Saturday 24 June 2017

சலாமத்

கோடை காலம். தொலைதூர பிளேன் நகரம் கொஞ்சம் வெய்யிலைக் குளிரோடு எடுத்துவிடும் மிதமான வெப்பப்  பருவகாலம் .ஜன்னலில் ஊசி இலைக் காடுகளில் இருந்து மரங்கள் முன்கோடைக்கு அசைவது ராணுவம் முன்னேறுவது போலிருந்தது.  


ஒரு வெள்ளிகிழமை என்று நினைக்கிறன்,,சரியாக
சொல்லமுடியவில்லை, ஆனால் சலாமத்  வந்த அன்று வாரக்கணக்குக் கொடுப்பனவு உதவிப் படியளப்பு காசு  கிடைத்த   நினைவு இருக்கு.  அதனால அன்று வெள்ளிகிழமையாதான் இருக்கவேண்டும் .


சலாமத் முதல் முதல் கதவைத் தட்டியபோது, அவனோடு இன்னுமொரு இமிகிரேசன் அகதி அலுவலகத்தைச் சேர்ந்த நடுத்தர வயதான உலா எரிக் என்பவரும் கொரிடோரில்  நின்றார்.

                                                  தோளில ஒரு பெரிய லெதர் பாக், கை ரெண்டிலும் பிடியை விடாமல்  சொத்துப்பத்து எல்லாத்தையும் அள்ளி அடைஞ்சு  கொண்டு வந்த மாதிரி ரெண்டு   பெரிய சூட்கேஸ் , அந்த சூட்கேசில் ஒன்றில் சில்லு கழண்டு இழுபட்டு இருந்தது,  மேல் சேட்டுப் பொக்கெட்டில் ஒரு பழைய நோக்கியா மொபைல் போன்,  


என்னைவிட உயரம் குறைந்த தோற்றம், ஆனால் என்னை விட ரெண்டுமடங்கு பொலிவான  வாட்ட சாட்டம், தலைமயிரை நடுவில அப்படியே விட்டு சைட் எல்லாம்  போலிஸ்காரர்கள் வெட்டுவது போல காதைச் சுற்றி அரிஞ்சு எடுத்து விட்டிருந்தான்.   எண்ணைக் கொழுப்புத்   தடவி  பிரஸ்  போட்டு மினுங்கத் தேய்த்த  பிரவுன்கலர் சோலாப்பூர் தோல்சப்பாத்து, அது முன்னுக்கு கூர் முனையில் நீட்டிக்கொண்டு நின்றது ,

                                       பார்த்தவுடனே அவன் பங்காளதேஷ் நாட்டவன் போல இருந்திச்சு. வங்காளிகளுக்கு தோசைக்கல்லுப் போல  பெரிய வட்ட  முகம்,  காமாழை வெள்ளையாக இருந்தாலும் கறுப்புச் சொண்டு.  கன்னம் மைதானம் போல   எப்பவுமே சப்பட்டையாக இருக்கும். அதைவிட அவர்கள் எப்பவுமே தாடி ,மீசை வைக்காமல் மழுப்ப ரேசர் போட்டு வழிச்சு  கிளீன் சேவ் எடுத்து இருப்பார்கள்.


இந்த அங்கஅடையாளம்  எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால் என் அனுபவத்தில்  பொதுப்படையாகப் பல வங்காளிகளுக்குப்  பொருந்தும் அடையாளம் .  

                                                       
சலாமத் என்னைப் பார்த்து நட்பாகச் சிரித்து,வலது  கை கொடுத்து, என் தோளுக்கும் கதவு நிலைக்கும் இடையில் கிடைத்த சின்ன இடைவெளியில்   என்னோட ரூமை நீள அகல உயரப் பிரமாணங்கள்   அளந்து தங்கப்போகும்  இடத்தின்  விஸ்தீரண விபரம் சேகரித்து   எடுத்தபடி, வினை விகுதிச்சொற்களை முறித்துக்கொண்டு ,  உடைந்து விழப் பொறுக்கி எடுத்த ஆங்கிலத்தில்,

                                " ஐ யாம்,,சலாமத் நசார் முகம்மத்   அலி ,,ப்றோம்  சிட்டக்கொங்  சிட்டி ,,யூ நோ தட் சிட்டி? ,,பங்களாதேஷ் ? ,,ஐ ஸ்பிக்க் இங்கிலீஷ் ,,யு  ஸ்பிக்க்  இங்கிலீஷ்? ..யு ப்றோம்  இண்டியா?  "

                                    " நோ "

                              " ஆப்நே கி ஹிந்தி மே ஜாந்தாகே ? , மேரா சாப் தொடாத் தொடாத் உருது மே ஜாந்தாகே ,? "

                             "  நோ ஹிந்தி, நோ ,உருது  "

                          "  அரபி ? ,,மாலும்  அரபி ? , வொல்லா,,அனா அரப்  மாபி,,பட்,,  ,அனா  மாலும் அரபி, "

                              "  நோ,,அரபி "

                                "  ,யு  ஸ்பிக்க்  இங்கிலீஷ், ? "

                                 " லிட்டில் பிட் "

                                 "  ஐ ஸ்பிக்க் இங்கிலீஷ்  தென் நோ பிரபிலம்,,,"

                                  " தட்ஸ் சவுண்ட்ஸ்  குட் "

                                    " யு நோட்  ஸ்பிக்க்  இங்கிலீஷ், ஐ ஒன்லி  ஸ்பிக்க் இங்கிலீஷ்  தென் பிக்  பிரபிலம், யு    ஸ்பிக்க்  வெறி   இங்கிலீஷ்   ,யு  நோ ஐ   ஸ்பிக்க்  வெறி வெறி குட்   இங்கிலீஷ் "

                                 "  ஓ..ரியலி,,இப் சோ ஐ  கேன் லேர்ன் பெட்டெர் இங்கிலீஷ்  ப்றோம் யு "

                                    " சுவர்,,நோ,,பிராபிளம்,,யு  நோ ஐ   ஸ்பிக்க்  வெறி வெறி குட்   இங்கிலீஷ் "

                                      என்று  சொல்லி சிரிச்சான்,


உண்மையில் அவன் சொன்ன மாதிரி நானே   வெறி   இங்கிலீஷ் பேசும் ஒரு நிலையில்த்தான் ரசியன் வோட்காவை குடிச்சுப்போட்டு மம்மிக்கொண்டு மயக்கத்தில  மந்தாரம் போட்டுகொண்டு நின்றேன் . நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை , பிறகு ஆறுதலா கதைக்கலாம் தானே என்றுபோட்டு கதவை அகட்டித் திறந்துவிட்டேன் . உலா எரிக் உனக்கு ஓகேயா என்று பெருவிரலை உயர்த்திக் கேட்டார். பெருவிரலை நானும் சிரித்து உயர்த்திக் காட்டினேன்.

                                          சலாமத் என் அறையை சுற்றி நோட்டமிட்டான். அவனுக்கு முதல் கெட்ட சகுனமாக சுவர்களில் மோதி சுழன்டுகொண்டிருந்த சிகரெட் புகை வாசனை இருந்திருக்கலாம். மேலே நிமிர்ந்து நெருப்புப் பத்தினால் அதிலிருந்து  புகை வந்தால் எலார்ம் அடிக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டுக் கருவியைப் பார்த்தான். நான் அதைச்சுற்றிக் கிசுகிசு  பொலித்தீன்  பாக் சுற்றிக்  கட்டி இருந்தேன்


                                                    நல்லா மட்டுவில் கத்தரிக்காய் போல இருந்த முட்டைக்  கண்ணை விரிச்சு பார்த்தான். நல்ல காலம் உடன ஒண்டும் சொல்லவில்லை. அவனுக்கு கொடுக்கபட்ட கட்டிலில் கையால குத்திப் பார்த்தான்.

                                             
சுவீடனில்  உள்ள    பிளேன் நகரம்  சொர்மலான் என்ற விவசாய நிலப்பிரதேசத்தில் இருக்கு. அங்கேதான் ஒரு அரசியல் அகதிகளை கொண்டுவந்து தள்ளிவிடும் ஒரு முகாம் நகரத்தின்சனசந்தடியில் இருந்து வெகுதுாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் இருந்தது. அந்த முகாமில் இருந்த  என்னோட அறையில் மூன்று கட்டில் இருந்தது.


கிட்டத்தட்ட  ஆறுமாதமாய் நான் தான் தனியாக அந்த ரூமில இருந்தேன். பகலில்  சுவிடிஷ் மொழி படிக்கும் பள்ளிக்குடியிருப்பு நடந்து போவது. அதுமுடிய ரூமுக்கு வந்தால் பிறகு விடிய விடிய  தட்சணாமூர்த்தியின் தனித்தவில்க் கச்சேரிதான்.

                                   என்னுடைய அறையில் எனக்கென்று சொந்தமென்று  சொல்லும்படியாக எதுவுமில்லை , ஒரு பெரிய சன்யோ  கேசட் பிளேயர்,அதில கேசட் மட்டுமே வேலைசெய்யும். ரேடியோ இருக்கு,ஆனால் வேலைசெய்யாது.  அதை ஒலியுருப்பெருக்கும்  ஒரு பழைய  அம்பிளிபயர் , அதை இணைக்கும் இரண்டு பெரிய வயதான முகச்சீலை  கிழிஞ்ச  ப்பார் பொக்ஸ்.


