Wednesday 12 April 2017

போட்டோகிரபி ..முதல் தொகுப்பு படங்கள்



என் விழியில் விழுந்ததை தன் மொழியில் எழுதிவிடும் கையடக்கி மஹாலக்ஸ்மி கலக்ஸ்சி மொபைல் போன் இதுதான். சாம்சும்ங் கலச்சி Y வகை மொபைல்போன். இதுவும் செல்பிதான் ஒருவகையில். மின்சாரமாடிஏற்றி (எலிவேட்டர் ) கண்ணாடியில் விழும் என் விம்பத்தை ஆட்டோமாட்டிக் டைம் செட்டிங்கில் எடுத்த படம் இது. 

                              மஹாலக்ஸ்மி என்பது என் மொபைல் போனுக்கு நான் வைத்துள்ள புனைபெயர். அவனவன் வீட்டுக்குக், காருக்கு,மோட்டார் சைக்கிளுக்கு, ஏன் சைக்கிளுக்கே பெயர் வைத்து அழைக்கிறாங்கள். அதனால அந்தப் பெயர் அது எடுக்கும் படங்களை அடையாளப்படுத்தும்.

                                         பாலுமகேந்திரா கண்டுபிடித்த எரி நட்சத்திரம் ஷோபாவின் தேவதைகளின் மொழியில் விழி பேசும் முகம் எனக்கு மிகவும் விருப்பம். மஹாலக்ஸ்மி அது தான் ஷோபாவின் சொந்தப் பெயர், ஷோபா நினைவாகவே என்னோட படங்கள் எடுக்கும் இந்த கலக்ஸ்சி போனுக்கு மஹாலக்ஸ்மி என்று புனைபெயர் வைத்திருக்கிறேன்

                                                     ஒரு ஸ்டில் கமரா வேண்டி படம் எடுக்க எப்பவுமே விருப்பம் வருகுதில்லை. காரணம் இந்த மொபைல் போனை பொக்கட்டில் வைச்சுக்கொண்டு திரியலாம். சடக் சடக் என்று சுழண்டு படத்தை எடுத்துப்போட்டு மறுபடியும் பொக்கட்டில் வைச்சுக்கொண்டு திரியலாம்.

                                           " போட்டோகிரபி " எனக்கு அடிப்படையும் தெரியாத ஒரு விசியம். அங்கே இங்கே சுறண்டிப் பார்த்து வியந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஆனால் போட்டோகிரபி ஒன்றும் வானத்தில இருந்து குதிக்கிற மாதிரியான அபூர்வமான நுட்பம் போலத் தெரியவில்லை .

                                                        முன்னம் எல்லாம் ஸ்டில் போடோகிராபர் படம் எடுக்கும்போது கமராவில் கன டெக்னிகல் விசியங்கள் செட் செய்ய வேண்டும் . சில இடங்களில் வெளிச்சமே இருக்காதாம். உண்மையில் அவர்கள் எவளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைக்க அவர்கள் மேல் மதிப்பு அதிகமாகுது.

                                                     இப்ப என்ன மாதிரியும்கோணங்கி மாணங்கிப் படம் எடுத்துப்போட்டும் அதைப் " போட்டோ எடிட்டர் " என்ற ப்ரோகிராமில் ஏற்றி வைச்சு வேண்டிய மாதிரி அதில கலர் தெளித்து ஒளி கொடுத்து பூந்துவிளையாடலாம். அதுவும் சுவாரசியமாத்தான் இருக்கு படங்களை வைச்சு அப்படி நோண்டுவது.






