Saturday 14 March 2015

அலங்கார நகரம்..

எழுதுவதுக்கு எதுவுமே இல்லாத நேரத்தில் என்னத்தை இழுத்துப் பிடிச்சு உக்கார வைத்துக் கவிதை எழுதுவது என்று வெறுப்பாக இருக்கும். சில நாட்கள் முன்னர் நடுவிரவில் வேலை முடித்து வரும் போது என்னோட அப்பார்மென்ட் உள்ள கட்டிடத் தொகுதி, அதுக்கு உள்ளே போகும் நிகழ்வு,போன உடன கொம்புடரை திறந்து பார்ப்பது, அலுத்துப்போய் கிட்டாரை கையில் எடுத்து ரெண்டு தட்டு தட்டுவது, அதுவும் அலுத்துப்போய் தலைமாட்டு கால்மாட்டு தெரியாமல் சுருண்டு கட்டிலில் விழுவது போன்ற சுவராசியமற்ற எப்பவுமே நிகழும் சம்பவத்தை கவிதை மொழியில் எழுத முயற்சிக்கலாமே என்று தோன்றியதின் துன்ப விளைவே இது....
.
மனிதர்கள் 
கவனிக்க மறந்தாலும் 
தன்னுடைய 
பிரகாசமான பக்கத்தை 
மட்டுமே உலகிற்குக் 
காட்டுகிறது 
மாடிக் குடியிருப்புக் 
கட்டிடம்.. 

வெளிக்கதவைத்
அலட்சியமாகத் 
திறந்து 
உள் நுழையும் போதே 
வெளி உலகம் 
கலந்துரையாடலிருந்து 
விடைபெறும்... 

படிகளில்
வலுவாகக் காலுன்றி 
மேலேற 
மனசாட்சியோடு 
பேசிக்கொண்டே 
சந்தோஷங்கள் 
மெதுவாக
படிப்படியாக 
கீழிறங்கி விடும் 

உள்க் கதவில் 
திறப்புப் போட 
உறவுகள் 
வெளியே தள்ளப்பட்டு 
சமாளிப்பு 
மறுபடியும் குறுக்கு 
வழியிலே 
மவுனம் சிந்தும்... 

இதயம் முழுவதையும் 
காதலுக்காக 
கண்ணீரால் நிரம்பிவிட்டு 
ஜன்னல் வழியாகப் 
புன்னகை 
செய்து கொண்டிருக்கும் 
அலங்கார நகரம் 

பொய்யான 
வலைச் சமூகத்தால் 
வளர்க்கப்பட்ட 
கணனியின் 
திரையைத் திறத்தாலும் 
நாலு பேர் 
உருவாக்கியுள்ள 
நாடகத்தில் 
யாருமே தமது 
இதயத்தைத் 
திறப்பதில்லை.....

கிட்டாரில் 
எதோவொரு பாட்டை 
ஏதோவொரு மெட்டில் 
வாசிக்க 
அடைத்து நிரப்பி 
மெல்லிசையாக மாறி 
விழிப்புணர்வு
நின்றுவிட

சோம்பலோடு 
அமைதியில் தள்ளாடும் 
உலகத்தை 
நமக்கேற்றபடி 
நிர்ப்பந்தப்படுத்த முடியாமல் 
இரவு 
முழுவதும் 
காணாமல் போய்விடும்.
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 13.03.15

No comments :

Post a Comment