Sunday 19 January 2020

இரவை எடுத்துக்கொள்ளுங்கள் !


ஒரு முகக்குறிப்பை
மூச்சிழுத்து எழுதிவிட நினைக்க
மீண்டு திரும்ப
வழி சொல்லாமலே
கலைந்து போய்விட்டன
சில நாட்கள் !

தொலை தூரம்
எல்லாம் சரியாக அமைந்திருக்க
எதிர்பார்த்திராத நேரத்தில்
ஏமாற்றம்


உள்ளுக்குள்
அனைத்தும் சரியும்
மிக ஆழத்தில்
நுரையீரல்கள் வீங்கிக்கொண்டன,
தனித்து விடப்பட்ட
திரை விளிம்பில்
வீழ்த்திக்கொள்வதுபோலிருந்தது
பரிசாகத் தந்த
ஊமைக்காயங்களின் நடனம் !
மருத்துவக் குறிப்பேட்டில்
நம்பிக்கை எஞ்சியிருந்தாலும்
முதுகைத் தேய்த்தபடி
எரிச்சல் கொள்ள செய்தது
மல்லாந்தவாக்கில் முடங்கியிருந்தது
எழுந்து மறைத்திருந்த போதும்
வருத்தப்பட ஒன்றுமில்லை...

புன்னகைத்து  முடிவெடுத்து
என்னை
எனக்குள்ளே உரசிப்பார்த்தேன் !
மனதிற்குள்
அவஸ்தையிருந்தும்
கனவுகளுக்கும்
கவிதைகளுக்கும் பிடித்த இடத்தில்
ஓய்விலிருந்ததால்
மறைந்திருந்த வலிக்குள்ளும்
ஒரு சுகமிருந்தது !

*

எல்லாவற்றையும்
விரும்பியது போலவே செய்துவிட்டு
எதையோ கடந்துவந்து
விசாரிக்கின்றது போனகாலம் !


அன்றொருநாள் வந்து சேர்ந்து
அப்படியே தொடர்ந்துகொண்டேயிருக்கிறதை
அப்படியே ஏற்றுக்கொள்வதுதான்
இன்றைவரையான புரிதல் !


முழுமையற்றவைகள்
மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தாலும்
சம்பந்தப்பட்ட
எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் !


ஏதுமற்ற மையத்திலும்
அடையாளங்களுக்கும் வயதாகிவிட
இத்தனை வருடங்கள்
தூக்கியடித்து அலைக்கழித்திருக்கிறது
விதியின் வீச்சு !


ஒழுங்கின்றி நிரப்பப்பட்டு
விழுந்த இலைகள் மறைத்துவிட்டன
ஒற்றையடி நடைபாதையை
மறுமுனையில் எங்கோ மறைந்திருக்கலாம்
மீதிக் காலம் !


*

தூக்கிப் போட்டுவிட்டு
பூனை மாதிரி அமைதியாகவிருக்கிறது
துயரசம்பவங்கள் !

வரைந்து பெரிதுபடுத்துவதாக இருக்கும்
ஒவ்வொன்றும் 
தன்னிலையாக நிகழ்ந்திருக்கக்கூடும் 


இயல்நிகழ்ச்சியாகமுடியாது !


திரும்பிப்பார்க்கும் போதெல்லாம்
தடயங்களைத் தேடியழிப்பதிலும்
தன்னிரக்கமான தொனியில்
சிலகேள்வி தொடர்ந்தபடியேதானிருக்கு !


சமுத்திரம்போல நெருடல்கள்
அலைகளின் மீதேறிவரும் நினைவுகள் ! 


ஆற்றுப்படுத்த
சமாதானம் செய்துகொள்கிறது
அடையாளங்களைத் தாண்டிய
சகோதரஅன்பும் நேசக்கருணையும் !


