Monday, 14 September 2015

ஊரெங்கும் தேடி ஒருவனைக் கண்டேன்

அந்தக் காலம் ,மனிதர்கள் , சம்பவங்கள் எல்லாமே ஒரு கனவுபோல மறைந்து விட்டது . சிலது நிரந்தரமாக  மறந்த போதும் , சிலது மறக்கவில்லை. அதில ஒன்று யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் ஆனந்தன் அண்ணை எண்டு ஒருவர் இருந்தார் ,அவர் பாக்கிறதுக்கு மார்க்கண்டேயர் போல கருப்பா இருந்தாலும் ,நல்ல வாட்ட சாட்டமான எழும்பின ஆம்பிளை.  சாந்தி அக்காவை எல்லா ஆம்பிளைகளும் ரெம்ப நல்லவங்கள் போல நேரம் கெட்ட நேரத்தில விதி விளையாடும் போது விடுற 

                               " உன்னைக் கண் கலங்காமல் கடைசிவரை காப்பாற்றுவேன் " 

எண்டு டயலக் பேசி , நல்லாப் படிசுக்கொண்டு கம்பஸ் போற கனவில இருந்த அவாவை காதலித்து கலியாணம் கட்டி , அவாவின் பட்டதாரிக் கனவில மண்ணை அள்ளிப்போட்டுக்  குடியும் ,குடித்தனமுமா வாழ்ந்தார் !

                                      சாந்தி அக்கா தான் அந்த வீட்டில ஒரே ஒரு பெண் பிள்ளை, மற்ற அஞ்சு பேரும் ஆம்பிளைகள். அதில நாலுபேர் ஜெர்மனிக்கும்,பிரான்சுக்கும் போயிட்டாங்க, ஒருவர் .... என்ற இயக்கத்துக்கு 

                       " தமிழ் ஈழம் எடுக்காமல் திரும்பி வரவே மாட்டேன்  " 

                                      எண்டு போய்ப் போனவர் போனவர்தான் , அவர் எடுக்கப் போனது எடுத்துக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை அவர் சும்மா தன்னும் வீட்டுக்கு உயிரோடு திரும்பி வந்ததே இல்லை. அவர் பற்றி யாருக்கும் ஒண்டும் தெரியாது. அரசாங்க வேலை செய்து கொண்டு இருந்த அவாவின் அப்பா, சாந்தி அக்கா சின்னதா இருந்த போதே,  அவரோட நடு  வயசில் குடியால ஒரு நாள் இதயம் இறுக்க , ரெண்டு தரம் இருமிப் போட்டு இறந்திடார்,

                                    நாலு அண்ணன்களும் சாந்தி அக்காவை ஏ எல் வரை நல்லா படிக்க வைக்க, எப்படியோ ஆனந்தன் அண்ணை அவாவை எங்கயோ விதியின் விளிம்பில் சந்திச்சு, என்னவோ சிலப்பதிகாரக் கானல் வரிகள்  சொல்லி மயக்கி,  என்னத்தையோ  மன்மதன் அம்புபோலக் காட்டி இளக வைத்து  " படிச்சு என்னத்தைக் இனிக் கிழிக்கப் போறாய்,நீ இல்லாட்டி பொலிடோல் குடிப்பேன் "  எண்டு எப்படியோ பெண்களின் பலவீனத்தை சாதகமாக்கி மனம் மாற்றி ஒரு நாள் ஊருக்கு அதிகம் தெரியாமல் அவர்கள் கலியாணம் நடந்தது. 

                                        " தங்கச்சி கட்டும் வரை நாங்கள் கலியாணம் கட்ட மாட்டோம்,அவளுக்கு டாகுத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுன்டன் மாப்பிள்ளை பார்த்து , வீடு வளவு சீதனம் கொடுத்து , நகை நட்டு அள்ளிப் போட்டு ,கலியான வீடுக்கு  வீதிவரை  பந்தல் போட்டு , ஊருக்கு வெத்திலை பாக்கு வைச்சு,வாற எல்லாருக்கும் ரோசாப்பு பன்னீர் தெளிச்சு, புதுத் தம்பதிகள் கால்கள் பூ மியில் படாமல் கோவிலில் இருந்து வீடு வரை நடை பாவாடை விரிச்சு,எம் கே பத்மநாதன் மேளக் கோஸ்டி பிடிச்சு, இரவு ரங்கன் கோஸ்டியின் பாட்டுக்கோஸ்டி கூப்பிட்டு ஊரை அதிர வைச்சு .....ராசாத்தி போல வாழ வைப்போம் ...." 

                                 எண்டு உறுதிமொழி கொடுத்த நாலு அண்ணன்களும் வெறுத்துப்போய் அதுக்கு பிறகு அவாவோட தொடர்பையே துண்டித்து விட்டார்கள்.

                               ஆனந்தன் அண்ணை கலியாணம் கட்டின நேரம் மிக மிக நல்ல மனிதர். பிறகு கொஞ்சம் அவர் வேலை அவரை உலைக்கத் தொடங்கின நேரமும் மிக நல்ல மனிதர் . கொஞ்சநாள் சாந்தி அக்காவோட கதவழிப் பட்டுக்கொண்டு இருந்த நேரமும் நல்ல மனிதர் .  அதன் பின் என்ன நடந்ததோ தெரியாது குடிக்காத நேரத்தில மட்டும் அவர் கொஞ்சம் நல்ல மனிதரா இருந்தார். !

                                  அவர் யாழ்பாணத்தில இருந்து சங்கானை மனியதிண்ட இசுசு லோரியில புகையிலை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குப் போகும் லோரியில டிரைவரா வேலை செய்தார். மாசத்தில ஒரு கிழமைதான் சாந்தி அக்காவோட வீட்டுக்கு வந்து நிற்பார் ,மற்ற நாட்கள் எல்லாம் நேரம் ,காலம் இல்லாமல் , யாழ்ப்பாணம் -கொழும்பு இரண்டையும் இணைக்கும் கண்டி ரோடில , அந்த இசுசு லோறியக் கலியாணம் கட்டின மாதிரி அதோட தான் அவரோட சீவியம் போகும்.

                          ஆனந்தன் அண்ணை வீடுக்கு வார அந்த ஒரு கிழமை நாட்களில் ,கையோட அவர் ஓடுற இசுசு லொறியையும் கொண்டு வந்து எங்களின் வீடுக்கு பக்கத்தில இருந்த பால்ப் பண்ணை இருந்த வெறும் பள்ளக் காணிக்கை விட்டுட்டு ,அதை, வேண்டுமெண்டே ஏறக்குறய மறந்த மாதிரிதான் இருப்பார்.  நான் அதில ஏறி விளையாடுவான் ,கியர் மாத்துவன் ,கோன் அடிப்பன் , அச்சிலேடரை அமத்துவன், அங்கால இன்காலா கையால சிக்னல் போடுவேன் ,சில நாட்கள் அந்த லொறியை யாழ்பாணத்தில இருந்து கொழும்புக்கு ஒரு அக்சிடண்டும் படாமலே கண்டி ரோட்டில  ஒட்டிக் கொண்டு போய்,   முருகண்டியில்  சயிட் எடுத்து நிற்பாட்டி, இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சுப்போட்டு ஒரு சேதாரமும் இல்லாமல்  கொழும்புக்கே கொண்டு போயிருக்கிறேன் .

                       ஆனந்தன் அண்ணை நான் லொறி ஓடுறதை பாத்திட்டு  , ஒருநாள்

                       " உமக்கு என்ன லொறி ஓடுற டிரைவர் ,வேலை வளர்ந்து செய்ய விருப்பம் போல இருக்கு , ஆனால் அந்த நசல் வேலை மட்டும் செய்யவேண்டாம் , நான்  ரோட்டு ரோட்டா வீடு வாசல் இல்லாமல் ,பொஞ்சாதி முகத்தைப்பார்த்து மாதக்கணக்கில் சீரளியிர கேவலத்தை பாரும் , நல்லாப் படிச்சு கதிரையில் இருந்து உத்தியோகம் பார்க்கிறதுக்கு படியும், வாகனம் ஓடுறது ஆபத்தான வேலை, சறுக்கினா சில நேரம் சவுக்காலையில் தான் வாழ்க்கை முடியும்  "

                   எண்டு அடவைஸ் போல சொன்னார் ,அவர் சொன்னது எனக்கு நடந்தது ,அதைக் கதையின் முடிவில் சொல்லுறன் .

                        ஆனந்தன் அண்ணை வீட்டுக்கு வந்த முதல் இரண்டு நாளும் ,தலை கரணமாக்  குடிப்பார். குத்து விளக்குப் போல எந்த  முக்கியமான சமய நாட்களின் நல்ல நேரமெல்லாம்  சாமி அறையில அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு இருக்கிற சாந்தி அக்காவைப் போட்டு அடிப்பார்.  அயல் அட்டை வீடுகளுக்கு அடிச்சு  நொறுக்குற, சத்தம் கேடகாமல் இருக்க ,டேப் ரெகொர்டரில்
           
                        " ஆனந்தம் விளையாடும் வீடு ,இது அன்பாலே உருவான கூடு ,,,,இது ஆனந்தம் விளையாடும் வீடு   ,அன்பாலே உருவான கூடு  " 

                                        என்ற பாடலை உரத்துப் போட்டுடுதான் ,சாந்தி அக்காவுக்கு போட்டு விளையாடுவார் , சாந்தி அக்கா ,பிறந்ததே கணவனிடம் உதை வேண்டவும் ,காதலித்துக் கலியாணம் கட்டினதே அடி வேண்டத்தான் என்பது போல ,ஒண்டும் சொல்லாமல்  ,நல்ல அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண் போல அடி வேண்டுவா !

                                      இரவு நல்லா வெறி ஏற, அவர்கள் வீடுக்கு முன்னால , எங்களின் வீட்டு மதிலோட ஒட்டிக்கொண்டு நின்ற வேப்ப மரத்துக்கு கீழ, ஓலைப் பாயைப் போட்டு ,ஆனந்தன் அண்ணை அண்ணாந்து கிடந்து கொண்டு

                         " அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ,,எடியே சாந்தி , எடியே சாந்தி , என் அமைதியில் ஏதடி சாந்தி ,எடியே சாந்தி ,எடியே சாந்தி ,,உன் உறவினில் ஏதடி சாந்தி,,எடியே சாந்தி ..... "

                             எண்டு கோவமாப் பாடுவார்  , சாந்தி அக்கா சத்தமில்லாமல் அவர்கள் வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அன்புக் கணவன் மனமுருகிப் பாடுறதைக் கேட்டுக் கொண்டிருப்பா.  அவர் படுத்து கிடக்கும் வேப்ப மரம் காத்தில ஆட

                           " ஆரடா அவன் வேப்ப மரத்தை ஆட்டுறவன் , எடியே சாந்தி உன்ற கள்ளப் புருஷன் வந்து மரத்தில ஒளிஞ்சு நிக்குரான் போல "  

              எண்டு பேசுறது எங்களின் வீடுக்கு கேட்கும் ,நான் அம்மாவிடமே கேட்டிருகேறேன்

                     " ஏனம்மா ஆனந்தன் அண்ணை ,சாந்தி அக்காவை வாய்க்கு வந்தபடி திட்டுறார் ?" 

                        என்று கேட்டு இருக்கிறேன் ,அம்மா அதுக்கு

                        " சாந்தி பாவமடா , சிவானந்தனும் நல்ல பொடியன் தான் , வேலை கஸ்ரத்தில ரெண்டுநாள் குடிச்சுப் போட்டு உளறுறான் , உலகத்தில இப்படி பல வீடுகளில் நடக்குது தானே, குடி மனுசரை நிதானமாய் ஜோசிக்க விடாது , புத்திசாலி  நரியே கள்ளைக் குடிச்சுப் போட்டு ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும், நீயும் இந்த குடி வெறியப்  பழகி சீரளியாதையடா!" 

                       எண்டு சொன்னது நினைவு இருக்கு !.அம்மா நரி ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும் எண்டு சொன்னதும் எனக்கு நடந்தது ,அதையும் கதையின் முடிவில் சொல்லுறன் .

                                          ஆனந்தன் அண்ணை தூங்கின பிறகுதான் சாந்தி அக்கா ,அவாவுக்கு விரும்பின ,எப்பவுமே பாடும் ஒரு பாடலை பாடுவா ! சும்மா சொல்லவில்லை சாந்தி அக்கா நல்லாப் பாடுவா , அவா சங்கீதம் படித்தவர்கள் போல " கமகம் , சங்கதி " எல்லாம் வைத்து பாடுவா ,அவா பாடிய அந்த ஒரே ஒரு பாட்டு , அவா அந்த யாழ்ப்பான இரவின் அமைதியில் பாடியதால் மட்டுமே இப்பவும் 25 வருடங்களின் பின்னும் எனக்கு நினைவு இருக்கு ,

                                           தேன் நிலவு படத்தில வாற "ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன் ,,அந்த ஒருவனுக்குள் தேடினேன் உள்ளத்தைக் கண்டேன் " என்ற அந்த பாடலின் சரணத்தில வரும்

                                       " காண வந்த மாளிகையின் கதவு திறந்தது ,அங்கு கருணையோடு தெய்வம் ஒன்று காத்திருந்தது ,.." 

