Sunday 27 November 2016

யுத்தக்கவிவலிகள் / முதல் தொகுப்பு /


ஒன்றுமே
வெளிய தெரியவிடாமல்

பனைமரங்கள்

செம்பாட்டுப் பாதையில்
முகத்தை 
மறைத்துக் கொண்டு
மனதுக்குள்
குமுறிக்கொண்டிருக்கு
சுற்றுவட்ட வயல்
வரப்புக் காணிகளோடு
இனி
ஒண்றிலுமே
சம்பந்தப்படவிரும்பாத
அதன்
அசைவுகளைக்
கார்த்திக்கை காற்றும்
தொட விரும்பவில்லை
ஒவ்வொன்றிலும்
நம்பிக்கை இழந்து
ஒதுங்கியிருக்க
விதிக்க வைத்து விட்டுப்
போனவர்களைக்
குறித்துக்
குயில்கள் எழுப்பிய
அவலச் சத்தம்
இப்பவும்
நல்ல நினைவிருக்கு
ஒற்றுமையின்
பலம்
தாய் மண்ணின்
நிலமென்று
சூறாவளிகள் வருமுன்
காவோலை
தத்துவம் சொல்ல
குருத்தோலை கேட்கவில்லை
தந்திரமாக
யுத்தம் செய்து
கோட்டையைப் பிடித்தவர்கள்
ராஜதந்திரங்களில்
கோட்டைவிட்டதை
வேற வழியின்றி
இளம் வடலிகள்
வரலாறாக எழுதிப்பார்க்குது
பழைய
தனிப் பனைகளுக்கு
அடியும் நுனியும் வயதாக
அறளை பெயர்ந்து
ஒரு
விடியாத தேசத்தின்
வரலாற்றை
முழுமையாகச்
சொல்லவே முடியாமல்
இடையில் இறந்து போகலாம்.
..............................................................................
துப்பாக்கிகள் 
வரிந்துகட்டிக்கொண்டு
கொள்கைகளைப் 
போட்டுத் தள்ளிய 
நேரமெல்லாம் 
சொல்லித் தீரமுடியாததாய்
இருந்தது இழப்புக்கள்
வேண்டுதல்களைத்
தியாக வேள்வியாக்கி
தேசம் விடியும் நேரம்
பேசுவதுக்குக் காத்திருந்த
வார்த்தைகள்
நிறைவு காணாமல்
தடை செய்யப்பட்டன
பூவும் பிஞ்சும்
தெருவோரம் புயலோடு
போனது வரையிலான
இடை வெளிக் காலத்தில்
அடிமை இனத்தின்
இலட்சியத்துக்கான
வெற்றிடத்தை
இன்னுமொரு
வெற்றிடம் நிரப்பியது
இனியாவது
நாமே நமக்குள் நாமாகி
நெஞ்சுக்குள் நஞ்சு வைத்த
அது போல
மீண்டுமொருமுறை
நிகழ்ந்துவிடக்கூடாது.
............................................................................................................................
யுத்தம்
ஆரம்பித்து விட்டது

பதிவுகளில்

பல இடங்களில்
இடைமறிப்புத் தாக்குதல் 
கருத்துக்களில்
கிளைமோர் கண்ணிவெடிகள்
பாடல்களில்
பல்குழல் பீரங்கிகளின்
இடை விடாத முழக்கம்
கவிதைகளில்
நேரடியான அடிபாடு
கதைகளில்
களத்தில் சிதறிய
வழிமறிப்பு மிதிவெடிகள்
ஊடகங்களில்
ஊடறுப்புச் சமர்
இரவோடு இரவாக
புதிய படை அணிகளின்
விசேட தபளதிகளின்
வீராதிவீர விபரிப்புக்கள்
எண்ட வீராளி அம்மாளாச்சி
இந்த
முகநூலிலாவது
தேச விடுதலை
வெல்லப்படவேண்டும்
இளமைக்  கனவுகள் 

எல்லாம் 

துறந்து போனவர்களுக்காக 

புதைந்த இடத்தில்
இன்றொரு நாள் 

நினைவுகள்
எழுந்து நிற்கட்டும்  ....
................................................................................
தேசம் முழுவதும்
கார்த்திகைப் பூக்கள் 
அதை 
உள்ளங்கைக்குள்
பிடுங்கி வைக்க 
எத்தனையோ காரணங்கள்...
உண்மைகளை 
ஓரமாக மூட்டைகட்டி வைச்சு 

