Sunday, 17 December 2017

ஏராளம் மிச்சமிருக்கின்ற நாளை !

  " கவிதைகள் என்பது வானிலையை ஒத்ததல்ல சடக்கென்று வியாபகத்தில் ஆக்கிரமித்து பொழிய. எல்லா போக்குகளையும், ஈடுசெய்ய இயலாதவைகளையும், விநோத வகை வேர் பீடித்த உலகியலையும், ஒடுக்குமுறை பீர்க்கங்கூடு வாழ்வியலையும், உட்செறித்து ஒரு தனியன் தன் படைப்பை முன்வைக்கையில் என்ன செய்வோம். தவிர கட்டமைக்கப்பட்ட சாதாரணத்துவத்தை மீற எவன் ஒருவன் முன்வருவான் ?. "

                                 இப்படி ஒருமுறை  " இறையியல் போல தீவினையற்ற போதை "  எழுதியிருந்தார் ஷக்தி என்கிற கவிஞ்சர் .இந்த வரிகளை எவ்வளவு ஆழமாக ஒரு கவிதையை அதை எழுதியவனுடன்  உரசிப்பார்க்கிறது என்று பார்த்திங்களா 

                                                        நான் எழுதிய நீண்ட கவிதைகள் போன்ற முயட்சிகளே  எப்போதுமே திசை இல்லாமல் பினாத்துறது போல இருக்கும், முக்கியமாக எனக்கே இருக்கும். அதை ரெண்டாக,மூன்றாக உடைத்தால் என்ன என்று நினைப்பது. அது அவ்வளவு இலக்கு இல்லை. ஆதாரமான செய்திகள் அடிவேண்டும் சாத்தியம் இருக்கும், என்றாலும் சிலதை உடைக்கும் போது சின்னதாக அதெல்லாம் கனதியான ஒரு செய்தி சொல்லும் மொழியின் வீரியம் வருகிறது .

                                                                     அதனால நான் எழுதிய நீண்ட பினாத்தல்களை கொஞ்சம் உடைச்சுஇருக்கிறேன். சில இடங்களில் வரிகளை மேலும் கீழும் மாற்றிப்போட்டு பாம்பும் ஏணியும்  இருக்கிறேன். அதில ஒரு கேம்ஸ் விளையாடும் திரில் கிடைக்கும் அதேநேரம் கோணம் புதுவிதமான அனுபவமும் சேர்ந்து கொண்டது.

                                                                           மற்றபடி இந்தக் கவிதைகள் ஒரு மனநோயாளியின் மன்னிப்புக் கோரல் போல இருக்கலாம், ஏனென்றால் கொஞ்சம் உணர்வுகளோடு கை கோர்த்துச் செல்லும் காலமொன்றில் வாழும் போது இயல்பாக எழுதியவை. மேலெழுந்து மனப்பிறழ்வு எண்ணங்கள் மேவிக்கொண்டிருக்கும் ஒரு விதமான அபத்த நிலையில் இருந்து இதைப் பார்த்தால் குழப்பமாகத்தான் இருக்கும். 


                                                                எப்படியோ நவீன கவிதைகளே குழப்பங்கள் கொண்டுவரும் குறியீடுகளை மொழிபெயர்க்கும் முயட்சி தானே,,இல்லையா ?
.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
.
உனக்கும் 
உணர்வுகளுக்கும் 
எனக்குமிடையில்
குணாதிசயங்களைத் 
தனித்து அடையாளப்படுத்தும்
எதுவுமிருந்ததில்லை !

