Wednesday 11 March 2015

அளவெட்டி என்.கே.பத்மநாதன்....நாதமும் பிரம்மமும்

யாழ்பாணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர்களில் இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் அளவில் பிரபலம் ஆகிய பலருள் ஒரு நாதஸ்வர மேதை அளவெட்டி என்.கே.பத்மநாதன் என்று சொல்லுறார்கள். அப்படி பலர் சொல்வதில் நிறைய அசைக்கமுடியாத உண்மை இருக்கு என்பதை அவர் வாசிக்கும் போது ஸ்வரம்களை மரத்தால் செய்த ஒரு நீண்ட ஊதுகுழலில் வழிய விட்ட நாதஸ்வரம், அதில் அவர்கள் வாசித்து அசத்திய கர்நாடக சங்கீதம் என்றால் என்ன எண்டு தெரியாத காற்சட்டை போட்டுக் கொண்டு விடலையாக அலைந்த சின்ன வயசிலேயே அந்த இசை பலமுறை மயக்கிய விதத்தில் அறிய முடிந்தது.
என்.கே.பத்மநாதன் தந்தையார் கந்தசாமியும் ஒரு நாதஸ்வரக் கலைஞரே. இவர் கும்பழாவளை என்ற ஒரு சின்னப் பிள்ளையார் கோவிலோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலைஞர். மகன் பத்மநாதனும் இளம் வயது தொடக்கம் வலிகாமம் வடக்கில் இருந்த கும்பழாவளைப் பிள்ளையாருக்கு நாதஸ்வர ஓசையிலே ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்க வைத்ததால் அளவெட்டி என்.கே.பத்மநாதன் என்று அவரை எல்லாரும் அழைக்க வைத்தது.
பத்மநாதன் அவரோட இளம் வயது தொடக்கமே மிகவும் ஒழுக்கத்துடன், கும்பழாவளைப் பிள்ளையாருக்கு அவரின் தந்தையார் நாதஸ்வரக் கலைஞர் கந்தசாமியுடன் சேர்ந்து வாசித்து இருக்கிறார். அவருடைய மூத்த சகோதரர் பாலசுப்பிரமணியம் என்பவர்தான் இவரை விடவும் நாதஸ்வர ஞானம் அதிகமாக சிறு வயதில் இருந்த போதும், அவர் ஆங்கிலங் கற்று இலங்கை நிர்வாக சேவையில் அரசாங்க உத்தியோகம் கிடைத்ததால் நாதஸ்வரத்தை தொடரவில்லை என்கிறார்கள். தன்னைவிடவும் தன்னுடைய தமையனார் சிறந்த சங்கீத அறிவு இயற்கையாகவே உள்ளவர் என்று என்.கே.பத்மநாதன் தன்னடக்கமாகச் சொல்லி இருக்கிறார்.
பத்மநாதன் இளவயதிலேயே இசைக் கலையில் ஈடுபாடுள்ளவராக தமது தந்தையாரையே குருவாகக் கொண்டு அதன் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்த போதும், அவரிடம் பெற்ற பயிற்சியோடு நில்லாது மேலும் பயில்வதற்காக யாழ்ப்பாணம் பி.திருநாவுக்கரசுபிள்ளையிடமும் நாதஸ்வர இசைப்பயிற்சி பெற்றார். மேலும் இசைப்பயிற்சி பெற இவருக்கு உதவியாக இருந்தவர் இவரது மாமனாராகிய கணேசரத்தினம் என்பவரே.
கணேசரத்தினம் அவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வந்து தம்முடன் தங்க வைத்திருந்த நாதஸ்வர மேதாவிகளின் வழிகாட்டல் இவருக்குக் கிடைத்ததே இவர் அத்துறையில் மேலும் மேலும் முன்னேற வாய்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் அவ் வித்துவான்களுடன் இணைந்து வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததும் அவர் முன்னேற வழி வகுத்தது..
நாதஸ்வரக் கலையில் சுருதி சுத்தமாக, மேளகர்த்தா ராகங்களின் உருப்படிகளை ஒரு தனி ஸ்டைலில் வாசிப்பதில் வித்துவான்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். நா. க. பத்மநாதன் என்பது போட்டி பொறாமை அதிகம் இருந்த யாழ்பாணத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. கேள்வி ஞானமும், கடின பயிற்சியும், விடாமுயற்சியும் இவர் தமக்கென ஒரு தனியான நாதஸ்வர வாசிப்பு வழியை உருவாக்க வழிசமைத்தது.
