Friday 23 June 2017

இயற்கை...

ஒதுக்குப்புறத்தில் 
நான் வசிக்கும் 
நடுத்தர நகர விளிம்பு 
அதில் ,
பனிக் கம்பளம் மூடிய 
புல்வெளிகள் நடுவே,
துகிலுரி நடனப் பெண்கள் போல
எல்லாத்தையும் கழட்டி எறிந்து
உயிரை மட்டும்
உள் இழுத்து வைத்துள்ள
மரங்கள்,
மனம் நொந்து விழுத்திய
இலைகளில் கிசுகிசுத்து ,
மரங்கள்
கை விரித்த
கிளைகளில் சரிகை போடும் ,
உறைபனிக்கால
வென்பனிமீது
கோபம் கொண்டு,
முகவரி சொல்லாமல்
பெயர்ந்துபோன
பறவைகள் வடிவமைத்த
வீடுகள் .......
முகத்தில் ஒட்டும்
முன்பனி இருட்டு,
வழுக்கி வழுக்கி
விழுத்தும் நடைபாதை ,
காதுநுனியைக் கடிக்கும்
மைனஸ்டிகிரி குளிர்,
தலை காட்ட விரும்பாத
வடதுருவ சூரியன்....!
ஒரு கட்டத்திலிருந்து
மறு கட்டத்துக்குப் போவதில்
நல்லதும்
கெட்டதும் நடப்பது
வாழ்கையில் மட்டுமல்ல
இயற்கையிலும்தான்!.


.....................................................................
பூக்கள் பிடிவாதமாகப் 
பேசமறுத்த 
ஒரு 
அதிகாலை 
தென்றலுக்குக் கோபம் வந்தது,
முதலில்
வண்டுகளைத் துரத்தியடித்து,
மலர்களின்
இதழ்களைப் பிய்த்து எறிந்து,
பறவைகளைப்
பறக்கவிடாமல்ப் பயப்படுத்தி,
சுற்றி சுழண்டு சுற்றி
சுறாவளியாகியது,
விளக்கம் கேட்ட மரங்களை
சரித்து விழுத்தி,
சமாதானம் சொன்ன சருகுகளை
சுழட்டி வீசி எறிந்து,
அதிகாலை
வீதியெங்கும் புழுதி எழுப்பி ,
குறுக்க வந்த குடிசைகளின்
கூரைகளை இழுத்து எறிந்து,
சாவால் விட்ட கோபுரங்களை
அசைத்துப் பார்த்தது
கடைசியில்
களைத்துப் போய்
கடல் விளிம்பில் விழுந்து
பெருமூச்சு விட
பூக்கள் பிடிவாதமாகப்
பேச மறுத்ததால்
ஒரு நகரத்தின்
அதிகாலைக் கோலமே
அலங்கோலமானது......!

......................................................................
இசைந்து வளைந்த 
இளம் 
மூங்கில்களின் 
அசைந்தாடிய அழகில்
மனம் மயங்கிய
வண்டுகள்
எழுந்தமாணமாக்
குற்றெழுத்துத்
துளைகள் போட
ச ரி க ம ப த நி ச பாடித்
தயங்கி தயங்கி
உள்நுழைந்து
ச நி த ப ம க ரி ச பாடிச்
சந்தோசமாக வெளியேறக்
காற்று
ரகசியமாகக் கண்டு பிடித்த
இசைக் கருவி
புல்லாங்குழல்.

