Monday, 31 October 2016

நாடோடியின் நகரம் முதல்த்தொகுப்பு

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது போன்றது ஒரு நகரத்தை நாலுவிதமாக ரசிப்பது . சலிப்புக்கள் எல்லாம் தாண்டி சந்தோசமான விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள் வாழுமிடம் உத்தரவாதங்கள் தரலாம் . இந்த உலகில் சந்தோசம் எங்கோ பதுங்கி இருக்கு என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  தொன்மையான அடையாளங்களை   வைப்பாட்டியாக  வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன் 


                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை  ஒரு கட்டத்தில்  நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...

பறவைகளை
எதேச்சையாகக் கடக்கும்போது
தயவுசெய்து
கலவரம் ஆகாதீர்கள்
உங்கள் கவனம்
அவைகளின்
ஒரு நாளையே
குழப்பிவிடலாம்

இந்தப் படம்
அந்தச் செய்தியைச்
படபடத்து சொல்லிவிட்டு
வெய்யிலோடு
வெளியே போய்விடுகிறது

கவிதை
அதையொரு இடத்தில
கொண்டு வந்து
நிற்பாட்டி விட்டு
வானத்தை
வாடகைக்கு எடுத்து
விரித்து வைத்து
இருட்டுவதுக்குள்
எழுதிவிடு என்கிறது.......

இறக்கை முளைத்த
வெள்ளைப் புறாக்களையும்
அவை சூரியனோடு மோத
சுதந்திரச் சிறகை விரித்தது
பற்றியும்
எல்லாரும் எழுதியறுத்து
வெறுத்துப் போனதால்
இதுக்குமேலே
எழுத விருப்பமில்லை



ஒரு 

விட்டில் பூச்சியின் 
தற்கொலைக்கு ஒப்பான 
திடுக்கென்ற ஆச்சரியத்தை 


ஆர்கிஸ்எல்வா ப்ரோ

பாலத்தைக் கடக்கும்போது

சந்தித்தேன்



தண்ணியின் தாளங்களை
தனியாக
எண்ணி எடுத்து
ரசித்துக்கொண்டிருந்தாள்

மரணத்தைப் பற்றின
அறிமுகத்தோடு
தொடங்கியது
வருடங்களாய்
சந்திக்க முடியாமல் போன
அவளின் உரையாடல்

அளவுக்கதிகமாக
மெலிந்து போய்
கூந்தல் இழந்து
விரிசல் விழுந்திருந்தாள்

தனிமையைத் தள்ளி
வேரோடிய புற்றுக்களோடு
போராடுவதாக
தலையைத்
தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தாள்

ஒன்றாக வேலை செய்தபோது
கடமை முடிய
வாசலை தாண்டினவுடனே
அற்பாயுளில்
மடிந்துவிடும் நிலையில்
எங்களின் நட்பு
ஒருபோதும் இருந்ததில்லை

ஒரே புள்ளியில்
தற்போதைய
என்னைப் பற்றி சொல்ல
ஒன்றுமில்லை என்றேன்

சமாளிப்புகளை
இறுகப் பற்றின
வாசனைகளால்
அவள் வார்த்தைகள்
நிறைந்திருந்தது
நம்பிக்கையை
நம்பிக் கை விடாதே என்றேன்

வலிகள் தரும்
சலிப்பிலிருந்து விலகி
எப்போதாவது
மீட்டெடுத்துக் கொள்ளும்
அற்புதமான
தருணம் இதுவென்று புறப்பட்டாள்

சலசலத்து
இயங்கிக்கொன்டிருந்த
ஆர்கிஸ் எல்வா நதியின்
சத்தத்தின் பின்னணியில்
அவள் முகம்
இறந்துபோயிருந்தது
அதிகம் போதாத
ஒருவிதமான விசிறியடிப்பில் 
பிர்ச் மரங்கள் 
வில்லோப் புதர்கள் 
மேப்பிள் மலர்களைக்
குளிப்பாட்டுது மழை....

நடைபாதைக்
கரையோரமெல்லாம்
வழுக்கியபடி
இறகுகளை ஈரமாக்கி
கொண்டை இழுத்து
சண்டை பிடிக்கும்
சாம்பல்ப் புறாக்கள்..

சோலையில்
சின்னக் குருவிகள்
நாளை வெயில் பற்றிய
நம்பிக்கையற்று
இன்றைய பொழுதுக்கு
மர வேரடியில்
புழுக்கள் தேடுகின்றன......

அவைகளைத்
திடீர் திடீர் என்று
திடுக்கிட வைத்துப்
பூச்சாண்டி காட்டுகின்ற
மரஅணில்கள்
இன்று வரவேயில்லை...

மழை
கிளைகளின் வழியாக
இலைகளில்
சொந்தம் கொண்டாட
மரங்களின் கீழே
சத்தமில்லாமல் இருட்டு
தியானம்செய்கிறது

சூடு கொடுக்கின்ற
அங்கிகளில்
கைகளை நுழைத்து
குடைகளை மறந்துவிட்டு
தலைநனைவதைக் கவனிக்காத
மனிதர்கள்
வேலைக்குப் வெளிக்கிடுகிறார்கள்
என்னைப் போலவே.......