.
........................................................................
.
இன்னுமின்னும்
மனச்சாய்வுகளை எடுத்து
முடிவுகளை அனுமானிக்கமுடியாமலா
உருமாற்றிக்கொண்டு
என்னோட சேர்ந்து 
இந்த இரவும் விழித்திருக்கிறது ?
சூனிய நேரத்தை
என் தரப்பில்
மென் காதல் நிரம்பிய
மூர்க்கமுடன் எதிர்கொள்ள
ஆரோக்கியங்கள் இழந்துவிட்டேன், 

.
............................................................................
.
இது ஒன்றும் புதிதல்ல,
ஜன்னல்களை அகலத்திறந்து
திரைச்சீலைகளை நீவிவிட்டு
காற்றைக்
கைபிடித்து உள் அழைக்கிறேன்,
ஒரு
இரவுப் பறவைமட்டும்
நாதங்களில் நாக்கை நீட்டி
கிண்ணர இசையை ருசிக்கத்தருகிறது,
பெரிய நகரத்தை
சமச்சீராக இணைக்கும்
கழிமுகத்தில்
ஒரு பாதையின் முடிவில்
இருட்டின் வாசனைகள் குறித்து
தீவிரமாக ஆராய்கிற
ரெண்டு காதலர்களும்
கன்ன முத்தமிடுவத்துக்கே
தயங்கிக்கொண்டிருக்கிறார்கள் !

.
...............................................................
.
ஞாபகம் வைத்துக்கொள்ள சாத்தியமில்லாத
இலக்கமொன்றிலிருந்து
அலைபேசியைத்
தொடர்பில் அழைத்துவிட்டு
கவிதை உணர்வுகளுக்கு
ஒருசில பொதுத்தன்மைகளை
உதாரணம் காட்டென்கிறாய் !
ஏதேனுமொன்றை
வர்ணித்திருக்கலாம்தான்,
உன்னளவுக்கு
எனக்கது தெரியாதென்கிறேன் !
.

...............................................................................
.
அலுப்பூட்டக்கூடிய
மிகப்பழைய உத்தியாகத் தோன்றினாலும்
விளங்கிக்கொள்ளமுடியவில்லை
எனும் போது
வார்த்தைகளின் உண்மைத்தரம் 
மோசமானதாகத்தான்
இருந்திருக்க வேண்டுமென்றில்லை,
என்
நிஜத்துக்கு உரிமையுள்ள
அமைதி நிழல்களை
யாரும் தீண்டவேண்டாம், 

.
.................................................................
.
பிறகெல்லாம் 
நீடுகையில் பேசாதிருந்தாலும்
நினைவைக் குடையும்
உன்
உடல்மொழி ,
வெளித்தோற்றதைக் கிழிக்கும்
முகப்பாவனை,
நெற்றிமேட்டில் விழும்
செல்லக்குமிழி ,
ஓரத்தில் பிரிக்கப்பட்டு
ஆராயப்பவேண்டிய
உன் முறுநகைச்சிரிப்பு ,
அப்போதிலும்தான்
நிகழாமலே போய்விட்டதெல்லாம்
துல்லியமாக
எப்படியோ வந்துவிடுகிறது.!

.
.........................................................................................
.
தேவைக்கதிகமாக 
வெளியேதான் இருக்கிறேன்
வீடு வாசல் 
நீட்டிப்படர்ந்துபடுத்திருக்கும் 
ஒரு மரக்கிளையில்
கரணமடித்துக் களைத்த
ஒரு 

பறவை வந்திறங்கும்போது
சுவாசத்தை இதமாக 

உள்வாங்கி
நினைவுப் பெருமூச்சு !

.
.................................................................................
.
எனக்கான
ரசக்கண்ணாடியில்
என் முகம்தான் பார்க்கிறேன்
கிழவயதை
விடாப்பிடியாக நிர்ணயிப்பதுபோல 
வெள்ளை மயிர்கள்
முன்னிறுத்துகின்றன
அவற்றை
மை பூசி மறைக்கும்
உத்தேசங்கள் இல்லவேயில்லை,
மேலோட்டமாகவே
நாளைக்கே இறுதி நாளென்று
கன்னச் சுருக்கங்கள்
அவற்றைக்
கழிம்பு தடவி நிரவும்
வழவழப்பு எண்ணங்களுமில்லை!
அப்போதெல்லாம்
நாள்ப்பட்ட வலிகளென்றால்
என்ன என்று கூடத் தெரியாது
இப்போதெல்லாமது
எனக்கு முன்னமே எழுந்துவிடுகிறது!