வருத்தமிருந்தாலும்
இதையும் பதிவுசெய்யத்தான் வேண்டியிருக்கு 


ஞாபகஉஸ்ணம் தீண்டும்போதெல்லாம்
வரம்புமீறி தனித்துவிடப்பட்டுக்
கலவரமாக விவாதித்துக்கொண்டிருபவர்களின்
நரம்புகள் ஆர்ப்பரிக்கின்றன ! 


நெடும்பகல்களும்
நீள்விசும்பும் அமைதியிலிருந்தாலும்
ஆழப்படுத்திப் புரிந்துகொள்ள
ஊளைக்காற்று சாந்தமாக இல்லையே !



*



சர்வேசுவர சுவாமி தேவரீர்
வெடிகுண்டுகளின் மீதும் இரக்கமாயிரும்
அவைகளுக்கு
இரத்தத்தின் வாசனை தெரியும்
ரத்தத்துளிகளின் பெறுமதிகள் தெரியாது !

ஞானமேய்ப்பரான கர்த்தாவே
அவர்களையும் ஸ்தோஸ்திரமாக மன்னித்தருளும்
அவர்கள் திருப்பெயரால் வழிகாட்டப்படவில்லை
தீமைகளால் வழிநடத்தப்பட்டார்கள் !


ஆண்டவராகிய ஆதிக்கடவுளே
நடுத்தீர்ப்பு நாளிலாவது
சீவியத்தில் மரித்துப்போன குழந்தைகளுக்காக
உமது ஆசனத்தை முழுமையாக விட்டுக்கொடுத்துவிடும் ! 


பரலோகத்தில் எங்கும் நிறைந்தவரே
பாவிகளின் பூலோகத்திலும்
அசம்பாவிதங்களுக்காய் உருமறைப்பில் வருபவர்கள்மீது
இனிமேலாவது கொஞ்சம் விழிப்பாகவிரும் !


கர்த்தாவே
ஜெபம் செய்யும்போதும் கண்மூடியிருக்காமல்
சுற்றிவர நடமாடங்களைக் கண்காணிக்கும்படி
புதியஏற்பாடொன்றைப் பிறப்பித்துவிடும் ! 


ஆசிர்வதிக்கப்பட்டவரே
நைந்து போனவர்களிடம் இராச்சியத்தை கட்டியெழுப்பும்
வல்லமைகளை இப்போதில்லை
நீராகவே வந்து சிதைந்துபோன தேவாலயங்களைக்
கழுவித்துடைத்து கட்டித்தாரும் நல்ல பிதாவே !


உமக்கேயுரிய தேவபாசையில்
மதங்கடந்த மனிதநேசிப்பை
பதினோராவது கட்டளையாக்கிவிடும் மீட்பரே ! 


உயிர்த்தெழுந்த திருப்பலியில்
துரோகங்களின் திருப்பீடத்தில் சிதறிப்போன
அப்பாவி ஜீவாத்மாக்களுக்கு
வரப்பிரசாதங்களையும் மோட்ச்பாக்கியத்தையும் கொடும் ! 


மிக முக்கியமாக
முக்காலத்திலும் எல்லாமறிந்தவரே
கையாலாகாதவர்போல
நடந்ததுகொண்டுவகையில் நீரும் உடந்தை என்பதையும்
ஒப்புக்கொடுத்துவிடும் சுவாமி !


ஆமேன் !

*

ஒரு வைத்தியசாலையின்
சோதிக்கவைக்கும் காத்திருப்பு நேரம் !

தனித்திருந்தபடி
சின்னப்பெண்குழந்தை
வெற்றிடமான
மீன் படத்துக்கு நிறம் தீட்டுகிறாள் !


மீனின் வால்களுக்கு
செவ்வரத்த சிவப்புநிறம் பூசினாள்,

கார்களின் பின்புறத்தையவள்
பாதுகாப்புக்காகக் கவனித்திருக்கலாம் !


அதன் செட்டைகளுக்கு
செம்பகப்பூ நிறத்தை தேர்வுசெய்தாள்,
மலர்களின் இதழ்களோடு
நிறையவே நெருக்கம் இருந்திருக்கலாம் !