சரசமாடும்

நகரப் பாதையில்

தேங்கிய மழைத் தண்ணி

என்னையும்
நிழலாக சேர்த்து இடிக்க
அந்த முதியவர்
பொறுமையாக என்னுள் பார்த்து
சிரித்தார்.

வலியோடு
குனிந்து பார்த்து
அவசரமான
நிமிடங்களை நிறுத்தி வைத்து
வழியை விலத்தி
சிரித்துத்
தயங்கி நின்றேன்

கதைக்கத் தொடங்கினார்..
.
என் சந்தேகங்களை
சாட்சியாக்கி
தன் ஆத்மாவுடன்
விசாரணையை ஆரம்பிக்க
எல்லாவற்றிலும்
உணர்வுகள்
தூறல் தூவிச்சென்றது

அவர் கேட்ட
சில கேள்விகளுக்கு
சிக்கனமாகப் பதிலளித்தேன்.
நான் கேட்ட
ஒரேயொரு கேள்விக்கு
இதயத்தின் பெரும் பகுதியின்
வெற்றிடத்தை
திறந்துகாட்டினார்.

ஒவ்வொரு
எதிரொலியிலும்
தனிமையோடு
போராடிக்கொண்டிருப்பதால்
யாரா இருந்தாலும்
கதைப்பேன் என்றார்

அவரின்
கதை கடந்து போன
வயதான அனுபவத்தில்
நான் இருப்பேனாவென்று
தெரியவில்லை
சில நேரமது
என்னையும் தொடரலாம்

இதன் அவலம்
அப்போது
என்னை அசைக்கவில்லை
தடமிழந்து
வாழ்வு நகர்த்த எதுவுமில்லா
வயசாகும் போது
தெரியுமிந்த வலி.



யன்னலைக்

காற்றுவர்ற பாதியில்

திருகித் திறக்க

நேரத்துக்கே எழும்பிவந்த

அவசர வெய்யில்
காலத்தை
நிலமெல்லாம் பரப்பி வைச்சு
பல்லாங்குழி
விளையாடிக்கொண்டிருந்தது

ஏனோ
சரியாகப்படவில்லை
தொலைவில்
முந்திக்கொண்டு
காதில்அறைந்து
பதினோரு மணிக்கு
ஞாயிற்றுக்கிழமை
பிராத்தனை
மணியடித்தது

விடுப்பு பார்த்து
தேவாலய
மணிக் கோபுரத்தை
நின்று நிமிர்ந்து நிதானித்துக்
கவனிக்க
வலஞ்சுழியில்
மணிக் கம்பியையும்
நிமிடக் கம்பியும்
ஒன்றயொன்று திரத்த

ஞானம் தெளிந்தது
நடுச் சாமமே
நேரத்தோட
ஒரு
மணித்தியாலம்
கையை உதறிப்போட்டு
பின்னுக்குப் போய்விட்டதாம்.



இயற்க்கை

தோல்வியில் கூட

சரியாக புரிந்து கொள்ளாமல்

அவசரமான தற்கொலைகளுக்கு
முடிச்சுப்போட்டுப் 
பார்ப்பதில்லை

அன்னியப்பட்டுப்
போவதில்லையென்ற முடிவோடு
உதிர்ப்பை உணர்ந்து
தன் வீழ்ச்சிக்கும்
பூசு மஞ்சள் குளித்து
வர்ணம் பூசிப் பார்க்கிறது

மெல்லிய காற்று
பனிமழையுடன் பேசும்போது
மகிழ்ச்சியாகவிருக்கும்
மரங்கள்
காலநிலையின்மையை
சபித்துக்கொண்டு
ஒதுங்கிப்போவதில்லை

விழுந்துகொண்டிருக்கும்
இதய வடிவ
மேப்பிள் இலைகளுக்கு
சிறகுகள் கொடுத்து
முதல் நிலையில்
தன்னைச்சுற்றியே
அணைத்துக்கொள்கின்ற
அற்புதமான செய்தியில்
தன்னிருப்பையும்
அர்த்தப்படுத்துகிறது.

இதுக்கும் மேலே
இனியென்ன எழுதிக் கிழிக்க
என்றபோதுதான்
என் சின்ன மகள்
விழுந்த மஞ்சள் இலைகளை
நெஞ்சோடு அள்ளி எடுத்த
நினைவு குறுக்கிட்டு வந்தது 


திசை தேவையில்லாமல் 
நடந்த பாதைகளில்
ஒட்டிக்கொண்டு 
நுழைந்த முகங்கள் 

இன்னமும் 

என் காதில்

கிசுகிசுப்பது போலவே

இருக்கிறது.


