Wednesday, 12 April 2017

போட்டோகிரபி ..முதல் தொகுப்பு படங்கள்



என் விழியில் விழுந்ததை தன் மொழியில் எழுதிவிடும் கையடக்கி மஹாலக்ஸ்மி கலக்ஸ்சி மொபைல் போன் இதுதான். சாம்சும்ங் கலச்சி Y வகை மொபைல்போன். இதுவும் செல்பிதான் ஒருவகையில். மின்சாரமாடிஏற்றி (எலிவேட்டர் ) கண்ணாடியில் விழும் என் விம்பத்தை ஆட்டோமாட்டிக் டைம் செட்டிங்கில் எடுத்த படம் இது. 

                              மஹாலக்ஸ்மி என்பது என் மொபைல் போனுக்கு நான் வைத்துள்ள புனைபெயர். அவனவன் வீட்டுக்குக், காருக்கு,மோட்டார் சைக்கிளுக்கு, ஏன் சைக்கிளுக்கே பெயர் வைத்து அழைக்கிறாங்கள். அதனால அந்தப் பெயர் அது எடுக்கும் படங்களை அடையாளப்படுத்தும்.

                                         பாலுமகேந்திரா கண்டுபிடித்த எரி நட்சத்திரம் ஷோபாவின் தேவதைகளின் மொழியில் விழி பேசும் முகம் எனக்கு மிகவும் விருப்பம். மஹாலக்ஸ்மி அது தான் ஷோபாவின் சொந்தப் பெயர், ஷோபா நினைவாகவே என்னோட படங்கள் எடுக்கும் இந்த கலக்ஸ்சி போனுக்கு மஹாலக்ஸ்மி என்று புனைபெயர் வைத்திருக்கிறேன்

                                                     ஒரு ஸ்டில் கமரா வேண்டி படம் எடுக்க எப்பவுமே விருப்பம் வருகுதில்லை. காரணம் இந்த மொபைல் போனை பொக்கட்டில் வைச்சுக்கொண்டு திரியலாம். சடக் சடக் என்று சுழண்டு படத்தை எடுத்துப்போட்டு மறுபடியும் பொக்கட்டில் வைச்சுக்கொண்டு திரியலாம்.

                                           " போட்டோகிரபி " எனக்கு அடிப்படையும் தெரியாத ஒரு விசியம். அங்கே இங்கே சுறண்டிப் பார்த்து வியந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஆனால் போட்டோகிரபி ஒன்றும் வானத்தில இருந்து குதிக்கிற மாதிரியான அபூர்வமான நுட்பம் போலத் தெரியவில்லை .

                                                        முன்னம் எல்லாம் ஸ்டில் போடோகிராபர் படம் எடுக்கும்போது கமராவில் கன டெக்னிகல் விசியங்கள் செட் செய்ய வேண்டும் . சில இடங்களில் வெளிச்சமே இருக்காதாம். உண்மையில் அவர்கள் எவளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைக்க அவர்கள் மேல் மதிப்பு அதிகமாகுது.

                                                     இப்ப என்ன மாதிரியும்கோணங்கி மாணங்கிப் படம் எடுத்துப்போட்டும் அதைப் " போட்டோ எடிட்டர் " என்ற ப்ரோகிராமில் ஏற்றி வைச்சு வேண்டிய மாதிரி அதில கலர் தெளித்து ஒளி கொடுத்து பூந்துவிளையாடலாம். அதுவும் சுவாரசியமாத்தான் இருக்கு படங்களை வைச்சு அப்படி நோண்டுவது.






புகைப்படங்கள் உலக அநீதியை உரத்துப் பேசம் ஆளுமை உடையவை . மனிதர்களின் மனசாட்சியை முகத்தில் அடித்து அடிமனதில் உண்மைகளை உலுப்பும் வல்லமை உள்ளவை . சில புகைப்படங்கள் அப்படி உலக வரலாற்றில் எவளவோ விடயங்களைத் திருப்புமுனை ஆக்கிய சம்பவங்கள் இருக்கு . மிக மிக வலுவான செய்திகளை அவை பதிந்து சென்றதெல்லாம் காலத்துக்கு நன்றாகவே தெரியும்

                                              இப்ப விசியத்துக்கு வாறன், நோர்வேயிட்குச் சொந்தமான வடக்கு அத்திலாந்திக் கடலில் உள்ள சிவால்பேர்க் என்ற தீவு மிகவும் இயற்கையான நிலவமைப்பு, கடல்வாழ் உயிர் இனங்களின் வாழ்விடம் என்று அட்டகாசமான தீவு. அந்தத் தீவில் பல்தேசியக் கொம்பனிகள் கனியவளங்களங்களை நிலத்தடியில் இருந்து எடுக்க சுரங்கம் அமைக்கிறார்கள்.

