Friday, 26 January 2018

ஸ்டோக்ஹோலம்....001.ராஜஸ்தானத்து ராஜபுத்திர சரபோஜி மன்னர்களின் அரண்மனை போலிருக்கும் இந்த இடம் ஒரு ரெயில்வேஸ்டேஷன். இந்த இடம் இருப்பது இந்திய உபகண்டத்தில் இல்லை. இருப்பதுவோ ஆர்டிக் சேர்க்கிள் என்ற வடதுருவத்தில். நிறைய வருடங்கள் எதுவும் ஜோசிக்கத் தேவையில்லாமல் கடந்து பயணித்த இந்த பிரயாண மையப்புள்ளி . சுவீடனின் தலைநகரத்தில் உள்ள ஸ்டோக்ஹோலம் மத்திய சென்ட்ரல் ரெயில்நிலையம்.
                                                                    அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையம் போலவே ஈ அடிச்சான் கொப்பி போல அதே அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. .விசாலமானது, சுவர்கள் முழுவதும் வாட்டர் கலர் ஓவியங்கள் அலங்கரிப்பு, உப்பரிகைகளில் வண்ணமயமான குமிழிகளில் தொங்கு விளக்குகள், என்று தமிழ் சினிமாவில் பெண்கள் குரூப் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சியில் பின்னணியில் வரும் காட்சிபோலிருக்கும் இடம்
                                                            சுவீடிஷ் தொலைதூர நகரங்களையும் , ஐரோப்பிய நாடுகளையும் நோக்கிப் புறப்படும், அங்கிருந்து வந்து இடைத்தங்கி ஓய்வெடுக்கும் பயணிகளை வேடிக்கைபார்ப்பது எப்பவுமே அதிசயங்கள் குறையாத ஆச்சரியம் கலந்த மனநிலைகளை உருவாக்கி விடுகிறது. இளம் காதலர்கள் இந்த ரெயில் நிலையத்தில் பயணத்துக்காய்ப் பிரியும் போது இழுத்து வைத்து இடைவெளியில்லாமல் முகம் செருகி முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அது இந்த இடத்துக்கு இன்னுமொருபடி அதிகமாக ரொமான்டிக் கொடுக்க. வயதானவர்கள் கைகளை இறுக்கிப்பிடிக்கிறார்கள். அது மனதைப் பிசையும் கனதியாகவிருக்கு
                                                      உலகத்தின் பல மொழிபேசும் மக்களும் , பல நிற மக்களும் பகல் எல்லாம் நிரம்பி வழியும் இந்த இடம் காசகசகச என்று தி நகர் ரெங்கநாதன் தெருபோலதான் இருக்கும். ஆனால் எப்போதும் எல்லாத்திலும் முக்கியமாக ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் இல்லாமல் வழிகளில் விட்டுக்கொடுத்து ஒரு ஒழுங்குமுறை இருக்க நேரத்தை துரத்தும் அவசரங்கள் பரபரப்பாக இந்த இடத்தை வைத்திருக்கு
                                                          வழியனுப்புபவர்களும், வரவேட்பவர்களுமாக நகர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் சந்திப்பு மையமும் இதுதான்.அதனால்தானோ தெரியவில்லை இடங்களை மாற்றி மாற்றிப் பிரயாணிக்கும் மனிதர்களின் சுழட்ச்சியை குறியீடாகக் காட்ட சுழலும் பூமிப்பந்தை சிட்பமாகச் செய்து வைத்துள்ளார்கள் போல இருக்கு .
                                                      இப்போது வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தில் இன்னொருவிதமான அனுபவம் தருகிறது இந்த இடம். காலமும் நேரமும் மாறிக்கொண்டிருக்கும்போது நம்மைச்சுற்றி உள்ள உலகத்தின் தோற்றங்களும் அவைகளுக்கு உள்ளே மறைமுகமாகப் பதிவாகி இருக்கும் செய்திகளும் நிறையவே கற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஆத்மாவைத் தள்ளிவிடுகிறது.
                                                  ஒரு நாடோடியாக நாடுகள் சுற்றிச் சுற்றிப் பார்ப்பத்துக்கு எனக்கு எப்பவுமே விருப்பம். அதில எப்பவுமே நிறைய தகவல்கள் எழுத்துவதுக்கு சேர்ந்துகொள்ளும் . ஒரு புத்தகத்தை இருந்த இடத்தில இருந்து படித்து பெற்றுக்கொள்ளும் அறிவைவிட நேரடியாகவே வாழ்க்கைப் பாதையில் பயணித்து திருப்பங்களில் அடிவேண்டும் போது கிடைக்கும் அனுபவத்தில் நிறையவே திரில் இருக்கு .
                                                     எனக்கென்று ஏற்கனவே எழுதிவைத்த பாதைகளை அவ்வளவு இலகுவாக மாற்றி நடக்க முடியாது போலிருக்கு. அதிலேதான் எதிர்பாராத சுவாரஸ்யங்களை, மனிதர்களையும், நட்பையும் , அன்பையும், உதவும் குணத்தையும் ஆழமாக உணரும் நேரத்தில் உலகத்தை கொஞ்சம் கருணையோடு நின்று பார்க்கும் வாஞ்சையுள்ள வாழ்க்கை ஒன்றையும் கற்றுக்கொள்கிறேன்....
பொன் எழுத்துக்களால் ஒரு நாளுமே என் வரலாறு எழுதப்படப்போவதில்லை , அதுதான் கொடுப்பினை இல்லாமல் கிடப்பில கிடக்குது என்று நினைச்சாலும் ஒரு கரிக்கட்டைப் பெஞ்சிலால் தன்னும் என் வரலாறு எழுதப்படாமலிருக்கும் இன்றைய நாட்களில், ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்துடன் நேரடியாக அதுவும் முதன் முதலில் இணையும் சந்தர்ப்பம் ஒன்று அண்மையில் இப்போது ஆண்டி மடம் கட்டி அண்டிப் பிழைத்துக்கொண்டிருக்கும் ஸ்டோக்ஹோலம் நகரத்தில் சென்ற பத்தாம் திகதி நடந்தது. 

