Saturday 9 January 2016

பெட்டிசம் பாலசிங்கம்.

நீண்ட அமைதியில் உறங்கும்  மனதை உடைத்து வெளியேறும் சம்பவங்களும் ,அதைத்  தோற்றுவித்த மனிதர்களின் விசித்திர குணங்களும்   மிக முக்கியமான விஷயமாக மாறி  அந்த மாதிரியான கதைகளைப் பல  சமயம் அழகாக அமைத்து விடும் என்பதை  மறுப்பதற்கு இல்லை . எனினும்  கிராமங்களின் உயிர்ப்பை இழந்த வரலாறு பெருகி வரும் நேரத்தில் தாமோதர விலாஸ் சாம்பாரு  எப்படி தரமாக இருந்ததோ அதேபோல மசால் தோசையும் தொட்டுக்கொள்ள  மிளகாய்ப் பொடியும் கைக்குள்  இருந்த காலத்தில் 

                                              எங்களின் ஊரில   சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் . அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக  சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும்.

                              பெட்டிசம் அதை ஒரு சமூக சேவைபோல தான் செய்தார் ,ஆனால் அவரின் சேவை பலருக்கு பீதியக் கிளப்புவதால்  அவரை ஊருக்குள்ள ஒருத்தருக்கும் பிடிக்காது . அயலட்டையில் யாருமே அவரோடும் ,அவரின் மனைவியோடும் கதைபதில்லை , நன்மை தீமையில் அவர்களை ஒதுக்கித்தான் வைத்து இருந்தார்கள் ,பெட்டிசம் மென்மையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார் , வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடீனேன்,," என்பதுபோல நிலம் அதிராமல் , தலையைக் குனிந்துகொண்டு போறது தெரியாமல் போவார் , வாறது தெரியாமல் வருவார் ,ஆனால் அவருக்கு ஊருக்குள்ள என்ன நடக்குது எண்டு கடுவன் பூனை போல எல்லாம் தெரியும் ,
                                            
                                              பெட்டிசம் முக்கியமா, ஊருக்குள்ள விதானை வசதியான யாருக்கு கூப்பன் காட் கொடுத்திருகுரார் எண்டு A.G.A என்ற உதவி அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார் , A.G.A எந்த மதகு கட்டுற கொன்ட்ராகில எத்தினை சீமெந்து பாக்கை சுருட்டினது எண்டு G.A என்ற அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார், பெட்டிசம் தனிப்படவும் புரளியைக் கிளப்புவார் ,  ஒருவரைத் தவிர எங்கள் ஊரில் அவரோட  வேறு  யாரும் நேருக்கு நேர் நிண்டு கதைக்க மாட்டார்கள் , கதைச்சால் விளக்கெண்ணெய்க்க வெள்ளைப் பூடு போட்ட மாதிரி வில்லங்கம் வெடிக்கும் .

                                           அந்த ஒருவர் தான்  புண்ணியக்குஞ்சி . புண்ணியக் குஞ்சி   ஆருக்குமே பயம் இல்லை. அவர் பெட்டிசம் அளவுக்குப்  படிக்கவில்லை,அரசாங்க வேலையும் செய்யவில்லை   , ஆனால் வாயல வெட்டி வீழ்த்தி  ." உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள் " கதை போல அவரோடு  வாயைக் கொடுத்து  முண்டினால்  கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்  வாழ்க்கை கடைசியில்  அலங்கோலமாய்த் தான்  முடியும் ,அவர் தான் பெட்டிசத்தை எப்பவும் 

                                  " என்ன கிளாக்கர் ஊர் அமைதியா இருக்கு,,பிரளயம் ,,பிரகண்டம் ஒண்டும் நடக்குதில்லையே,,,மெய்யாத்தான் ஊருக்குள்ள எல்லாம் சட்டப்படி ஒழுங்கு முறையில்   நடக்குதோ  அல்லது மேலோட்டமா  சாம்பிராணி போட்டு உள்ளுக்கு அலுவல்கள் நடக்குதோ ஒரு சிலமனும் விளங்குதில்லை "

                              "  புண்ணியம்,,,இந்த ஊரில எந்தக் காலத்தில  எல்லாம் ஒழுங்கா நடந்தது சொல்லு பார்ப்பம்,,கடவுளுக்குப் பயந்த ஒரு சீவன் இந்த ஊரில இருக்குதெண்டு எனக்கு காட்டு பாப்ர்ப்பம் ,,"