                                                    இந்த நிலத்தடி கனியவளச் சுரங்கச் சுறண்டல் எப்படி அந்தத் தீவின் வெப்ப நிலையை அதிகரித்து பனிப் பாறைகளை உருக வைத்து ஏறக்குறைய வருடம் முழுவதும் உறைபனியில் இருக்கும் அந்தத் தீவை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருப்பது போன்ற ஆராய்ச்சிப் புள்ளிவிபரங்களை கிரீன்பீஸ் என்ற சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் அமைப்பும் சொல்லுறார்கள்.

                                                                 அது அந்தத் தீவின் இயற்கையான தாவர,விலங்கு,கடலினங்களின் இயற்கைச் சமநிலையைக் குழப்புவதை நோர்வே மக்களிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த புகைப்படக்கலைஞர்கள் அந்தத் தீவுக்குப் போய் மிக மிக அரிதான அதேநேரம் போட்டோகிராபிக் கலையம்சமுடன் எடுத்த படங்களை மக்கள் அதிகம் நடமாடும் ஒஸ்லோவின் ஒரு பகுதியில் தெருவெல்லாம் காட்சிக்கு வைத்திருகிறார்கள்.

                                                      நிறைய மக்கள் அந்தப் புகைபடங்களின் பாதிப்பில் முகங்களை இறுக்கிக்கொண்டு போவது தெரிந்தது. அப்புறம் பல்தேசியக் கொம்பனிகள் என்ன செய்கிறார்கள் என்றால், அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை..என்ன வழமைபோல தொடர்ந்தும் கிண்டிச் சுரண்டி சுற்றுச் சுழல் சமநிலையைக் குழப்பிக்கொண்டிருப்பார்கள்என்று நினைக்கிறேன்.

                                                   எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விழிப்புணர்வில் பங்குபற்றி மஹாலக்ஷ்மியோடு போய் படங்கள் எடுக்க விருப்பம் . அப்பிடியே அந்த சிவால்பேர்க் என்ற தீவு அழிவதுக்கு முன்னர் அதைப் பார்த்தது போலவும் இருக்கும் . அது அழிந்தபின் " என்ன சீவியமடா இது " என்று சொல்லிப் பயன் இல்லையே,,இல்லையா 

சொல்லுங்க பார்ப்பம் ? 






வாழ்வின் மிகப்பெரிய கொடுப்பினைகளை இன்டர்நெட் இணைய வலைகளில் நுழைந்து உத்தரவாதமிழந்து களைத்துப்போய் இயல்பாக சுற்றுச் சூழலில் தேடும் மனிதர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்கள். 

                                                          வெய்யில் அவசரப்படாமல் உலாவித்திரிந்த சில வாரங்களின் முன் கோடையைக் கொண்டாட்டும் உத்தேசங்களில் மனிதர்கள் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்து ஆசுவாசமாய் இயற்கையோடு ஒன்றிப்போன நேரம் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை இன்னும் இன்னும் புத்துணர்வு தருகிறது .



மிகவும் உற்சாகமான ஒருநாளின் முடிவில் அமைதியாகப் பேசுவதுக்குக் கிடைக்கும் அற்ப நேரத்திலும் நினைவுகள் வெற்றிடமாகலாம். நேற்றுக்கும் நாளைக்கும் இடையில் அந்தரமாகவே தொங்கிக்கொண்டிருக்கும் இன்றைய தினம். அதில் என்னவெல்லாம் நமக்குத் தெரியாமல் நம்முன்னே சடுதியாக விரிந்துவிட அதில் அள்ளிக்கொள்ள முடிந்ததெல்லாம் பொக்கிஷங்கள் . 


                                                                மஹால்ட்சுமிக்குப் பிடித்த ஒரு கோணத்தில் ஏரிக்கரையில் ரெண்டு சைக்கிலோடிகள் தீர்த்தக்கரையின் கருங்கல்லுப் படிகளில் அமர்ந்து இதுவரையும் பேசிமுடிக்காத ஒரு கதைக்கு மிகவும் கச்சிதமான ஒரு முடிவு கண்டிருக்கலாம்.. அல்லது எதுவுமே கதைக்காமல் அலைகளோடும் திசை வழியில் எண்ணத்தையும் ஓடவிட்டு அமைதியாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்.





                                                        நீர்த்தெறிப்புகளும் ஒரு நிலையான செக்கனில் சிலையாகலாம் போலிருக்கு. அதிலும் அந்த உருவகங்கள் சிலுப்பிக்கொண்டு வாற பெண்கள் போலிருக்க பார்க்கப்படுவதில் உருவங்கள் ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கும் போது பிரித்தறிய முடிவதில்லை. நேரம் என்பதே ஒவ்வொரு மில்லி செக்கனிலும் பிரேம் போலவே அசைகிறது என்கிறார்கள் மொடேர்ன் குவாண்டம் பிசிக்ஸ் அறிவியலில். 