.
..............................................................................
.
உங்களை
விண்மீன்கள்வரையில்
உயர்த்திவைப்போமென்று
உறக்கமில்லாக்
கனவுகளை மேம்படுத்தியவர்களே 
மிகச் சரியான
தந்திரத்தருணமொன்றில்
விலைபேசி
உயிரோடு விளையாடி
துருவவழிகாட்டித்
திசைவெளிச்சங்கள் விடிவதற்க்குள்
இரவுகளையும்சேர்த்தே
களவாடிவிடுகிறார்கள் !

.
..................................................................................

இல்லாத 
புள்ளிகளை ஒருங்கிணைத்து 
அர்த்தங்களையும் 
எதிர்வினைகளையும் 
நீங்களாகவே சேர்க்காதீர்கள் .
எனக்கு 
உங்களில் நம்பிக்கை இல்லை !
கண்களில்க் கிறக்கம் 
மூச்சுத்திணறல்கள் 
வலிமையான 
அன்றாட பின்வாங்கல்களிருந்து 
தப்பிப்பதற்கான 
லௌகீக வழிகளைத் தேடுவதால் 
கட்பனைகளில் 
ஒருவித தேக்கநிலை !

.
.....................................................................................
.
விண்மீன்கள் தூங்கியிருப்பதால்
ஜன்னல்களுக்குள்
நிலையெடுத்து நின்றுகொண்டு
வீதிவிளக்கோடு
முட்டிமோதிக்கொண்டிருக்கும்
மின்மினிப்பூச்சிகளின்
பின்கோட்டு அழகோவியமெல்லாம்
சிதறிவழியும் நிழல்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறாய் !
ஆழிக்கடலின் அமைதியோடு
இரவெல்லாம் ஒருவன்
மன அலைகளோடு ஒட்டாமல்
அந்தக் குறுமண் பாதையிலே
வெறுங்காலில்
நடந்தலைவதைப் பார்த்திருக்கிறீயா ?
கவித்துவ எண்ணங்கள்
கரையேறித் தவழ்ந்துமிழும்
பட்டாம்பூச்சி வார்த்தைகளோடே
வாழ்ந்துகொண்டிருக்கும்
நீயெங்கே
அதையெல்லாம் கவனிக்கப்போகிறாய் ,
சிலநேரம்
புகைமூட்டம் போலவே
அவன் அசைவுகளைக் கண்டிருப்பாய் ,
அவனின்
கொப்புளம்போட்ட பாதங்களின்
வலியுனக்குத்தெரியவர வாய்ப்புகளேயில்லை
அதைப்பற்றி
விபரமாகத் தகவலறிந்த
அதிகாலைத் துருவநட்ச்சத்திரம்
எத்தனைமுறை கண்கலங்கியதென்பது
மிகப்பிரபலமான உனக்குத்
தெரியவரவும் வாய்ப்புகளேயில்லை !

.
..........................................................................................
.
இனிமேல்
இளமை திரும்பாதென்று
மனதை நினைக்கவைத்துக்கொண்டுதான்
தினங்களைத் தொடங்குகிறேன்
வாழ்க்கை வானத்தை
நொடிகளில் அசையும் மேகங்கள்
தேர்வுசெய்யும் காலத்தில்
விரித்து வைத்திருக்கின்றன!
எனக்கு தெரியும்.
இறுதிக் கட்டத்தை நோக்கி
மெதுவாகச் செல்லும்
சகுனங்களில் ஒதுக்கப்பட்ட
நல்ல நேரம்
மிகமிகக் குறைவாகத்தானிருக்கு ,
உங்களுக்கும்தான் !

.
........................................................................
.
என்னவோ தெரியவில்லை
ஒரு
கானகப்பாதையில்
வண்ணத்திப்பூச்சியின்
சிறகுகளைத் தொட்டபோது 
என் நிறம்
சாயம் கழண்டுபோய்விட்டது!