                                                 என்ற வரிகள் அவா படிக்கும் போது விக்கி விக்கி அழுவா ,,அந்த பாடலின் கடைசி வரிகளான 

                                        " வாழ எண்டு நீங்கள்சொன்னால் , வாழ சம்மதம் ,இல்லை மறைய எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                                என்ற வரிகளை திருப்பி திருப்பி வேப்ப மரத்தைப் பார்த்துப் பாடிப்போட்டு ,கொஞ்சம் அமைதியாகி ,அந்த கடைசி வரியை கொஞ்சம் மாற்றி "

                      " வாழ எண்டு நீங்கள் சொன்னால் , வாழ சம்மதம் ,இல்லை சாக எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                எண்டு பாட்டிப்போட்டு, வேப்ப மரத்துக்கு கீழ குறட்டை விடும் ஆனந்தன் அண்ணையை , ஒரு " பெட் சீட் " எடுத்துக்கொண்டு வந்து , காலையில குளிரும் எண்டு நினைச்சோ என்னவோ ,இழுத்து மூடிப் போட்டு , வீட்டுக்குள் போய்ப் படுத்துருவா!

                                          காலையில ஆனந்தன் அண்ணை ,வேற மாதிரி இருப்பார் சாந்தி அக்கா அதேபோல இருப்பா .பொதுவா இப்படி சம்பவங்கள் இரவில நடக்கும் வீடுகளில் அடுத்தநாள் காலை "தாய்குலம் களின் " சூரன் போர் நடக்கும் ! ஆனால் சாந்தி அக்க ஒண்டுமே சொல்லமாட்டா , ஒண்டுமே நடக்காத மாதிரி

                                   " இண்டைக்கு கூனி இறால் வேண்டியந்து ,முருங்கை இலை போட்டு சுண்டுவமா அப்பா ? "

                                எண்டு கேட்க ஆனந்தன் அண்ணை ,மூலயில் ஒரு பூனைக் குட்டி போல பதுங்கிக்கொண்டு இருந்து ,அந்த கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லவே சக்தி இல்லாத மாதிரி தலையை மட்டும் ஆட்டுவார் , சாந்தி அக்கா

                                    " மட்டுவில் கத்தரிகாயும் வேண்டிக்கொண்டு வாறன் , உங்களுக்கு விரும்பின வெள்ளக் கறி வைப்பம் ,என்னப்பா !" எண்டு போட்டு ஒரு பிளாஸ்டிக் கூடை யை எடுத்துக்கொண்டு " தலை இடிகுதென்டா, நேற்றையான் மிச்சம் கொஞ்சம் கிடக்குதெல்லோ , அதை மட்டும் சாப்பிட முதல் குடியுங்கோ ,என்னப்பா "

                                  எண்டு சொல்லி போட்டு சந்தைக்குப் போவா ! ஆனந்தன் அண்ணை தலையைக் குனிஞ்சுகொண்டு இருப்பார்.

                             ஆனந்தன் அண்ணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி ,20 வருடங்களின் பின் ,யாழ்ப்பாணத்தில. சின்ன வயசில்......" நடந்த சம்பவத்தை நினைவில்த் தொடக்கி எழுவதில் ஒருவித அலாதியான இன்பம் கிடைகிறது , தொலைந்து போன ஒரு தொடர்கதையை தொடர்வது போல இருக்கு அதுதரும் நினைவுகளின் இரைமீட்டல்....

                                   ஆனந்தன் அணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி நினைவு வந்ததே ...ஒரு முறை பிரான்ஸ் பாரிஸில் இருந்து வைனைக் குடிச்சுப்போட்டு ,

                               " வைன் குடிச்சா காத்துப் படத்தான் வெறி ஏறும் " 

                                           எண்டு ஒரு வெறிக் குட்டி சொன்ன அட்வைசை நம்பி , காத்துப்  படாமல் இருக்க  காரின் ஜன்னல்களை இறுக்கி மூடிப் போட்டு , கார் ஓடிக்கொண்டு பல மணித்தியாலம் பிரான்சில் இருந்து சுவீடன்க்கு  ,ஜெர்மன் நாட்டு அதிவேக  ஓட்டோ பான் நெடுஞ்சாலையில் அசராமா , போர்மிலா வன் டிரைவர் ,மைகள் சூமெகர் போல ஓடிக்கொண்டு வந்து ,பெல்ஜியத்தில் ஒரு சின்ன குறுக்குப் பாதையில் இறக்கி , மெதுவாக ஓடிவந்து ,  கார் பார்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருக்கு ,பின்னால அடிச்சு ,என்னோட கார் எஞ்சின் தீப்பிடிச்சு எரிய ,மயிரிழையில் உயிர் தப்பினேன் ! 

                                  20 வருடங்களின் பின், உபதேசம் உறைத்த அதுக்குப் பிறகு இன்று வரை கார் ஓடுவதில்லை ! சின்ன வயசில் அம்மா சொன்ன அட்வைசிலும் , ஆனந்தன் அண்ணை சொன்ன அட்வைசிலும் வாழ்க்கைப் பாடத்தை யாரும் தியரியாப் படிக்கவே முடியாத விசியம் இருக்கு எண்டு விளங்க எனக்கு 20 வருடங்கள் எடுத்து இருக்குது !.

.
நாவுக் அரசன்
ஒஸ்லோ ,நோர்வே .

Sunday, 13 September 2015

Chura Liya Hai Tumne ..Guitar Cover



ஞாயிறு விடுமுறை தினத்தில் இனிய காலை வணக்க வந்தனங்களுடன் பொழுதுபோக்கு இசைவிருந்து " சுரேளியாகே ஹம் ஹம் தும்னே சிந்து கீத்தோ... " என்ற மனத்தைக் கொள்ளை கொள்ளும்,,வார்த்தைகள் நின்று கொல்லும் ஒரு அருமையான ரொமாண்டிக் காதல் பாடல். லைட் ரிதமிக் லேட் நைட் பப் டான்ஸ் முயூசிக் என்ற வகை மெட்டு, ரிதம் , தாளம் உள்ள ஹிந்தி மொழிப் பாடல். அச்சதாலான கிட்டார் விசியங்கள் அள்ளித் தெளிக்கப்பட்ட அற்புதம் .
இந்தப் பாடலை ஹிந்தி வெள்ளித்திரையை " மில்க்கிவே கலக்ஸ்சி " அளவுக்கு பிரகாசிக்க வைத்த ஜீனத் அமனும், அழகான ஹன்ட்சம் ஹீரோவும் பாடுவது போல படமாக்கி இருந்தார்கள். முக்கியமா ஒரு பெண்ணுக்கு கிட்டார் அடித்து பாடத்தெரியாது என்று சொல்ல அதை ஒரு சவாலாக எடுத்து ஜீனத் கிட்டார் அடித்துப் பாடுவது போல வரும் காட்சியில்.
இந்தப் பாடலை இசை அமைத்தவர் பெங்காலியை தாய் மொழியாகக் கொண்டு மேற்கு வங்காளத்தில் பிறந்து,,பம்பாய்க்கு இசை வாய்ப்பு தேடிவந்து பின் பிரபலமான ராகுல் தேவ் வர்மன் என்ற ஆர் டி பர்மன். ஒரு சோடி சேர்ந்து பாடும் டுயட் பாடலான இந்தப் பாடலைப் பாடிய பெண் குரல் இந்தியாவின் நைடிங்கேல் பறவை எனப்படும் ஆஷா போஸ்லே. ஆண் குரல் முகமத் ராபி,
ஹிந்தி இசை உலகைக் கலக்கிய ஆர் டி பர்மனும் , ஆஷா போஸ்லேயும் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவில் சந்தித்துக்.காதலித்து,கலியாணம் கட்டி இசை இணைத்து வைத்த இசை போலவே வாழ்ந்தார்கள். இப்ப பர்மன் இவ்வுலகில் இல்லை, இசை உலகில் இருக்கிறார், ஆர் டி பர்மன் இல்லாத போதும் அவர் நினைவாக குங்குமப் பொட்டு வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆஷா போஸ்லே.
இந்தப் பாடல் வந்த " ஜாதோங்கி பாரத் " என்ற ஹிந்திப் படத்தை தான் தமிழில் " நாளை நமதே " என்று கதையை வேண்டி ,மக்கள் திலகம் எம் யி ராமச்சந்திரனை வைச்சு " ரீமேக் " செய்ததாக சொல்வார்கள். நாளை நமதே படத்திலயும் மெல்லிசை மன்னர் கிட்டார் சங்கதிகள் உள்ள பாடல்களை இசை அமைத்து அட்டகாசம் செய்து இருந்தார்.
.

Saturday, 12 September 2015

சங்கக்கடை

சின்னவயசில் எங்களின் ஊரில் ஒரு இது அல்லது ஒரு அது  இருந்தது என்று தொடக்கி எல்லாராலுமே எழுத முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் வாயால சொல்லும் படியாக ஒரு கதையாவது இருக்கும். அப்படி நினைவு அவதானிப்பில் தேக்கி வைத்து வயது அதிகம் போகவும் கரைந்து போகாத பல விசியங்களில்  சின்ன வயசில் இலங்கைத் தாய்த்திருநாட்டில் வாழ்ந்த எல்லாருக்குமே அடிமனதில் சந்தோஷ அலைகளைத் தாலாட்டிக்கொண்டு இருக்கும்.

                                  அப்படிப் பலதும் பத்தில் சிலதுகளை இன்றைய அவசர அலங்கார உலக வாழ்க்கை ஓட்டத்தில்  நினைத்துப் பார்க்கக்  கொஞ்சம் இயல்புக்கு ஒத்துவராமல் இருக்கும். அப்படி யுத்தத்தால் வடபகுதி தரைவழி உணவுப்பொருட்கள் விநியோகம் தனித்துப் போய் இருந்த கால அனுபவ விளிம்பில் தொங்கிக்கொண்டு நிக்கும் ஒரு மனிதர் வேட்டி மனேஜர்

                                                 மனேஜர் என்றால் பெரிய அலுவலகத்தில் அல்லது கொம்பனியில் வெள்ளைக் கொலர் வேலை செய்யும் மனேஜர் இல்லை. இந்தக் கதை நடக்கப் போகிற லொக்கேசன் பாரதிராஜா படத்தில தொடக்கதில ஒரு பச்சை வயல் வெளி, ஐயனார் கோவில் , வாய்க்கால் வரம்போடு ஓடை,  நெல்லு அறுக்கப் போகும் பெண்கள் போன்ற எடுப்போடு சொல்வதுக்கு எதுவுமே இல்லாத, வேண்டுமென்றால் மலையாளப் படங்களில் இருட்டுப்படத் தொடங்கும் நேரம் நாலுபேர் பீடி இழுத்து இழுத்துக் குடிக்கும் கள்ளுத் தவறணை போல  அதிகம் பேர் கவனம் அடிக்கடி கிடைக்காத ஒரு சின்னக் கட்டிடத்தில் இயங்கிய அந்த இடம்தான் கூப்பன் கடை என்று அழைக்கப்படும் சங்கக் கடை.

                                           வேட்டி மனேஜர் கட்டி இருந்த வேட்டி மட்டும் தான் வெள்ளை அந்த இடத்தில மற்றதெல்லாம் பல வருடமா பெயின்ட் அடிக்காத அந்தக் கடை மஞ்சள்காமாலை வந்த முகம் போல மங்கலாக இருந்தது.

யாழ்பாணத்தில் எல்லா சின்ன நகரங்களில் இருந்து போலவே எங்களின் வீராளி அம்மன் கோவிலுக்கு அருகில அந்தக் கூப்பன் கடை இருந்தது. அது பெரிய யாழ்ப்பான கூட்டுறவு சங்கத்தினால் மாநகர எல்லைக்குள் பரவலாக நடத்தப்பட்ட  பல கடைகளில் ஒன்று. அதை அம்மன் கிளை என்று சொல்லுவார்கள்.

                                                 அதில வேலை செய்த வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, பெரிய கரியலில் ஒரு யூரியா உரப்பை எப்பவும் மடிச்சு வைச்சுக் கட்டிக்கொண்டு, சைக்கிளில் முன்னுக்கு ஒரு பிளாஸ்டிக் பாக்கில் பிளாஸ்டிக் கான் மறைச்சு வைச்சுக்கொண்டு  அதில வேலை செய்ய வரும் அவரைத்தான் மனேஜர் அய்யா என்று சொல்லுவார்.

                                  மனேஜர் அய்யா ஏன் பெரிய கரியல் வைச்ச சைக்கிளில் யூரியா உரப்பை, பிளாஸ்டிக் பாக்கில் பிளாஸ்டிக் கான் சகிதம் அதில " செய்யும் தொழிலே தெய்வம் ,பல நோக்குச் சங்கமே சீவியம்  " என்று வேலை செய்ய வருவார் எண்டு இப்பவே குறுக்க மறுக்க கேள்வி கேட்டு எனக்குக்  கொதி வரப்பண்ணக்கூடாது.