                                                            காலமும் நேரமும் இடமும் ஒருங்கிணையும் ஒரு தருணத்தில் நாங்கள் பார்க்கும் எல்லாமே ஒரே ஒரு பொருளின் பல்வேறு வடிவங்களை மூளை ஏற்கனவே அனுபவங்களில் பதிந்து வைத்திருப்பதை இன்னுமொருமுறை விரித்துவிடும் ஒருவித மயக்கநிலை என்று ரமண மஹரிஷி வேற சொல்லி இருக்கிறார்.
.





பாலங்களையும் கலை ரசனையோடு மொடேர்ன் ஆர்ட் போல வடிவமைத்து இருக்கிறார்கள் ஒஸ்லோவில். நடந்து கடக்கும் போது நின்று நிதானித்து இரசிக்க நேரமில்லாத நவீன நகரத்தில் கோடைகாலம் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டு நாலு இடத்தை நடந்தே பார்ப்பதில் வாழ்வின் சில பிரட்டிப் பார்க்க முடியாத பக்கங்களை முடிந்தளவு தேடியடைய வேண்டியிருக்கு. 


                                                            ஒரு நடை பாலத்தில் நின்று வேகமாக ஓடித்தள்ளும் வாகனங்களை வேடிக்கை பார்க்க காலம் எவ்வளவு அவதியாக அதிசயங்களைப் பின்தள்ளிக்கொண்டே முன்னேறுவது ஏதோ ஒருவிதத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியோடு ஒட்ட முடியாத இயலாமையையும் உணரமுடிகிறது 




நாங்கள் பார்த்து ரசிக்கும் இந்த உலகத்துக்கு உண்மையில் நிறமில்லை என்கிறது அறிவியல். ஏழு வர்ண சூரியஒளி பொருட்களில் பட்டுத் தெறிக்கும் போது சில நிறங்கள் உறிஞ்சப்பட சில நிறங்கள் வடிகட்டப்பட மிச்சம் மிகுதிதான் ஒருநிறமாகக் கண்களுக்கு மூளையில் இருந்து கடத்தப்படும் செய்திகள் வழியாக நாங்கள் நிறங்களை அடையாளப்படுத்துகிறோம் என்றும் சொல்கிறது அறிவியல். 

                                                      எப்படியோ நிறங்கள்இல்லாத ஒரு உலகம் சுவாரசியமா இருக்குமா என்பது ஒரு சந்தேகம்தான். நிறங்கள் ஒரு காட்சியை அழமாக்கி அகலப்படுத்திவிடும் அதிசயத்தை இயற்கைஇன்னமும் தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கு. அப்பப்ப மகாலக்ஸ்மி அந்த ஜவ்வன ஜொலிப்பின்சில சந்தோஷதருணங்களைத் தேடி எடுத்து எனக்கும் தந்துவிடுவாள்




                                                      சூடான கோப்பி ,அல்லது சில்லென்ற குளிர்பானம் , லயித்துப் போக ஒரு புத்தகம் அல்லது நாலு கதையோடு காலத்தை இழுக்க நண்பர்கள் . பின்மாலை உணவு அல்லது நினைவுகளைத் தின்னும் தனிமை. இப்படித்தான் மனிதர்கள் ஒரு வெய்யில் நாளில் வீதியோர உணவகங்களில் சங்கமிக்கிறார்கள் . 

                                                        மரங்களின் நிழலில் ,மயில் இறகுக் காற்றின் சிநேகத்தில் ஒரு சந்தோசம் கிடைக்குமென்றால் அதட்கு மேலே ஜோசிக்க என்ன வேண்டும் இந்த அவசர உலகத்தில். சமாந்தரமாக அவதிகளில அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் .சின்ன இடைவெளிகளில் பெரிய அனுபவங்களை எதிர்பாராமல்த் தரலாம் திறந்த வெளிகள் 




பழங்களின் நிறங்கள் மரங்களில் இருப்பதை விடவும் ஒரு மேசையில் போட்டொகிராபிக்கு அமர்க்களமாக இருக்கு பழங்களை மட்டுமே உண்டுகொண்டு உயிர்வாழும் மனிதர்கள் நோர்வேயில் இருக்கிறார்கள் அவர்களை புரூட்ஸ்டேரியன்ஸ் என்று சொல்லுவார்கள்.அவர்கள் மரத்தில் பழங்கள் பிடிங்கியும் உண்ணமாடார்கள் மரமே கனிந்து விழுத்திய பழங்களைத்தான் உண்பார்கள். 