.
............................................................................
.
பலருக்கு வாய்த்ததுபோல்
என் நிறமொன்றும்
இழுவைக்கவர்ச்சியின்
முழுமையான அதிர்வில்
அலாதியான அலங்கரிப்பல்ல
என் நிறத்தையாரும்
சிலாகித்துக்குறிப்பிட்ட
பேருவகைகளும்
எனக்கதிகமாய் வாய்க்கவில்லை.
அதைப்பற்றி நான் வருந்தவும் இல்லை.
ஆனால்
லயித்துக் கிடக்கும் நேரம்
செவ்வந்தி மலரிதழ்களை
உரசி ரசிக்க வேண்டும்,
அவற்றின் சொண்டு
தொட்டுணர வேண்டுமென்ற ஆசை!

.
.....................................................................................
.
வண்ணாத்திப்பூச்சி
நாள்ப்பொழுது தவறாமல்
அமிர்தகளி
வாச மோப்பம்பிடித்து
செவ்வந்திகளின் மாமாங்கமுகம் தடவுகிறது
சிலநேரம்
என்நிறம் மறுபடியும்
வந்தே தீரும் என்ற நம்பிக்கையில்
எண்ணங்களின் பெரும்பகுதியை
தொட்ட விரல்களில் உதிராமல் ஒட்டியிருக்கும்
வாசனைகளில்க்
குவித்து வைத்திருக்கிறேன்.

.
..........................................................................
.
ஒரு இடத்தில
ராத்திரி வீதியெங்கும்
மின்மினிப்பூச்சிகளின் ஒளிச்சுடர்,
இன்னொருஇடத்தில
மணல்ப் பாதங்களை வருடும்
மல்லிகைப்பூ வாசனை ,
மற்றோர் இடத்தில
மழையோசை கேட்டபடியே
இருட்டோடு உரையாடல்,
தேவைப்பட்ட நேரங்களிலெல்லாம்
சுயமாகவே நெகிழ்ந்து .
என்னையே இழந்துபோகவைக்கும்
என்போன்ற நட்புமனிதர்கள்,
.

..........................................................................
.
ஓசையாகவே அலையையும்
ஆத்மாவுக்கும்
பழகிப்போனதாலோ தெரியவில்லை
இப்போதைக்கு வாழ்க்கை
கணப்பொழுது அணைக்கும்
பெண்ணின்
அடர்நெருக்கம் தரும் வெப்பதைவிடவும்
சுகமானதாய்த்தானிருக்கு !

.
..............................................................................
.
என்னை 
எப்படியென்றாலும் 
சொல்லி அழையுங்கள் !
என் அம்மா போல 
அஃறிணையில் திட்டியென்றாலும் சொல்லுங்கள்,
சிரம்தாழ்த்தி
எளிதாக எடுத்துக்கொள்வேன் 1
என் நண்பர்கள்
தலையிலடிச்சா போல
டேய் மச்சான் என்றுங்கள்
வாசலோடு ஒதுங்கி நின்று
வணக்கமாகவே வரவேற்பேன் !
எனக்கென்ன வந்தது
என்
சொந்தப் பெயர்
ஒருநாளில் எனக்கே
உரிமையில்லாமல்ப் போவதுதானே ! 

.
.......................................................................................
.
எந்த இடத்திலும்
மிகையாகத் தூக்கிவிடாத ,
வக்கிரமாகத் தாழ்த்திவிடாத
சரிவுகளைப்பற்றிய கோபதாபங்களோடு

ஏதோவொன்றை
மனதில் வைத்துக்கொண்டிருந்தபடி
எழுதிக்கொண்டிருந்த
குறியீட்டுப்படிமங்களை
பொறுமையாக வாசிக்கிறேன் 
அங்கேயும்தான்
மீளப்பயன்படுத்திக்கொள்ளவே முடியாத
உள்ளோட்டங்கள்
வெறுமையாகிவிடுகிறது.!

