Saturday, 9 January 2016

பெட்டிசம் பாலசிங்கம்.

நீண்ட அமைதியில் உறங்கும்  மனதை உடைத்து வெளியேறும் சம்பவங்களும் ,அதைத்  தோற்றுவித்த மனிதர்களின் விசித்திர குணங்களும்   மிக முக்கியமான விஷயமாக மாறி  அந்த மாதிரியான கதைகளைப் பல  சமயம் அழகாக அமைத்து விடும் என்பதை  மறுப்பதற்கு இல்லை . எனினும்  கிராமங்களின் உயிர்ப்பை இழந்த வரலாறு பெருகி வரும் நேரத்தில் தாமோதர விலாஸ் சாம்பாரு  எப்படி தரமாக இருந்ததோ அதேபோல மசால் தோசையும் தொட்டுக்கொள்ள  மிளகாய்ப் பொடியும் கைக்குள்  இருந்த காலத்தில் 

                                              எங்களின் ஊரில   சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் . அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக  சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும்.

                              பெட்டிசம் அதை ஒரு சமூக சேவைபோல தான் செய்தார் ,ஆனால் அவரின் சேவை பலருக்கு பீதியக் கிளப்புவதால்  அவரை ஊருக்குள்ள ஒருத்தருக்கும் பிடிக்காது . அயலட்டையில் யாருமே அவரோடும் ,அவரின் மனைவியோடும் கதைபதில்லை , நன்மை தீமையில் அவர்களை ஒதுக்கித்தான் வைத்து இருந்தார்கள் ,பெட்டிசம் மென்மையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார் , வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடீனேன்,," என்பதுபோல நிலம் அதிராமல் , தலையைக் குனிந்துகொண்டு போறது தெரியாமல் போவார் , வாறது தெரியாமல் வருவார் ,ஆனால் அவருக்கு ஊருக்குள்ள என்ன நடக்குது எண்டு கடுவன் பூனை போல எல்லாம் தெரியும் ,
                                            
                                              பெட்டிசம் முக்கியமா, ஊருக்குள்ள விதானை வசதியான யாருக்கு கூப்பன் காட் கொடுத்திருகுரார் எண்டு A.G.A என்ற உதவி அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார் , A.G.A எந்த மதகு கட்டுற கொன்ட்ராகில எத்தினை சீமெந்து பாக்கை சுருட்டினது எண்டு G.A என்ற அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார், பெட்டிசம் தனிப்படவும் புரளியைக் கிளப்புவார் ,  ஒருவரைத் தவிர எங்கள் ஊரில் அவரோட  வேறு  யாரும் நேருக்கு நேர் நிண்டு கதைக்க மாட்டார்கள் , கதைச்சால் விளக்கெண்ணெய்க்க வெள்ளைப் பூடு போட்ட மாதிரி வில்லங்கம் வெடிக்கும் .

                                           அந்த ஒருவர் தான்  புண்ணியக்குஞ்சி . புண்ணியக் குஞ்சி   ஆருக்குமே பயம் இல்லை. அவர் பெட்டிசம் அளவுக்குப்  படிக்கவில்லை,அரசாங்க வேலையும் செய்யவில்லை   , ஆனால் வாயல வெட்டி வீழ்த்தி  ." உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள் " கதை போல அவரோடு  வாயைக் கொடுத்து  முண்டினால்  கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்  வாழ்க்கை கடைசியில்  அலங்கோலமாய்த் தான்  முடியும் ,அவர் தான் பெட்டிசத்தை எப்பவும் 

                                  " என்ன கிளாக்கர் ஊர் அமைதியா இருக்கு,,பிரளயம் ,,பிரகண்டம் ஒண்டும் நடக்குதில்லையே,,,மெய்யாத்தான் ஊருக்குள்ள எல்லாம் சட்டப்படி ஒழுங்கு முறையில்   நடக்குதோ  அல்லது மேலோட்டமா  சாம்பிராணி போட்டு உள்ளுக்கு அலுவல்கள் நடக்குதோ ஒரு சிலமனும் விளங்குதில்லை "

                              "  புண்ணியம்,,,இந்த ஊரில எந்தக் காலத்தில  எல்லாம் ஒழுங்கா நடந்தது சொல்லு பார்ப்பம்,,கடவுளுக்குப் பயந்த ஒரு சீவன் இந்த ஊரில இருக்குதெண்டு எனக்கு காட்டு பாப்ர்ப்பம் ,,"

                               " காட்டினா அதுக்குப் பிறகு என்ன செய்வியள் கிளாக்கர் "

                              " நான் இதோட  கொம்பிளைன் எழுதுறதை,,அடுத்தவனில பிழை பிடிக்கிறதை அடியோடு விடுறன் ..புண்ணியம்  இங்கே எல்லாரும் திருகுதாளம்,,என்ன இன்னும் பிடிபடவில்லை  நீ உட்ப்பட ,,நீ எண்டா பெரிய திறம் எண்டு நினைக்காதை "

                                 "  அதென்னெண்டு  கிளாக்கர் ரெண்டு உள்ளங்  கையாலும் அடிச்ச மாதிரி அப்படி சொல்லுரிங்க ,,ஒரு புருப் இல்லமால் சொல்லக்கூடாது...பெட்டிசம்  எழுதக்கூடாது "

                                         "  பாத்தியே நீ பொயிண்டுக்கு சுத்தி வளைக்காமல் வந்திட்டாய்,,பெட்டிசம்  எழுதுறது  எண்டுறதும்  ஒரு உண்மையின் இன்னொரு வடிவம் தான் "

                                      " எப்பன் எல்லிப்போல  எனக்கும்  விளங்கிற மாதிரி பறையவேனும் கிளாக்கர்,,நான் என்ன உங்களைப்போல கொவோர்மேன்டில கோழி மேய்க்கிற வேலையே செய்தனான்  "

                                 " புண்ணியம் இங்கிலீசில் ஒரு விசியம் சொல்லுவாங்கள்  There is an old adage that says: எனக்கு  அது இங்கிலிசில் சொன்னால்தான் அதன் அர்த்தம் சரியா வரும்,,அது என்னென்டா   If it looks like a duck, and  walks like a duck, and quacks like a duck, then it is a duck!..சில விசியங்களை அசுமாத்ததில பிடிக்கலாம்,, மிச்சம் கொஞ்சம் விசாரிக்க வெளிய வரும் .."

                                              இப்படிதான் அவர்கள் உரையாடல் இருக்கும்,பெட்டிசம் இங்கிலிஸ் தொடங்கினால் புண்ணியக் குஞ்சி அதுக்குமேல கதைக்க மாட்டார் . பெட்டிசதுக்கு தெரியும் புண்ணியக் குஞ்சி அவளவு மோசமான ஆள் இல்லை எண்டு. ஆனால்  முக்கியமா எங்களின் சந்தியில் சில்லறைக்கடை வைச்சு இருந்த சுப்பிரமணியத்தை , அவர் சில்லறைக்கடை வைச்சு இருந்ததால் சில்லறை மணியம் என்று சொல்லுவார்கள் ,அவரைத்தான் பெட்டிசம் கண்டபடி விமர்சிப்பார்

                             " சில்லறை மணியம் வாழைப்பழம் ஒருகிலோ 25 ரூபாய் எண்டு போட்டு , பழத்தோட தோல் ,காம்பு எல்லாத்தையும் அதுக்குள்ளேயே  நிறுக்குறான், சில்லறை மணியம் காசு உரப்பையில அள்ளிக்கட்டுற திரிக்கிஸ் விளையாட்டு இனி கனகாலத்துக்கு ஓட்டுறது கஷ்டம் , அவனுக்கு நிறுத்தல் அளவு திணைக்களத்துக்கு கொம்பிளேன் எழுதி வைக்கப் போறான் பார் ஆப்பு  ... "

                                        எண்டு சொல்லுவார். சுப்பிரமணியத்துக்கும்  கொம்பிளேன் எழுதி வைக்கப் போற ஆப்பு பற்றி  தெரியும்,  சில்லறை மணியம் கோவத்தில எப்பவும்

                        " பெட்டிசம் ,கையில் அம்புட்டான் எண்டால், அவன்ட்ட ........   ரெண்டையும் நல .....எடுத்துப் போட்டுதான் விடுவன் " எண்டு திட்டுவார்,

                                 ஆனால் ஒருநாளும் அவர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதும் அந்த குருசேத்திரப்போர் நடக்கவேயில்லை , உண்மையில் அவர்கள் இருவரின் சண்டைக்கு வேற ஒரு காரணமும் இருந்தது . அது பெட்டிசதின் பொஞ்சாதி பரமேஸ்வரி !

                                   முறிஞ்சு விழுகிற மாதிரி மெலிந்த தோற்றம் உள்ள திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம் என்ற அந்த பரமேஸ் , எங்கள் ஊரில் ஒரு காலத்தில் பஸ் கொம்பனி வைச்சு நடத்தின பணக்காரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவா. அரசாங்க உத்தியோகம் செய்யும் ஆண்களை கலியாணம் கட்டுவது ஒரு வித ஸமூக அந்தஸ்து என்று அடையாளம் இருந்த நேரம் கச்சேரியில் கிளார்க் ஆக இருந்த பாலசிங்கத்தை அவாவுக்கு கட்டிவைக்க,அந்தக் கிளார்க் எவளவு கரைச்சல் பிடித்த மனுஷனா ஊரில் உள்ளவர்களுக்கு எதிர் காலத்தில் மாறுவது பற்றி அந்த மனுசிக்கி தெரிய வாய்ப்பே இல்லைதான்.