புகைப்படங்கள் உலக அநீதியை உரத்துப் பேசம் ஆளுமை உடையவை . மனிதர்களின் மனசாட்சியை முகத்தில் அடித்து அடிமனதில் உண்மைகளை உலுப்பும் வல்லமை உள்ளவை . சில புகைப்படங்கள் அப்படி உலக வரலாற்றில் எவளவோ விடயங்களைத் திருப்புமுனை ஆக்கிய சம்பவங்கள் இருக்கு . மிக மிக வலுவான செய்திகளை அவை பதிந்து சென்றதெல்லாம் காலத்துக்கு நன்றாகவே தெரியும்

                                              இப்ப விசியத்துக்கு வாறன், நோர்வேயிட்குச் சொந்தமான வடக்கு அத்திலாந்திக் கடலில் உள்ள சிவால்பேர்க் என்ற தீவு மிகவும் இயற்கையான நிலவமைப்பு, கடல்வாழ் உயிர் இனங்களின் வாழ்விடம் என்று அட்டகாசமான தீவு. அந்தத் தீவில் பல்தேசியக் கொம்பனிகள் கனியவளங்களங்களை நிலத்தடியில் இருந்து எடுக்க சுரங்கம் அமைக்கிறார்கள்.

                                                    இந்த நிலத்தடி கனியவளச் சுரங்கச் சுறண்டல் எப்படி அந்தத் தீவின் வெப்ப நிலையை அதிகரித்து பனிப் பாறைகளை உருக வைத்து ஏறக்குறைய வருடம் முழுவதும் உறைபனியில் இருக்கும் அந்தத் தீவை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருப்பது போன்ற ஆராய்ச்சிப் புள்ளிவிபரங்களை கிரீன்பீஸ் என்ற சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் அமைப்பும் சொல்லுறார்கள்.

                                                                 அது அந்தத் தீவின் இயற்கையான தாவர,விலங்கு,கடலினங்களின் இயற்கைச் சமநிலையைக் குழப்புவதை நோர்வே மக்களிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த புகைப்படக்கலைஞர்கள் அந்தத் தீவுக்குப் போய் மிக மிக அரிதான அதேநேரம் போட்டோகிராபிக் கலையம்சமுடன் எடுத்த படங்களை மக்கள் அதிகம் நடமாடும் ஒஸ்லோவின் ஒரு பகுதியில் தெருவெல்லாம் காட்சிக்கு வைத்திருகிறார்கள்.

                                                      நிறைய மக்கள் அந்தப் புகைபடங்களின் பாதிப்பில் முகங்களை இறுக்கிக்கொண்டு போவது தெரிந்தது. அப்புறம் பல்தேசியக் கொம்பனிகள் என்ன செய்கிறார்கள் என்றால், அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை..என்ன வழமைபோல தொடர்ந்தும் கிண்டிச் சுரண்டி சுற்றுச் சுழல் சமநிலையைக் குழப்பிக்கொண்டிருப்பார்கள்என்று நினைக்கிறேன்.

                                                   எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விழிப்புணர்வில் பங்குபற்றி மஹாலக்ஷ்மியோடு போய் படங்கள் எடுக்க விருப்பம் . அப்பிடியே அந்த சிவால்பேர்க் என்ற தீவு அழிவதுக்கு முன்னர் அதைப் பார்த்தது போலவும் இருக்கும் . அது அழிந்தபின் " என்ன சீவியமடா இது " என்று சொல்லிப் பயன் இல்லையே,,இல்லையா 

சொல்லுங்க பார்ப்பம் ? 






வாழ்வின் மிகப்பெரிய கொடுப்பினைகளை இன்டர்நெட் இணைய வலைகளில் நுழைந்து உத்தரவாதமிழந்து களைத்துப்போய் இயல்பாக சுற்றுச் சூழலில் தேடும் மனிதர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்கள். 

                                                          வெய்யில் அவசரப்படாமல் உலாவித்திரிந்த சில வாரங்களின் முன் கோடையைக் கொண்டாட்டும் உத்தேசங்களில் மனிதர்கள் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்து ஆசுவாசமாய் இயற்கையோடு ஒன்றிப்போன நேரம் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை இன்னும் இன்னும் புத்துணர்வு தருகிறது .



