Tuesday, 10 March 2015

" முதல்ச் சந்திப்பு " ..

பல வருடம் முன்னர் புலம்பெயர்ந்து சுவீடனில் அரசியல் அகதி முகாமில், புலியையும்,சிங்கத்தையும் பயங்கரமாச் சித்தரித்து உலகத்துப் பச்சைப் பொய் எல்லாம் சொல்லியும் " நிரந்தர வதிவிடக் காட் " கிடைக்குமா, கிடைக்காதா எண்டு அல்லாடிக்கொண்டு மண்டையைப் பிச்சுக்கொண்டு இருந்த நேரம், அந்த முகாம் இருந்த இருட்டு விழுங்கிய அத்துவான காட்டுக்கு நடுவில் புள்ளிபோல இருந்த " பிலேன் சோர்ர்மலான்ட் " என்ற சிறிய நகரத்தில் சில வருடம் வசித்தேன்.
                                      
                                                          அந்நிய தேசத்தில் தனிமையில் வாழ்ந்ததால் புலன்பெயர்ந்து, ஒரு நாள் என் முன்னாள் மனைவியை " பிலேன் சோர்ர்மலான்ட் " இல் நடந்த ஒரு இசை நிகழ்சியில் , சந்தித்து அவளுக்கு அந்த இடத்தில வைச்சே மண்டையைக் கழுவி , அடுத்த நாள் மாலை ஒரு பார்க்கில் சந்திக்க வைத்து , அப்போது சந்தித்த போது நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி ஒரு கவிதைபோல ஒன்று " முதல்ச் சந்திப்பு " என்று தலைப்பிட்டு எழுதினேன் 

                                            பின்நாட்களில், காதல் அவளை முழிச்சுப் பார்க்க விடாமல் கண்ணை மறைச்சதால் என்னோட எல்லா குளறுபடிகளையும் எடை போட முடியாமல் மயங்கிக் கவுண்டு விழுந்த அதிஸ்டத்தால், அவளோடு குடும்பமாகி வாழ்ந்த போது, அந்தக் கவிதையைப் குற்றப்பத்திரிகை போல சுவுடிஷ் மொழியில் எழுதிக் கொடுத்தேன்,

                                                            அதை அவள் வாசித்துப் போட்டு ரெண்டு ரெண்டு ரெண்டு துளிக் கண்ணீராக கண்களில் வழிய விட்டாள். அதை ஆனந்தக்கண்ணீர் என்று நினைத்து பார்க்க எனக்கு சந்தோசமா இருந்தது. என் கவிதை ஒருவரின் மனதுவரை இறங்கி இதயத்தை அசைத்துப் பார்த்தது என்று நினைத்து இன்னும் கவனித்து எழுதும் அனுபவம் வர பின் நாட்களில் கவிதை எழுதுவேன் என்று சபதம் எடுத்து, இன்றைக்குப் பலரை வாசித்து அழ வைத்து உசிரை எடுக்கும் ஐடியா அப்போதுதான் வந்தது,

                                                வருடம் முழுவதும் ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் உலகத்தரமான புத்தகம் காசு கொடுத்து வேண்டி வாசிக்கும் அவளுக்கு இப்படி , இலக்கியம் , கவிதை , கதை என்று நான் ஏதாவது ரீல் விட்டு எழுதிக் காட்டினால் அதிகம் அதைக் கவனிக்கவே மாட்டாள். அதை வாசிப்பது எப்பவுமே நேரவிரயம் என்று நினைப்பவள் அவள், அதால ஒரு சந்தேகத்தில்,

                                     " பரவாயில்லை சும்மா தான் எழுதிப்பார்த்தேன் ,நீ அதிகம் ஒன்றையும் உணர்ச்சிவசப்பட்டு எமோஸனலா எடுக்காதே, காதல் வந்தால் கவிதை இலவசமாக் கொட்டும் என்று சொல்லுறார்கள்,அதால எழுத முயற்சித்தேன் , அது உன்னை இவளவு இம்பிரஸ் செய்து இருப்பது ஆச்சரியமா இருக்கு ,முதலில் ஆனந்தக்கண்ணீர் விட்டு அழாதே " 