வருடங்களின்
முன் கடந்து சென்ற
வீதிகளில்
ஏனோ
மிகவும் தெளிவாக
விபரித்திருந்த
தோல்வி தெரிந்தது

தெளிவற்ற
ஆரம்ப கட்டத்தில்
விரிந்திருந்த
வழித்தடங்கள்
வெறும்
ஆர்வக்கோளாறென்று
அதிகாலைக் கனவோடு
உதறி எழுந்த போது
புரிந்துகொண்டேன்

ஜன்னலில்
இலையுதிர் மரங்கள்
குளிர்ந்த வெய்யில்
கசங்காத வானம்
பார்த்த போது
நினைத்துக்கொண்டேன்
போனது
எப்படியோ போகட்டும்
இனியாவது
எதிர்காலம்
அழகாக இருக்கவேண்டும்






எந்தப் புள்ளியிலும் 

சேராமல்  விலகுகிறோமென்பது
தெரியாமல் 
நினைவில் நிற்கும்
கதைகளோடு 
தள்ளிக்கொண்டே போகிறது 
க்ருன்ட்லான்ட் 
நடுநிசி நகரம் ..
டாக்சி ஓடிக்
காசைத் திரத்த
பாகிஸ்தானியர்
வேலை செய்யாமலே
அலுப்பில்
ஓய்வு எடுக்க
அகதிச் சோமாலிகள்
மெட்ரோட்ரைன்  ஸ்டேசனில் 
ராச்சியத்தை அறிவுக்கும் 
ஜெகோவாவின் சாட்சிகள்

தந்தூரிக்
கோழிக் கால்
வாசம் காற்றில்
தள்ளி விழுத்தி 
நிழல்கள் மிதிபட்டு 
நெரிபடும் நடைபாதைகள்..... 

வார இறுதிகளில் 
எப்படி விடியும் என்ற
கவலையில்லாதவர்களின் 
பிரிவிற்கு வருந்தத் 
தேவையற்ற
கொண்டாட்டம்
நம்பிக்கை தரும் 
சினேகிதங்களின் 
கற்பனைகளுக்கும்   
உத்தரவாதங்கள் உண்டு.. 

மனிதர்களை 
எழுதிச் செல்லும் 
நளினமான  நகரத்தை 
நடந்து கடக்கும் 
எல்லாருக்கும்
இன மதம் மொழி நிறம் 
இல்லாத ஒரு 
ஆசிர்வதிக்கப்பட்ட
நாளாகும்.

இறங்கி வராத
நட்சத்திரங்களோடு
கோபித்துக் கொண்டு
தலையைத் 
தொங்கப் போட்டுத்

திரும்பி நின்று விகசித்து

சிவப்பு மஞ்சள்

மையெல்லாம் கொட்டி

அலங்கோலமாக்கிய
மேகங்களில்
உயிர் எஞ்சியிருக்கும் என்ற
நம்பிக்கையில்
ஒரு
வானம்பாடி
தன் இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்
பின் மாலைப்பொழுதை
கலங்காமல்
பாடும்
சில பாடல்களில்
பிரியங்களுடன்
மீட்டெடுத்துவிடலாம்.

மரங்கள் மொட்டையாகிய
நடைபாதையின் 
இக்கட்டான தருணத்தில் 
தானாகவே 

ஒரு வழியைக் 

கண்டுபிடிக்கிறது இசை



நின்று கேட்க

அமைதியிருந்தால்
சூட்சுமத்தை அறிந்துகொண்ட
ஒரு பாடலை
அது குளிரோடு போராடிச்
சொல்லலாம்

அதையொட்டியே
கேள்விக்கு பதில்களை
சின்னப் புள்ளியில்
சாத்தியமாக்கி
அனுபவங்களை வாசித்து
ஒரு ஒட்டுதலைப்
பிறப்பித்துவிடுகிறது சுரங்கள்

உணர்ச்சியை
வடிவமைத்துக்கொள்ள
இலையுதிர்
வெளிப்படையில்
நெருங்கும் பருவங்கள்
இன்றைக்காவது
பிள்ளைகளுக்கு
பரவலான அங்கீகாரத்தை
ஒரு நாளில்
உணரவைக்கலாம்.

திரிசங்கு சொர்க்க

மேகங்களின் கீழே

இருளோடு

அப்பப்ப

கைகுலுக்கிக்கொண்டே
நீண்டவாக்கில்
ஒளியை
அதன் இனிமையான
திசைகளில்
திருப்பி
நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
என்று
சொல்லி விடுகிறது
முப்பரிமான
அலங்கார நகரவீதி.! 

.
தளிர் பச்சையாகவே

இருக்கவிரும்பும்

மதனப் போதை

முற்றிலும் முறிந்துவிட்டது

குளிர் குளித்த வெளிச்சம் 
வழியும்
இலை வெளிகளில்
விலகித் தப்பித்து
ஓடி வந்த ரசனை
அந்தரங்கமான இரவில்
நிலமிறங்கி விட்டது
மரம் இனி வரையும் ஓவியத்தின்
வர்ணங்களும் வர்ணனைகளும்
வெளிச்சத்தோடு
போட்டி போட்டு
நடனமாடிக்கொண்டிருக்கும்
பின்கோடைப் பெருவெளியில்
நடுநிசியெல்லாம்
அழகு தேவதை அப்சரஸ்
பெண்களைப்
படைத்துக் களைத்த
அசதியின் தூக்கம்
பிந்திக் கலைந்த நேரம்
காலநிலைகள்
முந்திக் கொள்ள
தெளிவுபடுத்தமுடியாத
பிரம்மனின்
பகல்க் கனவுபோலவேயிருக்கிறது
ஒஸ்லோவில்
இலையுதிர்காலம்.


