Monday 20 January 2020

உயிருதிர்காலம் !


நதியலைபோல
அசைந்து கொண்டேயிருந்தது
பெருங்கனவு !


துரத்திக்கொண்டு ஓடும்
அகாலமான நேரத்தை
துரத்திக்கொண்டு போகிறது சாமம் !

ஒவ்வொரு முறை மூழ்கும் போதும்
அதன் ஆழத்தில்
அடைபட்டுக்கிடக்குமோர்
உறக்கத்தை வைக்கிறேன் !

நதியையே
தடயமில்லாமல் தின்றுவிட்டுப் போய்விட்டது
இரவு !

*

மிதமிஞ்சிய உணர்வூட்டல்
ஒருகாலத்தை
தங்களுடன் கொண்டுவருவது !


விடுபட்டுப்போன
அதிர்வலைகளைப் பின்தொடர்கிறார்கள்
புத்திசாலிகள் !



பல கோணங்களில்
விநோதமான மொழி
மேதாவித்தனமாக
உரையாடுவதிலிருந்து மாறுபட்டு !


உணர்வுநிலையில்
வித்தியாசமாக விலகி
தன்னிலை மறக்க
விதியில் அதிக நம்பிக்கை !


நெருக்கமாகும்
மனப்போக்கு இல்லாத
கிறுக்குத்தனமான மனப்பிரமை !


அதைத் தொடர்ந்து
அளப்பெரிய ஏமாற்றம் !


வெற்றிடத்தை நிரப்ப
அலைந்துகொண்டிருக்கிறார்கள்
கனவுகளை தேடி !


*

கொஞ்சம்போல
அநாமதேயங்களைப் பின்தொடரத்தெரியும். 


மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய
அதன் மீது வெறியேதும் கிடையாது !


பழக்கமான நடைபாதையில்  

ஏராளமான சனக்கூட்டமென்று வைத்துக்கொள்ளுங்கள் 


விரக்தியான ஆரம்பத்தில்
காற்றோடு பூங்காவனப்பாதையில்ப் போகநினைக்கிறீங்கள் .


விருப்பமில்லாத திருப்பம்
ஏரிக்கரைப் பக்கம் போகச்சொன்னால்
என்ன செய்வீர்கள் ?”


மற்றொருநாள் 

திக்கில் திணறிக்கொண்டிருக்கும்
நெரிசலிலிருந்து காப்பாற்ற


மற்றொருநாள்
வனாந்திரங்கள் பூதாகாரமாக நிற்கிற
இன்னொரு புதுத் திசையில்ப் போகச் சொல்ல!


இதுபோன்ற நாட்களித்தான்
வழிகள் வக்கிரப்படுத்தப்படுகின்றன !


கூட்டிக் கழித்துப் பார்த்தால்
இலக்கின்றிக் கூட்டிச் செல்லுகிறது என்பதைப் பற்றி
அதிகம் கவலையில்லை !


முழுசா நம்பாத போதும்
நம் மீது கோபித்துக்கொள்வதில்லை !


ஒழுங்குபடுத்தப்படாத பயணங்களோடும்
இடையீடு செய்வதில்லை !


புதியபாதைகள்
ஒருவித அனுமானத்தோடு
பொறுமையாகத் தம் வழியில் சென்றுமுடிகின்றன .


*

கண்ணாடிகளை முன்னிறுத்தும்போது
எனக்குரிய
அடையாளங்கண்டுபிடிக்க முடியாமல்
தேடித்திணறவேண்டியிருக்கு !


உற்றுநோக்கிக்கொள்ளும் போதெல்லாம்

என் தோற்றத்துடன் கலவரமாகி
இடைச்செருகும் விம்பங்களும்
புரிதலுக்கு அப்பாலானதாகவேயிருக்கின்றன !


என் பிரதிபலிப்பு
பேரழிவைக்கொடுப்பதுபோலிருந்தாலும்
சடுதியான கணப்பொழுதில்
கலைத்துப்போடுவதில் உடன்பாடுகளில்லை !


என்னை முழுமையாகக் கலந்திருக்கிறது
பாதரசம் பதிவுசெய்யும்
நேரடித்தன்மையான உருவம் !


ஆழமாகக்காயப்படுத்துகிறது
இமைகளுக்கடியில் கருவளையங்கள் ,


இரக்கம்தேடும் பொழுதுகளில்
எதற்காக ஏங்கவைக்கும் முகச்சுசுளிப்புக்கள் !


என்னதான் நடக்கிறது ?


இவ்வளவுக்கும்
என்னை நன்றாகப் புரிந்துகொள்ளும்
என்னைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறேன் !


*

பின்னணியில்
முன்னோடியான ஆதிமனிதனின்
ஏதோவொரு அனுபவம் இருக்கவேண்டும் !


ரெண்டுவிதமாக
சட்டென்று மாறிவிடுகிறேன் !


