Wednesday, 12 October 2016

திருக்கேதீஸ்வரம் வேட்டி

மூன்று வருடங்களின் முன்தான் நானே பொழுதுபோக்காக  எழுதத் தொடங்கினேன் . அது இன்றுவரை என்னவாவது எழுத மிச்சம்  வைத்துக்கொண்டேயிருக்கிறது . பல வருடம்முன் என்  வேலையிடத்தில் சந்தித்த ஒரு மனிதர் பின்னர் முகநூலிலும் அறிமுகமாகி  என்  எழுத்தில் கவரப்பட்டு  அவருக்கென்று இருந்த ஒரு கனவை எனக்குச் சொன்னார். ஆனால்  ரெண்டுபேருமே  அந்தக்   கனவை நடைமுறையில் கொண்டுவர அறவே அனுபவம் இல்லாதவர்கள். 

                                                            வாழ்கையில் மிகப்பெரிய பொறுப்புகளை யாரிடமாவது நம்பிக் கொடுக்க முதலில் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஒருவரைப் பார்த்துப் பழகிய சில மணித்தியாலங்களில் வரலாம். பத்து வருஷம் உருண்டு பிரண்டு கட்டிப்பிடிச்சு பழகினாலும் வராமலே போகலாம் . சூசைமுத்து அய்யாவுக்கு என்னைப் பார்தவுடன அது வந்திருக்கு. ஆனால் அதை  அவர் சொன்னது என்னவோ பன்னிரண்டு வருஷம் கழித்துத் தான் .

                                         " திருக்கேதீஸ்வரம் வேட்டி ", இதென்ன கதை  என்று எனக்கே  ஆரம்பத்தில் இருந்தது போலவே   உங்களுக்கும்  குழப்பமா இருக்கும் ." திருக்கேதீஸ்வரம் வேட்டி " முதலில்  கதை  இல்லை .திரைக்கதை . இன்னும் குழப்பமா  இருக்கா. அது திரைக்கதைதான் . யார்  எழுதியது, சாச்சாத்  நானே  தான் . இது  இன்னும் மண்டையப் போட்டுப்  பிய்க்குதா . நல்லாப் பிய்க்கட்டும் . ஹோலிவூட்டு  ஸ்டைலில்  இங்கிலீசில் சொல்லுறேன் அதுவொரு   " நொண்லைனியர்  ஸ்கிரீன்பிளே  ஸ்க்ரிப்ட் 

                                        அந்தத்  திரைக்கதை  இப்பிடித்தான் தொடங்கும் 

                          "  மன்னாரில இருக்கும் மாந்தை   திருக்கேதீஸ்வரம்  கோவிலுக்கு சிவராத்திரிக்குப்  போன  ஹீரோவுக்கு   நந்திப் படம் போட்ட  காவி  வேட்டி இலவசமாகக்  கிடைக்குது,,,அதைப்  பாலாவியில் குளிச்சிக் கட்டிக்கொண்டு   யாழ்பாணத்தில்  உள்ள வீட்டுக்குக் கொண்டு வந்து வைச்ச மூன்றாம் நாள்  அது  காணாமல் போகுது..அதை  எப்படி அந்த ஹீரோ  காதலிக்கும்  ஹீரோயின்  பல  சிக்கல் பிக்கல் பிடுங்கல் குக்கல் விக்கல்  எல்லாம் முடிய தலைமன்னாரில்  இருந்து வேதாரனியதுக்கு கள்ளக் கடத்தல்  செய்யும் பயங்கர வில்லனின் சூழ்ச்சிகளுக்கு முழங்கால்  மடியாமல் ,அடி  பணியாமல் , முதுகைச் சொறியாமல் , வெருட்டுக்கு  வெருலாமல்  அந்த  வேட்டியைக்  கண்டு பிடிக்கிறா "

                                                        என்றதுதான்  ஒன்லைன் ஸ்டோரி .
                                         
                                             "  அடேய் கழுதை நீ ஒழுங்கா கதையே எழுத மாட்டாய் ,பிறகு திரைக்கதை  எழுதி  எங்களின் கழுத்தில  கத்தியை  வைக்கப்போரியா, சம்மந்தா சம்பந்தம் இல்லாமல் போகுதே உன் திரையில் கதை  " 

                                                     என்று  நீங்க புறுபுறுக்கிறது எனக்கும் கேட்குது. உண்மையில் இதே பதிலைத்தான் சூசைமுத்து அய்யாவுக்கும்  நானும்  திரைக்கதை  எழுத முன்   ஆரம்பத்தில் உறுதியாக வீராளி அம்மாளாச்சி மேல  சத்தியமா   சொன்னேன். ஆனால் அவர் அந்தோனியார் மேல நம்பிக்கையா  அழுங்குப் பிடியில் இருந்து பின்வாங்கவேயில்லை .

                                     உங்களுக்குச்  சிரிப்பாக  இருக்கலாம்   எனக்கு  நிறைய நம்பிக்கை இருக்கு .சம்மந்தா சம்பந்தம் இல்லா வாழ்வின் ஓட்டத்தைதான் ஆர்சன் வெல்ஸ் திரைக்கதையில் "  சீட்டிசன்  கேன் " ஆகினார் அது பட்டையக் கிளப்பியது . ஸ்கிரீன்பிளே  ஸ்க்ரிப்ட் இல்லாமல் எடுக்கப்பட்ட " கசபிளாங்கா " உலக சினீமா   அத்திவாரத்தையே உலுப்பியது. நீங்க  சிரிச்சு  எனக்கு  என்ன வரப்போகுது. முதல் படம் எடுக்க வெளிக்கிட்ட  சூசைமுத்து அய்யா சீரியஸ் ஆகத்தானே இருந்தார். பிறகென்ன வந்தது .

