Sunday 19 January 2020

அம்மாவின் குரல் !

விவரம் புரியாமல்
நேற்றுகளை நெருங்கியதும் ,
வியப்பாக
மனதைத் தகிக்கிற
நேற்றுமுன்தினங்களோடு விலகியதும் 

ஏதுமின்றி
விளையாட்டைப்போல
ஆண்டுகள் ஓடிவிட்டன.
இனி
நாளைக்கு என்பதுபோல
எல்லாமே கொஞ்ச நாட்கள்தான் !


*

எனக்குரிய நொடி
ஒரு கோப்பிக் கோப்பையுடன்
பதற்றமேதுமின்றிக்
கடந்துசென்றுகொண்டிருந்த
து 

இளம்சூட்டுடன்
இழுத்து மூடப்பட்ட
நிலவறை .


அசாதாரண அமைதியுடன்
நான்கு மெழுகுதிரிகள் ,

ஒளியூடுருவும்
கண்ணாடிக் குவளைகளில்
இரத்தநிற ரோஜாக்கள் ,


நடுவட்ட மஹோகனி மேசையில்
அலங்காரம் கலைந்த
பரஸ்பர பரிசில்கள்,


முதிர்ச்சியடைந்த திராட்ஸைரசத்துக்கு
அருகாமையில்
தலைவிரி கோலமயில்கள் ,


நடை தளர்ந்த
ஆடவர்கள் கையில்
புத்தம்புது உறைபனிக்கட்டிகள் ,


மகிழ்பொழுது
காதலா ? காமமா ?
ஏகமாக மூச்செறிப்புக்கள்


போதையேற்றும் அவதியில்
வேறெதையுமே உணரமுடியவில்லை
அவர்களால் !


இலக்கில்லாத
சம்பாஷணை இரைச்சலிலும்
மென் உதடுகளை
நெருங்கவைத்துக்கொண்டிருந்த
ஈர முத்தங்கள் !


எதுவுமே நிகழாதது போல்
எனக்குள்ளே
உட்கார்ந்திருந்ததே போதுமாகவிருந்தது !



*


சிலசமயம்
இலக்குகளின்றி
நினைப்புகளே
நினைப்புகளைச் சுற்றிவர
எதிர்பாராத தருணங்களில் 

திருப்பமுடியாதவாறு
ஏதோவொன்று
நிலைக்குத்திவிடுகிறது !


ஜன்னல்களில்
காற்றசைந்தபோது
உள்ளிருந்த துடிப்பு
பதற்றத்திடம் மனம்தள்ள
ஒரு அடையாளத்தை
தேடிக்கொள்வது சிரமம் 


அசாதாரண அமைதியுடன்
அதன் வலி
பலவகையிலும்
உங்களைப்போலவே
எனக்கும் நெருக்கமாகவிருந்தது.


அவ்வப்போது
கடிகாரத்தைப் பார்த்து
வெகுசிலரே
அதைத்தாண்டிய வெளியில்
பயணிக்கிறார்கள் !



*


எதுக்கு
இந்தப் போராட்டம் ?


விழிகளை
அயர்த்தும் போது 

நெகிழ்ந்துபோக வைக்கிறது
ஊறி நுரைத்துத் தளும்பும்
அன்புப்பிரியம் !



என்னவாகவிருக்கும்
வெளிப்படுத்திவிடும்போது
அது தரும்
அனுபவ தரிசனங்கள் ?


பாரங்களை
இறக்கி வைக்கமுடியாமல்
நமக்குளே
பாரமாகிக்கொண்டிருப்பது
போலிருக்குமா ?



*

வந்தவுடனேயே
எதுவும் சொல்லாமல்
எழுந்து சென்று விட்டது
வெய்யில் !


மெலிதாக வீசிக்கொண்டிக்கும்
உறைபனிக்காற்றில்
உள்ளங்கால்கள்
ஈரமாகிக்கொண்டிருக்கிறது !


சுற்றுச்சுழலும்
எல்லாவற்றுக்குள்ளும்
கண்களை நகர்த்தியபடியிருக்கிறேன் !


எனக்குமுன்னே
விறைத்துப்போன முகத்தோடு
ஒரு பெயர்தெரியாத மரம் !


அதில்
நிழலாகக் குளிர்காலம்
எஞ்சியிருக்கும் அடித்தண்டிலிருந்து
ஒரு தளிர்
முளை வளர்ந்திருந்தது !




*


இரண்டு விதமான
மந்தகாசச் சூழளில்
தன் நினைவுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது
பதற்றமில்லாத .

அலை !