ஒரு மிகப்பெரிய சோனி  கலர் டெலிவிசன், அதை ஒன் பண்ணவும் ஆப் பண்ணவும் சுவிச் இல்லை,  அதை ஒன் பண்ண எப்பவுமே செருப்பு அல்லது சப்பாத்தால் அதன் திரைக்கு எறிவேன்,அது அதிர்ச்சியில் ஒன் ஆகும் , அதை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து  ஆப் செய்யவும் செருப்பும், சாப்பாத்தும்தான் பாவிப்பது .

                                                ஒரு பழைய வாணிஸ்   கழண்ட மரத்தால செய்த  பியானோ ஒரு மூலையில்  வைச்சு இருந்தேன். அதில காலால உழக்கி அதனுள்ளே இருக்கும் தலாணி போன்ற ரபர் பந்தை காற்று நிரப்பி நிரப்பி வாசிக்கவேண்டும்.  பழைய சாமான் விக்கும் கடையில அதை வெறும்   ஐம்பது குறோணருக்கு மரத்தை  எடைக்கு நிறுத்து வேண்டுவதுபோல   வேண்டினேன்.


                                              அதைப் புதுப் பெண்டாட்டியின் தேன்நிலவு போல அமர்களமாகக்  கொண்டுவந்து முகாமில் இறக்கிய பாரஊர்திக்காரனுக்கு  இருநூற்றைம்பது குரோனர் அழுதழுது  கொடுத்தேன். அந்த பியானோவின் கட்டையை  முதல் முதல் அமுக்கி வாசிக்க அதுக்குள்ளே இருந்து கல்பனா அக்கா பாடுறமாதிரி சவுண்ட் வந்தது. நாசமாப் போக,  அவுட் ஒப் டியூன் !

                                               
அகதிகளுக்கான இமிகிரேசன் அலுவலகம் முகாமின் நடுவில் பயமுறுத்திக்கொண்டிருந்தது . அங்கேதான் முதலில் வருபவர்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் முகாமில் உள்ள அறைகளுக்கு ஒதுக்கப்டுவார்கள். சலாமத் அங்கேதான் ஆசிய நாட்டவர் யாரவது இருகிறார்களா என்று விசாரித்ததாகச் சொன்னான்.


தனியாக நானிருந்த அறையில் இன்னும் இரண்டு கட்டில்கள் இருக்கும் விபரம் இமிகிரேசன் அலுவலகத்துக்குத் தெரியும். அவர்கள்தான் அந்த விபரம் சொல்லி சலாமத்தை என்னோட தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விபரம் உலா எரிக் சொன்னார்.

                                                சலாமத் புதிய கட்டில் விரிப்புக்கள் விரிச்சுப்போட்டு. அவன் கொண்டுவந்த அடுக்குச் சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கட்டிலின் தலைமாட்டில் இருந்த மரக்கபேட்டில் அடுக்கினான். நிறைய சென்ட் போத்தில், கிரீம் போல போத்திலில் அடைக்கப்பட்ட திரவியங்கள்  எடுத்து வைச்சான்,


                                                புத்தம்புதிய இன்னும் ரெண்டு சோடி தோல் சப்பாத்து எடுத்து கட்டிலுக்கு கீழே வைச்சான். கஞ்சி போட்டு மினுக்கிய உடுப்புக்கள் மடிப்புக் கலையாமல் சூட்கேசில் அடிக்கி வைச்சிருந்தான்.   பங்களாதேசில் சொல்லப்பட்ட  மதிப்புக்குரிய  பணக்கார குடும்பத்தில்  இருந்து வந்து இருப்பான் போலிருந்தது.

                                 அவன் தோளில கொழுவி இருந்த  பைக்குள்ளே என்ன இருக்குமென்று சந்தேகமா இருந்தது.அதை பக்குவமா வைக்க இடம் தேடினான்,  பங்களாதேசில் இருந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்திருப்பானோ என்றுதான் நினைச்சேன்.  பையை  என்னோட  கேசட் பிளேயருக்கு பக்கத்தில வைச்சான்.  வைச்ச போது கடக்குபுடக்கு  என்று தேங்காய்ச்சிரட்டைச்  சில்லு  திருவலைக்கு  முட்டுக்கட்டை போட்டமாதிரி  சத்தம் வந்தது


                                                               ,அதென்ன  என்று கேட்பது  அடுத்தவன் வேட்டிக்க  கையை விட்டுத்  துலாவுவது போல இருக்குமே என்று பின்வாங்கினாலும், சுவாரசிய வேகத்தில்   அதுக்குள்ளே என்ன இருக்கு என்று வாயைக் கோணலாக்கி முகத்தார்வீட்டு சரவணை போல  கேணைத்தனமான உச்சரிப்பில் இழுத்துக்கொண்டு   கேட்டேன், பெங்காலி மொழிப் பாடல்கள்  கேசட் தான் அவைகள் என்று  பெருமையாகச்  சொன்னான். பாட்டுக் கேட்காமல் இருக்கவே முடியாது என்றான் சலாமத் .

                                           அட கடவுள் நல்ல ஒரு இசைரசிகனைதான் என்னோட கொண்டுவந்து சேர்த்து இருக்கிறானே, எனக்கும் மூசிக் மூச்சை இழுத்துவிடுற உசிர். பெங்காலி பாடல்கள் கேட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கே இதைவிட இந்த அந்தரிச்ச  சுவீடனில் மனசோடு நெருக்கமாக  வேறென்ன வேண்டும் என்று நினைச்சேன். ஆனால் அதுக்குள்ளே இருந்த சோனாலி பந்திரே என்ற பாடகியின் கேசட் ஒன்று என்னைப் போட்டு சிப்பிலி ஆட்டும் என்று அப்போது நினைக்கவில்லை.


                                                   அதைவிட அந்த சோனாலி பந்திரேயாலதான் சிவனே என்று இருந்த  எனக்கும், நட்பின் வரைவிலக்கனமாய்ப் பழகிய   சலாமதுத்க்கும் , யுவன்னா என்ற சுவிடிஷ்  டீச்சருக்கும்,  இடையில் மூன்று மாதத்தில் அடைகாத்துப் பொரித்த  பொறாமை கொண்டெழுந்த ஈகோ நிறைந்த வாக்குவாத  சண்டையும் வருமென்றும் அப்போது தெரியாது.

                                       
நாங்கள் வசித்த கட்டிடத்தொகுதியில் எங்கே எங்கே என்ன இருக்கு போன்ற விபரங்கள் கேட்டான். நான் டூறிஸ்ட் கைட் போல அவனுக்கு எல்லா இடத்துக்கும் கூட்டிக்கொண்டுபோய் என்னோட வெறி குட்  இங்கிலீசில் முடிந்தளவு விபரம் சொல்லி, வசதிகள் எல்லாத்தையும்  காட்டினேன். முடிவில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொதுவான சமையல் அறையில் அவனுக்கு பிளேன் டீ போட்டுக் கொடுத்தேன்.


                                                      அங்கே உள்ள சாப்பாட்டு மேசையில்  போடப்பட்ட கதிரையில் இருந்து மேற்கொண்டு தனிப்பட என்னைப்பற்றி கேட்டான். நான் என் பெயரைச்சொல்லி மறுபடியும்  ஸ்ரீலங்கா என்று சொன்னேன்.

                                     "  ஓ..அப்படியா..நான்  இந்தியா என்று  நினைச்சேன், சிறிலங்காவில்  தமிழரா   "

                                "   ஓம்,"

                            "   டைகர்,,டேஞ்சரஸ் வரிப்புலி உடுப்பில மிடுக்கா இருப்பாங்களே   தமில்டைகர் ? ,நண்பா ..,அதுவா  நீ ? "

                         "  இல்லைப்பா,,அதெல்லாம்  ஒன்றும்  இல்லை,,சும்மா வேட்டி  கட்டின  அப்பாவித்  தமிழன் பா "

                               "  தமில்டைகர் ,,அவர்களின் சூசைட்பொம்ப்பர் குறுப் பங்களாதேஷ்க்குது வந்திருகிறார்கள்,,அது  உனக்கு  தெரியுமா நண்பா "

                                 " இல்லையே,,எதுக்கு  வந்தார்கள் "

                               " பங்களாதேஷ்சிலும் ஒரு போராடும் இயக்கம்  இருக்கு, நண்பா ...,அதுக்கு  வெடிச்சு  உதவி செய்யக்  கொன்றாக்கில்   வந்திருந்தார்கள்,,எங்கள்  நாட்டு  ராணுவம்  மடக்கிப் பிடிச்சிட்டாங்கள் !