                                      மற்றப்படி அவாவை பெட்டிசம் யாரோடும் பேச அனுமதிப்பதில்லை . வீராளி அம்மன் கோவிலில் கேதாரகெளரி விரதம் நடக்கும் நேரம் , கெளரி காப்பு போட்டுகொண்டு , குழந்தைகள் இல்லாத காரணத்தாலோ தெரியவில்லை  எப்பவுமே அபிராமி அந்தாதி கண்களில் நீர் வழிய தலையைக் குனிந்துகொண்டு

                              " நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! " 

                                           என்று மனமுருகி படிப்பதை பார்க்கலாம். மற்றப்படி வெளியே காண்பதே அரிது .

                                    ஆனால் கொஞ்சம் விரசமாக பெட்டிசத்தின் பொஞ்சாதி எப்பவுமே சுப்பிமணியம் கடையில வந்து நிண்டு சில்லறைச் சாமான் வேண்டி முடியவும் அவரோட சிரிச்சு சிரிச்சு பேசிக்கொண்டு நிற்பா. அவாவோட ஊருக்குள்ள ஒருவரும் கதைககாததால அல்லது வேற ஏதும் காரணமா எண்டு எனக்கு தெரியாது. முதலில் மணியமே ஒரு சுவாரசியம் இல்லதா ஒரு மனிதப்பிறவி அவரோட எப்படி ஒரு பெண் மணிக்கணகில பேசுறா எண்டு விளங்கவேயில்லை. ஆனாலும் இந்த உலகத்தில பெண்களுக்கு யாரை உண்மையாகப் பிடிக்கும் ,பிடிக்காது எண்டும் அறுதியா சொல்லவே முடியாது, சில நேரம் பேச யாருமே இல்லாததால் ஒரு நட்பாக சில்லறை மணியதுடன் பேசியும் இருக்கலாம் , இல்லையா ,  சொல்லுங்க பார்ப்பம்.

                                       பெட்டிசதின் பொஞ்சாதி விசியம் இல்லாமல் சுப்பிரமணியம் கடையில நிண்டு நோகாமல் நொங்கு தின்னுரா எண்டு கதைவெளியே  கசிஞ்சு , அது மலிஞ்சு சந்தைக்கும் வர ,ஊருக்குள்ள எப்படியோ கதைவெளி வந்திட்டுது , இவளதுகும் மணியம் ஒரு பழைய பஞ்சாங்கம், பாக்கிறதுக்கு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்புள்ள அவர் ஒரு நாளுக்கு ஒரு சுருட்டுதான் பத்துவார், சுருட்டை வாயில வைச்சு கொண்டு இருப்பார் பத்தவே மாட்டார் , ஆனால் பத்தினா, அது பத்தி முடியும்வரை அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார், 

                             அவர் கடையில் சேட்டுப் போட்டாமல் , கட்டி இருக்கிற சங்கு மார்க் சாரத்தை பொம்பிளையல் குளிக்கும்போது பாவாடையை உயர்த்திக் குறுக்குக்  கட்டு கட்டுவது போலக் கட்டிக்கொண்டு புழுங்கல் அரிசி மூட்டைக்கு மேலே ஏறி இருப்பார் . அவர் வைச்சு இருக்கிற ரேடியோவில் எப்பவுமே கண்டசாலா ,திருச்சி லோகநாதன் பாடல்கள் பாடும் இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டில் பழையபாடல் நிகழ்ச்சிதான் பாட விட்டுக்கொண்டு இருப்பார். கடையில் ஒரு இளம் பொடியனை எடுபிடி வேலைக்கு வைச்சு இருந்தார். அவனைக் கல்லாப்பெட்டிக்குக் கிட்டப் போகவே விடமாட்டார்  

                       ஒருநாள் அவர்

                                           " என்னட்டை ஒரு கேசட் இருக்கு , பரமேஸ் கொண்டு வந்து தந்தாள் ,உங்கட வீட்டு கேசட் ப்ளேயர்ஐக் கொண்டு வந்து  அது என்ன பாட்டு எண்டு போட்டுக் காட்டுறியா?"           

                                                எண்டு கேட்டார் ,  நான் பரமேஸ் யார் எண்டு கேட்கவில்லை, நான்  அவரிடம் இருந்து அந்த கெசட்டை  வேண்டிக்கொண்டு வீட்டு கேசட் ப்ளேயரில்  போட அதில முதல் பாடல்

                       " நேற்று ராத்திரி யம்மா ,,தூக்கம் போனதே யம்மா , ஆத்தாடி நான்  அல்லாடுறேன்....எங்கே சுகம் ..,,"

                எண்டு கேசட் ப்ளேயர் படத்தொடங்க,  அம்மா வந்து  

                          "  நிப்பாட்டடா இந்தக் கண்டறியாத பாட்டை,  இந்தப் பாட்டுதானா  இப்ப உனக்கு கேக்குது,  இந்தப் பாட்டுக்  கேட்கிற வயசா இப்ப உனக்கு,  எங்க இருந்துதான் இந்த சீ எண்டு போற வளருற பிள்ளைகளைக் சீரளிக்கிற பாட்டுகளை எடுத்துக் கொண்டு வாரியோ அம்மாளாச்சி ஆனா இந்தப் பொடியிண்ட போக்கே ஒண்டும் விளங்குதில்லை "

                                   என்று  சாயங்காலப் பூசையை ஆரம்பிக்க, நான் பேசாமல் கேசட்டையும் , எங்களின் கேசட் ப்ளேயரையும்  கொண்டு போய் அவரோட கடையில் வைச்சிட்டு  

                            " நல்ல நல்ல பாடல் எல்லாம் இதில இருக்கு மணி அண்ணே , நல்லா ரசிசுக் கேளுங்கோ மணியண்ணை ,கேட்டு முடிய பிறகு வாறன் மணியண்ணே" எண்டு போட்டு .நான் பேசாமல் வீட்டை வந்திட்டன்.

                                  சுப்பிரமணியம் தனியாத்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டு இருந்தார் , அவருக்கு மனிவி பிள்ளைகள் இல்லை எண்டுதான் ஊருக்குள்ள அறிய்பட்டாலும், அவர் கடைக்கு பின்னாலா ஒரு பத்தி இறக்கி சின்ன இருட்டானா ரூமில ,நிறைய யானைச் சோடாப் பெட்டிகளால் அந்த ரூம் வாசலை மறைச்சு ,அது அலாவுதீன் குகை போல இருக்க ,நான் ஒருநாள் அதுக்குள்ளே என்ன இருக்கு எண்டு சந்தேகமா எட்டிப்பார்த்தன் ,மணியம் என்னைக் கண்ட்டுடு  ,

                       " பிறன் மனை நோக்குதல் பஞ்சமா பாதகம் " எண்டு சந்தேகமாவே சொன்னார் ,

                           நான் அவருக்கு உதவி செய்வேன் ,சனிகிழமை முலவை சந்திக்குப் போய் அரிக்கன்  கிடாய் இறைச்சி வேண்டிக் கொடுப்பேன் ,அவர் அதை முகர்ந்து பார்த்து , ஆட்டுக் கிடாய் மொச்சை மணம் வந்தாத்தான் சமைப்பார் , இல்லாட்டி அவர் வளர்கிற நாயிட்க்கு உடனேயே அதை போடுவார். வாசம் நல்லா இருந்தா கடுகு தாளிச்சு, வெந்தயம் போட்டு நல்ல எண்ணைக்குளம்பு கருவேப்பிலை எல்லாம் போட்டு அவரே சமைப்பார். அதுக்கு பொன்னாங்காணிக்  கீரை வறை போலச் சுண்டுவார் .

                                 மணியம் ஒழுங்கா , ஸ்டைலா  இல்லாட்டியும் அவர் ஒரு நாய் வளர்த்தார் ,அந்த நாய்க்கு மொடேர்னா  " டிம்பிள் "  எண்டு பெயர் வைச்சு இருந்தார் ,அதுக்கு அவர் கடையில விக்கிற ஆணைக் கோட்டை உதயசூரியன் நல்லெண்ணெய் போட்டு போலிஷ் பண்ணுவார். டிம்பிள் நல்லென்னைப் போத்தல் போல மினுக்குமினுக்கு எண்டு இருக்கும் .ஹிந்தி நடிகை  டிம்பிள் கபாடிய போலதான் அதுவும் பவுசு விட்டுக்கொண்டு அவரோட காலுக்கை முகத்தைத் தேய்த்துக்கொண்டு திரியும்.

