுப்புக் கொடுத்திட்டாங்கள் , 


                             எங்களின்  கார் துறப்பைப்  பிடுங்கி எடுத்த பொலிஸ்காரன்  அதை ஸ்டார்ட் செய்து ரோட்டில் இருந்து விலத்தி ஓரமாக பக்கத்தில் இருந்த ஒரு வெறும் வளவில அதை விட அது வாஸ்து சாஸ்திரப்படி ஈசானு  மூலைக்கு எதிரா அக்கினி மூலையப் பார்த்துக்கொண்டு நிக்கவே விளங்கிட்டுது இனி நெருப்பெடுத்த அலுப்பு வரப்போகுதெண்டு. 


                             என்னையும் தலையிடியையும் புறங்கையைப் பின்னுக்கு மடக்கி விலங்கு போட்டு, அவங்கட காருக்க ஏற்றி அரை மணித்தியாலம் ஒரு நகரத்துக்கு பொலிஸ் காரில் ஓடிக்கொண்டுவந்து ,பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் பெரிய கதவைத்திறந்து அதுக்குள்ளே நடத்திக்கொண்டுபோய்,  வலது காலை எடுத்து வைக்கச்சொல்லி கிராதிக் கம்பிக் கதவைத் திறந்து  உள்ளுக்க தள்ளிட்டாங்கள்!

                                         அந்த சிறையில் இரண்டு நாள்  விசாரிக்காமல் வைத்திருந்தார்கள், மூன்றாம் நாள் 
ஒரு அதிகாரி வந்து அந்த ரெண்டு பொடியன்களும் டென்மார்கில் அசைலம் அடிச்சு இருகிறாங்கள் எண்டும், அவர்களை இளையவர்களின் முகாமில் விட்டுள்ளோம் என்றும் சொன்னார். ஆனால் எங்களுக்கும் அந்தப் பொடியன்களுக்கும் எப்படி சந்திப்பு நடந்தது என்று பொலிஸ் நரிப் புத்தியில் திருவலையில் தேங்காய் திருவிற மாதிரி துருவித் துருவிக் கேட்டார்.  நாங்கள் அவங்களுக்கு சொல்லிக்கொடுத்த அதே வசனத்தை அச்சுப் பிசகாமல் சொன்னோம்.


                               ஆனால் பொடியன்கள்  இதைத்தான் திருப்பி திருப்பி போலிசுக்கு பிடிபட்டால் சொல்லவேண்டும் என்று நாங்க கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததை திருப்பி மற்றப் பக்கமா மாற்றி  " பேச்சுப் பேச்செனினும் பெரும் பூனை வந்தாக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி "  போல  பயத்தில, நாங்கள் காசுக்கு போடர் கடத்துற வேலை செய்யுறவர்கள் எண்டு உண்மை பேசி பொலிசுக்கு விசுவாசிகளா மாறிட்டாங்கள் என்று அந்த அதிகாரியின்  அலட்சியமான சிரிப்பில் தெரிந்தது 


                                  பிறகு ரெண்டுநாள் ஒருவரும் துருவ வரவில்லை   தலையிடி மனைவி கர்பமாக  இருப்பதா எனக்கு சொன்னார் ,ஒரு ஜெயில் காவல்காரனிடம்  அவர் டெலிபோன் பேசவேண்டும் எண்டு கேட்க


                    " தர முடியாது, இன்னும் ஒரு கிழமை நீங்கள் உள்ளே இருக்கவேண்டும்,,இப்பதான் விசாரணையே ஆரம்ப கட்டத்தில் இருக்கு  " 


                         என்று சொன்னான் , அடப்பாவிகளா  ரெண்டு பொடியன்களுக்கு அதுவும் தமிழ் பொடியன்கள் எண்டு உதவி செய்ததுக்கு என்னமோ கொலை செய்த கிரிமினல் கேஸ் போல சொல்லுறாங்களே டென்மார்க் பொலிஸ்காரன் என்று கோபமா வந்தது, 


                                                இதுக்குள்ள தலை தலையிடிக்கு காதலிகள் இருக்கு எண்டுதான் நானே அப்போது எல்லாம் நினைத்து இருந்தேன்,அவர் மனைவி எண்டும் ,அவா பிரக்னன்ட் எண்டு சொல்ல குழப்பமா இருந்தது, எப்படியோ மனிதர்களுக்கு கஷடம் வரும் போது பல உண்மைகள் வெளிய வரும் எண்டதும் உண்மை எண்டு போட்டு  , 