                                            சூசைமுத்து அய்யாவுக்கு திரைப்பட படைப்பிலக்கியப் பின்னணி  என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.  எம் யி ஆர் படத்தில வரும் பாட்டுகளை எம் யி ஆர் போலவே அக்சன் கொடுத்து   நல்லாப் பாடுவார்.  ஒரு  நாட்டுக்கூத்துக்  கலைஞ்சர்  ஆக ஏரோது ராஜா  வேஷத்தில்   பாஷையூர்  அந்தோனியார் கோவிலில்  மேடை ஏறிய அனுபவம் இருக்கு எண்டு சொல்லி இருக்கிறார். எனக்கு அந்த அனுபவம்தன்னும் இல்லை. பிறகு எப்படி ஒரு திரைக்கதையைச்  சொன்னேன் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். கொஞ்சம்  பொறுமையா  இந்தக் கதையை  வாசியுங்க மிச்சம் வெளிக்கும் .


ஒரு கதை எங்கேயும் நடக்கலாம். அதன் இடங்களைச் சம்பவங்கள் அப்பப்ப தேவையான  இடத்தில கொண்டுவந்து இருத்திவிடும். பிறகு மனிதர்கள் வருவார்கள். அவர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்து சிங்காரத் தெருவெல்லாம்  திரு விழாக்கோலம் ஆக்குவார்கள். இப்பிடித்தானே கதையே தொடர்கதையாகி  சில நேரம்  நாவலாக நீண்டுகொண்டு போகும். பயப்பிடவேண்டாம் இது நாவல்  இல்லை,,ஆனால் கொஞ்சம்  நீண்ட கதை .

                                              கிட்டத்தட்டப்  பதினைந்து  வருடங்களின் முன் ஒஸ்லோ பெருநகரத்தின்  வடகிழக்கு எல்லை  விழும் விழிம்பில்  உள்ள ஒரு இடத்தில இருந்த  ஒரு ரெஸ்ட்ரோரண்டில் குக்  ஆக வேலை செய்துகொண்டிருந்தேன் . அது நோர்வே, இத்தாலியன், துருக்கி, மெக்ஸிக்கன்நாட்டு சாப்பாடுகள்சமைக்கும்  இடம்.  சமைத்த உணவுகள் ஒடருக்குச்  செய்வதும் , வாடிக்கையாளர் நேரடியாகவே வந்தும்  வேண்டும்  " டேக் எவே  " அல்லது அலுப்புக்கொடுக்காமல் " லீவ் எவே "  என்ற வகை  ரெஸ்ட்ரோரண்ட் அது . 

                                              பாகிஸ்தான் நாட்டவரான  அஹமத் பாய்  அதன் உரிமையாளர்.பாய்  மிகவும் அன்பான மனிதர். அவரோட  பிள்ளை போல  என்னோட  பரிவா இருப்பார். நான் அவரை  வாப்பா  எண்டுதான் சொல்லுவேன் .  ஒஸ்லோவில் ஓடும் பத்து டாக்சிக்கு  உரிமையார். ஒரு கிழமையில் ரெண்டுநாள்தான் வருவார். வந்து கணக்குவழக்குப் பார்ப்பார். லிஸ்ட் போட்டுக்கொடுக்கும் சாமான் எல்லாம் வேண்டிக்கொண்டு வருவார்.  போகும்போது தம் பிடிச்சு புரியாணி செய்துதரச்சொல்லி வீடடுக்கு எடுத்துக்கொண்டு போவார். ஏறக்குறைய நான் ராசா என் வேலை மந்திரிபோலத்தான் அதை நடத்தினேன் .

                                          அந்த  ரெஸ்ட்டோரேண்டில்  யாரும் இருந்து சாப்பிட்டக் கதிரைகள்  மேசைகள் மட்டுமில்லை. அதுக்குள்ளே  நோர்வே சட்டத்திலும் அப்படி வந்தாரை வரவேற்று  இருத்தி வைத்து உபசரிக்கச் சட்டமும் இல்லை. ஆனால் அந்த ரெஸ்ட்ரோரண்டுடன்  சேர்ந்தாப்போல பின்பக்கம் ஒரு பெரிய அறை இருந்தது. அதில  ரெண்டு பெரிய காலைநீட்டிப்  படுக்கக்கூடிய  குஷன்  சோபாவும், கலர்  டெலிவிசனும், நடுவில  ஒரு வட்ட மேசையும் இருந்தது . அதில்தான் நான் ஓய்வு எடுப்பது 

                                                     அந்த ரெஸ்ட்ரோரண்டில் நான் தான்  குக் ஆக  ஒவ்வொருநாளும் பதின்நாலு  மணித்தியாலம் வேலை செய்வேன். அந்த  நேரம் அப்படி   வேலைசெய்ய  மனநிலை மிகவும்  ஒத்தாசையாக இருந்தது.  காலை பத்துமணிக்கு அடுப்புப் பத்த வைச்சா இரவு பன்னிரண்டு மணிக்கு அடுப்பு அணைக்கும் வரைக்கும் நிண்டு நாரி நிமிர்த்த நேரம் இல்லாமல்  தும்படிதான் . சமையலை விட  வாடிக்கையாளரோடு முன்னுக்குப் போய் கதைத்து சாப்பாட்டு ஓடரும் எடுக்க வேண்டும். 