                                           
இதைக் கேட்க காதுக்குள்ளே செவிப்பறை அதிர  கிளைமோர் கண்ணிவெடி  வெடிக்கிற சத்தம் கேட்க  அஞ்சடி அந்தரத்தில்  தூக்கிவாரிப்போட்டது.  என்னடா கொன்றாக்  எண்டுறான்,,இதென்ன கதை ! எப்படி அவளவு இலகுவாக ஒரு நாட்டுக்கு வெளியே செய்திகள் இப்படி ஆதாரமே இல்லாமல் அடிச்சுவிடுற மாதிரி உலாவமுடியும் என்பது முதன் முறையாக என்னவோ மனசாட்சியை உலுப்புவது போலிருந்தது .

                                   " அப்படியா,, சலாமத் ,,,ஆச்சரியமா  இருக்கே,,,உனக்கு எப்படி  தெரியும்  இந்த டேஞ்சரஸ்  செய்திகள் "

                               " டாக்கா டைம்ஸ் என்ற பெங்காலி  முன்னணிப்     பத்திரிகையில் வாசித்தேன் "

                                        "   கிழிஞ்சுது .."

                             "   என்னது,,நண்பா  "

                                 " ஆமாப்பா ,,சும்மா  அவிச்சி ஊத்தியிருக்கிறாங்கள்  உன்னோட  பெங்காலி  நியூஸ் பேப்பரில்,,சூசைட்பொம்ப்பர் குறுப் கொன்றாக்கில்   அனுப்ப தமில் டைகேர்ஸ்   என்ன வெளிநாட்டு  ஏற்றுமதி  இறக்குமதி  வியாபாரமா செய்கிறார்கள் "

                                      "  என்னது, நண்பா ,நான்  நீ சூசைட்பொம்ப்பர்பற்றி பெருமையா சொல்லுவாய் என்று நினைச்சேன்,,,உலகமே  அவர்களை  வியக்குதே,,,என்னப்பா  நீ  இப்பிடி  சொல்லுறாய் "

                                     "பேந்தும்பார் ,,  அவர்கள்,,எங்கள்  நாட்டில்தான் போராடுகிறார்கள். உங்களின் பெங்காலி நியூஸ்  பேப்பர் அவர்களின் தியாகத்தைக் கேலிப்படுத்துது "

                           "  ஓ  சொறி,,நண்பா,,எனக்கு உண்மைகள்  தெரியாது  நண்பா "

                              "    ஹ்ம்ம்,,இப்பிடித்தான் கிடைச்ச தீனியில தீயைக்  கிளப்பிப்போட்டு அதில காசு சம்பாரிகிறாங்க உலக அளவில பத்திரிகைகள் "

                                         "  ராஜீ..வ்கா.. ந்தி ...இந்தியன்  பிறைமினிஸ்டர்  அவரையும்  கொன்றாக்கில் போய்த் தானே சூசைட் பொம்மர் கொன்றார்கள் ,,இல்லையா ? "

                                      "  கிழிஞ்சுது,,உனக்கு எல்லாமே பிழையா பிழையா தான் பா புகுதப்படிருக்கு,,அப்படி  எல்லாம் இல்லை சலாமத்,,அதெல்லாம்  வேற மாதிரியான சம்பவங்கள்...கொன்ராக் எல்லாம் இல்லைப்பா,,,அதெல்லாம் கொள்கை,,இலட்சியம் ,,சார்ந்த அர்பணிப்பு  விசியங்கள் "

                                    "   அப்படியா,,,எனக்கு செய்திகளில் வாசித்த தகவல்கள் மட்டுமே தெரியும்,,நண்பா "

                                    " ஹ்ம்ம்,,அதுதான் நானும் ஜோசிகிறேன்,,இப்பிடியா ஒரு  நாட்டில் நடக்கும்   செய்திகளை இன்னொருநாட்டில் திரிபுபடுத்தி வேண்டிய மாதிரி பரப்பிக்கொண்டு இருப்பார்கள்,,,"

                                        "   சரி விடு, நண்பா   ,நீ எவளவு காலம்  இங்கே இருக்கிறாய் ? "

                           " ஒரு  ஆறுமாதம்  மட்டில இருக்கிறேன்,,சலாமத் "

                                "     ஏன்,,இப்படி  இருகிறாய்,,அட்ரஸ் குடுத்திட்டு  ஸ்டாக்ஹோம் போகலாமே.  ஆறு  மாதமானால்  டாக்ஸ் நம்பர் கேட்டு .அங்கே இங்கே   வேலை  செய்யலாமே "

                           "  அட்ரஸ் தர இங்கே  எனக்கு  யாருமில்லை,.அங்கே இங்கே வேலை  எடுக்க உதவி செய்யவும் யாருமில்லை,  சுவிடிஷ் கதைக்க தெரியாதே , "

                                   "    ஓ   ஐ  சீ....அது  ஒரு  பிரசினைதான், இங்கிலிஸ் கதைக்கிறாய்தானே ,பார்க்கலாம் ,,ஸ்ரீலங்கா  ஆட்கள்  யாரும்  பழக்கம்  இல்லையா ? "

                               "  இல்லைப்பா ,,யாரையும்  தெரியாது..    இண்டைக்கு   வந்திறங்கின உனக்கு  நல்ல  விபரம்  எல்லாம் தெரியுதே பா,,எனக்கு இன்றுவரையிலும்  ஒரு மண்ணும்  ஒழுங்கா தெரியாது  "

                            "  இன்போர்மேசன் இல்லாமல் ஒரு நாட்டுக்கு வரப்படாது  நண்பா,,,அதைவிட கொண்டக்  முக்கியம்,,,அதுவும் இயுரோபில ஆட்கள்  இருக்கவேணும்,,அப்பத்தான் திட்டம் போட்ட  விசியம் நினைத்த திசையில்  ஓடும் நண்பா  "

                              "ஹ்ம்ம்,,நானே  ஒரு  போர்மேசனும்  இல்லாமல். விளக்கெண்ணை  குடிச்சா  மாதிரி பிதுங்கிக் கொண்டு நிக்கிறேன்   ஹ்ம்ம்,,அதை  இப்பதான்  நான் உணருகிறேன்,,   "

                       " ஓ ....ஐ ,,சீ ....சுவிடிஷ் கொஞ்சம்  கதைப்பியா  நண்பா "

                           " இல்லைப்பா,,இப்பத்தான்  கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்கு  இறக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்,,ஆனால் செரிமானம்  ஆகுதில்லை "

                 "பொலிடிகல் அகதி அந்தஸ்து கேட்கிற   அசைலம் கேஸ் என்னமாதிரிப் போகுது  "

                                     " ஆமை சிலோமோசனில் போறமாதிரிப் போகுது  "

                                    "    பார்க்கலாம்,,எனக்கு ஸ்டாக்ஹோம் இல் நிறைய ஆட்கள்  தெரியும்,,,உனக்கு  ஒரு  வேலை ஒழுங்குசெய்யலாம் "

                                    "  உண்மையாவா சொல்லுறாய்  சலாமத்,,கேட்கவே  சம்பளம் கையில கிடைச்ச மாதிரி  இருக்கு "

                               "   ஹ்ம்ம்,,எங்க மார்க்கம்  அப்படிதான் சொல்லுது  நண்பா ,,நீ எனக்கு உடன் பிறவா  சகோதரன்,,உனக்கு  உதவி  செய்வது  எனக்கு  உதவி  ஒருவிதத்தில்  கிடைக்க  வைப்பான்  அந்த இல்லையென்று  சொல்லாத  இறைவன் "

                              "  ஹ்ம்ம்,  எங்கள்  நாட்டு  மனிதர்கள்,,இப்படி சடார்  எண்டு உதவமாட்டார்கள்...ஏறப்போன  உள்ளூர்  நாய்க்கு ஜெயசிக்குறு சண்டையில்   இடம்பெயர்ந்து ஊர் விட்டு ஊர் அகதியாப் போன பெட்டை  நாய்  சொன்ன,,நாடு  நல்லா இருக்கு  நம்ம  இனம்தான்  சரியில்லை  என்ற முசுப்பாத்திக்  கதை நினைவு வருகுது.."

                                "  அதென்ன  கதை  நண்பா "

                                 "   அது,,கொஞ்சம் குழப்பமான காமடிக்   கதை,,இங்கே இந்த முகாமில் இருந்து  மண்டை  காயுது,,சலாமத்,,வேறு  வழியும்  இல்லை  "

                           "  ஓ,,அப்பிடியா,,நானெல்லாம்  மிஞ்சிப்போனால்  ஒருகிழமைதான் இந்த முகாமில்  இருப்பேன்..".