                               " காட்டினா அதுக்குப் பிறகு என்ன செய்வியள் கிளாக்கர் "

                              " நான் இதோட  கொம்பிளைன் எழுதுறதை,,அடுத்தவனில பிழை பிடிக்கிறதை அடியோடு விடுறன் ..புண்ணியம்  இங்கே எல்லாரும் திருகுதாளம்,,என்ன இன்னும் பிடிபடவில்லை  நீ உட்ப்பட ,,நீ எண்டா பெரிய திறம் எண்டு நினைக்காதை "

                                 "  அதென்னெண்டு  கிளாக்கர் ரெண்டு உள்ளங்  கையாலும் அடிச்ச மாதிரி அப்படி சொல்லுரிங்க ,,ஒரு புருப் இல்லமால் சொல்லக்கூடாது...பெட்டிசம்  எழுதக்கூடாது "

                                         "  பாத்தியே நீ பொயிண்டுக்கு சுத்தி வளைக்காமல் வந்திட்டாய்,,பெட்டிசம்  எழுதுறது  எண்டுறதும்  ஒரு உண்மையின் இன்னொரு வடிவம் தான் "

                                      " எப்பன் எல்லிப்போல  எனக்கும்  விளங்கிற மாதிரி பறையவேனும் கிளாக்கர்,,நான் என்ன உங்களைப்போல கொவோர்மேன்டில கோழி மேய்க்கிற வேலையே செய்தனான்  "

                                 " புண்ணியம் இங்கிலீசில் ஒரு விசியம் சொல்லுவாங்கள்  There is an old adage that says: எனக்கு  அது இங்கிலிசில் சொன்னால்தான் அதன் அர்த்தம் சரியா வரும்,,அது என்னென்டா   If it looks like a duck, and  walks like a duck, and quacks like a duck, then it is a duck!..சில விசியங்களை அசுமாத்ததில பிடிக்கலாம்,, மிச்சம் கொஞ்சம் விசாரிக்க வெளிய வரும் .."

                                              இப்படிதான் அவர்கள் உரையாடல் இருக்கும்,பெட்டிசம் இங்கிலிஸ் தொடங்கினால் புண்ணியக் குஞ்சி அதுக்குமேல கதைக்க மாட்டார் . பெட்டிசதுக்கு தெரியும் புண்ணியக் குஞ்சி அவளவு மோசமான ஆள் இல்லை எண்டு. ஆனால்  முக்கியமா எங்களின் சந்தியில் சில்லறைக்கடை வைச்சு இருந்த சுப்பிரமணியத்தை , அவர் சில்லறைக்கடை வைச்சு இருந்ததால் சில்லறை மணியம் என்று சொல்லுவார்கள் ,அவரைத்தான் பெட்டிசம் கண்டபடி விமர்சிப்பார்

                             " சில்லறை மணியம் வாழைப்பழம் ஒருகிலோ 25 ரூபாய் எண்டு போட்டு , பழத்தோட தோல் ,காம்பு எல்லாத்தையும் அதுக்குள்ளேயே  நிறுக்குறான், சில்லறை மணியம் காசு உரப்பையில அள்ளிக்கட்டுற திரிக்கிஸ் விளையாட்டு இனி கனகாலத்துக்கு ஓட்டுறது கஷ்டம் , அவனுக்கு நிறுத்தல் அளவு திணைக்களத்துக்கு கொம்பிளேன் எழுதி வைக்கப் போறான் பார் ஆப்பு  ... "

                                        எண்டு சொல்லுவார். சுப்பிரமணியத்துக்கும்  கொம்பிளேன் எழுதி வைக்கப் போற ஆப்பு பற்றி  தெரியும்,  சில்லறை மணியம் கோவத்தில எப்பவும்

                        " பெட்டிசம் ,கையில் அம்புட்டான் எண்டால், அவன்ட்ட ........   ரெண்டையும் நல .....எடுத்துப் போட்டுதான் விடுவன் " எண்டு திட்டுவார்,

                                 ஆனால் ஒருநாளும் அவர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதும் அந்த குருசேத்திரப்போர் நடக்கவேயில்லை , உண்மையில் அவர்கள் இருவரின் சண்டைக்கு வேற ஒரு காரணமும் இருந்தது . அது பெட்டிசதின் பொஞ்சாதி பரமேஸ்வரி !

