Monday 20 January 2020

மனிதர்களென்று சொல்லிக்கொள்வதுக்கு


" நேரம் கிடைப்பதில்லை "
இந்தச் சொல்லின்மீது
எப்போதும் கவனமாயிருங்கள் !

ப்ரியமானவர்களையே
தோல்வி தழுவி
கண்ணசைவில் கடந்துபோய்விடும் ,
எந்த வாய்ப்பும் இல்லை
ஈரம் ததும்பும்
நல்லதனமானதொரு சிரிப்பை
அதன்பின்னர் அனுபவிப்பதற்கு !
ஒதுக்கி வைத்துள்ள
இதய இறகுகளின்
கதகதப்பை வெளியேற்றிவிடும் ,
முக்கியமில்லாத ஏதோவொன்று
இரக்கத்தை சம்பாதிக்கின்ற
முக்கியமான வேலையாகிறது.!
பொருட்படுத்தாதது போல
நின்று கேட்கும் வேட்கையை
விருட்டென்று பின்னிழுத்துக்கொள்ளும் !
பாசாங்கு செய்தபடி
இடறலான தருணங்களில்
பிசாசைப்போல பின்னாலிருந்து
அனைத்தையும்
நிலைகுலையச்செய்துவிடும் !!!

*
அலைந்த இடங்களை
யாரெல்லாமோ
சொந்தம் கொண்டாடுகிறார்கள் !

இது போன்ற
ஆதாரத்துடன் நிரூபிக்கமுடியாத
அவஸ்தைகள் ஏராளம் !


மீட்டெக்கவேண்டிய
காலத்தின் ஒரு பகுதி
வயது மட்டுமே !


அடிக்கடி
புதிப்பிக்கவேண்டிய
தேவைகளேதும் இருப்பதில்லை
நிறம் மங்கினாலும்
கிழிந்துபோய்விடாத நினைவுகளுக்கு !

*
ஜன்னல்க் கண்ணாடிக்குள்
எதையோ தூண்டிவிடவேண்டும் போலத்தான்
ஆடத்தொடங்கினேன் !
பாசிக்கிணறு போல
கறுத்துப்போன உதடுகள்
அதில் ஒப்பீட்டுப் பொறாமை இல்லை !
குதிரை வால்போல
நாலுமாதத் தாடி
அதில் சிறிது பெருமை தெரிகிறது !
தலைமயிர் முன்மண்டையில்
பிண்ணுக்கெல்லாம் விளையாட்டு மைதானம்
கொடுப்பினை அவ்வளவுதான் !
இலேசாக வளைந்து
பம்மிக்கொண்டு நிற்கும் மூக்கு
அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை !
கண்கள் புதைந்துபோயிருக்க
கன்னங்கள் உப்பியிருக்கின்றன .
அது ஒரு மகிழ்ச்சிநிலை !
அன்றாட வழக்கில் புழங்கும்
ஆதிவடிவம் என்னுடைய முகம் !
போட்டியிட முடியும் என்று தோன்றவில்லை
இப்போதும்
மூச்சைப் போல இறுக்கமாக
சதிராடிக்கொண்டுதானிருக்கிறேன் !
சீண்டுகின்றது
எதையோ வெளியே இழுத்துவிடுகிறதுபோல
ஒவ்வொரு அசைவும் !

*
நீங்கள்
தீர்மானிப்பதற்கு முன்னதாக
நான் முடிவெடுத்துவிடுகிறேன் ,
பிராணமாகி எனக்குள்ளே
நிலைத்ததரிசனம் கிடைப்பது போலிருந்து
நீங்களாகவே
மகோன்னதமான ஆளுமையாக
சாத்தானை விவரித்துக்கொண்டிருந்த போதில் !
உங்களுக்கு
சுயநினைவு திரும்புவத்துக்கு இடையில்
என்னை வெளியேற்றிவிடுகிறேன் !
நீங்கள் போகிறபோக்கில் கூறியது
செய்து முடிக்க ஏராளம் இருக்கிறதென்று
எனக்கோ
அடையாளம் காணக்கூடிய
சொற்களைக் கோர்ப்பதைத் தவிர ஏதுமில்லை !
நீங்கள்
மேதாவித்தனமாக வாதித்துக்கொண்டிருக்க
நானோ பழைய மதுவில்
பின்விளைவுகளோடு
வெறித்துக்கொண்டிருக்கிறேன் !
நான் முகஅடையாளம் காணமுடியாத
வெகுதூரத்தில் நிக்கும் போது
குறைந்தபட்சம்
தலைகீழாய் தெரிந்த விஷயங்களுக்கு
வியாக்கியானமளிப்பதுபோல பதறுகின்றீர்கள் !
பார்த்திங்களா
நீங்கள் அமர்க்களமாகத்தான் இயங்குகின்றீர்கள்
நான் தான்
உருப்படியாக ஏதிலுமில்லை !
ஆதலினாலாத்தான் சொல்கிறேன்
என் இருப்பு
தனித்தன்மை வாய்ந்தவொரு
புனைவாக இருக்க வேண்டும் !