மிகவும் உற்சாகமான ஒருநாளின் முடிவில் அமைதியாகப் பேசுவதுக்குக் கிடைக்கும் அற்ப நேரத்திலும் நினைவுகள் வெற்றிடமாகலாம். நேற்றுக்கும் நாளைக்கும் இடையில் அந்தரமாகவே தொங்கிக்கொண்டிருக்கும் இன்றைய தினம். அதில் என்னவெல்லாம் நமக்குத் தெரியாமல் நம்முன்னே சடுதியாக விரிந்துவிட அதில் அள்ளிக்கொள்ள முடிந்ததெல்லாம் பொக்கிஷங்கள் . 


                                                                மஹால்ட்சுமிக்குப் பிடித்த ஒரு கோணத்தில் ஏரிக்கரையில் ரெண்டு சைக்கிலோடிகள் தீர்த்தக்கரையின் கருங்கல்லுப் படிகளில் அமர்ந்து இதுவரையும் பேசிமுடிக்காத ஒரு கதைக்கு மிகவும் கச்சிதமான ஒரு முடிவு கண்டிருக்கலாம்.. அல்லது எதுவுமே கதைக்காமல் அலைகளோடும் திசை வழியில் எண்ணத்தையும் ஓடவிட்டு அமைதியாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்.





                                                        நீர்த்தெறிப்புகளும் ஒரு நிலையான செக்கனில் சிலையாகலாம் போலிருக்கு. அதிலும் அந்த உருவகங்கள் சிலுப்பிக்கொண்டு வாற பெண்கள் போலிருக்க பார்க்கப்படுவதில் உருவங்கள் ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கும் போது பிரித்தறிய முடிவதில்லை. நேரம் என்பதே ஒவ்வொரு மில்லி செக்கனிலும் பிரேம் போலவே அசைகிறது என்கிறார்கள் மொடேர்ன் குவாண்டம் பிசிக்ஸ் அறிவியலில். 

                                                            காலமும் நேரமும் இடமும் ஒருங்கிணையும் ஒரு தருணத்தில் நாங்கள் பார்க்கும் எல்லாமே ஒரே ஒரு பொருளின் பல்வேறு வடிவங்களை மூளை ஏற்கனவே அனுபவங்களில் பதிந்து வைத்திருப்பதை இன்னுமொருமுறை விரித்துவிடும் ஒருவித மயக்கநிலை என்று ரமண மஹரிஷி வேற சொல்லி இருக்கிறார்.
.





பாலங்களையும் கலை ரசனையோடு மொடேர்ன் ஆர்ட் போல வடிவமைத்து இருக்கிறார்கள் ஒஸ்லோவில். நடந்து கடக்கும் போது நின்று நிதானித்து இரசிக்க நேரமில்லாத நவீன நகரத்தில் கோடைகாலம் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டு நாலு இடத்தை நடந்தே பார்ப்பதில் வாழ்வின் சில பிரட்டிப் பார்க்க முடியாத பக்கங்களை முடிந்தளவு தேடியடைய வேண்டியிருக்கு. 


                                                            ஒரு நடை பாலத்தில் நின்று வேகமாக ஓடித்தள்ளும் வாகனங்களை வேடிக்கை பார்க்க காலம் எவ்வளவு அவதியாக அதிசயங்களைப் பின்தள்ளிக்கொண்டே முன்னேறுவது ஏதோ ஒருவிதத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியோடு ஒட்ட முடியாத இயலாமையையும் உணரமுடிகிறது 




நாங்கள் பார்த்து ரசிக்கும் இந்த உலகத்துக்கு உண்மையில் நிறமில்லை என்கிறது அறிவியல். ஏழு வர்ண சூரியஒளி பொருட்களில் பட்டுத் தெறிக்கும் போது சில நிறங்கள் உறிஞ்சப்பட சில நிறங்கள் வடிகட்டப்பட மிச்சம் மிகுதிதான் ஒருநிறமாகக் கண்களுக்கு மூளையில் இருந்து கடத்தப்படும் செய்திகள் வழியாக நாங்கள் நிறங்களை அடையாளப்படுத்துகிறோம் என்றும் சொல்கிறது அறிவியல். 