                                                             பன்னிரண்டு வருடங்கள் காலமெடுத்து , மில்லியன் குறோணர்கள் செலவு செய்து, ஸ்டோக்ஹோலாம் நகரத்தின் அடி மடியைக் குடைந்து இரண்டு புதிய ரெயில் நிலையங்கள் உருவாக்கி உள்ளார்கள், அந்த நிலையங்களைக் புண்ணியகாலத்தில் கடக்கும் முதல் முதல் ரெயில் வெள்ளோட்டத்தில் அந்த ரெயிலில் பிரயாணிக்கும் வாய்ப்பு வீராளி அம்மாளாச்சி கருணையால் கிடைத்தது. இந்த நகரத்தை , இந்த சுவீடன் நாட்டை விட்டுப் போனாலும் இன்னொரு முறை வரும்போது இந்த நிகழ்வு நிச்சயமாக ஒரு முக்கிய சமபவமாவே இருக்கும். 

                                                                    இந்த இரண்டு ரெயில் நிலையமும் அதல பாதாளத்தில் இருக்கு. முன்னர் இயங்கிய பலதளங்களில் பிரயாணிகளை உள்வாங்கிய இணைப்பு ரெயில்நிலையத்தை மூடிப்போட்டு ரெண்டு ரெயில் நிலையத்தில் சுருக்கமாக அல்லாடி அலைக்கழியும் உபரி நேரத்தை சுருக்கியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.. எலிவேட்டர் என்ற ஏற்றி இறக்கும் மின்சாரப்படிகளில்தான் உள்ளிறங்கி வெளியேற வேண்டும். ஐரோப்பாவில் இன்றய நடப்பு நிலவரத்தில் மிகவும் முன்னோடியான அல்றாமோடேன் டெக்னோலஜியில் உருவாகியுள்ள புதுமையான ரெயில் நிலையம் இந்த இரண்டும் என்கிறார்கள் .