                                              என்றேன். அதுக்கு அந்த அகராதி பிடிச்சவள்
.                             
                                          " அடப்பாவி என்னோட தாய் மொழியான ஸ்வான்ஸ்க் சுவுடிஷ் மொழியை இப்படி தாறுமாறா இலக்கணப் பிழையாக எழுதி கொலை செய்கிறாயே, நீ எங்க உருப்படப் போறாய், உன்னை எங்கள் நாட்டில் இருக்க விட்டதுக்கு இப்படி என் தாய் மொழியைப் பழி வேண்டுறாயே ,அதை நினைக்க அடக்க முடியாமல் அழுகை அழுகையா வருகுது " 

                                                     என்று சொன்னாள்...

                                          எப்படியோ அந்தக் ஆனந்தக்கண்ணீர் அர்த்தம் தவறிப் போயும் ,அந்தக் கவிதை தனக்கு எப்பவும் பிடிக்கும் என்று நாங்கள் சட்டரீதியாகப் பிரிந்து பல வருடம் பின்னர் ஒரு நாள் சொன்னாள் , சொல்லிப் போட்டு நான் சுவுடிஷ் மொழியில் எழுதிய அந்தக் கவிதையை எனக்கு மெயில் இல் ஸ்கான் செய்து அனுப்பியும் இருந்தாள், அதில ஆச்சரியமாகி

                                                    " என்னோட கவிதையைப் புரிந்து கொள்ள உனக்கு இவளவு வருஷம் எடுத்ததா ,, மறக்காமல் அதை நினைவு வைத்து இன்று அனுப்பி வைத்ததுக்கும் நன்றி. நான் பல வருடம் முன் எழுதியதை இப்ப தமிழில் மொழிபெயர்து என் ரசிகப் பெருமக்களுக்கு போடுகிறேன்.." 

                                              என்று பதில் மெயில் அனுப்பி கொஞ்ச நேரத்திலேயே

                                         " அடி செருப்பால,..நான் இப்ப வேற ஒரு எங்கள் சுவிடிஷ் இனத்து ஒரு மனிதருடன் என் வீட்டில் வாழுறேன்,அவன் உன்னுடைய கவிதையை எடுத்து வாசித்தால் சில நேரம் சந்தேகம் பிடிச்சு பிரசினை செய்து என்னோட நின்மதியைக் கெடுப்பான்,உலகம் முழுக்க ஆம்பிளைகள் வெள்ளையோ,கறுப்போ, பிரவுன் கலரோ எதுவாக இருந்தாலும் சந்தேகத்தில் பெண்களைப் பிடிச்சு உலுப்புரதில உலகம் முழுக்க ஆம்பிளைகள் ஒரே மாதிரி, அதால் இந்தக் கவிதைப் பேப்பரை ஸ்கேன் செய்து உனக்கு அனுப்பிப் போட்டு, பேப்பரைக் கிழித்து எறிஞ்சு போட்டேன்,...."

                                            என்று நீண்ட மெயில் விளக்கம் எழுதி இருந்தாள்.

                                            ஏனோ தெரியவில்லை அந்தக் கவிதைபோல எழுதியதை இவளவு நாளும் நானே மொழி பெயர்த்து போடவில்லை, வாழ்கையில் விதி எழுதி வைத்து கிளித் தட்டு எப்ப விளையாடும் என்று சொல்லவே முடியாது.ஜோசித்துப் பார்த்தால் மறுபடியும் ஒரு முதல் சந்திப்பு அதே போல நடக்கவே முடியாது என்று யாருமே சொல்லமுடியாது...

" முதல்ச் சந்திப்பு "
-------------------------------
மகிழ்ச்சியை
வரவேற்கத்தக்கதாக
மனமெல்லாம்
நாற்று நட்டு
விடை பெற்ற
நிமிடத்திலிருந்தது 
மிகப்  பிரியமான  நேசங்கள் 

விட்டுப் போன
உள்ளங்கையின்
வியர்வை வாசம்
பிலேன் சோர்ர்மலான்ட்
ஒதுக்குப்புற அகதிமுகாம் வரை
பின் தொடர்ந்து வந்தது..