                                                      எப்படியோ நிறங்கள்இல்லாத ஒரு உலகம் சுவாரசியமா இருக்குமா என்பது ஒரு சந்தேகம்தான். நிறங்கள் ஒரு காட்சியை அழமாக்கி அகலப்படுத்திவிடும் அதிசயத்தை இயற்கைஇன்னமும் தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கு. அப்பப்ப மகாலக்ஸ்மி அந்த ஜவ்வன ஜொலிப்பின்சில சந்தோஷதருணங்களைத் தேடி எடுத்து எனக்கும் தந்துவிடுவாள்




                                                      சூடான கோப்பி ,அல்லது சில்லென்ற குளிர்பானம் , லயித்துப் போக ஒரு புத்தகம் அல்லது நாலு கதையோடு காலத்தை இழுக்க நண்பர்கள் . பின்மாலை உணவு அல்லது நினைவுகளைத் தின்னும் தனிமை. இப்படித்தான் மனிதர்கள் ஒரு வெய்யில் நாளில் வீதியோர உணவகங்களில் சங்கமிக்கிறார்கள் . 

                                                        மரங்களின் நிழலில் ,மயில் இறகுக் காற்றின் சிநேகத்தில் ஒரு சந்தோசம் கிடைக்குமென்றால் அதட்கு மேலே ஜோசிக்க என்ன வேண்டும் இந்த அவசர உலகத்தில். சமாந்தரமாக அவதிகளில அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் .சின்ன இடைவெளிகளில் பெரிய அனுபவங்களை எதிர்பாராமல்த் தரலாம் திறந்த வெளிகள் 




பழங்களின் நிறங்கள் மரங்களில் இருப்பதை விடவும் ஒரு மேசையில் போட்டொகிராபிக்கு அமர்க்களமாக இருக்கு பழங்களை மட்டுமே உண்டுகொண்டு உயிர்வாழும் மனிதர்கள் நோர்வேயில் இருக்கிறார்கள் அவர்களை புரூட்ஸ்டேரியன்ஸ் என்று சொல்லுவார்கள்.அவர்கள் மரத்தில் பழங்கள் பிடிங்கியும் உண்ணமாடார்கள் மரமே கனிந்து விழுத்திய பழங்களைத்தான் உண்பார்கள். 


                                                   எனக்கெல்லாம் அவ்வளவு தவம் போன்ற கொடுப்பினைகள் இல்லை. இன்றைக்கு ட்ரோபிக்கள் புரூட் சலாட், அப்புறம் ஒரு தட்டு ஸ்ட்ரோபெர்ரி . கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு சாப்பிடும் போதே...நீங்களும் வாங்க சாப்பிடலாம்




                                                       வாவென்று எப்போதாவது சில நாட்களில் தான் வசந்தகாலம் வெளியே அழைக்குது . காலாற நடந்து கடக்கும் நடைபாதையின் ஒருபக்கம் நதி வழிந்தோடிக் கைபிடித்து நடக்கும். நிழல்தரு மரங்களின் குளிர்மையை வேண்டிக்கொண்டு முகமெல்லாம் வெய்யிலின் விசாரிப்புகளோடு மையில் கணக்கில் நடந்தாலும் அலுப்புத் தெரிவதில்லை 

                                             கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த இடம் அலஸ்ஸ்சாண்டர்செல்லான்பிளாஸ் .இந்த இடத்த்தில் தான் நோர்வேயின் புகழ்பெற்ற பாடகர். கிட்டார் வாத்திய கலைஞர் லில்லி பியோன் நெல்சன் என்பவர் பிறந்தார்.