கோப்பிக் கடையின்

சுவாரசியமான மேசைகளில்

கோடை முழுவதும்

மேப்பிள் நிழல்

நடை பாதை 
மனிதர்களை
இழுத்து இருத்தியது

வெய்யில்
பிறந்த பகல் எல்லாம்
வியர்க்க வியர்க்க
கதைத்துக்கொண்டிருந்தோம்

நீ
விரல்களைப் பின்னிக்கொண்டு
கால்களை ஓட்டவைத்து
ஓடைத் தண்ணி போன்ற
மேகங்களை
வேடிக்கை பார்த்தாய்

இப்போது
மூசிமூசிப் பெய்யும்
இலையுதிர்கால
முன் பனியின்
நினைவுகளில் மட்டுமே
உன்
சூடான சுவாசம்

எல்லா
வெளிச்சங்களும்
வெளியே
தெரிவதில்லையென்று
தனக்குள் புழுங்குது
இலையிழந்துகொண்டிருக்கும்
மேப்பிள் மரங்கள்.

விடுமுறையோடு 
ஒப்பந்தம் போட்டு ஒதுங்கிய 
ஒரேயொரு நாளில் 
வேகமாக 
குறுக்குக் வீதிகளில் 
சுற்றுவதுக்குள்
நடை பாதைகள்
மாறி விட்டது

நிலத்தடி நிலையத்திலிருந்து
மிதந்துக்கொண்டு
கடக்க வேண்டிய
காலடிகளை
தெளிவாய்த் தெரிவு செய்த
தீர்க்க நடையினர்
என்னை
வேகமாக உரசி மறைந்தார்கள்

முழுசாக
இரண்டு மாதங்களே
வாழ்ந்தவன் போல
மூலை முடுக்குச் சந்திகளில்
தேவையில்லாமல்
பதுங்கிக்கொண்டிருந்தது
பயம்

புறாக்களுக்கு
தீனி போட்டு
விரும்பித்
தங்கி இருந்த போது
ஏற்படாத சலிப்பு
இப்போது இரண்டே
மணித்தியாலங்களில்

குட்டைப் பாவாடையில்
தொங்கிய நாடாவை
சரிசெய்துவிட்டு
நிமிர்ந்து பார்த்தவளின்
நெரிசலுக்குள் நெளிந்த
உரையாடலில்
அவளுக்கும்
ஒன்றுமே
பிடிக்கவில்லையாம்

Sunday, 30 October 2016

திசைகள் தெரியாமல்...............

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் இடப்பெயர்வுகளும் அகதி வாழ்கையும் என்பதுக்களின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டது. முதல் முதல் திருகோணமலையில் இருந்து அகதியாக இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பாணத்தில் முத்திரைச் சந்திக்கு அண்மையில் இயங்கிய ஒரு பொறியியல் நிறுவனத்தில் அகதிமுகாம் அமைத்து இருந்தார்கள். அவர்களை நாங்களே சும்மா வேடிக்கை பார்ப்பது 

ஏனென்றால் அப்போது யாழ்ப்பாணம் பாதுகாப்பாய் இருந்தது. அந்த மாவட்டத்தில் இருந்த இராணுவ முகாம்களைச் சுற்றி எல்லா இயக்கங்களும் காவலரண் அமைத்து ராணுவத்தை வெளியே வர முடியாதவாறு எப்பவும் சண்டை போட்டு திருப்பி உள்ளுக்கு அனுப்பிகொண்டிருப்பார்கள் . ஆனால் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு நாள் உடைக்கபடலாம் என்ற அச்சம் எப்பவுமே இருந்தது 

அதுக்கு  முக்கிய காரணம் என்ன என்று இங்கே நான் சொல்லப்போவதில்லை. கொஞ்சம் போல சொல்வதென்றால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டு ஒரே ஒரு இயக்கம்தான் முழு வீச்சாக சண்டையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நிலைமை என்று நினைக்கிறன். நான் சொல்வது என்னோட தனிப்பட்ட கருத்து அதனோடு நீங்கள் உடன்படவேண்டிய அவசியம் இல்லை. 

                                        ஆனால்   அந்த  ஒருநாள் எங்கள் வீட்டு வாசல்படியில் வந்து நின்று கதவைத் தட்டி தப்பி ஓடிப்போ என்று சொல்லும்போது அனுபவம் வேறுமாதிரி இருந்தது.   இடப்பெயர்வு அகதி வாழ்க்கை நமக்கே நிகழும்போது நிலைமை நினைத்துப்பார்க்க முடியாத அவலத்தில் தள்ளியது  . அதை ஜோசிக்க   தனக்குத் தனக்கு என்று வரும்போது சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகுது 

இன்னொரு முக்கிய விசியத்தையும் முன்னெச்சரிக்கையாய் சொல்லுறேன். நான் ஒரு உத்தியோகபூர்வமான  வரலாற்று ஆசிரியன்  இல்லை . நான் கடந்த வாழ்க்கைப் பாதையில் பார்த்ததையும் சந்தித்தையும் மட்டுமே எழுதுகிறேன். உண்மையில் நான் அனுபவித்தது மிக மிக சொற்பமான துன்பம், பல குடும்பங்கள் தாங்க முடியாத இழப்புக்களை இதில் சந்தித்து இருக்கிறார்கள். அவர்கள்தான் யுத்தத்தின் உண்மையான யாக வேள்வி ஆகுதிகள். 