                               மணியம் வருசத்தில ஒருநாளும் கடை மூடவே மாட்டார் , இயக்கம்கள் ஹர்த்தால் எண்டு மூடச்  சொன்னால் ,

                      " சுடுறது எண்டா நெத்தியில ,அல்லது காதுக்க சுடுங்கோடா ,கடை மட்டும் மூடமாட்டன்,உந்த வெருட்டுக்கு வேற ஆரையும் தேடிப் பிடிச்சு வெருட்டுங்கோடா,,முதல் ஈழத்தைப் பிடியுங்கோடா பிறகு வந்து எங்களைப் பிடிச்சு  ஆட்டுங்கோடா ,,இப்பவே  இந்த உலுப்பு உலுப்புரின்களே ,,நீங்கள் எங்கயடா உருப்படப் போறிங்கள்     " 

                              எண்டு ஒற்றைக் கதவில திறந்து வைத்துக் கொண்டு இருப்பார் ,கடை யை  மூடுறது அவரைப் பொறுத்தவரை நடக்காத விசியம் 

                                  ஒரே ஒருநாள் அவரின் கடை காலையிலேயே மூடி ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டிருர்க்க , ஊருக்குள்ள அது நெருப்புப்போல பரவ , என்னோட அம்மா

                                 " என்னடா நடந்தது மணியத்துக்கு , இந்தநேரம் பார்த்து குஞ்சரத்தையும் சிலமன் காணவில்லையே "

                                      எண்டு அங்கலாய்ச்சா  , கீரை விக்குற குஞ்சரம்தான் என்னோட அம்மாவுக்கு வீக்கிலீக்ஸ் போல ப்ரேகிங் நியூஸ் கொண்டு வாற கிழவி  ,மத்தியானம் சொல்லி வைச்ச மாதிரி குஞ்சரம்

                                 " எடி பிள்ளை விசியம் தெரியுமே , பெட்டிசதிண்ட மனுசி எல்லோ மோசம் போயிட்டுதாம் ..இதென்ன படக்கு படக்கு எண்டு நெஞ்சு அடிக்குது,,அம்மாளாச்சி ஆனா ஒரு போக்கும் விளங்குதில்லை,,பெடிச்சி நல்ல உஷாரா நடமாடிக்கொண்டு இருந்தாளே .." 

                                 எண்டு கொண்டு வர. அது உண்மையான செய்தியாய்த் தான் இருந்து 

                                         பெட்டிசம் மனுசி எப்படி செத்தா  எண்டு யாருக்கும் காலையில் தெரியவில்லை ,ஊருக்குள்ள யாரும் முடிஞ்சா காலையில மேற்குப் பக்கம் பறை மேளம் கேட்கும் , இந்த நிகழ்வில் அப்படி ஒண்டுமே கேட்கவில்லை , அதைவிட பெட்டிசம் வீட்டில சாவு விழுந்தா அது கொஞ்சம் அமுன்கிதான் வெளியவரும், பெட்டிசம் எங்களின் ஊரை சேர்ந்தவர் அல்ல  ,அவரின் மனுசிதான் எங்களின் ஊரில பிறந்து வளர்ந்தவா , கொஞ்சநேரத்தில பெட்டிசம் மனுசியின் சொந்தகாரர் எங்களின் வீதி வழியாகப் போறதைப்  பார்த்திட்டு,

                         " நான் போய் என்ன நடக்குது எண்டு பார்க்கவே"

                        எண்டு அம்மவிடம் கேட்டேன் ,அம்மா பொதுவா செத்தவீடுகளுக்கு போகவிடமாட்டா ,ஆனாலும் பெட்டிசம் வீடுக்கு யாரும் போகபோறதில்லை,அதால என்னை அனுப்பி விடுப்பு அறிய விரும்பியதால் போகசொன்னா .

                                                         நான் பதுங்கிப் பதுங்கிப் போனேன் ,செத்த வீட்டில தோரணமும் தொங்க இல்லை ,வாசலில் சாம்பல் வாழையும் இல்லை, பெட்டிசம் தலையில துவாயைப் போட்டுக்கொண்டு ஒரு மூலையில் இருக்க, அவரோட மனுசியை ஒரு வாங்கில கிடத்தி , மூக்கில பஞ்சு அடைஞ்சு, தலைமாட்டில ஒரு குத்து விளக்கு கொளுத்தி வைச்சு,யாரோ அவர்களின் உறவினர் முறையான  பெண் ஒரு பனை விசிறியால இலையான்களை விசிறிக்  கலைக்க, வேறு சில வயதான பெண்கள் 

                             "தாமரகம் பொன் உருக்கி , தங்கமென வளர்த்ந்த சீமாட்டிய ,,காலான் தேதி வைச்சு  , ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட்டலறும்...."   

                          எண்டு அறுந்துபோன ஈனக் குரலில் ஒப்பாரி வைக்க, என்னைக் கண்டு போட்டுப்  பெட்டிசம் எழும்பி வந்து, 

                          " உன்ற கொம்மாவுக்கும், ஊரில உள்ள பெண்டுகளுக்கும் என்ன கோதாரியே, நான் தான் எல்லாருக்கும் அள்ளி வைக்கிறன் எண்டு ஒதுக்கினாலும், எண்ட பொஞ்சாதி ஒருத்தருக்கும் ஒரு வஞ்சகமும் செய்யாதா சீவன், அவள் செத்ததுக்கும் வராதா சனங்களும் ஒரு சனம்களே " எண்டு சொன்னார்.

                                     நான் மணியத்தை அதுக்குள்ள தேட , அந்தாள் சிலமனே அதுக்குள்ள இல்லை , புண்ணியக்குஞ்சி சுருட்டைப் பத்திக்கொண்டு யாரோ ரெண்டு பழசுகளை இழுத்து வைச்சுக் கொண்டு அவர்களுக்கு பழைய இத்துப்போன சிறிமா பண்டாரநாயக்கா கதைகளைச் அவரோட பாணியில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் அதோட வீட்டை வந்து அம்மாவுக்கு பெட்டிசம் சொன்னதை சொல்லவில்லை , அங்கே என்ன நடக்குது எண்டு மட்டும் சொன்னேன், அம்மா

                              " மனியத்திண்ட சிலமன் ஏதும் அறிஞ்சியா "

                                  எண்டு சந்தேகமா கேட்டா , 

                              " மணியம் அங்கேயும் இல்லை,கொஞ்ச சனம் தான் அழுதுகொண்டு  இருக்குதுகள்  " எண்டு சொன்னேன் .

                                       ரெண்டாம் நாள் காலையிலயும் மணியம்கடை மூடி இருக்க ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டு,ரெண்டு மூன்று தோரணமும் தொங்க விட்டிருக்க, அண்டைக்குப்  பின்னேரம் போல பெட்டிசம் வீட்டில இருந்து பிரேதம் எடுத்தார்கள். ஊர்சனம் வேலிகையும் ,மதிலுக்கயும் பதுங்கி இருந்து பார்க்க ,சவ ஊர்வலத்தில பறை மேளம் , அலங்கார தண்டிகை , பட்டினத்தார் பாட்டுக்காரர் ஒருவரும் இல்லை , சும்மா ஒரு பிரேத ஹேர்ஸ் வண்டிய சுற்றி ,அவர்களின் உறவினர் கொஞ்சப்பேர் வர ,

                                            எல்லாத்துக்கும் முன்னால , வெள்ளை வேட்டி கட்டி , நசினல் சேட்டு போட்டு , உத்தரியம் போல ஒரு சால்வை சுற்றிக்கொண்டு சுப்பிரமணியம் சோழப்பொரி எறிஞ்சு கொண்டு  மாணிக்கவாசகர்   பாடின செத்திலாப் பத்து  என்ற தொகுதியில் உள்ள  ,
                           
                                 "  புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந்துள்ளக் கருத்தினை இழந்தேன் போனார்.....  " 

                                            என்ற பாடலைப் பாடிக்கொண்டு போனார் .... 
.
.

Tuesday, 5 January 2016

ஞானப்பிரகாசம் ஹோட்டல்

காலம் என்பது சில நேரம் விரும்பாத நேரத்தில் எதிரும் புதிருமாகக்  கோடுகள் போலக் கோலம் போட்டுவிடும். அதன் வடிவங்கள் மேலோட்டமாகப் பார்க்க அலங்கோலமாக இருக்கும். கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒரு வித அழகு மறைமுகமாக இருக்கும். கூடவே  தவிர்க்க முடியாத வேதனைகளும் வலிகளும் அதன் போக்கில் கடைநிலையில் வழிகளை அடைத்துக்கொண்டும் இருக்கும் .அதிலிருந்து சிலரே மீண்டு வருகிறார்கள்.

                                   எங்களின் ஊரில  எங்கள்  வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி, சந்தியில ஞானப்பிரகாசம் என்ற ஞானத்தோட தேத்தண்ணிக் கடை இருந்தது, அதுக்கு ஞானப்பிரகாசம் ஹோட்டல் எண்டு பெயர்ப் பலகை ஹில்டன் ஹோட்டல் ரேஞ்சுக்கு ,முன்னுக்கு இறக்கிய தாழ்வான பத்திக்கு மேல தொங்கினாலும், அது இருக்கிறது அதிகம் பேருக்கு தெரியாத மாதிரிதான் இருந்தது அந்த ஹோட்டல் , 

                            ஞானப்பிரகாசம் ஹோட்டல்க்கு ஒரு பக்கம் பழமுதிர்சோலை சில்லறைக் கடையும், இன்னொரு பக்கம் அன்னக்கிளி பாண் பேக்கரியும் இருந்தாலும், ஞானப்பிரகாசம் ஹோட்டலில் இருபத்துநாலு மணித்தியாலம் அலறும் ரேடியோவும், பின்னேரம் தொடங்க்கி நடு இரவுவரை ஹோட்டலின் முன்னால்  கொத்து ரொட்டிக்காரன் "  டக்காடா டக்கடா " எண்டு, தண்டவாள தகட்டில ரொட்டி போட்டு உலகம் அதிரக் கொத்துற சத்தமும் கட்டாயம் அதால போற வாற எல்லாரையும் திரும்பிபார்க்க வைக்கும், இரவின் அமைதியில் ரொட்டிக்காரன் கொத்துற சத்தம் எங்களின் வீட்டுக்கே கேட்கும் 
                                         
                              பிரகாசம் எண்டு எல்லாராலும் அழைக்கப்படும், ஞானப்பிரகாசம் மலையகத்தைச் சேர்ந்தவர், ஆனால் பனங்காய் சூப்பின மாதிரி யாழ்ப்பாணத் தமிழ் கதைப்பார் . அந்த நேரம்  நாற்ப்பது ஐஞ்சு சொச்சம் வயசில் இருந்தார். சுமாரான உயரம் உள்ளவர்.  ஆனால் பெருத்த உடல்வாகு அந்த வயதுக்கு அவருக்கு  இருந்த வண்டி பெரிதாக இருந்தது. சிங்களவர் போல சாரம் கட்டுவார்.  அவர் மனைவி சிங்களப் பெண், அவர்கள் எப்படி எங்களின் ஊருக்கு வந்து,ஹோட்டல் தொடக்கினார்கள் எண்டு அதிகம் வரலாறு யாருக்கும் தெரியாது.

