Monday 31 August 2015

சனியனைப் பிடிச்சு பனியனுக்க விட்ட ..

நோர்வே உலகத்தில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று. பல நாடுகளில் கிடைக்காத நல்ல வாழ்க்கைதரம் இங்கே இருக்கு. அதன் பெறுமதிகள் வெளியே தெரிவதை விடவும் உள்ளுக்கு அதிகம். அந்தப் பணக்காரத்தனத்துக்கு கொடுக்கும் விலை அதுவும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மிக அதிகம். ஆனால் இவளவு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் மக்கள் பல அற்பமான விசியங்கள் செய்வார்கள். 

                                      
அதில ஒன்று லோப்பமார்கெட் என்ற பழைய சாமான்கள் விற்கும் தற்காலிக சந்தைகளில் பெறுமதியான காசுக்கு அதைப்போல பலமடங்கு பெறுமதியான தரமுள்ள பொருட்களை அவர்கள் வேண்டிக்குவிப்பது, சென்ற தலைமுறையில் காலம் நின்று போன இறந்தகாலப் பழைய பொருட்களில் அவர்கள் தங்களின் நிகழ் காலத்தை அடையாளப்படுத்துகிறார்கள்.  

                                       
நேற்று நான் வசிக்கும் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்க்கா என்ற தேவாலயத்தில் அப்படி ஒரு விற்பனை நடந்தது. இளைய தலைமுறைக்கு சரிக்கு சமன் வயதானவர்களும் வந்திருந்தார்கள்.சில வயதான தம்பதிகள் தங்களின் வயதான கார்களில் எப்படியோ கேள்விப்பட்டு வெகு தூரத்தில் உள்ள ஒஸ்லோ நகரத்தில் இருந்தே ஒரு ஈ காக்கை கூட வழி கண்டு பிடித்து வந்து சேரக்கடினமான பாதைகளில் பயணித்து இந்தப் பேட்டைக்கு வந்திருந்தார்கள்.

                                              அவர்களை காலத்தின் வழித்தடத்தில் அப்படி இயக்கம் ஒரே ஒரு ஆர்வம். தங்கள் காலத்தில் தவற விட்ட ஏதோ ஒன்று இன்றைய காலத்தில் கிடைக்கலாம் என்பதாக இருக்கலாம் போல இருந்தது. பழைய மரத் தளபாட மேசை கதிரைகள், பழைய புத்தகங்கள், பழைய அலங்காரப் பொருட்கள்,ஓவியங்கள், தட்டு முட்டு சமையல் உபகரணங்கள், என்று அவர்கள் வேண்டிக்கொண்டு போய் பாவிக்காமல் காட்சிக்கு வைத்து அழகுபடுத்துவார்கள். 
                                   
                                                  பல வருடமா அப்படி அந்த விற்பனை தேவாலயத்தில் நடக்கும். முடிந்தளவு நேரம் ஒதுக்கி கொஞ்சநேரமாவது பார்க்கப் போவது. அதில நான் எதுவுமே, எப்பவுமே சில்லறைக் காசுக்கும் வேண்டியதில்லை. ஆனால் நான் போறதின் முக்கிய காரணம் சில நண்பர்களை சந்திக்க முடியும் என்பதுக்கும், அதை விட முக்கியமா மனிதர்களை விடுப்புப் பார்க்க. பழைய பொருட்களை வேண்டவரும் பணக்கார மனிதர்களை விடுப்புப் பார்ப்பது ஒரு வித சைக்கொலோயி.

                                  
பழையசாமானகள் தானே ,கொஞ்சம் மலிவு விலை தானே என்று வேண்டுடுவதில் ஒருவித சந்தோசம் கிடைப்பதால் வேண்டிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்களை " சொப்பிங்ஹோலிக்ஸ் " என்று சொல்லுறார்கள். அந்தக் குளறுபடி ஒரு மனநலம் சம்பந்தப்பட்ட வியாதி. வாழ்கையில் சந்தோசத்தை வேறு பல விசியன்களில் தொலைத்தவர்கள் வேண்டுவதில் சந்தோசத்தை நிவர்திசெய்கிறார்கள். ஏன் வேண்டுறம் என்று தெரியாமலே வேண்டி வேண்டிக் குவிப்பார்கள். 

                                   ஒரு கட்டத்தில் வீடு நிறையும் , அதைக் அகற்ற விடமாட்டார்கள். ஒரு சின்னப் பொருளை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே போடுவதே ஏறக்குறைய அவர்களின் உடலில் உள்ள ஒரு அங்கத்தை பிடிங்கி எறிவது போல இருக்கும் அவர்களுக்கு. இது மிகவும் முன்னேறிய நோர்வேயில் சீவி முடிச்ச கொண்டையில் ஈரும் பேணும் போல ஒரு மறைமுகமான சமூகத் தலைஇடி.

                                லோப்பமார்கெட் என்ற இந்த சந்தைக்கு எப்படிப் பொருட்கள் வருக்குது என்று ஜோசித்துப் பார்த்தால்,அதுவும் யாரோ ஒருவர் வேண்டிக்குவித்து இறந்து போக அந்த வீட்டை துப்பரவு செய்யும் புதியவர்கள் இந்தப் பொருட்களை சேர்ச் போன்ற உதவும் நிறுவனங்களுக்கு அப்படியே அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.மிகவும்விலைமதிப்பற்ற கலைச் சேகரிப்புப் பொருட்களும் அதில இருக்கலாம்.

                                           சில நேரம் வயதான வீட்டு உரிமையாளர் இறக்க, அவர்களின் உறவினர் வீட்டை அப்படியே துப்பவரவு செய்து எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போக சில நிறுவனத்திடம் ஒப்பந்தம் போலக் கொடுப்பார்கள் .அவர்களும் பெறுமதியான பொருட்களை எடுத்து விற்பார்கள்.ஒரு வட்டம் போல வேண்டுறதும் அது கை மாறுறதும் வருஷங்களைச் சேர்த்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கு

                                           ஸ்கண்டிநேவிய கலாசாரம் அவர்கள் பழமையை தூசிதட்டி இனிமை காண்பது. அதைப் பெருமையாக நினைப்பார்கள். பலர் இப்படி லோப்பமார்கெட் என்ற சந்தைக்கு வந்து காலம் கடந்து போன பழைய பொருட்களை, " கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும் " என்று பேரம் பேசிக்கொண்டு நிக்காமல் கேட்ட விலைகொடுத்து வேண்டி நினைவுச்சின்னங்கள் போல வீடுகளை அழகுபடுத்துவார்கள். அவர்களுக்கு விலை முக்கியமில்லை பழைய பொருட்களின் கலைத்துவ ரசனை தரும் கிளர்ச்சி முக்கியம்.

                                         நோர்வே, சுவிடன் ,டென்மார்க் நாட்டவர்களில் வீடுகள் எப்பவுமே உள்ளே வரவேற்ப்பு அறை முழுவதும் அப்படிப் பொருட்களால அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அவர்கள் வீட்டுக்கு போனால் முதலில் தங்களிடம் உள்ள மிகப் பழமையான பொருட்களை காட்டுவார்கள்.இதில முக்கியமா எல்லா டென்மார்க் நாட்டவர் வீடுகளுமே ஒரு முசியம் போன்ற அருங்காட்சியகம் போல கலைப் பொருட்கள் நிரம்பி இருக்கும்.

                                                 நோர்வேயில் அதி நவீன இலற்றோனிக், இலட்றிக் சாதனங்கள் மொடல் மாறி மாறி வர அதைக் கவர்சியான விளம்பரங்கள் போட்டு மயக்குவார்கள். அதில விழுந்தவர்கள் அதுகளை நவீன நகர அங்காடிகளில் இருந்து கணக்குவழக்கு பார்க்காமல் வேண்டுவார்கள்.சில நேரம் கடனுக்கே வேண்டுவார்கள். அவை கொஞ்சம் பழசாக மறுசுழற்சிக் கொண்டைனரில் தூக்கி எறிஞ்சு போட்டு புதுசு வேண்டுவார்கள்.

                                          சுவிடனிலையும் இப்படிதான். இந்த மறு சுழற்சிக் கொண்டைனர்களில் நன்றாக இயங்கக்கூடிய பல பொருட்கள் எப்பவுமே கிடைக்கும். அந்த நாட்டுக்குள் முதல் முதல் அரசியல் அகதியாக உள்ளிட்டு ஒரு தொலைதூர அத்துவான அகதி முகாமில் இருந்தபோது ஒருகாட்டுக்குள்ள இருந்த ரீசைகிளிங் குப்பைதொட்டிக் கொண்டைனரில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து என்னைப்போலவே அகதியாக இருந்த ஞானசூணியங்கள் விற்று கைச்செலவுக்கு காசு சம்பாரித்து இருக்கிறேன்.

                                    பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவான இந்த உலகத்தின் இயற்கைக் கனியவளம் என்ற நச்சுரல் ரிசோர்சஸ்சை அதிகம் எப்படி முன்னேறிய நாடுகளில் வசிப்பவர்களே உபயோகித்து சப்பித்துப்பி நாசம் ஆக்குகிறார்கள் என்ற உண்மை குப்பைத்தொட்டி கொண்டைனருக்குள் இறங்கித் தேடிய போதுதான் ஒரு ஞானஉதயம் போல எனக்குக் கிடைத்தது

                                    " ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துறாளாம் " போலப் போய்க்கொண்டிருக்கிறது உலகத்தில பழைய பொருட்களின் பெறுமதி மட்டும் முன்னோக்கிப் போகப் போக பெறுமதி அதிகமாகிக் கொண்டேபோகும். கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தால், சும்மா " ரோட்டால போன சனியனைப் பிடிச்சு பனியனுக்க விட்ட மாதிரி " இன்றைக்கு நாங்கள் வேண்டிக்குவிக்கும் அதி நவீன வேகாமாக இயங்கும் இலற்றோனிக் தொடர்பு சாதனப் பொருட்களை

                                   " ஜிகா பைட்ஸ் ப்ரோட்பாண்ட் இல் வேகமாகி இயங்கி உங்களின் பொண்ணான நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை "

                                 என்று தான் விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் அவைகள் தான் ஏதோ ஒரு வடிவில் எங்களின் காசை உருவுறது தெரியாமல் அண்டவியர் வரை உருவி , பிரயோசனமான நேரத்தையும் திண்டு தொலைத்து ஏப்பம் விடுகுது .
.
............................. என்ன சீவியமடா இது !..........
..


.31.08.15