                                      இஸ்மாயில்  என்ற  ஆப்ஸ்கானிஸ்தியர்   எனக்கு உதவியாகக் குசினியில் வெட்டுக் குத்துக்குக்  கைவேலை போல இருந்தார். அவருக்கு நோர்க்ஸ் மொழி தெரியாது . ஆங்கிலமும் தெரியாது, உருது மட்டும் சரளமாகக் கதைப்பார். பல நேரம் ஊமைப் பாஷையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவேன் .அல்லது  தெரிந்து உருதில் சொல்லுவேன். அது எப்பவும் தலைகீழாகத்தான் முடியும். 

                                                  ஒரு கோடை  மாத நாளில் , ஒரு தமிழர் வந்தார். அவருக்கு என்னைவிட பதினைந்து வயது அதிகம் போலிருந்தது. அந்த ரெஸ்ட்ரோரண்டின்  வாடிக்கையாளரில் தமிழர்கள் வந்து போனது மிகக் குறைவு. அதை அதில ரெண்டு வருடம்  தொடர்ச்சியாக வேலைசெய்தபோது கவனிக்க முடிந்திருக்கு ,

                                            வந்த அந்தத் தமிழர் என்னையும், ரெஸ்ட்ரோரண்டின் மெனுக் காட்டையும், இஸ்மாயிலையும்  கொஞ்சநேரம் மாறி மாறிப் பார்த்தார். எனக்கு   நிறைய வேலை சமயல்க்கட்டில்   இருந்ததால்  கொஞ்சம் நேரம் மெனு வாசிக்கக்கொடுத்தேன் அவருக்கு , அவர்  என்னைத் " தமிழா ?"  என்று சந்தேகம் இல்லாமல்  கேட்டார் , சங்கு  முழங்கின மாதிரித் " தமிழே ! " என்றேன் , 

                                     "   தனியாத்தான் இருக்கிறேன், வெள்ளைகளின்  சாப்பாடு தொண்டைகுழிகுள்ளாள  உள்ளிட மாட்டன்  எண்டு தெண்டுது   ,எனக்கு வலு  உறைப்பா  என்னவும் தமிழ் சாப்பாடு செய்து தர முடியுமோ , உமக்கு அப்படி என்னவும் இங்கே செய்ய வசதி இருக்குமோ "

                                 என்று கேட்டார். இப்பிடி ஓடர் நான் எடுப்பதில்லை. எடுத்தால் என்னோட வழமையான உணவுதயாரிப்பு  கொஞ்சம் நேரத்தில்  உதைக்கும்  என்பதால் ஜோசிக்கவேண்டியிருந்தது .  அவர் தமிழர் என்பதால் என்னவும் செய்து கொடுப்பமோ என்று நினைச்சேன். தமிழ் சாப்பாடு எனக்குச் சமைக்க எண்டு சாமான் சக்கட்டு பலதும் நான் வேண்டி வைச்சு இருந்தேன் . ஆனால் என்ன செய்யுறது  என்று விளங்கவில்லை.  

                               " மெக்ஸிக்கன்  தாக்கோ டின்னர் சாப்பாட்டை  டோர்ட்டிலா செல் இல்லாமல் ஜெலப்பினோஸ் போடாமல்   உறைப்பா  செய்து தரவா "

                                "அந்தோனியாரே  ,அதென்ன   அது  எப்படி  இருக்கும்  வாய்க்கு ருசியா  இருக்குமோ "

                                 " அது  எனக்குத்  தெரியாது,,நீங்கதான் சாப்ட்டுப் பார்த்து சொல்ல வேணும் "

                             "  ஓ  அப்படியே ,,சுடச் சுடச் சாபிட்டா  நல்லா இருக்கும்  போல ,இல்லையோ "

                          " ஓம்,,அது  உண்மைதான் ,,எந்தச் சாப்பாடும் சுடச் சுடச் சாபிட்டா  சுவையாத்தான்  இருக்கும் "

                                 "  இல்லை,,அதில்லை  நான்  சொன்னது ,,ஹாஹான்ஸ்ஸ்ட்ருவாவில தான்  நான்  இருக்கிறேன்,,அங்கே  காரில  கொண்டுபோய்  இறக்க  ஆறிப்போயிடுமோ  எண்டு  நினைகிறேன் "

                                  " ஹாஹான்ஸ்ஸ்ட்ருவா...  அட அது  சரியான  தூரமே  இங்கிருந்து "

                               "    அதுதான்  ஜோசிக்கிறேன்  இங்கேயே  இருந்து சாபிடலாம்  எண்டு "

                          "  இங்கேதான்  கதிரை  மேசை  ஒண்டும்  இல்லையே "

                    "  பரவாயில்லை வெளியால நல்ல வெய்யில்  வாசியா  அடிக்குது,  பேய்மென்ட்  பாதையில்  உள்ள அந்த சீமெந்துக் கட்டில  இருந்து சாப்பிடலாம்  எண்டு நினைக்கிறேன் "

                          " பரவா இருக்கு, நீங்க  உள்ளே ஒரு ஓய்வு அறை  இருக்கு  அதில இருந்து சாப்பிடுங்க பிரசினை  இல்லை "

                           "    அட,,உண்மையாவே சொல்லுறீர் "

                     "  ஓம்,,நானும்  இந்த உறைப்பு சாப்பாடு கொஞ்சம் சாப்பிடுவேன்,,இவன் ஆப்கானிப் பொடியனும்  சாப்பிடுவான் "

                         "  உண்மையாவா,,நான்  இதை  கிஞ்சித்தும்  நினைக்கவில்லை,,நல்லாதாப்  போச்சு ,,செவென் அண்ட் லெவனில் நாலு  பியர் வேண்டிக்கொண்டு வரவே அப்ப "

                         "    ஓம்,,நீங்க  குடியுங்க,,நாங்க  வேலை,,குடிக்க மாட்டாம் "

                          "   அப்ப  நீர்  குடிக்கவேமாட்டீரோ "

                        "  இல்லை,,நல்லா மண்டி மண்டி இரவிரவாக் கண் மண் தெரியாமல்   குடிப்பேன்,  இஸ்மாயிலும்  கொஞ்சம்போல அளவா அளந்து  குடிப்பான் , பகலில்  வேலை அதால்  குடிப்பதில்லை "

                           "  பாத்தீரே  குடிகாரர்  டக்கெண்டு பிளாஸ்டர்  போட்ட  மாதிரி   ஒட்டிவிடுவினம் இல்லையோ "

                               "  ஹஹஹா,,,அப்படியா,,,இல்லை நீங்க  தமிழர்  ..நீங்க  பேமேண்டில்  இருந்து சாபிட்டா  எனக்குக்  கவலையா  இருக்கும்,,அதால  சொன்னேன் "

                                 "     சரி  சரி  அப்பச்  சரி  ..நான்  டக்கெண்டு  பியர் வேண்டிக்கொண்டு வாறன் ,,நீர் சமையுமேன் அப்ப.  உறைப்பு சொல்லப்பட்ட மாதிரி இருக்கவேணும் ,,ஓகே  தானே " 

                                  என்று போட்டு பக்கத்தில  இருந்த " செவென் அண்ட் லெவனில் " ஆறு பியர்க்கான் உள்ள  கேஸ் வேண்டிக்கொண்டு வந்தார். நான் ஓய்வு அறையில் அவரை உக்கார வைத்து டெலிவிசனில் டெக்கை  இணைத்து  அதில பழைய படமான "அவள் ஒரு தொடர்கதை " படத்தின் கெசட்டை  செருகி ஓட விட்டேன். அவர் ஒரு பியர்க் கானை உடைச்சு முழுவதையும்  அண்ணாந்து  கொலகொலகொல   எண்டு  வாயில விட்டார். இது எங்கபோய் முடியப்போகிறது எண்டு அன்றே எனக்குக் குழப்பமாக இருந்தது 

                                        நான் ஒரு  இருபது நிமிஷத்தில் அந்த சாப்பாட்டு சமைசிட்டேன் . இஸ்மாயிலைக் கேட்டேன்  வாறியா  சாப்பிட என்று. அவன் பிறகு சாப்பிடுறேன் என்று சொல்லிப்போட்டு சும்மா  இருக்காமல் சமையல் மேசை,,சட்டி  பானைகளைக்  கழுவத் தொடங்கிட்டான். அந்த நாட்களில் இப்ப போல  நாசமாப்போன இன்டர்நெட்   மொபைல் போன் இல்லை. அதால அவன் எடுக்கிற  சம்பளத்துக்கு  துரோகம் செய்யாமல்    ஒழுங்கா வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான் . 

                                                     நான் ஓய்வு அறைக்கு சாப்பாட்டு பிளேட்டில் உணவைக் கொண்டுவந்தேன். அந்தத் தமிழர் அந்த இடைப்பட்ட  இருவது நிமிடத்தில் மூன்று பியர்க் கானை உள்ளுக்கு இறக்கிப்போட்டு நாக்கால  மீசை  நுணியத்  தடவித் தடவி டெலிவிசனில் படம் ஓடுறதை பின்தொடர்ந்துகொண்டிருக்க அந்த நேரம் "  தெய்வம் தந்த வீடு  வீதி  எதற்கு ..."  என்ற  பாட்டு போய்க்கொண்டிருந்தது . நான் மேசையில் வைச்ச உடன ஒருக்கா கையை விலாசி  ஆவியில்  சுவை  மோர்ந்தார் ,நானும் சாப்பிடத் தொடங்கினேன் 

                               "    சூப்பர்,,சூப்பர்...அப்ப்டியே  நாக்கு வெளிய வருகுது,,இது  என்னண்டு  சமைக்கிறது,,எனக்கும்  சொல்லித்தாருமேன் "

                                            "   சமையல்தானே  எனக்கு தெரிந்த ஒரே வேலை,,அதால  சமைக்கிறது "

                              " எனக்குப்  பெயர்  சூசைப்பிள்ளை  சவரிமுத்து  ,,ஊரில  ஆட்கள் சூசைமுத்து  எண்டுதான் சொல்லுவினம்,,என்னை  முதல்  எங்கயும்  கண்டு இருக்குரீரோ "

                                 "   இல்லை  கண்டதில்லை,,ஹாஹான்ஸ்ஸ்ட்ருவாவில சில தமிழ் ஆட்களைத்  தெரியும் ,,,  மைக்கல் கொலின்ஸ்,,அந்தோணி தாஸ் , சேவியர் ,,, நிக்சன் ,, "

                                 "  ஓம்,,ஓம்,,அவையல்   பக்கத்தில  தான்  ஹாஹான்ஸ்ஸ்ட்ருவா  பெந்துக்கொஸ் சபை  சேர்ச்க்கு பக்கத்தில   இருக்கினம் ,,நான் ஊரில  ரெக்கிலமேசன்  ரோட் "

                                "  அதெங்க இருக்கு,,,எந்த  ஊரில  இருக்கு "

                             " குருநகர்,,நான்  சொந்தமா பைபர்கிளாஸ்  போட் வைச்சு கரைவலை  போட்டு  இழுக்கிற   கடல்தொழில்  செய்தனான், அதே நேரம்  குருநகர் சீநோர்  ஐஸ் பக்ரியில்  வேலையும்  செய்தனான் ..பிலிப்  டொக்டர்  வாட்  தெரியுமோ "

                             " டொக்டர்  பிலிப்  கேள்விப்பட்ட பெயரா இருக்கு "

                          "அங்கதான்  எண்ட  மனிஷி  நேர்ஸ்  வேலைக்கு வந்தவா  , அங்கதான்  தங்கி நிண்டு  வேலை  செய்தவா ,அப்பத்தான்  இழுத்துக்கொண்டு ஓடினனான் "

                                 "    ஹஹஹா  ,,அய்யோ  சாமி "

                          "   இப்ப  என்னத்துக்கு  சிரிக்கிரீர் "

                                 "  உங்க  மனைவியையும்  என்னவோ  கரைவலை போட்டு இழுத்த மாதிரி  இழுத்துக்கொண்டு  ஓடினேன்  எண்டு  சொல்லுரிங்க "

                               " அதுதான்  உண்மை,,,இழுத்துக்கொண்டு  எழுவைதீவுக்கெல்லோ  கொண்டு  போய்க்  கலியாணம்  கட்டினனான் "

                         "    ஹ்ம்ம்,,நல்லா  இருக்கே  கேட்க,,துணிஞ்ச  ஆள்  போலதான்  "

                          "    பின்ன  என்ன  சும்மாவே,,மனுசியின்  ஆட்கள்  உடுப்பிட்டியில்    இருந்து  என்னை  வெட்ட  சுருள்வாள்   எடுத்துக்கொண்டு தேடி தேடி   வந்தவங்கள் "

                                     "     அட அட .,.பிறகு  "

                       " பிறகென்ன..நான்  நினைச்சதை  சாதிச்சுப்போட்டேன்,,"

                         "   சரி  அதுக்கு  ஏன்  உங்களைத்  தேடி வெட்ட வந்தவங்கள்,கலியாணம்தானே  கடத்திக்கொண்டுபோய் கட்டினிங்க,கொலையா செய்திங்க...  இல்லையே  "

                             "  எதுக்கோ,,மனுஷி  கூட்டணி  எம் பியாக பார்லிமென்டில   இருந்த சிவசிதம்பரத்தோட  ஆட்கள்,,சாதித்  தடிப்பு  ,,,நான்  சாதி  குறைவு  அதுதான் "

                        "  ஓ  இப்ப  விளங்குது ,,பிறகு  சொல்லுங்கோ என்ன நடந்தது " 

                          " அதோட அந்த  ஆண்டு  பட்டவேசை  சிறிமாவோபண்டாரநாயக்க  சீநோர்  இனி இலங்கையில்  இயங்க முடியாது எண்டு சட்டம்  போட்டாளே "

                              " ஒ..சீ-நோர்   நிறுவனமே  நோர்வே  நாட்டு  உதவியுடன்  தானே  இயங்கியது  ,,அப்பிடித்தானே  அதுக்கு  ஸ்ரீலங்கா நோர்வே  என்பதைச்  சுருக்கி     சீ - நோர்  என்ற  பெயர் வந்தது  இல்லையா  "

                                   ஓம்,  அதுதான்   ,அதுதான் ,,அதுக்குப்  பிறகு  நோர்வேகாரன் அதில  வேலை செய்த   எங்கள்  எல்லாரையும் நோர்வே வரசொல்லிக் கேட்டதால் நான் இங்க வந்தது   "

                            "அட...அப்படியா  இது  கொஞ்சம்  நான் கேள்விப்பட்ட  சம்பவங்கள்  போல  இருக்கே,,நீங்க  நோர்வே  வந்து  இப்ப  இருவத்தி அஞ்சு  வருசத்துக்கு மேல  இருக்க வேணுமே "

                         "பின்ன  என்ன  அந்தக்  கதை தானே  சொல்லிக்கொண்டு இருக்றேன்  உமக்கு "

                          "ஹ்ம்ம்,,குடும்பமே  இங்கே நோர்வேயில் என்றால்  அது  நல்லம் தானே "

                                " பின்ன  என்ன  அந்தக்  கதை தானே  சொல்லிக்கொண்டு இருக்றேன்  உமக்கு..ஆனால்  மனுசி  அவளோட  சாதிப்புத்தியைக் காட்டிப் போட்டாள் "

                                " நோர்வேயில்  வசிக்க  சான்ஸ் கிடைச்சதே  நல்லம்  தானே,,இதில  என்ன  புத்தி  ,,அது  இது  என்டுரிங்க "

                                  " நல்லம் தான்  ,,எனக்கு  இல்லை  அதுகளுக்கு,.. நாலு  புள்ளைக்கள் ,,மூண்டு பெட்டையளும்  இப்ப குமரியள்  ,,மகன் ஒருத்தன்.  அவன்  இப்ப  சிங்கிங்பிஸ்ல  புட்போல் விளையாடுறான் "

                            "அட  அப்ப வளந்த  பிள்ளைகள்  உங்களுக்குப் பொறுப்பு இல்லைதானே "

                             "  நான்  இங்க வந்து  ஸ்டாவன்கரில் நோர்வே மீன்பிடி ட்ரோலர்போட்டில  எஞ்சினுக்க  வேலை செய்தனான்,,அதில்தான்  தப்பினேன் "

                             " என்ன  தப்பினிங்க ,கடலில்  என்னவும்  ஆக்சிடன்ட்  நடந்ததா ,,அல்லது  மீன்பிடிப்படகு  கவிண்டு விழுந்ததா "

                         "   அதில்லை,    மனுசியும் புள்ளைகளும்  என்னை  அடிசுக் கலைச்சுப்  போட்டுதுகள்,,மீன்பிடி ட்ரோலர்போட்டில  எஞ்சினுக்க  வேலை செய்த காசியல  மிச்சம்  பிடிச்சு  இப்ப  இருக்கிற  வீடு  வேண்டினனான் ,,இல்லாட்டி இப்ப அந்தோனியார் கோவிலடி  சவுக்காலைதான் "

                                 "   சரி  விடுங்க..இதெல்லாம்  வரும்  போகும் "

                             " புள்ளைகளைப்  பிரிச்சுப் போட்டாள் மனுஷி,,ஆனால் அந்தோனியார்  என்னைக்  கைவிடமாட்டான் "

                                     எண்டு  சொல்லி அஞ்சாவது  பியர்க் கானை உடைச்சு முழுவதையும்  அண்ணாந்து  கொலகொலகொல   எண்டு  வாயில விட்டார். இது  இனி  எங்கதான்போய் முடியப்போகிறது எண்டு எனக்கே வயித்தைக் கலக்கும்   குழப்பமாக இருந்தது .ஆனால் அவர் நிதானமாக  இருந்தார். முழு சாப்பாட்டையும் முள்ளுக் கரண்டியை  சுழட்டி எறிஞ்போட்டு கையால பிளேட்டை வழிச்சுத் துடைச்சு விரல்களையும்  விட்டு வைக்காமல் சூப்பி  எடுத்துப் போட்டு , என்னை  நிமிர்ந்து பார்த்து 

                         "  சொல்லி வேலை  இல்லை..சொல்லப்பட்ட மாதிரி  இருக்கு " 

                           "  நீங்க  பியர்  குடிச்சதால்  பசி  கிளம்பி இருக்கும்  ,,அதனால  வாய்க்கு  ருசியா இருக்குப்போல "

                             " இல்லை..அப்படி இல்லை ,,அந்தோனியார் அறிய  உண்மையைச்  சொல்லுறேன் நல்லா  இருக்கு "

                       " உறைப்புக்  கொஞ்சம்  அதிகம்  போட்டுச்  செய்தேன் "

                            " இப்பிடித்தான்  நான்  அணியத்தில  இருந்து  சூடைக்கருவாடு தீச்சு வைச்ச பழஞ்சோறும் வெள்ளை வெங்காயமும்  இரவில  இறால்  வலையைக் களங்கண்டியில் வலிச்சு   இறக்கிப்போட்டு  ஏத்துக்  கடலில  இருந்து சாப்பிடுவேன் ,,எண்ட  அம்மா  கட்டித் தருவா ,,என்ட  அம்மா,, உன்  கையால  உருட்டி உருட்டிக் களவல் திண்ட மாதிரி இருக்கு ,எண்ட  அம்மா,,நீ  ஏனம்மா  என்னை  விட்டுப்போட்டு செபமாலை மாதாவோடு  போனனி  ,,எண்ட  அம்மா  ,,எண்ட  அம்மா , நீ செத்து  நான்  இனி  என்ன வாழுறது  எண்ட  அம்மா ,,நீ தாண்டி என் மரி அன்னையின்  மருவடிவத்   தெய்வம் "

                                             என்று  கதறிக்  கதறி  அழத் தொடங்கினார் , இஸ்மாயில்  ஓடிவந்து பதட்டமாக  எட்டிப்பார்த்தான். அவனுக்கு  எப்படி  நிலைமையை  சொல்வது  என்று  எனக்கு  உருது  மொழி வரவில்லை. ஊமைப்பாசையில்  சொல்ல நினைக்க  அதை  எப்படி  சொல்லுறது  எண்டும்  விளங்கவில்லை. அவரே கொஞ்ச நேரத்தில்  கண்ணை துடைச்சுப் போட்டு 

                               " குறை  நினைக்க வேண்டாம் , எனக்கு  இன்னொரு  பாசல்  கட்டித்தர முடியுமா  இந்த  சாப்பாடு ...நான்  இவடதில  இருக்கிறேன் ,,புள் பார்சல் ,,முடியுமா ..குறை  நினைக்க வேண்டாம்.."

                                    "     அது  பிரசினை  இல்லை  செய்து  பாசல்  கட்டித் தாரேன் ,,நீங்க  எப்படி  வீட்டுக்குப் போகப்போரிங்க "

                                 "   பிரசினை  இல்ல  டாக்சி  அடிச்சுத்  தாரும்,,"

                                   "   சரி..நீங்க  கொஞ்சம்  படுக்க  விரும்பினால்  இந்த சோபாவில்  படுங்க,,ரெஸ்ட்  எடுங்க "

                                 "    ஓம்..கொஞ்சம்  படுக்கவே போறேன்  ,,என்னோட  டெலிபோன்  நம்பர் தாரேன்,,உமக்கு  என்ன  பிரசினை  எண்டாலும்  உடன  அடியும்,,  நான்  ஹெல்ப்  ஒண்டு  உடன தருவேன்  ஓகே  யா "

                                                      என்று  சொன்னார். நான் அவரின் டெலிபோன் நம்பர் வேண்டி எடுத்தேன். அதில தொடங்கின  நட்புத்தான்.  அதன் பின்  சில  மாதங்கள் ஹாஹான்ஸ்ஸ்ட்ருவாவில்  அவர்  வீட்டில்  வாடகைக்கும்  இருந்து இருக்கிறேன்  அந்தக்  காலங்கள் எல்லாம் முகநூல் இல்லாத காலங்கள் .  மனித முகங்களை நேராகவே பார்த்து  முன்னுக்கு உக்காந்து விடிய விடியக்   கதைத்துக்கொண்டு இருந்த அலாதியான  காலம் 

 ஜன்னல்களை  அகலத்திறந்தும்  காற்று வரமறுத்து அடம்பிடிச்ச  பகல் ஒன்றில்   கோடைவெயில் குருட்ருத் பள்ளத்தாக்கை சுற்றி வளைத்து ஆவேசமாகக்  கொளுத்திக்கொண்டிருந்த  அந்த நாள்  அவர் வீட்டில் சரத்தை  மட்டும்  கடிக்கொண்டிருந்தார்.  என்னக்கு அது  வேலை  இல்லாத  விடுமுறை நாள். 

                                    "  வாடாப்பா    இந்த  வெய்யிலை  விடப்படாது ,   வெளிய  போய்  எங்காவது  கடல்கரைப் பக்கம் ஒதுங்கி இருந்து  பியர்  அடிப்பமா  ,,கடல்க்காத்து  முகத்தில  பிடிச்சு  எவளவு வருஷம்  ஆச்சு ...வாடாப்பா  ..இண்டைக்கு கட்டாயம்  போவம்,,வாட்டாப்பா,,வெளிக்கிடு,,உனக்கும்  இண்டைக்கு  வேலை  இல்லைதானே,,வாடாப்பா  "

                                                       என்று கேட்டார். அதனால்  ரெண்டு பேரும்  ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள கடற்கரைப் பகுதியாக இருந்த  லிசாக்கர் என்ற இடத்தில போய்க்  கடற்கரையில் குந்தி இருந்து பியர் அடிச்சுக்கொண்டு இருந்தோம் . 

                                                           லிசாக்கர்  பணக்கார நோர்வே மக்கள் வசிக்கும் பகுதி. அங்கே வசிக்கும் பலருக்கு சொந்தமாக ஆடம்பரப் படகுகள் இருக்கு. அதை அவர்கள் லிசாக்கர்  கடற்கரையில் ஏற்றி வைத்திருப்பார்கள். நல்ல கோடை காலத்தில் குடும்பமா  சமைத்த உணவுகள் எடுத்துக்கொண்டு  படகுகளில் கடலுக்குப் போய் சாப்பிடுவார்கள். நோர்வே மக்களின் ரத்தத்தில் இப்பவும் அவர்களின் முதாதையர்களான  வைக்கிங்  என்ற கடலோடிகளின் ஜீன் இருக்கு. அது கடலில் அவர்கள் இறங்கும்போதெல்லாம் சந்தோசம் கொடுக்கும். 

                                   சூசைமுத்து அய்யா   நாலு பியர் நாக்கை நனைத்தவுடன ஒரு ஆடம்பரப் படகில போய்  ஏறி  அதன் அணியத்தில் இருந்திட்டார். அந்த ஆடம்பரப் படகுகளில்  யாரவது  கை தொட்டால்  எலார்ம் அடிக்கிற  மாதிரிப் பாதுகாப்புக்கள்  இருக்கு. எலார்ம்  சிக்குருட்டி நிறுவனத்துக்கு அடிக்கும் .அவர்கள் என்ன ஏது  என்று பார்க்க ஓடி வருவார்கள்.  சூசைமுத்து அய்யா ஏறின  உடன  அலார்ம்  அடிச்சு இருக்க வேண்டும் . ஆனால் சிக்குருட்டி வர முதல் அந்தப் படகின் சொந்தக்காரி ஓடி வந்திட்டாள் 

                               அரக்கப் பறக்க  ஓடி  வந்தவள் நடுத்தர வயதில் இருந்தாள். நல்ல திடகாத்திரமான எழும்பி  உயர்ந்த பெண். என்னையும்  சூசைமுத்து அய்யாவையும்  பியர்க் கான்களையும்  பார்த்தாள். நான் அந்தப் படக்குக்கு  அருகில் வந்து அவருக்கு  சப்போட்டாக  நின்றேன் .  நாங்கள் திருடர்  இல்லை  என்று  என்னமோ ஒரு மனசாட்சி சொல்லி இருக்கவேண்டும் .  சூசைமுத்து அய்யா அணியத்தில் இருந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள்  என்னிடம் 

                                          " எதற்க்காக  அந்த  மனிதர் என் படகில்  ஏறி இருக்கிறார்,,அல்ராம் அடிச்சுது வீட்டில,, அதுதான்  நானே  ஓடிவந்தேன், இப்பிடி இன்னொருவர் படகில் ஏறி உள் நுழைவது தண்டனைக்குரிய குற்றம் தெரியுமா,"

                                        " தண்டனைக்குரிய குற்றம் என்று  தெரியாது  ஆனால்  இப்பிடி இன்னொருவர் படகில் ஏறி உள் நுழைவது பிழைதான்  "    

                                       ",நீங்கள்  எந்த  நாட்டவர்,,ஸ்ரீலங்கன்  தமிழரா,,ஒரு  தமிழர்  என்னோடு வேலை செய்கிறார்,,அவர்  முக சேப்  உன்னைப்போல  இருக்கும் ,,என்ன  நான் சொல்வது  சரியா "

                              "     ஓம்  நாங்கள்  ஸ்ரீலங்கன்  தமிழர்  தான், அவர்  ஒரு  ஆர்வக்கோளாறில்  ஏறி உக்காந்து  விட்டார் ,,மன்னித்துக்கொள்ளு "

                                     "     எதற்க்காக  அந்த  மனிதர் என் படகில்  ஏறி இருக்கிறார் அதுக்கு  என்ன  காரணம்  சொல்லுறாய்,,"