                                     பெட்டிசம் பாலசிங்கம் மட்டும் ஞானப்பிரகாசம் ஏன் ஹட்டனில் இருந்து, சின்ன வயசிலேயே கொழும்புக்குபோய்  கொழும்பு ஹபர்ல வேலை செய்து, அங்கே வேலை செய்த நேரம்  சிங்களப் பெண்ணைக் காதலித்து, இலங்கையில் எல்லா இடமும், எல்லா இனமும் வாழக்கூடிய நேரத்தில, எங்கள் ஊருக்கு பெட்டி படுக்கையோட வந்து அந்த இடத்தை எடுத்து வருசக் கணக்கா ஹோட்டல் நடத்திக்கொண்டு இருக்கும் பின்னணி ஓரளவு தெரிந்தவர், 

                                           ஆனாலும் பெட்டிசம், அவர் சமூக அக்கறை சார்ந்து கொஞ்சம் எச்ற்றாவா, அந்தச் சிங்களப் பெண் இன்னொருவரின் மனைவி எண்டும் ,

                        " பிரகாசம் அவளை மருந்து போட்டு  மயக்கி உடுத்த சீலையோட அந்தப் பெடிச்சியை யாழ்பாணம் இழுத்துக் கொண்டு வந்திட்டான் "

                                      எண்டும் அவர் பாணியில் விபரம் சொல்லுவார். அது உண்மையா எண்டு ஊருக்குள்ள யாருக்கும் தெரியாது,  அதைவிட அது பெட்டிசம் பாலசிங்கதைத் தவிர வேறு யாருக்குமே தேவை இல்லாத ஒரு விசியமா இருந்தது.  ஞானப்பிரகாசம்  அவர் பொஞ்சாதியை " நோனா "  எண்டுதான் கூப்பிடுவார் சில நேரம் கோபம் வரும்போது " கழுதை " எண்டு கூப்பிடுவார், அவரோட வாழ்கையத் திரும்பிப் பார்க்கும் நேரம் எல்லாம் , ஆட்களுக்கு முன்னாலேயே கோபமா 

                        "  கேத்தாரமா பஞ்சாலையில் வெசாக் பாக்கப்போன நேரம் இந்தக் கழுதையை மட்டும் சந்திக்காமல் இருந்து இருந்தால் இப்ப நான் இருக்க வேண்டிய இடமே வேற , இந்தக் கழுதை  கலியாணத்துக்குப் பிளான் போட்டு  குழிப் பனியாரத்தை  சீனிப் பாணியில தோச்ச மாதிரி போட்டுப் பினைஞ்சு  கதைச்சு மடைக்கிப் போட்டுதே நாட்டு வழப்பம் தெரிஞ்ச கழுதை  "  என்று திட்டுவார் ,

                                    அந்த நோனா, ஒரு நாளும்  ஞானப்பிரகாசத்தை  ஆட்களுக்கு முன்னால் மரியாதை குறைவா பேசமாட்டா, அதிகம் யாழ்ப்பாணத்  தமிழில் கதைக்கமாட்டா, ஒரு வித குழந்தைகளின்  மொழித் தமிழில் சிங்கள வார்த்தைகள் தவறி விழுவதை  விழுங்கி விழுங்கி  பகுபதம் பகாப்பதம் பிழையாக வசனம் வைச்சு, 

                                " உங்களுக்கு என்னோட வாழ விருப்பம் இல்லை என்றா, ஒரு போத்தல் பொலிடோல, அல்லது ஒரு முழம் தேடாவளயக் கயிறு வேண்டி தாங்கோ,,நான் யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இந்த உலகத்தை விட்டே போறேன்,,இனி என்னால உங்களைக் கட்டி போட்டு  பிறகு பிக்குது பிடுங்குது எண்டு விட்டுப்போட்டு என்னோட அப்பா,அம்மா உள்ள சிங்கள நாட்டுக்கு போறதை விட இங்கேயே சாகலாம் " என்று சொல்லுவா  

                                   " ஓமடி ஓமடி ,,இனி என்னத்தைக் கதைச்சு என்ன வரப்போகுது, கொழும்புக்கு வேலைக்கு வராமல் உடப்புசல்லாவையில் இருந்து இருந்தா,,இப்ப எங்கயும் இரப்பர் தோட்டக் கானியோடு ஒருத்தியைக் கலியாணம் கட்டி,,காலையும் அந்திக்கும் கித்துள் கள்ளுக் குடிச்சுக்கொண்டு இருந்து இருப்பேன் " 

                                " பிறகேன் பன்சாலையில் வைச்சு கண்ணடிச்சுக் காதலிக்கிறேன் ,  சொந்தமா  இரப்பர் தோட்டம் இருக்கு எண்டு ,,அதில பால் வடியுது அது இது எண்டு பொய் சொல்லி என்னோட அப்பா அம்மா சகொதறன்களோடு சண்டை பிடிச்சு இங்க கொண்டு வந்திங்க "

                               " அதுதாண்டி  நான் செய்த மோட்டுப் பிழை ,,என்னோட தமிழ் சாதி சனத்துக்க ஒரு பொம்பிளை எடுத்து இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்குமே "

                             " அட,,அட,,அவளையும் என்னைப்போலதான் அடிச்சுப் பிழிஞ்சு தோச்சுக் காயப் போட்டு இருப்பிங்க,,போங்க நீங்க ,,என்னோட  இனி இந்தக்  கதை கதைக்க வேணாம் "

                              " பார்த்தியே உனக்கு வாய் கபரக்கொய்யாவுக்கு நீளுற மாதிரி நீண்டுகொண்டு வருகுதே ,,வாயைப்பொத்திக்கொண்டு போ,,எனக்கு விசர் வரப் பண்ணாதை ,,நான் பாணந்துறை ஓசிக் கொறியாவின்  சண்டியங்களுக்கே அழுத்மாவத்தை சந்தியில் வைச்சு சுருள் வாள் எடுத்துக்கொண்டு போய் வெளுத்தனான் , இண்டைக்கு வெள்ளிக்கிழமை அதால சொல்லுறேன்  என்  கையாலயே  அடிவேண்டிச் சாகாதை "

                                                    என்று திட்டுவார். ஞானப்பிரகாசம், உண்மையில அவளவு சண்டியனா என்று தெரியாது , கட்டின  மனுசியை வெருட்டுற ஆம்பிளைகள் எல்லாருமே இப்பிடி வாள் எடுத்து வீசி சண்டித்தனம் செய்த மாதிரி வாயால கதைப்பது வழமை . ஆனாலும் விதி என்பதுதே மைதானங்களை நாங்களாவே தேர்ந்தெடுக்க முடியாத , எழுதப்பட்ட  ஆட்ட விதிகள் இல்லாத விளையாட்டு. அது முடியும் போதுதான் வெற்றி தோல்வி என்பதே தெரியவரும் . உங்களுக்கும் எல்லாருக்கும் போல ஞானப்பிரகாசத்துக்கும் அதில விதி விலக்கு இல்லை .  

                                  குள்ளமான உருவம் உள்ள ஞானப்பிரகாசம்,  ஹில்டன் இண்டர்னசினல்  ஹோட்டல் முதலாளி போல எப்பவும் கசியரில் ஏறி இருந்து , உள்ளங்கை கை ரெண்டையும் ஒன்றோட ஒன்று தட்டிக்கொண்டு ஜோசிதுக் கொண்டு இருப்பார், அல்லது வெளிய கடைக்கு முன்னால ஒரு மர ஸ்டூல் போட்டு அதில காலுக்கு மேல காலைப் போட்டு,  அதை ஆட்டிக் கொண்டு, பிரிஸ்டல் சிகரட்  குடித்துக்கொண்டு இருப்பார்,ஞானப்பிரகாசம் பிரிஸ்டல் சிகரட் தவிர வேற எந்தவகை சிகரட்டும் குடிக்க மாட்டார், அவர் குடிக்கும் பிரிஸ்டல் சிகரட்டிலேயே அரைவாசிதான் பத்துவார்,,மிச்ச அரைவாசியை சுண்டி எறிவார்.

                                            சில நேரம் எங்கள் ஊரில இருந்த உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர் எப்பவும்  கனகலிங்கம் சுருடுப் பத்திக்கொண்டு  ஞானப்பிரகாசத் துக்கு முன்னாலா நிலத்தில குந்தி இருக்க , ஞானப்பிரகாசம் புகையை நல்லா உள்ளுக்க இழுத்து, ஊட்டிக் குளிர் போல  ஊதி வெளியவிட்டு கொண்டு " எப்படி பிசினஸ்ஐ டெவலப் ஆக்காலம் " எண்டு விளக்கமா  உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர்க்கு சொல்லிக்கொண்டு இருப்பார். 