ஒதுங்கியிருந்து 

வேடிக்கை பார்ப்பதுக்கும் 
அதைவிடவும் 
பொறுமையைச் சுருக்கிவிட்டு
பேசாதிருப்பதுக்கும்
சாட்சியாக இருந்தது
நேற்றைய தொடக்க  நிகழ்வு..... 
எல்லைகளில் 
தனி நிலவு காத்திருக்க 
கண்ணுக்குள் அடங்காத
இதய பூமியின்  
வயல்கள்வெளியில் 
விடுதலைக்குப் 
போனவர்கள் போலவே  
சாய்ந்து  கிடக்கும் 
நெற் கதிர்கள் 
முழுவதும் 
வழிகளை அழிக்காமல் 
பூமியின்
ஒரு ஒதுக்கத்தில் 
இடம் பிடிக்கப் 
பறந்த பறவையின்  
இறகில்  ஓடிக்கொண்டு 
ஆகாயம் முழுவதும் 
வலியோடு அலைகிறது
முகவரி இழந்த 
இனம்..  
கரையெல்லாம் மோதிக் 
கடல் மீதும் 
தரையெல்லாம் மேவும் 
காற்றிலும் 
விதைகளைத்  
தூவிவிட்டுப் போன
மிகப்பெரிய தியாகத்தை 
அணையவிடாமல் 
உயிர்ப்பித்து விடுகிறது 
சின்னக் தீபவிளக்கு 
நினைவுகளைச்  
சின்னமாக வைத்து 
விடியும்  நேரத்துக்கு 
நட்சத்திரங்களை 
எண்ணிக்கொண்டு 
மயானம்  எல்லாத்திலும் 
வீரமாக இறக்கிய 
சவப்பெட்டிகள்
மக்கிப் போனாலும்
உருக்குலையாமல்
இப்பவுமிருக்கிறது
ஒரு வரலாறு.
.......................................................................
அந்த சம்பவங்களை 

உண்மையாகவே எழுதநினைத்தேன் 

அது 

ஒருவிதமாக என்னைப்பார்த்தது 
கோவிக்காதே 
சரிபிழை சொல்லவரவில்லை என்று
சமாதானம் செய்தேன்
அது
ஒரு பக்கமாகவே
சாய்ந்துகொண்டு நிண்டது
என் பக்கத்தில்
வீராதிவீரம் இல்லை
பட்டுவேண்டிக்கொண்ட அறிவும்
அனுபவமும் மட்டுமேயிருந்தது
தீர்க்கதரிசனம்
கதைக்கத் தொடங்கவே
தேசத்துரோகி என்றது
அதை இன்னும் ஆழமாக
நினைத்திருக்கலாம்
இன்னும் கேவலமாய்ப்பார்த்தது
நானும்
முடிந்தவரையில்
முக்கிக்கொண்டிருந்தேன்
சாட்சிகள் இருக்கா என்று
சர்வாதிகாரமாய்க் கேட்டது
நான்
சங்கதிகள் தெரியுமென்றேன்
எப்பவோ முடிந்த காரியம்
இப்ப எதுக்குக் கிண்டுறாய் என்றது
மண்ணாங்கட்டி
உனக்கு மரியாதை முக்கியம்
எனக்கு மண் முக்கியம் என்றேன்
அது
என் கைகளைப் பற்றிக்கொண்டது .