                                            பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், ஒரு ஊரில ஒரு சின்னக் கடையை வாடைக்கு எடுத்து அதில பலசரக்கு பொருட்களைப் போட்டு ஒரு மனேஜர் என்ற ஒரு நிர்வாகியை மேசையில் இருத்தி வைச்சு, சேல்ஸ்மேன் என்ற விற்பனையாளரை நிறுக்கும் தாரசுக்கு முன்னால நிறுத்தி வைப்பார்கள், இந்த இருவருமே சம்பளத்துக்கு வேலை செய்வதால் அந்தக் கடையில் தனியார் நடத்துவது போல விற்பனை அதிகரிக்க எதுவுமே செய்ய வேண்டியதில்லை. 

                                               அதைவிட அவர்களுக்கு சம்பளமும் குறைவு. ஆனால் அவர்கள் தண்ணிக்கால நெருப்புக் கொள்ளியை அணையாமல் கொண்டு போய் சுழியோடிப் பிழைக்கத் தெரிந்தவர்கள். அதை நீங்களே இதை வாசிச்சு முடிக்கும்போது ஏகமனதாக ஒத்துக்கொள்வீர்கள்.

                                            சிலந்தி வலை கட்டிய எல்லாக்  கூப்பன் கடை போலவும் அது சின்னதாக, மறைவாக, அதிகம் விளம்பரம் இல்லாமல் இருந்து, அதுக்கு அருகில் இருந்த மொடேர்ன் பலசரக்கு சில்லறைக் கடைகளோடு ஒப்பிடும்போது போது அது கொஞ்சம்  கிராமத்துப் பெண்கள் போல எடுப்புச் செடுப்பு இல்லாமல் கேவலாமாதான் இருந்தது.  

                                                           அதுக்கு காரணம் கூப்பன் கடைகள் தனியார் நடத்துவதில்லை. முழுவதும் அரசாங்கம் நடத்துவதும் இல்லை. கூட்டுறவுத் திணைக்களத்துக்கு கீழே பொதுமக்களின் பங்குகளில்,பொதுமக்களுக்கு சேவை செய்வது போல  உருவாக்கப்படுவது இந்தப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்.

                                    அந்த தாய்ச் சங்கம் பல கிளைகளை ஒவ்வொரு இடத்திலும் அமைத்து அந்தக் கிளைக்கு அருகில் ஒரு குழு அமைத்து அந்தக் குழு உறுப்பினர் அந்தக் கிளை எப்படி மக்களுக்கு சேவை செய்கிறது என்பதைக் கண்காணிப்பார்கள். 

                                                   அந்தக் கிளைக் குழுத்தலைவருக்கு சில அதிகாரமும் இருக்கு, அதிகமாக  கிளை மனேஜருக்கும், கிளைக் குழுத்தலைவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கும், அதுதானே சொனேனே பெயரே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம். அதனால் இருவர்க்கும் இடையில் பல நோக்கங்கள் எப்பவுமே ஒத்துப்போகும்

                       
அம்மன் கிளை கூப்பன் கடை அதிகம் அறியப்படாமல், சுண்ணாம்புச் சுவரில அந்தக் கிளையின் இலக்கம் மஞ்சள் பெயின்டில் எழுதி ஒரு வட்டம் போட்டு ,தாழ்வாக இறக்கிய தகரப் பத்திக்கு மேலே நெல்லு அறுக்கும் அரிவாளை பலர் கையில தூக்கி வைச்சுக்கொண்டு ஒருசக்கரத்துக்கு பின்னால நிக்கிற சின்னத்தோடு ஒரு தகர போட் பலகையோடு, சோக் கட்டியால எழுதின விலைப்பட்டியல் பலகையில் விலைகளின் விபரம் தெளிவில்லாமல் ,விருப்பம் இல்லாதவனின்  பெண்டாட்டி அலங்கோலமா உடுத்திக்கொண்டு கலியாணத்துக்கு வெளிக்கிட்ட மாதிரி ஏனோ தானோ என்று இருந்தது. ஆனால் வேட்டி மனேஜர் அய்யா பேமஸ் ஆகத்தான் இருந்தார்.

                                               அதுக்கு காரணம் மண்ணெண்ணெய் வெளியால இல்லாதா நேரம் கூப்பன்கடையிலதான் அது எல்லாருக்கும் பங்கிட்டு விநியோகிக்கப்பட்டது. சில நேரம் கோதுமை மா தட்டுப்பாடு வரும்போது பாண் பேக்கரிக்காரர் மனேஜர் ஐயாவிட்டத்தான் வருவார்கள்,அவரும் அஞ்சு அஞ்சு கிலோவுக்கு சில்லறையா ஓவ்வொரு பில் போட்டு அருவத்தேழு கிலோ மாமூட்டையை முழுசாகவே வெளிய தள்ளுவார். பின்னேரம் வீட்டுக்குப் போற நேரம் வேட்டி மனேயர் பாண் பேக்கரிகுப் போய் கொம்பு பணிஸ். வறுத்த ரக்ஸ் , கல் பணிஸ் எல்லாம் ஒரு பெரிய பையில வேண்டிக் கொண்டு போவார்.

                                      மாதத்தில் சில நாட்களைத் தவிர வீராளி அம்மன் கிளை, எப்பவுமே கோவிலுக்கு அருகில் குளத்துக்கு முன்னால குளத்து கரையில் சரிஞ்சு விழுகிற மாதிரி நின்ற கிளிசீரியா  மரங்கள் போலதான் அந்தக் கூப்பன் கடை, அதில இருந்த மனேஜர்,அதில வேலை செய்த சேல்ஸ்மேன் எப்பவும் இருப்பார்கள்.

                                        காரணம்  மாதத்தில் சில நாட்களில் தான்  கூப்பன் வெட்டி வறுமைக் கோட்டில் இந்தா அந்தா என்று தொங்கிக் கொண்டு நிற்கும் மனிதர்களுக்கு அரசாங்க உதவிப் பொருட்கள் கொடுப்பார்கள்,அல்லது உள்நாட்டு யுத்தத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு அரசாங்க நிவாரணம் கொடுப்பார்கள், இந்த நாட்களில் தான், பரபரப்பாகி  நானும் இவடதில தான் இருக்கிறன் என்று சொல்வதுபோல்  கூப்பன் கடை பலரை திரும்பிப் பார்க்கவைக்கும்.

                                                அந்தக் கூப்பன் கடையில் ஓர் சேல்ஸ்மன் என்ற பொருட்கள் நிறுக்கும் மனிதர், நிறுக்கும்  மேசையில நாடிக்கு ரெண்டு கையையும் முண்டு கொடுத்துக்கொண்டு தலையைப் பணிய  வைச்சுக்கொண்டு வேலை செய்ய விருப்பம் இல்லாதவர் போல இருந்தார். கழுத்தில குருசு போட்டு இருப்பார். சில நேரம் மித்திரன் பேபரில் வார ஜில் ஜில் கதைகள் தவற விடாமல் வாசிப்பவர் போல வேட்டி மனேயருக்கு அவர் படித்த கதைகளில் வாற ஜில் ஜில் சம்பவங்கள் சொல்லிக்கொண்டு இருப்பார்.

                                     வேட்டி மனேஜர்  குடும்பப் பொறுப்புள்ள குடும்பஸ்தன் போல,கொஞ்சம் வாட்டசட்டமா, எம் ஆர் ராதா போல காதுக்கும் கன்னத்துக்கும் நடுவில பண்ணைப் பாலம் போல பெரிய கிருதா விட்டு, அவர் கதைக்குறதும் வாயுக்குள்ள துப்பாக்கி சன்னம் பாஞ்ச எம் ஆர் ராதா மாதிரிதான் வாக்கியங்களின் முடிவில்  க்வா க்குவா  என்று இழுத்துக்  கொன்னை போலக் கதைப்பார் . பில் போடக்  கணக்குப் பார்க்க கல்குலேடர் பாவிக்க மாட்டார் ,பேனையை மேசையில தட்டி தட்டிக் கூட்டுவார். பில் மொத்தமா போட்டு அந்த தொகையை பில் நடுவில போட்டு ஒரு பெரிய நீள் வட்டம் சுளிசுப் போடுவார் .

                                    ஆனால் கண்ணுக்குள்ள எண்ணைவிட்டுக்கொண்டு, நினைவு முழுவதும் வெட்டாத , இன்னும் வெட்ட வராத கூப்பன் காட்டுகளின் கணக்கு வழக்கில் வேட்டி  மனேஜர் அய்யா காலை ஆட்டிக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்த்துக்கொண்டு இருப்பார்.  எப்பவாவது அந்தரிச்ச சனம், கூப்பன் சாமான் எடுக்க வந்தால் ,மனேஜர் அய்யா

                                       " இவளவு நாளும் எங்க போனனி , இப்ப ஏ யி ஏ கூப்பன் நிற்பாட்டப்போற  நேரம் தானோ உங்களுக்கு விடியுது, என்ன சனம்களோ இதுகள், இனிக் கடைசி நாள் வரைக்கும் இழுத்தா கூப்பன் வெட்ட மாட்டன் ,இனிக் கடைசி நாள் வரைக்கும் இளுத்தடிச்சா சாமான் இல்லை , எனக்கு இருக்கிற அக்கறை உங்களுக்கு இல்லையே "

                                                  என்று உண்மையாகவே அக்கறையா சொல்லுவார் பிறகு, கூப்பன் முத்திரையை வெட்டி பில் போட்டுக்கொடுக்க , அதை வேண்டி மேசையில் குத்திப்போட்டு சேல்ஸ்மேன் சோம்போறித்தனமா எழும்பி, கை காலை உதறிப்போட்டு

                               " இவளவு நாளும் எங்க படுத்துக் கிடந்தனி, சாமானில அக்கறை இல்லை போல,  இருந்த மாதிரி தெரியேல்லையே ,கச்சேரி கணக்கு எடுக்கிற அரும்பட்டு நேரம் வந்துதான் எங்கட உயிரை எடுப்பிங்க போல, சாமான் இல அக்கறை இல்லாத சனங்களை இந்தக் கிளையில்தான் பாக்கிறேன்     " என்று நிறுப்பார்,

                                 ஏ யி ஏ கூப்பன் நிற்பாட்டப்போற  நேரம் என்று வேட்டி மனேயர் அய்யா வெருட்டினாலும்,ஒரு நாளும் கூப்பன் நிற்பாட்டி அதை எடுக்கத் தவறிய மனிதர்களின் பங்கீடுப் பொருட்கள் திருப்பி ஏ யி ஏ இக்கோ அல்லது கச்சேரிக்கோ திரும்பிப் போனதாக வரலாறே இல்லை. அது சங்கக் கடைக்குள்  அதன் பின் இருந்ததாகவோ வரலாறு இல்லை.

                                   அடுத்த கூப்பன் விநியோகம் வாறத்துக்கு இடையில். வேட்டி மனேஜர் அய்யா அதுக்கு எப்படியும் ஒரு வழி பண்ணிப்போடுவார் . அவளவு வலு விண்ணன் வேட்டி மனேஜர், அவர் செய்யிறதும் சரிதானே அடுத்த முறை புதிய விநியோகப் பொருட்கள் வரும்போது இறக்கி வைக்கவும் இடமும் வேணும் தானே .

                                           அந்த சேல்ஸ்மேன் பெரிய மண்ணெண்ணெய் பரலில் இருந்து  வேகமா திறந்து ஒரு லிட்டர் கானில நுரைசுக்கொண்டு வரும்போதே சடார் என்று கொண்டு போற பிளாஸ்டிக் கானில ஊதுவார். அதை வீட்டை கொண்டு வந்து அளந்தா முக்கால் லிட்டருக்கு கொஞ்சம் குறைவா இருக்கும்,

                                               அவர் சாமான் நிறுக்கிறதும் வலு வேகம், ஒரு கிலோ படிக்கல்லை நிறுவைத் தராசின் ஒருப்பக்கம் போட்டுடுடு சடார் என்று மாட்டுத்தாள் பையில் குத்து மதிப்பா ஒருகிலோ சீனியை சடார் என்று மற்றப்பக்க நிறுவைத் தராசில் குத்திப் போடுவார் ,தராசு கீழ போகவே சடார் என்று எடுத்திடுவார்,அவளவு வேகமா நிறுத்தல் அளத்தல் வேலை செய்வார், வீட்டை கொண்டு வந்து நிறுத்துப் பார்த்தல் சீனி ஒரு கிலோவுக்கு இருநுறு  கிராம் குறைவாதான் இருக்கும்.

                                         சங்கக் கடை வாசல்படியை அடிக்கடி மிதிப்பவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள். அவர்களுக்கு தான் சமூக சேவைத் திணைக்களம் கொடுக்கும் கூ ப்பன் விநியோக உதவிக்கு விதானை சிபார்சு செய்வார். அந்த மக்கள் அந்தக் கோட்டுக்கு கீழே இருப்பதாலோ என்னவோ எழுந்து நின்று சட்டம் கதைக்கும் உரிமைகள் அவர்களிடம் அதிகம் இல்லை. அதைவிட மனேச்சரை கோவித்தால் இன்னும் பிரச்சினை வரும் என்பதால் அவர்கள் எதையும் வாய் திறந்து சொல்வதில்லை.