                                       ஞானப்பிரகாசம்  ஒருநாளும் ஒரு வேலையும் ஹோட்டலில் செய்ததை நான் கண்டதே இல்லை ,ஒருவேளை அவர் " பிசினஸ்ஐ டெவலப் " ஆக்கிற சிந்தனையில் மூளை எந்த நேரமும் வேலை செய்துகொண்டு இருந்ததால் மற்ற வேலை செய்ய நேரம் இருக்காமல் இருந்து இருக்கலாம் எண்டு நினைக்கிறேன் . ஒருமுறை அவரோட நோனாவை 

                                 " ஏன் உங்க மாத்தையா இருந்த இடத்தில இருந்து வேலை எடுகிறார் ,உங்களுக்கு ஒரு உதவி செய்வதில்லை,,நேரம் காலம் இல்லாமல் நீங்க கிடந்தது நாலா முறியிரிங்க,பார்க்கவே ஒரு மாதிரி  இருக்கு ,  " 

                                           என்று கேட்டேன். அவா அதுக்கு 

                              "என்னை எப்படி நடத்தினாலும்  எண்ட மனுஷன் நல்லவர்  ,அவரை நான் கஷ்டப்படுத்தாமல் வைச்சு இருக்க வேணும் எண்டு விருப்பம் ,உண்மையில் அந்தாள் ஒரு  பாவம் ,,அயின்செக்க மினியா எண்டு சிங்களத்தில சொல்லுறது இப்பிடி ஆட்களைத்தான் "

                                          எண்டு சொன்னா. 

                                                தொண்ணுறுகளில் யாழ்பாணத்தில் சண்டை அமோகமா நடத்த நேரம் கரண்ட் இல்லாமல் பல வருஷம் யாழ்ப்பாணமே ஒளி இழந்த நேரம், அரிக்கன் லாம்பும், பெட்ரோல்மக்ஸ்உம் விழியாக, கார், லொறி பட்டறி இலயும் , ஜெனறேடரிலையும் மின்சாரம் இயங்கிய நேரம், ஞானப்பிரகாசம் கடையில, லொறி பட்டறியில் கரண்ட எடுத்து எந்த நேரமும் ரேடியோ பாடும் ,நாங்கள் விரும்பும் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் உள்ள  கெஸட் கொண்டுபோய் கொடுத்தா அதையும் போடுவார். 

                                         ஆனால் இரவு எப்படியும் லண்டன் பி பி சி தமிழோசை செய்தி போடுவார், அதைக் கேட்கவே நிறையப்பேர் அவர் கடைக்கு முன்னால வந்து நிற்பார்கள். அது முடிய எம் யி ஆர் , சிவாயி பழைய பாடல்கள்தான் இருட்டோடு இசைவாகிக் காற்றில் மிதந்து இரவின் மடியில்த் தாலாட்ட ,அந்தப் பாடல்களும் விட்டு விட்டு எங்களின் வீடுக்கு வரும்.  ஆனாலும் அபத்தமாக  சிலநேரம்

                       " நீர் மேகம் ஆனால் என்ன.... நான் தோகை ஆனா பின்னே....  " 

                        என்று பாடல் தொடங்க, கொத்து ரொட்டிக்காரன் டக்காடா டக்கடா எண்டு கொத்த தொடக்க, கொஞ்சநேரம் தகர சத்த தனி ஆவர்த்தனம் சத்தம் மட்டும் கேட்டு , அவன் கொத்துரத்தை நிற்பாட்ட ,

                              ."...மயில்த் தோகை எண்ணம் கண்டேன் மான் விழியே ....."  

                         எண்டு பாடலின் கடைசி வரிகள் தெளிவாக வந்து , அந்தப் பாடல் அடிவேண்டியே இறந்து போகும், அதுக்கு ஓசியில் பாட்டுக்கேக்கிற நாங்கள் ஒரு குறையும் சொல்ல முடியாது ,ஞானப்பிரகாசம் ஹோட்டலில் இருபத்து நாலு மணித்தியாலம் அலறும் ரேடியோ போடுறது பிஸ்னஸ் டெவெலப் பண்ண. எங்களுக்கு ஓசியில் மெல்லிசை மன்னரின் இன்னிசை மழை பொழிவதுக்கு இல்லையே ...சொல்லுங்க பார்ப்பம். 

                                                    ஞானப்பிரகாசம் ஹோட்டல் இயங்க முக்கிய காரணம் நிச்சயமா ஞானப்பிரகாசம் இல்லை.  அவரின் சிங்கள  மனுசிதான் அதை நாரி முறிய முறிய நடத்தினா, அவாதான் கண்ணுக்கு நெய் விட்டு , முன்னுக்கும் பின்னுக்கும் ,குசினிக்கும் டீ பட்டறைக்கும் ,கசியர் மேசைக்கும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கும் அந்த மனுஷி  மிகவும் பிரயாசையானா பெண்மணி , 

                                            கொத்துக்காரனுக்கு அடுப்புக்கு விறகு குறையுது எண்டால் பின்னால அடி வளவில, அடுக்கி இருக்கிற பெரிய மரக்குத்தியை இழுத்துக் கொண்டு வந்து, கோடாலியால பளார் பாளர் எண்டு பாலைக் குத்தியப் பிளப்பா, பிளந்திட்டு ஓடி வந்து டீ அடிப்பா, கொதிதண்ணி அடுப்புக்கு கரி அள்ளிப் போட்டுடு , கையை துடைச்சுப்போட்டு கொதிக்கிற எண்ணையில் வாய்ப்பன் போடுவா, கையை துடைச்சும் துடைக்காமலும் ஓடி வந்து கசியரில் காசு எடுப்பா,ஒரு கையால சடக்கு சடக்கு எண்டு மரக்கறி வெட்டி கொண்டு மற்றக் கையால கறிக்கு உப்பு புளி பார்ப்பா ,சடார் புடார் எண்டு சாம்பாரு வைப்பா,வடைக்கு ஓட்டை போடுற நேரமே , உரலில சம்பல் இடிப்பா, பெட்ரோல் மக்ஸுக்கு காத்து அடிப்பா, அடிச்சுப்போட்டு, டக்கெண்டு சாப்பாடு மேசை எல்லாம் துடைப்பா, வெறியில  வந்து வம்புக்கு   " பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்.. ....  ..  " எண்டு பாடிக்கொண்டு  வந்து அட்டகாசம் செய்கிரவங்களை பிடிச்சு தள்ளிக்கொண்டு வந்து வெளிய போடுவா,

                                              இதெல்லாம் இயல்பா நடக்கிற நேரத்தில்  ஞானப்பிரகாசம், கடைக்கு முன்னால மர ஸ்டூல்ல காலுக்கு மேல காலைப் போட்டு,அதை ஆட்டிக் கொண்டு,பிரிஸ்டல் சிகரட் குடித்துக்கொண்டு ,புகையை நல்லா உள்ளுக்க இழுத்து, ஊதி வெளியவிட்டு எப்படி பிசினஸ்ஐ டெவலப் ஆக்காலம் எண்டு விபரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார். 

                                            அந்த ஹோட்டலில் அவர்களின் உறவுக்காரா சுரேஷ் எண்டு ஒரு பையன்தான் சப்பிளையரா வேலை செய்தான் ,அவன் யாரவது டீ ஓடர் பண்ணினா முன்னுக்கு நிண்டு

                      " மாமி ஒரு பிளேன் டீ "

                           எண்டு கத்துறது செம்மணி வயல் வெளிகளில் ஆட்காட்டிக் குருவி தாழப்பறந்து கிரீச் கிரீச் எண்டு காத்தில ஏறிக்  காது  கிழியக்  கத்துறது போலக்  கத்தி ஓடர் கொடுப்பது எங்களின் சந்தியில் இருந்த  சுப்பிரமணியம் கடைக்குக் கேட்கும், மாமி குசினில நிண்டு

                         " ஏண்டா சுரேஷ் சாகப்போற  மாதிரி கத்துறாய்,  மெதுவா சொல்லடா "

                              என்று கிணத்துக்க நின்று கத்துற மாதிரி  கத்துறதுசுப்பிரமணியம் கடையில் இருந்து ரெண்டு வீடு தள்ளி இருந்த எங்களின் வீட்டுக்கே கேட்கும், இருவரும் கதைச்சுப் பேசி அந்த அகோர சத்தத்தை ஒருநாளும் குறைத்தே இல்லை. 

                                            ஞானப்பிரகாசம் ஹோட்டல் வாய்பன் நல்ல ருசி , பிரகாசம் மனுஷி குசினியில வாய்ப்பன் போடுறது, கிரிகெட் பிளையர் ஸ்பின் போல் போடுறமாதிரி இருக்கும். கையில வாழைபழம் பிசைந்த புளிச்ச வெள்ளைமாவை கிள்ளி, உள்ளங்கையில அமத்தி , மோதகம் போல ஒரு சுழட்டு சுழட்ட , அது சுழன்டுபோய் எண்ணையில சுழண்டு விழந்து, அதிலயும் கொஞ்சம் கிடந்தது சுழண்டு , உருண்டையா பிரவுன் கலரில வாய்பன் வரும் ,

                                               நானும் ஒருநாள்,

                                 " மாமி , நானும் வாய்பன் போட்டுப பார்க்கவா "எண்டு கேட்டேன்,

                     " அதுக்கென்ன செய்து பாருமன் " எண்டு சிம்பிளா சொன்னா,

                          நானும் சிம்பிளா புளிச்ச வெள்ளைமாவை கிள்ளி ,உள்ளங்கையில அமத்த அது விரல் இடைவெளிக்கால பிதுங்கி வெளியவர, சுழட்டோ சுழட்டு எண்டு சுழட்டியும், கடைசியில கையை உதறியும் வாய்ப்பன் மா கையையே விட்டுக் களரவில்லை, அவா சிரிச்சுக்கொண்டே

                             " பெடியா உனக்கு வாழகையில சமையல் வேலை சரியே வராது " எண்டு சொன்னா , நான் அதை அப்ப பகிடியா நினைச்சன்,,அதுவே என் வாழ்கையில் இப்பவும் விளையாடும் விந்தைக்கு பெயர்தான் விதி..