...........................................................................................................
அரசியல் 
உரிமைகளுக்காக 
எத்தனை 
ஆண்டுகளாய்ப் 
போராடினாயென்று
மட்டுமே
குறுக்கு விசாரணையில்
சட்டம் கேட்டது.,
குறிக்கோளை
கைவிடாதிருக்கும்
செயல் குறித்து
அவர்களுக்கு
வருத்தமில்லையென்று
தண்டனை
எழுதி வைத்தது.,
மன்றுகளில்
வழிகாட்டப்படக்கூடும்
வாய்ப்பினை
இழந்துவிட்டத்தை
உணரமுடிந்த போதும்
தீர்புக்கள்
வெட்கப்படவில்லை.,
மிகத்
தெளிவாய் அறிந்த
உண்மைகள்
இரும்புக் கம்பிகளோடு
மோதிக்கொண்டிருக்க.,
முகங்களை
நாலு சுவருக்குள்
எதிரொலித்துத் தேடும்
கைதிகள்
பேசுவதைக் கேட்கவிடாமல்
கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதையின்
காதுகளையும்
இறுக்கி மூடிவிட்டார்கள்.
.......................................................................................................................
நாங்கள்
இப்படிதான் சூனியத்தில்
அலைக்கழிக்கப்பட்டோம்
ஆடிக் கலவரத்திலும் 

ஆழிப்பேரலையிலும்
ஆனந்த புரத்திலும்
நந்திக் கழிமுகத்திலும்
வட்டு வாய்க்காலிலும்.....
எங்கள்
வலியை முதுகில்
எப்பவும் சுமந்தோம்
பெயர் மட்டும்
விடுதலை முகவரியில்
முன்னுக்கு முழக்கியது
பின்னுக்கு நாங்கள்.....
சுதந்திரம்
சொல்லி வருவதில்லை
சொல்லாமலே
போன கதைகளும்
சொன்னாலும்
நம்பத்த யாராய் இல்லை....
மனசாட்சி
மண்டியிட்டு
மன்னிப்புக்கோரும்
ஒரு நாள்
நாங்களும்
உண்மைக்கு
விசுவாசமாய்
உசிரோடிருந்ததுக்கு
வரலாறு சாட்சி சொல்லும்
அப்பவும் நாங்கள்
அப்பாவிகள்
போலதான் இருப்போம்.....
.............................................................................................................................
நீண்ட
இனமான உயிருள்ள
நியாமான
சுதந்திரத்தின்
தொடர் இரத்தக் கதை 
எதிர்பார்த்தேயிராத

ஒரு வாய்க்கால் திருப்பத்தில்

முடிந்தது......
அதன் துணிவு வரிகளை எழுதி வைத்த 
சாதாரண போராளிகளை 
முடிவு மட்டும்
தன்மான வரலாறு
அதீத கவுரவுத்துடன்
பதிந்து வைத்திருக்கிறது....

பயம்
அவர்களை விட்டுப்
பத்தடி தள்ளியே
எப்போது நின்றது போல
அப்போதும்
தலைமைத்துவ விசுவாசத்
தியாகம் அவர்களை
விட்டு இறுதி நிமிடம்
விலகவேயில்லை.....

தேசத்தின்
தேசியக் கதாநாயகருக்காக
எழுந்துபோன இளையவர்களின்
அர்ப்பணிப்பு வரலாறும்
இனவழிப்பு என்ற பெயரில்
அந்த தேசத்தின்
மூச்சுக் காற்றில்
இறுதி வரையில் இருக்கவேண்டும்.
..........................................................................................................................

துவக்குகளின் 
முதல் நுனியில் 
நாங்கள் 
ஆட்சி செய்த
பிரதேசத்தின்  
வரை படங்களுக்குள் 
நீ தனியாகவே  போகிறாய் ..
ஒரு காலத்தில்
நெஞ்சம் முழுவதும்
வீரம் என்று எழுந்த  
தாய் நாட்டுக்கு 
இப்ப நெஞ்சம்
முழுவதும் ஈரம் என்று
உன்னை 
வழியனுப்ப வேண்டியிருக்கு...
மறக்காமல் 
மடத்தடி
வைரவரையும் 
கேணியடிப்  
பிள்ளையாரையும்
ஆலமர
வீரமாகாளியையும்
மாவிட்டபுரக் கந்தனையும் 
கீரிமலை 
நகுலேஸ்வரரையும் 
கேட்டதாகச் சொல்லு.
எல்லாத்
தெய்வங்களும் 
பாதுகாப்பாகப் பார்த்திருந்த 
நேரம் தான் 
அன்றைய   இளையவர்கள் 
அரக்கர்களுடன் 
மோதி வெடித்து  அடிபட 
வெளிகிட்டுப்போனார்கள் 
இப்போதைக்கு 
நான் போக முடியாத  
தொலைவில் 
முடிந்தால் 
பனை வடலிகளுடன்
கதைத்துக்கொண்டாவது  
என் வாழ்க்கையும் 
சேர்த்தே வாழ்ந்து விடு..
நீ 
திரும்பி வரும் போது 
நான் தொலைந்து போனால் 
உன் விதி 
என் விதியை 
எதோ ஒரு கணத்தில் 
குறுக்கிட்ட 
நல்ல நிகழ்வுக்கு  நன்றி சொல்லு..
பிரபஞ்ச அளவில் 
கவலைப்பட 
இப்ப எனக்கு 
ஒன்றுமேயில்லை 
ஆனாலும் 
நீ  எடுத்து வைக்கும் 
ஒவ்வொரு அடியிலும் 
நான்  உனக்குள்ளிருப்பேன்!
................................................................