                                             வேட்டி மனேயருக்கு சிம்ம சொப்பனமா இருந்த ஒரே ஒரு மனிதர் பெட்டிசம் பாலசிங்கம் ,கண்ணுக்குள்ள எண்ணையை விட்டுக்கொண்டு பெட்டிசம் அந்த சங்கக் கடையில் நடக்கிற எல்லாத்தையும் கவனித்துகொண்டு இருந்தார் .முக்கியமா இரவில கனவிலையும் திரத்துவதாலோ  என்னவோ தெரியவில்லை பெட்டிசதைக் கண்டவுடன எழுந்து நிற்பார் வேட்டி மனேச்சர்.

                                ஆனால் பெட்டிசம் மனேச்சருக்கு எதுவுமே நேரடியாக சொல்வதில்லை. ஆனால் விபரமா என்ன தில்லுமுல்லு நடக்குது என்று கூடுறவு  திணைக்களத்துக்கு  மாதம் மாதம் பெயர் இல்லாத கடிதம் போகும். அதுவும் தலைகரனமான இங்கிலீசில் பறக்கும். பெட்டிசம் பாலசிங்கம் கச்சேரியில் ஹெட் கிளார்க்காக இலங்கை கிளரிகள் செர்விஸ் இல் வேலை செய்து ஓய்வூதியம் எடுத்தவர் .

                          இடம்பெயர் நிவாரணம், கூப்பன் விநியோகம் எல்லாம் அமளிதுமளியாக்  கொடுத்து முடிந்த   ஒருநாள் பின்னேரம் சங்கக்கடை பூ ட்டுற  நேரம் பெட்டிசம் அந்தப் பக்கம் போய் இருக்கிறார் , வேட்டி மனேஜர் சைக்கிள் முன் ஹன்டில்ல ஒரு மண்எண்ணைக் கலனைக் கொழுவிப்போட்டு , உரைப்பை நிறைய சாமான் கட்டி அதைப் பின் கரியலில் வைத்துக் கட்டிக்கொண்டு நிண்ட நேரம் கறுப்புப் பூ னை குறுக்க வந்த மாதிரிப்  பெட்டிசம் வர கஷ்டப்பட்டு சிரிச்சுப்போட்டு

                  " கிளாக்கர் அய்யா, எங்க இந்தப் பக்கம் இந்த இருட்டுப்படுற  நேரம் வந்தனியால்,  " என்று கேட்டார்

                          "    ஏன் ,வரக்கூடாது எண்டு என்னவும் சட்டதிட்டம் இருக்கோ ,இல்லைத் தெரியாமதான் கேட்கிறேன் , "

                      "  இல்லை கிளாக்கர் அய்யா,, பெடி பெட்டையள் கண்மண் தெரியாமல் சைக்கில் ஓட்டுதுகள்,இடிச்சுப் போட்டு அதுபாட்டில போகுதுகள், வெளிக்கிட்டா  பகல் வெய்யிலோட இங்கால வந்திட்டுப் போகலாமே "

                         "  இல்லைத் தெரியாமதான் கேட்கிறேன்,,என்னை இடிச்சுப் போட்டு போறது என்ன லேசுப்பட வேலையே ,நைன்டீன் செவிண்டி  செவினில  இன்ஸ்பெக்டர்  அத்தநாயக்க எனக்கு முன்னால பொலிஸ் ஜீப்பை ரேஸ் பண்ணி புகை கிளப்பினதுக்கே கோன்ஸ்சூமார்  கோட்டில் வழக்குப் போட்டு அவனைக் கோடு கச்சேரி எண்டு இழுத்து எடுத்தனான் கண்டியே ,அதுவும் பண்டாரநாயக்க காலத்தில "

                         "  அடி சக்கை எண்டானாம் , நல்ல காலம் சிறிமா பண்டாரநாயக்ககாவை விட்டு வைச்சிங்க கிளாக்கர் அய்யா " என்று சிரிச்சார்

               அதுக்குப்  பெட்டிசம் , " ஒருத்தன்  விடிய விடிய  மேடைபோட்ட கோவிலில சின்ன மேளம் ஆட பெண்டுகள் வந்த நேரம்,மேடைக்கு முன்னால போய் இருந்தானாம் ,அந்த நேரம் பார்த்து அவன்  பொஞ்சாதிக்கு பிள்ளைப்பெறுவுக்கு அடிவயித்தில  வயித்துக் குத்து வந்த கதை தெரியுமே உனக்கு "

                           "  அதென்ன கதை கிளாக்கர் அய்யா ,,உண்ணான எனக்கு அந்தக் கதை தெரியாது, "

                         " சரி ,கதையைக்  காத்தோட விட்டுப் போட்டு , உதென்ன தனிச் சீவியதுக்கு வெளிக்கிட்ட மாதிரி   பெரிய பொட்டலங்கள் மூட்டை  முடிச்சுக்களோட இன்றைக்கு ரெண்டு ராமேஸ்வரம்  போறதுக்கு  தலைமன்னாரில கப்பல் ஏறப்போற மாதிரி ரெண்டு  பேரும் கட்டிக்கொண்டு நிக்கிறியள் "


                               "     சரஸ்வதிப் பூ சைக்கு கொஞ்சம் படையல் சாமான் வீடுக்கு எடுத்துக்கொண்டு போறன்,,அதுவும் எல்லாத்துக்கும் பில் போட்டுடுதான் கொண்டு போறேன், " என்று கஷ்டப்பட்டு சிரிசுக் கொண்டு சொல்ல ,பெட்டிசம்

                     " உதென்ன சரஸ்வதிப் பூசைக்கோ இவளவு சாமான் போகுது,,உது போறதைப்  பார்தா நூற்றிஎட்டு சங்கு வைச்சு செய்யிற சங்காபிசேகத்துக்கு ஏத்திப் பறிக்கிற மாதிரியெல்லோ கிடக்கு ,அதென்ன முன்னுக்கு பிளாஸ்டிக் கானுக்க "

                          " அது கிளாக்கர் , பிள்ளையள்  படிக்க அரிக்கன் லாம்புக்கு கொஞ்சம் மண்எண்ணை  எல்லிப்போல  மனுஷி கொண்டுவரச் சொன்னது அதுதான் கானில அதிலயும் கொஞ்சம் பிடிச்சுக் கொண்டு போறேன் ,அதுக்கும் பில் எல்லாம் போட்டுதான் கொண்டுபோறேன் " என்றார்

                 "   உவன் சேல்ஸ்மேனும் என்னத்தைக் சைக்கிள் கரியரில் கட்டி வைச்சுக்கொண்டு நிக்குறான் ,அவனுக்கும் என்ன சரஸ்வதிப் பூசையோ..கழுத்தில ஜேசுநாதர் குருசு போட்டுக்கொண்டு நிக்கிற அவனுக்கு என்ன சரஸ்வதிப் பூசை "

                           "  இல்லை,கிளாக்கர் அய்யா,,அவன்  வேதக்காரப் பொடியன் "

                      "  பிறகென்ன உன்னைப்போல அவனும் பெருமாள் கோவில் ஆண்டி தெண்டளுக்கு வெளிக்கிட்ட  மாதிரி என்னவோ மூட்டை முடிச்சுக்கள் கட்டிக்கொண்டு நிக்குறான் "

                       " இல்லை கிளாக்கர் அய்யா,,நிவராண அரிசி கொஞ்சம் புழுத்துப் போய்க் கிடந்தது அதை அவன் கொண்டுபோய்க் கழுவிக் காச்சிக் குடிக்கிறன் எண்டு கேட்டான்,,நான் தான் கொண்டுபோகச் சொன்னண்ணன்,,அதுக்கும் பில் போட்டுக்கொண்டுதான் போறான்,," என்று கஷ்டப்பட்டு சிரிச்சு சொன்னார்.

                             " அப்ப அலுவல் நடக்குது  போல, உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது கண்டியளோ , நல்லதுக்குத்தான் சொல்லுறேன்."

                              " என்ன கிளாக்கர் அய்யா , நான் இருவது வருசத்துக்கு மேலே  சங்கத்தில வேலை செய்த செர்விஸ் ,சிறிமாவோட சீத்தைத் துணி கிழிச்சுக் கொடுத்த காலத்தில வேலைக்கு சேர்ந்தனான்,  கணக்கு வழக்கு எல்லாம் சட்டப்படி இருக்கும் கிளாக்கர் அதில ஒரு சந்தேகமும்  வரத்தேவையில்லை "


                         " இருவது வருசத்துக்கு மேலே செர்விஸ்,,,,அதுதான்  சொல்லுறது .. மூளை செய்யாததை முழங்கால் செய்யும்......எண்டு சொல்லுறது ,,,"


                       "   இல்லைக் கிளாக்கர்,,நீங்களே திறந்து  பாருங்கோ திறப்பைத்  தாறன்."


                           "   என்னமோ பில் போட்டேன் போட்டேன் என்று சொல்லுறீர் காணும் ,எனக்கு உந்த ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை, வாற சனத்துக்கு ஒழுங்கா மனசாட்சிப்படி அளந்து நிறுத்துக் கொடுத்தா போதும். "

                             " அதுக்கு ஒண்டும் நீங்கள் ஜோசிக்கத் தேவை இல்லை கிளாக்கர் அய்யா " என்று மிகவும் கஷ்டப்பட்டு சிரிசுக் கொண்டு சொல்ல

                              "  பிறகு என்னவும் பிசகின பிறகு குத்துது குடையுது எண்டு வரபட்டாது கண்டியலே.முதுகைத் தடவி பப்பாவில ஏத்தாமல் சொல்லுறதை முகத்துக்கு முன்னால சொல்லிப்போட்டேன் கண்டியலே  " 
                               
                                      " சங்கீதக் கச்சேரியில்  மிருதங்கமும் ,சங்கக் கடை மனேஜரும் ஒன்றுதான் ,,கிளாக்கர் அய்யா "

                            "  இதென்ன புலுடா விட்டு  புது விண்ணாணம் எல்லாம் எனக்கே சொல்லுறாய் அதுவும் மட்டு மரியாதை கொஞ்சமும்  இல்லாமல்   எனக்கே  சொல்லுறாய் "

                            " ரெண்டுமே..... ரெண்டு........ பக்கமும் எப்பவுமே அடி வேண்ட  வேண்டும், .......கிளாக்கர் அய்யா , ஒரு  சங்கக்கடை மானேஜரா வேலை செய்து பார்த்தா தான் தெரியும் எலிக்கு விளையாட்டு,,சுண்டெலிக்கு  சீவன் போற கேவலம்,சீ எண்டு  போகுது ,,"

                                என்று மனேஜர் இனி வந்தா வா போனாப் போ என்றது மாதிரி சொன்னார்.  அதுக்கு பெட்டிசம் பாலசிங்கம் ஒன்றும் சொல்லவில்லை. அல்லது இன்னும் கதை வளர்த்துக்கொண்டு நிக்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை ,

                                         " எண்ணமோ.... பார்த்து நடவுங்கோடா.... " என்று போட்டுப் போட்டார்.

                             
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் , தாய்ச் சங்கத்தில் இருந்து அதிகாரிகள் வந்து இருப்பு எடுத்து ஒரே நாளில் வேட்டி மனேஜரும் ,அந்த குருசு போட்ட சேல்ஸ்மேனும் அந்த கிளையில் இருந்து தூக்கப்பட்டு ,அடுத்த நாள் இளமையான,லோங்க்ஸ்  போட்ட  ஒரு மனேச்சரும்,வேட்டி கட்டின மெலிஞ்ச ஒரு வயதான சேல்ஸ்மேனும் அதில வேலைக்கு வந்தார்கள்.

                          இளமையான,சரத்பாபு போல அழகா,வெள்ளையா இருந்த  அந்த லோங்க்ஸ் போட்ட மனேஜர் அதிகம் மேசையில் இருக்க மாட்டார். அங்கேயும் இங்கேயும் அன்ன நடை நடந்து திரிவார். அவரைப் பார்த்தா படிச்சுப்போட்டு நல்ல வேலைக்கு ட்ரை பண்ணிக்கொண்டு இடையில் இந்த வேலைக்கு வந்தவர் போலதான் இருந்தார்,மரியாதையா எல்லாரோடும் கதைப்பார்.

                                             முக்கியமா சொண்டைக் கொஞ்சம் சரிச்சு கன்னத்தில் பலுன் ஊதிச் சிரிப்பார்.  வெக்கை  வியர்வை அதிகமான  நாட்களில் சேட்டுக் கொலருக்க ஒரு லேஞ்சி மடிச்சு வைச்சு இருப்பார். ஜப்பான் இலற்றோனிக் காசியோ வாச் கட்டி இருந்தார். கோதம்பமா நிறுக்கிற மாத்  தூசு அதில படாமல் அதுக்கும் ஒரு லேஞ்சி சுற்றிக் கட்டிக்கொண்டு இருப்பார். 

                      அந்த வயதான சேல்ஸ்மேன் அய்யா பற்றி சொல்ல ஒண்டுமே இல்லை,அவளவு சிம்பிளா இருப்பார்.கண்ணில களவு பொய் தேடினாலும் கிடைக்காத மாதிரி நெற்றியில் திருநீறு சந்தனப்பொட்டு,காதில அருச்சனைப் பூ  என்று அந்தாளைப் பற்றி வாயைத்திறந்து புறணி சொல்ல எதுவுமேயில்லை. 