*
சொல்லசைவில்
கடத்தப்பட்டுவிடுகிறது
மனசாட்சியை
ஆழக்காயப்படுத்தும் விஷயங்களும் !


வேண்டப்பட்ட சாமி
எவ்விதத்திலும் குறைவில்லாத
நம்ம சாமிதான் !


அடிமட்டத்திலிருந்து
சட்டென்று பிசகிய பின்னோட்டத்தை
சட்டென்று ஜோசித்து
சட்டென்று பின்வாங்கி
சட்டென்று அழித்துவிட்டேன் !

*

மிகப் பரிதாபமாக இருந்ததால்
நேசிப்பின் பிளவுகளை
நிரப்பிவைக்கும்
காதல்வரிகள் எழுதிவைச்சேன் !
பொக்கிஷமாக
இருட்டில் வரைந்த ஓவியத்திலும்
பொருத்தமான நிறங்களைத்
தேர்ந்தெடுத்தது !
நிஜமாகவே நம்புங்க
அமையும்போது
இதயப்பகிர்வில் பாவமேதுமில்லை !
அன்பில்த்தான்
வடிவமைப்பதையெல்லாம்
முடித்துவைத்துப் போகலாம் !
பிரேமமோகம்
சந்தேகங்களையே ஊர்ஜிதப்படுத்த
மனவழுத்தம் கூட
மரணத்தைப்பற்றிச் சிந்திப்பதில்லை !
சமயங்களில்
விருப்பம் பற்றி
மிகப் பிடித்தமான காரியமே
காதலித்துக்கொண்டிருப்பதுதான் !
பிறகெல்லாம்
மிக விநோதமான நிலையில்
நான் பரிதாபமாகவிருந்த இரவுகள்
கடவுளுக்குத் தெரியும் !
சுத்தமாக நம்ப முடியவில்லை
தன்னிச்சையாக
எப்படிக் காதலுக்குள் நுழைந்தேனென்று !
ஏனென்றால்
நான் அந்தமாதிரியான ஆள் இல்லை !

*

துண்டிக்கப்படும்
ஒரு தீர்மானத்துடன்தான்
உள் நுழைத்தேன் !


யாரையும்
குற்றம்சொல்வதற்கு
ஏதுமில்லையென்கிற கழிவிரக்கம் !


பிச்சுக்கொண்டு
காலடிகள் முந்துகின்றன
ஒற்றைப் பிளவில்
எகிறிக்குதித்து எனக்கொரு வழி !


வெளியேறும் முனையில்
ஏற்கனவே ஒருவன் !!!


இன்னொன்று தேடுவதற்கு பதில்
இங்கேயே காத்திருக்க வேண்டியதுதான்.

*
அது
முன்னொரு காலத்தை
நிகழ்வில் உள்நுழைத்து விடும் ,
இலக்கின்றி அதனுள்
நகர்பவை எதைச் சார்ந்தது என்று
வகைமைப்படுத்தப்பட முடியாது ,
நாம்
உரக்கக் கத்தமுடியாத தொனியை
உடனழைத்துக்கொண்டிருக்கும் ,
தேடி அதிலிருந்து
ஒற்றைவரி வாசிக்கும் போதெல்லாம்
ஆதங்கப்பட்டுக் கொள்ளும் !
அதன்
பிரத்தியேகமான சில வழிகள்
பேருவகை அளிப்பதாகவிருக்கும் ,
அதைப்போலவே
விழிப்புணர்வுகளையே
அடிமைகளாக்கி வைத்திருக்கும் !
அதனோடு
தீர்மானமான வரையறைகளை
சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை
மிகமிக முக்கியமாக
அதன் முகத்தில்
வர்மப் புள்ளிகள் இருக்கும் !
இப்ப
விஷயத்துக்கு வந்துசேரவேண்டியிருக்கு


நிறையவே இருக்கின்றன
ஒரே மூச்சில் முடிக்கமுடியாத
நாட்குறிப்பில் !

*

தொலைவில் நிட்பவர்களுக்கு
எனக்கும்
அன்பின் முகவரிக்குமுள்ள
அந்நியோன்னத்தை
அறிமுகப்படுத்துவது எப்படி ?