.
.........................................................................
.

இன்னொரு 

விசம் தோன்றியது.
என்றோவொருபொழுது
பயன்படுத்திய எந்தச் சொல்லை
இற்றைக்கும்
நெகிழ்த்திப் பயன்படுத்தினாலும்
அது
ஓரங்களை உரசியபடி
பாதிப்பக்கம்தான் போகிறது
திருப்பி வாசிக்கிறேன்
அக்கணமும்
நடுக்கொள்ள நிற்கவேமுடியவில்லை
சொற்கள் எல்லாம்
தொடங்கிய இடத்திட்க்கு மட்டுமே
வைப்புமுறையில் சொந்தமானவை .
ஒரேயொரு முறை
பதியப்பயன்படுத்திவிட்டால்
சுயமதிப்பு ஆளுமைகள்
அடையாளமாகி அழுத்தமாக விழுந்துவிடுகிறது.
இன்னொருமுறை
திருத்தி வாசிக்கிறேன்
அப்போதும் சக்கைதான் மிஞ்சுகிறது !

.
......................................................................................
.
உங்களுக்கு
எத்தனை வயதாயிருந்தாலும்
மதிப்புகளில் குறைவில்லாதவரை
ஏதோவொரு பெயர் பரவாயில்லை !
என் பெயர் எனக்காக
எங்கே உரிமைகொண்டாடி நிற்கிறதென்று
எனக்கே தெரிவதில்லை !
ஒரு
கவிதைதரும் ஆனந்தங்களைவிடவும்
என்
பின்னடியில் வரும்பெயர்
யார் ஏறெடுத்துச்சொன்னாலும்
என் உள்ளாடையை விடவும்
நெருக்கமாகிவிடும் !

.
......................................................................................
.
நானொரு
மனதின் ரம்மியமான பிரதேசத்தில்
எழுத வாசிக்க மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்ட
சாதாரண மனிதப்பிறவி !
தயவுசெய்து கெஞ்சிக்கேட்கிறேன்
சொன்னபடிக்குக்
கொஞ்சமேனும் அதிகமாக
உரிமைகளை வாரியெடுத்து
என்னைக்
கவிஞன் என்றுமட்டும் சொல்லாதீர்கள்
நானே
என்னை எனக்குளே
கவிஞன் ஆக்குவதில்
நிரந்தமாய்த் தோற்றுப்போனவன் !

.
...................................................................................
.
எல்லா மூலைகளிலும் 
சமகாலத்தைப் பிரதிபலிக்கும்
வெற்றிடங்கள் ,
மானுடங்களைத் 
தழுவிக்கொள்ளும் பார்வைகள் 
இல்லவேயில்லை,
மொழிகளால் தழுவிக்கொள்ளும்
அழகானதும்
அந்தரங்கமானதுமான
சில குறிப்புக்களோடு
பட்டப்பகலிலேயே மவுனமான
ஏதோவொரு பாதையைத் தெரிவுசெய்து
கவிதைகள்
உடைந்து போகலாம்
அதைவிட
மேலதிகமாக எதிர்பார்க்கவேண்டாம் !