....................................................
கனவில்க் 
காத்திருந்து 
கால் வலியோடு தேடிக் 
கடற்கரை முழுவதும் 
நீ நடந்த 
கால்தடங்களை
அடுத்த நாளும் தேடினேன்,
உன்
நடையறிந்து
ஓடிவரும் நண்டுகள்
என் அதிர்வுகள்
அறிந்து
குழிதோண்டி ஓடி ஒளிக்க,
உன்
முகம் பார்த்துப்
பாடிப்பறக்கும்
கடல்ப் பறவைகள்
என் பார்வைபட்டதும்
சத்தமில்லாமல்ப் பதுங்கின,
உன்
பிரசன்னம் ரசித்து
மிதமாக வீசும் உப்புக்காற்று
என் தரிசனம் பிடிக்காமல்
முகமெல்லாம் வீசியடிக்க ,
உன்
வாசம் அறிந்து
அடக்கி வாசிக்கும் கடல்
என் வருகை பிடிக்காமல்
ஆவேசமாய் ஆர்ப்பரித்தது ,
உன்
கால்களை நேசித்த
கடல் அலை மட்டும் ,
"பெறுமதி தெரியாதவனெண்டு
திட்டி அலையடித்து
"அவள் கால் சுவடுகளை
காலமெல்லாம்
காப்பாற்ற விரும்பியே
அபகரித்தேன்..."
எண்டு வீறாப்பாய்ச் சொல்லி,
என்
கால்த் தடங்களை மட்டும்
மணல்வெளியெங்கும்
அப்படியே
விட்டு வைத்தது !


..............................................................
ஒரு கோடைகால 
பின் அந்திமாலை 
கீழ்வானம் படம் வரைய 
ஆசைப்பட்டது !
முதலில்
களைத்துப்போய் கடலில்
குளிக்கப்போன சூரியனை
கடல் விளிம்பில்
பிடித்து வைத்து
அதன் செந்நிற வர்ணத்தை
சந்தனம் போலப்
பரவி வீசியடித்தது,
பிறகு
வேடிக்கை பார்த்த
இரண்டு மேகத்தை
இழுத்து பிடித்து
அதன் அருகில்
அவசரமா பறந்துபோன
கடல்ப் பறவைகளை
அந்தரத்தில்
தடுத்து நிறுத்தி வைத்தது,
பிறகு
தொடுவானில் ஆர்பரித்த
ஆவேச அலைகளை
அடங்கச் சொல்லி
வெருட்டி அடக்கிவைத்து
கடைசியில்
இதமான குளிர்காற்று
பதமாகக் கிசுகிசுக்க
கீழ்வானம் தனைமறந்து
ரசித்துக்கொண்டிருக்க
இந்தப் படம்
கட்டாயம்
பட்டயக் கெளப்புமென்ற
பொறாமையில் பொருமிய
தட்பெருமைச் சூரியன்
சடார் எண்டு கடலுக்க
தன்னை இழுக்க
படுவான்கரை இருட்டாக
கீழ்வானம் அளத்தொடங்கியது.


..........................................................................
தற்செயலாக 
ஒரு 
மழை நீர் தேங்கிய 
பாதையில்தான் சந்தித்தோம் ,
அதன் பின்
சந்தோசங்களைப்
போதுமென்றவரை சுவாசித்து
ஒரு கட்டத்தில்
சுவாரசியமற்று
அலுத்துப் போய்
நீ நீயாக மாற
நான் நானாக மாற
வருடங்களின் பின்
ஒரு
மழை நாளில்
பிரிந்தபோதும்,
அன்று போலவே
இன்றும்
ஒண்டுமே தெரியாதமாதிரி,
கையைப் பிசைஞ்சுகொண்டு
ஒரு
ஓரமா ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்குது விதி!
மழை அப்பபோலவே
இப்பவும்
சம்பந்தமே இல்லாதமாதிரிப்
பெய்கிறது !
பாதையெல்லாம்
கையாலாகாத
சுவாரசியமற்ற தாக்கம்
தேங்கி நிக்குது !


........................................................................
இறந்துகொண்டிருந்த 
மெழுகுதிரியின்
இயலாமையில் 
கவலைப்பட்ட 
கருணையுள்ள காற்று
ஒரு நாள்
அதன் அருகில் வந்து,
அவசரமாக
அதன் காதோரம்
பெறுமதியான
உன்னத
ஆத்மாவை
உருகவைக்கிறாய்
உன்
இறுதி ஆசை
என்னவென்று கேட்டது "
"உயிர் கொடுத்து
ஒளியாகி
இருள் நீக்கி இன்புற்று
பாவிகளின் பாவங்களைச் சுமந்து
நல்லவர்களை
நினைவில வாழவைத்து
என்று நீளமாகச்
சொல்லிக்கொண்டே.....
நிதானமாக
நின்று எரிந்து ,
மவுனமாக
மரணத்தை நேசித்து ,
வழிந்து உருகி,
இறுதிக் கணத்தில்
அலங்கோலமாய்
அசைந்தாடி
பிரபஞ்சம் போலப்
பிரகாசமாகி ,
இருந்த இடம் தெரியாமல்
இல்லாமல்ப் போனது
அந்த இருப்பு!