கைவிடப்பட்ட
அடிமைபோல
அன்புக்கு
ஏங்கும் இதயத்துக்குதான்
அரவணைப்பின் பெறுமதி தெரியும் ..

வீசி எறியப்படவர்களின்
வீதியில் தான்
கை கோர்த்து நடப்பதன்
நேசிப்புக்கள்
நெருக்கமாகும்  விருப்பமோடு
காத்திருக்கும்..

ஏக்கங்களின்
அர்த்தம் நெஞ்சோடு
நெரிக்க
என்
நாடித் துடிப்பைப்
பார்த்த போதே
உன்
இதயத் துடிப்பை
உணர வைத்தவளே...

மென்மையாகவே
விரல்களின் மீட்டலை
எண்ணி முடிக்க
நானே
வரைந்து வைத்த
சின்னஞ் சிறிய உலகம்
எல்லாப் பயங்களையும்
களை பிடுங்கி
எறிந்து போட்டு
பனி உருகும்
பாதையெல்லாம்
நம்பிக்கைகளை விதைத்தது.



 10.03.15

Monday, 9 March 2015

காயத்திரி மந்திரம்..

மோகம் சருகிட்ட
பார்வைகள்
வைத்த
போட்டிப் பரீட்சையின்
கேள்வித்தாளில்
விடைகள்
தேட முன்னமே
நேரம் முடிந்தது...

கீற்றுச்
சிரிப்பைப் பேச
வைத்த
அழகுராணிப் போட்டியில்
மொழி
தோற்றுப் போய்
அணியலங்காரங்களைக்
கழட்டியது...

பாசம் கொட்டியதை
பரிசீலிக்க வைத்த
பட்டிமன்றத்தில்
நடுவருக்கே
தீர்ப்புச் சொல்ல
நடுக்கம்
வந்தது

வார்த்தைகள்
இசையோடு
போட்டி போட்ட
குரலின் தேடலில்
எதேச்சையாக  
ராகங்கள்
ஆரோகணத்திலையே  
அலங்கோலமானது

அகம்
எதையுமே
எழுதாமல்
சும்மா பார்த்துக்
கொண்டிருவென்று
இதயமெல்லாம்
காயத்திரி  மந்திரம்
உச்சரித்தது
முகம்

இதுக்கு மேலே
நீ
எதை எழுதினாலும்
கவின்ஞன்
ஆகிவிடுவாயென்று
எச்சரித்து
இடை நடுவில்
தடை போட்டு  
மயக்கிப் போகிறது
உன்
மவுனம்.

நாவுக் அரசன்
ஒஸ்லோ 08.03.15

Sunday, 8 March 2015

பெண்ணாக மட்டும் இருக்கவிடுங்கள்...

அவசர உலகத்தின்
ஆரவாரங்களில்
ஒதுக்கி வைக்கப்பட்டு
தனித்திருக்கும்
அலட்சியத்தில் 
உருக்குலைந்து கிடக்கிறது
ஓரு
ஓவியம்.
இரைச்சல்
நிறைந்திருக்கும்
நகரத்தில்
வார்த்தைகள் தவறிய
வாழ்கையில்
கேட்கிறது
ஊமையொருத்தியின்
விசும்பல்சப்தம்.
நீண்டநாள் சேர்த்து வைத்து
பேசுவதுக்கு
காத்திருக்கின்ற
ஓராயிரம் வார்த்தைகளின்
பிரிதலும்
கூடுதலும்
இப்படித்தான் நிகழ்கிறது
பெண்ணுரிமை
விவாதங்களின்
முன்னுரிமை பேசும்
தீர்ப்புக்களின்
கடைசி வரியிலிருந்து
முன்னேற முடியாமல்
தடுமாறிக்
குப்புறக் கவிழ்க்கிறது
யதார்த்தம்
எல்லாமாக
இருக்கும்
அவளைப்
பெண்ணாக
மட்டும்
இருக்கவிடுங்கள்.

நாவுக் அரசன் 
ஒஸ்லோ 08.03.15

Friday, 6 March 2015

வெளிச்சத்தின் சந்தோஷத்தில்...

