Monday 20 January 2020

வியாழக்கிழமை !

ஏவல் அழுகை
ஆழ்ந்த உறக்கம்
மெளன முணுமுணுப்பு
லேசான உரசல்
உற்றுக்கேட்க
எல்லாமுமாய் இருந்தது
மழை !


*


கொந்தளிப்பாகவும்
பெருத்த கிளர்ந்தெழுதலாகவும்
நிலைமாற்றமாகவும்
பழிதீர்த்தபடியிருக்கிறார்கள்.....

இது
எதிர்வினைகள்
மனச்சோர்வுடன் தலையசைக்கும்
காட்டுமிராண்டித்தனமான காலம் !
தண்டனைகள்
சீரழியும் முறைமைகள்
நலிவு மதிப்பீடுகள்
தோல்வியுறுவதற்கான நுணுக்கங்கள்
நீதிதேவதையிடமே கொட்டிக்கிடக்கிறது.
இருந்தும்
குற்றங்களைப் பற்றியே
உரையாடிக்கொண்டிருக்க விரும்புகிறார்கள்
ஏன் ?
அது முடிவற்றதென்பதாலா?
மதிப்பீடு செய்து
பதிலுக்கு ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு
கண்டெடுத்து
ஒப்புநோக்குகையில்
பிரதியை அப்படியே உள்வாங்கி
வெறித்துவிட்டு
வெளிச்சம் விழாத மூலையொன்றில்
இருட்டாக இரு !!!!


தடுமாறாத
புதிய பயணம்தான்...
உத்தரவாதமாக வழிசொல்கிறார்கள்
பழைய நண்பர்கள் !!!
மனதின்
பழக்கதோசமாயிருக்கவேண்டும்
எச்சரிக்கையாக நடக்கின்றன
கால்கள் !


*

குறைந்தபட்சம்
பத்துத் தடவைகளாவது
பல்வேறு விதங்களாக
உருவகித்துப் பார்க்கிறேன் .

விசாரித்த துக்கத்தில்
தூக்குப்போட்டு இறந்ததுபோல
வருடங்களின் இழப்பு !

அயர்ந்துபோகிற
தூக்கக் கலக்கத்துடன்
பிரயத்தனப்படவேண்டியிருந்தது
நாள் முழுவதும் !

ஒரேயொரு முறைதான்
இரண்டே இரண்டுபேர்
பழைய முகச்சாயலில் !

*

ஒரு காலத்தை
சுமைதாங்கிய
தனித்த உலகத்தினுள்
சுரங்களின் பேராசைப் பிரவாகம்,,,,,
விதிவிலக்காகக்
கிளர்வூட்டும் உணர்ச்சிகளில்
நிரந்தரமாகப் பயனடைந்தவர்களை
நான் சந்தித்ததேயில்லை ..
உள்ளிழுத்துக் கொண்ட
அபாரமான எளிமை
மாயக்கதவுகளைத் திறந்து
கீர்த்தனங்களை
வெகுஅருகில் திகைக்கவைத்தது.
மனம்
இசையோடும்
இதம் குரலோடும்
மேம்படுத்தப்பட்ட
இணக்கத்துடன் இருக்க முடியுமா?
முடியும் என்ற அர்த்தத்தில்
இடமாற்றீடுகள்
சரியான விதத்தில்த் தள்ளாட
விலகியேபோயிருந்தேன்
என்னிலிருந்து
நான் !

*

அயர்ந்து போனேன்.
திரள்கள்
சுத்தமாக நின்றுவிட்டது.
யாருக்கும் புரியப்போவதில்லை
காத்திருந்தது
மழைக்கு மட்டும்தான்.
வேறுயாருக்காவும் இல்லை !

*

அழைப்பிக்கும்
மெல்லிய புன்னகை
நிழலசைத்துக்கொண்டிருந்தது !


எதிரொலித்த
நிமிடத்திலேயே புரிந்துபோனது
தேவதைதானென்று !


தயக்கமாக விழிகளை
உருவிவிட்ட போதெல்லாம்
இறகுகளின்
படபடப்புக்கள் மட்டுமே கேட்டன !


முடியவேமுடியவில்லை
வயதைக் கண்டுபிடிக்க
காலம் முன்னேறுவதைப்
பின்நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டது !


மூச்சு சத்தம்
குகையிலிருந்து வருவது போல்
பெரிதாக மேலிருந்தது.


அலைக்கழிக்கும் வரைபடத்தில்
இடம் வலமாக நகரும்
புள்ளிகளைக் கூட யாரும் சொல்லவில்லை !


சிக்கலான ஓவியமொன்றில்
தோற்றுபோனவர்களில்
நானும் ஒருவன்…,,!