                                 தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்...எண்டுமாப் போல  எப்பவுமே  குளறுபடியாப் போய்க்கொண்டு இருக்கிற எங்களின் ஊரில   இனிக் கொஞ்சம் இந்த சங்கக்கடை  தர்மத்தின் பலனையும் அனுபவிக்கும் என்று நினைச்சுக்கொண்டு இருக்க....

                                                   சங்கக் கடைப் பின் சுவரோட ஒரு கம்பிக் கிறாதி வைச்ச ஜன்னல் இருந்தது , அந்த ஜன்னல் மரக் கதவைத் திறந்தால் பின் வெளியால வெறுங்காணி தெரியும், முடக்கொத்தான் பத்தைக்கள் தாறு மாறா வளர்ந்து கிடந்த  அதன் முடிவில் வேலி ஒழுங்கா அடைக்காத பவளமக்கா வீடு இருந்தது. 

                                          பவளமக்கா வீட்டில அவாவின் மகள் அரியமலர்  ஒ எல் பெயில் பண்ணியதால் வீட்டோடோ இருந்தாள். இனி அவளுக்கு ஆனி,ஆவணி,புரட்டாசி மங்குசனி  தோஷம்  கழியிற  கையோடு கலியாணம் போல பவளமக்கா புரோக்கர் தட்சனாமூர்தியிட்ட குறிப்புக் குடுத்து சொல்லி வைச்சா 

                                       அரியமலர் காதவராஜன் கூத்தில வாற ஆரியமால போல அழகுக்கு கொஞ்சி  அரிதாரம் பூசுற  அந்த குமரி வயசில தையல் படிக்கிறேன் என்று ரோட்டால தையத் தக்க தையத் தக்க என்று வாத்து நடை  போட்டுக்கொண்டு போவாள், 

                                            நல்லா இருட்டுற நேரம் ஏதாவது ஒரு இளையராஜா பாட்டு வேப்பமரத்தில குயில் பாடுறது போல  மெல்லப் பாடிக்கொண்டு வருவாள் ஆனாலும் அதிகம் உயரம் இல்லாத ,கொஞ்சம் குண்டான உடல்வாகில் இருந்தாலும்   ஊமத்தம்பூபோல அரியமலர் வாளிப்பா இருந்தாள்.கொஞ்சம் சோசியல் டைப்,  எல்லாரோடும் வஞ்சகம் இல்லாமல்  வள வள எண்டு கதைச்சுக்கொண்டு திரிவாள்  அந்த நாட்களில்.  

                                           அந்த மேனேஜர் அவளை ஜன்னலுக்கால முதல் பார்த்தாரா அல்லது  அரியமலர் அவரை  வேலிக்கால முதல் பார்த்தாளா என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அரியமலர் வேலிப் பொட்டுக்கால அடிக்கடி  சங்கக் கடை ஜன்னலுக்கு வந்து சிரிச்சு சிரிச்சு பேசுறதை பவளமக்காவும் அடிக்கடி பார்த்தா. 


ஒருநாள் லோங்க்ஸ் மனேஜர் அரியமலருக்கு கடிதம் எழுதி அதில ஒரு கவிதையும் எழுதிக்  கொடுக்க அது பவளமக்காவுக்கு தெரியவர , ஒரு நாள் பவளமக்கா ஜன்னலுக்கால கிழி கிழி எண்டு மனேயரைக் கிழிச்சும் ,,அந்த ஜன்னல் ஒவ்வொரு நாளும் திறந்தது,,,சிக்னல் போய்க் கொண்டும் வந்துகொண்டும் தான் இருந்தது.

                                           வீராளி அம்மன் கோவில் துர்க்கையம்மன் திருவிழாவுக்கு காலையில , அம்மன் மணி அடிச்சு,வைரவர் மணி அடிச்சு   சிங்கக்கொடி கொடிக்கம்பத்தில் கொடியேறின நேரம், " ஏலேலங் குயிலே என்னைத் தாலாட்டும் இசையே,,உன்னைப் பாடாத நாள் இல்லையே ,ஏலேலங் குயிலே என்னைத் தாலாட்டும்  .........., உன்னைச் சேராத நாளும்  இல்லையோ, " என்று கட்டுக் கிணற்றடியில் நிண்டு முகத்துக்கு கஸ்தூரி  மஞ்சள் அரைச்சுப் பூசிக்கொண்டு ,கப்பியில் இழுத்து இழுத்து தலைக்குத்  தண்ணி அள்ளி வார்த்துக்கொண்டு  அரியமலர்  சந்தோசமா பாடிக்கொண்டு இருந்ததை பவளமக்காவும் சந்தோசமாத்தான் பார்த்துக்கொண்டு இருந்தா.

                                       ஆனால்  அன்று பின்னேரம் அரியமலர் " பொலிடோல் குடிப்பேன்,,,அல்லது  அரளிக்கொட்டை அரைப்பேன்   ,,," என்று  கடிதம் எழுதி அரிக்கன் லாம்புக்கு கீழே வைச்சுப்போட்டு இருட்டு மம்மல்ப்பட்ட நேரம்  காணாமல் போக, பவளமக்கா சிம்மிணியைக் கழட்டி துடைச்ச நேரம் பார்க்கவில்லை, நெருப்புக்குச்சி தட்டி திரிக்கு வைச்ச நேரம் தான் அதைப் பார்த்தா ,பார்த்திட்டு வேலிப் பொட்டுக்கால விழுந்து எழும்பி ஓடிவந்து சங்கக்கடை ஜன்னலைப் பார்த்தா.

                                       அதுவும் பூட்டி இருந்தது. முன்னால ரோட்டுக்கு ஓடிவந்து பார்க்க ,முன் கதவும் பூட்டிக் கிடந்தது,சரத்பாபு மனேஜர் இல்லை , அந்த காதில பூ  வைச்ச வயதான சேல்ஸ்மேன் அய்யாதான் போக வெளிகிட்டுக் கொண்டு நிண்டார்

                           " எண்ட அம்மாளாச்சி ,நீ தானனை  என்னைக் காப்பற்ற வேண்டும், எண்ட பெட்டை மலரைக் கண்டனியலே அய்யா,, இந்த அறுதலன் மனேஜர்  அவன் என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பிலேயே இவன் ஒருநாள் இங்க பிரச்னை எடுப்பான் என்று அண்டைக்கே எனக்கு புத்தி இல்லாமல் போச்சே,,அய்யோ ,இந்தநேரம் பார்த்து எண்ட மனுசனும் வவுனியாவில போய் நிக்குதே,,அய்யா எண்ட மகள் மலர் இண்டைக்கு இங்க வந்தவளே,,அய்யா உங்களைக் கையெடுத்துக் கேட்கேறேன்,,அய்யா சொல்லுங்கோ ஐயா ,,,"  என்று ஒப்பாரி வைச்சா 


                            ஆனால் இது  வெட்டுக் குத்தில முடிஞ்சு ஒரு கதையாக  அந்த லோங்க்ஸ் போட்ட மேனேஜர் வந்த ரெண்டு கிழமையில் சங்கக் கடைக்கு பின்னால நடந்தது.  விலக்குப்  பிடிச்சு விடுறன் என்று  முன்னுக்கு நின்ற புண்ணியக்குஞ்சிதான்  அந்த சம்பவம் நடக்கவே பிண்ணணியில் நின்ற ஆள் . அதைப் பிறகு எழுதுறேன்.

    .
                                     

Sunday, 6 September 2015

Don't Cry For Me..Agerntina





அஜண்டீனவின் "ஆன்மிக பெண்மணி" Eva Perón அஜண்டீனவின் அதிபரராக இருந்த Juan Perón இன் இரண்டாவது மனைவி, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலும் ,அழகான,புகழ் பெற்ற நடன,பாடகியான எவாவை மணந்து "first lady " அந்தஸ்து கொடுத்து வைத்து இருந்தார் ,அவர் இறந்துபோக ஏவா அரசியலில் நுழைந்து, பல அதிரடியான மாற்றங்கள் பெண்கலின் சமுதாய வாழ்கை நிலைய உயர்த்தக் கொண்டுவந்தா ,அதால இன்றுவரை அஜண்டினியன் மக்களின் அபிமான தேவதை ஏவா.



                                                            அந்தப் பெண்மையின் அரசியல்,காதல், வாழ்வின் எழுச்சியயும்,வீழ்ச்சியயும் வைத்து " ஏவாவின்செல்லப் பெயரான "Evita" என்று உலககத்தை கலக்கி சக்கைபோடு போட்ட இசை நாடகத்தில இந்த " Don't Cry for Me Argentina " என்ற இந்தப்பாடல்" வந்தது,        



                                           ஸ்பானிஷ் மொழியில் ஒருவர் எழுதிய ஒரு கதையை துரும்பாகப் பிடித்துக்கொண்டு ,மிச்ச கதைய டெவெலப் பண்ணி,ஆங்கிலேயரான அன்று லோஎட்ஸ் வெப்சர் இசை அமைத்தார் .இந்த பாடல் பல அரசியல் குறியீடுகளை சொல்லாமல் சொல்வதால்,சில ஆண்டுகள் ஆயெண்டினா இராணுவ அரசாங்கம் தடை செய்தார்கள்.



                                 இன்றுவரை உலகம் முழுவது இருந்து இந்தப் பாடல் கொடுத்த உணர்வாள் ,பல்லாயிரக்கனக்கான டுரிச்டுகள் அஜென்டினா படை எடுகுரார்கள், Evita இன் கல்லறையப் பார்த்து வணக்கம் செய்ய..இந்தப் பாடல் பலர் பல தாள கதியில் பாடியிருக்க்ரர்கள் ,,நான் ஒரு" semi dance beat " ஸ்டைலில் கிடாரில் வசித்து இருக்குறேன்!



                                    பல இலங்கை தமிழர்கள் இசைஅமைகிறார்கள் , போனாப் போகுது எண்டாவது " EVITA " போல பாவப்பட்ட, 30 வருட யுத்தத்தில நொந்து, நூடில்ஸ்ஆகி நிமிரமுடியாம நிக்கும் இலங்கை தமிழரின் விடுதலையின் கண்ணீர்கதையை யாரவது ஆங்கிலத்தில் "MUSICAL இசை நாடகமாக" இசைஅமைத்தால் உலக அளவில் எங்களின் இழப்புகளின் கண்ணீர்கதைக்கு குறைந்தது ஒரு அர்த்தமாவது கிடைக்கும்! செய்வார்களா?


Ithayam Oru Kovil ...Mestro Ilayaraaja





இதுதான் இளையராஜா இசையின் தனித்தன்மை. மற்றவர்களின் பாடல்களை கேட்டால் உங்களுக்கு ட்யூன் மனதில் பதியும் அல்லது வரிகள் மனதில் பதியும், ராஜா இசையில் மட்டுமே முன்னிசை, இடையிசை, பின்னிசை, பின்னணி இசையென ஒவ்வொரு துணுக்கும் மனதில் பதிந்து விடும். அவர் பாடலை பாடத் துவங்கினால் உங்களை அறியாமல் இசை கோர்வைகளை முணுமுணுக்கத் துவங்கி விடுவீர்கள்.இது சமகாலத்தில் எந்த இசை கலைஞனும் சாதிக்காதது. அவர் பாடல்களை வெட்டி ஒட்டாமல் முழுமையாக உருவாக்குகிறார் என்பதே இதன் காரணம். 'ஓர்கானிக் மூசிக் ' என்பார்கள் இவ்வகை இயற்கையுடன் முழுமையாக இயைந்து இசைந்து இனைந்து உருவாக்கப்படும் கலைப் படைப்புகளை. சென்ற சில நூற்றாண்டுகளில் இசைக் கலைக்கென உருவான அப்படிப்பட்ட ஒரு முக்கிய ஜீனியஸ் களில் இளையராஜாவும் ஒருவர் ...

மலை தந்த கதை....

சில கதைகள் காலத்தோடு அடிப்பட்டுப்போய் அதன் காலத்துக்காய்  மறைந்த இருக்கும். மழையோடு காளான் வெளிக்கிடுவது போல  ஒரு நேரத்தில் அது தன்னை வெளிப்படுத்திவிடும்.   குமார் அண்ணை ஒரு நாள்க் கேட்ட கேள்வியால், வருடங்களாக நானே மறந்த அந்த இலங்கையில் மலை ஏறிய சம்பவத்தை நோர்வேயில் எனக்கே நினைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. 

                              சிவனொளிபாத மலை என்று தமிழிலும், " ஸ்ரீ பாத " எண்டு சிங்களத்திலும், " ஆடம்ஸ் பீக் " என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இலங்கையின் மத்திய மலை நாட்டில் இருக்கும் மலையில், கொழும்பில் வேலை செய்த போது ஒரு விடுமுறை தினத்தில் என்னோட வேலை செய்த பியசேனா என்ற  சிங்களவரின் குடும்பம் போன போது, நானும் அவர்கள் ஹையர் பண்ணிப் பிடிச்சுக் கொண்டு போன வானில தொத்தி ஏறி, அவர்களுடன் அந்த மலையில் ஏறிய அனுபவத்தைப் பல வருடம் மறந்து போய் இருந்தது உண்மை.