சரியாக இருவத்தி  ஒரு  வருடங்களின் முன் இன்றைய தினம்,யாழ் குடாநாட்டை தரைவழியாக கைப்பற்றும் சூரியகதிர் இராணுவ நடவடிக்கை அகோராமாகி , வலிகாமம் வடக்கு, யாழ் நகரம் முழுவதிலும் வசித்த ஐந்து லட்சம் மக்கள் தென்மராட்சிக்கு உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர வைத்த வலி நிறைந்த வரலாற்று நிகழ்வு நடந்த நாள் என்று சொல்கிறார்கள்.
                                                     அதில் நானும் என்றுமே விட்டு விலக நினைக்காத யாழ்பாணத்தை விட்டு நிலத்தால் இடம்பெயர்ந்தேன். என்னோட அம்மாவும் இரண்டு உடன்பிறப்புக்களும் தென்மராட்சியில் வந்து ஒரு தெரிந்தவர்கள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழே குந்தி இருந்தோம். பலர் வடமராட்சிப் பக்கமும் உறவுகள்,நண்பர்களை அண்டிப்போனார்கள்.
                                                     " உள்ளுக்க இறங்கவிட்டு பொக்ஸ் போட்டு அடிப்பார்கள் " என்று ஆள் ஆளுக்கு கதைக்கொண்டு இருந்ததால். என்னமோ சில மாதங்களில் குந்தி இருந்த இடத்தில தற்காலிகமாக ஒட்டின குண்டி மண்ணைத் தட்டிப்போட்டு மறுபடியும் சொந்த வீட்டுக்குப் போகலாம் என்றுதான் நானும் நினைத்தேன் , பலரும் அப்படிதான் நினைத்து இருந்தார்கள்.
                                               தென்மராட்சி மக்கள் அன்பாக தங்கள் இடங்களில் இட்டு முட்டு பட்டாலும் அதைப் பொறுத்து இடம் கொடுத்தார்கள் முடிந்தவரை ,குழைக்காடு என்று கிண்டலாக அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் ஓரளவுக்கு இடம்பெயர்ந்த மக்களை முடிந்தளவு இயல்பு நிலைக்கு உள்வாங்கி கொட்டிலிலும் குடிசையிலும் ,கோவில் வெளி மண்டபங்களிலும் இயங்க வைத்தது.
                                           வன்னிக்குப் போக விரும்பும் மக்களை,வன்னியில் குடிசைக் கட்ட நிலம் ,கப்பு வளை போட தடி கம்பு , அதுக்கு கூரை மேய தென்னம் ஓலை தருகிறோம் " இதயபூமிக்கு இடம்பெயர்ந்து வாருங்கள் " என்று சொல்லி இலவசமாக படகு சேவை கொடுத்து ஏற்றிப் பறித்தார்கள். சிலநேரம் ராணுவத்தால் நேரடியாகப் பிடிக்கப்படும் சந்தர்பங்களில் மோசமான பின் விளைவுகள் வரலாம் என்று பயந்த வீரமான இளையவர்களை நாட்டுக்கு கொடுத்த குடும்பங்கள் எல்லாருமே அப்படியே வன்னிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள்.
                                                 எப்படியோ சில மாதத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் வன்னிக்குப் போய் விட்டார்கள் . நான் வேலை செய்த நிறுவனத்தின் நிவாரணத்திலும்,அரசாங்க நிவாரணத்திலும் தொங்கிக்கொண்டு கிட்டதட்ட ஆறு மாதம் தென்மராட்சியில் இருந்தேன்.
                                         அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு நாள் காலை சரசாலையை நோக்கி முன்னேறி இராணுவம் அதை சண்டை இன்றியே கைப்பற்றி ,பின் வழிமறிப்பு சண்டை ," கவுண்டர் அட்டாக் " என்று வானவேடிக்கை அகோரமாகினாலும் , ராணுவம் மீசாலை வரை முன்னேறினார்கள் . அதில் வைச்சு தான் " லவுட் ஸ்பிகரில் " மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்துக்கு வருமாறு அறிவிக்க நிறைய மக்கள் உள்ளே போனார்கள்.
                                         மீசாலை வீரசிங்கம் மகாவித்தியால சந்தியில் ராணுவம் நிற்பதையும், " விடமாட்டாங்கள் அடிப்பாங்கள் பிடிப்பாங்கள் " என்று உசுப்பு ஏத்திக் கொண்டு இருந்த பலரே ராணுவத்துக்குள் போவதைப் பாத்துப்போட்டு, சில நாட்களில் கிளாலிக் கடலால் நேவிக்காரனின் " லேசர் ரவுன்ஸ் " அடி தலையத் தடவிக்கொண்டு போக மறுபடியும் கடலால் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பில் காலடி வைத்து கிளிநொச்சியில் மறுபடியும் என் சகோதரியைத் தேடிப்பிடித்து, தங்க இடம் இல்லாமல் கிளிநொச்சி முருகன் கோவிலில் அகதிகளோடு அகதியாக இருந்தேன்,