ஒருமுகத்தில்
தாடியைத் தடவிவிட்டு
கண்களைச் செருகிவைத்து
வார்தைகளை உதறிவிடும்போது
உதடுகள் உள்நோக்கி மடித்துகொள்கின்றன !


இன்னொரு முகத்தில்
அசுமாத்தம் ஏதுமிலாதபோதும்
பின்னடைந்த குற்றவுணர்ச்சிகள்
நினைவுகளின் நிலவறைக்குள்
நுழைந்து கொள்கின்றன ! 


ரெண்டுமுகத்தையும் நானாகப் பார்த்ததில்லை !!


கோணல் சிரிப்போடு யாரெல்லாமோ
அசாதாரணமான குரலில்
வியாக்கியாணங்கள் கொடுத்துவிட்டுப்போகிறார்கள் !


நானும்
எதையும் அலட்டிகொள்ளாத
நானும்
மட்டும் எஞ்சியிருகிறோம் !


*

தற்செயலாக
உள்ளங்கையையும்
ஒழுங்கற்ற கேந்திரகணிதத்தில்
தடவரைவுக் கோடுகளையும்
வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தேன் !


எப்பவோ நடந்து போன
ஒற்றையடிப்பாதைகள் போலிருந்தன திருப்பங்கள் !


பள்ளத்தாக்குகளில்
திகட்டத் திகட்ட
வயதானதைப் பதிவுசெய்துவைத்திருந்தது
வற்றிப்போன நதி வளைவுகள் !


மூழ்கி முத்தமிடுகின்றன
இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும்
சிற்றோடைகள் ! 


விரல்களை அகலத் திறக்கும் போது
தமக்குளே அந்நியமாகி
விறைப்பான சுருக்கங்கள் மறைந்து கொண்டன !


ராசியில்லாத சூரியமேட்டுக்கும்
அழிவுபோன்ற ஆயுள்ரேகைக்கும்
ஏதோ ஓர் இடைவெளியில்
குறுக்க மறைத்து வரையப்படிருக்கலாம்
ரகசிய விதிகள் ! 


காலக்கதவைத் தட்டும் தடங்களுக்குள்
வேறு என்னவெல்லாம் இருக்கலாம் ?.


இதுக்குமேலும்
அகழ்ஆய்வு செய்துகொள்ள விரும்புவில்லை !


*

காலப்போக்கில்
விமர்சனங்களை உதறியெறிந்துவிட்டு
மனச்சலிப்புக்குள்
காணாமல்ப் போய்விடுகின்றன
எல்லா விவாதங்களும் !


ஏதோவொரு காரணத்தோடே
எதிர்பார்ப்புக்களைப்
போதையேற்ற ஆரம்பிக்கின்றன
உரையாடல்கள் !


எதைப் பாராட்ட வேண்டுமென்று
நேச நரம்புகள்
விழித்தெழும் கணத்தில்
வறட்டுத்தனமாகிவிடுகிறது புரிதல் !


தேன்மொழியில்
நன்றிகளை எதிர்பார்த்தே
பிரியமாகக் கடந்துகொண்டு போகின்றன
பரஸ்பர பரிமாற்றங்கள் !


கண்களை மூடிவிட்டு
இருதயத்துக்குள் ஊடுருவிச்சென்று
எதார்த்தமா? பகல்க்கனவா ? என்பதுக்குள்
இளைப்பாறிவிடுகிறது காலம் !


முடிவிலியிலும்
அபூர்வமாகவே இருக்கிறது

 " சிலநேரம் தவறாகவிருக்கலாம் " என்று 
மென்றுவிழுங்கிச் சொல்லாமல்
நிறுவமுடியாத முடிவுகள் !


*

முகபாவங்களில்
குழந்தைகள்
கும்மாளமாகிறார்கள் !


ஒன்றுமே புரியவில்லை
ஒலியின் விதத்தை

அடிப்படையாகவைத்தபோது !


பின்புலத்தில் நின்றபடி
உரையாடலை ஒட்டுக் கேட்கிறேன் ,


சந்தேகமாக
கீழ் நோக்கிய பார்வையால்
ஒருவரை ஒருவர் உஷ் என்று
மௌனமாக எச்சரிகிறார்கள் !


அதன்பின்னர்
கலக்கமில்லாத கணங்களில்
ஒற்றை வரியில் வசனங்கள்
கூடுதலாகவே அற்புதமாகவிருந்தது !


வளர்ந்தவர்கள் போல
இறுக்கத்தை எகிறி
பற்றி எரிய வேண்டுமென்றும்,


பதில்களைக் கேலிசெய்து
அழுத்த உடைந்துபோக வேண்டுமென்றும்,


பெருமூச்சு விட்டபடி
உணர்ச்சி நொறுங்க வேண்டுமென்றும்
எதுவுமில்லை ,


ஒருவேளை
அவர்களின் மொழியில்
வார்த்தைகளின் வேறுபாடு
உச்சரிப்பைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை.!