                                   முறிஞ்சு விழுகிற மாதிரி மெலிந்த தோற்றம் உள்ள திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம் என்ற அந்த பரமேஸ் , எங்கள் ஊரில் ஒரு காலத்தில் பஸ் கொம்பனி வைச்சு நடத்தின பணக்காரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவா. அரசாங்க உத்தியோகம் செய்யும் ஆண்களை கலியாணம் கட்டுவது ஒரு வித ஸமூக அந்தஸ்து என்று அடையாளம் இருந்த நேரம் கச்சேரியில் கிளார்க் ஆக இருந்த பாலசிங்கத்தை அவாவுக்கு கட்டிவைக்க,அந்தக் கிளார்க் எவளவு கரைச்சல் பிடித்த மனுஷனா ஊரில் உள்ளவர்களுக்கு எதிர் காலத்தில் மாறுவது பற்றி அந்த மனுசிக்கி தெரிய வாய்ப்பே இல்லைதான்.

                                      மற்றப்படி அவாவை பெட்டிசம் யாரோடும் பேச அனுமதிப்பதில்லை . வீராளி அம்மன் கோவிலில் கேதாரகெளரி விரதம் நடக்கும் நேரம் , கெளரி காப்பு போட்டுகொண்டு , குழந்தைகள் இல்லாத காரணத்தாலோ தெரியவில்லை  எப்பவுமே அபிராமி அந்தாதி கண்களில் நீர் வழிய தலையைக் குனிந்துகொண்டு

                              " நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! " 

                                           என்று மனமுருகி படிப்பதை பார்க்கலாம். மற்றப்படி வெளியே காண்பதே அரிது .

                                    ஆனால் கொஞ்சம் விரசமாக பெட்டிசத்தின் பொஞ்சாதி எப்பவுமே சுப்பிமணியம் கடையில வந்து நிண்டு சில்லறைச் சாமான் வேண்டி முடியவும் அவரோட சிரிச்சு சிரிச்சு பேசிக்கொண்டு நிற்பா. அவாவோட ஊருக்குள்ள ஒருவரும் கதைககாததால அல்லது வேற ஏதும் காரணமா எண்டு எனக்கு தெரியாது. முதலில் மணியமே ஒரு சுவாரசியம் இல்லதா ஒரு மனிதப்பிறவி அவரோட எப்படி ஒரு பெண் மணிக்கணகில பேசுறா எண்டு விளங்கவேயில்லை. ஆனாலும் இந்த உலகத்தில பெண்களுக்கு யாரை உண்மையாகப் பிடிக்கும் ,பிடிக்காது எண்டும் அறுதியா சொல்லவே முடியாது, சில நேரம் பேச யாருமே இல்லாததால் ஒரு நட்பாக சில்லறை மணியதுடன் பேசியும் இருக்கலாம் , இல்லையா ,  சொல்லுங்க பார்ப்பம்.

                                       பெட்டிசதின் பொஞ்சாதி விசியம் இல்லாமல் சுப்பிரமணியம் கடையில நிண்டு நோகாமல் நொங்கு தின்னுரா எண்டு கதைவெளியே  கசிஞ்சு , அது மலிஞ்சு சந்தைக்கும் வர ,ஊருக்குள்ள எப்படியோ கதைவெளி வந்திட்டுது , இவளதுகும் மணியம் ஒரு பழைய பஞ்சாங்கம், பாக்கிறதுக்கு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்புள்ள அவர் ஒரு நாளுக்கு ஒரு சுருட்டுதான் பத்துவார், சுருட்டை வாயில வைச்சு கொண்டு இருப்பார் பத்தவே மாட்டார் , ஆனால் பத்தினா, அது பத்தி முடியும்வரை அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார், 

                             அவர் கடையில் சேட்டுப் போட்டாமல் , கட்டி இருக்கிற சங்கு மார்க் சாரத்தை பொம்பிளையல் குளிக்கும்போது பாவாடையை உயர்த்திக் குறுக்குக்  கட்டு கட்டுவது போலக் கட்டிக்கொண்டு புழுங்கல் அரிசி மூட்டைக்கு மேலே ஏறி இருப்பார் . அவர் வைச்சு இருக்கிற ரேடியோவில் எப்பவுமே கண்டசாலா ,திருச்சி லோகநாதன் பாடல்கள் பாடும் இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டில் பழையபாடல் நிகழ்ச்சிதான் பாட விட்டுக்கொண்டு இருப்பார். கடையில் ஒரு இளம் பொடியனை எடுபிடி வேலைக்கு வைச்சு இருந்தார். அவனைக் கல்லாப்பெட்டிக்குக் கிட்டப் போகவே விடமாட்டார்  

                       ஒருநாள் அவர்

                                           " என்னட்டை ஒரு கேசட் இருக்கு , பரமேஸ் கொண்டு வந்து தந்தாள் ,உங்கட வீட்டு கேசட் ப்ளேயர்ஐக் கொண்டு வந்து  அது என்ன பாட்டு எண்டு போட்டுக் காட்டுறியா?"           