.
...................................................................................
.
முள்ளந்தண்டுவடத்தைக்
குப்புறவிழுத்தி
முதுகுப்பாட்டில் விழுந்த அடி!
பிரஸ்தாபிக்கும்
அடிக்குரலில் மூச்சிழுப்பு !
கைவிசிறித் துணைதேடி
கால்களைச் சவ்வடியகற்றி
எழுந்துதான் நிக்கிறேன் !
இழுத்தெடுத்து
நெஞ்சை நிமித்திக்காட்டி
சேதாரமில்லை என்கிறேன் !
திரும்பிக்கவனித்த
யாராவது பார்த்துச் சிரித்தார்களா ?
உறுதிப்படுத்துகிறேன்
மேப்பிள் இலையுதிர்மரத்தில்
ஒரேயொரு புளினிக் குருவி
கண்ணசைவில் வேறுயாருமில்லை !
அதிர்வு எல்லைக்குள்
பாடார் என்ற வெடியழுத்தம்
யாருக்கேனும் கேட்டிருக்குமா ?
அழுகிப் பிசிறுதட்டிய
என் நெஞ்சடிப்பைத்தவிர வேறேதுமில்லை !
இப்போது நடக்கத்தொடங்குகிறேன்
விரக்தி வியர்வையில் வலி !
வேகமெடுத்து ஓடுகிறேன்
விலா எலும்பு துலா மிதிக்குது !
எம்பிக்குதிக்கிறேன்
காற்று தீனமாக அஸ்தமிக்குது !
என்னையே ஏமாற்றுவதை நினைக்கப்
பெருஞ் சிரிப்பு வருகுது !
உண்மையென்னவென்றால்
அடிவிழுந்த நினைவிடத்திலிருந்து
இன்னுமென்னை
இம்மியளவும் நகர்த்தவேமுடியவில்லை !

.
........................................................................................
.
நீங்கள்
அர்த்தம் கொடுத்து
மனம் விரும்பி நேசிக்கும்
கவிதைகள் போலவே
அதை 
ஏனோதானோவென எழுதியவனின்
வாழ்க்கையையும்
கட்பனை செய்யவேண்டாம்.
முற்றுமுழுதாகவே
ஒத்துக்கொள்ளும்படியாகவே
ஏமாந்து போவீர்கள் !
படிமப் புனைவுகள் வேற
படியளக்கும்
வாழ்க்கையென்பது வேற.!.
எல்லாவற்றையும் பேசவைக்குமுவன்
அவசியங்களோடு
எப்பவும் மவுனமாகவிருக்கலாம்
ஆத்மார்த்தங்களை
அடையாளம் காட்டுமவன்
மனநிலையில் சரிந்துயிருக்கலாம்
ஊரெல்லாம்
கொண்டாடுமவன்
வெற்றிபெற்றுச் சிறந்தகவிதை
"சிகரம் தொட்ட அகரங்கள் "
நாலுநாள்
பட்டினியில்
குப்பைத்தொட்டியில்
கண்டெடுக்கப்பட்ட பேனாவால்
கை துடைக்கும் பேப்பரில்
எழுதபட்டது உங்களுக்குத் தெரியுமா ?

.
................................................................................
.
சிக்கல் ஆரம்பிப்பது
இங்கிருந்துதான்
சிலநேரம்
சில்லறைத்தனமான வம்புகளும்
கேளிக்கை நையாண்டிகளும்
ஒட்டுமொத்தமாக
அணைந்துவிட
மறுபக்கங்களில்
சமநிலையில் குழம்பியே
வெறுமை மட்டும் மிஞ்சிவிடலாம்
நட்பிலும் !

.
.............................................................................
.
எப்போதாவதில்லை
எப்போதுமே
இப்போதைய இரவுகளில்
விண்மீன்களை எண்ணமுடிவதில்லை !
நேர்கொண்டு நிமிர்ந்த நேரங்களில் 
பால்வீதியெங்கும்
வெள்ளிச் சலங்கைகள் தெரிந்தாலும்
சப்தங்கள் இல்லை !
நானும்தான்
தேய்ந்துகொண்டே வளர்க்கிறேன்
அழிந்தபின்னும் பிறக்கிறேன்
மனச்சார்பு நிலைகள்
நெருக்கும் சூழ்நிலையைப்
பொறுத்தவரை தற்காலிகமானவை என்றது
பவுர்ணமி நிலவு !.
பலம் பொருந்தியவையெல்லாம்
வானவீதி முழுவதிலும்
சதிக்கூட்டுசேர்கின்றன !

.
.................................................................
.
ஒரு நட்ச்சத்திரம்
ஒட்டுப்பிரித்து வீழ்ச்சியுறும் போது
ஒரு
அறுதித் தீர்மானத்தை
இறுதியாக நினைத்துக்கொண்டு
பிணைப்புக்களை அறுக்கலாம் ,
இப்பிடித்தான்
சுயநலமாகத் தப்பித்து ஓடுவத்துக்கு
நானும் தயாராகிறேன்
ஆனால்
தயக்கங்கள் நிறையவேயிருக்கு .!

