Saturday 16 June 2018

அவளைப்பொறுத்தவரை...












சென்ற வருடம்   முகநூலில் நிலைத்தகவலாக எழுதிய எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவைகள்  சிக்கனமான வகையில் சுருங்கச் சொல்லும் வடிவ  எழுத்துருக்கள், நேரமெடுத்து வாசிக்க  எவ்வளவு பொறுமை இருக்கோ அந்தளவில் வாசித்துக்கொளுங்க!


*

புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத 
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
கவிதைத் தொகுதி.....


*.
தனியாகக் 
குறுக்கிக்கொண்டு 
மழை அழுதுமுடித்த கணம் 
நடைப்பாதையில் 
வட்டமாகத் 

தேங்கும் தண்ணியில் 
முகத்தைப் பார்த்தால் 

ஞாபகம் வரும்,
பூர்வீக வீட்டுக்
கட்டுக்கிணறு 


*


சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....



*

பால் 
நிலவு நாட்களில் 
பாக்குமரங்களின் 
நிழலசைவுகள் 
குளிக்கும் தொட்டியில் 
முங்கி இறஙகி முழுகி விளையாடும், 
விடிவை முந்திய 
காலை
பாதிவரை தேய்ந்த படிக்கல்லில் 
வாசசந்தனம் அரைக்கும் 
பாட்டி ஞாபகம் ,!




*
புயல்

வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு 



*

ஒரு 
திருக்கார்த்திகை 
விளக்கீட்டுநாள் 
தட்செயலாகத் தவறிவிழுந்த 
பித்தளை சொம்பு 
நீர் மொண்டுகொண்டு வரும்,
மனஅழுத்த நாட்களோடு 
போராடிக்கொண்டு 
தோய்கல்லில 
யோசித்து உட்கார்ந்திருந்த 
பெரியக்காவின் 
உயிரோடிருந்த வருடங்கள் 
ஞாபகத்திலேறி வரும் !


*

உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..



*

பார்த்திங்களா 
மழை 
அள்ளிக்கொட்டிப்போட்டு 
தவறவிட்ட எல்லாவற்றையும் 
கூட்டிப் பெருக்கி எடுத்ததால் 
நேற்று 
ஒருநாள் மட்டும் 
எங்கள் வீட்டுக் 
கட்டுக்கிணற்றடியில் 
நிறைவாக வாழமுடிந்தது.
*

மலர்களின்
அவல
ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.

*


நிறைமாத மேகத்துக்கு 
பிரசவ இடமொதுக்கும் 

வானம், 
ஒழித்துப் பிடித்து விளையாடும் 
ஒட்டுப்பொட்டு 

நட்சத்திரங்கள்.
உருப்பெருக்கிக் கொண்ட
அலைகளின் விளிம்பில் 

கடல்
கட்டாக்காலியாக அலைச்சலுறும்
சாம்பல்க் கழுதைகள்
வெளுத்தபாலைப் பிரதியெடுக்கும்
வெள்ளைப் பவுர்ணமி 

நிலவு
இப்படியேதான்
கனவில் வந்து உட்காரும்
முடியாத வாசம் !



*
மிச்ச ஆயுளையும் 

வாழ்ந்துவிடச் சொல்லும் 
ஆசைகளோடு 
பிரிந்து சென்ற இடங்களுக்கு
மீண்டும் செல்லவேண்டும் !
பிடிப்புக்கள் 
நெருங்கி வருகிறதெல்லாம் 
எப்பவோ முடிந்த எதற்காகவா ?
இல்லையேல் 
யாருமில்லாத யாருக்காகவா ?
இல்லையேல் 
பழங்கனவிலிருந்து முழிக்கவா ?. 


*
கிணற்றைச் சுற்றிக் 
இரவாகவும்

பகலாகவும் காவல்

தலையைக்குணியமறுத்த 
இப்பில்இப்பில் மரங்கள் 
நினைவுகளில்

இலை துளிர்க்கும் , 
சேறையும் பாசியையும் 

அள்ளிக்கொண்டு 
நாலுமுறை 
அடிநெளிந்த தகரவாளி
ஏறிவருவார
கொட்டுத் துலாமரத்தில் 
பிரயாசையோடு துளைப்போட்டு 
தன்னம்தனியாகக் குடியிருந்த 
கரிச்சான் குருவி.

