Sunday 19 January 2020

மறுபாதி உலகம்.

புல்லரிப்பது போன்று
இதுவரை நேர்ந்ததில்லைதான்
எனினும்
திசைக்காற்றின் செறிவில்
மெருகேறுகின்றது  
மழைமேகம் !

விரிந்து கவியும் வானம்

பரந்த வெளியின்மேல்

புதிதாகக் கற்றுக்கொள்வதுபோல 
ஆனந்தமாய் அசைந்து போகும்
பறவையின் குதூகலம் !


கவனத்தில் வையுங்கள்
ரம்மியவானவைகளைத் 
 தேர்ந்தெடுக்கும் முடிவே 
இயற்கையின்
அட்டகாசமான அறிமுகம் !


*

ஏறக்குறைய 
தலை நிமிராமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு

விடியல் மழை 
வாசல் தெளித்துக் கோலம் போடும் !

அப்போதுதான்
பாதியில் நிறுத்திவிட்டு

அந்த அதிசயத்தை உணர்ந்தேன் !



முடியும் வரை நின்று
பாராட்டிவிட்டுப் போவதற்கு
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
தூரதேச மாரிக்காலங்களும்
மாமழை போற்றுதும் நினைவுவரும் ,


வெள்ளங்கள் வடியும்வரை
பயமுறுத்திய இரவுலகங்கள்
என்றுமே எனக்குப் பிடித்தது !


நீர் அடித்து நீர் விலகாது

கிளர்ச்சியைத் தூண்டி 
நாளை அதைச் சொல்லுவதே அவமானம் ?


இப்போதெல்லாம்
எதையோ தேடிவிட்டு
திரும்பச் செல்லும் நினைவுகளில்
ஈரலிப்பு இல்லை !


இல்லை என்பதை விட
என்னைத் தவிர்க்கின்றனபோலிருக்கு !



*

விருப்பங்களை மறுப்பதிலும்
புதுவழிமுறைகள் போதிக்கின்றது
காலம் !


நினைவு போல் கனவும்
கனவு போல் நினைவுமாக...


வயதாவதில் உலர்ந்துகொண்டிருக்கும்
மேனி !


நினைவடுக்குகளில்
இளமை இரகசியங்கள்
பின்னகர்ந்தது போய்விடுகின்றன !


ஆனாலுமென்ன வந்தது
விருப்பப்படி இயங்க எத்தனை இருக்கிறது?


பரிணமிக்கும் விந்தைகளை
ஏன் விலக்க வேண்டும்?


வாழ்வதை விட 

எவ்வளவோமேல்
விடாமுயற்சித்துக்கொண்டிருப்பது !


*

அனைத்தையும் வெறுமையாக்கி
சுத்திகரிக்கப்பட்ட
ஆதிமனதை நிராகரித்
தேன்

எங்கிருந்து கேட்கிதென்றே தெரியாமல்
மனத்திரையை உற்றுநோக்கி

ஒரு அநாதியானகுரல் !


கடக்க முடியாத பெரும்பாதையில்
உறையவைக்கப்படும்
திசைக்குறிப்புக்கள் புரியவில்லை !


கசப்புககுள்ளேயும்
இனிமையான ஊடுறுவல்போல
வசந்தகாலமயக்கங்கள் !


இலைதளிர் காற்றின் அழைப்பு
புறங்கைகளை நீட்டிவைத்து
தீண்டச்சொல்லி வலியுறுத்துகின்றது 


காலப்பிரிகை நொடியில்
குப்பையாக நிரம்பிவிடுகிறது
மவுனம் !


*

அளவுகோல்களிலோ
அபரிமிதமான ஆற்றல்பற்றியோ
அதிகம் புகழும்படியாக
எல்லைமீறாத ஆசைகள்
...

*
அன்றலர்ந்த பூக்கள்
மழை குளித்த மென்மையோடு
இன்னுமோராயிரம்
அனுபவ நனைவுகள்,

*
நெஞ்செரிக்கும்
காற்றின் நினைவுகளில்
மூச்சு இலட்சியத்தை
எழுதியேயாகவேண்டிய
வாழ்தலின் கதை,

*
பழமை மொழியின்
சாத்தியங்களைச் சொல்லி
மரபுகளை சமன்படுத்தும்
வார்த்தைகளின் வெட்கம் !