                                    தலையிடியின்   சோக நிலையப் பார்த்து ,நான் அவருக்கு ஒரு அரசியல் ஐடியா கொடுத்தேன்


                               " எங்களை டெலிபோன் கதைக்க விடாவிட்டால் ,சாகும் வரை உண்ணாவிரம் இருப்போம் எண்டு தன்மானத் மறத் தமிழர் போல சொல்லுங்க அண்ணே  என்ன நடக்குது எண்டு பார்ப்பம் ,,ஒண்டு இவங்களா  அல்லது  நாங்களா எண்டு ஒரு முடிவு பார்க்காம விடக்கூடாது அண்ணே "


                                " என்ன ஐசே இப்பிடி சொல்லுறீர் ,சில நேரம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லிப்போட்டு கவனிக்காமல் விட்டாங்கள் என்றா சீவியம் கிழியுமே,,,என்னை நம்பி மனுசியள்  நிக்குதுகள்,,நீர் சிம்பிளா சொல்லுறீர் .."


                                 " அண்ணே,,வெளிநாட்டுப் பொலிஸ்காரன்  நாய் பூனையையே சாப்பாடு இல்லாமல் சாக விடமாட்டன்,,நீங்க  பயப்பிட வேண்டாம்,,நாங்க தமிழர் அண்ணே பயப்பிடக்கூடாது அண்ணே.."


                                " எனக்கென்னவோ  இது  பயங்கரமா இருக்கு,,சிலநேரம்,,,"


                               " என்ன  சில நேரம் ,,,ஒண்டும் வராது,,அப்படி என்னவும் பிசகினால்..ரெண்டுநாள் பார்த்திட்டு பிளானை மாத்துவம்  "


                              "  எனக்கு இது  நடக்குமா எண்டு சந்தேகமா இருக்கு...சிலநேரம் ,,,"


                                  " அதுதான் ஜோகர்சுவாமிகள்   சொல்லி இருக்கிறார் இதெல்லாம் எப்பவோ முடிந்த காரியம் ,நல்லகுருநாதன் அறிய  ஒரு பொல்லாப்பும்  இல்லை "

                                    "  ஆர் அந்தச் சாமியார் ,,சொல்லும் ஐசே "

                              "  அவரும் எங்கட யாழ்பாணத்துச் சாமியார் தான் "

                                   " அவர்  என்ன  சொன்னார்  திருப்பி ஒருக்கா சொல்லும் ஐசே  அவர்  என்ன சொன்னார்  எண்டு "

                            " அவர் ஞானதிருஷ்டியில் முக்காலமும்  அறிந்தவர் "

                             "     அதென்ன ஐசே சொல்லுறீர் "

                              "  அவர் நடந்தது,நடக்கிறது ,நடக்கப்போறது மூன்றையும்  முன்னமே உணரும் முனிவர் "

                              "   நடக்கப்போறதை  முன்னமே சொல்லுவாரோ "

                           "  ஓம்,,சொல்லுவார் "

                              "  அப்ப பின்ன அவரையும் எங்கட பிஸ்னஸ்சில் பாட்னரா சேர்க்கலாமே,,இப்படி அவதிப்படவேண்டியிய  அவசியம்  இல்லையே,,எங்க  எந்த போடரில் வைச்சு மாமா அமத்துவான் என்று முன்னமே சொல்லக்கூடிய ஒருவர் பாட்னரா இருந்தா வலு வசதியா இருக்குமே "

                                      "  அந்தச்  சாமியார் இப்ப இல்லையே,,அவர் செத்துப்போய்  எண்பது  வருஷம்  கடந்து போட்டுதே "

                                 "  அடச்  சே ..எல்லாம்  எங்களுக்கு கஷ்டகாலம்  தான் "

                            " அண்ணே,,இப்பவே  அடிக்கிணதுக்கை நிக்கிறம்,,இதுக்கு மேல  என்ன வரப்போகுது ,,கடவுள் நல்லவர்களை  சோதிப்பான்,,ஆனால் கிணதுக்கையே  எப்பவும் விடமாட்டான் ,"


                               "  நீர்  என்ன ஐசே   சொல்லுறீர் "

                               " ஒரு வழி தான் அவன் காட்ட இல்லாட்டியும்,,வாளியோடு  வாற  கயிறாவது உள்ளுக்க ஒரு நாள் வரும்,,அதைப் பிடிச்சு மேல வரலாம்    அண்ணே,,தைரியமா போய்ச் சொல்லுங்க,,என்ன நடக்குது எண்டு பார்ப்பம்  "