                                                 நல்ல காலம் நான் யாழ்பாணத்தில் வேலை செய்த நிறுவனம் பரவிப்பாஞ்சானில் இடம்பெயர்ந்து இயங்கியது, அதால் அதில வேலை கிடைக்க கொஞ்சநாள், நுளம்புக்கடி செல்லடி போல இருந்தாலும் ஒண்ட வந்த பிடாரி பிஞ்சுபோன அகதி போல இயங்குவதுக்குப் பரவாயில்லாமல் இருந்தது.
                                                       வன்னியில் ஸ்கந்தபுரம் ரெண்டாம் வாய்க்காலில் ஒரு சின்ன இடம் காட்டு விழிம்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அருகில் கிடைத்தது. அதில கொட்டில் ஒன்று போட்டு கொஞ்சநாள் இருப்போம் என்று காட்டை வெட்டிக் குத்துக்கால் போட " இந்தக் காட்டுக்க மனுஷன் இருப்பானா " எண்டு சொல்லி அவர்கள் இருவரும் சந்தில சிந்து பாடிப்போட்டு வவுனியாவுக்கு எஸ்கேப் ஆகி கொழும்புக்கே போய் விட்டார்கள் அதன் பின் வன்னியில் இருந்த காலம் முழுவதும் தனியாத்தான் தவில் அடிச்சுக்கொண்டு இருந்தேன்.
                                                    சில மாதங்களில் கிளிநொச்சி நகரைப் பிடிக்க பரந்தன் பக்கம் இருந்து ஆனையிறவு இராணுவம் முன்னேற ,கிளிநொச்சியைக் கைவிட்டு காட்டுப்பகுதியான, முறிப்பு, கோணாவில், யூனியன்குளம், ஸ்கந்தபுரம், அக்கராயன் என்று குட்டி போட்ட பூனை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போன மாதிரி பொம்பர் அடிக்கு பாலைமரத்தையும் கிபீர் அடிக்கு முத்திரைமரத்தையும் சுற்றி ஓடி ஒளிச்சுப்பிடிச்சு, செல்லடிக்கு வாய்காலில் கவர் எடுத்து, ஹெலி அடிக்கு விழுந்து படுத்து,சின்னாபின்னமாகி அலைந்து...
                                             வன்னியின் காட்டுப்பகுதியில் மலேரியாக் காச்சல் ரெண்டு முறை மூளை மலேரியா ஆக்கி பிசதிக்கொண்டு அதில தப்பி,அகோரப் பசிகிடக்கும் குளத்து முதலைகள்,விஷம் காவிக்கொண்டு திரிந்த புடையன் பாம்புகளுக்கு உச்சி விளையாடி , ஒருமுறை கோட்டைகட்டிய குளத்தில் அலியன் யானையிடம் இரவு மயிரிழையில் தப்பி, சொந்த வாழ்க்கையையும் கண்டறியாத காதலில் சொதப்பி ரெண்டு வருடங்கள் இருந்து,
                                                      ஒரு மாதிரி பாஸ் எடுத்து, உயிலங்குளம் , மன்னார், செட்டிகுளம்,பறையணாளங் குளம் ,பூந்தோட்டம் , வழியாக வவுனியா வந்த பின் தான் பெருமூச்சு விட்டு ஒரு உடம்பைத் தடவிப்பார்த்து உயிர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருப்பி ஆர்மி பாஸ் இக்கு சுத்துமாத்து செய்து கள்ளமாக கொழும்புக்கு களைச்சுப்போய் வந்த போதுதான் நாக்கில் தண்ணி வந்தது.
                                              போட்டிருந்த அண்டவியர் கிழிஞ்சு தொங்கும் அளவுக்கு வழியெல்லாம் கஷ்டம் தந்த இந்தப் பாதையில் இன்னும் திரும்பிப் போகவில்லை, எப்படியோ ஒரு பிரயாணம், இடங்கள், சம்பவங்கள் என்று சுருக்கமாக மேலே ஒரு " ஸ்கெட்ச் " போல சொல்லியுள்ளேன். ஆனால் இந்த இவ்வளவு இடங்களிலும் நடந்த சம்பவங்கள் ஒரு வாழ்நாளுக்குப் போதுமடா சாமி என்பது போல அவளவு அலங்கோலமாய் வாழ்க்கை சிதறியது,
                                                  பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி கிரவல் மண்ணோடு மண்ணாகப் பிரண்டு உருண்டு ,எமனோட கை குலுக்கி ,அதிஷ்டம் அரைவாசியாவது அனுதாபப்பட்டதால் உயிர்தப்பிய அதையெல்லாம் " இடங்களைப் பெயர்ந்த கதைகள் " என்ற தலைப்பில் எழுத நினைப்பது. நினைப்பது அவளவுதான் இன்னும் எழுதவே தொடங்கவில்லை,,சிலநேரம் நினைப்பது எழுதித்தான் என்னத்தைக் கிழிக்கிறது என்று வெறுப்பும் வரும்