முடிந்தவரை சொல்லிவிட
ஒரு கவிதையை
உரிமையெடுத்துக்கொள்ளலாமா ?


எந்த இடத்தையும்
சொல்நிரப்பி வீணடிக்கவேண்டியதில்லை


நிசப்தத்தின்
ஒத்துவராத சூனிய வேடத்தில்
கவிதைகளும்
இறையாண்மையோடுதான்
உலாவிக்கொண்டிருக்கின்றன !


*

மூன்று மணி
பின்னிரவு நேரம்
கண்ணிமைகளைத்
தொடர்ந்துகொண்டிருக்க
சிற்றெழுத்துக்கள் வலியெடுத்தன !


பின்நவீனத்துவத்தின்
தனிப்பட்ட பிரஸ்தாபிப்புக்கள்
முன்னேறிய சமூகத்துடன்
உறவு கொள்ளும் மு

யற்சி !

பலசமயம்
விமர்சனங்களோடு
சுவாரஸ்யங்கள் உடன்படுவதில்லை !


கால்களை உதறி
முதுகை நீட்டுவதற்குப் பதில்
சமாந்தரமாக
மனதின் நகர்வுகளையும்
சேர்த்தே வாசித்துக்கொண்டிருந்தேன் !


கட்டுரையின் தலைப்பு
" முள்ளம்பன்றிகளின் விடுதி "

*

தேவைக்கேற்ப
விவரங்களை வாங்கிக் கொண்டு
ஆதாரங்களைச்
சேகரித்துவைக்கிறது
துயர்பகிரும் சிங்களப்பாடல் !

பின்தொடராத காதலும்
வசந்தகாலமும்
வாஞ்சையுடன் பிரிவும்
எளிதாக உள்ளீட்டும்
சுவாரசியமான முன்தீர்வுகள் !

தெரிந்த சொற்களை
ஆங்காங்கே தேடியெடுத்துக்கொண்டு
ஒரு மாலைப்பொழுது !
எல்லாக் காலத்திலும்
சமநிலையில்
எவ்விதத்திலும் குறைவில்லாத
சாதகக் குரல் !
விஷயங்களை எளிதாக்குகிறது
ஸ்வர ரசிப்பிலுள்ள
இசையின் திசை !
இன்னும் நன்றாக இருந்திருக்கும்
சகோதர மொழி
ஒட்டுமொத்தமாகப் புரிந்திருந்திருந்தால் !

*

திணித்துக்
காத்துநிற்க நேரிட்டாலும்
இருப்பைக் கண்டுகொள்ளாமல்
திரும்பிக்கொள்கிற குறியீடு
முகம் !


தவிர்க்க இயலாதபடி
ஒருகாலத்தில்
முன்கோபம்
மூக்கில் உக்காந்திருந்தது !


பந்தயம் கட்டி
வெருட்டுறதுக்கும்
இப்போது அது இல்லை.!


தள்ளாடிய நடையில்
விலத்திவைத்து நடக்கும்
அனுபவங்களின் கனதியில்த்தான்
மனதே நகர்ந்தபடியிருக்கிறது !

*
வாக்குறுதிகளில்
கற்பனை எதுவும் வேண்டாம்,

வாக்குத்தத்தங்களில்
நம்பமுடியாத ஆச்சரியங்களுமில்லை ,

கொடுத்துவைத்த
அதிஷ்டமானவைகள்
வரும்படியிலிருக்குமாயின் சேர்ந்துகொள்ளட்டும்!

கால இடைவெளிகளை
தன்னிச்சையாக நிரம்பிக்கொண்டு
மையப்புள்ளியின் சுழற்சி !

பின்வாங்கும்
தினமொன்றைக் கிழிப்பதட்கு
இன்னுமொரு தரவுப் புத்தககம் !

கிழடுதட்டிய
கனவுக் குதிரைகளின்
கால்களில் வேகம் சாத்தியப்படுவதில்லை.!

நாளைகள்
அதன் விருப்பில் வரட்டும்
சீட்டுக்குலுக்கிப்போட்டு
அதனதன் போக்கில் கடந்துபோகட்டும்

அடிமட்டத்தில்
வலிந்து எதையும் மாற்றுவதாயில்லை !

*

வாழ்க்கை  ஆழஊடுருவும் நேசிப்புகளையும்
வேறுவிதமானவொரு சூழலில்த்தான்
தேர்ந்தெடுக்கிறது,
நாங்கள்
மனிதர்களென்று
சொல்லிக்கொள்வதுக்கு !



No comments :

Post a Comment