ஒரு
இளம் பெண்
காதலிக்கத் தொடங்குவது
போலவே
மயங்குகிறது 
குளிரை
உதறி எறிய முடியாத
மஞ்சள் வெயில்...
வெளிச்சத்தின்
சந்தோஷத்தில்
வார்த்தைகளைத்
தவறவிட்டுப் போட்டு
அதன்
உட்பொருளை
உணரத் தவிக்கிறது
எழுதத் தொடங்கும்
கவிதை
கோடையின்
அடையாளம்
மிகவும் கனமாகி
வெள்ளை நிலம்
முற்றிலுமாய்த்
தொலைந்து விட
பூமியின்
மையத்தை
மறந்து விடும்படி
வெளிப்பரப்பு
விசாலாமாகி விடுகிறது
முதல் சந்திப்பை
நினைப்பதென்பது
எவ்வளவு
அலாதியானதோ
அதேயளவு
புத்துணர்ச்சி தருவது
பிராகாசமான
உன் முகத்தை
நிபந்தனையற்று
என் முகத்தில்
பார்ப்பது.
.
எப்போதும் நேசிக்கும்
இனியவளே
இப்போது சொல்கிறேன்
புத்தம் புதிய வெய்யில்
காதலில்
விழுந்து விட்டதால்தான்
உலகம்
மிக மிக
அழகாகத் தோன்றுகின்றது.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 06.03.15.

Thursday, 5 March 2015

" சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..."

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடிய இளமைப்பருவப் பாடகி ஒருவர் இந்த வட இந்தியக் குரல் தமிழில் அதிசயங்கள் பாடி அசாத்திய திறமையில் பலரை வியக்க வைத்த அந்தப் பாடகி அழகி படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெஸ்டர்ன் ரிதம் இசையின் பின்னணியில் பாடிய " பாட்டு சொல்லிப் பாடச் சொல்லி .." தமிழ்ப் பாடலுக்கு தேசிய விருது பெற்ற ஹிந்தி மொழிப் பாடகி சாதனா சர்க்கம் .
தமிழில் பாடிய பல பாடல்களில் இன்றுவரை அலைபாயுதே படத்தில் அல்லா ரக்கா ரகுமானின் இசையில் பாடிய " சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..." பாடல் ரகசியமாக தமிழர்கள் எல்லாரையும் வயது வேறுபாடு இன்றி இந்தக் குரல் சின்னச் சின்னதாய்க் கோரிக்கைகள் வைத்து கவர்ந்து சென்றது . அல்லா ரக்கா ரகுமான் ஒரு பேட்டியில் தான் கொடுக்கும் மெட்டைத் தான் எதிர்பார்ததுக்கு மேலாக அட்டகாசமாகப் பாடி அசத்தும் ஒரே பாடகி சாதனா சர்க்கம் என்று சொல்லியுள்ளார்,
சாதனா சர்க்கம் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம், வட இந்திய கஸல், தும்மிரி இசை வடிவங்கள் எல்லாம் முறைப்படி சின்ன வயசிலேயே படித்து அதில் இருந்து சினிமா பின்னணிப்பாடகியாகி மெல்லிசைக்கு வந்த பாடகி. தன் உடல் அமைப்புக்கும் கணீர் என்ற சுருதி பிசகாத பிச்சில் பாடும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல் பாடும் சாதனா சர்க்கம் தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி இசை அமைப்பாளர்களோடும் தன் குரலைப் பதிவு செய்துள்ள பாடகி,
" சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே.." பாடல் மூன்று ராகங்கள் கலந்த ஒரு ராகமாலிகா என்று சொல்லுறார்கள்,சரியா எனக்கு தெரியவில்லை ,பல்லவியில் சாருமதி, சிந்துபைரவி, இராகமும் சரணத்தில் மோகனம் என்றும் சொல்லுறார்கள் ,இது சரியா என்று எனக்கு தெரியலை யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
https://www.youtube.com/watch?v=xVQBOAajJF0


சிக்கல் பிக்கல் பிடுங்கல்..