முன்னுக்குவரும், 

*

சொல்லமுடியாத 
கதை 
எழுதவிரும்பாத 
வார்த்தைகள் 
தனியாகக் 
காற்றில் அசைந்து 
யாருக்கு 
அர்த்தம் கொடுக்கப்போகுது ?. 
மறந்தும் 
விடமுடியவில்லை !

*



மூச்சடங்கிய இருட்டில் 
வரலாற்று ஆவணத்தில்வராத 

ஒரேயொருவனின் 
இலட்சியத்துக்கும் 
அவனைத் தவிர்த்த 
மற்றெல்லாரின் விருப்பத்துக்கும் 
மத்தியில் நழுவுகிற 
அசரீரி இடைவெளிகளில்
இன்னொருமுறை
 நடந்துபோய்த் 
தேடியடைய முடிந்தால் 
இன்னொருமுறையும் 
காலடிச்சுவடுகளைக் 
கண்டுபிடிக்கலாம் !

*
ஒரு கணம் 
ஆழ்ந்த மௌனம் நிலவிய
அவள் முகத்தில் 
வெட்கம் நிரப்பி 
கிறுகிறுக்கவைக்கும் புன்னகை,.
சங்கடப்பட்டு நின்ற
உரையாடல்
வாக்கியங்களின் கைகோர்த்து
நீடிக்கும் போலிருக்கிறது .
இது
அவளைப்பொறுத்தவரை
ஆழ்ந்திருக்கும் கனவாயிருக்கலாம்
இது
மகோன்னதமான
என் கொண்டாட்டம் !

*
மௌனமாய் 
பின்விளைவுகளில் 
மறையும் நினைவிடங்கள் ,
விரட்டும் 
நிரந்தரமற்ற கனவுகளில் 
கொடுமைகள் ,
அவற்றைவிட
விரைந்து பின்வாங்கும்
நெகிழ்வான நினைவுகள்,
ஆர்ப்பரிக்கவேண்டிய
நம் காலத்தில்
நமக்குரியவைகளே
உக்கிரமாக
இறந்தகாலமாகிவிடுகின்றன !

*
அலங்காரங்கள்
அனைத்துக்கும் அப்பால்
ஒரு
பூஞ்சோலையின்
துவக்கத்திலும் முடிவிலும்
அப்படியென்னதான்
இருக்கிறது ?
ஒரு
புல்லாங்குழல்
ஊஞ்சலாடிக்கொண்டே
உள்ளிழுக்கும்
இளவேனில்க் காற்றின்
ஓசை நயத்தில்
உங்களைத்
தொலைத்துப் பாருங்கள்,
அப்போது தெரியும் !

*
பொருந்தி வாசிக்கும்
கண்களும்
இட்டு நிரப்பும்
செவிகளும்
விருப்பத்துக்குரிய 
நிழல் சாய்த்து
அசைகளை உருவாக்கி
அபூர்வமாகவே
ஆழ்மனத்தேவைகளை
ஒப்புக்கொள்கிறது !
ஏனெனில்,
அவற்றுக்கான குரல்
உள்ளத்தில்
எப்போதும் இருப்பதில்லை. !

*

அவ்வப்போது
தவறான முடிவுகளோடு
அழைத்துச் செல்லும்
அச்சுறுத்தலான
பாதைகளில்க்கூட 
விசித்திரமான
சுவாரஸியங்களிருக்கலாம் ,
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
வெகு நேரம்
நீடிக்கும் போலிருக்கிற.
மிகவும் பிடித்தமானது
மிக ஆழமான
ஏதோவொன்றைத்
தேர்வு செய்வதுதான்
கடினம். !

*

ஊடுருவிச் செல்லும்
எண்ணங்களின்
மாய உள்ளடக்கம் ,
அதன்பின்…
தொடர்நிகழ்வுகளாய் 
மீளமுடியாத
அசாதாரண ஒலிகள் ,
தேர்ந்தெடுக்கப்பட்ட
எதையெல்லாமோ நம்புகிற
பயம்கள் ,
சிந்திக்கமுடிந்த
ஓர் கட்டத்தில்
ஆவிகளின் நிழல்கள் போலவே
பிரதிபலிக்கப்படுகிறது
தனியிரவு !.










.