                                        தென்மராட்சி இடப்பெயர்வில் ,என்னிடம் இருந்த இரண்டு கிட்டார்களை இழந்தேன்,அவை இரண்டும் நானும் என்னோட தச்சுத் தொழில் செய்யும் நண்பனும் சேர்ந்து சொந்தமாக கையால் உருவாக்கியது.வன்னியில் இருந்து மன்னாருக்கு தவளை போலப் பாஞ்ச நேரம் வைத்து இருந்த மூன்றாவது கிட்டாரையும் இழந்தேன். அதெல்லாம் ஒரு இழப்பே இல்லை மற்ற மனிதர்களின் இழப்போடு ஒப்பிடும்போது .
                                                         திசைகள் தெரியாமல் திட்டிக்கொண்டு , பழங்கஞ்சிக்கும் அல்லாடி பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி புறுபுறுத்தாலும், இந்த உலகத்தின் அழகான பல அறியப்படாத பிரதேசங்களில் வாழ்ந்து , பல்வேறு மக்களுடன் உறவாடி உணர்ந்து, அன்பு, பாசம், கருணை, இழப்பு, வெறுப்பு ,உதவி, உழைப்பு, பொறுமை,துரோகம் எல்லாவற்றையும் இன்னுமொரு " வொல்காவில் இருந்து கங்கை வரை " போல புதிய கோணங்களில் இருந்து வாழ்க்கை யதார்த்தத்தை திறந்து விட அதில் இடறி விழுந்து எழும்பிய அனுபவங்கள் இப்படி ஒரு இடபெயர்வில் அலைக்கழிக்கப்படாமல் நிட்ச்சயமாக் கிடைத்தே இருக்காது
                                                   இன்றைக்கு யாழ்பாணத்தை " யூ டுயுப் " போன்ற கானோளிகளில் பார்க்கும்போது அதன் அலங்கார நாகரிகம், நாயைப்பிடி பிச்சை வேண்டாம் என்பதுபோல இனி பழசையெல்லாம் கொத்திக் கிளறி புரட்டி எடுத்தால் எடுபடுமா என்று பிரமிக்க வைக்குது. ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் எப்படி விடுதலைக்கு சமாந்தரமாக அதன் வீரம்மிக்க அர்பணிப்புகளுக்குத்  தங்கள் விலையைக் கொடுத்தார்கள் என்று கதைகள் போல எழுதினால் அதை யாரும் வாசிப்பார்களா என்று தெரியவில்லை.
                                               ஒரு வரலாற்று ஆவணம் போலவாவது இருந்திட்டுப் போகட்டுமே என்ற ஒரு அற்ப ஆசை எட்டிப்பார்க்க சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும் எண்டு ஆத்மாவை அரிக்குது அடிமனது அதனால் பார்க்கலாம்...
...............................................................................................................................
        இழப்புக்களோடு
மனிதர்கள்  ஒரு  நாட்டையே 
இடம்பெயர வைத்தார்கள்  
           இனி  என்னவெல்லாம்  
   வழிகளில்  இடராக    வருமென்பதை  
ஏற்றுக்கொள்ளும் 
மனப்பக்குவம் இல்லாமலே , 
     இருப்பை  
இன்னொரு  தப்பி வாழ்தலுக்காய்     
திசையில்லா  வெளிக்கு  நகர்த்தினார்கள்  , 
           எஞ்சியிருக்கும் வாழ்நாள் 
                 வஞ்சகமாகத்  தொடரப்போவதை 
மறுதலிக்க முடியவில்லை. 
               நிலம் திரும்பிய  வேண்டிய கால்கள்
கூடுதேடும் பறவைகள்  
தோல்வியின் பரிகசிப்பு  
இயலாமையின்  அவமானம் 
 தொய்ந்து  போன  குரல்வளைகள் 
ஒவ்வொரு  
யுத்தகாலச்  சாவு வீட்டிலும்   
    அனுபவத்தின் வலி
கொடூர மரணத்தை  
                              முற்றுமுழுதாக வார்த்தைகளில்                    வடிக்கமுடியவில்லை  
சதுரங்க ஆட்டம் 
ரெண்டு பக்கமும்  சகுனிகள்  
  பகிரங்கப்படுத்துவதில் 
 உணர்த்தநினைக்கிற   உண்மைகளில் 
                                                     அதிகம் அதிகமாய் 
                                     எம்  மக்களே  விலைபேசப்பட்டார்கள் 