பூசுமஞ்சள் நிறம் குளித்த
முதுகுப் பிரதேசத்திற்கு
மேலதிகமாக நீலமேகம் தேய்க்க
பச்சை வெளியாகியது வயிற்றுப்பகுதி ,


பிரித்து வைப்பதிலும் பார்க்க
சேர்த்து விடுவதில் அதீத பிரியங்களிருக்கலாம்
ஆவாரம்பூப்போல
அலாதியாக்கி வைத்தாள் கண்களை !


அவளின் எண்ணம்போலவே
வண்ணமயமாக
மீன் இப்போது உயிர்த்துக்கொண்டது ! 


ஆனால்
எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தவில்லை !


மீதியாகவிருந்தது
முத்தம் கொடுப்பதுபோல
முன்னோக்கிக் குவிந்த மீனின் சொண்டு!


என்ன செய்யப்போறாள்? என்று ஆர்வமாகினேன் 


கொஞ்சம்போல ஜோசித்தாள் 


அந்திக்கருக்கல் நிறத்தையவள் உரசியபோது
நாணப் பயிர்ப்பில்க் குறுகிய மீன்
சிரிக்கத்தொடங்கியது !


*

முடிவேயில்லாதுபோல
நம்பிக்கையில்
நாட்களை நகர்த்தமுயற்சிப்பதும் ,


நாளையென்பதை
திசைதவறிப்போன

இறுதிநாள்போல ஆசுவாசிப்பதும் ,


எனக்கே எனக்குரியவையான
வெறும் இச்சைகள் !


வாசல்ப்படியிலேயே விட்டுவிட்டு
இறங்கிநடக்கும்
தினசரி வாழ்க்கையைப்போல
சொன்னபடி அவைகளும் கேட்பதில்லை .


எனக்கவைகளின் மொழி தெரியும்
பரிமாணங்களும் தெரியும்
இருந்தும்
அவைகளின் நோக்கங்கள் புரியவில்லை.


அதனால்தான்
நீண்ட மவுனத்தோடு
அலைமோதிக்கொண்டிருக்கும்
விருப்பங்களை
வெளியே சொல்லப் பயமாக இருக்கிறது.


*


இனி
எழுதமுடியுமாவென்று
மனதிற்குள் சலித்துக்கொண்டிருந்தபோது
நெருங்கி நின்று
எந்திரத்தனமாகக்
கவனித்துக்கொண்டேயிருந்தது
சுயபுத்தி !

புறக் கவனமற்ற
பிளாஸ்ட்டிக் குழாய்களில்
வெண்திரவம்
இடது புறங்கையில்
குமிழிகுமிழியாக
ஏறிக்கொண்டுருந்தபோது
பிடிமானமாக
வலது கணுக்கட்டிலிருந்து
இறங்கிக்கொண்டிருந்தது
இரத்தம் !
நிர்மலமான முகத்தில்
எதைத் தேடுவதென்று யோசித்தபடி
போர்வையைப் போர்த்தி
தட்டிக்கொடுத்தாள்
தாதி !
ஓரளவுக்குமேல்
லயித்திருக்க முடியவில்லை
மிகத்தாமதமாக வேகமெடுத்து
எதற்காக
எழுதவேண்டுமென்ற
கேள்வி எழுந்து பதில் தேடியது.
நினைப்பதைப்போல
எனக்குள் பாரமாக
மீறி எடுக்கும் முடிவுகளென்று
எதுவுமேயிருக்கவில்லை ....
அனுபவத்தில்
கசிந்துகொண்டிருந்த ஈரத்தை
கடைசிச் சொட்டுவரை
இறுக்கிப்பிழிந்து உலரவிட்ட போது
இன்னுமின்னும்
எழுதமுடியுமென்று
நிமிர்ந்து நிரூபிக்கமுடிந்தது !


