Thursday 9 August 2018

வரலாற்றின் விருப்பம் !

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் அது கொஞ்சம் அவசரமாக  அலட்டிக் கொள்வதுதான்போலிருக்கு . வரலாறு எப்போதுமே ஒருமித்த திசையில் ஒத்திசைவான கருத்துக்களுடன் பயணிப்பதில்லை. வேறுபாடான  கொள்கைகளோடு முட்டி மோதிக்கொண்டே நிறையப் பலமான விசியங்களே பலவீனமாகிவிட்டது.  அதில ஏகப்பட்ட குளறுபடிகள் இன்னமும் மறைக்கப்பட்டு இருக்கிறது.


                                                              பலநேரங்களில் இவற்றை எல்லாம் எதுக்கு இப்போது சொல்லவேண்டும் என்று நினைப்பது . ஆனாலும் சில கனதியான நாட்களில் சிலதைப் பதிவுசெய்துவிடும் போது மனது லேசாகிவிடுவது போலிருக்கும். அப்படி எழுதியவைகள் இவைகள் , தவறவிடாமல் தொகுப்பு ஆக்கியுள்ளேன் .


                                                                மின்னெறிஞ்சவெளி வலைப்பூங்காவில் இவைகளும்  நடுகற்கள் போல இருந்திட்டுப் போகட்டுமே



*





இரண்டு தளபதிகளும் 
கிழமையொருநாள் 
நட்பாகக் கை குலுக்கினார்கள்,


ரகசியமான 
முன் எச்சரிக்கைகள் 
மொத்தத்தையும் திரட்டிக்கொண்டு
தீர்ப்பு நாளுக்குள்
இறங்கியடிக்கக் காத்திருந்தது,


பனி மூடியிருந்த
அராலித் தரவைக் கடலும்
வெள்ளைவாய்க்காலும் சந்திக்குமிடத்தில்
ஆள்காட்டிக் குருவிகள்
தயங்கியபடியே
நாடோடி யாத்திரைக்காரணின்
அகாலமான முடிவுபற்றிப் பாடுகின்றன,


எதிர்காலத்துக்கு எந்தவிதமான
உத்தரவாதங்களும் தரமுடியாத
இந்த
ஒடுக்கமான வர்ணனையை நீங்கள்
பொய்யென்று சொன்னாலும்
பரவாயில்லை


சொல்லியேவிடுகிறேன்
பொழுதொன்றில்
அவர்கள்
ரவைகள் ஏற்றிவைத்த
துவக்குகளை நீட்டிக்கொண்டு வந்தபோது
இவர்கள்
வீங்கிச் சிவந்து கசியும்
கண்கள் திறக்க முடியாத
நோயின் உபாதையில்
அரண்டு கலைந்து

சுருண்டு கிடந்தார்கள் !


சிதைக்கப்பட்ட
அறைக்குள் வைத்துதான்
நினைவுக் கதவுகளை
இறுக்கமாக மூடியிருக்கிறார்கள் !



தாழ்வாரத்திலும்
வாசல்ப் படிகளிலும்
விழிசொரிந்த மேகங்களின்
மேமாத மழை நீராலும்
ரத்தத்தைக் கழுவமுடியவில்லை !



ஆயிரம்முறையும்
மன்னிக்க மனதில் இடம்வைக்காமல்
கடைந்தெடுக்கிற கண்களில்
தளபதின் கையில்
ஆட்டொமேடிக் கலாஸ்னிக்கோ 47 !



அந்த இவர்கள்
கண்களை ஒருமுறை திறக்கவே
நேரம் இருக்கவில்லை
அதட்குள்
எல்லாத் தலைகளுமே சிதறிவிட்டது!





*




நம்பமுடிகிறதா ?
ஏதுமறியாமல் 
அதுபாட்டுக்குப் பூவரசம் பூக்களோடும் 
தைலமர வண்டுகளோடும் 
உச்சிக்கொட்டி விடிகாலை,!




திட்டமிடுதல்கள்
கசிந்துகொண்டிருப்பது பற்றியெல்லாம்
நாலு திசைகளிலும்
வெக்கப்பட்டுக்கொண்டே
இயலாமையில் மவுமான
அந்ரங்க அமைதி,!



கற்றைக் கோடு கிழிக்கும்
விசிலடிப்புச் சத்தங்களுடன்
குறிபார்த்து நேர்கோட்டில்
தணல் உரசிய
சடசடசடசடசட என்ற
சனங்களின் சிதறல் வெடிப்புகள் !



தெருவோரப் பாதிகளில்
சிதறி விழுந்த தசைகள்
வைகாசி வெய்யிலில்
சட்டென்று
காய்ந்து போன இரத்தம்,



மின்விளக்குகளில்
விரல்கள் முறிக்கப்பட்டுப்
பிணைக்கப்பட்ட புறங்கைகள் ,



சந்தையருகில்
சவுக்கம் தோப்பில்
முச்சந்திமுடுக்கில்
முகங்களில் இலையான் மொய்க்கும்
உருக்குலைந்த சடலங்கள் !



வாய்திறக்க முடியாத
இனமொன்றின் ஈரமில்லா ஓரவஞ்சனை
நடுவில் முறிக்கப்பட
அதட்டி எழுப்பப்பட்ட
சிதிலமாக்கப்பட்ட நீண்ட கனவு , !



ஒரு கணம்
நம்பத்தான் முடிகிறதா ?
முப்பத்தியொரு வருடங்களின்முன்
இந்த வாரத்தில்த்தான்
இதெல்லாம்தான் நடந்தேறியதை ?








அந்த
அமைதியலைந்த சனிக்கிழமை ,
அந்தத்
தந்திரச் சுற்றிவளைப்பில்
செம்பாட்டுமண் செறிவில் 

கிழக்குப் பார்த்த புகையிலைத்தோட்டம் ,



சீமைக்கிளுவை வேலிகளில்
ஆங்காங்கே முருங்கைப் பூக்களையும்
பதறவைத்த
காட்டுத்தனமான கூச்சலடங்க
தனித்து ஒருமித்த
தானியங்கித் துப்பாகியொன்றின் முழக்கம்!



பிறகு
செம்புலப் பெயர் நீர் போல
அன்னங்கை மண் உறிஞ்சிய இரத்தம்
பிறகுகளை முடிவாக்கிவைக்க
ஒரு
சுருக்கமான விளக்கம் !



வன்முறைகளை
முடிந்தவரை எதிர்ப்பதுபற்றி
அனுதாபங்களை வேண்டிக்கொள்ள
எதிர்பார்க்கப்படும் மொழியில்
அந்த
முடிந்துபோன சம்பவத்தை
சுழண்டுகொண்டிருக்கும்
மனதின் கண்களிலிருந்து
வெளியேற்றி
இனியொருபோதும்
நகரவேமுடியாதவாறான
சதுரமொன்றுக்குள் அடக்கிவிடுவது
என் நோக்கமல்ல !



ஆனால்
வரலாற்றின் விருப்பம்

அதுவாகவேயிருக்கும்
மயக்கம்தரும் பொழுதொன்றில்
முகத்தைப்
புற முதுகின் பக்கமாகத்
திருகித் திருப்பி வைத்து ,
தீக்கோழிகள் போலவே
தலைகளைப் புழுதியில் ஆழப்புதைத்து ,
குரல் அடைத்த அத்தனை
மனிதாபிமான மனசாட்சிகளும்
குற்றவாளிகளே !




No comments :

Post a Comment