                    எண்டு அந்தநேரம் வந்த தத்துவத்தை கடவுளை வைச்சு அடிச்சு விட்டேன், தலையிடி  தன்மானத் மறத் தமிழன் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போய் அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போல அந்த டென்மார்க் ஜெயில் காவலனுக்கு சொல்ல, டென்மார் பொலிஸ்காரர் முனி அடிச்ச மாதிரிப்  பயந்திட்டாங்கள் ! அடுத்த நாள் டெலிபோன் பேச இருவருக்கும் 10 நிமிஷம் கொடுத்தாங்கள்,


                          நான் என்னோட மனைவிக்கு ஸ்வீடனுக்கு போன் எடுத்து 


                          " நான் டென்மார்க்  ஜெயிலுக்க இருக்குறான்," எண்டு சிரிச்சுக் கொண்டு சொன்னேன் ,அவள் கடுப்பாகி 


                             " ஒ,,அப்படியா சங்கதி,, எனக்கு,தெரியும் ,ஒரு நாள் இல்லை ஒரு நாள்  நீ  கட்டாயம் மாட்டுவாய்,  இது நடக்கும் எண்டு எனக்கு மனதுக்க எப்பவுமே ஒரு குரல் சொல்லிக்கொண்டு இருந்தது,,"


                           " ரெண்டு மூன்று  நாளில் உச்சிக்கொண்டு வெளிய வந்திடுவேன்" 

                               "  நான் சொன்னால் நீ எங்க கேட்கப்போறாய்  என்று சொல்லாமே விட்டு அந்தகுரலே இப்ப பொய்யாகிப் போயிட்டுது "

                          " சும்மா  கலவரம் ஆகாதே  மார்கிட் "

                                 " எனக்குக் கை கால் எல்லாம் பதறுது,,நீ சிம்பிளா சொல்லுறாய்,, போடர்போலிஸ் , இமிகிரேசன்  ஜெயில்  என்று "

                                    "இதெல்லாம்  எனக்கு ஒண்டும் செய்யாது,  " 

                                " சாப்பிடியா  ,,சாப்பாடு தந்தாங்களா  எனக்கு கவலையா இருக்கு நீ பசியோடு இருக்கிறாயோ  என்று "

                              " அதெல்லாம்  ஒரு  மண்ணும்  முக்கியமில்லை ,,போட்ட மாஸ்டர் பிளான் பிசகிட்டுது  அவளவுதான் "

                             "   நீயே ஒரு படு முட்டாள் நீ போட்ட மாஸ்டர் பிளான் உருப்பட்ட மாதிரிதான்  கிழிக்கும் ,,முதல் அதிகாரிகளுடன் அடக்கமாகக் கதை "

                           " இவங்கள் என்ன கொம்பா எனக்கு,,அனாவசியாமாக் கதைச்சால் மூஞ்சை இருக்காது ,,நொறுக்குவேன் "

                         " முதல் ஒரு நாட்டு சட்டத்தை மதித்து அமைதியாக் கதைக்கப் பழகு,,உன் குற்றத்தை ஒப்புக்கொள் "

                             "   இவங்கள் என்னோட முண்டினால்  இந்த ஜெயில் இருக்கிற இடமே இல்லாமல் அடிச்சு நொறுக்கித் தரை மட்டம் ஆக்குவேன் "

                                  "     ஏன்  இப்பிடி  நீயே பிழை செய்துப்போட்டு அவங்களைத் திட்டுறாய் ,,முதல் அமைதியாகப் கதை "

                              "  இதெல்லாம்  ஒண்டுமில்லை  எனக்கு மார்கிட் "

                                "ஆனாலும் ஜெயிலுக்க இருக்கிறதை சந்தோசமாய் சொல்ராயே, வெட்கமாக  இல்லையா ? "  

                       " நெல்சன் மண்டேலாவே 23 வருஷம் ஜெயில்லுக்க இருந்தாரே " 


                      எண்ட அவளுக்கு கோபம் வந்து பொத்துக்கொண்டு வந்திட்டுது 


                                " நான் ,ஒரு சதம் செலவழிக்க மாட்டேன், நீ மாட்டிண மாதிரியே வெளிய வந்து சேரு,


                                                        "ஹ்ம்ம்  "

                                   "   உன்னை லவ் பண்ணினதோட நிற்பாட்டி இருக்க வேண்டும்,"

                                              "ஹ்ம்ம்ம்  "

                                  "    உன்னைப் போய்க் கலியாணம் கட்டினேனே ,அதுவும் வெளிநாட்டுக்காரங்களை  நம்புறது கஷ்டம் எண்டு என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லியும்  உன்னை இதயம்வரை காதலித்தால்"