*

கேலிசெய்வதுபோல
நொடிகளின் நுனியில் நழுவிக் கொண்டிருக்கும்
விதியும் மூடநம்பிக்கையா ?


பக்கச்சார்ப்பாக
வியாக்கியானங்களிருந்தும்

இன்னும் உறுதியாகத் தெரியவில்லை !


மகோன்னதமான தளமொன்றுக்கு
அலாதியாகச் தூக்கிச்செல்லும் 


அல்லது
அடுத்த கட்டமொன்றில்
அக்கினிகளைப் பிரசவிக்கும் 


அல்லது
சாந்தமாகக் காற்றுவீசும்
வாக்கியங்களை அறிமுகப்படுத்தும் 


வெற்றிடமனநிலையொன்றில்
மூழ்கியபடியிருக்கும்போது
அதற்கான பொறி கிடைக்கலாமென்று
எப்போதோ
நினைத்துவைத்திருந்தேன் !


பயித்தியகாரத்தனத்தில்
சத்தியமாகத்
துவங்கும்போது நிச்சயமாய் அந்த எண்ணமில்லை. 


மையநிலையை அணுகமுடியாது
இப்போதைக்கெல்லாம்
திணறத் திணற
எல்லாவிதமான அனுமானங்களும்
பூஜ்யத்துக்குள்ளே வீழ்ந்துகொண்டிருக்கின்றன !


*

புத்துயிர்ப்பைப் பிரதிபலிப்பதுபோல
முன்னதாகவே
நிர்ணயிக்கப்பட்ட தொடக்கம் !


வேறொரு வகையான
மீள்சுழற்சியில் பரந்து விரியும்

வாழ்தலின் கதை !


வழமையானவைகளிலிருந்து
மாறுபடுவதற்கான
ஏற்றஇறக்கக் கோட்டில்
வயதாகிவிடுகிற திருமேனி ! 


காலம்காலமாக
அகழ்ந்தெடுக்கப்படுகிறது
நிலையாமைபற்றிய அனுபவங்கள் !


கைப்பற்றப்பட முடியாத
இறுதி பயணத்தில் திசைமாறிவிடுகிறது
உயிர்த்துடிப்பு !


நிழல் போன்ற நெருக்கத்தில்
மெய்ப்(!)பாதுகாவலன் போல
நம் கூடவே
நகர்ந்துகொண்டிருக்கிறது
மரணம் !


*

சம்பந்தமே இல்லாமல்
இப்படித்தான் வந்துசேர்கிறது
ஒற்றை வெளிப்பாடு !


வரிசைப்படி தொகுத்திருந்தால்
நேரடியாய் தெரியாத

காலத்தின் எச்சங்களிலிருந்தும், 


வாய்ப்பில்லாத
நினைவுகளிலிருந்தும், 


தோளொடு அணைத்துக்கொண்ட
கனவுகளின் தேக்கங்களிலிருந்தும் , 


எதைஎதையோ
எப்படிஎப்படியோ
எங்கெங்கோ
வெளிப்படுத்திவிடுகிறது
மனம் !


*


தூக்கத்துக்கும் விழிப்புக்கும்
போராடிக்கொண்டிருந்த பின்மனசில்
ஊடுபாவாக உள்நுழைந்த ஞாபகம்

அந்தப்பறவை !

அதன் கண்டப் புலம்பெயர்வையும்
கடல்தாண்டிய கூடு திரும்புதலையும்
ஒரு வெள்ளிக்கிழமை
அழைத்து நலம் விசாரிக்கக்காத்திருந்தேன் !

கவிதையொன்றுக்கு சகஜமாய் உரையாடி
வார்தைகளைக் கோர்க்கநினைத்திருந்த
ரெண்டுவாரமளவில் நானே சிதைந்துபோயிருந்தேன் !

நேற்று சனிக்கிழமை
நெடுஞ்சாலையின் நலிவுவாசலோரம்
பறவை பிய்ந்துபோய்க்கிடந்தது !