                                             தொண்ணுற்றி ஐந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கையில் யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த போது , நாங்களும் இடம்பெயர்ந்து வன்னிக்குப் போன போது,ஒருநாள் ஞானப்பிரகாசதை கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் உள்ள மதவடியில் கண்டேன், கவலையா கையைக் கட்டிக்கொண்டு பகலிலேயே நுளம்பு அடிசுக் கொண்டிருந்தார்.  அடுத்தது என்ன செய்யுறது எண்டு தெரியாத மாதிரி , நாடியைத் தடவிக்கொண்டு வாய்க்கால் தண்ணி ஓடுறதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்  

                                            " கிட்டப் போய், " என்ன முதலாளி என்ன நடக்குது , என்ன பிளான் ,ஹோட்டல் இங்கயும் திறக்கிற பிளான் ஒண்டும் இல்லையா " எண்டு கேட்டேன்,

                             " ஹ்ம்ம்,, இங்க பட்டப் பகலிலேயே நுளம்புக் கடி தாங்க முடியவில்லை ,,இங்க என்னத்தைப் பிடிச்சு என்னத்தை செய்யுறது "

                                     "  ஆனால்,நீங்க சும்மா இருக்க மாட்டிங்களே "

                                   " அது உண்மைதான்,,,சமையல் சட்டி பானை எல்லாத்தையும் விட்டுப்போட்டு வந்து நிக்குறன்,,இனி எல்லா அடுக்குகளும் புதுசா வேண்டி எல்லோ வேலை தொடங்க வேண்டும் "

                                    " ஹ்ம்ம் "

                                   " கதிரை,மேசை,சோக்கேஸ், தேத்தண்ணி பொயிலர் , கொத்து ரொட்டி போட கொத்து மேசை எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இப்ப போகப் போகுதே,,,கையில காசும் அந்தளவு  இல்லை  "

                                   "   ஹ்ம்ம் "

                            " எல்லாம் ,இந்த சிங்கள மனுசியைக் கட்டினதால  வந்தது,,இல்லாட்டி  கொழும்புக்கு வேலைக்கு வராமல் உடப்புசல்லாவையில் இருந்து இருந்தா,,இப்ப எங்கயும் இரப்பர் தோட்டக் கானியோடு ஒருத்தியைக் கலியாணம் கட்டி,,காலையும் அந்திக்கும் கித்துள் கள்ளுக் குடிச்சுக்கொண்டு இருந்து இருப்பேன் "

                                    " இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்,,இது இராணுவ நடவடிக்கையில் இடப்பெயர்வு,,எல்லாரும்  தானே இப்பிடி திக்கு திசை தெரியாமல் வன்னிக்குள்ள வந்து நிக்கிறம் "

                                 " அதுவும்,,சரிதான்,,, இப்படி நடக்கும் எண்டு முன்னமே தெரிஞ்சு இருந்தா ,,முருகண்டி,,முழங்காவில் பக்கம் ஒரு பிரான்ச் திறந்து இருக்கலாம்,,இப்ப எல்லாத்தையும் பறிகொடுதுப்போட்டு தேத்தண்ணி பொயிலர்   பத்த வைக்க நெருப்புக் கொள்ளியும் அடுத்த மனுசரிட்டக் கடன் வேண்ட வேண்டி இருக்கே "

                                " ஆனால்  உங்கட நோனா சும்மா இருக்க மாட்டவே "

                              " அவளோ,,இங்க நுளம்பு ஒரு பக்கக்  காதுக்க கிண் கின் கிண் கின் எண்டு புறுபுறுக்க நோனா மற்றக் காதுக்க கடை எடு கடை எடு புறுபுறுக்க எனக்கு இரணைமடுக்குளத்துக்க குதிச்சு சாகலாம் போல இருக்கு "

                                   "  ஒ அப்ப நோனா இங்கேயும்  அடியடா பிடியடா எண்டுதான் நிக்குறா போல ,,அவா நல்ல பிரயாசை ,,இங்கேயும் கடையை நடத்துவா போல இருக்கே "

                             " அதுக்குதான் வேலை நடக்குது ,  மனுஷி கிளிநொச்சி பழைய சந்தைக்குப் பின்னால ஒரு இடம் எடுத்து இருக்குறா , வேலை நான் பிளான்  போட்டுக் கொடுத்த  மாதிரி நடக்குது . 

                             " அப்ப நீங்கள் கிட்ட நிண்டு கைக்கு உதவியா நிக்கலாமே "

                             " அதுதான் பிளான் போட்டு நோனாவிட்ட கொடுத்திட்டனே "

                                    "  ஹ்ம்ம் " 

                                    " இடம்பெயர்ந்த சனம்களிட்ட ஹோட்டலில் போய்   காசு  கொடுத்து சாப்பிட வசதி இங்கே அதிகம் இல்லப்போல  நிலவரம்  கிடக்குது ,எண்டாலும் எனக்கு இப்ப ஹோட்டல் நடத்துறதை விட்டா வேற வேலை தெரியாதே , "

                                        " அதுவும் ஒரு பிரச்சினை தான் ,,நிவாரண அரிசியையே சனம்கள் செலவுக்கு காசு இல்லாமல் கடைக்கு அறவிலைக்கு  விக்குதுகள் "

                                       " இந்த நோனாக்  கழுதையைக் கலியாணம் கட்டி யாழ்பாணம் ஒளிஞ்சு ஓடி  வராமல் இருந்திருந்தா,இப்ப கொழும்பு ஹாபரில  அரசாங்க வேலையில  இருந்து பென்சனும் எடுத்து இருக்கலாம்,,,"

                                   " மறுபடியும் தொடங்கிட்டிங்களா ,,இதை நிற்பாட்டிப்போட்டு நடக்கிறதைப் பாருங்க "

                                      " அதுதான் இடையில  தாலி அறுந்து போச்சே ,,,சரி  வாவன் பொடியா உனக்கு இப்ப கட்டுற கடையக் காட்டுறன் "

                 என்று  விரக்தியா சொன்னார் , நானும் என்ன நடக்குது என்று பார்க்கப் போனேன், 

                                      கிளிநொச்சி பழைய   சந்தைக்குப் பின்னால, ரெயிலே தண்டவாளம் ஒரு காலத்தில் போட்டு இருந்த இடத்தைக் கிரவல் மண் போட்டு நிரவிய  காட்டு பகுதியில முதிரை மரத்துக்கு கீழ ஒரு கொட்டில் ஏறக்குறைய போட்டு முடிஞ்சு ,ஞானப்பிரகாசதிண்ட மனுஷி ஒரு மேசைக்கு மேல ஏறி நிண்டு, இடுப்பில பனை ஈக்கை செருகிக்கொண்டு, வாயிலயும் கொஞ்சம் பனை ஈக்கை கவ்விக்கொண்டு, மேசையில விழுகிற மாதிரி பலன்ஸ் பிடிச்சு நிண்டு தென்னம் கிடுகு ஓலை அடுக்கி அடுக்கி கூரைமேய சப்பிளையர் சுரேஷ் கீழ நிண்டு ஒவ்வொரு ஓலையா

                        " மாமி பிடிடியுங்கோ பிடியுங்கோ மேசை விழப்போகுது " எண்டு மெதுவா சொல்ல ,

                       மாமி " ஏண்டா சுரேஷ் அவசரப்படுதுறாய் " எண்டு மெதுவா, குரலே இல்லாத மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தா.அந்தக் கொட்டில் பார்க்க மாட்டுக்  கொட்டில் போல இருந்தது ,அதைத் தேத்தண்ணிக்  கடை போல ஆக்குவதுக்கு இன்னும் எவளவோ முதலீடுகள் செய்ய வேண்டும் போல இருந்தது . 

                                                     ஞானப்பிரகாசம் பக்கத்தில பாட்டில விழுத்திப் பிளந்து  இருந்த ஒரு தென்னங் குத்தியில குந்தி இருந்து ஒரு ஆர் வி ஜி பீடியைப் பத்த வைச்சுக் கொண்டு ஜோசித்தார். அவரிடம் இருந்த  முதலாளிக்கு உரிய களை இறங்கி இருந்தது. சேட் கொலரைக் காற்று உள்ளுக்கு இறங்கி விளையாடக்கூடிய மாதிரி நல்லா உயர்தி விட்டு  கட்டி இருந்த சாறத்தால முகத்தைச் துடைசார் .  நான் 

                                         " என்ன முதலாளி  பெரிசாக் கப்பல் கவுண்ட மாதிரி ஜோசிகுரீங்க ,பிறகென்ன கிட்டதட்ட கடை போல வந்திட்டுதே கொட்டில் " 

                                           எண்டு சிரிச்சுக்கொண்டு  கேட்டேன் ,

                              " இல்லை , சும்மா கடை போல வந்து பிரிஜோசனம் இல்லையே,,இதை ஞானப்பிரகாசம்  ஹோட்டல் போல ஆக்க வேணுமே , ஆக்கி  பிறகு இந்த யானைக்  காட்டுக்குள்ள எப்படி பிஸ்னஸ்ஐ டெவெலப் ஆக்கலாம் எண்டு ஜோசிகுரன் " 

                                         எண்டு சீரியஸ் ஆகப்  பதில்  சொன்னார் .
.
.

