Saturday 17 June 2017

அனாமிக்காவின் முதல்க் கருக்கலைப்பு...

அனாமிக்காவின்
முதல்க் கருக்கலைப்பு
எப்படி நிகழ்ந்ததென்று
மண்டியிட்டு அழுதிருக்கிறாள்
ஏனப்படி நடந்ததென்று
சொன்னதேயில்லை
பதின்வயதில்
வண்ணாத்திப்பூச்சியின்
முதல்முதலான சிறகோடு
ஆசைகள் பறந்துகொண்டிருக்க
அசம்பாவிதம் போல
சுயபுத்திதியைச்
சுவாரசியங்கள் திரத்தியபோது
தீர்ந்துபோன பழையகதை
என்றாள்
மூச்சை வீச்சாக்கி
முண்டியடிக்கும்
உணர்வுகளை அவளாகவே
முன்னுதாரணப்படுத்துவதில்லை
இந்த ஒரேயொரு
சம்பவத்தை தவிர்ப்பதைத் தவிர
ஏனென்றால்
அவள்இப்பவும் சின்னவள்.

சிலநேரங்களில்
சாப்பிடும்போது
புரைக்கேறி தும்மிவிடும் போது
ரணமான கணங்களின் பிரதிநிதியாக
தசைகள் சரணவாதம் போல
இறுக்கிப்பிடித்து வலிமீட்டலாம்
நின்று நிமிரமுடியாத நாரி
சுருண்டு விழுந்துவிட்ட
இரவெல்லாம்
வலியோடு வடிந்த இரத்தம்
கர்ப்பப்பையின்
சதைகளைப் பிடிங்கிக்கொண்டு
திட்டுதிட்டாக் காவுவேண்டியநேரம்
பிறக்கவைக்கும் கனவுகளும்
நனைந்து கசிந்து
வெளியேறிவிட்டதாகச் சொன்னாள்
அது கடந்து
எத்தனையோ வருடங்களாகிவிட்டது
இப்பவும்
சின்னக் குழந்தைகள்
வாஞ்சையோடு மடிஏறி விளையாட
நெஞ்சோடு அள்ளியணைக்கும்
அனாமிக்காவின் கண்களில்
தடம்புரண்ட இடத்தில்
நகராமலே நிக்கும் உயிர்ப்பிருக்கும்
இதை
இன்னும் எத்தனை யுகங்கள்
சமாளிப்பாளோ
நான் அறியவேஅறியேன்!

இன்று பிறந்தவள் போலவே
சிரித்துக்கொண்டு தனித்தே புறபட்ட
பயணங்கள் எல்லாவற்றிலும்
அனாமிக்கா
இல்லாத பொல்லாத
எதிர்பாராத திருப்பங்களில்
சரியான பாதைகளைத்
தவறிடுவாளோவென்று பதற்றமாகவே
நானிருந்தேன்
சாம்ராச்சியங்கள்
காலைவாரிய தலைகுனிவுகள்
தூங்கிவிட்ட வரலாறுகள்
இவையெல்லாம் தூவப்பட்டிருக்கின்ற
இடங்களையே
சாதுரியமாகத் தேர்ந்தெடுத்து
சலிக்காமல் சுற்றிக்கொண்டு
வாழ்ந்தேவிடுவாள்
குழந்தைகளின்
வியப்புக்குரிய கண்களோடு
உள்வாங்கிய எல்லாவற்றையும்
சொல்லி முடிக்கும்போது
ஒரு சந்தோசப்
புன்னகையை ஒட்டவைத்து
முதிர்ச்சியடைந்துவிடுவாள்
தூரங்களை
முகத்தில் தேக்கிவைத்திருக்கும்
அழகான இளம்பெண்ணின்
ஆதர்சமான தேடலுக்கு
வலுக்காட்டாயமான விவரணைகளைத்
திணிக்க விரும்புகின்ற
இந்த
உல்லாச உலகம்
அனுமதிப்பதில்லை
நேரடி அனுபவங்கள்
வசீகரங்களை உண்டாக்கியது
எப்போதுமவள் முகத்தில்
தூசுபோலப் படிந்துகொண்டிருந்தது
எதிர்மறையான கசப்பு
அனுபவங்களையும்
அவள் ரசித்திருக்கலாம்
அதனால்தான்
குழந்தைகள் போலவே
அவளால் பரிசுத்தமாகச் சிரிக்கமுடிகிறது.!


2 comments :

  1. குழந்தை போலவே அவளால் பரிசுத்தமாக சிரிக்க முடிகிறது அவசியமானது. அருமை

    ReplyDelete
  2. பிறக்கவைக்கும் கனவுகளும்
    நனைந்து கசிந்து
    வெளியேறிவிட்டதாக சொன்னாள் ///
    வித்தியாசமான கவிதை வடிவம்

    ReplyDelete