....................................................................................................................................
நேற்றுப் போலத்தான் 

நினைவு 

எழுதிவைத்துக்கொண்டிருக்க 

நம்பவே முடியாமல் 
இருவத்தியொரு  வருடங்கள் 
இடம்பெயர்ந்து விட்டது


ஒரு நாள்

                                               சூரியகதிர் இறங்கி 
                                                     நெருங்கிக்கொண்டிருந்த 
                                                             எறிகணைகள் 
                                                       வீட்டுக் கூரையோடு பறக்க 
                                                             அறியாமல்க் 
                                                கதவைத் திறந்த போது
                                                              வெளியேறும் 
உத்தரவு காத்திருந்தது
                                                     செம்மணியில் 
                                                       திரும்பி நின்று 
                                                              பதில் தெரியாமல் 
                                                    வாஞ்சையுடன் 
                                                 பார்த்து கொண்டிருந்தது 
வளர்த்துவிட்ட நகரம்
                                                     ஒதுங்கவொரு நிழல் 
                                                              இதைத் தவிர 
                                                       நாவற்குழிப் பாலத்தை 
                                                நெருக்கிக் கடந்தவர்களுக்கு 
                                                                    வேறெதுவும் 
நினைவில் இல்லை
                                                       அடர்த்தியாய் இருண்டு 
                                                           கிடந்த வயல்வெளிகளில் 
                                                       தட்டாம்பூச்சிகள்
                                                         பறந்தது போலப் 
                                                             பிரிக்க முடியாத 
                                                     இந்த அனுபவம் 
எல்லோருக்குமானது
                                                    அதன் பின் 
                                                       தென்மராட்சியே 
                                                       ஒரு விடிகாலை 
                                                  வெடியோசையோடு 
                                          வன்னிக்கு வள்ளம் எடுக்க
                                                        விதிக்கப்பட்டதில் 
                                                       வித்தியாசங்கலென்று 
ஒன்றுமில்லை.
                                                      நம்மையறியாமலேயே 
                                                            கடைசியாகிவிட்ட 
                                                                சுதந்திரத்தை
                                                         ஓடி ஓடியே 
                                              உயிர்பிப்பதன் வழியாக
                                                        சபிக்கப்பட்ட
                                                      தீர்த்தயாத்திரைகளை 
                                                          சிலர்தான் 
நிறைவேற்றிக்கொண்டார்கள்
                                                          பலர்
                                       பரிதாபங்களை வெல்ல முடியாமல்
                                                     பாதிப் பாதைகளில்
சிதறிப்போனார்கள்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
.
அழிவுகளுக்குப் பிறகும்...
கைவிடத் தயார்
என்று தற்காலிகமாக
சொன்ன
இனத்தின் 
அவமானம்
போலிக் கண்ணீரில்
நனைந்து முடிந்தது...

யுத்தத்  துயரிலிருந்து
மீள முடியாத 
மனிதர்களின் தனிமை 
இறுதியில் மீட்பென்று
முழுக்க முழுக்க
நம்பியே 
உள்க் குவிகிறது....

எல்லைகளுக்குள்
வாழப் பழகிய 
உணர்ச்சிகரமான
கதாபாத்திரங்கள் 
புறக்கணிப்பை 
மோதல்களில்
மையம் கொண்டு 
நகர்த்திப் பார்க்கிறது... 

அவமதிப்புகளை
மௌனமாக ஏற்கிற
சீரழிவுக்கு
வெளிப்படையான
காரணமோ
தீர்வுகளோ இல்லாத 
வாக்குறுதிகளை 
பழையபடி
ஏற்றுக் கொள்ள
முடிவதில்லை.....

வழக்கம் போலதான் 
வரலாறு சொல்லும்,
"மீண்டும் மீண்டும் 
தோற்கடிக்கப்பட்டோம்".
என்பதில்  
நெஞ்சு வலிக்க
ஆரம்பிக்கிறது
அதனாலேயே 
அழிவுகளுக்குப்  பிறகும் 
அமைதி  
தேவையானதாக 
இருக்கிறது  !
..........................................................................................................

ஒன்றுமே 
வெளிய தெரியவிடாமல் 
பனைமரங்கள்
செம்பாட்டுப் பாதையில் 
முகத்தை 
மறைத்துக் கொண்டு
மனதுக்குள்
குமுறிக்கொண்டிருக்கு

சுற்றுவட்ட வயல்
வரப்புக் காணிகளோடு
இனி
ஒண்றிலுமே
சம்பந்தப்படவிரும்பாத
அதன்
அசைவுகளைக்
கார்த்திக்கை காற்றும்
தொட விரும்பவில்லை

ஒவ்வொன்றிலும்
நம்பிக்கை இழந்து
ஒதுங்கியிருக்க
விதிக்க வைத்து விட்டுப்
போனவர்களைக்
குறித்துக்
குயில்கள் எழுப்பிய
அவலச் சத்தம்
இப்பவும்
நல்ல நினைவிருக்கு

ஒற்றுமையின்
பலம்
தாய் மண்ணின்
நிலமென்று
சூறாவளிகள் வருமுன்
காவோலை
தத்துவம் சொல்ல
குருத்தோலை கேட்கவில்லை

தந்திரமாக
யுத்தம் செய்து
கோட்டையைப் பிடித்தவர்கள்
ராஜதந்திரங்களில்
கோட்டைவிட்டதை
வேற வழியின்றி
இளம் வடலிகள்
வரலாறாக எழுதிப்பார்க்குது

பழைய
தனிப் பனைகளுக்கு
அடியும் நுனியும் வயதாக
அறளை பெயர்ந்து
ஒரு
விடியாத தேசத்தின்
வரலாற்றை
முழுமையாகச்
சொல்லவே முடியாமல்
இடையில் இறந்து
போகலாம்.