                                                   எனக்கெல்லாம் அவ்வளவு தவம் போன்ற கொடுப்பினைகள் இல்லை. இன்றைக்கு ட்ரோபிக்கள் புரூட் சலாட், அப்புறம் ஒரு தட்டு ஸ்ட்ரோபெர்ரி . கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு சாப்பிடும் போதே...நீங்களும் வாங்க சாப்பிடலாம்




                                                       வாவென்று எப்போதாவது சில நாட்களில் தான் வசந்தகாலம் வெளியே அழைக்குது . காலாற நடந்து கடக்கும் நடைபாதையின் ஒருபக்கம் நதி வழிந்தோடிக் கைபிடித்து நடக்கும். நிழல்தரு மரங்களின் குளிர்மையை வேண்டிக்கொண்டு முகமெல்லாம் வெய்யிலின் விசாரிப்புகளோடு மையில் கணக்கில் நடந்தாலும் அலுப்புத் தெரிவதில்லை 

                                             கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த இடம் அலஸ்ஸ்சாண்டர்செல்லான்பிளாஸ் .இந்த இடத்த்தில் தான் நோர்வேயின் புகழ்பெற்ற பாடகர். கிட்டார் வாத்திய கலைஞர் லில்லி பியோன் நெல்சன் என்பவர் பிறந்தார்.




அண்மையில் ஒரு வெயில் நாள் சொங்க்ஸ்வான் எரிக்கரையைச் சுற்றி நடந்துகொண்டிருந்தபோது ஒரு வயதானவர் புதர்களுக்கு நடுவே கிறிஸ்மஸ்தாத்தா போல வெள்ளைத் தாடியை நீவி விட்டபடி குனிந்து ஆர்வமாக பூக்களை விசாரித்துக்கொண்டிருந்தார்.

                                          பார்க்க மூலிகை ஆராச்சி செய்யும் நாட்டு வைத்தியர்போல இருந்தார். கொஞ்சம் கவனித்துப் பார்க்க கழுத்தில கமரா கொழுவிக்கொண்டு இருந்தது அவர் ஒரு " நேச்சர்போட்டோகிராபர்" போல இருக்க அருகில் சென்று கதைத்தேன். உண்மையில் அவர் ஒரு அருமையான புகைப்படக்கலை தெரிந்த ஒருவர் என்று அந்த சின்ன உரையாடலில் அறியமுடிந்தது.
                                       " வயது அளவுக்கு அதிகமாக காவு எடுத்து வயதை விலை பேசி வேண்டினாலும் காடுகள்தான் தன்னோட நெருங்கிய சொத்துப்பத்து சேர்த்து வைத்த குடும்பம் " என்று சொன்னார் .
                                             " இயற்கையை எப்படிப் படம் எடுப்பது "
                                                   என்று பத்திக் குச்சி பத்த வைத்த மாதிரிக் கேட்டேன் . கொஞ்சம் ஜோசிதுப்போட்டு என்னோட தீவட்டித் திருடன் பழஞ்சோறு கட்டு சாதத்தை அகப்பட்ட நேரம் அவிழ்த முகத்தை சந்தேகமாகப் பார்த்தார் ,,பார்த்திட்டு
                                                     " இயற்கையோடு முதலில் பேசிவிடு,,பிறகு உள்வாங்கி உடுருவி அதன் கிலேசங்களை நீயாகத் தேடத் தேவையில்லை அதுவே உனக்கு வரப்பிரசாதங்கள் அள்ளிக்கொண்டு வந்து கொடுக்கும் "
                                                       என்று இலக்கண சுத்தமான நோர்க்ஸ்மொழியில் சொன்னார்.. இப்படி ஒருவரைப் படம் எடுக்கும் சந்தர்ப்பம் என் மகாலக்ஸ்மிககும் கிடைத்தது ஒரு அதிசயம்...



இன்று ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள ஒரு புறநகரத்துக்கு போன இடத்தில் பகலுணவுக்கு இந்த ரெஸ்டாரெண்டில் படி அளக்க வேண்டி இருந்தது .போகும் போதே நோர்வேயையும் நோர்வே மக்களையும் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு போனேன் .

                                                      ஆனாலும் நோர்வே அழகாயும் அமைதியாகவும் இருந்தது. மனதின் போக்கை எப்பவும் உன் காழ்ப்புணர்ச்சிகளின் போக்கில் விட்டு விடாதே என்ற என் குருநாதர் ரமணமகரிஷி சொன்னதுதான் நினைவு வந்தது 
ஒரு வெய்யில் நாளில் நீல வானம், மெல்லெனச் சூடான தண்ணி, அலைந்துகொண்டிருக்கும் அலைகள்,தலை தடவி விசாரிக்கும் தென்றல் காற்று, விரலிடுக்குகளிலும் பாதங்களிலும் ஒட்டிக்கொள்ளும் மணல். ரகசியாமான வியர்வை வாசம், குழந்தைகளின் மொழி புரியாத குதூகலம், பேசுவதுக்கு நண்பர்கள், சொங்க்ஸ்வான் ஏரிக்கரையில் மகாலக்ஸ்மியின் கண்களுக்கு இதைவிட வேறென்ன விருந்து வேண்டும்.