.
....................................................................................
.
எங்கிருந்தும் 
வார்த்தைகளைப் 
கடன் பெற்றுக்கொள்வதில்லை
இலக்கண 
கட்டமைப்பு வடிவங்களைத் 
தவணைமுறையில்
வாங்கிக்கொள்வதுமில்லை
அதன்
இலட்சியங்கள்
யாரையோ எழுதவைத்து
உள்ளிருப்பதை வெளிக்கொணர்வதுதான்
அதை நிகழ்த்தியபின்
விடுதலையடைந்துகொள்கிறது
மொழி !

.
................................................................................
.
எனக்குள்ளேயே 
அலைந்துகொண்டிருக்கிறேன்,
வெய்யிலின் 
வெளிச்ச வேடங்கள் 
விழுந்துகொண்டேயிருக்கின்றன. 
கறுப்புநிறம்
குளிர் முன்னிரட்டை
அணைக்கப் பிரியப்படுகின்றது.
தனிமை வாந்தியெடுக்கும்
மனஅழுத்த எரிச்சல்களை
பெருமூச்சுக்களாகவே
அமிழ்ந்து போகவைக்கிறேன் ,
வெளியே
என்னைப்போலவே
மழையும்
தீக்குளிக்குது !

.
...............................................................
.

நேற்றுக்கள் 
மீதமில்லாமல் 
மேலெழுந்து வருகிறது ,
அதில் 
இன்றைய பார்வைகளை 
அடையாளம் காட்டித்
தலையாட்டும்
வெறுமை,
என்னையே
மேலதிகமாகச் சித்தரிக்க
உரையாடல்களற்று
மவுனமாகவிருப்பதைத் தவிரவும்
இன்றையநாட்களில்
செய்வதுக்கு
வேறு ஏதுமில்லை !

.
.................................................................................
.

உங்களைப் 
பின்தொடர்ந்துகொண்டிருக்கும் 
பெரும்பாலான
துயரசம்பவங்களிலும் 
சிதறடிப்புகளிலும் 
அவநம்பிக்கையிலும்
வாழ்வை விலகி நின்று அவதானிக்கும்
மையமாக
வெளித்தோற்றமாக
அகக்கிளர்ச்சியாக
இறுதியில் விட்டுச் செல்லப்பட்ட
நானுமிருக்கலாம் !

.
............................................................................
.

அவள் 
இருபது கடிதங்கள் எழுதியிருக்கிறாள் 
என நினைக்கிறேன். 
அதை ஒரு 
காலம்முந்திய 
வாழ்க்கை மட்டுமே என்றுதான்
அலட்சியமாய் நினைத்திருந்தேன்
சிலசமயம்
சிரித்திருக்கிறேன்
இதற்குப் பல காரணங்கள்!
என் வழியாக
முக்கியமான சமகாலதில்
அவளும் ஓடிச்சென்றிருப்பதை
இன்றுதான்
தாமதமாகவே உணர்கிறேன்.

.
................................................................................
.
மங்கலமான
அடர் வெள்ளை
நிறத்திலேயே
அலங்கோலமான
எண்ணத்தை 
நிரூபிக்கக் கொடுத்துவிட்டு
கேலிசெய்துகொண்டே
வேகமெடுக்கும் தீற்றல்களின்
விரகதாப மோதல்களில்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றது
ஒரு
விதவையின்
ஏக்கமெல்லாமாகிய மனது !
.