                                             " பிறகு "

                               " எனக்கு நிறைய கொண்டக் இருக்கு ஸ்டாக்ஹோமில ,,பிரெண்ட்ஸ்,,,நிறையப்பேர்,,,,நான்  நல்ல பேமஸ்  ஆனா  ஆள்  எங்கள்  ஊரில,,,பிஸ்டல்  சலாம்  என்றால் எல்லாருக்கும்  தெரியும்,,,,ஹ்ம்ம்,,எல்லாருக்கும்  பயம்,,,ரோட்டில காரை விட்டு   இறங்கினா பாக்கிற எல்லாரும் லெப்ட் ரைட் அடிச்சு   சலாம் போடுவாங்கள் "

                                 " ஓ  அப்பிடியா,,பொலிடிக்ஸ்  அதுவா "

                                   " இல்லை,,ஹ்ம்ம்,,,அதுவும்தான்...இன்னும்  கொஞ்சம் பவர்புல்   அண்டர்கிறவுண்ட் பக்கிரவுண்டும் இருக்கு ,  நீ எப்படி ,,"

                                "    ஹ்ம்ம்...எனக்கு ஒரு பக்கி கிரவுண்டும் இல்லைப்பா "

                                " இங்கே வரமுதல்   சிறிலங்காவில்  என்ன செய்துகொண்டிருந்தாய் நண்பா "

                         " உருப்படியா  எதுவுமே  செய்யாமல்  இருந்தேன் "

                            " அட,,,சே,,ஒரு  மனுஷன்  வாழ்ந்தா, சும்மா நாலுபக்கமும்  தூள் பறக்க வாழ வேணும் தெரியுமா    ,நாட்டை  நடுங்க வைச்சுப்போட்டுப் போகவேணும்,,,தெரியுமா,,,"

                                   "   ,,சலாமத்  நீ சொல்லுறதைக்  கேட்க  எனக்கு கை கால்தான் நடுங்குது "

                                 "   ஹஹஹஹா ,,எதுக்கு  நடுங்குது  நண்பா "

                                    " பிஸ்டல் சலாம்  என்ற  பெயரைகேக்க பயமா இருக்கே "

                                " ஹஹஹஹா,,அது சிடாகொங் சிட்டியில ,,இங்கே  என்னிடம் வெப்பன் என்று  ஒன்றுமில்லை,,பயப்பிடாதே  நண்பா "

                                      " சலாமத்   உன் தாய்மொழி பெங்காலிதானே,,அப்புறம்   எப்படி ஹிந்தி உருது கதைக்கமுடிகிறது    "

                                          "  பெங்காலிதான் தாய்மொழி,,ஆனால்  பாக்கிற சினிமா எல்லாம் இந்தியன்  ஹிந்தி  சினிமா,,பெங்காலி சினிமா  செம ரம்பம் வைச்சு இழுக்கிற  அறுவை,  காத்து  வேண்டி அழுது  வடிவானுகள்,,இந்தியர்கள்  போல பங்களாதேசிகளுக்கு படம்  எடுக்க தெரியாது   "

                                       "அப்படியா, ஆச்சரியமா  இருக்கே ,,   "

                                      "  நண்பா,,ஒரு  தமிழ்  நடிகர்,,,அவர்  பெயர்  என்ன,,சும்மா தலையைக் கோதி,,கீழ ஒரு வெட்டு வெட்டிப் பார்த்து  ,,சிக்கிரட்டை  எறிஞ்சு சொண்டில விழவைச்சு சர்க்க்க்க்க்  என்று தீக்குச்சி இழுத்து பத்தவைப்பரே,,,,என்ன பெயர்,,நினைவு  வருகுதில்லை...அந்தர் கண்ணு  என்ற ஹிந்திப்படம்  நடிச்சாரே  "

                                           "  ஒ,,ரஜனிகாந்த்,,சூப்பார் ஸ்டார்,,அவர்  பங்களாதேஷ் வரைக்கும்  பேமஸ்  ஆக இருக்கிறாரே..சலாமத்  "

                                           "  வாவ்,  எஸ்..அவர்தான்..ற  ஜ நி கா ன் த் ..எஸ்,,,.,ஸ்டைல்  என்றால் ரஜனிகாந்த்  ,,அந்தப்  படம்  இருவது தடவைக்குமேலே  பார்த்திருக்கிறேன்,,அது ஒரு போலிஸ் கேஸ்,,எல்டர்  சிஸ்டர்  போலிஸ்...அவா யங்கர்  பிரதர்  ரஜனிகாந்த்..சூப்பர்  திரைக்கதை,,அக்கா எப்பவும் தம்பியைத்  தப்ப வைப்பா ,,இல்லையா    "

                                             " ஓம்,,,அந்தப்படம்  சட்டம் ஒரு இருட்டறை  என்று  தமிழில்  வந்தப்படம்  சலாமத். அப்புறமா ஹிந்திக்கு  ரீமேக்  செய்தார்கள் ".

                           "  சட்டம் ஒரு இருட்டறை  என்றால்  என்ன அர்த்தம் "

                            "  ஒழுங்கான வெளிச்சம் சட்டதில  விழவில்லை, கண்ணைக் கட்டிக்கொண்டு கள்ளனைக் காட்டில  தேடுறது போல ,ஜுடிக்கலி   லீகல் ப்பிளைன்ன்ட்னேஷ்...,தில்லுமுல்லு  என்று வைக்கலாம்  "

                                         "    ஹஹஹா,,பங்களாதேஷ் முழுவதும்  சட்டம்  ஒரு  இருட்டுதான்,,ஊழல் நிறைந்த நாடு,,,"

                                      " ,,சரி,,நான் கவனிச்சது  சரியென்றால்,,  உனக்கு எப்படி,,அரபி  கதைக்க முடியுது    "

                                              " டுபாய்,,பார்ச்டுபாயில  போராபாய் பிசினஸ்  செய்யுறார்,,அவரோட  சில வருடம்  இருந்தேன்  "

                                             " போராபாய்  பெயரைக் கேட்கவே ஒருமாதிரி  இருக்குப்பா,,உன்னோட  பாஸ் போலவா.."

                                "  இல்லை நண்பா,,போராபாய் என்றால் பெங்காலியில் பெரிய அண்ணன்,,அவர்  என்னோட  எல்டர் பிரதர்,,இப்பவும்  டுபாயில இருக்கார்,,டுபாயில சோட்டாபாய் என்றால்தான் எல்லாருக்கும் தெரியும்   "

                              " விளங்கவில்லை,,சோட்டாபாய் என்றால் யாருப்பா,,சலாமத் "

                            " சோட்டாபாய்  என்றால் பெங்காலியில் யங்கர் ப்ரதர்,,என்னைத்தான்  எல்லாரும் அப்படி அழைப்பார்கள் "

                           "  அட,,,போறபோக்கில சுவிடிஷ் மொழி ஏறாமல்  பெங்காலி படிசிருவன்  போல இருக்கே உன்னிடமிருந்து  சலாமத் "

                         "  ஹஹஹா,,,நான் களைப்பாக இருக்கிறேன்,,கொஞ்சம் அசந்து தூங்கப்போறேன் ,,வா ரூமுக்கு,,உனக்கு  பிரசினை இல்லைதானே "

                       "  எனக்கு ஒரு பிரசினையும்  இல்லைப்பா,,"

                             "  இங்கே கலால் சாப்பாடு சமைக்க சாமான் சக்கட்டு எங்கே வேண்டலாம், அப்படியான கடை எங்கே   இருக்கு என்று தெரியலையே,,உனக்கு  தெரியுமா ,,அது இந்த டவுனில   எங்கப்பா  இருக்கு "

                           " அதெனக்கு தெரியாது,,சாலே இப்ராகிம்  என்று  ஒரு இராக்கியர்  இருக்கிறார்,,அவரைப்பார்க்க  எங்க  நாட்டு பள்ளிவாசல்  மவுலவி போல  இருப்பார்,,ஆசாரமான  மனிதர்,, இந்த கொரிடோரில் தான் இருக்கிறார்,, கேட்டாப் போச்சு "

                                " அட,,நல்லதாப்போச்சு ,,நன்றிபா ,,ஆனால்  ஒண்டு  கேட்கிறேன் ரூமில  நீ சிகரெட் பிடிகிரத்தை  விடுவியா ,,எனக்கு அந்த மணம் குமட்டிக்கொண்டு வரும் "

                                  "   அட  இதென்ன பிரசினை,,நான் இனிமேல் பல்கனியில் நின்று ஊதித்தள்ளுரன்,,உனக்கு  வேற என்ன எல்லாம் இடைஞ்சல் என்று நினைகிறியோ  அதெல்லாத்தையும்  சொல்லு சலாமத்,,நானும் திருத்திகொள்கிறேன். "

                                   "    தெரியலை,,பார்க்கலாம்,,இப்போதைக்கு இது போதும் நண்பா "

                                   
சலாமத் கேட்ட தகவல்களை சாலேயிடம் இருந்து கேட்டு கொடுத்தேன். வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை நாளென்று சொல்லி சலாமத் நிலத்தில கம்பளம் போல ஒன்றை விரிச்சுப்போட்டு புனித  மக்கா ஹதிஸ் உள்ள பக்கமாக மண்டியிட்டுத்  தொழுதான். பிறகு இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்திட்டான்.  


                                                        எனக்கு  நல்ல ஒரு பேச்சுத்துணை கிடைத்ததில் என்னோட வெறுமை வெளிகளில் அலைபாயும் எண்ணங்கள் நிரம்பிக்கொண்டது. இரவெல்லாம் நிறையக் கதைப்போம், பெங்காலி பாடல்கள் கேசட் பிளேயரில் கிடந்தது அலறும், மொழி தெரியாவிட்டாலும் ஹிந்துஸ்தானி ஸ்டைலில் அந்தப் பாடல்கள் இதயம்வரை இறங்கி ஆத்மாவின் அலைச்சல்களை அடித்து விரடிக்கொண்டிருந்தது.