Tuesday, 11 April 2017

வரிகள் கொடுத்த வலிகள்...

வரலாறு ஒருபக்கச் சார்பாகவே   எவ்ளவோ  பொய்களுக்கு வடிவம் கொடுத்த சம்பவங்களால்  அவநம்பிக்கைகளுக்காண  அத்திவாரமே ஆடினபின்னும் எனக்கும் நான் பிறந்த நகரத்துக்குமிடையில்  நல்ல உறவுக்கான தேடலிருக்கு , அது என் சின்ன வயது  ஆத்மாவை  அறிமுகம் செய்தது .  மனம்  ஏதோ ஒரு மூலையில்  பிடிவாதத்தால் அழிந்துகொண்டிருக்கும்  வாழ்க்கையை  நம்பி போய்க்கொண்டிருக்கு என்கிறது.  இதனால் உறுதிமொழிகள் ஒருநாள்  சரியாகக் காயப்பட்டு  நலிந்து போகலாமென்று தெரிந்திருந்தும்  உறைபனியிலும் நெருப்பில் நடக்கவைக்கிறது இன்னும் அந்த நகரத்தின் நினைவுகள் . பத்திரமாய்  உயிர் வாழ்றதை காட்டிக்கொடுக்கும் அந்த அனுபவமும் ,  தோல்விகள் என்னை அடிக்கடி   சுவாசிப்பதால் நானே ஒருநாள் காணாமல் போனாலும்  இடையில்அகப்பட்ட வார்தைகளையாவது மன்னித்து விடு. என் சினேகிதமான  பழைய நகரமே !


..                                                               
அன்புக்குரிய நகரமே

நீ நலமா ?
நான் இங்கே நன்றாகவேயில்லை!
நேற்றுத்தான் 
உன் 
இன்றைய முகம் பார்த்தேன்.

அடங்கமறுக்கும் சில
ஆதங்கங்களைச் சொல்லுறேன்
கோவிக்காதேடி...
உன் புதுவிதமான பூரிப்பில் 
அதீத அலங்காரங்கள்
மறைமுகமான
ஆக்கிரமிப்புகள் போலவேயிருக்கு !
ஒரு
தியாக வேள்விக்கு 
அரைவாசித் தலைமுறையே
ஆகுதியாக்கிய
குத்திக்கால் அடையாளங்களை
ரகசியமாக அளித்தேவிட்டாய் !
இரவும் பகலும் நடந்தேகடந்த
புழுதிப் பாதையெல்லாம் தார் ஊற்றி
உன் மடியில்
கட்டிவைத்திருக்கும்
மனிதர்களின் எண்ணிகையை விடவும்
உறுமி மிரட்டிக்கொண்டிருந்த
இருசக்கர வண்டிகள்
அரியண்டமாய்த்தான் இருந்தது !
நாங்கள் வருவோம் என்று
மை போட்டு மழுப்பிய
உல்லாசக் கொண்டாட்டப்
பயண ஏற்பாடுகளை எதற்க்குச்
செய்து வைத்திருக்கிறாய் ?
நாத வினோதங்களிலும்
அதன் நளினசந்தோசங்களிலும்
சன்னங்கள் பாய்ந்த சத்தங்களை
நீ 
மறப்பாய் நாங்கள் மறக்கமாட்டோம் !
சங்கு ஊதும் சுடலையாவது 
அங்கே முடியட்டும்
என்று நினைத்ததெல்லாம் வீண்!
உன்
விழலுக்கு இறைக்கும்
அவசரங்களில் ஆத்மாவை நெரிக்கவிட்டு
படலைக்கு வரவே பிடிக்கவில்லை.
கொஞ்சம் அலுவல் கிடக்கு 
அடுத்த மடலில் சந்திக்கிறேன்.





கிறங்கவைத்த நகரமே

நீ நலமா ?