அண்மையில் ஒரு வெயில் நாள் சொங்க்ஸ்வான் எரிக்கரையைச் சுற்றி நடந்துகொண்டிருந்தபோது ஒரு வயதானவர் புதர்களுக்கு நடுவே கிறிஸ்மஸ்தாத்தா போல வெள்ளைத் தாடியை நீவி விட்டபடி குனிந்து ஆர்வமாக பூக்களை விசாரித்துக்கொண்டிருந்தார்.

                                          பார்க்க மூலிகை ஆராச்சி செய்யும் நாட்டு வைத்தியர்போல இருந்தார். கொஞ்சம் கவனித்துப் பார்க்க கழுத்தில கமரா கொழுவிக்கொண்டு இருந்தது அவர் ஒரு " நேச்சர்போட்டோகிராபர்" போல இருக்க அருகில் சென்று கதைத்தேன். உண்மையில் அவர் ஒரு அருமையான புகைப்படக்கலை தெரிந்த ஒருவர் என்று அந்த சின்ன உரையாடலில் அறியமுடிந்தது.
                                       " வயது அளவுக்கு அதிகமாக காவு எடுத்து வயதை விலை பேசி வேண்டினாலும் காடுகள்தான் தன்னோட நெருங்கிய சொத்துப்பத்து சேர்த்து வைத்த குடும்பம் " என்று சொன்னார் .
                                             " இயற்கையை எப்படிப் படம் எடுப்பது "
                                                   என்று பத்திக் குச்சி பத்த வைத்த மாதிரிக் கேட்டேன் . கொஞ்சம் ஜோசிதுப்போட்டு என்னோட தீவட்டித் திருடன் பழஞ்சோறு கட்டு சாதத்தை அகப்பட்ட நேரம் அவிழ்த முகத்தை சந்தேகமாகப் பார்த்தார் ,,பார்த்திட்டு
                                                     " இயற்கையோடு முதலில் பேசிவிடு,,பிறகு உள்வாங்கி உடுருவி அதன் கிலேசங்களை நீயாகத் தேடத் தேவையில்லை அதுவே உனக்கு வரப்பிரசாதங்கள் அள்ளிக்கொண்டு வந்து கொடுக்கும் "
                                                       என்று இலக்கண சுத்தமான நோர்க்ஸ்மொழியில் சொன்னார்.. இப்படி ஒருவரைப் படம் எடுக்கும் சந்தர்ப்பம் என் மகாலக்ஸ்மிககும் கிடைத்தது ஒரு அதிசயம்...



இன்று ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள ஒரு புறநகரத்துக்கு போன இடத்தில் பகலுணவுக்கு இந்த ரெஸ்டாரெண்டில் படி அளக்க வேண்டி இருந்தது .போகும் போதே நோர்வேயையும் நோர்வே மக்களையும் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு போனேன் .

                                                      ஆனாலும் நோர்வே அழகாயும் அமைதியாகவும் இருந்தது. மனதின் போக்கை எப்பவும் உன் காழ்ப்புணர்ச்சிகளின் போக்கில் விட்டு விடாதே என்ற என் குருநாதர் ரமணமகரிஷி சொன்னதுதான் நினைவு வந்தது 
ஒரு வெய்யில் நாளில் நீல வானம், மெல்லெனச் சூடான தண்ணி, அலைந்துகொண்டிருக்கும் அலைகள்,தலை தடவி விசாரிக்கும் தென்றல் காற்று, விரலிடுக்குகளிலும் பாதங்களிலும் ஒட்டிக்கொள்ளும் மணல். ரகசியாமான வியர்வை வாசம், குழந்தைகளின் மொழி புரியாத குதூகலம், பேசுவதுக்கு நண்பர்கள், சொங்க்ஸ்வான் ஏரிக்கரையில் மகாலக்ஸ்மியின் கண்களுக்கு இதைவிட வேறென்ன விருந்து வேண்டும்.




1 comment :

  1. ஹாஹா அருமையான பதிவு , நீங்கள் சொன்னவை நிறைய அனுபவபூர்வமான உண்மைகள். அசத்தல் .

    ReplyDelete