                                                எண்டு கேட்டார் ,  நான் பரமேஸ் யார் எண்டு கேட்கவில்லை, நான்  அவரிடம் இருந்து அந்த கெசட்டை  வேண்டிக்கொண்டு வீட்டு கேசட் ப்ளேயரில்  போட அதில முதல் பாடல்

                       " நேற்று ராத்திரி யம்மா ,,தூக்கம் போனதே யம்மா , ஆத்தாடி நான்  அல்லாடுறேன்....எங்கே சுகம் ..,,"

                எண்டு கேசட் ப்ளேயர் படத்தொடங்க,  அம்மா வந்து  

                          "  நிப்பாட்டடா இந்தக் கண்டறியாத பாட்டை,  இந்தப் பாட்டுதானா  இப்ப உனக்கு கேக்குது,  இந்தப் பாட்டுக்  கேட்கிற வயசா இப்ப உனக்கு,  எங்க இருந்துதான் இந்த சீ எண்டு போற வளருற பிள்ளைகளைக் சீரளிக்கிற பாட்டுகளை எடுத்துக் கொண்டு வாரியோ அம்மாளாச்சி ஆனா இந்தப் பொடியிண்ட போக்கே ஒண்டும் விளங்குதில்லை "

                                   என்று  சாயங்காலப் பூசையை ஆரம்பிக்க, நான் பேசாமல் கேசட்டையும் , எங்களின் கேசட் ப்ளேயரையும்  கொண்டு போய் அவரோட கடையில் வைச்சிட்டு  

                            " நல்ல நல்ல பாடல் எல்லாம் இதில இருக்கு மணி அண்ணே , நல்லா ரசிசுக் கேளுங்கோ மணியண்ணை ,கேட்டு முடிய பிறகு வாறன் மணியண்ணே" எண்டு போட்டு .நான் பேசாமல் வீட்டை வந்திட்டன்.

                                  சுப்பிரமணியம் தனியாத்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டு இருந்தார் , அவருக்கு மனிவி பிள்ளைகள் இல்லை எண்டுதான் ஊருக்குள்ள அறிய்பட்டாலும், அவர் கடைக்கு பின்னாலா ஒரு பத்தி இறக்கி சின்ன இருட்டானா ரூமில ,நிறைய யானைச் சோடாப் பெட்டிகளால் அந்த ரூம் வாசலை மறைச்சு ,அது அலாவுதீன் குகை போல இருக்க ,நான் ஒருநாள் அதுக்குள்ளே என்ன இருக்கு எண்டு சந்தேகமா எட்டிப்பார்த்தன் ,மணியம் என்னைக் கண்ட்டுடு  ,

                       " பிறன் மனை நோக்குதல் பஞ்சமா பாதகம் " எண்டு சந்தேகமாவே சொன்னார் ,

                           நான் அவருக்கு உதவி செய்வேன் ,சனிகிழமை முலவை சந்திக்குப் போய் அரிக்கன்  கிடாய் இறைச்சி வேண்டிக் கொடுப்பேன் ,அவர் அதை முகர்ந்து பார்த்து , ஆட்டுக் கிடாய் மொச்சை மணம் வந்தாத்தான் சமைப்பார் , இல்லாட்டி அவர் வளர்கிற நாயிட்க்கு உடனேயே அதை போடுவார். வாசம் நல்லா இருந்தா கடுகு தாளிச்சு, வெந்தயம் போட்டு நல்ல எண்ணைக்குளம்பு கருவேப்பிலை எல்லாம் போட்டு அவரே சமைப்பார். அதுக்கு பொன்னாங்காணிக்  கீரை வறை போலச் சுண்டுவார் .