............................................................
ஒரு மழைக்கால
மாலைப் பொழுதில் ,
இயற்கை
கோபமாக
இசை அமைத்த
பாடல்
இடிமுழக்கம்,
அதுவே நளினமாக
ஆட வைத்த
நாட்டியம்
மின்னல் ,
காமம் தலைக்கேற
ரசித்துக்
குளிர் காற்றோடு
காதல் செய்தபின் ,
அதன்
கலைந்த கனவுகள்
கரு மேகமாய்
ஒன்றுதிரள ,
இனியும் பொறுக்க முடியாத
ஒரு கட்டத்தில் ,
அதன் சோகங்களுக்காய்
முதலில் சிணுகி
அதன்பின்
ஆவேசமாகி
அழுது வடிந்து,
ஒப்பாரி வைத்து
சோவெனப் பெய்தது மழை!


.....................................................................
அகாலமாய்ப் பறந்துவந்து, 
அவலமாய் ஆர்ப்பரித்து, 
அழுதழுது கதைசொன்ன 
ஒரு
சிட்டுக் குருவிக்கு,
ஆறுதல் சொல்லி,
அமைதியாக்கிய
ஒரு ஆலமரம்,
அதன்
அழகில் மயங்கி,
கருணையில் கரைந்து,
துன்பத்தில் துக்கித்து ,
இயலாமையில் இரங்கியது!
சிட்டுக்கு சோலி அதிகமாம்,
அதன்
ஜோடிக்குப் பணிவிடை செய்ய,
குஞ்சுகளைக் கவனிக்க,
குடும்பத்துடன் கொண்டாட,....
எண்டு சொல்லி ,
கதையின் முடிவில்,
"முடிவெடுக்கத் துணிவில்லை "
என்று முடிவாகச் சொல்லி,
முடிந்தால்
ஒரு வருடத்தின் பின்
பறந்து வருவேன்
எண்டுசொல்லிப்
பறந்து போக,
மரம் மறுபடியும்
மரமானது!


...........................................................................
கோடை மலர்களின் 
ரகசிய மொழி 
யாருக்காவது தெரியுமா ?
ஒருவேளை 
அவைகளுடன் ,
அணைக்கும் இலைகளுக்கோ,
பேசும் வண்டுகளுக்கோ,
தடவும் தென்றலுக்கோ ,
மூச்சாகும் மழைக்கோ,
சுவாசமான சூரியனுக்கோ,
உயிரான வேர்களுக்கோ,
தெரியக்கூடும்,
வரப்போகும்
உறைபனியில்
அவை
மனதளவில்
மரணிக்குமுன்னர்
யாரவது
பேசிப் பறைஞ்சு
ரகசியமா அறிஞ்சு
சொல்ல முடியுமா?

.......................................................

வானதுக்கு தெரியாது 
அதை
பரந்து விரிந்து 
வளைத்துப்போட்ட 
மேகம்களின் 
பெயர்கள்,
மேகத்துக்கு தெரியாது
அதைத் தடவிய
மாலைநேரத்
தென்றலின் பெயர்கள்,
தென்றலுக்கும் தெரியாது
அது
வேண்டுமென்றே
முட்டி மோதிய
மரங்களின் பெயர்கள்,
மரங்களுக்குத்
தெரியவே தெரியாது
அவைகளில்
பறந்து பறந்து
கூடுகட்டிய
குருவிகளின் பெயர்கள்,
அப்புறம்
அந்த குருவிகளுக்கு
மட்டும் எப்படிதெரியும்
அவை
தெரிந்தெடுத்துக் கூடுகட்டிக்
குஞ்சு பொரித்த மரங்களின்
இனமும் ,மணமும், 

குணமும் ,நிறமும்,
வயதும், முழுப் பெயரும்?
..................................................................