புரட்சிக் கவிதை
எழுதித்தள்ளி 

புதுமை உலகம் செய்ய

உசுப்பேத்திய கவிஞ்சர் 
ஐரோப்பாவுக்கு ஓடிப் போக
அதை வாசித்து போட்டு
இயக்கத்துக் போனவன்
ஒரே இரவில்
தடைசெய்யப்பட்டான்.....

அரசியல் அகதியா
புலம் பெயர்ந்து
விடுமுறையில் வந்தவன்
"சுவும்மிங் பூல்" தோண்டி
மாடிவீடு கட்ட ,
உள்ளுரில்
நிலம் உழுத போது
கண்ணி வெடியில
கால் இழந்தவன்
கடன் வேண்டி
"சைகிள் திருத்தும்கடை"
போடுறான்..

ஒழுங்காப் படிச்ச
உயர் வீட்டுப் பெண்
ஸ்கொலர்சிப்பில
அவுஸ்த்ரேலியா போக
உதறித் தள்ளிப் போட்டு
விடுதைலைக்குப் போன
சின்னப்பெண்
சரணடைந்து
கண்காணாமல் புணர்வாழ்ந்து
கற்போடு தப்பி வந்து
எதிர் காலத்தை
வெறித்துப் பார்க்கிறாள்........

காணாமல்போன மகனை
வருசக்கணக்கில
தேடிய அம்மாவுக்கு
அந்தப்
"காணாமல் போனவர் பட்டியலே"
காணாமல் போயிட்டுது
எண்டு பொறுப்பாச்
சொல்லுறான்
அதுக்குப்
பொறுப்பான அதிகாரி ...

விதையானவர் தினத்துக்கு
ரகசியமா விளக்கு ஏற்ற
ஒளிஞ்சு ஒளிஞ்சு
அப்பா வெளிக்கிட
அஜித்தோட
"கட் அவுடுக்கு" பால் ஊற்ற
வெளிப்படையா
வெளிக்கிடுகிறான் மகன்.....

........................................................................

வெள்ளை நிற

ஐரோப்பியக்

கடவுள்களிடம்

இருப்பைப் புதுப்பிக்கச் சென்ற
ஒரு நாள்,

மாணம் ,ரோசம்
இடைமறிக்க,
சூடு ,சொரணை
சுற்றிவளைத்து,
வாழ்விட உறுதியைப்
பறித்தெடுத்து,
கிழித்தெறிந்து,
முகத்தில காறித்துப்பியது

"விட்டு விட்டு
ஓடிவந்த
வீரத்தின் விளைநிலத்தில்
எங்கள் மாணத்தின்
பெயர் சொல்லி
விடுதலைக்கு
வித்தானவர்களின் ,
பெயரில் வெட்கமாயிருந்தது "

காற்று
காதைப்பிடித்து திருக,
மனசாட்சிக்கு
முன் தலையை
குனிந்து
வலி தாங்கமுடியாமல்
நான் நரிபோல ஊளையிட்டேன்!

...............................................................................
கைவிடத் தயார்
என்று தற்காலிகமாக
சொன்ன
இனத்தின்  அவமானம்
போலிக் கண்ணீரில்
நனைந்து முடிந்தது...
யுத்தத்  துயரிலிருந்து
மீள முடியாத 
மனிதர்களின் தனிமை 
இறுதியில் மீட்பென்று
முழுக்க முழுக்க
நம்பியே  உள்க் குவிகிறது....