பஞ்சு அருணாசலம்.

செட்டிநாட்டில்,அதிகம் அறியப்படாத ஒரு கிராமத்தில் அரிசி மில் நடத்திக்கொண்டு இருந்த ,சினிமா, இசை ,பாடல்கள் இன் கவர்சியால் கவரப்பட்டு, சென்னை வந்து கவிஞ்சர் கண்ணதாசனுக்கு உதவியாளராய் இருந்து அவர் சொல்ல சொல்ல பதினைத்து வருடங்கள் பக்கத்தில் இருந்து பாடல்களை எழுதிக் கொடுத்து ,கண்ணதாசனுக்கு எடுபிடிபோல வெத்திலை பாக்கு மடித்துக் கொடுத்து , பாடல் எழுதும் வித்தையைக் கண்டு பிடித்து, ,தற்செயலாக " பொன் எழில் பூத்தது பூஞ்சோலை... " என்ற பாடலை மக்கள் திலகத்துக்கு எழுதி அன்று முதல் பாடலாசிரியர் ஆகி ,

                                                      கவிஞ்சர் வாலி மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிய பாடல்கள் எழுத வாய்ப்பு அற்று இருந்த நேரம் அவரை அழைத்துவந்து தன்னோட " வைதேகி காத்திருந்தாள் " படத்தில் " ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சம் காற்றாடி போலாடுது " என்று இளையராஜாவுக்கு எழுதவைத்து தமிழ்நாட்டை அந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கவைத்து ,சொந்தமாகவே அவரே நிறையப் பாடல்கள் எழுதிக்குவித்த,

                              கவிஞ்சர் கண்ணதாசனின் மூத்த சகோதரரின் மகன் பஞ்சு அருணாசலம்.
  அவர்தான் காமடி நடிகர் விவேக் என்ற விவேகானந்தனை, விவேக் செய்துகொண்டு இருந்த அரசாங்க வேலையை விட்டு விட்டு முழு நேர நடிகன் ஆகு என்று நம்பிக்கை கொடுத்த...

                               தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை எழுதி,பாடல்கள் எழுதி , யாருமே நம்பிக்கை அற்று இருந்த நேரம் இளையாராஜா என்ற இசை அமைப்பாளரை முதல் முதல் இனம் கண்டு " அன்னக்கிளியில் " அறிமுகம் செய்து கமலஹாசன் ,ரஜனிகாந்து கால் ஊன்ற கதைகள் எழுதி தானே அதை படமாகத் தயாரித்த பஞ்சு அருணாசலம் செட்டியார் ,,,

                                  திரைக்கதை எழுதுவது கடினம்,,கதை,கவிதை,நாவல் எழுதுவது போல அதை எழுத முடியாது,விஷுவலா வெள்ளித்திரையில் வருவது போல சம்பவங்கள் ,திருப்பங்களை வைச்சு பார்பவர்களை தியேட்டர் கதிரையை விட்டு எழும்பிப் போகாமல் எழுதவேண்டும். அவர் எழுதிய " மேலோன்சொளிக் ஸ்டைல் " திரைக்கதை " ஆறில் இருந்து அறுபது வரை,," அதேபோல " மெலோராமிக் ஸ்டைலில் " எழுதிய திரைக்கதை " கல்யாணராமன்" ,இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். இந்த இரண்டு படமும் ஒரு கிழமையில் ஒரே நேரத்தில் திரைகதை எழுதப்பட்டு,ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது என்று சொல்லுறார்கள் .பஞ்சு அருணாசலம் அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து கொண்டுதான் திரைக்கதை எழுதுவாராம்

                                     அன்னக்கிளி பாடல்களை இளையராஜா எந்தவித வாய்தியமும் இல்லாமல் மேசையில் தட்டி கிராமத்தில் நெல்லு அறுக்கப் போகும் பெண்களின் தெற்கில் இருந்து வந்த நாடோடித் தென்றல் நின்று நிதானமா அள்ளிக்கொடுத்த " அன்னைக் கிளி உன்னை தேடுது ஆறு மாதம் ஒருவருடம் ஆவாரம்பூ மேனி வாடுது..." என்று தான் போட்ட மெட்டுகளை அவரே பாடிக்காட்டி இருக்கிறார்.அந்தப் பாடல்கள் தந்த தொடக்கம் இன்றுவரை இளையராஜாவை தேட வைக்கும் வரலாற்று சம்பவத்தை தமிழ் சினிமாவின் இசை அத்திவாரக் கற்களின் ஆத்திசூடி ஆக்கிக் காடியவர் பஞ்சு அருணாசலம்.

                              அரிசி வியாபாரம் செய்துகொண்டு இருந்த இந்த சாதாரண மனிதர் மட்டும் இல்லை என்றால் இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைக்காமலே போயும் இருக்கலாம். ஜோசித்துப் பார்த்தால் சாதாரண மனிதர்களின் அசாதாரண தன்நம்பிக்கையில் தான் வரலாறு பொன் எழுத்துகளைத் தேடி எடுத்து திசை திரும்புகிறது....


.

Sunday, 3 January 2016

வெல்வெட்டின்..

சைனிஸ் வெல்வெட்டிங் இது முக்கியமான ஒரு சைனிஸ் இறைச்சி வகையை வாய்க்குள் கடிபடாமல் சுவிங்கம் போல மென்மையாக ரசித்து உள் இறக்க வைக்கும் சமையல் டெக்னிக். கொஞ்சம் பொறுமையும் நேரமும் வேணும் இதை இப்படிப் பதப்படுத்தி எடுப்பதுக்கு. 

                                          நீங்கள் எல்லாருமே சைனிஸ் ரெஸ்டோரென்ட் போய் இருந்து, பல வகையான டெவில், சொப் சூயிய் ஓடர் கொடுத்து சாப்பிட்டு இருப்பிங்க. அந்த டெவில் இல் இருக்கும் இறைச்சி வகை மிக மிக மென்மையாக வெளித்தோற்றதில் வெளிச்சம் பட்டுத் தெறிக்க வெல்வெட் போல வழு வழுப்பாக இருக்குமே.உண்மையில் பலருக்கு அதன் மர்மமான பதம் தெரியாமல் அலாலதியாக சாப்பிட்டும் இருபிங்க.

                                               டெவில், சொப் சூயிய் என்ற இந்த ரெண்டுவகை உணவிலும் சேர்க்கப்படும் இறைச்சித் துண்டுகள் உண்மையான சைனிஸ் முறைப்படி வெல்ட்டிங் முறையில் பதப்படுதப்பட்டே பின்னர் டெவில், சொப் சூயிய் செய்யும் போது அதை அதில போட்டு செய்ய வேண்டும். அது தான் அங்கீகரிக்கப்பட்ட சைனிஸ் கலுனேறி சமையல் முறை

                                                 ஆனால் சைன்ஸ் அல்லாத பல ரெஸ்ரோறேன்ட்களிலும் இப்பெல்லாம் இந்த டெவில், சொப் சூயிய் செய்கிறார்கள். முக்கியமாக இலங்கையில் நீங்க பல சிங்கள ரெஸ்ட்ரோறேன்ட்களில் டெவில், சொப் சூயிய் சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு தெரிந்தவரை அங்கே அவர்கள் வெல்வெட்டிங் டெக்னிக் பாவிப்பதில்லை. கொதி நிலை எண்ணையில் இறைசியப் பொரித்து எடுத்து செய்கிறார்கள்

                                         இந்த சைனிஸ் வெல்வெட்டிங் அதுதான் சைனிஸ் சாப்பாடுகளைப் பதப்படுத்தப்படுதுவதில் ஒருவித சிதம்பர இரகசியம் போல பல நூற்றாண்டுகளாய் இருந்தது. இப்ப அப்படி நிலைமை இல்லை. என்னைப்போல சமையல் தொழிலில் வேறு வழியில்லாமல் சைனிஸ் குக்மாருடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த பலர் அந்த இரகசியத்தை உடைத்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த ரெண்டு முறையில் இலகுவான ஒரு முறையை உங்களுக்கு சொல்லித்தாறேன்.

                                              தேவையானவை முட்டை வெள்ளைக்கரு, முக்கியம் மஞ்சள்கரு சேர்பதில்லை. கோரன்பிளவர்என்ற சோளம் மா, சைனிஸ் ரைஸ் வயின், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சீனி ,சைனிஸ் டார்க் சோயா சோஸ். இறைச்சியைக் கழுவி சிறிய குயுபிக் துண்டுகளாக வெட்டி அதற்குள் மேலே சொன்னவற்றைப் பிரட்டி எடுத்து ஒரு இரவு மெல்லிய பொலித்தீன் கொண்டு மூடி அதன்ஈரலிப்புத் தன்மையை வெளியேற்றாமல் குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள்.