                                             ஒ
ருநாள் முதல் முதலாக சோனாலி பந்திரேயின் மயக்கும் குரலை முதன் முதலில் கேட்டேன். அந்த ஒரு பாடலோடு எனக்கு மண்டைக்குள் ஒரு யுகத்துக்கு மறந்துபோன ஏதோவொன்றை மீட்டு எடுத்தேன். அல்லது ஒரு யுகத்துக்கு மறந்துபோன ஏதோவொன்றை இன்னொரு யுகத்துக்கு தொலைத்து விட்டேன். இதயம் ரெண்டு நிமிடம் இறந்துபோய் மறுபடியும் துள்ளியது.  


                                                சோனாலி பந்திரே யார்  என்று சலாமத்திடம் கேட்டேன், சுமாரான பெங்காலி மொழிப்  பாடகி என்றுதான் சொன்னான். அதை அவளவு இலகுவாக என்னால் எடுக்கமுடியவில்லை.

                                             
அதுக்குப்பிறகு சோனாலி பந்திரே பாடின அந்த ஒரு கேசெட் மட்டுமே எப்போதும் போடுவேன். சலாமத் சும்மா மேம்போக்காக அதைக் கேட்டுகொண்டிருப்பான், ஒரு விதமான விசர்க் குணத்தில எப்பவுமே சோனாலி பந்திரே சோனாலி பந்திரே சோனாலி பந்திரே என்று பிசதிக்கொண்டு திரிவேன்.


                                                என்னோட அறைக்குப் பக்கத்தில் டானியல்  என்ற எதியோப்பியாக்காரன் இருந்தான். பொப் மார்லிக்கு நேர்ந்துவிட்ட கேஸ். அவனுக்கும் " சோனாலி பந்திரே சோனாலி பந்திரே " என்று சொல்லுவேன் அவனும் அதென்னவோ என்னோட தாய்மொழியில் வணக்கம் சொல்லுறேன் என்று நினைத்து அவனும் " சோனாலி பந்திரே சோனாலி  பந்திரே "  என்று திருப்பிச் சொல்லுவான்.

                                                        சலாமத் ஒருநாள்,கோபமாக அவனோட நோக்கியா மொபைல் போனில கதைத்துகொண்டிருந்தான்.அவனோட கொண்டக் நண்பர்கள் கையை விட்டது போல இருந்தது அந்த உரையாடல். அல்லது அதுக்குக் கிட்டவா என்னவோ அசம்பாவிதம் நடந்தது போலிருந்தது.


                                            அவனோட எப்பவும் கலகலப்பாக இருக்கும் பிரகாச முகம் வட்டுக்க இடி மின்னல்  விழுந்த தென்னைமரம் போல சிதிலமாகியிருந்தது. கொஞ்சநேரம் நெற்றியை பெருவிரலால தேய்ச்சு ஜோசித்தான்,   பிறகு என்னிடம் வந்து ,

                                         "  நான் நினைச்சமாதிரி ,,,,,,,  ,"


                                        " !!!!!!! அப்படியா!!!!!!!!!!  ??????அப்படியா?????????"


                                       ",நான் நினைச்சமாதிரி  இங்கே ஒன்றும்  செய்யமுடியாது  போலிருக்கே ,,நண்பா "

                                           " ஹ்ம்ம்,,சிலநேரம் அப்படிதான் காலம் பாதைகளைத்  திசைதிருப்பும்,,சலாமத் "

                                             "   என் நண்பர்கள் ,,,வெளிகிடும்போது  இந்தா அந்தா என்று உதவிசெய்வம்  என்று  சொல்லி  வாயல வலிச்சு வங்காள விரிகுடாவில வள்ளம் ஓட்டினாங்கள்,,இப்ப பக் அடிக்குராங்கள்"

                                " இது உனக்கு மட்டுமில்லை   சில நேரமில்லை,,பலநேரம் பலருக்கும்  நடக்கதானே  செய்யுது  சலாமத் "

                                      " கவலையாக  இருக்கு,,,இங்கே  எனக்கு  எதுவும்   செய்துகொள்ள முடியவில்லையே,,சிடாகொங் சிட்டி என்றால்,,இப்ப வாக்குறுதியை காப்பாற்றாத நண்பனா இருந்தாலும்,,கதை  சடக்கு  சடக்கு  என்ற  நாலு  சத்தத்தோட  முடியும்  நண்பா "

                                   "  ஹ்ம்ம்,,உன்னிடம் உள்ள இன்போர்மேசன்,,அது  போதுமே,,நீயாக  உன்னை  இஸ்திரப்படுதிகொள்ள சலாமத் "

                              "  அப்படிதான்  நினைச்சேன்,,ஆனால்  அது  மட்டும்  போதாது  போலிருக்கு "

                                 "   சரி  அப்ப இங்கிருந்து  இந்த நாட்டைப்  பழகிகொள்,,பிறகு  ஸ்டாக்ஹோலமுக்கு போ ..சலாமத்,,இப்ப  என்ன இருக்க இந்த  முகாம் இருக்குதானே,,உன் அசைலம் கேசும்  ரியக்ட்  ஒன்றும் வரவில்லைதானே "

                               " சுவிடிஷ் மொழி கொஞ்சம் பேசி சமாளிக்கிற அளவில் படிச்சு இருந்தால் நல்லது என்று ஸ்டாக்ஹோமிலிருக்கும் நண்பர்கள் சொல்லுறார்கள்.  இப்ப என்ன செய்யலாம் "

                                 "  நீ ஒண்டுமே செய்யத் தேவையில்லை சலாமத்,,இமிகிறேசனே  பேப்பர் அனுப்புவாங்கள்..இங்கே சும்மா இருந்து சொரிஞ்சுகொண்டிருக்க  விடமாட்டாங்கள்.   ."

                                 " அது  எங்க  இருக்கு, படிக்கப் போற இடம் "

                                    "  பக்கத்தில்தான்  இருக்கு சலாமத் ,,உன்னோட புது பச்க்கு ஆட்கள் சேரத்தான் தொடங்குவாங்கள் . ஆனால் கட்டாயம் படிக்கப் போகவேணும்,,இல்லாட்டிக் தெண்டல்க் காசு தரமாட்டாங்கள்  "

                       " உதவித்தொகை எவளவு  கிடைக்கும்  நண்பா,,அது  போதுமா இங்கே வாழுறதுக்கு     "

                                " ஹ்ம்ம்,,கைக்கு வாறது  வாய்க்குப்  போறதுக்கு  மட்டுமே  காணும், அப்படி நெருக்கி  வைச்சு இருக்கிறாங்க கொடுப்பனவுத் தொகையை  "

                                    என்று சொன்னேன்.    


சில நாட்களில் அவனுக்குப்  படிக்கப்போகச் சொல்லும்  பேப்பர் வந்தது. நான் காலையில் படிக்கப் போகும்போது தனக்கும் இடத்தைக் காடச்சொல்லி  அதைத் தூக்கிக்கொண்டு வந்தான் . போட்டு வந்து பின்னேரம் முதல் முதல் சுவுடிஷ் வகுப்பு எப்படி இருந்தது  என்று விபரமாகச் சொன்னான்,தன்னோட படிக்க வந்துள்ள இளம்  பெண்களைப்பற்றி களப்பிறர் காலத்துப் புலவர்களின்  நெடுநல்வாடை  பிச்சை எடுக்கும்   அளவுக்கு   எடுத்து விட்டான்.

                                                         
அவன் விபரிப்பில் நல்ல அஸ்டாவதானியின்  அவதானிப்பு இருந்தது.  என்னையும் எனக்கு படிப்பிக்கும் டீச்சரையும் பார்த்ததாகச் சொன்னான். என்னோட டீச்சர் நல்ல வடிவு என்று சொன்னான். என்னோட டீச்சரின் பெயரைக் கேட்டான் ,யுவன்னா என்று சொன்னேன்,  யுவன்னா என்னோட அன்னியோன்னியமாக கதைப்பதைப் பார்த்தேன் என்றான். அதை அழுத்திச்சொல்வது போலிருந்தது.  


                                       தனக்கு படிப்பிக்கக் கிடைத்த டீச்சர் வயசான கிழவி என்று கவலையாகச் சொன்னான். திருப்பியும் யுவன்னா என்னோட அன்னியோன்னியமாக கதைப்பதைப் பார்த்தேன் என்றான். அதை இன்னும் முஸ்டியைப் பொத்தி  அழுத்திச்சொல்வது போலிருந்தது.