எல்லைகளுக்குள்

வாழப் பழகிய 
உணர்ச்சிகரமான
கதாபாத்திரங்கள் 
புறக்கணிப்பை 
மோதல்களில்
மையம் கொண்டு 
நகர்த்திப் பார்க்கிறது... 

அவமதிப்புகளை
மௌனமாக ஏற்கிற
சீரழிவுக்கு
வெளிப்படையான
காரணமோ
தீர்வுகளோ இல்லாத 
வாக்குறுதிகளை 
பழையபடி
ஏற்றுக் கொள்ள 
                                                                 முடிவதில்லை.....

வழக்கம் போலதான் 
வரலாறு சொல்லும்,
"மீண்டும் மீண்டும் 
தோற்கடிக்கப்பட்டோம்".
என்பதில்  
நெஞ்சு வலிக்க
ஆரம்பிக்கிறது
அதனாலேயே 
அழிவுகளுக்குப்  பிறகும் 
அமைதி  
தேவையானதாக 
இருக்கிறது  !
................................................................
சூரியன் 
விரும்பிய விதத்தில் 
எழுவான்கரையில் 
எழும்புவதிலும் 
படுவான்கரையில் 
விழுவதிலும்.....
காற்று
அதுபாட்டுக்கு
தென்றலா தடவுவதிலும்
புயலாக அடிப்பதிலும் ,
கடல்
அது விரும்பிய நேரம்
ஆர்பரித்து
அலை அடிப்பதிலும்
அமைதியாய்
அடங்குவதிலும்,
ஒரு மொட்டு
அதன் பாட்டில்
மலராக மலர்வதிலும்
மயங்கி விழுவதிலும்,
ஒரு மரம்
தன்னிச்சையாய்
இலை உதிர்ப்பதிலும்
தளிர் விடுவதிலும் ,
ஒரு பறவை
விரும்பிய திசையில்
பாடிக்கொண்டு
பறப்பதிலும்
ஒரு மக்கள் கூட்டம்
இனமாக
மதிக்கப்படுவதிலும்,
ஒரு தேசத்தின்
எல்லைகள்
வரையறக்கப்படுவதிலும்,
ஒரு இனஎழுச்சி
புரட்சியின் பெயரால்
சுதந்திரப் போராட்டமா
வரலாற்றில்
எழுதப்படுவதிலும்
எப்பவுமே
பெருமைகொள்கிறது
நீங்கள்
விரும்பியே கொடுத்த
விலைமதிப்பற்ற
உயிர் !
............................................................................................
கூட்டிக் கழித்துக்
காலமிழுக்கும்
வருடங்களோடு வசிக்கும்
இந்த நாட்டில்
சமரசங்கள் ஏதுமற்ற 
பூரணத்துவத்தை
இது வரையில்
உணர்ந்ததில்லை.
பரிட்சயமில்லாத
அகதி மொழி கதைத்து
ஜீவிதத்துக்காக
இரவோடும் பகலோடும்


இசைந்தோடிக்கொண்டு

அடையாளம்
வழிதவறிய பாதைகளில்
விலத்தி நடப்பது
இயலாமையை வருடுகிறது.
என்னுள்ளே இறங்கிவிடும்
கோடை மரங்களும்
ஏரிப் பறவைகளும் ,
நட்பு மனிதர்களும்
சேர்ந்துவிடுகிற பொழுதுகளில்
அனிச்சையாய்
ரம்மியமாகிற மனக் கிளர்ச்சியில்
வட துருவச் சூரியனின்
நெருக்கமும்
நிச்சயம் வேறு வேறுதான்.
உறைபனிக்காலத்திலோ
அதிக நாட்கள்
என்னுடையதாகவே இருந்ததில்லை
என்றாலும்
ஒரு
இருத்தலுக்கான அலைச்சலும்
நிறைவற்ற ஏக்கங்களும் .
இவ்விரண்டு முரண்பாடும்
சிலநேரம்
சுவாரசியமாகத்தான் இருக்கிறது
..................................................................................................
முன்னும் பின்னும் 
ரகசியமாக அசைந்த 
நிழல்களை 
நேர்மையாக 
நேர்கோட்டில் விழுத்தாத 
காலமொன்று
முன்னொரு பொழுது இருந்தது

நாட்டியக்காரி மாதிரி
ஒவ்வொருவருக்காகவும்
கொஞ்ச நேரம்
வளைந்து கொடுத்த
வரலாற்றைப்
புகழ்ந்து பாடி
என்ன வரப்போகுது ?