                                 நோர்வேயின்  ஒஸ்லோவில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீட்டை எடுத்து, பல இடைஞ்சல்களுடன் சமாளித்து இருந்த போது, ஒருநாள் எனக்கு தெரிந்த முழுமை இல்லாத சிங்களத்தில் இலங்கையில் உள்ள ஒரு சிங்கள நண்பருடன் கதைத்ததைக் கேட்ட, அந்த வீடில எங்களுக்கு  லீடர் போல இருந்த குமார் அண்ணை கேட்ட அந்தக் கேள்வி, புலம் பெயர்ந்தபின் பின், வருடங்களாக நானே மறந்த அந்த இலங்கையில் மலை ஏறிய சம்பவத்தை நோர்வேயில் எனக்கே நினைக்கும்படியான அந்த  சம்பவம் நடந்தது. 

                                           அந்த வீட்டில் என்னோடு மாச வாடகைக்கே  அழுது கொண்டு  இருத்த சக அலுப்புகளில், கொஞ்சமும்  அலுப்பு இல்லாத எப்பவும் அமைதியான குமார் அண்ணை, சின்ன வயசிலையே நோர்வேயிட்கு வந்திட்டார், வலிகாமம் வடக்கில் ஒரு விவசாயக் குடும்பத்தில்ப் பிறந்த அவர் எண்பத்து மூன்றில் பலாலி வீதியில் கண்ணிவெடி வெடித்த கையோடு, கொழும்பில்க் கலவரம் வெடிச்சு அடங்கிய சில மாதங்களில், இனி யாழ்பாணத்தில இருந்தால் பிரசினை எண்டு அவரோட அப்பா அவரைப் பிடிச்சு சங்கானை மனியத்திண்ட வெங்காய லோரியில ஏற்றி கொழும்புக்கு அனுப்பி இருக்குறார் ,

                                குமார் அண்ணையை செக்கட்டித் தெருவில ஒரு லொட்சில சில வாரம் வைச்சு, ஏஜென்ட் இந்திரலிங்கதோட " இறங்கினாப் பிறகுதான் காசு " எண்டு பேரம் பேசி, " ஹெல்மெட் பாஸ் போட்டில" தலை மாத்தி, கே எல் எம் லுப்தான்சா விமானத்தில ஏறி மலேசியாவில தரை இறங்கி, அங்கிருந்து உருளைக்கிழங்கில " போர்ட் என்றி " விசா அடிச்சு உக்கிரேன் கீவ் இல ரகசியமா இறங்கி, கிழக்கு ஐரோப்பிய  ஊசி இலைக் காடுகள் எல்லாம் நடையா நடந்து ,போலந்து போடர் தாண்டி  , கிழக்கு ஜெர்மனிக்கால மேற்கு ஜெர்மனிக்கு இழுத்து எறியப்பட்டு ,டென்மார்க்  பாதையால நோர்வேயிட்குள்ள அரசியல் அகதியா வந்த பாதையில் அவர் ஒரு நாளுமே ஒரு சிங்களவனையோ, சிங்கள மொழியையோ அறிந்ததே இல்லை. 

                                         ஒரு நாள்ப் பின்னேரம், அன்றைக்கு நான் சிங்களம் பேசுவதைக் கேட்ட அவர்

          " சிங்களம் தலைகாரணமா பேசுறீர் உமக்கு எப்படி ஐசே  சிங்களம் புளுவண்டா தெரியும் "

                               எண்டு கேட்டார்,எனக்கு அது எழுத  வாசிக்கத்  தெரியாது

                           " ஆப்பக் கடை நோனா ஆட்டுக்கறி வைச்ச மாதிரி "

                             பேச மட்டும் தெரியும் எண்டு சொன்னேன்,

                           அவர் விளங்காமல்ச்  சிரிச்சார். இவர் ஏன் இதைக் கேட்டார் ,சில நேரம்  சிங்கம் புலி  அரசியல் என்னவும் தொடக்கி தேன் கூட்டுக்கு கல் எறிஞ்சு இருக்கிற கொஞ்ச நின்மதியையும் கெடுக்கப் போறாரோ எண்டு நினைச்சு,

                       " ஏன் குமார் அண்ணே சிங்களம் பேசுறது அதென்னவோ பெரிய விசியம் போலக் கேட்குறிங்க " எண்டு கேட்டேன்,

                                அவர் அதுக்கு சடார் எண்டு

                               " இல்லை ஐசே ,நீர் சிங்களநாட்டில இருந்த மாதிரி இருக்கு "

                              "   இல்லைக்  குமார் அண்ணே,,கொழும்பில் வேலை செய்தபோது  கொஞ்சம்  சிங்களம்  பேசமட்டும் பழகினேன், அதுவும் பிழை பிழையாத்தான் கதைக்கப் பழகினேன்  "

                               "  அப்ப  புளுவண்டா  கதைக்க  மாட்டீர்  எண்டு  சொல்லுறீரோ, நல்லாக் கதைகிரீரே  "

                                   "  அப்படிதான் உங்களுக்கு  இருக்கும் , சிங்களம்  இலகுவா பிடிக்கலாம், இலக்கண சுத்தமா பேசாமலே விளங்கும்  அது "

                                   "  உம்மட்டை  ஒண்டு கேக்கவே,,கன  நாளாய்க் ஜோசிக்கிரனான், சரியான ஆட்கள் அம்பிடவில்லை கேட்க  "

                                 "   சரி,,கேளுங்கோ  குமார்  அண்ணை,, என்ன சிங்களப் பெட்டைகளை சிம்பிளா  சிங்களம் கதைச்சால் மடக்கி  விழுத்தலாம் எண்டு  கேக்கப்போரின்களோ "

                           "  இல்லை,,ஐசே,,இது  வேற  ஒரு  கேள்வி "

                             " சரி  கேளுங்கோ,,தெரிந்தால் சொல்லுறேன் அண்ணே "

                              " சிவனொளிபாத மலை ஏறி இருக்குரிரோ, அது ஏறுறதுக்கு பயங்கர மலையாம் நீர் ஏறி  அதில சிவபெருமானோட  பாதம் இருக்காம் அதைப் பாத்தநீரோ "

                          எண்டு கேட்டார்.

                      இவரோட இந்தக் கேள்வியைக் கேட்ட ஹோலில காலையில மக்டோனாலில  வேலை செய்து முறிஞ்சு வந்து சுருண்டு படுத்துக் கிடந்த  இரண்டு வன்னிப் பொடியளும், பெட் சீட்டை ஒதுக்கி விலதிப் போட்டு எழும்பி இருந்து

                              " குமார் அண்ணே, இண்டைக்கு மணிரத்தினம் படம் ஓடப்போகுது போல,நல்ல கேள்வியத்தான் கேட்டியள்,எங்களுக்கும் ஒரு மண்ணும் தெரியாது அந்த மலையைப் பற்றி ,அரசன்னே சொல்லுங்கோ கேட்பம் "

                          எண்டு என்னைப் பார்த்தாங்கள். 

                                     குமார் அண்ணைக்கு அந்த மலை பற்றி என்னவோ " குருடன் யானையைத் தடவிப் பார்த்த " மாதிரி ஒரு அபிப்பிராயம் இருக்க வேண்டும் எண்டு நினைச்சு ,

                                " நீங்க வேற என்ன அறிங்சிங்க அந்த மலை பற்றி அதை முதல் சொல்லுங்க முதலில் " எண்டு கேட்டேன்.

                      அவர் மறுபடியும்

                     " இல்லை ஐசே, படிக்கிற நேரம் சமயப் புத்தகத்தில் அதைப்பற்றி படித்தது, மற்றப்படி அது எப்படி இருக்கும் எண்டு கற்பனை மட்டும் தான் செய்து பார்த்து இருக்கிறேன்,, ,,,, "

                       எண்டு கொஞ்சம் சொன்னார்.

                                       முக்கியமா அவர் அந்த மலை ஏறுவதை டிஸ்கவரி டிவி சனலில் காட்டுவார்களே ,நிறையக்  கயிறு, சின்னக் கொக்கிகள், குத்து ஊசிக்  கொளுவிகள் எல்லாம் உடம்பு முழுவதும் கொழுவிக் கொண்டு அங்குலம் அங்குலமா ஒரு சின்னக் கைக் கோடாலியால கொத்தி கொத்தி ஏறுவார்களே அதுபோலதான் அது ஏற வேண்டும் என்பது போல சொன்னார் ,அதுதான் எல்லா சமயப் புத்தகங்களின் விவரணங்களில் வருவது போல, பல நம்ப முடியாத விவரிப்புப் பாதிப்பால் அவர் ஓவரா கற்பனை பண்ணக் காரணமா இருந்து இருக்கலாம் போல இருந்தது.

                                 சிவனொளிபாதமலை  ஒரு முக்கியமான  புனிதமான மலை  இலைங்கையில் . அதுக்குப்  பின்னே  உள்ள நம்பிக்கை இமயமலை போல உறுதியானது. ஆனாலும்  அந்த   மலைக்கு ஒரு தரம ஏறாவதவரும் முட்டாள்.... ஒன்றுக்கு மேற்பட்ட தடவையும் ஏறுகின்றவர் படு முட்டாள் எனக் கூறப்படுவதுமுண்டு  என்பார்கள். எப்படியோ ஒரு புனிதமான மலையை ஏறுவது என்பது ஆன்மிகத்துக்கு அப்பாற்ப்பட்டு உயரங்களை இலக்காக்கித் தொடும்  ஒரு  அலாதியான அனுபவம், அதனால்தான் மலை ஏறும் போது திரும்பிக் கீழே பார்க்கக்கூடாது  என்றும்  சொல்லுவார்கள் 

                                   சிவனொளிபாத மலை, மத்திய மலை நாட்டில் ஹட்டன் நகரத்துக்கு அண்மையில் ,வெலிமட மேட்டு நிலத்தின் தொடர்ச்சியாக, ஒப்பிட்டு அளவில் தனியாக இருக்கும் ஒரு மலை. பியசேன குடும்பத்தோடு  அந்த மலைக்கு பல முறை போய் இருப்பதாக சொன்னார்,எனக்கு அதுதான் முதல் முறை. அந்த மலை இரண்டு விதமாக இரண்டு பக்கம் இருந்து ஏற முடியும் எண்டும் சொன்னார்,கொஞ்சம் சரிவு குறைந்த படிக்கட்டுக்கள் பெரிதாக இருக்கும் பக்கத்தில் இருந்து ஏறப்போறதா சொன்னார்,

                                              முதியான்சலாகே தர்மசிறி  பியசேன, தெற்கு இலங்கையின் அம்பலாங்கொட நகரத்தில் பிறந்தவர், துட்டகெமுனுவின் ஹரவா சிங்கள இரத்த வம்சதைச் சேர்ந்த பவுத்த சிங்களவர். ஸ்ரீலங்கா ஆர்மி " கெமுனு வாச் ரெஜிமென்டில் " அதிகாரியா வேலை செய்தவர், கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் பாதை ஓரக் கிளைமோர் கன்னி வெடியில் மயிர் இழையில் தப்பிப், பின்னர் வடக்கில் எங்கோ ஒரு ஆர்மிக் காம்பில் இருந்து லீவில் வந்த நேரம்,அவர் மனைவி அழுது குளறிப்

                                        " பிச்சை எடுத்து எண்டாலும் சாப்பிடுவம், என்னையும் பிள்ளைகளையும் அந்தரிக்க விட்டுப் போட்டுப் போக வேண்டாம் "

                          எண்டு சொல்ல

                                           அதன்பின் பியசேன வேலைக்குப் போகவே இல்லை, தலை மறைவாகி அவரோட கிராமத்தை விட்டு நாற்பது விதமான மக்கள் ஒன்றாக வாழ்ந்த  கொழும்பில் வசித்தார். எங்களோடு அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கசியர்  வேலை செய்தார், என்னைப் பூனைக்கும் பயப்பிடும் ஒரு தமிழன் எண்டு நினைச்சோ என்னவோ எனக்கு எல்லாம் பயப்பிடாம சொல்லுவார் பியசேன.  

                                      என்னை " யாப்பனே மல்லி  " என்றுதான் சொல்லுவார்.  அதுக்கு  தமிழில்எ அர்த்தம் " யாழ்ப்பாணத் தம்பி " என்று வரும், என்னோட   பின்னணிகள் பற்றி ஒருநாளும் கேட்டதில்லை. தன்னோட ஒரு தம்பி காட்டுயானை வயல் அறுப்பு நேரம்  அவர்கள் கிராமத்துக்கு வந்து வீட்டை உடைச்ச நேரம் அவரோட தம்பியை நித்திரைப்பாயில் வைச்சு நெரிச்சு சாகடித்துப் போட்டுது  என்றும், நான்  ஏறக்குறைய அவரோட தம்பி போல  உருவத்தில் இருந்ததால்  யாப்பனே மல்லி  என்று  சொல்வதாகச்  சொல்லுவார்.