நானிங்கே உறங்காதபடி,
சில நாட்கள்முன்தான்
உன்
ஆட்டத்தையும் பாட்டத்தையும்
உன்பாடல்களையும் பார்த்தேன்

உனக்கு என்னத்துக்கு
இந்த சொத்துப்பத்து இல்லாத
குத்துப்பாட்டுக்கள்?
உன் இடுப்பு
மாவிலங்க மர உரல்
உன் தோள்கள் மலைகள் என்ற
மஹாகவியை ஏன் மறந்தாய் ?
சொல்லடி
உனக்குக் கொழுப்பெடுத்த நேரமெல்லாம்
அரைச்சுத் தீத்திய 
இலுப்பைப்பூக்கள் நினைவே இல்லையா?
சிலநேரமுன்
இயலாமையில் நியாயம் இருக்கு,
இளவேனிலே உன் மனவானில்
இதமாகவே சதிராடிய 
சில்லையூர் செல்வமும் நம்மிடமில்லை,
வாவென்று சொன்னதும் தமிழே
வாசலில் வந்ததும் தமிழே
நீரோடுநிலமெங்கும் பச்சை என்ற
புதுவை புதைந்தே போனார்,
உன்
கண்ணீர் கரைபுரள 
பேனாவில் ஒற்றி எடுத்துக்
கவிதை எழுதிய
ஆதவனும் சேரனும் செழியனும் வியேந்திரனும்
இங்காலப்பக்கம் தான்
வரிச்சுமட்டைவேலிகளைத் தாண்டி
ஓடிவந்துவிட்டார்கள்,
கொஞ்சமாவது ஜோசிதுப்பாரடி மவளே
சொல்லி மாளாத வலியில் 
சந்தி எல்லாம் சிரிக்கும் 
இந்தச் சந்தங்கள் உனக்குத் தேவைதானா?
எல்லிப்போல சோலி இருக்கு
அடுத்த மடலில்
சந்திக்கிறேன்.





நேசித்த நகரமே

நீ நலமா ?
நான் இங்கே ஜோசித்தபடி,
நேற்று முன்தினம்தான்
உன்
தோற்றுப்போன அடையாளம் பார்த்தேன்

விழுதுகளில்
தொங்கி ஊஞ்சல் ஆடும்
மண்டைப் பழுதுகளுக்கு 
நீ இனியெப்போதுமே
வேர்களின் விலாசம் சொல்லிக்கொடுக்கும்
விபரங்களோ அதிலில்லை
தோற்றுப்போனவர்கள்
தேரோடிய வீதியெல்லாம்
நீ
வேற்றுமனிதர்களோடு
விருப்பமில்லாமல் சல்லாபிக்கிறாய்,
நேசமான குங்குமமும்
வாச சந்தனத்தையும்
நீ மறந்தே மறந்துபோய்விட்டாய்
உன்
முக்காடு போட்ட அமைதி 
சந்தேகங்களைக் கிளப்பினாலும்
விரும்பியே ரசிக்கும்படியிருக்கு
ஓட்டுப் பொட்டும்
ஒய்யாரக் கொண்டையும் நளினமாயிருக்கு
அதையும் சொல்லுறேன்
இங்கிருந்து வெறுக்கவில்லை
உன் 
இலட்சினைகள் மிக இங்கிதமாகவிருக்கு
ஆனால் உன்னிடம்
இலட்சியங்கள்தான் இனியெப்போதுமில்லை
சரி விடு சோலைமலரே
கொஞ்சம் வேலை இருக்கு
இன்னொருமடலில்
சந்திக்கிறேன்.





பெரிதாகிய நகரமே

நீ நலமா ?
நானிங்கே உன்னைப் 
புரியமுடியாமலேயிருக்கிறேன்,
எல்லா வளர்ச்சியில்
நீ

மேலைநாட்ட்டுடன்
போட்டியாக மூச்சுமுட்டிமோதி 
முன்னோக்கியே முன்னேறியிருக்கிறாய்,
அனைத்துலக
அன்பான வாழ்த்துக்கள்!
ருதுவாகிய
உன்னை இருட்டுக்குள்ளும்
சுருட்டுக் கொட்டிலுக்குள்ளுமே
இருக்கச் சொன்னதேயில்லை,!
ஆனால்
நெருப்புக்குள் நடந்து
நெஞ்சமெல்லாம் உரமேற்றி
விருப்பு வெறுப்புகளை
வாசலோடு உதறிவிட்டு
விழ்ந்து போனவர்களின் 
வீரத்தையெல்லாம்
ஒரு செருப்புக்குக் கொடுக்கும்
மரியாதையையாக நினைத்தாவது
பின்னேர மழையில்
இந்நேரம் பிறந்து தொலைத்த
திசையறியாப் பிள்ளைகளுக்கு 
இருத்தி வைத்துச் சொல்லிக்கொடுடி !
இல்லையென்றால்
எடுப்புச் செருக்கில்
நீயும் வெளிய சிலுப்புவாய்
புற்றெடுத்துப் பரவி
உள்ளேயெல்லாம் உருக்குலைந்து போவாய்
கொஞ்சம்போல 
அலுப்புகள் இங்கிருக்கு
இன்னொரு விழப்பமான மடலில்
சந்திக்கிறேன்.