*

முகம்
வெளிறிக்கொண்டிருந்தது
அமைதிப் பொழுது
துக்கிக்கும் சில நொடிகளின்
மயக்கம் !
மொத்தமாகத் திகட்டிவிடுகிறது
ஆத்மப் பெருநிழலின்
உருவகம் !


*

ஆதர்சங்கள்
பிழியப்பட்ட சக்கையாக
அமைதியாகவே இருக்கிறது
மிகச் சிறிய அறை !

பவுர்ணமியில்
முழுமையாகிய பூரிப்பைப்
பிரஸ்தாபித்தபடி முழுநிலவு
கீழே இறங்கிவந்து
ஜன்னல் முழுவதையும் ஆக்கிரமித்தது !


அசதியில் படுத்தும்
முந்தையதைக் காட்டிலும்
நன்றாகவே விழித்தெழும்ப முடிந்தது !


வெறுமைக்குள் சிக்கி
ஒரு இரவுக்குள்
பெரிய மாற்றங்களேதும் நிகழவில்லை !

*

ஒருமுறை
இன்னுமொருமுறை
இன்னுமொரேயொருமுறை
அதிஷ்டங்களை
நினைவுகூர்கையில்
வேற்று நிலைத்திருப்புகளிற்குச்
சாத்தியங்களில்லை !


*
நீண்ட வருடங்களின் முன்
நீலக் கடற்கரையில்
வெளிறிய நிர்வாணங்களை
பார்த்தும் பார்க்காமலும் நின்றிருக்கிறேன் !

இல்லை
வெளிப்படையாகச் சொன்னால்
சமாளித்துக் கொண்டேன்.!


வெளியே
அம்மணமாகவிருந்தபோது
எனக்குளே களைந்துகொண்டிருந்தது
கூச்சசுபாவம் !


பதட்டமாக நிட்பது
அந்த இடத்தில்
அதற்கு வேறதோர் அர்த்தம் !


காட்டிக்கொள்ளாமல்
இயல்பாக இருப்பது போல் நடிக்க
நிமிடங்கள் தேவைப்பட்டது.


பின்னர் பழகிவிட்டது
அன்றே பிறந்தது போல.!

*

தெரிவு முகவரிக்குள்
தீராத மனஅலைச்சல் !
எடையிழந்த காற்றென
ஒருசொல்லென
ஏதோவொரு நாதமென,
இந்த இடமென்று
சுற்றிச் சுற்றி வந்தபின்
இன்னோர் இடம் .....
ஒரு கணத்தில்
ஒன்றையொன்று வென்று
அடுத்த கணத்தில் தோற்றுக்கொண்டிருக்கின்றன
விருப்பங்கள் !

*

ஒருவிதத்தில்
பிரமைதான் போலிருக்கு
இருநிலைகளில் மாயம் காட்டி
தொலைந்து போனவனை
வாங்கிக்கொள்வது போல
நீட்டிப் புன்னகைத்துப்
பின்சாய்ந்து கொள்கிறது
பழைய நகரம்
ஆச்சரியங்கள்
ஒவ்வொரு தடவையும்
பிரகாசிக்கத் தவறவில்லை
தன்னைத் தருவதில் மட்டும்
நிகரில்லாச் சுவை
இந்த முறையும்தான்.,,,,...

*
குரல்களும்
அவர்களின் மொழியும்
முன்மொழிந்து கொண்டிருப்பவை
கடலின் மடியில்
ஆதியிருள் போல !
நான் சொன்னேனில்லையா
காற்றே அங்கே சிறைப்பட்டிருந்ததென்று !


*
மறைப்பில்லா
சல்லாபமாகவே உரையாடல் !

கண் மூடிக்கொண்டே
மழை சிதறும் துளிகளினுடே
பெருத்த சிரிப்பு !

மேகமில்லா வானத்தில்
அனிச்சைத்தனமான சத்தங்களை
விளிம்பிற்கு சற்று முன்
துல்லியமாக எதிர் வைக்கிறேன் !


தளர்வான நடையில்
குளிர்துபோன கைகளைக் குலுக்கி
சப்தரிஷி தாரகைகளைச்
சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்!


உன்னிப்பாய்க்
கவனித்துகொண்டிருக்கவில்லை
அந்திசாய்தல் நிகழ்ந்தபோது !


இம்சையென்பது
தணிந்த சாம்பலில்
இறகாகவே இறங்கும்
வெம்மைக் கணங்களை
அன்றிரவே அசைபோடுவது !