                                                  என்று நட்பாகக் கேட்டாள் . அவளுக்கு    முதலில்   கோவம்  வந்தமாதிரி  இருந்த    முகத்தில்  பிறகு   அது  தெரியவில்லை. ஒருவித  பாதுக்காப்பு  நம்பிக்கை  நெற்றியில் பொட்டு வைச்சாலும், அவளுக்கு  பதில்  சொல்லியாக  வேண்டும்  என்பதுபோல செவ்வரதைச்   சிவப்பு  சொண்டை  இறுக்கி வைச்சுக்கொண்டிருந்தாள்.  சூசைமுத்து அய்யா எதையும்  கவனிக்காமல், 

                                        " கடல் மேல் பிறக்க வைத்தான்  எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான் ,,கட்டிய மனைவி .... தொட்டிலில்  பிள்ளை..வெள்ளி நிலாவே  விளக்காய்  எரியும்  கடல்தான்  எங்கள்  வீடு .கடல் மேல் பிறக்க வைத்தான்  எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.. "  
                                                           என்று குரலெடுத்து எம் யி ஆர் போலப் பாடத்தொடங்கிவிட்டார் .   நான் அவளுக்கு  விளக்கமாக  எனக்கு  அப்போது தெரிந்த சுவுடிஷ் மொழியையும்,,நோர்க்ஸ் மொழியையும்,,,இங்கிலீஸ்சையும் போட்டுக் கூழாம் பாணியாகக் குழப்பியடித்து பூனையைத் தடவிப்பார்த்து யானை  வரைந்த மாதிரி 

                                .....  இலங்கை  உள்நாட்டு  யுத்தம்....சிங்களவரின் இனவெறி  அட்டுழியம்,,,தமிழர்களின் பச்சை  இரத்த  இனப்படுகொலை.... வடக்கில்  அகோர அடிபாட்டுச்  சண்டை    ...தனிச்சிங்களச்சட்டம்,,,சீநோர் ஐஸ் பக்டரி..  சிறிமா  அதைத்   தடை செய்தது ,,சூசைமுத்து அய்யா...அவரின்  மீன்பிடிபைவர் போட்...கரைவலை,,,அணியம்....அர்த்தமில்லா   புலம்பெயர் அகதி  வாழ்க்கை ....! 

                                   என்று  நான் சொல்ல சொல்ல நீலக்  கண் ரெண்டும் விரிய விரிய அதில இரக்கம் வந்து உக்கார இடம் தேட ஏறக்குறைய  எங்களின்  கண்ணீர்க்கதை  அவளுக்கே கண்களில் கண்ணீரை வரவழைக்கும் போலிருந்தது . சூசைமுத்து அய்யா அப்போதுதான்  பாடுறதை  நிப்பாட்டிப்போட்டு நான்  அவளுக்குக்  வாயால கதை சொல்லும் விதத்தைப் பார்த்தார். அவள்  உண்மையாக எங்களுக்குகாக  இரக்கப்பட்டாள். பிறகு அன்று எங்களுக்கு ஒரு பிரம்புக் கூடையில்  சாப்பாடே கொண்டு வந்து தந்து  எங்களோடு இருந்து கதைத்துப்போட்டுத்தான் போனாள் .

                                      சூசைமுத்து அய்யாவுக்கு  ஆச்சரியம் கொடுத்த ஒரே விசியம் அந்தப் பெண்மணி நான் அவளுக்குச் சொன்ன கதையில் அவள் இதயமே நொறுங்கும்படியாக ஆகிவிட்டதாம் என்று அவள் சொன்னது . ஆனால் நான் வாயால நல்லாக் கதை  அவிப்பேன் என்று நல்ல நம்பிகை அப்போது வந்திருக்கலாம். ஆனால் அது மட்டும் போதாது  ஒரு திரைக்கதை எழுத எண்டு அவருக்கு அவர் நம்பிக்கையை  உடைக்கும் நிகழ்வு நடக்கப்போகிறது  என்று தெரியவே தெரியாது .

                                   
மூன்று  வருடங்களின் முன் அவர்  என்னை முகநூலில் சந்தித்தார். என் கதைகளைத் தவறாமல் வாசிப்பார். கருத்து  ஒன்றும் சொல்ல மாட்டார் . நானும் அவரும் இருப்பது நாற்பது நிமிட ரெயில் பயணத் தூரத்தில். ஆனால்  நான் அவரை இன்றுவரை நேரடியாகச் சந்தித்து  இல்லை ,டெலிபோனில் கதைப்பார் . ஒவ்வொருமுறையும்  ஹாஹான்ஸ்ஸ்ட்ருவாவுக்கு   வாடாப்பா   வாடாப்பா என்று  கெஞ்சுவார். நான்  போனதேயில்லை.  

                                       ஒரு ரெஸ்ட்ரோரண்டில் குக்  ஆக வேலை செய்துகொண்டிருந்த என்னை வைத்துக் கதை எழுதச்சொல்லி        கிட்டத்தட்ட  பதின்மூன்று   வருடங்களின்   பின் " திருக்கேதீஸ்வரம் வேட்டி "  என்ற   குறும்படம்  அவர்  எடுக்க வெளிக்கிட்டதும்  அதுக்கு  நான்  திரைக்கதை  எழுதுறேன்  பேர்வழி  என்ற குறும்புக்  கும்மாளமும்  பற்றி  இப்பிடியே  சொல்லிக்கொண்டு போகவே  நீண்டுகொண்டே போகுது இல்லையா , இன்னும் திரைக்கதையை  எப்படி  சொல்லும்படியான சந்தர்ப்பம் வந்தது,,அதை  எப்படி  சொன்னேன்,,அந்தப் படத்துக்கு  என்ன  நடந்தது  என்பதை  தொடர்ந்து எழுதுறேன்... 

...................