" வாழ்கையே சிக்கலாகவும் எது செய்யவும் வெறுப்பாகவும், விரும்பிற மாதிரி எதுவுமே நடக்காததால் அலுப்பாகவும், மிக மிக சிக்கலாகவும் இருக்கிறது " என்று ஒரு அன்பர் உணர்ச்சிப் பிளம்பாகிப் பதிவு போட்டு இருந்தார், அவர் அது என்ன சிக்கல் என்று சொல்லவில்லை. இங்கே பேஸ் புக்கில் உள்ளவர்கள் எல்லாருமே சிக்கல் பிக்கல் பிடுங்கல் சோலி சுரட்டு எதுவுமே இல்லாமல் நின்மதியா இருப்பது போலவும் தான் மட்டும் சிக்கலில் அவதிப்படுவது போலவும் போட்டிருந்தார்.
அதுக்கு முதல் கருத்து பதிவிட்ட இன்னுமொரு அன்பர் , " நான் நினைக்கிறன் உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கு போல " என்று போட, அந்தப் பதிவு போட்டவர் " அதெப்படி அவளவு கரெக்டாக் கண்டு பிடித்தீங்கள் " என்று பதில்க் கொமென்ட் போட, அதுக்கு அந்த அன்பர், " நீங்க வெறுத்துப்போய் எழுதிய விதத்திலையே எனக்கு விளங்கியது நீங்கள் எவளவு கஷ்டப்பட்டு எழுதி இருப்பிங்க என்று அதை வைத்து மலச்சிக்கல் இருக்கு என்று கண்டு பிடித்தேன் " என்று எழுதி பாட்டி வைத்தியம். சொல்லுறேன் பேர்வழி போல ,
" மலச்சிக்கலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் விளாம்பழத்தையும் கலந்து வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்தச் சிக்கலுக்கு நல்ல பயன் பெறலாம் "
என்று நாட்டு வைத்தியர் அளவுக்கு அட்வைஸ் எழுதி இருந்தார்.
ஏன்பா தெரியாமத்தான் கேட்கிறேன், வருத்தம் துன்பம் வந்தால் அதுக்கு அதுக்கு என்று படித்துள்ள டாக்டரிடம் போகாமல், இப்படி குய்யோ முறையோ என்று அதை இங்கே போஸ்டிங் ஆகப் போட ,அதை வாசிக்கிற அரைகுறை அறிவுக் கொழுந்துகள் சொல்லும் அட்வைசை நம்பினால்,கடைசியில் பைத்தியம் பிடித்து வைத்தியம் அதுக்கும் இல்லாமல்ப் போய் கடைசீல இங்கேயே உங்க மரண அறிவித்தல் போட்டு அதுக்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதையே எழுதவேண்டி வரும்பா.
...... என்ன சீவியமடா இது.
.

மனதோடு மட்டுமே....

தலைக் கனம்
பிடித்திருந்து
விழுத்த முடியாதவர்களையும்
வழுக்கி விழுத்தி .
அழகு பார்த்த 
உறை பனி
அக்கறை காட்டத்
தேவையில்லாமல்
பாதை ஓரங்களில்
விடை பெறுகிறது.....
நிலை தடுமாறி
சமநிலை இழப்பது
கவனிக்க வேண்டிய
முக்கிய காரணமாகி .
அதிலிருந்து
தனிப்பட்டு
வேடிக்கைப் பார்க்க
முடியவில்லை..
இவ்வளவுநாளும்...
இன்னும்
சில நாட்கள்
சூரிய வெப்பம்
வெறுமனே
கவனித்தால் போதும்.
கீழ்ப்படிதலோடு
அவை
வாதம் செய்யாமல்
அழிந்து விடும்.....
புதிதாகும்
எல்லாவற்றையும்
கொண்டாடுகிற
வசந்தகால .
ஆன்மாவை
நேசிக்கின்ற
புற்களின்
முதல் வரவுக்கு இனி
எந்த வரைமுறையும்
கிடையாது...
உறைபனிக் கால
சப்பாத்துக்களின்
புரிந்துணர்வோடு
பயமின்றிப் பயணம்
செய்து முடித்த
பாதை நிகழ்வுகளின்
ஆவணங்கள்
உருகி மறைந்து
இல்லாமல் போவது
மனதோடு
மட்டுமே
முழுமையாக
எஞ்சியிருக்கட்டும்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 05.03.15