                                        ஹையர் வானில மத்தியானம் கொழும்பில இருந்து மத்திய மலைநாட்டு ஏற்றம் தொடங்கும் மாவனல்ல போகவே மழை  அடிச்சு ஊத்தியது, மல்வான என்ற இடத்தில வானை நிட்பாடி  பியசேன இறங்கிப்போய் ஒரு ரம்புட்டான் பழம் ஒரு கூடை நிறைய வேண்டிக்கொண்டு வந்தார். வரக்காப்போளை  என்ற இடத்தில  கொரக்காப்புளி  நல்லா  இருக்கும்  என்று வானை நிற்பாட்டி இறங்கிபோய் ஒரு சொப்பிங் பாக் முழுக்க அதை நிரப்பி வேண்டிக்கொண்டு வந்தார்.

                             இருட்டின நேரம் ஹட்டன் நகரத்துக்கு அண்மையாகப் போய் ஒரு காட்டுப் பாதையால மலை அடிவாரம் போக மழை விட்டுத்  தூரல் போட தூவானத் திரைச்சீலையில் மலையைப்  பார்க்க பாக்கியராஜ் படத்தில வார கனவுக் காட்சி போல மங்கலாக தெரிந்தது. அந்த இடத்தில் சிங்கள மொழியும் சிங்களவர்களும் அதிகம் காற்றில் சுற்றிச் சுழற சிவபெருமானையே அடிச்சு திரத்தின மாதிரி ,சைவ சமயப் புத்தகத்தில் உள்ள மாதிரி எந்த விதமான இந்து சமய அடையாங்களும் இருக்கவில்லை.

                                          மலை அடிவாரத்தில் ஒரு புத்த கோவிலும், பன்சாலையும் இலங்கை ஒரு " சிங்கள பவுத்த நாடு " என்பது போல கம்பீரமாக இருந்தது. ஒரு வயதான ஐயா மட்டும் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, நீண்ட வெள்ளைத் தாடியைத் தடவிக்கொண்டு, ஒரு சின்னச் சாமியார் போல ஒரு சின்னக் கடை வைச்சு இருந்தார்,அவர் கடையில ரேடியோவில சிங்களப் பாடல் பாடிக்கொண்டு இருக்க, தேங்காய், கற்பூரம்,சாம்பிராணி மேசையில் அடுக்கி வைத்திருக்க, 

                          அவரிடம் போய் " ஐயா நீங்க தமிழா " எண்டு கேட்டேன்

                         அவர் " ஆமாங்க ", என்று மலையகத் தமிழில்க்  கதைத்தார்,

                          என்னைப்பற்றிக் கேட்டார், நான் யாழ்பாணம் என்றேன்,அவரோட மகளை சின்ன வயசில் யாழ்பாணத்துக்கு ஒரு டாக்குத்தர் துரை வீடுக்கு வேலைக்கு அனுப்பியதா பெருமையா சொன்னார், மலையைப் பற்றிக் கேட்டேன், தான் கடை பலவருடம் நடத்துவதாகவும், மலை ஏறுவதில் ஒரு தத்துவம் இருக்கு எண்டும் சொன்னார் அது என்ன எண்டு கேட்டேன் ,  

                      " மேல ஏறினவன் கீழே இறங்கி வர வேண்டும்,அது போலதான் வாழ்கையும் " எண்டு தத்துவம் போலக் கதைத்தார், அவரோட கடையில அவரைப்போலவே ஒரு சாமியார் படம் பெரிதாக மாட்டி இருந்தார்,

           நான் " அந்தப் படத்தில இருப்பது யார் உங்க குருநாதரா " எண்டு கேட்டேன்,அவர் சிரிச்சுப்போட்டு ,

                       "நான் சாமியார் இல்லங்க , தனியா இருக்கேன் அதனால சாமியார் போல தாடி  வளர்குறேன்க ,  இப்பிடி சாது போல இருந்தாலும் அப்ப அப்ப ரால் ஆமிப் போலிசுக் காரங்கள் வந்து கொட்டி இருக்கா கொட்டி இருக்கா எண்டு கட்டி இருக்கிற வேட்டியையும் உருவி செக் பண்ணுறானுங்க 

                               "அடக் கடவுளே   வயதான  உங்களையும்  இப்பிடிப் போட்டு உலைக்குரான்களே "

                                   " நீங்க வேற தம்பி, இங்கே  தமிழில் கதைத்தாலே  எல்லாருக்கும்  சந்தேகம் "

                                 " ஓம் ஓம் அய்யா ,இது இலங்கை முழுக்க உள்ள குழப்பம் தானே "

                               "அப்புறம் தம்பி  என்ன கேட்டிங்க  அந்தப் படத்தில இருக்காரே அவரு திருவள்ளுவர், திருக்குறளை எழுதின தெய்வப் புலவர் அவர் தாங்க, இது கூட அறிஞ்சுக்காம இருகீங்க "

                                "  ஓம் ஓம்,,இப்ப விளங்குது ,"

                                        "  தம்பிக்கு சைவ சமயம் இல்லைப்போல இருக்கே,,வேதக்கார ஆகமம் போல பேசுறிங்க "

                                " இல்லை  அய்யா  நான்  சுத்த சைவம் தான்,,இப்ப  தாறுமாறா இடம் வலம் தெரியாமல் இலங்கை முழுவதும் ஓடுவதால் என்னோட அடையாளமே தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்குறேன் "

                                "   யாழ்பாணத்தில மிச்சம் பேர் இந்து ஆகமத்தில இருக்காங்க இல்லையா "

                                 "     ஓம் ஓம் "

                                " எண்டுதான்  அங்கே போயிட்டு வந்த  என்னோட மவேன் மாரிமுத்து சொன்னானே " 

                              என்றார்,

                                              நான் அவரிடம் நூறு ருபா தாளைக் கொடுத்து ஒரு தேங்காயும்,கற்பூரமும் வேண்டிக்கொண்டு, என்னோட அப்பப்பா போல அவர் இருந்ததால்  மிச்சக் காசை வேண்டவில்லை. 

                              நான் வெறும் கையை விசுக்கிக்கொண்டு தான் போனேன். பியசேன எனக்கும் சேர்த்து சாப்பாடு சமைச்சு கொண்டு வாறதா சொல்லி இருந்தார். அவர் குடும்பத்தில்  பிளாஸ்டிக் தண்ணிப் போத்தல் எல்லார் கையிலையும் இருக்க, சாப்பாடுக்கு நொறுக்கு தீனிப் பாசல் கட்டின " ட்ரவலிங் பாக் "  ஐத் தோளில கொழுவிக் கொண்டு வந்த பியசேன

                           "கெதிப் படுத்துங்க ,கெதிப் படுத்துங்க , இப்பபே மெல்ல மெல்ல ஏறுவோம், அப்பத்தான் மேல இடம் கிடைக்கும் ,ஏறி முடிய உச்சியில்  கையைக் காலை நீட்டி கொஞ்சம் களைப்பாறிப் போட்டு,  காலையில் சூரியன் உதிப்பதைப் பார்க்கலாம் "

                                     எண்டு சொன்னார்.

                                                  நான் அவர்கள் தூக்கப் பாரமான பையை என்னிடம் தரும்படி கேட்டேன்.அதுக்குப் பியசேன

                          " நீ இளம் பொடியன் சந்நியாசி போல மூட்டை முடிச்சு காவிக் கொண்டு ஏறினால் ஸ்டைலா இருக்காது "

                                    எண்டு மறுத்து விட்டார். மலை ஏறும் பாதை முழுவதும் கும்பலில் கோவிந்தா போல பல இடங்களில் இருந்து வந்த மக்களும் எங்களோடு ஏறினார்கள்,சில வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும் கமராவைக் கொழுவிக்கொண்டு,சுவிங்கம் சப்பிக்கொண்டு ஏறிக்கொண்டு இருந்தார்கள். 

                              பியசேன ஒரு காலை  இழுத்து இழுத்து தான் நடந்தார். எங்காவது ஒரு சண்டை முனையில் வெடி விழுந்து சன்னம் பாஞ்சு இருக்கலாம் போல இருந்தது. சில இடங்களில் மலைப் படிகளில் பாசி படர்ந்து இருக்க வழுக்கியது, பியசேன பொஞ்சாதி மிகக் கவனமாக அவரை அந்த இடங்களில் கைத்தாங்கலாகப் பிடித்து பிடித்து நடந்தா . திடகாத்திரமாய் இருந்த எனக்கே தொடையில் கண்டத்தசைகள் பிடிப்பது போலிருந்தது ஏறும்போது. 

                                               அரைவாசி மலைக்கு முன்னதாக  வளைந்து வளைந்து போகும் ஏற்றப் பாதை முழுவதும் சின்ன சின்ன கடைகள் இருந்தது. அதில நிறைய பொருட்கள் சில்லறைக்கு  விற்றுக்கொண்டு இருந்தார்கள். பியசேன ஒரு கடையில் நிற்பாட்டி

                              " இப்ப இஞ்சி போட்ட ப்ளேன் டீ ஒண்டு குடிச்சா கியால வடக் நா "

                                      எண்டு நாக்கில தண்ணி ஊற வெளியில போட்டு இருந்த வாங்கில இருக்க, அந்த கடை ரேடியோவில் எச் அர் ஜோதிபால என்ற சிங்கள பைலாப் பாடகர் பாடின " ரோசப்பாட்ட நோனாவின் சுதுப்பாட்ட கக் குள ,,, " என்ற டபிள் மீனிங் கொசப்புப் பாட்டு அலறிக்கொண்டு இருந்தது.

                               பியசேன அவரோட யாழ்ப்பான நாட்கள், மடக்களப்பு பெண்கள் பற்றி ஒரே கலகலப்பா கதை சொல்லிக்கொண்டு இருந்தார். மலை ஏறின பாதை முழுவதும் இனப்பிரசினை தொடங்க முதல் அவர் ஒரு சாதாரண சிப்பாய் ஆக எப்படி யாழ் தேவி ரெயிலில் யாழ்பாணம் போன அனுபவத்தை, அங்கே பனம் கள்ளு குடித்த நினைவுகளை நான் என்னவோ கூடப்பிறந்த சகோதரம் போல நெருக்கமா,

                           " யாப்பனே மல்லி , உனக்கு  விசியம்எ  தெரியுமால்லா சிங்கள அரசியல்வாதிகளும் ,அவங்களின் கிழிஞ்சு போன  கட்சிகளும் சுத்த ஓட்டு மாத்து ,தேர்தலில் வெல்ல என்னவும் சொல்லி வெண்டபின் அரசாங்க காசை சுளையா சுருட்டி முன்னேறி  விடுறாங்க, "

                         "  ஹ்ம்ம் ,, சொல்லுங்க  பியசேனா "

                              "  பாவப்பட்ட பொது மக்கள்தான் பாணும் பருப்பும்  தின்னுறது  , இதுக்குள்ள சிங்களம் தான் முக்கிய ஆண்டுவ பாசாவ எண்டு மொழிச்  சண்டையை இழுத்து  இனப் பிரச்சினைத்  தொடக்கி, யாப்பனே மல்லி  எனக்கு  இலங்கையில்  எல்லா இன மக்களும் ஒன்றுதான் "

                          "    ஹ்ம்ம்,,,எனக்கும்தான் பியசேன "

                      "  யாப்பனே மல்லி,,உண்மையாவே  சொல்லுறேன்   எங்களைப்போல சாதாரண மனிதர்களின் பிள்ளைகளை யுத்த முனைக்கு அனுப்பிப்போட்டு அவங்கட பிள்ளைகளை றோயல் கொளிச்சிலையும் ,தேர்ஸ்டன் கொளிச்சிலையும்,  இண்டர்நசினால் ஸ்கூல்லயும் இங்கிலீஷ்ல  படிப்பித்து கொண்டு இருப்பாங்க " 

                        "  ஹ்ம்ம்ம்,,அது  உண்மைதான்  பியசேனா "

                      " உனக்கு  சிங்கள  ஆட்களில்  துவேஷம்  இருக்கா,,யாப்பனே மல்லி "

                        "   ஹ்ம்ம்,,,இல்லை..ஆனால்  பல  சிங்களத் தலைவர்கள் தமிழர்களை மனிதர்களாகவே  நடத்தவில்லை "

                       "   ஹ்ம்ம்,,அது  உண்மைதான்  யாப்பனே  மல்லி,,நானும்  அதுக்கு வெட்கப்படுகிறேன்  "

                                                   எண்டு வெறுப்பாகச் சொல்லிக் கொண்டு நடந்தார் , நான் அந்த லைட் இல்லாத  இருட்டுப் பாதையில் மின் மினிப் பூச்சிகள் முகத்தில மோத ,சில்வண்டுகளின்  இரைச்சல் காதில ஊசி குத்த,  பேசாமல் கேட்டுக்கொண்டு நடந்தேன். மேலே ஏற ஏற குளிர் அதிகமாகி , ஒட்சிசன் குறைவு போல இருந்தாலும் அதிகாலை தான் மலை உச்சிக்கு போய்ச் சேர்ந்தோம்.