*

பொன்மஞ்சள் மாலை
பூத்தூவி தமிழ் பாடி
ராக சுரங்களுக்குள்
நுணுக்கமெல்லாம் மீட்டிவிடும்
இறவாப் பாடல்கள்

*
வீராளியம்மன்
திருவீதி வலம் வந்து
ஆடம்பரங்களற்ற
சின்னஞ் சிறிய வாழ்வில்
சந்தனக் குடும்பம்,

*
முகம் பார்த்து
நிச்சயிப்புக்களை ஏற்றுகொள்ளும்
ஆத்மாவின் பாஷைக்குள்
நிறைந்துவிடும் நண்பர்கள்,

*
எழில்கொண்டு
பனிபொழியும்போதெல்லாம்
தலைக்குக் கூரையாக
வெய்யிலை விநியோகிக்கும்
திவ்வியமான நாடு

*
கலைந்தபடியிருக்கும்
ஆதிக் கனவுகளிலும்
முரண்பாடுகளோடு
இப்போதைகளையும்
யாசித்துக்கொண்டிருக்கிறேன் !


*

அவர்களைப்பற்றி
ஒன்றுமே தெரியாதிருக்கும் 


வெறுமையான புன்னகையோடு
விடைபெறுமுன்னமே
ரகசியங்களை அறிந்திருப்பேன்!


நேற்றைய காலத்தடத்தில்
ஊர்ந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தின் குரல் !


வெளியே கிளம்பும்போது
வன்முறைக்கான சாத்தியங்கள் விரவியிருக்கும்
லேசாகவே கடந்துவிடுவேன் !


ஊக்குவிக்கவுமில்லை
நிரந்தரமாய் நிராகரிததுமில்லை 


நுனியில் தத்தளித்தபடியிருக்கும்
நிதிப்பற்றாக்குறை !


உணர்வுப்பூர்வமான கணங்களில்
அழுத்தமான பாதிப்புகள்
பின்ணணியை அணைத்தபடி !


இதயத்தில் துள்ளியிருக்கும்
மரண ஒத்திகை 


அதிகாலைகளில்த்தான்
அளவுக்கதிகமாக  
மனப்பாரமழுத்தும் !

அசாதரணமான சந்தர்ப்பங்களிலிருந்து
விடுவித்துக் கொள்ள
அவலமான நகைச்சுவை !


தொடர்பாடல்களில்
நீண்ட நட்புறுத்தலின் பிடியில்
கூச்சசுபாவத்தைப் பிடுங்கியெறிந்தபின்தான்
அசரீரி ஆச்சரியங்கள் !


எப்போதும்
இதுபோன்ற சில தெறிப்புக்களே
பித்து பிடித்ததைப் போல்
என் நாட்களைத் தீர்மானிக்கின்றன !


*

சேதமில்லாமல்
கீழிறங்கித் தரைக்கு வருகிறது
நெடுங்காலம் தன்னிலையை இழந்த
உஷ்ணம் !


ஏற்ற இறக்கமான நீரலைகளில்

சூரியப் பிரதிபலிப்புக்களை
கோலாகலப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளும்
இளமஞ்சள் வெய்யில் !


வெளிச்சத்துக்கு ஏங்கி
இருட்டில் நசுங்கிய பகல்ப்பொழுது
முன்மாதிரிகளை வரைந்து
மெல்லென மாறிக்கொண்டிருக்கிறது


 வருடத்தின் பருவகாலம் 

ஒரு பிம்பத்தை உருவாக்கி
தீர்மானமாக அறுதியிட முடியாத நிலை


அதிகமாக நெருங்கவைப்பது
குழந்தையைப் போல
சிட்டுக்குருவிகளும்
தவிட்டுக் குருவிகளும் தருவிக்கும்
குதூகலமான மனநிலை !


*

நெகிழச்செய்கிறது
சிறையிலிருந்து வெளியேறத் திறக்கும்
பதின்பிராய இளமை !


மிக்க நேர்த்தியோடு
பெருமைப்படுத்தி வாசிக்கலாம் போலிருக்கு

எச்சரிக்கையான பார்வை !