                                 மணியம் ஒழுங்கா , ஸ்டைலா  இல்லாட்டியும் அவர் ஒரு நாய் வளர்த்தார் ,அந்த நாய்க்கு மொடேர்னா  " டிம்பிள் "  எண்டு பெயர் வைச்சு இருந்தார் ,அதுக்கு அவர் கடையில விக்கிற ஆணைக் கோட்டை உதயசூரியன் நல்லெண்ணெய் போட்டு போலிஷ் பண்ணுவார். டிம்பிள் நல்லென்னைப் போத்தல் போல மினுக்குமினுக்கு எண்டு இருக்கும் .ஹிந்தி நடிகை  டிம்பிள் கபாடிய போலதான் அதுவும் பவுசு விட்டுக்கொண்டு அவரோட காலுக்கை முகத்தைத் தேய்த்துக்கொண்டு திரியும்.

                               மணியம் வருசத்தில ஒருநாளும் கடை மூடவே மாட்டார் , இயக்கம்கள் ஹர்த்தால் எண்டு மூடச்  சொன்னால் ,

                      " சுடுறது எண்டா நெத்தியில ,அல்லது காதுக்க சுடுங்கோடா ,கடை மட்டும் மூடமாட்டன்,உந்த வெருட்டுக்கு வேற ஆரையும் தேடிப் பிடிச்சு வெருட்டுங்கோடா,,முதல் ஈழத்தைப் பிடியுங்கோடா பிறகு வந்து எங்களைப் பிடிச்சு  ஆட்டுங்கோடா ,,இப்பவே  இந்த உலுப்பு உலுப்புரின்களே ,,நீங்கள் எங்கயடா உருப்படப் போறிங்கள்     " 

                              எண்டு ஒற்றைக் கதவில திறந்து வைத்துக் கொண்டு இருப்பார் ,கடை யை  மூடுறது அவரைப் பொறுத்தவரை நடக்காத விசியம் 

                                  ஒரே ஒருநாள் அவரின் கடை காலையிலேயே மூடி ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டிருர்க்க , ஊருக்குள்ள அது நெருப்புப்போல பரவ , என்னோட அம்மா

                                 " என்னடா நடந்தது மணியத்துக்கு , இந்தநேரம் பார்த்து குஞ்சரத்தையும் சிலமன் காணவில்லையே "

                                      எண்டு அங்கலாய்ச்சா  , கீரை விக்குற குஞ்சரம்தான் என்னோட அம்மாவுக்கு வீக்கிலீக்ஸ் போல ப்ரேகிங் நியூஸ் கொண்டு வாற கிழவி  ,மத்தியானம் சொல்லி வைச்ச மாதிரி குஞ்சரம்

                                 " எடி பிள்ளை விசியம் தெரியுமே , பெட்டிசதிண்ட மனுசி எல்லோ மோசம் போயிட்டுதாம் ..இதென்ன படக்கு படக்கு எண்டு நெஞ்சு அடிக்குது,,அம்மாளாச்சி ஆனா ஒரு போக்கும் விளங்குதில்லை,,பெடிச்சி நல்ல உஷாரா நடமாடிக்கொண்டு இருந்தாளே .." 

                                 எண்டு கொண்டு வர. அது உண்மையான செய்தியாய்த் தான் இருந்து 

                                         பெட்டிசம் மனுசி எப்படி செத்தா  எண்டு யாருக்கும் காலையில் தெரியவில்லை ,ஊருக்குள்ள யாரும் முடிஞ்சா காலையில மேற்குப் பக்கம் பறை மேளம் கேட்கும் , இந்த நிகழ்வில் அப்படி ஒண்டுமே கேட்கவில்லை , அதைவிட பெட்டிசம் வீட்டில சாவு விழுந்தா அது கொஞ்சம் அமுன்கிதான் வெளியவரும், பெட்டிசம் எங்களின் ஊரை சேர்ந்தவர் அல்ல  ,அவரின் மனுசிதான் எங்களின் ஊரில பிறந்து வளர்ந்தவா , கொஞ்சநேரத்தில பெட்டிசம் மனுசியின் சொந்தகாரர் எங்களின் வீதி வழியாகப் போறதைப்  பார்த்திட்டு,

                         " நான் போய் என்ன நடக்குது எண்டு பார்க்கவே"

                        எண்டு அம்மவிடம் கேட்டேன் ,அம்மா பொதுவா செத்தவீடுகளுக்கு போகவிடமாட்டா ,ஆனாலும் பெட்டிசம் வீடுக்கு யாரும் போகபோறதில்லை,அதால என்னை அனுப்பி விடுப்பு அறிய விரும்பியதால் போகசொன்னா .