                                                 
சுவிடிஷ் மொழி படிப்பித்த அந்த வகுப்பில் எப்பவுமே முதலாம் வரிசையில் போய் இருந்தேன். அதுக்குக் காரணம் சுவிடிஷ் மொழியைப் படித்தே ஆகவேணும் என்ற காரணமில்லை.பூர்வஜென்ம புண்ணியத்தால்   யுவன்னாதான் காரணம். ஏனென்றால் அவள் படிப்பிக்கும் போது ஒருநாளுமே பயம் இருந்ததில்லை. ஊரில படிக்கிற காலத்தில் வகுப்பில எப்பவுமே கடைசி வாங்குதான். அதில நிறைய வாத்திமாரின் பிரம்படியில் இருந்து தப்ப  தற்பாதுகாப்பு இருக்கும், பாடம்  எடுக்கும்  வாத்திமார் எசகுபிசகா எப்பவுமே கேள்வி கேட்பது, ஹோம்வேர்க் செய்தது பற்றி விசாரிப்பது முன்வரிசையில் இருக்கும் மாணவச்செல்வங்களையே.

                                                         கடைசி வாங்கில இருப்பதால்  முதல் வரிசையில் தொடங்கி வாத்தியார் ஒவ்வொரு மாணவனின் கொப்பியை வேண்டி முறையாகக்  ஹோம்வேர்க் பரிசீலிக்கும் போது   கடைசி வாங்கு வாறதுக்கு முதல்  பக்கத்தில உள்ளவனின் கொப்பியைப் பதறியடிச்சுப்  பார்த்தடிச்சு எழுதி முடிச்சுப்போடலாம். ஊரில  அப்படி  உயிரைப் பணயம் வைச்சுதான்   படிக்க வேண்டி இருந்தது பள்ளிக்கூடத்தில  படிக்கிற காலத்தில .


இப்ப நினைச்சுப் பார்த்தால்  என் அனுபவத்தில்  அடல்ஸ்ஒன்லி இங்கிலிஸ் வயது வந்தவர்களுக்கான   படம் தியேட்டரில் பார்க்கும்போது மட்டுமே கதை விளங்கவேணும் என்றதுக்காய் முன் கதிரையில  இடம்பிடிச்சு குந்துவது.

                                                     
யுவன்னாவுக்கு எத்தினை வயதிருக்குமென்று சொல்லவே முடியாது. செம்மங்குண்டு நாட்டுக் கட்டை போல கும் என்று இருப்பாள்.  பொதுவாக பெண்களின் வயதை நெருங்கி நின்று மேலிருந்து கீழ பார்த்து , கொஞ்சம் பக்கவாட்டிலையும் பார்த்தால்  ஓரளவு கிட்டமுட்டக் கணிக்கலாம், யுவன்னா அப்படி எல்லாம் கணக்குப்பண்ண எந்த ஸ்கேலும் எங்கேயும் வைத்துக்கொண்டிருக்கவில்லை.


                                           முன்னுக்கும் பின்னுக்கும் வெட்டிக் குறைச்சுப் பார்த்தாலும்  ஏறக்குறைய என்னோட வயதுபோலதான் இருந்தாள். டெக்க்டாஸ்  கவ்போய் வெஸ்டர்ன் சப்பாத்து எப்பவும் போடுவாள், அதைப் போட்டுக்  குத்திக் குத்தி அரேபியன்  பெடுன் குதிரைபோல நிமிர்ந்து நடப்பாள். அது வயதில்  இளமையை இன்னுமின்னும் ஏற்றிக்கொண்டேயிருகும்.

                                                         நேராப் பார்த்து நிதானமாக  ஜோசித்துக்  கதைப்பாள். அவளின்   உயாலா  சொட்டுநீலக்  கண்களில் எப்போதுமே  தீராத  தேடல் . அதிகம் உயரம் இல்லாதவள். கச் என்று ரெண்டு கையாலும்  இறுக்கிப்பிடித்து  உலுப்ப இடம் கொடுக்கும்  இடுப்பு. மாவிலங்கு மரத்தண்டு நிறத்தில  மர்லின் மான்றோ போல நடுவகிட்டில் பிரிச்சு விட்ட அளவிடமுடியாத  தலைமுடி, அது இரணைமடுக்குளம்  கலிங்கு பாயிற மாதிரி  அப்பப்ப நெற்றியில் சளிஞ்சு விழும். அதை இடது கையால  சலிப்பேற்படுத்தாமல் காதுப் பக்கமாக  சலிச்சு விடுவாள். அது மறுபடியும் வலதுபக்கம் முட்டி மோதி விழுந்து புரளும்.

                                                   ஒவ்வொருநாள் ஒவ்வொரு டிசைனில ஜிமிக்கி பிளாஸ்  தோடு கொழுவியிருப்பாள், அதுக்கு போட்டியாக வெளிச்சத்தை வெட்டிக்  கொன்றாஸ் கொடுக்கும்  ஜிம்மிக்ஸ் போடுவாள். அதுக்கு ஒத்திசைவாக வாசமெழுப்பும் பாரீஸ் சென்ட் அடிப்பாள். அதுக்கு எசப்பாட்டுப் பாடும் லிப்டிக்ஸ் ஓவியன்  வின்சென்ட் வான்கொக்கே நினைக்காத கலரில தேடி எடுத்து அளவுக்கு அதிகமாக கொவ்வைபோன்ற சொண்டை உதடுபிரியாமல் பூசிவைச்சிருப்பாள். வலது தோள்மூட்டில சில்வண்டு டட்டு குத்தி இருந்தாள், அந்தச் சில்வண்டின் முதுகு முழுவதும் சின்ன சின்ன வட்டம் ஒவ்வொரு கலர்ல  இருந்தது.

                                                           
ஒவ்வொருநாளும் மத்தியானம்  பாட இடைவெளியில் ஒரு சின்ன ஓய்வு வரும், வினோதமான சுவிடிஷ் நாட்டுப்புறக்  குளிர் காற்று நரிபோல காட்டு மரங்களில் மோதி ஊளையிட்டுக்கொண்டிருக்கும்.  


                                           வெளியே போடப்பட்டுள்ள மரவாங்கில் நான் வந்து இருந்து சிகரெட் பத்த வைச்சு அதை அலாதியான ஆனந்ததில் மிதந்தபடி இழுத்து ஊதிக்கொண்டிருக்கும் போதெல்லாம் யுவன்னாவும் வந்திருந்து ஊதிக்கொண்டிருப்பாள், அப்போது கதைப்பாள். சலாமத்தும் அவனோட வகுப்பிலிருந்து வெளியவந்து தூரமாக நிலையெடுத்து நின்று   பார்துக்கொண்டிருப்பான்,

                                                             யுவன்னா என்னோட  ஒரு பிரெண்ட் போலவே கதைப்பாள். ஸ்ரீலங்கா பற்றிக் கேட்பாள். ஸ்ரீலங்கா சிங்கள மொழி பேசும் மக்கள் மட்டுமே வசிக்கும்  ஒரு முற்றுமுழுதான  பவுத்த நாடு என்றுதான் பிழையாக அறிந்து வைத்திருந்தாள். அங்கே மூன்று இன மக்கள் வாழ்வது தெரியாது. அதைவிட   அவளுக்கு அங்கே நடக்கும்  இன அழிப்பு யுத்தம் பற்றி ஒரு பளாயும் தெரியாது. ஆசியக் கண்டத்தில்  இருக்குதென்றும்  போதுகீஸ்,,டச்,,இங்கிலிஸ் , ஐரோப்பியர் காலனியாக வைத்திருந்த சைலோன்  என்று  அழைக்கப்பட்ட தீவு என்றும் ஜோகிரபியில் படித்ததாக சொல்லுவாள்.

                                           
அரசியல் அகதிகள் எனப்படுபவர்கள்   உள்நாடுச்  சண்டை புருஷன் பொஞ்சாதி குடும்பச் சண்டை போல சின்னதாகத்  தொடங்கி அகோர  யுத்தமாக மாறி மனிதஉரிமைகள் மறுக்கப்படும் நிலைமையுள்ள  நாடுகளில் இருந்து அந்த அந்த நாட்டு  இறமையுள்ள மக்களுக்கு இறையாண்மைப்  பொறுப்புள்ள அந்த அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்புக் கொடுக்கத் தவறுவதால் சுவீடன்  வருவதாக மட்டும் தெரியும் என்று அறுத்து உறுத்து சிவப்புப் பேனையால  அடிக்கோடிட்டது போல  சொல்லுவாள்.


                                   அது அரசியல்வந்தேறுகுடிகள் பற்றி அலப்பறை  சுவீடிஷ் இமிகிரேசன் சொல்லிகொடுத்ததை  அப்படியே கிளிப்பிள்ளை  திருப்பிச் சொல்லுவது போலிருக்கும் .

                                                             
என்னோட அதிகம் நெருக்கமாகக் கதைப்பதுக்கு ஒரு காரணம் சொன்னாள். அதுக்கும் அரசியல் அகதி நிலைக்கும் சம்பந்தமேயில்லை . பதிலாக   பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு பின்னேரங்களில் அகதி முகாம் இமிகிரேசன் வாகனங்களை  நான் ஒரு   பெரிய  கராச்சில் சேர்விஸ் ஸ்டேஷனில் உள்ளது  போன்ற  ஒரு மேடையில் ஏற்றி  வைத்துக் கழுவுவேன். எஞ்சின் ஒயில் மாற்றுவேன்,செசிக்கு கீழே  கிரீஸ் போடுவேன்.  


                                                         நானேதான் அந்த வேலை சம்பளமில்லாமல் செய்தாலும் வாயல வலிந்து  கேட்டு எடுத்துச் செய்தேன் . அது என்னோட அதலபாதாளத்தில் விழுத்துகிற தனிமைக்கு கொஞ்சம் மருந்தாக இருந்தது. எனக்குத் தெரிய அரசியல்  அகதி முகாமில் இருந்த பல்வேறு நாட்டு ஆரோக்கியமான மனிதர்கள்  வேறயாரும் அப்படி வேலை செய்வதில்லை .

                                           
எனக்கு மோட்டார் மெக்கானிக் வேலை அறவே தெரியாது. சுவிடிஷ் மெக்கானிக்  ஒருவர் வந்துதான் எப்படி வாகனங்களை கழுவித் துடைத்து பராமரிப்பது  என்றே  ஒரு கிரஷ் கோர்க்ஸ் எடுத்து சொல்லித்தந்தார்.  யுவன்னா என் மொக்கன் மொரிஸ் கறாச்காரன் வேலையை கவுரவமாக நினைப்பாள். எனக்கு முதலில் கூ ச்சமாக  இருந்த அதை எப்பவும் எழுபமாகச்  சொல்லுவாள்.  


எனக்கு ஒரு பிளாஸ்டிக்  யூனிபோர்ம் தந்து இருந்தார்கள். நீண்ட  ரப்பர் பூட்ஸ் போட்டு   அதுக்குள்ளே என்னை முழுமையாக இறக்கி சிப்பை  இழுத்துவிட்டால் விண்வெளிக்குப்போற    நாசா  அஸ்ட்ரோநட்ஸ் போல நானிருப்பேன். ஆனாலும் ஒரு யூனிபோர்ம் போட்டு ஒருவன் எந்தக் கழிசடை  வேலை செய்தாலும் அதை மதிக்கும் மிகநல்ல குணத்தை மதிக்க  சுவீடனில்த்தான் யுவன்னாவிடமிருந்து  முதன் முதலில்க் கற்றுக்கொண்டேன்.

                                      யுவன்னா  வேலைசெய்யும் மனவொழுக்கம் உள்ளவர்கள்தான் சுவிடனுக்கு தேவை என்பாள். என்னோட கசகச என்று கழுவல் துடையல் வேலைக்கென்றே வடிவமைக்கப்பட்ட   அபத்தமாக இருக்கும் அந்த  யூனிபோர்மை அழகு என்பாள். அந்த எஞ்சின்  ஒயில் சிதறி  , கிரீஸ் கொழுப்புப்   பிரண்டு, கமக்கட்டுப் பகுதியில் ஈரமாக நனைந்து  வியர்வை நாறும் ,  


                                            யூனிபோர்மில தான்  நான் ஒரு மச்சோ மசில்  ஆம்பிளைபோல இருப்பதாக சொல்லுவாள். அதால என்னை உற்சாகப்படுத்தி  சுவிடிஷ் மொழி படிகிறியோ இல்லையோ,  நீ சுவீடனுக்கு வேண்டப்பட்ட  ஆளுப்பா,,உன் எந்த  வேலைக்கும் அஞ்சாத தைரியம் உன் எதிர்காலத்தை இந்த அந்நிய நாட்டில் உத்தரவாதமாகக் காப்பாற்றும்   என்று சொல்லுவாள்.

                                                 அதைவிட என்னோட  நாகாஸ்திரம் போல  நான் எப்பவுமே யுவன்னா போடும் உடுப்பை, தோட்டை. அவளின் சப்பாதிலிருந்து நகத்துக்கு போடப்படுள்ள நெயில்பொலிஸ் வரையில்  வானிலை அறிக்கைபோல விபரமெடுத்து புகழ்ந்து கொமென்ட் சொல்லுவேன். அது அவளுக்கு மிகவும் சந்தோசம் கொடுப்பதாகவிருந்தது, அப்படிதான் அவளே ஒவ்வொருநாளும் சொல்லுவாள்.


                                           பெண்களை அப்படி கவனிச்சு சொல்லிப்பாருங்க  கட்டாயம் ஜூவால் பத்தி  ஏறும் அவர்களுக்கு. பெண்கள் அலங்கரிப்பதே  அடுத்தவர்கள் கவனிக்கத்தானே என்றுதான் நான் நினைப்பது. சிலநேரம் நான் நினைப்பது அசடு வழிவது போல இருக்கலாம், சரி ,  இருந்திட்டுப் போகட்டுமே , அதால உலகம் என்ன தன்னைத்தானே சுற்றாமலா விடப்போகுது ...

                                                       கொஞ்சநாள் சோனாலி பந்திரே பாடின பாடல்களோடு என்னோட வாழ்க்கை அமளிதுமளியாப் போய்கொண்டிருந்த போது சாலமத் யுவன்னாவைத் தனக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாயா என்று ஒரு நாள் பொதுவான சமையலறையில் சமைச்சு சாப்பிட்டுப் போட்டு பெங்காலி காதல் பாடல்கள் கேசட்டில் ஓடவிட்டுப்போட்டுக்  கேட்டான்.


                                          அட  இதில  என்ன இருக்கு  என்று நினைச்சு ஓம் என்று சொன்னேன் , யுவன்னா எல்லா மாணவர்களுக்கும்  ஒரு டீச்சர். சலாமத் என்னைப்போல  ஒரு மாணவன் ,ரெண்டுபேரும் அரசியல் அகதி, இருக்கிறது இடைத்தங்கல் முகாம்,  இதில என்ன சில்லெடுப்பு வர வாய்ப்பு இருக்கப்போகுது, இல்லையா சொல்லுங்க பார்ப்பம், ஆனால் அதில ஒரு சிக்கல் வந்தது.

                                                                
 திங்கக்கிழமை வகுப்பில் யுவன்னாவைக் கவனிச்சேன். கொஞ்சம் உடுப்புக் குறைஞ்சு வெயில் காலத்துக்கு ஏற்றமாதிரி மேலாடையாக் ஒரு ஒரு மொரோக்கன் மரக்காஸ் டுனிக்காவும், ஒரு கைகூபா றேந்தை வேலைப்பாடுள்ள  ஸாட்டின் பருத்திப் பாவாடையும் போட்டிருந்தாள்,,வழமையான டெக்சாஸ் வெஸ்டேர்ன்   சப்பாத்து போடவில்லை ,


                                                      ஒரு வலைப்பின்னல் சாண்டுல்ஸ் போட்டு அதன் நார்களை முழங்கால்வரை  கொழுகொம்பு பற்றிப்பிடிக்கும் பன்னத்தாவரங்கள் போல வேலைமினக்கெட்டுப்  பின்னி இருந்தாள் .  தோடு போடவில்லை, கழுத்தில நரிக்குறவர் போல ஊசியில கோர்த  பாசிமணி மாலை போல ஒன்றை மூன்றுதரம் நீள வாக்கில சுத்தி எடுத்து  விழுத்தியிருந்தாள்.

                                                              பாட இடைவெளியில் வெளிய மரவாங்கில யுவன்னாவோடு கதைக்கும் போது இடையில  சாலாமத்  கேட்டதை  இயல்பாக கேட்பம் என்று நினைத்துகொண்டு இருந்ததில், அவள் வந்து எனக்கு முன்னுக்கு நிற்கவும் ,   யுவன்னாவுக்கு அவளோட சோடனை பற்றிக் கொமென்ட் சொல்ல மறந்திட்டேன்,


                                      எப்பவும் வந்தவுடன அவள் அலங்காரம் பற்றி கவ்சல்யா  சுப்பிரபாதம்  சொன்னால்  உடன முகத்தில பிலோரோசென்ட் பல்ப் சூப்பர்நோவா நட்சத்திரம் வெடிச்ச மாதிரி நிண்டு    எரியும். வாய் விடாமல் மெல்லென  கன்னக்குழி விழுத்தி பழைய மொந்தையில புதிய கள்ளை  மொண்டு   சிரிப்பாள்.

                                                           யுவன்னா என்னோட ஆசிரியை, அவளை டீச்சர்  என்றோ  மேடம்  என்றோ ,,அல்லது மிஸ் என்றோ மரியாதையாக ஒருநாளும் சொல்வதில்லை, வெறுமனையே மொட்டையாக முகத்தில அறைஞ்ச மாதிரி " யுவன்னா " என்றுதான் எல்லாரும்  சொல்வது. சுவீடனில் அப்படிதான் ஆசிரியர்களைப் பெயர்தான்    சொல்லுவார்கள்.  