                                            "ம்ம்ம்ம்  "

                               "உன்னை  எல்லாம் சுவரோடு சாத்தி  வைச்சு உதைக்க வேணும்.. அப்பவும்  நீ திருந்த மாட்டாய்,,உன் குரங்குப் புத்தியைக் காட்டுவாய்   "

                                    "  ம்  ம் "

                             "  எல்லாம் என்னோட விதி,,ஏனடா  ரெஸ்டாரென்ட் வேலையை விட்டுப்போட்டு  இப்படி அடங்காப்பிடாரி போல  எனக்கு அரியண்டம் தாராய்  "  

                                "  ம் "

                    " என்னத்தச்  சொல்ல  உன்னோட  குளறுபடிகளை , இப்ப நல்லா தலையைக் கொடுத்து   மாட்டி நிக்கிறாய், Life  is a great story, very creative, but sadly just a story...ஹ்ம்ம்.."

                              எண்டு கொஞ்ச நிமிடம் விக்கி விக்கி அழுதாள், அவள் அழுகிரதைக் கேட்க எனக்கே நான் ஓவரா அலுப்புக் கொடுக்கிறேன் என்று மனது இளகிவிட்டது . அவள்  பாவம், அவளுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே பொருத்தம் இல்லைப்போல இருந்தும் அவள் தான் என்னை இதுக்கு முதலும் பல சில்லெடுப்புக்களில் இருந்து என்னை மயிரிழையில்  காப்பாற்றினாள்/  

                            " Bye ,God Bless You  , கடவுளின் ஆசிர்வாதம் உன்னைக்  காப்பாற்றட்டும்"   


                                      எண்டு சொல்லிப்போட்டு படார் எண்டு போனை வைச்சிடாள், நான் ஸ்வீடிஷ் பாசையில் கதைப்பதை ஒரு டென்மார்க் பொலிஸ்காரன் கேட்டுட்டு பக்கத்தில் நின்றான் ,கிட்ட வந்து அது யார் எண்டு கேட்டான்,நான் என்னோட தர்ம பத்தினி எண்டு சொன்னேன்,


                      " நான் நினைச்சேன், " 


                           எண்டு போட்டு அவன் சிரிச்சான்,அவனுக்கும் இப்படி பல பெண்கள் பொறுத்த நேரத்தில கையை விட்டு இருக்கலாம் போல , என்னோட ஆத்துக்காரியுடன் சுவுடிஷ் மொழியில் நடந்த உரையாடலைப் கேட்ட தலை இடி கிட்டவந்து  


                                      " ஏன் ஐசே ,உண்மைய சொன்னனீர் , உமக்கென்ன விசரா,பொஞ்சாதிமாரிட்ட இதெல்லாம் சொன்னால் மதிக்கமாட்டாளுகள்  " 


                                      "    ஹ்ம்ம்,,அதுவும் உண்மைதான் "

                                       "   நான் மனுசிக்கு, டென்மார்கில் கார் அடிபட்டு நிக்குது ,ஹோட்டலில் ரூம் போட்டு நிக்கிறன், இன்சூரன்ஸ் எல்லாம் கிளியர் ஆகி வர ,கொஞ்சம் திருத்த வேலை எல்லாம் முடிஞ்சு வர ஒரு கிழமை எடுக்கும் எண்டு சடைஞ்சு  சொன்னேன், "

                                  " அட அட  பொய்யை  உண்மைபோல சொல்லி இருகுரின்களே "

                                           " பேந்தென்ன  இந்தக் கேவலம் கெட்ட தொழில் இனி செயிறது இல்லை, நீர் ஏன் ஐசே ,உண்மைய சொன்னனீர் ஐசே  ,"

                               "   நெடுகிலும் பொய் சொல்ல முடியாது  அண்ணே "

                                    "  பேந்தென்ன  உமக்கென்ன மண்டைப் பிழையா ,,அதுவும்  அவா சுவுடிஷ் பொம்புளை ,, உமக்கென்ன விசரா, , " 

                                       என்றார். நான் சும்மா அப்பவும் தலையை மட்டும் ஆட்டிப் போட்டு நின்றேன், ஒருவர் உண்மை சொல்வதுக்கும் ,பொய் சொல்வதுக்கும் அவர் அவர் அளவில் காரணங்கள் இருக்கிறது!