குறைபாடுகளை
நினைவூட்டி
அதன் வீச்சை
வெற்றிகரமாக்கிய
முட்டாள்த்தனங்களை
நியாயப்படுத்த இனியென்ன தேவை ?

என்ன எழுத
வேண்டுமென்று
விரும்புகின்றமோ
அதைப் பேசமறுத்துப்
பின்வாங்கும் மவுனதில்
உண்மையிருக்கு

நெருக்கடிகளின்
முழுக் கோலங்களும்
தெரிந்திருந்தும்
முகத்துக்கு முன்
நெருங்க முடியாது
தெருப்புழுதியைக் கடந்த
கசப்புப் பாதை

இரண்டு
முட்களுமில்லாத கடிகாரம்
மாதிரியாகிவிட்ட
அது இனி
ஓடினால் என்ன?
ஓடாவிட்டால் என்ன?
.............................................................................................................................................
போய் இறங்கி
மூச்சு விட்டு
நீட்டி நிமிர்ந்து
ஓய்வெடுக்காமல்  
அடுத்த நாளே
நான் பிறந்த நகரம் 
நீ அனுப்பிய படங்கள்
எனக்குப் புரியாத மொழியில்
என்னுடன் பேசுகின்றன....

தெற்கைச் சேர்த்தும் 
பிரிச்சும் வைச்ச  
ரெயில் நிலையம்
ஓல்சோ சென்றல் 
ஸ்டேசனை விட 
மிக அழகாகி 
அதில் விமானத் தாக்குதலில்
சிதறியவர்களின்
இரத்த துளிகள் 
வெளியே தெரிவதுக்கு
வாய்ப்பில்லை...

குண்டுகள் விழுந்த 
குழிகளை நிரப்பி 
நளினமாக வழுக்கும் 
நகர வீதிகளில் 
முகப் பூச்சு 
விளம்பரங்களில் 
சுமாரான பெண்களே  
அழகாக சிரிக்க
அதன் கீழே
நாய் மூத்திரம் பெய்யுது..  

வாடைக்காற்று
உப்புக் காற்றை  
ஊதித்தள்ளிய   
ராணி தியட்டரில் 
வெற்றிகரமா வாரங்களை 
விழுங்கும் படத்தின்  
விளம்பரத்தில் 
இளைய தளபதி  
பார்க்கும் பார்வையிலேயே 
நாலு பேருக்கு  மண்டை சிதறுது ...

உந்துருளியை  
மிதிக்க ஒரு கணம் 
தவறியவர்களை
முந்தி  மோதி 
இயந்திர உந்துருளி
உருட்டும்போல
வீதிகளில்
இரைச்சலான  அவசரம்..

ஒரு 
தலைமுறையையே 
திண்டு ஏப்பம் விட்ட 
சண்டைகளின் 
சாட்சிக் கடதாசிபோல
யாருமற்ற வீடுகளில்
யாருக்காகவோ  
தப்பிய சுவர்களில் 
மட்டும் 
இப்பவும் ஆங்காங்கே 
குண்டுச் சன்னங்களின் 
கையெழுத்து...

வாய் திறக்கவே 
விடாமல் 
முரட்டுக் கைகளால்
முகவளையை நெரித்த  
முப்பது வருட
புழுதி ஆரவாரம் 
மவுனமாக  அடங்கிப்போக 
பண்ணைப் பாலத்துக்கு 
சமாந்தரமாகத்  தான் 
இப்பவும் 
சாயங்கால சூரியன்
கடல்க்கோட்டையில்  மறையுது ..

