Sunday, 18 June 2017

முன்னுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி !

விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி,
                                                                 சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,தன் தாயார் இரத்த அழுத்தத்துக்கு பாவிக்கும்  குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்டன.
                                                           சிவரமணி தன்னோட தற்கொலையை மிகவும் நேர்த்தியாகப் பல நாட்கள் சிந்தித்து எடுத்தது போலவே உள்ளது அவா எழுதியுள்ள கடைசிக் கவிதை ,,அதில் . "எந்தவிதப் பதட்டமுமின்றி சிந்தித்து நிதானமாக எடுத்த முடிவு இது ;எனினும் எனக்கு இன்னும் வாழ்க்கை அட்புதமாவே உள்ளது...." இப்படி எழுதிய அந்தக் கவிதை முடிவில் இன்னும் இறுக்கமாகும்
                                                                   " இந்த முடிவுக்காக என்னை
மன்னித்துவிடுங்கள்.மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை.எனது கைக் கெட்டிய வரை
எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்.நீங்கள் செய்யக்கூடிய உதவி ஏதும் எஞ்சி இருந்தால் அவற்றையும் அழித்து விடுவதே. ",,இப்படி நிஜ வாழ்கையில் முடிந்தே போனது சிவரமணியின் உலகம் .
                                                                 சிவரமணி எங்களின் ஊரிலதான் உயர் கல்வி அறிவுள்ள பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் சிவகங்கா என்ற  ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத, அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம்,
                                                            சிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.
                                                          மர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,
                                                                       அப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள். ஒரு பெண்ணின் சமூகப் பார்வை, துவக்குகளை காவிக்கொண்டு திரிந்தவர்கள் சந்தியில் நிக்கும் போது அவர்களை விமர்சித்த அபாரமான  துணிச்சல் 
                                                       மிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா.
                                                                  சிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை அரசியல் பின்புலங்களின் ஆளுமைகள் நிராகரிக்கப்பட்டு வெறும் பயல்கள் சண்டியன்கள் போல இயங்கிய காலத்தில்  இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.
                                                                               சொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விட வித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் " கொன்பெஸ்சனல் " ஸ்டைலில், அலன் ஜின்ச்பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..
                                                                         ஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை " ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்...." என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக "....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... " என்று எழுதத் தொடங்க வைத்தது காலம்.,அந்தக் கவிதை துவக்கு நுனிகளை மடக்கியது. அப்படியான வைராக்கியமான வார்த்தைப் பிரயோகம், அப்புறம் விடுவாங்களா வில்லவராசங்கள்!
                                                                  துணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும் “வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....” என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத்தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.
                                                                 எண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக முக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.

                                                                      தற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் "விழிப்பு " பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளா . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...
                                                                   யாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர் கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை "....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.." என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலாதாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,

                                  அது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது. காலம் காவுகொண்டுபோன ஒரு பெண்ணின் கவிதைகள் சிறகு முளைத்து திசைகளைத் தாங்களாகவே தேடி எடுத்துக்கொண்டு  பறக்கத்தொடங்கின. இன்றைக்கு கவிதை எழுதும் பலர் கட்டாயம் சிவரமணி கவிதைகள் சிலதையாவது படிக்கவேண்டும். அதில் நிறையவே வடிவமைப்பில் வார்த்தைகளைத் தூக்கிநிறுத்தும்   ச்ற்றக்சறல் போர்மேசன் என்ற உத்தி இருக்கு. 
                                                                இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப்படு கொலைக் குளறுபடிகள் , இந்தியஅமைதி காக்கும் படை அமைதியை விலை பேசியது போன்ற , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் காலப்பதிவின்  குரல்வளையாக மாறியவர் சிவரமணி. ஆனால் அந்தக் காலம் காலனின் கண்காணிப்பு அதிகமான காலம். 
                                                                        சிவரமணியின் காதலன் தில்லை ....என்ற இயக்கத்தில் இயங்கியதால் கடத்தப்பட்டு காணாமல் போன போது  ஒரு விதமான நம்பிக்கை அற்ற இருட்டு சுற்றி வளைக்கும் கனதியான வருடங்களில் சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .
                                                                 சிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக்  கவிதை என் வயதான மண்டைக்குள் முழுவதும் இப்போது  நினைவு இல்லை, ஆனால்     அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் " ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ...." எண்டு. நியாயமான கேள்விதான் . ஆனால் எங்கள் வாழ்வே அந்தக் காலகட்டத்தில் தொடக்கமே இல்லாமல் இருந்ததே சர்வேஸ்வரா !

                                                          ஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்து ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.
                                                     சில கவிதை வரிகளையும் , அதை எழுதியவர்களையும், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், எழுதவேண்டி ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளையும்,  அவளவு சுலபமாக வெறும் வார்த்தைகளோடு சமாதானம் செய்துகொண்டு போனாப்போகுது  என்று சமரசமாகி  இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது. இதுதான் வாழ்க்கை...!
.
//// 19.05.14./////

1 comment :

  1. ஒரு விதமான நம்பிக்கை அற்ற இருட்டு சுற்றி வளைக்கும் கனதியான வருடங்களில் சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ///

    கனதியான நினைவுகள்

    ReplyDelete