அறிவான நகரமே

எப்படி நலமாய் இருக்கிறாயா?
நானோ
மோனவெறியில் எழுதுகிறேன் !
விரல்கள் பிடித்து
நவராத்திரி விஜயதசமியில்

ஏடு தொடக்கிய உன் பிள்ளைகள்
இங்கேயும்
அணையாத அறிவுச்சுடரை
அந்நிய நாட்டிலும்
அழுத்தப்பதிவு செய்திருக்கிறார்கள்!
இப்ப உன் பக்கம் 
என்னமாதிரிச் சிலமன் ?
பிய்ந்து போன வேட்டியில்
அப்பாவும் 
அதிகாலை எழுப்பிய அம்மாவும்
தோட்டக் காணி பூமியையும்
அடக்குக்குத் தரகுகொடுத்துப்
விகசித்துப் பசியிருந்து
படிக்க வைத்த
போட்டிப் பரீட்ட்சைகளின்
பூரிப்பு அடைந்த
கல்வியின் காலடி ஓசைகள்
இப்பவும் அங்கே கேட்குதா ?
தயவுசெய்து கொஞ்சமாவது
பொறுப்பெடுத்து 
புதியதலைமுறைக்குப் புரியவையடி,
இனியுமங்கே வந்து
இன்னொரு இயக்கம் தொடக்கி
இருக்கிற இருப்பையும் 
அழிக்கவே முடியாது !
முன்னம்காலை ஊன்றி வைத்து
எடுத்தபாதையில் அறிவுதான்
அடுத்த அணுவாயுதம் !
அதன் உலகளவு விசாலம் தான்
இனி எங்களுக்கு இன்னொரு விலாசம் !
நிறையவே கிலேசமாயிருக்கு
இன்னொரு மடலில் 
சந்திக்கிறேன்....






வெளிச்சமான நகரமே

இப்போது எப்படியிருக்கிறாய்?
நானோ
ஒளிச்சு இருந்து எழுதுகிறேன்,
சென்ற கிழமையுன்
சம்சாரம் நிறைந்த

மின்சார இறைப்புக்களைப் பார்த்தேனடி,
நீயோ
அளவுக்குஅதிகமாகக்
கண் கூசவைத்து ஜொலிக்கிறாய்,
தரவைக்கடல் சதுப்பில்
நாங்கள் திரத்திய
மெதேன் வாயு வாய்விட்ட
கொள்ளிவால் பேய்களை
நீயோ
முற்றாகமறந்துவிட்டாய் போலிருக்கே,
அரிக்கன்லாம்பிலும்
உப்பு விளக்கிலும்
மெழுகுதிரிகளிலும்
நாங்கள் ஒரு விடிவெள்ளியே
தேடி எடுக்க நினைத்தோம்
அதுனக்குத் தெரியுமா?
தெரியாப் பருவத்தில்
பவுர்ணமிப் பால்நிலவு
எந்தவொரு திட்டமுமில்லாமல்
முற்றத்தில் பாய் விரித்தது அறிவாயா?
இன்றையதினமுன்
அபரிமிதமான மின்ஒளி விழிகளில் 
உனக்கே உனக்கான
ஏக்கங்கள் இல்லவே இல்லை,
உன் வீக்கங்கள்தான் 
வெளிப்படையாகவே தெரிகிறது!
எதையோ பரவவிட்டு 
எதை எல்லாமோ தவறவிட்டு
நீ இப்போது
எந்தப் பாதைக்கும் வழிகாட்டவில்லை
கொழுத்திவிட்ட சொர்க்கப்பானைகளில்
உன்னோட
கர்பப்பையில் நெருக்கமானவர்கள்
இருட்டோடு போய்விட்டார்கள்
இனிச் சொல்ல என்னவிருக்கு
விருப்புவெறுப்புஇல்லாமல்
இன்னொரு மடலில் 
சந்திக்கிறேன்.....






நேசமான நகரமே

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
உன்
வற்றாத ஜீவாநதியின்
வாசனைகளோடு எழுதுகிறேன்,
உன்

நளினமான நடிப்பில்
சிதிலமான போக்கேபிடிபடுகுதில்லை,
இப்பெல்லாம்
காசோடு வருபவர்களைத்தானே
நீயும் உன் எடுபிடிகளும் 
கணக்கில் எடுக்கிரார்கலாமே ?
கடன்எடுத்து வாறவர்களையும்
மண்டியிட்டு வரவேற்று
உடன் விழுந்து வணங்குகிறாயாமே
என்னதான் 
நடந்தது உனக்கு?
வேரோடு விடுதலையைத்
தேரோடும் வீதியில்
எழுதியவர்கள் இனியில்லையென்ற
திமிரா உனக்கு ?
பிச்சை எடுத்தாலும்
எச்சில் இலை கழுவாத இனம்
அது உனக்கு எப்போது மறந்துபோனது?
உன்
வரலாற்று வெகுமதிக்குப்
பணம்தான் பெறுமதி என்றால்
பேசாமல்
நீயும் இங்கே ஓடிவந்துவிடு,
நானுக்குக்
கழுவும் வேலை
நல்லாவே எடுத்துத்தாறேன்,
வெள்ளையாகவே பின்னி எடுத்து
உரப்பையில் நாணயத்தை
முன்னெப்போதும் இல்லாதவாறு
அள்ளிக்கட்டி கொள்ளை அழகு பார்க்கலாம்,
சரி வாவேன் 
அரிசுக் கொட்டிக்கொண்டு
அதுக்குதானே ஆசைப்படுகிறாய்
வா வந்துபார் உனக்கும் வலி தெரியும்,
நாலுநாளா 
தோசைக்கு உறவைத்த மா புளிக்கிறது
இன்னொருநாள்
ஆசையோடு எழுதுகிறேன்..