......................................................................................
.
எழுத்தாளனுக்கு
ஆறுதல்ப்பரிசு
ஆரம்பித்துவைக்கப்பட்டதே
அலட்சியமாக,
பெருங்கவிஞ்சனின் 
மூன்றாம்பரிசுபற்றி
முடிவெடுக்கத் தாமதம் ,
புனைகதாசிரியராக
இரண்டாவது பரிசுக்கு
தகுதியுடைய போட்டியாளர்கள் பலர்,
இருந்தாலும்
எழுத்தாளுமைகுரிய
முதல் பரிசு
தகுதியுடையவருக்குக்
கிடைக்காமல் போகலாம் என்பதில்
வாசகனுக்கு
எந்தவித சந்தேகமும் இல்லை !

.
..............................................................................
.
பருவநிலவு இரவுகளில்
கனத்த தலைப்பாரங்களுடன்
நானும் நானும்தான்
பேசிகொண்டிருப்போம்,
சிலநேரம் 
காதுக்குள் வந்து உக்காந்துகொண்டு
நிமிஷநேரம் கண்ணயரவிடாமல்
சங்கீதம் பொழியும்
லேசாகத்திறந்த ஜன்னல்,
வயதான இந்த அறைக்குள்
நானும் நானும்
நானுறு வருடங்கள் அலைக்கழிந்தகுரலும்
பிரிக்கமுடியாமல்
நீடித்திருப்பதே அதிசயம்தான்,

.
...........................................................................
.
பார்வையை முன்னிலைப்படுத்திக்
கழுகின் கழுத்தில்
தொலைதூரநோக்கி,
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட
மரமேறும் அணில் கையில் 
சின்னக் கோடாலி,
அலைகள் ஓய்ந்த பின்னர்
வாத்தின் பாதங்களில்
ரப்பர் மிதப்புக்கள்,
சமுத்திரங்களில் அதிர்ச்சி ஏற்படுத்திய
டொல்பினின் முதுகில்
ஓட்ஸிசன் சிலிண்டர் ,
உத்தரவாதமாகப்
பரிணாமத்தைப் பரிகாசிக்குது
எளிமையானவொரு
காப்புறுதி நிறுவனத்தின்
விளம்பரம் !

கவிதை
காலத்தின் விதிவிலக்கென
எப்போதும் நம்பியதுமில்லை !

.
............................................................................
.
ஒருக்களித்த ஓடுகள் 
நீவல்விட்ட
வெளித்தாழ்வாரத்தோடு
நீங்கள்
நின்றுகொள்ளுங்கள்,
எனக்கெங்கோ
பிசகென்று முடிவெடுத்தாலும்
கோபங்கள் இல்லவேயில்லை
குடிவந்த நாளிலிருந்து
எப்போதும் திறந்தபடியேயிருக்கும்
நாள்ப்பட்ட அறைக்கதவை மட்டும்
முஸ்டியிறுக்கித் தட்டவேண்டாம்,
முடிந்தால்
ஆறுமாதக் கர்ப்பிணிபோல்
வயிறுபெருத்த பவுர்ணமியை
அடர் இரவில் மறைந்துநின்று
கொஞ்சநேரம் ரசியுங்கள் !

.
............................................................................
.
வெள்ளிக்கிழமை
கழுவித் துடைத்து
சாணமிட்டு மெழுகியதுபோல
மனசாட்சி,
அது 
கிழக்கு வானில்
எண்ணிமுடிக்க முடியாத அளவு
விடிமுன்வெள்ளிகள் போலவே
மனோபாவங்களில்
சாத்தியங்கள் நிறயவேயிருந்த
சென்ற வருடம்,
.

..................................................................
.
சமரசங்களின் கட்டுமீறி
முடிவிலாதவொன்றோடு
முட்டி மோதிக்கொண்டு
இன்றைய நாள்,
நெஞ்சு வலிக்கும்
இருண்ட பிரதேசங்கள்
சோளகக்காற்றைப்போல கடந்துசெல்ல
ஏராளம் மிச்சமிருக்கின்ற
நாளைக்கும்
அதுவே நடந்தால்
எதிர்காலம் உள்ளீடுகளைத்
தேர்வுசெய்யும் வருடமொன்றில்
சந்திக்கிறேன் !

.
.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;