*


சபிக்கப்பட்ட அதிகாலையே
சிலரை மட்டுமே தேர்தெடுத்திருக்கிறது போல
அபூர்வமான அன்றில்ப் பிரியத்தை
அலட்சிய முகத்தில்
சிதறியடித்துவிட்டுச்செல்கிறது

மழை !



இருக்கத்தான் செய்கிறது
நிலைப்படுத்தவென்று
ஒவ்வொரு நிமிடப் பகுப்பிலும்
சில பழைய ஞாபகங்கள் !


மர்ம வலையில் சிக்கிய
விபரீத எண்ணப்போக்கு
கொண்டுவந்து விட்டுசெல்வதிலெல்லாம்
நினைவின் நிழல் !


மனது பாழடைந்து கிடப்பது பற்றியும்,
நாட்கள் நடக்கும் விதம் பற்றியும்
ஏற்கெனவே
நீண்ட குறை சொல்லியாயிற்று. !


செம்மஞ்சள்களின் மீதேறி
கடந்து களைத்த சோலையோரங்களை
காலடியிலயே வைத்துவிட்டு
வந்தவழியே திரும்பிச் செல்கிறேன் !


*


அசைத்துக்கொண்டே
உதிரமறுக்கும் இலைக்காம்புகளை
அவசராமாக ஈரமாக்கி வைக்கிறது

அருகிலிருக்கும் காற்று !

நழுவும் நுனியிலிருந்து
மீளவும் துளிர்கின்ற நினைப்பில்
இன்னும்சில தளிர்கள் !

மல்லாந்தவாக்கில் கிறங்கிக்கிடக்கும்
சருகுகளை
ஆடையாக அணிந்திருந்த போதும்
அழகாகத்தானிருந்தது நிலம் !

ஒவ்வொரு உள்மூச்சும்
வேற்றுத்தனமான அடர்த்திபோல
ஏதோவொண்றுக்குள் நெருக்குகிறது!

தூங்கிக்கொண்டிருந்த
தோள்ப்பட்டைத் தட்டெலும்பிலிருந்து
சென்றவருடம்போலவே
கசியத்தொடங்குகிறது
வலி !



*


வானத்தைத் தவிர
சொல்வதுக்கு வேற ஏதுமில்லை.!

காதுகளை

ஆழமாகப் புதைத்தால்
விசித்திரமான முணுமுணுப்புகள்!

சிறிது நேரம்
காற்றின் குரலிலிருந்து
தனிமைப் பிரவாகம் !

மாற்று எண்ணங்கள்
பின்தொடர்ந்து விரட்டுவதால்
திறக்கப்பார்க்க நேரமில்லை !

ஞாபகத்தை
நினைத்துக் கொண்டிருந்தபோது
ஞாபகம் வந்துவிட்டது
ஊசிக்குளிர் கருத்தரிக்கும் காலம் !



*

தளர்ந்து கொள்ள
ஒரு புகலிடத்தைத் தருவதுபோல
நேரம் தனித்திருந்தது !


எப்படி எதிர்கொண்டேனென்று
புரிந்துகொள்ளமுடியாத நேற்றுக்கள்

பிசுபிசுக்கும் சுழல்கள்போல
வந்துவந்து போய்க்கொண்டிருந்தன !


இன்றையநாள்
நுழையும் வித்தையும்
சேர்ந்தே நடக்கும் விதத்தையும்
பிரமைகள் கற்பனை செய்துகொள்கின்றன ! 


தொலைநோக்கும் கண்களில்
மூடுபனிப்போலப் படிந்திருக்கும்
நாளையென்கின்ற நிகழ்வை
இன்றே அவசரமாக அறுத்தெறிய விரும்பவில்லை !


அதை நேரில் சந்திக்கும்வரை
எதையுமே
வெளிக்காட்டிக்கொள்ளா இருப்பில்
லயித்திருப்பது பிடித்திருக்கிறது !



*


தன் வருகையை
அதிகப்பிரசங்கித்தனமாக்கிகொண்டிருக்கிறது
சுள்ளென்ற குளிர் !


நிரந்தரமான முகம் ஏதுமில்லையென்று
சலித்துக்கொள்கிறது .

காவிபடிந்த வெய்யில் !


விழுந்துகொள்ள விரும்பாத
வெளிறிளம் காம்புகளை
மிச்சமிருக்கும் வாஞ்சையுடன்
எண்ணிக்கொண்டிருக்கிறது
முதிர்கிளை !


ஓய்வெடுக்கும்
குருவிகளின் இயலிசை
கடைசித்தருணங்களில் !


இப்பவே கர்வமாகத்தான்
தலைக்கு முக்காடுபோடத்தொடங்குகிறது
முன்னிருட்டு ! 


தனக்குரிய காலத்தைக் 

 கெட்டியாகப்பிடித்துக்கொண்டு
தேக்கி வைத்திருக்கிற
உச்சக்கட்டத்தை மீட்டெடுத்துக்கொள்கிறது
இயற்கையின் பருவக் காமம் !


இனி
இலைகளின் உயிருதிர்காலம் !




No comments :

Post a Comment