                                         மலை உச்சிக்கு போன கையோட ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் ஏதும் வரும் எண்டு நினைச்சேன். பதிலா குடலை உருவுற பசிதான் வந்தது, பியசேனாவின் பொஞ்சாதி அதை அறிந்த மாதிரி அவா வைச்சு இருந்த சாப்பாட்டுப்  பார்சலை எனக்கு தந்தா,

                 நான் " அக்கே, நீங்க, பியசேனா,  லமாய்  முதலில்  சாப்பிடுங்க " என்றேன்,

               அதுக்கு அவா

                                         " மல்லி, புதுப் பொம்பிளை போல வெட்கப்படாத, பசி உன்னோட முகத்திலேயே செய்தி வாசிக்குதே, காமே பாலப் புறுத்து கிராம நிலதாரி கமே கெதர.... " எண்டு

                                                 ஒரு கொசப்பு  ஜோக்கான சிங்களப் பழமொழி சொல்லிச் சிரிச்சா, நான் சாப்பிட தொடங்க அந்தப் பாசலில் மாசிக் கருவாடு போட்டு பிலாக்கா கறியும், பொன்னி அரிசிச் சோறும் இருந்தது. பியசேன பொஞ்சாதி கையில கொட்டுக்கொலை  சம்பலை அள்ளிக்கொண்டு வந்து என்னோட பாசலில் போட்டுட்டு

                                       " மல்லி , என்னோட  சாப்பாடு எப்படி, பியசேன என்னோட கொஸ் கறிக்கு சுருண்டுதான் என்னைக் கடத்திக்கொண்டுபோய்க் கலியாணம் கட்டினார் "

                                எண்டு சொல்லி சிரிச்சா. சொல்லிப்போட்டு  தண்ணி போத்தலை பக்கத்தில கொண்டுவந்து வைச்சா. உண்மையில்  பியசேன பொஞ்சாதி சமைச்சுக்கொண்டு வந்திருந்த கொஸ்கறி அமர்களமாதான் இருந்தது. அந்தக் கறிக்கு  இந்த  ஒரு  பியசேன மட்டுமில்லை  அந்த  ஊரில  இருந்த  எல்லாப் பியசேனாக்களுமே மயங்கி இருப்பார்கள்  என்று  அவாவுக்கு  சொன்னேன். ஹஹஹஹா  என்று  சிரிச்சா.

             பியசேன " போட்டுத்  தாக்கு, கேட்டு வேண்டி சாப்பிடு..." , எண்டு  சிரிசுக் கொண்டு ஒரு கல்லில குந்தி இருந்தார். 

                                           காலையில் மலை உச்சியில் இருந்த ஒரு சின்னப் பன்சாலையில் வெண்கல பானையை  எலி விழுந்து உருட்டின மாதிரி மணி அடிச்சார்கள், அந்த மணி யாழ்பாணத்தில என்னோட வீட்டுக்கு அருகில் இருந்த வீராளி அம்மன் கோவில் வைரவர் மணி போலதான் சத்தம் எழுப்பியது. கொஞ்ச நேரத்தில் பன்சாலையில்  இருந்து புத்த பிக்கு போட்ட என்னமோ ஒரு மந்திரம் போன்ற சத்தம்  லவுட் ஸ்பிகரில் இருந்து வந்து எல்லாரையும் அரக்கப் பரக்க எழும்பி சூரியனைத்  தேட வைத்தது,

                      " அது என்ன மந்திரம் "

                          எண்டு பியசேனாவைக் கேட்டேன்.  

                       அவர் அது " தம்ம பதத்தில் உள்ள பிரித் ஓதி மெடிடேசன் செய்யும் போது சொல்லும் மந்திரம் "

                                       என்றார்,எனக்கு என்னவோ ஒரே தாளக் கதியில் திருப்பி திருப்பி வரும் அந்த மந்திரம் சொல்லும் மெட்டு,புத்த சாசனத்தின் மேல சத்தியம் பண்ணி    " தமிழனை விடமாட்டேன்....,தமிழனை விடமாட்டேன்.....கடைசித் தமிழனையும் அழிக்காமல் விடமாட்டேன்...."  என்பது போல இருந்தது.

                                               சிவனொளி பாத மலையில் எல்லா சமயத்தவரும் தங்கள் தங்கள் கடவுள் காலை வைச்சு பதிந்தார் எண்டுதான் சொல்லுறார்கள். நான் என் பங்குக்கு சிவபெருமானின் பாதத்தைத் தேடினேன்,ஒரு கருங்கல்லில்ப்  பாதம் போல ஒரு அடையாளம் இருக்கும் இடத்தை சுற்றி நிறைய மலர்கள் வைத்து,ஊதுபத்தி கொளுத்தி வைச்சு  இருந்தார்கள். கிழக்கில் நக்கிள்ஸ் மலைகளின் மேலாக மஞ்சள் வெளிச்சம் வர ஹாமத்துரு மந்திரத்தை நிட்பாட்டிப் போட்டு

                              " சூரியன் அதன் பொற்கிரகஙன்களை வீசி எழும்பி வருகின்றான்,,,"

                                  எண்டு சொல்லிக்கொண்டு இருந்தார். உண்மையில் விஞ்ஞானப்படி  பூமிதான் சுழண்டு கீழே போகுது,சூரியன் சுழறுவதில்லை என்று சயன்சில் படித்ததை நினைக்க கொஞ்சம் குழப்பமா இருந்தது. இந்த உண்மையை அந்தப் புத்த பிக்குவுக்கு சொல்லப் போனால் என்னோட சிங்கள உச்சரிப்பை வைத்து என்னைத் தமிழன் எண்டு அடையாளம் கண்டால்,அந்த  ஹமத்துரு  முதல் வேலையா என்னை அந்த மலையில் இருந்து உறட்டி விடத்தான் அலுவல் பார்பான் எண்டு போட்டு ஒண்டுமே சொல்லவில்லை... 

                                                        இந்த மலை பற்றி இலங்கையில் வாழ்ந்த  உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய " சயன்ஸ் பிக்சன் " எழுத்தாளர் டாக்டர் ஆதர் சி கிளார்க் அறுபதுக்களில் எழுதிய அவரோட " ஸ்பேஸ் ஒடிசி"  நாவலில் இந்த மலை உச்சியில் இருந்து வேற்றுக்கிரக வானுலகம் போகும் ஒரு பாதை இருந்ததா அந்த நாவலில் எழுதி இருக்கிறார். கற்பனை அதிகம் உள்ள அந்த நாவலில் மலையின் அழகு பற்றியும் எழுதியது உலக அளவில் அந்த நாவல் பெற்ற பிரபலம்  போல ,அந்த மலைக்கு மேற்கு அறிவியல் உலகிலும் கவனிப்புக் கிடைத்து இருக்கு .

                                                         எதிர் காலத்தில் இந்த மலையில் இருந்து பல விண்வெளி அதிசய விசியங்கள் நடக்கும் எண்டு அந்த  " சயன்ஸ் பிக்சன் " னில் டாக்டர் கிளார்க் எழுதிய அந்த நாவல் கோடிக்கணக்கான மக்கள் வாசித்த போதும், இன்றைக்கு அந்த மலை உச்சிக்குப் போற பாதைக்கு லைட் போஸ்ட் நட்டு, கரண்ட்டு வயர் இழுத்து, மின்சார பல்புகள் போட்டதை விட வேற ஒரு விஞ்ஞான விந்தையும் இதுவரை  நடக்கவில்லை.

                                                 சிவனொளி பாத மலையில் அதிகாலை சூரியன் உதிப்பதை இன, மொழி, சாதி ,சமயம் எல்லாம் கடந்து  பார்ப்பது ஒரு தேவலோக அனுபவம்.

                                            கிழக்கில் இருட்டு இழுத்து மூடி வைத்து நீண்டு கிடந்த நக்கிள்ஸ் மலைத்தொடர் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமா மஞ்சள் சிகப்பு நிறம் வர்ணம் தீட்ட, முகில்களின் மறைப்பில் மலை மகள் சோம்பல் முறிச்சு, முடிவுறாத ஒயில்ப் பெயிண்டிங்  ஓவியம் மெல்ல மெல்ல ஒளி பெறுவது போல விரிய, கீழே ஹட்டன்  நகரம் சின்னதாக நெருப்புப் பெட்டி வீடுகளுடன் வெளிச்சமாக, வெலிமடை மேட்டு நில உருளைக்கிளங்குத்  தோட்டங்கள் பச்சை நிறத்தில் இருட்டை விரடிக்கொண்டு இருந்தது . 

                                                                 அதிகாலையிலேயே வடக்கே பருவ மழையை விசாரிக்கப் போகும் மேகங்களைத் தெற்கில் இருந்து ஊடறத்து அதிகாலைப் பறவைகள் உற்சாகமாகப் பறக்க, விலகியும் விலகாத மத்திய மலை நாட்டுப் பனி கோபமாக வெளிக்கிடும் சூரியனின் கோபக் கதிர்களை வடிகட்டி மென்மை ஆக்க, தூரத்தில்  தேயிலைத்தோட்டத்தில கொழுந்து பிடுங்க போற  கூடை சுமந்த பெண்கள் எறும்பு போல மெல்ல மெல்ல தடமாகி நீண்டு போவது  


                         அருகருகே இரண்டு  நீத்தேக்கங்கள் , நமுனகுலைக் குன்றுகள்  நிலமகளின் குத்திட்டு நிற்கும் மார்பகங்கள் போல எம்மி விம்மி பூரித்து நிற்க ,  மத்திய மலை நாடு,ஏன் இலங்கைத்தீவு ,இந்து சமுத்திரம் எல்லாம் கடந்து தொல்காப்பியம் சொன்ன   "வேங்கடம் குமரி தீம்புனல் பெளவமென்று இந்நான்கு எல்லை தமிழது வழக்கே" வரைக்கும் நினைவுகளின் சந்தோஷ உலா உலகத்தை மறக்க வைக்க......

                        "  உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றது... " என்ற குறுந்தொகை வரிகளுக்கு ஆத்மா கொடுத்தது போன்றது சிவனொளிபாத மலை ஏறி  இறங்கிய அனுபவம் அப்போது இருந்தது ! இப்போது நினைக்கும்போது குமார்  அண்ணை  நினைச்ச மாதிரி  டிஸ்கவரி டிவி சனலில் காட்டுவார்களே ,நிறையக்  கயிறு, சின்னக் கொக்கிகள், குத்து ஊசிக்  கொளுவிகள் எல்லாம் உடம்பு முழுவதும் கொழுவிக் கொண்டு அங்குலம் அங்குலமா ஒரு சின்னக் கைக் கோடாலியால கொத்தி கொத்தி ஏறுவார்களே அதுபோல திரிலாகத்தான் அந்த நினைவுகளே இருக்கு !

.
.06.09.14.

Aaagaaya Vennilave Tharai Meethu..Guitar Cover ,,Arangetravelai..




தர்பாரிகானடா இராகத்தில் இசைஞானி இளையராஜா இசை அமைத்து தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் டாக்டர் கே ஜே ஜேசுதாஸ், உமா ரமணன் பாடிய ஒரு அருமையான பாடல்,ஆகாய வெண்ணிலாவைத் தாலாட்டி தரை மீது இறக்கி அதுக்கு அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளையில்
மேஸ்ட்ரோ இளையராஜா அசத்தினார் ,
                                          மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட வைத்த வரிகளை கவிஞர் வாலி எழுதி இருந்தார். கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே சூடஎன்று இரவுகளில் ஏங்க வைத்து இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட இது போல ஒரு பாடல் இனி எப்போது வரும் ?
                                                " அரங்கேற்ற வேளை " படத்தில வந்த இருவர் சேர்ந்து பாடும் ஒரு டுயட் போல உள்ள இந்தப் பாடலின் வரிகள் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வரும் . முக்கியமா சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது எல்லாப் பாடல்களிலும் ஒரு சின்ன இடைவெளி வரும் இந்தப் பாடலில் அப்படி வராது. வரிகள் அலைபோல ஒன்றன் மேல் ஒன்றாக தொடர்ச்சியாக வரும்.
                                          ஒரியினலா இந்தப் பாடல் வேற ஒரு ஸ்கேல் இல வரும். இங்கே நான் உபயோகித்து உள்ள பிண்ணனி கரோக்கி வாசித்துள்ளவர்கள் அதை ஒரு முழு நோட் குறைத்து வாசித்துள்ளார்கள். அதனால் அவர்கள் வாசித்துள்ள ஸ்கேலில் நானும் வாசித்துள்ளேன். அந்தக் குழப்பம் இந்த வீடியோவில் உள்ள சுருதியையும் ஒரியினல் பாடலில் உள்ள சுருதியையும் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்டால் தெரியும்.
                                         டெக்னிக்கலா சொன்னால் இந்தப் பாடல் இசைஅமைக்கப்பட்ட ஸ்கேல் இல் உள்ள பேஸ் நோட் இல இருந்து ஒக்டேவ் ஹை நோட் வரை அலாதியாகப் பாயும் . இந்த வீடியோ சும்மா என்னோட ஸ்டைலில் பொழுதுபோக வாசித்துள்ளேன். ஒரியினல் பாடல் போல சரியாக வாசிப்பு இல்லாவிட்டால் என் கிட்டார் அறியாமையைப் பொறுத்துக்கொள்ளுங்க .
.
.06.09.2015