தன்னம் தனியா
வந்து,...
அப்பாவியா
இருட்டை ரசித்துக்
கனவில் மிதக்கிற
நிலவை,....
கொஞ்சம் தாலாட்டி,
கொஞ்சம்
அலைகழித்து,
கொஞ்சம்
அரவணைத்து,
இரவோடிரவா
ரகசியமாஅழிக்க,
பொறாமையில்
அரிக்குது,
குமரிப் பெண்ணின்
அழகை
ரசிக்கத்தெரியாத
குளத்து அலைகள்!.


.......................................................
காற்று 
கவிதை மொழியில் 
பேர்ச் பித்துளாவின்*  
நனைந்த  கூந்தலை 
வருடும் போது
ஸ்புருஸ் பீசியாவின்* முகம் 
வெட்கத்திற்கு
இலக்கணம் எழுதுது...
ஏனோ தானோவென்று 
அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும்
வானத்திலிருந்து  
சிறகுகளை 
மடித்து வைத்து 
நிதானமாக 
தேவதைகள்
இறங்கி வருகிறார்கள்.. 
பார்வையைப் 
பனி மறைக்கும் 
நெடுஞ்சாலையின் 
ஓய்வு நிறுத்தத்தில் 
ஒரு 
போஸ்கால்* குருவியைத் தவிர 
வேற எதுவுமே 
அசையவில்லை....
ஒரு புறம் 
வயல் வெளிகளில் 
அகலத் திறந்த வரப்புகளில்
உருட்டி வைத்த
கோதுமைச்  சனல்கள் 
திட்டு திட்டாக
சிதறிக்கிடக்க 
மறு புறத்தில் 
திகில்ப் படம் போல 
விசுக் விசுக்கென்று  
கடக்குது 
தலையாட்டும்  
தந்திக் கம்பங்கள் ...
இறங்கிய களைப்பில் 
அசையாமல் 
அப்படியே மல்லாக்கப் 
படுத்திருந்த உறைபனி 
ஒருக்களித்து 
உருகிக் கரைந்து 
பாதைகளுக்கு வழிவிட்டு
அடக்கமான பணிவில் 
ஆவியாகிவிட்டது  
நானோ 
சாலைப் பயணத்தின் 
பாதி வழியில்
வேகம் எடுத்து 
நேரம் கடக்கும் 
புயலின் மையத்தில்
சிக்கிக் கொண்டு
ஆனந்தமாகச் 
சுழன்று கொண்டிருக்கிறேன்.....

/// பேர்ச் பித்துளா*  Birch Betula pubescens, ஸ்புருஸ் பீசியா* spruce Picea abies.நோர்வேயின் முக்கிய காட்டு மரங்கள். போஸ்கால்*  Fossekall நோர்வேயின் தேசிய பறவை ///.
.............................................................................


வாசித்துவிட்டு
மறந்து விடு
என்கிறது மேகம்
தூரத்தைத்
திரத்திக்கொண்டிருக்கு
கீழ்வானம்
கவிதைபோலக்
கடந்து செல்கிறது
ஈர்ப்புவிசைக் காற்று
பல்லைக் கடித்துக்கொண்டு
பதில் சொல்லும் பகல்
தனித்திருப்பதில்
கழுத்தை நெரிக்கும்
தனிமை
பழைய நண்பன்
அறிமுகம் செய்த புத்தகத்தில்
புதிய நட்புக்கள் இல்லை
நாமாக நம்மை கடந்த பாதையில்
முன் தெரிகிறது
அனுபவம்
பிறகு ஏன் நேசிப்புகளின்
துன்பத்தை
தற்காலிகமாயும்
அகற்றமுடியவில்லை?
பாரங்கள் எதையுமே
மனதோடு
சேர்த்துச் சேமித்து
நிரந்தரமாக
வைத்திருக்காததால்தான்
பறவைகளால் கூட்டமாகப்
பறக்கமுடிகிறது..