குற்றவுணர்ச்சிக்குள்
போட்டுவைத்த மரணக்குறிபோல
இழையறாமல் ஓடிக்கொண்டே இருந்தது
கடைசியான அதன் பார்வை !

அமைதியை ஒளித்துவைத்துவிட முயற்சிப்பது போல
மெதுவாய் என்னைக் கவிழ்த்த
இந்தக் கவிதை
வெளிமுகப்புக்கு இறங்கிப் பறந்து
அங்கே வட்டமிட்டுக்கொண்டிருந்தது !




*

பின்னாலிருந்து எட்டிப்பார்த்து
வானத்தை வளைப்பதுபோல
பந்தலின் கீழே
கைப்பிடிச் சுவர் !

அருகே ...
நீட்டிய காம்பில்
ஒற்றைப் பூ !


*

வயதிற்கு மீறிய சுறுசுறுப்பு
சுருட்டிப் பிடித்துக் கொண்டு
தோளுரச நடந்துகொண்டிருந்தார்கள் ,

இவ்வளவு பக்கத்திலும்
வயது வித்தியாசமாகவிருந்த

அம்மா யார்?
மகள் யார்?
மனம் தேடியலைந்து
வீதியைத் தாண்டிப்போய்க்கொண்டிருக்கிறது!


*

இளம்சிவப்பில் சூரியன்
மழைக்குளிரும் காற்றில்லை
சில்லென்று
கோடையிலும் ஈரம்
கழுத்திலும் நெற்றியிலும் !

முட்டிபோட்டு
தண்ணி மொண்டு
முகம் துடைத்து
கண் மழங்க விழித்தபடி
வெறும் தொண்டை விழுங்கி
மனசுக்குள் சலிச்சு
தினம் பழகிய கோலம்
விடிகாலை !


*

சன்னமான
இழைகளால் பின்னப்பட்டதுபோன்ற
நிலை பற்றிய தெரிவிப்புக்களில்
எப்போதுமே முரண்பாடு
முதலாவது

அருவருப்பால் முகம்கோணி
உண்மையைச் சொல்லமுடியாமல்
கையில்பொத்தி வைத்திருக்கிறதுபோல
ஒரு எண்ணம்


அல்லது எதிர்பார்ப்பு.
முடிந்தவரை அதில்
ஏதும் அறியாததுபோல
பாவனை செய்வதில் தோற்றுவிடுகிறேன் !


இரண்டாவது
உங்களைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ
அதே அளவு
என்னைப்பற்றியதுமான
தகவல் வெளிப்பட்டுவிட்டது போல
ஒரு அவநம்பிக்கை 


அல்லது ஐயம் !
எனக்குத் தெரியும்
பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற
பரமரகசியங்களின் மதிப்பு அதிகமென்று! 


வாழ்க்கை என்னுமளவிலும்
கடினமான சூழல் ரெண்டிலுமே !


எப்படியோ
ரெண்டுமே நல்லதுக்கில்லை !


*


சோலை மரங்கள்
பருவக் குளிர்ச்சியையும் மீறி
உறக்கத்தில் மயங்கியபடியிருக்கும் ,


நிறங்களைச் சிதைக்க
கசகசவென்று உறுத்தியபடியே

விண்ணதிரும் கட்டிடங்கள்,


புதர்க்காடுகளில் வாசனை திருடும்
இராப்பூச்சிகளின் சப்தம்,


நிலவொளியை மூடிவைத்து
தூரிகையில்லாமல் வரையும்
மின்னொளி வீதிகள்,


கன்னங்களை
மீண்டும் மீண்டும் தடவி
புரையேறிய நினைவில்  
சொற்கள்

கண்களை மூடிக்கொண்டே
ந்த உருவமும் சரிவரப் பிடிபடாமல் 
ஏதோவொரு பிரமை ,


வேகமாய்க் கரைந்து நழுவுவதை
எழுதவேண்டுமெனில்
இரவை எடுத்துக்கொள்ளுங்கள் .






No comments :

Post a Comment