                                               ஆனாலும் தலையிடி பொஞ்சாதிமாரிட்ட எண்டு பன்மையில் சொன்னது ஒரு விதத்தில் அவர் சில உண்மைகளை சொல்லுறது மாதிரி இருந்தது, எப்படியோ அது அவரோடதும் அவரோட பொஞ்சாதிமாரோடையும் சொந்தப் பிரசினை, அதால அதை பற்றி நான் ஒண்டும் கதைக்காமல் ,
   

                                       " அண்ணே ,வாங்கண்னே, நான் மேசையில மேளம் அடிக்கிறன் ,நீங்க பாடுங்க ,,ஏதாவது ஒரு பாட்டு பாடுங்க இனி ஜோசித்து ஒண்டும் வரப்போறது இல்லை,,உள்ளுக்கவும் சந்தோசமா இருந்திட்டு வெளிய போவம் "


                                 எண்டு சொல்ல அவர் தனக்கு எப்பவுமே பிடித்த பாட்டு என்றும், டெலிபோனில்  கதைச்சது கொஞ்சம் ஆறுதலா இருக்கு என்றும் சொல்லி 


                                   " நிலவே என்னிடம் நெருங்காதே ,நீ நினைக்கும் இடத்தில்..நான் இல்லை, நிலவே..... என்னிடம் நெருங்காதே ,நீ நினைக்கும் இடத்தில்....நான் இல்லை, " .


                       .என்ற பி பி ஸ்ரீனிவாஸ் பாடின  பழைய பாடலைப் பாடினார், அதைகேட்க எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.


                             " ஏன் ஐசே சிரிக்கிரீர், எண்ட மனுசிய நினைச்சு சீரியஸ்சா பாடுறன்,,அதுக்குள்ள அவள் பிரக்னன்ட், இந்தா அந்தா எண்டு எப்ப குத்து தொடங்குமோ தெரியாது எண்டு டெலிபோனில அழுதாள்  ,நினைக்க  கவலயா இருக்கு,,நீர் முசுப்பாத்தி போல சிரிக்கிரீர்   ?" 


                            எண்டு தலையிடி அப்பாவியாகக்  கேட்டார் 


                                ," இல்லை, இந்தப் பாடில வாறமாதிரி,உங்க மனைவி நினைக்கிற இடதில நீங்க இல்லை, நீங்க  அவாவுக்கு  இருக்கிறதா சொன்ன இடத்தில நீங்க இல்லை, அதை நினக்க்க சிரிப்பு வருகுது அண்ணே 


                              எண்டு  அப்பாவியாக சொன்னேன். அவர் அதுக்கு முதல் முறையா ஹஹஹஹஹஹஹா   என்று ஜெயில் அறையே அதிரும்படி சிரிச்சார், அந்த சத்தம் கேட்டு ஒரு ஜெயில் காவலன் வந்து நாங்கள் இருக்க வேண்டிய இடதிலதானா இருக்கிறம் எண்டு கதவு, அதன் பூட்டு எல்லாத்தையும் செக் பண்ணிப்போட்டுப் போனான் ,பிறகு தலையிடி                     " சுத்துமாத்து  ஹஹஹா  சுத்துமாத்து ,,வாழ்கையே சுத்துமாத்து ,"


                      என்று சொல்லி நினைச்சு நினச்சு கொடுப்புக்குள்ள சிரிச்சார் .

                             என் குலதெய்வம் வீராளி அம்மாளாச்சி  கருனையால 10 நாட்களில் தண்டனைக் காசு கட்டுறன் என்று உறுதிகொடுத்து , பாஸ்போட்டிலும் சிவப்பு சீல் ஒண்டு சாதனையாகக் குத்திக்கொண்டு வெளிய வந்த பின், அந்த தொழிலுக்கும் எனக்கும் ராசியில்லாதபடியால அதுக்குப் பிறகு அதைச் செய்ய ஆர்வம் வரவில்லை . நெற்றி வியர்வை நிலத்தில சிந்த பழையபடி அண்டா ,குண்டா,சட்டி,பானையோட மல்லுக்கட்டி பழைய குருடியின் கதவைத்திறந்து ரெஸ்றோரன்ட் குசினியில வேலை செய்ய தொடங்கிட்டேன்.


                                         டென்மார்க் இமிகிரேஷன்  ஜெயிலில் இருந்த போது    என் மனைவி சொன்ன கவலையான  வார்த்தையான ...Life  is a great story, very creative, but sadly just a story.. என்பதை மறக்கவேமுடியவில்லை . அதை எப்போதும் நினைப்பது. இப்பவும் தான். சிலநேரம் இந்தக்கதையை வாசித்து முடிய நீங்களும் அவள் சொன்னது போலவே Life is  a great story, very creative, but sadly just a story.. என்றுதான் சொல்லவேண்டுமென்று நானும் நினைக்கிறேன்
.
.