                                                                 எப்படியோ மூன்று தட்டுக்கள் கீழே இறங்கி இறங்கிப் போகவே கல்லறை வாசம் வருவது போலிருக்கு. அவ்வளவு தூரம் கீழ்நோக்கி பிரயாணிக்க வேண்டியிருக்கு. இது எப்படி நேரத்தை சுருக்குது என்று விளங்கவில்லை. ஆனால் கருங்கல்லைக் குடைந்து அந்த பாறை முனைகளை அழகாக சலவைக் கற்களில் உருவாகும் நளினங்களுடன் வடிவமைத்திருப்பது அதிகப்படியான பய உணர்வுகளைத் துரதியடித்து ஆக்ரா தாஜுமகாலை நினைக்கவைத்து முன்னுக்கோ பிண்ணுக்கோ நடக்கும் இளம்பெண்ணில் காதலை வரவழைத்துவிடுகிறது.

                                                                கடைசி இறக்கத்தில் உள்ள ரெண்டு ரெயில் நிலையமும் உள்ளகச் சுவர்களில் உண்மையில் மாடர்ன் ஆர்ட் மியூசியம் போலவே இருக்கு. அவ்வளவு ஆர்ட் ஓவியங்கள்,,சிட்பங்களை கொண்டுவந்து சரியான இடங்களில் பிரத்தியேகமான வெளிச்சம் விழுத்தி வைத்திருக்கிறார்கள். ஓவியங்களும் சிட்பங்களுக்கும் ஒளியும் நிழலும் எப்படி முக்கியமென்று இங்கேதான் அவதானிக்க முடிந்தது,

                                                                     தலைக்கு மேலே கிரிஸ்டல் சில்லுகள் மிதமான வெளிச்சத்தில் நட்சத்திரங்களைப் போல மின்னிப் பின்னந்தி மழை பொழிய ,பாதங்களோ சில இடங்களைக் கடக்கும் போது காலடி ஓசைகளைச் சுரங்கச் சுவர்களில் மோதி எதிரொலி எழுப்புவது போல அமைக்கப்பட்டுள்ள கலையம்சம் உண்மையில் அந்தப் படைப்பாளிகளின் கட்பனை வீச்சைச் சிலாகித்துப் பிரமிக்க வைக்குது 

                                                                                 முன்னமெல்லாம் நேரமுள்ள காலமொன்றில் மனிதர்கள் கலையைத் தேடி ஆர்ட் கலரிகளுக்குப் போவார்கள்.இப்பெல்லாம் அப்படியே இல்லையே அதனால அவசர மனிதர்கள் நடமாடும் இடங்களைத் தேடிக் கலைகள் வந்துவிட்டன போலிருந்தது. கலை அன்றாட வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம் என்றும் அதை ஒரு பிரயாணத்துடன் இணைப்பது அலாதியான நினைவலைகளை மீட்டும் என்பதும் போலிருக்கு சும்மா சுற்றிப்பார்க்கவே, தெரிந்தது. 

                                                                                              சுவீடனில் முக்கியமான கலைப்படைப்பாளிகளின் படைப்புகள் நிறையவே உள்ள இந்த ரெண்டு ரெயில் நிலையமும் தேடல் உள்ளவர்களின் வாழ்வின் இன்னொரு பக்கத்தை ரம்மியமான ஒரு ரயில் பயணத்தில் இயன்றளவு வடிவமைத்து விடுகின்றன. ஸ்டோக்ஹோலம் வரும் யாருமே இந்த இரண்டு ரெயில்நிலையங்களுக்கு உள்ளே நுழைந்து கொஞ்சம் மூச்சு வாங்கி உலாத்திப்போட்டு வெளியேறும் போது நிச்சயமாக கொஞ்சம் பூமியின் அடியாளாத்தின் வாசனையையும், அதிகமாகக் கலையுணர்வின் மஹோன்னதமான உணர்வுகளை நினைவாகவும் மனதோடு எடுத்துக்கொண்டுதான் வருவீர்கள்!