செர்ரிப் பழங்கள் 
குளிர் வரு காலத்தில் 
அவத்திபடுவது போல 
இங்கே தொலைந்து போன 
என் ஆத்மாவை 
நீ 
அங்கிருந்து 
தேடிக்கண்டெடுத்து 
உயிர்ப்பித்துக்
கொண்டிருக்கிறாய்!
...................................................................................................
கொண்டாட்ட
உணர்ச்சி நகரத்தில்
திருப்பி வைக்கப்பட்டுள்ள
வழியெல்லாம்
விரும்பும் திசையில்
இயங்க விடாமல்
நசுக்கும் தடைகளை
எப்படி அகற்றிவிடலாமென்று
ஒரு மூலையில்
ஒடுங்கி நின்று
ஜோசித்த்துக்கொண்டிருந்தேன்
நூறு நூறு வருடங்கள்


வரலாறு கடந்த வீதியை
சிவப்பு வெள்ளை
சுதந்திரக் கொடிகளால்
நிறைத்து நடந்த மக்கள்
நேற்று
இன்னொருமுறை
விடுதலையின் விலையை
நினைத்துக்கொண்டார்கள்.

எதற்காக
இவ்வளவு விபரிப்புக்களென்று
உங்களுக்குத் தோன்றலாம்
என்
பங்களிப்புக்கள் எதுவுமில்லாத
அர்த்தமுள்ள வார்த்தைகளில்
சொல்லவேண்டுமாயின்
நேற்றெனக்கு
எப்பவும் போல
ஒரு மிகச் சாதாரணமான
வெய்யில் நாள்....
..................................................................................................................................................
குச்சு வீதிகளில்
சராத்தை உயர்திக்
கட்டிக் கொண்டு
லோட் பண்ண மிஸ் பண்ணிய
கறல் பிடித்த
வெடி ஆயுதங்கள்
வாவென்று அழைத்த போது
எல்லாரும் தான்
ஒரு முடிவோடு
எழுந்து போனார்கள்
பிறகு
சந்தேகங்களில்
தடுப்பு முகாம்கள்
சிங்கள எதிரி மட்டுமே
வடிவமைத்து
வைத்திருக்கவில்லை
டிக்கரில் விரல் அமத்தி
நாங்களும்
உருவாக்கி வைத்தோம்
எங்களின்
பிரிவினைகள்
பொது எதிரியைப்
பலமாக்கியத்தை
சேம்பரில் ரவுன்ஸ் ஏற்றி
துரோகிகளின்
களையெடுப்பென்று
நியாயப்படுத்தி
பெருமைப்பட்டுக்கொண்டோம்
பொழுது
விடிவதுக்குள்
கண்களைக் கட்டி
கருத்துமுரண்பட்ட
கொள்கைப்பிடிப்புக்களால்
துவக்குகளின்
சூட்டிங் நுனி பரல்கள்
சிவப்பாகச் சூடேறும் வரை
மாறி மாறிப்
போட்டுத்தள்ளினோம்
உண்மையை
ஒத்துக்கொள்ளுங்கள்
தர்மத்தை வென்ற சூது
வெள்ளைக் கொடியாகி
கில்லிங் ரேஞ்ச் வடிவில்
உங்களுக்கும்
ஒருநாள் வந்தது
முழுமையாக
எழுதி முடிக்கப்படாத
வரலாற்றில்
முப்பதினாயிரம்
விலை மதிப்பற்ற
தியாகங்கள்
வீணாப்போனதுக்கு
ஆட்டோமாடிக் ரைபிள்களை
நம்பிய நாங்கள்தான் காரணம்
வேறுயாருமல்ல.

...........................................................
யுத்த காலத்தில் வாழ்ந்த எல்லாரிடமும் வலிகள் சுமந்த உண்மைக் கதைகள் இருக்கும் , அதை சொல்ல முடியாமல் பலர் தவிப்பார்கள். இனிச்சொல்லி என்னதான் வரப்போகுது என்று இருந்தும் விடுவார்கள். காலம் தந்த படிப்பினைகள் நிறையவே இருக்கும் ஒரு யுத்த காலத்தில் எல்லாவிதமான கருத்து மோதல்கள் இருந்தது உண்மை. அவற்றைத் தூசி தட்டி சரி பிழை பார்க்க இங்கே நான் வரவில்லை, நிறையக் கவிதைகள் அந்தத் துன்பியல் நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதி இருக்கிறேன். அவற்றில் சிலது இந்த முதல் தொகுப்பாக  உலாவ விடுகிறேன், உயிர் நீத்த எல்லா போராளிகளுக்கும் தலைதாழ்த்திய வணக்கங்கள்