இவர் தாமாகவே ஒரு இளம் இசைவல்லார் குழுவை உருவாக்க எண்ணி, நாதஸ்வரம் நன்றாக வாசித்த கோண்டாவில் பாலகிருஷ்ணன், தவில் வாசிப்பதில் திறமையுடன் இருந்த இணுவில் தட்சணமூர்த்தி, குமரகுரு முதலியவர்களையும் தம்முடன் இணைத்து ஒரு குழுவை அமைப்பதில் வெற்றி கண்டார். அதில் கோண்டாவில் பாலகிருஷ்ணன் இளவயதிலேயே இறந்துவிட்டார். நாதஸ்வரக்கலையில் பல சாதனைகள் செய்ய நாதஸ்வரக் கலாநிதி, இன்னிசை வேந்தன், கலாசூரி முதலிய பட்டங்கள் அவரின் அசாத்திய திறமைக்கு கிடைக்கப் பெற்றன.
நல்லூர் முருகன் கோவில் பிரதான கலைஞராக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் பல ஆண்டுகளாக இவருக்குக் கிடைத்தது இவரின் நாதஸ்வரக் கலைத் திறமைக்கு கிடைத்த பாராட்டு. இருவத்தி ஐந்து நாள் திருவிழாவிலும் அவர் வாசிக்கும் போது அதைக் கேட்க என்றே இசை ரசிகர்கள் அவரைச்சுற்றி மெய் மறந்து நிற்பார்கள்,
மேற்கு வீதியில் முருகக் கடவுள் உலா வரும்போது எப்போதுமே " நகுமோ கனலே நீ நாதாலி " என்ற ஆபேரி ராகக் கீர்த்தனை வாசிப்பார். தெற்கு வீதியில் " தெலி சினோடு ராமா " என்ற முத்துசாமி தீச்சிதர் உருப்படி வாசிப்பார் . அவர் எந்த நிகழ்சியிலும் குத்துப்பாட்டு மெட்டில் உள்ள சினிமாப் பாடல்கள் வாசிப்பதில்லை,நல்ல ராகங்களில் வந்த பழைய சினிமாப் பாடல் சில நேரம் வாசிப்பார், அதைத் தன்னுடைய பிரத்தியேக தரமாக வைத்திருந்தார்
இலங்கையில் தயாரான ஈழத்து இரத்தினம் எடுத்த முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப்படம் "தெய்வம் தந்த வீடு " நாதஸ்வரக்கலையை முக்கியமான கருப்பொருளாக வைத்து எடுக்கப்பட்டது . அந்தப் படமே நாதஸ்வரக்கலைஞன் என்.கே.பத்மநாதன் இசை அமைத்து வெளிவந்தது. 1979ல் இங்கிலாந்தில் வாழுந் தமிழர்களால் அழைக்கப்பட்டு அங்கு இசை பரப்பக்கிடைத்த வாய்ப்பினைத் தொடர்ந்து பல நாட்டுத் தமிழர்களிடமிருந்தும் இவருக்கு அழைப்புக்கள் கிடைக்க அங்கெல்லாம்சென்று அந்த நாட்டு மக்களின் பாராட்டினையும் பெற்றார்.
நாதஸ்வரக் கலையைப் பரப்பத் தமக்கொரு நிலையான வாரிசு வேண்டுமென்பதால் தமது புதல்வர்களில் ஒருவரான முரளி என்பவரை அக்கலையின் நுணுக்கங்களை அறிய இந்தியாவுக்கு அனுப்பிப் படிப்பிக்க விரும்பினார். முரளியை இந்தியாவுக்கு அனுப்பி அங்கு கலைவன்மை பெற்று முரளி இலங்கை திரும்பிய சில மாதங்களில் அந்த நேரம் யாழ்பாணத்தை அரசாண்ட இந்திய அமைதி காக்கும் IPKF படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டார்.
இது கலைஞர் பத்மநாதனது வாழ்வில் ஆறாத மனப்பாதிப்பாக அமைந்துவிட்டது. அவருடைய மகள் கனகாம்பரியை ஒரு சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகியாக்கி அந்த சோகத்தை ஒருவிதத்தில் அவரால் மறக்கடிக்க முடிந்து இருக்கிறது.கனகாம்பரி யாழ்பாண இசைக் கச்சேரி மேடைகளில் மிகச் சிறப்பாக கர்நாடக சங்கீதம் பாடிய
ஒருவர் .
அவர் மகன் முரளி படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்த பின்னும் கலைப்பணியைத் தொடர்ந்து வந்தார். இங்கிலாந்திலிருந்து இவருக்கு மேலுமொரு அழைப்பு வந்தது. அழைப்பை அனுப்பியவர்கள் அவரது இசை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கலைஞர் பத்மநாதனும் இங்கிலாந்து செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.சில நாட்களில் அவரின் இசை விழாவுக்கு போகுமுன்னரே அவர் நாதமும் பிரம்மமும் ஆகி இயற்கையுடன் சங்கமித்து விட்டார்..
நாவுக் அரசன்
ஒஸ்லோ 11.03.15

No comments :

Post a Comment