வாஞ்சையுள்ள  நகரமே 
நலமாக  இருக்கிறியா ?
நானிங்கே 
காஞ்சுபோய்க்கொண்டிருக்கிறேன் !
ஒரு காலத்தில் 
புதினப்   புனைவுகளையும் 
யதார்த்த உரித்தெடுப்புக்களையும் 
 உயிரோடுறவாடக் கொடுத்த  
புத்தகங்களை 
அறிமுகம் செய்து வைத்தாய்,
ரசியாவின் 
தொலைதூர  சைபீரியாவும்  
சிங்கிஸ் ஜமைத்தாவின் 
ஸ்டெப்பி வானாந்தர  வெளியும்  
உன் தந்த  கதைகளில் எழுந்து வந்தது, 
தனித்தே  திரிந்த நாட்களில் 
இலக்கியத்தளமென்று   
தர்க்கரீதியாக  எதுவுமேயிருந்ததில்லை . 
தொட்டாச்சிணுங்கிகள்  கிடந்த . 
தோட்ட வெளியே 
நம்பிக்கையற்ற  கவலைபோல 
ஒருநாளின் பின்மாலையில் 
ஊரோடு ஒத்தோடி  வெளியேற்றவைத்தது.  
நானும்தான்  இப்போது 
என்னவெல்லாமோ இங்கிருந்து
எழுதிக்கொண்டிருக்கிறேன்
உன்
முகவுரையை
வடதுருவ  நாடொன்றின்  குளிரோடு

வரைய ஆரம்பித்த  போது

புரியாமலே போனதடி 

அதிலதான்

தெருவொழுங்கை  செம்மண்  புழுதி படிந்த

என்வாழ்கைப் புத்தகத்தின்

முடிவுரையையும்

சொல்ல வேண்டிவரும்   என்று
நம்பிக்கையோடு  இருடி 
நாளைக்கு விடியக்  காத்தால 
இன்னுமொரு  கடிதத்தில் 
சந்திக்கிறேன் 



எடுத்துக்கொடுத்த நகரமே

எப்படிஇருக்கிறாய்?

கொடுத்து வைத்தது

அவளவுதான் எண்டு

அமைதியாக இங்கிருக்கிறேன்,

உனக்குத் தெரியுமா

இலங்கை வானொலிதான்
இல்லாததைதையும்
பொல்லாதையையும்
ஒருகாலத்தில் எமன் எமக்கெனவேயென்று
இட்டுக் கட்டியதை ?
பின்மாலைச் செய்திகளில்
சட்சொருபவதிநாதன்
ஊரண்டங்குச் சட்டத்தை
உறுதிப்படுத்தியதை ?
ஈஸ்வரசர்மா
லங்காபுவத்தின்
ஊதுகுழலாகி ஊதியத்தை ?
மயில்வாகனத்தின்
அகால மரண அறிவித்தல்களை ?
அப்போதும்
கறல் பிடித்தஆயுதங்களோடு
வீரமுள்ள இளையவர்கள்
அமைதி படிந்த இரவில்
வீதிகளில் சண்டைக்காக நடமாடினார்கள்,
சிலநேரம்
சடசடசட என்று சன்னங்கள்பாயும்,
காலையில்
சாலைஓரம் ஒரு போராளியின்முகத்தில்
இலையான்கள் மொய்க்கும்,
அவர்களுக்கென்று
நடுகல்லோ நினைவுத்துயிலில்மோ
நீ விரும்பி வைத்ததில்லை,
சரி விடு
வரலாறு உன் வலப்பக்கம் இருந்ததால் 
உன் 
எடுபிடிகள் மட்டும் முதன்மையாகினார்கள்,
அவர்களைத்தான் 
இங்கேயும் கொடிபிடிக்க வைத்ததும் 
எல்லாம் தெரியும்
சொல்லவேண்டிய மிச்சத்தை
இன்னொரு ஆறாத மடலில்
எழுதுகிறேன்...