தன்னிகழ்வுத் தீர்மானம் போன்று
வெளிச்சம் பாய்ச்சுகிறது முகம் !


கண்களால் ஜாடை செய்கிறாள்.
இன்னமும் அழகாக இருக்கிறது


யதார்த்தத்தின் சிரிப்பு. 

அரையிருட்டு வெளிச்சத்தில் 

சுற்றிலும் துஷ்பிரயோகம் 

பூடகமாகப் பொதிந்திருக்கும் 

ஒளிக்கீற்றே சுவாரசியமாயிருந்தது
காற்று அடித்துக் கொண்டிருப்பதைப் போல


விதிக்கப்பட்டவைகளை அசைத்துக்கொண்டிருப்பது
என்னவென்பதை
இங்கு சொல்ல விரும்பவில்லை.!


துணிச்சலை வரவழைத்து
பின்விளைவுப் பொருட்படுத்தாமல்
தனக்கு வேண்டியதைச்
வெளிப்படுத்தத் தெரியாதவரையில்
அவள் இன்னும் சிறுமிதான் !


*


புள்ளி உருமாற்றம்போல
எனக்குள்ளாகி
மெத்தென்ற தரையில் விழுந்தது
நிலவின் நிழல் !


பணியோடு திரைபோட்டு

குளிரோடு ஊடுருவியதால்
பவுர்ணமியின் வீழ்ப்படிவுகளில்
வெண்மை இடறியது !


புலனின் பாதைகளில்
உணர்வு நரம்புகள்
அனேகமாகக் காலியாக இருக்கும் 


இந்நேரம்
இரைதேடும் சத்தங்கள்
பிடரியின் புறப்பகுதிக்குள்
மல்லுக்கு நிற்பதுபோலத் தோற்றம்


முழுநிலவை
எனக்கெதிராகக்
கலவரமாக்கவிடப்போவதில்லை. !


இப்பெல்லாம்
அரண்டு போனவைகளை
உறங்க வைப்பதில் முடிந்துபோகிற
நிலாக்கால
ப் பொழுதுகள் !

*

முதல்க்கட்ட சந்திப்பு
எகிறி ஏற்படுத்திய
குழப்பத்தைத் தாண்ட
அதிக நேரம் ஆகவில்லை !


பரிமாற்றத்தின்

ஒரு முனையில் மட்டுமே நின்றாடிய
சிந்தனைப்போக்கில்
நம்பிக்கைகள் உடைந்தேபோய்விட்டது !


சமயங்களில்
உணர்வு உந்துசக்தி
அது முழுதும் உண்மையல்ல !


பிறகெல்லாம் 

ஜில்லென்ற காற்றைத் தொடர
கதைத்துக்கொண்டிருந்தது


ஒரு விதத்தில்
தூளி மழை போலவே
விடையின் முதல் பகுதி கிடைத்தது. 


அஃது
புரிதல் எவ்வளவு முக்கியமோ
அதை விட முக்கியம்
பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும்
மனம் !


*

திறமைக்கு மறுமொழியாக
மொழியைத்
தகுதிப்படுத்திக்கொள்வதில் ,


வைராக்கியமாக
சிறிய வார்த்தைகளை

வரிசைப்படுத்திக்கொள்வதில், 


நுனியில்
அதற்கடுத்த கட்டத்தை
சட்டென்று சேர்த்துக்கொள்வதில் , 


பிரண்டுகொள்ளும்
காலப்பிரமானத்துக்குள்
விவரங்களை தெரிவிப்பதில், 


முடிவுகளின் வளைவுகளில்
அபத்தங்களை
தெளிவுபடத் தெரிந்துவைத்திருப்பதில் ,


வாசகரிடம்
அதிகாரமாக நெருங்குவதில் , 


விமர்சகர்களின்
மறுப்பைக் கையாளுவதில் 


ஒரு
கவிதை எதிர்கொள்ளும்
கட்டமைப்பு
எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்பதில்
ஆட்டவிதிகள்
குறைவாகவே 
மீறப்பட்டிருக்கிறது 

அல்லது
எதுவுமே பயிற்றுவிக்கப்படவில்லை !



*





No comments :

Post a Comment