நிறைய யோசித்தபின்
அவ்வப்போது
விளங்கிக்கொள்ளமுடியாமல்
காலடியில் முட்டிமோதுகிறது
கரை!


மணிக்கணக்காக
லாவகமாய் ஆர்ப்பரிக்கும்
மீன்கொத்திப் பறவைகளின்
தடுமாற்றத்தில்
பரிகாசங்கள் உடைந்துபோனவொரு
செய்தி !




*

அளவுகோல்களிலோ
அபரிமிதமான ஆற்றல்பற்றியோ
அதிகம் புகழும்படியாக..

எல்லைமீறாத ஆசைகள்



அன்றலர்ந்த பூக்கள்
மழை குளித்த மென்மையோடு
இன்னுமோராயிரம்
அனுபவ நனைவுகள்,


நெஞ்செரிக்கும்
காற்றின் நினைவுகளில்
மூச்சு இலட்சியத்தை
எழுதியேயாகவேண்டிய
வாழ்தலின் கதை,

,,,,,,,,,

ஒவ்வொரு
இருண்ட இரவுக்கும்
மூச்சைப் பிடித்து நிறுத்தும்
நடுநிசிகளில்
அந்தரங்க வாசனை !

என்னைக்கடந்து
நாகபாம்பின் கொட்டாவிபோல
நாசியைத் துளைக்கும்


இறைஞ்சல்களுக்கு மசியவிடாமல்
பக்கமாக மூக்கைத் திருப்பிவைத்து
சுவரைப் பார்த்தபடி
ஜன்னலோடு சாய்ந்திருப்பேன் !


கசங்கிப்போன
சம்பங்கிப் பூவாசனை போல
பனிக்காலமெல்லாம்
சுங்கதமெழுப்பியபோதும்
பொருட்படுத்தியதேயில்லை !


பொழுதுகள்
விழுங்கமுடியாமலிருந்த
இரவைச் சபித்துச் சொல்லி
குறைபடாத நாள் இருந்ததில்லை. !


ஒருநாள்
நடுவில் இருவருக்குமான எல்லையாக
வெளிச்சங்களைப்
படுக்கவைத்துப்பார்த்தேன் !


மோப்ப வாசனைகளே
இப்போது பழக்கத்துக்குள் வந்துவிட்டது !



*



அந்நியமாகி
பிடிநழுவி நகர்ந்துகொள்ளும்
உரைநடை !

இலகுவாக நுழையும் இடைவெளியில்
விரிந்த வானத்தை ,


நினைக்கும் இடத்தில்
நீளப் பெருக்கெடுக்கும் நதியை ,


மையமாக அலையும்
பிரபஞ்ச நட்சத்திரத்தை ,


அடைக்கலம் தேடும்
குழந்தைகளின் சிரிப்பை ,


தளதளவென்று சடைச்சு நிட்கும்
மல்லிகைப் பந்தலை ,



இன்மைக்கும் இருப்புக்கும் இடையே,
ஏதோ ஒரு வடிவில்

சிறகுகளைப் புறந்தள்ளும்
வண்ணாத்திப்பூச்சிகளை ,


ஜீவிதத்தை மீட்டெடுக்கும்
கன்னத்து முத்தங்களை ,


பிரியங்கள் ஊசலாடும் கணத்தில்
நினைவுகளின் பாரத்தை 


உள்ளங்கையில் ஏந்திவிடும்
கவிதைமொழி !


*
அம்மாவின்
கண்கள் பொளபொளவென்று
கொட்டிய நிமிடம்
ஞாபகமிருக்கிறது !

பாரவுணர்வை நெஞ்சுள் ஏற்படுத்தி
அசையும் நிழலுருவம் 


உடலெழிலை
விடாப்பிடியாக நிராகரித்த  
வயது 

ஒடுங்கியமுகம்
நரை கவிந்த தலைமுடி

கைநிறைய வளையல்கள்
ஏன் ?
வளையல்கள் ?


எனக்குள்ளே
கும்மிருட்டைத் திறந்து
வெறித்துப் போய்
அதிசயமாகப் பார்க்கிறேன் !


ஏன் என்ற கேள்வியில்
வளையல்கள் எதை குறிக்கிறது?


அம்மா
ஒரேயொரு வார்த்தையை
திருப்பித்திருப்பித்திருப்பித்திருப்பி
புதிப்பித்தபடி !


ஒளி அசையும் திரையில்
நிழலுருக்களை
வெளிச்சம் அடித்து மறைத்
து

கனவின் இறுதி வரை
அலைந்து திரிந்தவண்ணமிருந்தது
அம்மாவின் குரல் !


*

No comments :

Post a Comment