                                                 இதில ஒரு முட்டையை கையில் வைத்தே உடைத்து அதில உள்ள மஞ்சள் கருவை இரண்டு பாதியிலும் மெல்ல மெல்ல நயன்தாராவின் இடுப்புப் போல அசைத்து டெக்னிகலாக வெளியேற்றுவது ஒரு சமையல் டெக்னிக். அதை எழுத எனக்கு முடியவில்லை. செய்து தான் காட்டவேண்டும். நீங்கள் வீட்டில் ஒரு சின்னப் பாத்திரத்தில் ஒரு முட்டையைத் தட்டி உடைத்து ஊற்றி அதிலிருந்து மஞ்சள் கருவை வேறாக்கி கரண்டியால் எடுக்கலாம்.அது எவளவு தூரம் வொர்க்அவுட் ஆகும் என்றும் எனக்குத் தெரியலை

                                                   பின்னர் தண்ணியைக் கொதிநிலையில் கொதிக்க வைத்து அது ஆவி பறக்கக் கொதிக்கும் போது, வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு ஒன்றோடு ஒன்று ஓட்ட விடாமல் அரைவாசியில் அவித்து எடுங்கள். போடும் போது கவனம் கொதி தண்ணி தெறிக்கலாம்.பிறகு கையைக் காலைச் சுட்டுப் போட்டு என்னைத் திட்ட வேண்டாம்

                                                      அப்படி எடுத்த இறைச்சியை சைனிஸ் வூக் தாச்சியில் கொஞ்சம் எண்ணை விட்டு ,அதில் டெவில் செய்யும் போதோ,,அல்லது சோப் சூய் செய்யும் போது ஒயிஸ்டர் சோஸ் கொஞ்சம் சேருங்கள் ,போடவேண்டிய வூக் மரக்கறிகள் அரைப்பதத்தில் வேகும் போது வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு கிளறிக்கொண்டே இருங்கள். இறக்கும்போது கொஞ்சம் செசமி ஒயில் சேர்த்து விடுங்கள்.

                                                         வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியின் மெதுவான, வழுவழுப்பான சுவையை சைன்ஸ் நூடில்ஸ் செய்யும் போதும் சேர்க்கலாம் ,சஞ்சுவான் மண்டரின் சிக்கின் என்பதுக்கும் அதைப் பயன்படுத்தலாம் .அதிலும் அதன் சுவை அமர்களமாக இருக்கும்.

.

லசானியா..

புது வருடத்துக்கு .பழைய நோர்வேயின் நண்பர்கள் வீட்டுக்குப் போய் அவர்கள் இடத்திலேயே சமைச்சேன் எண்டு சொல்ல பல நண்பர்கள் " என்னத்தை சமைச்சுக் கிழிசாய் ? " எண்டு ஆதங்கமாகக கேடார்கள் ! நான் செய்து கொடுத்தது உடன் " லசானியா " 

                                               லசானியா இத்தாலியின் தேசிய உணவு ! ஒரு இளம் பெண்ணின் பெயரில் இருக்கும் அந்த உணவு மார்க்கோ போலோ என்ற இத்தாலியன் கடலோடி சீனாவுக்குப் போனபோது கண்டு அதிசயித்து ,அதை அப்படியே சுட்டுக்கொண்டு வந்து ,இத்தாலியன் "சீஸ் , "மீட் சோஸ " இரண்டையும் அதில இணைத்து ,ஒரு கீழைத் தேச உணவின் கொஞ்சம் மொடிபய் பண்ணிய இன்னொரு வடிவம் எண்டு என்னோட வேலை செய்த மார்கோ என்ற இத்தாலி நாட்டு "செப் "சொன்னார் !

                                              இங்கே பொதுவாக ஐரோபிய உணவுகளை ஏதோ ஒருவிதத்தில சமைக்க கற்றுக்கொள்வது இலகு காரணம் அவர்களுடன் இங்கே நாங்களும் சேர்ந்து குப்பை கொட்டுவதால் ! நான் நோர்வேயியின்" அஸ்கர் பாரும் " என்ற ஒரு ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு சுடுதண்ணி "இத்தாலியன் செப்" போடு வேலை செய்தேன் !

                                               அவன் அதிகம் சாப்பாட்டு ஓடர் வந்து குவிஞ்சது எண்டால் என்னை அறம்புறமா இத்தாலியன் பாசை தூசனதில திட்டுவான் ,வார்த்தைகள் கொதிதண்ணி போல சரமாரியா வந்து விழும் ,,அவன் என்னை மட்டுமல்ல , அந்த ரேச்ற்றோரன்ட் அப்பாவி முதலாளியையும் அறம்புரமா அடுக்கு மொழியில் பேசித் தள்ளுவான் .

                                     " அதிகம் சாப்பாட்டு ஓடர் வந்து குவியிற நேரம், நீ ஏன்பா இப்படி டென்சன் ஆகி எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டுறாய்?"

                                    எண்டு ஒருமுறை ஆங்கிலத்தில் கேட்டேன்

,                                " அது எங்கள் நாட்டு கிட்சென் சமையல் கலுணறி கலாசாரம்,கைக்கு வேலை கொடுக்கும்போது வாய்க்கும் வேலை கொடுப்போம்

                                  எண்டு சொல்லிப்போட்டு ,என்னைப் பார்


                                       "நீ ரெம்ப நல்லவன்பா எப்படித்தான் படு தூசனத்தில உன்னை திட்டினாலும் ,சிரிகிறியே!"

                                       என்றான் , எனக்கு அந்தப் பாசை தெரியாது அதலா வேற என்ன செய்ய எண்டு கேட்டு

                                   " நீ என்னை எப்படி திட்டுறாய் எண்டு ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா ? "

                                    எண்டு கேட்டேன் ,அவன் அரைகுறை ஆங்கிலத்தில்

                                    "நான் உன்னை மட்டமில்லை , உன்னோட அம்மா , உன் னோட அம்மம்மா , அக்கா,,தங்கசி,,உன்னோட காதலி எல்லாருமே வம் ........ பிறந்த தேவ .......கூட்டம் "

                                  எண்டு திட்டுவேன் எண்டு சொன்னான் ,,நான் அதுக்கும் அப்பாவியா சிரிச்சேன் !

                                    இதாலியர்களுக்கு தூசனம் "திருவாசகம் " படிகிரமாதிரி,,என்னதில , எண்ணத்தைப் பற்றி பேச தொடங்கினாலும் கடைசியில் "..............மம்மா மியா ,,,,,," எண்டு முடிப்பதை அதிகம் கவனிக்கலாம் ! மற்றப்படி அவர்கள நாட்டு செப் மாரோடு வேலை செய்தால் சைனிஸ் செப் போல ,சமையல் ரகசியம் சொல்லி தரமாட்டார்கள் !

                                    நாங்களா எதாவது கற்றுக்கொண்டால் வழியே மற்றப்படி ஒரு பிரிஜோசனமும் இல்லை ! முக்கியமான சில "இணைப்பு ருசி கொடுக்கும் " இன்கிரிடீன்ஸ் போடுற நேரம் பிளேட் கழுவ சொல்லுவார்கள் ,அல்லது வேற எதாவது வேலை சொல்லுவார்கள் !

                                   இத்தாலியர்களுக்கு , தக்காளி எவளவு முக்கியமோ அதுபோல Parsley, sage, rosemary, and thyme...இந்த வாசனை இலைகள் போடாத ஒரு இத்தாலியன் உணவே இல்லை ! எங்களுக்கு கறிவேப்பிலை போல அவர்களுக்கு அது மிக முக்கியம்

                                        மேடிடேர்நியன் என்ற மதிய தரைக்கடல் மிதமான தட்ப வெட்ப நிலையில் வளரும் இந்த Parsley, sage, rosemary, and thyme...போட்டு ஒரு "பெச்டொ " எண்டு ஒரு இலை குழை தளை அரையல் இருக்கு ,அது இத்தாலியின் ஒவ்வொரு ப்றோவின்சே என்ற பெரதேச நிலப்பரப்பின் பெயரில் சொல்லுவார்கள் !

                                            இத்தாலியன் பெண்கள் அதை எல்லாம் சாப்பிடுவதால் தான் , தக்காளி போல "தக தக " உடம்போட , உயரமான கால்களுடன் ,நீலக் கண்கள் விழியெங்கும் " வைன்" போல மயக்க ,உலகப் புகழ் பெற்ற அவகளின் பின் அழகு , வில்லுப்போல "வின் "எண்டு இருக்குது போல

                                            லசானியா " பர்மசின் சீஸ் " என்ற உலர்ந்த இத்தாலியன் சீஸ் மேல போட்டு சாப்பிட , நாதம் பேசும் அலாதியா இருக்கும் ,,ரெட் வைன் கொஞ்சம் போல உள்ளுக்கு விட்டிடுடு ட்ரை பண்ணிபாருங்க ! எனக்கும் இத்தாலி ரெச்ற்றோன்ட் லசானியா பிடிக்காது ! அதலா எப்பவும் எச்ராவ ஜெலபிநோஸ் என்ற மெக்ஸ்சிகன் நாட்டு "குட மிளகாயை " , அப்படியே அதில செருகி போடுதான் சாப்பிடுவேன்

                                                இதில உள்ள பச்சை நிற சலாத் இலைக்கு பெயர் " ரக்குளா சலாத் "பார்க்கப் பசாசுபோல இருக்கும் அதால் அப்படி சொலுரார்கள் !எப்படியோ நான் மேல சொன்ன மாதிரி ரெட் வைன் கொஞ்சம் போல உள்ளுக்கு விட்டிடு ட்ரை பண்ணிபாருங்க !( நான் சொன்னது கொஞ்சம் ரெட் வைன் லசானியாவுக்கு உள்ளுக்க விட்டுடு ...)

.