                                  அவர்களைப் பொறுத்தவரை மரியாதை என்பது நடத்தையில்  இருக்கவேண்டும் என்றும் சும்மா வாயால சொல்லும் வார்த்தைகளில் இருப்பதை அவர்கள் விரும்புவது இல்லைப்போலவும் இருந்தது.   அன்று எனக்கு மண்டைக்குள்ள கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததும் உண்மைதான்  , அதால சொக்குப்பொடி போடுற   மந்திரம் சொல்ல மறந்திட்டேன்

                           "  சலாமத் என்ற  என்னோட பிரென்ட்,,என்னோட  ரூமில இருக்கிறான் ,, "

                       "  ஹ்ம்ம் ,,சரி,,சொல்லு ,,அவனுக்கு  இப்ப என்னப்பா  "

                           "    அவன்  மற்ற பச்சில படிக்கிறான் ,,"

                          " ஹ்ம்ம்,, எனக்கு  ரெம்ப முக்கியம்,,இந்த  தகவல் ,,சரி  சொல்லு "

                       " அவன்  உன்னைத்  தனக்கும் அறிமுகம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளான்,யுவன்னா ,  "

                       " என்னது,,,ஹ்ம்ம்,,அட,,இதுவும்  ரெம்ப முக்கியம் இப்ப எனக்கு "

                "  ,அவனைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா, "

                  " எதுக்கு,,ஹ்ம்ம்,,என்னப்பா சம்பந்தா சம்பந்தமில்லாமல்  சொல்லுறாய் "

                       " அவன்  உன்னைத்  தனக்கும் அறிமுகம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளான்,யுவன்னா ,,,அவனைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா "

                               " புரியலைப்பா,,என்னை  அறிஞ்சு  அவனுக்கு  என்னப்பா வரப்போகுது,,சொல்லு ..நீ  முக்கியமா எனக்கு  எப்பவும்  சொல்லுற  ஒன்றை ஸ்கிப் பண்ணுறாய்  தெரியுமா  அது "

                             " சலாமத்    என்னோட நல்ல உயிர் நண்பன் , அவன்  என்னோட பெஸ்ட் பிரெண்ட்,,  அவனுக்கும் இப்ப பாட ஓய்வு இடைவேளை,,யுவன்னா  "

                                     "  ஓ, நீ  முக்கியமா எனக்கு  எப்பவும்  சொல்லுற  ஒன்றை ஸ்கிப் பண்ணுறாய்  தெரியுமா ,,  சரி  ,யார்  அது,,உன்னோட நாட்டவனா ,,"

                                  " இல்லைப்பா, சலாமத்  ,பங்களாதேஷ் "

                                 " அப்படியா,,சரி  இங்கே  எங்கே  படிக்கிறான்..  முக்கியமா எனக்கு  எப்பவும்  சொல்லுற  ஒன்றை ஸ்கிப் பண்ணுறாய்  தெரியுமா  "

                             "  இந்த பச் இக்கு  அடுத்த பச்  இல  படிக்கிறான் "

                            "  இந்த பச் இக்கு  அடுத்த பச் என்றால்,,  பிகித்தாவோட கிளாசில  படிகிறானா "

                         " பிகித்தா???  ,,அந்த  டீச்சர்  பெயர்  தெரியாது,,கிழவியா  அந்த டீச்சர் ?"

                            "  என்னது,,இப்ப  என்ன  கடைசி  வசனம்  சொன்னாய்,,திருப்பி சொல்லு "

                             "   பிகித்தா வயதான  டீச்சரா  "

                             "  இல்லை..  ,இப்ப  என்னவோ வேற மாதிரி   கடைசி  வசனம்  சொன்னாய், அதை  அப்படியே பிரட்டி மற்றப்பக்கம்  மாற்றாமல் ..   ,திருப்பி சொல்லு , ..,சொல்லுபா...நீதான் சொல்லிட்டியே  இன்னொருக்கா அதைத்    திருப்பிசொல்லு  "

                                      "   ம்                                     "      ,

                              " கடைசி  வசனம் .., அதை  அப்படியே  மாற்றாமல் ..   ,திருப்பி சொல்லு,,சொல்லு ,,இப்ப  சொல்லுபா     "

                                      "  ம்                                         "  .

                                     "  உனக்கு  இண்டைக்கு  என்ன நடந்தது,,சொல்லு,,எதுக்கு  என்னோட என்னைப்ப்பற்றி  இண்டைக்கு  எதுவுமே  கொமென்ட் சொல்லவில்லை,,  என்னைக்  கணக்கிலேயே எடுக்கவில்லை,  இப்பிடித்தான்  எல்லா ஆம்பிளையைளும்,,ஹம்பர்க் ,,ராபீஸ்.. செல்பிஸ்.., ஹ்ம்ம்..,வேற  என்னமோ  என்னமோ  சொல்லிக்கொண்டு  இருக்கிறாய்,  ,எதுக்கு என்னோட நல்ல மூட்டைக் கெடுதுக்கொண்டிருகிறாய்,,என்ன நடந்தது  உனக்கு..சொல்லு "

                                      "  ம்                                 ",

                    " எதுக்கு இந்த மவுனம்,,சொல்லுப்பா..நீ நல்ல ஒருவன்,,உன்னில நிறைய மரியாதை  எனக்கு இருக்கு  தெரியுமா,,சொல்லு  உன்  நண்பன்  சொன்ன   கடைசி  வசனம் .. பிகிதாவைப் பற்றி , அதை  அப்படியே  மாற்றாமல் ..   ,திருப்பி சொல்லு ,,சொல்லு ,,இப்ப  சொல்லு  "

                               "      யுவன்னா ,,நான் என்னமோ  பிசத்துறேன் "

                          "   அது  நல்லாத்  தெரியுதுபா ,,என்னோட பொறுமையைச்  சோதிக்காதே,,,,பாட  இடைவேளை  முடியப்போகுது,,என்னவெல்லாம் சொல்ல விருப்பமோ  அதெல்லாத்தையும்  டக்கு டக்கென்று இனியாவது நல்ல பிள்ளை போல   பிசத்தாமல்   சொல்லுப்பா ,,, "

                                                                   
நான் ஒன்று சொல்லவில்லை,அவளும் விற்றுக்கொண்டு சிகரட்டை அரைவாசியில் அணைத்து கழிவு கோப்பையில் நெரிசுப்போட்டு உள்ளுக்கு போட்டாள், பிறகு வகுப்பில என்னைக் கவனிக்காமல் பாடமெடுத்தாள்.


                                                                பின்னேரம் ரூமுக்கு வந்து சோனாலி பந்திரே கேசட்டைப் போட்டுடு, சலாமத்துக்கு நடந்ததை எங்க தொடக்கிறது  எங்க முடிக்கிறது  என்று குழப்பமாக நடந்ததை உண்மையாகவே  சொருகி சொருகி சொன்னேன் . அவன் கேட்டுமுடிய ஹஹஹாஹா  என்று சிரிச்சான். பிறகு கொஞ்சம் ஜோசிதுப்போட்டு

                                  "  சுவிடிஷ் ஆக்களுக்கு  எல்லாரையும்  எல்லாருக்கும்  பிடிக்காது போலிருக்கே,,நண்பா,,விசித்திரமான பிறவிகள் போலிருகிரார்களே.."

                              " அப்படிதான்,,நானும்  நினைக்கிறன் சலாமத் "
                         
                     "ஆனால்  உன்னோட  நல்ல ஓட்டுப்போல இருக்கே "

                    "அப்படி ஒன்றும்  இல்லை,,,சும்மா கதைப்பாள் "

                                "  சும்மா என்றால் "

                          "   சும்மாதான்,,வம்பளக்கிறது "

                       "  ஹ்ம்ம்,,சரி,,விடு  நண்பா,,,உனக்கு  எதுக்கு  இந்த சோனாலி பந்திரே பாட்டு  இப்பிடி  பிடிக்குதே,,என்ன காரணம் சொல்லமுடியுமா,,நண்பா "

                                    "  நல்ல ஒரு  மயக்கும்  குரல் "

                               "  சோனாலியும்  ஒரு  கிழவிதான் தெரியுமா,,அவளோட பாட்டை  யாருமே  எங்கள்  நாட்டில் விரும்பிக் கேட்பதில்லை "

                           "  அப்படியா,,கேட்டால்  இளமைக்குரல்  போல இருக்கே,,வசந்தகாலத்தில் மழை  மேகங்கள் திரளும் போது  வேப்பமரத்துக்  குயில் பாடுற மாதிரி  இருக்கே "

                           " அட,,நீ குயில் குரல்  கேட்டதில்லைப் போலிருக்கு "

                          " இல்லை,,எனக்கு இசை  தெரியும்,,சோனாலி பந்திரே  ஒரு அமர்களமான  பாடகி "

                              " அடச்  சீ...ஒழுங்கா கதை  சொல்லு  நண்பா,,,அவளொரு  கிழவி,,இப்ப மூசிக் பீல்ட்டிலேயே  இல்லை,,அடிச்சு  துரதிப்போட்டாங்கள்...அந்த சூனியக்காரி போல பினாத்திக்கொண்டிருகிற குரலை  நீதான்  கொண்டாடுறாய்,,நண்பா,,உனக்கு  மண்டை  சரி  இல்லையா..."

                                             என்று சொல்லி எழும்பிவந்து அந்த கேசட்டை  பிளேயரில்  இருந்து கோபமாக வெளிய எடுத்து,,காலுக்க போட்டு மிதிச்சு நொறுக்கிப்போட்டு  அப்படியே  அள்ளி  எடுத்துக்கொண்டுபோய்  கொரிடோர் வாசலில்  இருந்த ரிசைகிளிங் கொண்டைனரில்  எறிஞ்சு போட்டான்

.....................தொடரும்.............