" பெண்டில்டோர்க் " இதுதான் சுவீடிஷ் மொழியில் இந்த வகை ரெயிலின் பெயர். அதன் அர்த்தம் சுவர் மணிக்கூட்டில் பெண்டுலம் என்று ஒன்று தொங்கிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நிக்காமல் ஆடிக்கொண்டு இருக்குமே அதேபோல இந்த ரெயிலும் ஸ்டாக்கோலம் மைய நகரத்தை ஊடறுத்து இணைத்துக்கொண்டு நகரத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் புறநகரங்களின் விளிம்புகளை இணைத்துக் குறுக்கமறுக்க ஓடிக்கொண்டிருக்கும்.
                                                                    பெண்டில்டோர்க் என்று பொதுவான பெயர் இருந்தாலும் , அவற்றுக்குத் தனித்தனியான பெயர்களும் இருக்கு, ஆனால் சுவீடனில் ரெயில்களுக்கு பெயர் வைப்பதில் ஒரு புதுமை செய்துள்ளார்கள்.உடம்பைச் சல்லிமுட்டி போலக் குலுக்கி உடம்பில எங்கெங்கே எலும்பு மூட்டுக்கள் பொருந்துது என்று எப்பவுமே நினைவுபடுத்தும் இலங்கை ரெயில்கள் போல இல்லை இவைகள். மெர்சிடஸ்பென்ஸ்க் காரில் பயணம் செய்வது போன்ற குஷியான இந்தவகை ரெயில்கள் பதின்நாலு நேரம் காலம் இல்லாமல் இரவு பகல் என்று கடமை உணர்ச்சியோடு ஓடுது,
                                                                         இலங்கையில் ஓடும் ரெயில்களுக்கு யாழ்தேவி, உத்தரதேவி, உத்தரட்டமெனிக்கே என்று தமிழிலும் சிங்களத்திலும் பெயர்கள் இருக்கு. அந்தப் பெயர்களுக்கு காலம் இடம் பெயர் என்ற காரணகாரிய இடுகுறி விளக்கம் இருக்கு. ஏனென்றால் அதை விவரண நோக்கத்தில் வைத்தவர்கள் வளர்ந்த மனிதர்கள் . சுவீடனில் ஸ்டாக்கோலமில் ஓடும் " பெண்டில்டோர்க் " ரெயில்களுக்கு பெயர் வைத்துள்ளவர்கள் குழந்தைத்தனம் மறையாத நேர்சரி பாடசாலைப் பிள்ளைகள். பெயர்களும் விரல் சூப்பும் குழந்தைத்தனமாகவேயிருக்கு !
                                                                        அவற்றுக்கு விளக்கம் என்று ஒண்டும் இல்லை. சின்னக் குழந்தைகள் அந்த ரெயில், நாட்டியக்காரயின் சலங்கைபோலக் குலுங்கி , நாக்கிளிப்புழு போல அசைந்து, தோகைமயில் போல ஆடிப் , பாம்புபோல நகருவதை பார்க்கும் போது அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைப் பெயராக வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை ரெயிலில் எழுதி எந்தப் பாடசாலைப் பிள்ளைகள் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்றும் விபரம் அதில் சேர்த்து இருக்கிறார்கள்.
                                                                            பெண்டுலம் போல வாழ்க்கையோடு அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அதைக் கவனிப்பதில்லை. எனக்கு அதுதான் மிகவும் பிடித்த ரெயில்ப் பிரயாண நேரமில்லா சுவாரசியம் !
                                                                                 படிப்பறிவை ஒருபக்கமா ஓரங்கட்டி வைச்சுப்போட்டு ஜோசித்துப்பார்த்தா அந்தப் பெயர்கள் அர்த்தமில்லாத கட்பித்தங்களிலும் ஏதோவொன்றை நெஞ்சுக்கு நெருக்கமாக்கிவிடுவது உண்மையில் ரசிக்கும்படியாகவே இருக்கு. இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் குழந்தைகள் பெயர் வைக்கும்படியான ஒரு நிலைமை இருக்குமென்றால் இந்த உலகம் எவ்வளவு முழுமையாக ரசிக்கும்படியாக இருக்கும் ,,இல்லையா,, சொல்லுங்க பார்ப்பம் ?