*

உருப்பெரு வானம்
ஓராயிரம் நட்சத்திரங்கள்,
விசைகொண்ட பெருங்காடு
வடதுருவ விருட்சங்கள்,
நள்ளிரவு நிலவொளி
திகில்படரும் நிழல்கள்,
தூரத்து சத்தங்கள்
வெளிச்சப் புள்ளிகள் !
மேற்கொண்டு வாய்ப்பே இல்லை !
இந்த ஜன்னலையும்
பிரியவேண்டிய நேரம் !

*

பெரிதாய் சுவாரசியம் இல்லை
முணுமுணுப்புக்களை
வாரி வழங்கிக்கொண்டிருக்கும்
உதடுகளில் !


பல சமயங்களில் வராது
எதிர்பார்ப்பது
அப்படியே வந்தாலும்
எதிர்த்திசையில் அடித்துப்போய்விடும். !


வெளிறிச் சிரிக்க
வார்த்தைகளைக் கொட்டவேண்டிய
மிகச் சிறிய தீவுப்புள்ளி !


தர்மசங்கடமாக
மவுனத்தைக் கலவரப்படுத்த
ஒவ்வொரு சுழிப்பும்
பிசகில்லாமல் தெரிந்துவைத்திருக்கு !


தொடர்பில்லாத
சட்டெனப் பிடிபடாத விஷயங்களில்
ஆதர்சங்கள் இல்லை !


இதழ்களில்
இறுக்கி முத்தமிடுவது
வேறுவிதமான அனுபவம் !

*

நடைச்சுவட்டை
எழுதிக்கொண்டிருக்கிறான் ,
மெல்ல நுழைந்து
ஜன்னலோரமாக நிலையெடுத்து
பழைய வாசனைகளை
அள்ளி எடுத்துக்கொண்டது.
காலம் !


*

அற்றைக்கு
வாய்ப்பைத் தவறவிட்ட
மெல்லிய தருணங்கள்
எதைவைத்து முடிவெடுக்கப்பட்டன ?


நினைக்கத் தோன்றுகிறது
சந்தர்ப்பங்கள் பற்றி அலசியபோதெல்லாம்
வெளியேதான் நம்பிக்கை !


பின்பக்கம் இடம்மாறி
உக்கிரமாக உணர்த்திக்கொண்டிருக்கு
ஒற்றை இருப்புக்கு
ஒரேயொரு வழியில்
ஒவ்வொரு திட்டமிடலும் !


சொல்லித்தான் ஆகவேண்டும்
மொத்தமாக
உள்ளுக்குள் உடைத்துக்கொண்டிருக்கு
ஒரு மனப்போராட்டம் !

*
சட்டெனத் திறக்கப்பட்ட கதவு
பின்னிருந்து
நடுங்கியது ஆச்சரியக் கேள்வி,


முகமெல்லாம்
இயல்பாகவே இருக்கிறது.


ஆசுவாசமாகத்தான்
பதிலிலும் புன்னகைத்தாள் !


கண நேரத்தில்
மின்னி உள்வாங்கிக்கொண்டது
குரல்வளை !


பனிக் காலத்தில்
இன்னொரு பத்து நிமிடங்கள்
வேர்வையாகக் கொட்டியது !


நீண்ட தாழ்வாரத்தில்
பின்னிக்கொண்டிருக்கும் கால்களை
வேகமெடுத்து வைக்கிறேன் !.


முற்றுபெறாத ஒற்றை வாக்கியத்தில்
ஒரு அசரீரியை
நிறுத்திவைக்க முடியுமா ?

*



தொடர்விளைவுகளைக்
குறி வைத்தபடி இயங்குவது
வியாழக்கிழமை !


ஆதிமூலமாகச்
சிற்சில பிராயச்சித்தங்கள்
வேண்டிக்கொள்ளப்படுவதும்
வாரத்தின் நாலாவது தினத்திலேயே !


கீற்று வெளிச்சத்தை
சற்று குனிந்து தவிர்த்தது போலத்தான்
அந்தநாள் மனதிலிருக்கிறது !


உள்ளிழுத்துக் கொண்ட
உச்சரிப்பில்
வியாழ மாற்றத்தை
நிரூபிக்கும்படி கேட்டார்கள் !


கழுத்தறுப்பு
சங்கடமாக இருக்கவில்லை
குருபெயர்ச்சியில் கவனம் முழுவதும் !


ஒரு மின்னல் அழுத்தில்
முடியாது என்று சொல்லியிருக்கவேண்டும் !


ஆனால் சொல்லவில்லை
எப்படிச் சம்மதம் சொன்னேன்.?


அதுவும்
வழக்கமான இன்னொரு
வியாழக்கிழமையாக இருந்திருக்கவேண்டும் !




No comments :

Post a Comment