                                                         நான் பதுங்கிப் பதுங்கிப் போனேன் ,செத்த வீட்டில தோரணமும் தொங்க இல்லை ,வாசலில் சாம்பல் வாழையும் இல்லை, பெட்டிசம் தலையில துவாயைப் போட்டுக்கொண்டு ஒரு மூலையில் இருக்க, அவரோட மனுசியை ஒரு வாங்கில கிடத்தி , மூக்கில பஞ்சு அடைஞ்சு, தலைமாட்டில ஒரு குத்து விளக்கு கொளுத்தி வைச்சு,யாரோ அவர்களின் உறவினர் முறையான  பெண் ஒரு பனை விசிறியால இலையான்களை விசிறிக்  கலைக்க, வேறு சில வயதான பெண்கள் 

                             "தாமரகம் பொன் உருக்கி , தங்கமென வளர்த்ந்த சீமாட்டிய ,,காலான் தேதி வைச்சு  , ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட்டலறும்...."   

                          எண்டு அறுந்துபோன ஈனக் குரலில் ஒப்பாரி வைக்க, என்னைக் கண்டு போட்டுப்  பெட்டிசம் எழும்பி வந்து, 

                          " உன்ற கொம்மாவுக்கும், ஊரில உள்ள பெண்டுகளுக்கும் என்ன கோதாரியே, நான் தான் எல்லாருக்கும் அள்ளி வைக்கிறன் எண்டு ஒதுக்கினாலும், எண்ட பொஞ்சாதி ஒருத்தருக்கும் ஒரு வஞ்சகமும் செய்யாதா சீவன், அவள் செத்ததுக்கும் வராதா சனங்களும் ஒரு சனம்களே " எண்டு சொன்னார்.

                                     நான் மணியத்தை அதுக்குள்ள தேட , அந்தாள் சிலமனே அதுக்குள்ள இல்லை , புண்ணியக்குஞ்சி சுருட்டைப் பத்திக்கொண்டு யாரோ ரெண்டு பழசுகளை இழுத்து வைச்சுக் கொண்டு அவர்களுக்கு பழைய இத்துப்போன சிறிமா பண்டாரநாயக்கா கதைகளைச் அவரோட பாணியில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் அதோட வீட்டை வந்து அம்மாவுக்கு பெட்டிசம் சொன்னதை சொல்லவில்லை , அங்கே என்ன நடக்குது எண்டு மட்டும் சொன்னேன், அம்மா

                              " மனியத்திண்ட சிலமன் ஏதும் அறிஞ்சியா "

                                  எண்டு சந்தேகமா கேட்டா , 

                              " மணியம் அங்கேயும் இல்லை,கொஞ்ச சனம் தான் அழுதுகொண்டு  இருக்குதுகள்  " எண்டு சொன்னேன் .

                                       ரெண்டாம் நாள் காலையிலயும் மணியம்கடை மூடி இருக்க ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டு,ரெண்டு மூன்று தோரணமும் தொங்க விட்டிருக்க, அண்டைக்குப்  பின்னேரம் போல பெட்டிசம் வீட்டில இருந்து பிரேதம் எடுத்தார்கள். ஊர்சனம் வேலிகையும் ,மதிலுக்கயும் பதுங்கி இருந்து பார்க்க ,சவ ஊர்வலத்தில பறை மேளம் , அலங்கார தண்டிகை , பட்டினத்தார் பாட்டுக்காரர் ஒருவரும் இல்லை , சும்மா ஒரு பிரேத ஹேர்ஸ் வண்டிய சுற்றி ,அவர்களின் உறவினர் கொஞ்சப்பேர் வர ,

                                            எல்லாத்துக்கும் முன்னால , வெள்ளை வேட்டி கட்டி , நசினல் சேட்டு போட்டு , உத்தரியம் போல ஒரு சால்வை சுற்றிக்கொண்டு சுப்பிரமணியம் சோழப்பொரி எறிஞ்சு கொண்டு  மாணிக்கவாசகர்   பாடின செத்திலாப் பத்து  என்ற தொகுதியில் உள்ள  ,
                           
                                 "  புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந்துள்ளக் கருத்தினை இழந்தேன் போனார்.....  " 

                                            என்ற பாடலைப் பாடிக்கொண்டு போனார் .... 
.
.

2 comments :

  1. நல்லாயிருக்கு அரசன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete