Saturday 14 March 2015

சாகனே தேவாலயம்- ஒஸ்லோவின் கதைகள் 003

கோடை காலத்தில் சைக்கிளில் நான் வசிக்கும் உயரமான புறநகர்ப் பேட்டையில் இருந்து கீழே இறங்கி வளைந்து வளைந்து செல்லும் பாதையில் ஒஸ்லோ நகரத்துக்குப் போகும் வழியில் சாகனே என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தத் தேவாலயத்துக்கு போறவழியில் ஒரு கும்பிடு போட்டு விட்டு சைக்கிளில் ஓடிக்கொண்டே போவது.

                                                            நேரம் கிடைக்கும் ஒரு நாள் ராஜகுமாரன் நூல் ஏணியில் ஏறி ராஜகுமாரியை நோகாமல் கைத்தாங்கலாக  இறக்கி வெள்ளைக்குதிரையில் கடத்திக்கொண்டுபோய் கலியாணம் கட்டும் கதைகளில் வரும் மாளிகை போல இருக்கும் இந்த இடத்தை கொஞ்சம் உள்ளிட்டுப் பார்க்க வேண்டும் என்று எப்பவும் நினைப்பது,

                                   ஒஸ்லோவில் உள்ள மற்ற தேவாலயங்களில் இருந்து மாறுபட்ட ஒரு கட்டடக்கலை வடிவில் உள்ள இந்தக் கோவிலை ஆறுதலாக கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க எப்பவுமே நினைப்பது ஒரு வெயில் எறிக்கும் நாளில் கர்த்தரின் கருணையால் சாத்தியம் ஆகியது.

                              விசுக் என்று என்னோட சைக்கில் பறக்கும் போது சில செக்கன் மட்டுமே விசுக் என்று முகம் கொடுக்கும் இந்த சாகனே தேவாலயம் இருக்கும் இடமே, அவசரமான, அலங்கார ஒஸ்லோ நகரத்தின் அபரிமிதமான நவீன நெரிசல்களில் இருந்து கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக .

                                                நகரத்தின் விளிம்பில் , ஒஸ்லோவை ஊடறுக்கும் ஆர்கிஸ் எல்வா நதியின் கரையில் இருக்கும் குன்னர் லொக்கா என்ற ஜெர்மன் பெயரில் இருக்கும் சின்ன டவுனின் நெத்தியில் வைச்ச குங்குமப் பொட்டுப்போல இருக்கும் சாகனே என்ற இடத்தில இருக்கு.

                             குன்னர்லொக்கா என்ற பெயரே ஒஸ்லோவில் உள்ள ஒரே ஒரு ஜெர்மன் எழுத்தில் உள்ள பெயர்,அது எப்படி இங்கே வந்தது எண்டு எனக்கு தெரியவில்லை,ஆனால் குன்னர்லொக்கா பெயரில் உள்ள  ü  என்ற எழுத்து நோர்வேயின் நோர்க்ஸ் மொழியில் இல்லை .

                                                    குன்னர் என்பது குறி பார்த்துச் சுடும் இராணுவ வீரர்களுக்கு மத்தியகால ஐரோப்பாவில் பாவிக்கப்பட்ட பெயர்,  லொக்கா என்பது  முகாம் அல்லது பண்டகசாலை என்ற நோர்வே மொழிப் பெயர் .ஒருவேளை ஜெர்மன் இராணுவ வீரர்கள் அந்த இடத்தில முகாம் அமைத்து நோர்வே நாட்டுப் பெண்களுக்கு பண்டகசாலையில் ரோமன்ஸ் செய்து

                                                       " இச் லைபே டிச், நெய் வர்லேசன், அல்லாஸ் கிழா அல்லாஸ் வுட்ன்டர்பார்  "

                                                                  என்று டொச்சில் சொல்லி வாழ்வு கொடுத்த இடமாக இருக்கலாம் போல

                                        தேவைதைகளின் அட்வென்ச்சர் கதைகளில் வருவது போல உள்ள சாகனே தேவாலயம் பதினெட்டாம் நுற்றாண்டில் ஆர்கிஸ் எல்லா நதியின் தண்ணியை மறித்து அதில நீர்வலு மூலம் இயந்திரங்களை இயக்க வைத்து,உடல் வலுவில் முறிந்து முறிந்து எலும்பை உறைய வைக்கும் குளிரில், பல நுற்றாண்டுகள் முன்னம் வாழ்ந்த எதையும் தாங்கும் இதயமுள்ள உழைப்பை உயிர் வரை நேசித்த நோர்வேயிய மக்கள்,

                                                                 துணி செய்யும் தொழிற்சாலை, ஆணியில் இருந்து ரெயில் தண்டவாளம்  போன்ற இரும்பு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றவற்றை உற்பத்தி செய்த உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த இடமான சாகனையில் இந்த சாகனே தேவாலயதை கடவுள் நம்பிக்கை உள்ள அந்த தொழிலார்கள் தேவனோடு வாழ்பவர்கள் தேவப் பிள்ளைகள் என்ற நம்பிக்கையில் மத்தியகால நோர்வேயின் கிறிஸ்தவ நம்பிக்கையில் கட்டி இருக்குறார்கள்.

                                       நோர்வேயிலேயே சாகனே தேவாலயம்தான்  கோத்தே ஸ்டைல் அற்கிடேக்சரில் கட்டப்பட்ட முக்கியமான தேவாலயம் ,இந்த தேவாலயக் கோபுரத்தை நியோ கோத்தே ஸ்டைல் என்று சொல்லுறார்கள், வடக்கு ஐரோப்பாவில் இப்படி கோத்தே ஸ்டைல் கட்டிடக்கலை யில் கட்டப்பட்ட தேவாலயங்களில்  சாகனே தேவாலயம் அதன் உள்ளே உள்ள பைன் மரத்தால் செய்யப்பட்ட எண்கோண வடிவ பலிபீட மேடை போல வேற எங்கேயும் இல்லை என்கிறார்கள்.

                                இந்தத் தேவாலயத்தின் கருவறையில் ஜேசுநாதர் சிலுவையில் இருந்து கழட்டி இறக்கப்படும் கிறிஸ்டியன் பேரன் என்ற ஒரு நோர்வே நாட்டு புகழ்பெற்ற வரைஞ்சரின் ஒரு ஓவியம் மட்டுமே தொங்கவிட்டுள்ளார்கள்.மிக மிக அரிதாக Hollenbach organ என்ற மரத்தால செய்யப்பட்ட ஓர்கன் வாத்தியம் உள்ளது,நோர்வேயில் இந்த ஒரே ஒரு தேவலாயதிலையே அது உள்ளதாம்,அது 1891  இல் இருந்து இப்பவும் வாசிக்கப்படுவது ஒரு அதிசயம்.

                               கிறிஸ்தவ நம்பிக்கை,அந்த சமய அனுஷ்டானங்கள் அரிதாகி ஒரு வித நளினமான நாகரிக வாழ்கையில் நோர்வே மக்கள் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இன்றைய நாட்களில் சாகனே தேவாலயம் கடந்து போன காலத்தின் ஒரு அடையாள சின்னம் போல இருக்கு  ,

                                                    ஒரு காலத்தில் வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக இருந்ததுக்கும் , அதை  விழிப்புணர்வுணர்வோடு சிந்திக்க வைத்து , அந்த  உரிமையை  இப்பவும் பறித்து எடுக்க முடியாதவாறு வரலாற்று சாட்சியாக ஒரு சின்ன ஒதுக்குப்புற நகர விளிம்பில் கம்பிராமாக நிற்கிறது சாகனே தேவாலயம்,

                                                                               அதன் மயக்கும் பிரமிப்பில் சில நிமிடங்களே கரைந்து போக எண்ணம் அனைத்தும் நின்றுவிடும் போல இருந்தது.


5 comments :