Friday, 27 April 2018

" காற்று "

பிறப்பென்பது எதுக்கு நிகழ்ந்தது ?பின்னர்  யார் அதை வாழ்தல் என்ற சொல்லாடலில்  வடிவமைத்தது ?  மனதோடு ஒரு எண்ணம் அது நிறைவேறாமல்  செயல்களில் வேறொன்று என்று   எதுக்காக  விடிகிறது ஒவ்வொரு நாட்களும் ?   வாழ்க்கையை  ஒரு வட்டம்போலவே சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கவா ? இதுபோன்ற கேள்விகள் இப்பெல்லாம்   மண்டையை அரிக்குது. கேள்விகள் என்னமோ கச்சிதமாக இருந்தாலும் விடைகள் இன்னும் வெற்றுத்தாள்களாகவே இருக்கின்றன .


                                                           அதிசயமாக சம்பவங்கள் நடந்தேறிய   நேரம், ஒரு நட்பின்  வாய்விட்ட சிரிப்பில்  மகிழ்ச்சி, என்றோ ஒருநாள் மறக்கமுடியாமல் நிகழ்ந்த  தோல்வி, ஒரு புன்னகையோடு பிரிந்து போன முதல்க் காதல் , என்ற எல்லாமும் வாழ்வின் பாதையில்  அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்  கொஞ்சம் நிதானமாகப் பார்த்தால்  மீண்டும்  மீண்டும் யோசிக்க வைக்கிற  சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை.
                                          
                                                      ‘இதுவும் கடந்து போகும் " என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிட நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முழுவதும் உண்மை  இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. அதிவேக நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல்  போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

                                                       
                                                           அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


ஒரு பேச்சுக்கென்று 
வைத்துக்கொள்ளுங்களேன் 
முதலிரவில் 
அகல் திரிவிளக்கு
விடியும்வரையில் எரிந்திருந்தால் 
இதையெல்லாம் பார்த்திருக்குமா?



விபரமறியாப் பெண்ணின்
தன்னைக் கொடுத்த

புது வெட்கம்,
அடங்காத ஆடவனின்
அவசரமான

ஆண்மை ஆக்கிரமிப்பு,




கெஞ்சல் ஆயிழையின்
பின்மாலை மழைத்துளிகள் ,
கனிவான பார்வை
பணிவுள்ள தொடுகைப் பரிசம்,



விருப்பமில்லாப் பெண்ணின்
எதிர்கமுடியாத விசும்பல்,
இதய ஈரம்வறண்டு போன
கைவிடுதலுக்கான மிரட்டல்,



கனவுகளை இறக்கிவிடும்
எல்லையில்லாப் பேரானந்தம்,
இசைந்தே கொடுத்த
திருப்திகரமான இலக்குகள் ,



மனதை திரு மணமாக்கிய
உச்சக்கட்ட ஆனந்த உதறல்கள் ,
பரமசிவன் வடிவில்
படைப்புப் பரம்பொருளில் பிரம்மம் ,



வைபோக நாளின் அலைச்சலில்
நாளெல்லாம் களைத்துப்போன
சன்னமான தூக்கம் ,
வாழ்நாள் ஆசைகளைச்சேர்த்த
கைகளைப் பிசைந்தபடியான விழிப்பு ,



அல்லது
நாலு சுவர்களுக்கு மட்டுமே
விடைகள் தெரிந்த
இரண்டு மனதுகளின் நீண்ட மவுனம் !



அல்லது
தொடக்கத்திலையியே
வெளிச்சங்கள் அணைக்கப்பட்டு
இருட்டில்
காமன்கதை எழுதியிருக்கப்பட்டிருக்கலாம் !



அப்படியென்றால்
விளக்கிடம் மிச்சமிருப்பது
வெறும் பெருமூச்சு சத்தங்களும்
பிரத்தியேக வாசனைகளும்
கொஞ்சம் ஏமாற்றமுமே !


....................................................................................

நீண்ட அலைச்சலும்
மனப்பாரமும் அதிகமான
என்னையே உதறியெடுத்து
அந்தப் பிராத்தனைக்குப் போனேன்



துருவப் பறவை போல . 
திசைகளைத் தொலைத்துவிட்டுத்
அடிவான வழிதேடுதபோல
கடிவாளமில்லாத சிந்தனையை
ஒருமிக்கமுடியவில்லை



கனவின் தொடர்ச்சியிலிருந்து
அறுபட்டுத் பிரிந்ததுபோல
பாதிரியாரின்
" அல்லேலோயா " என்ற வார்த்தை
தூக்கத்தின் விழிப்பாகியது



தேவாலயம் முழுவதும்
பிரகாசமான வாழ்வின் கருணையுடன்
தொங்குவிளக்குகள்
என் கடவுள் நம்பிக்கைகளோ
மிகவும் குறைந்த
பழுப்பு நிற வெளிச்சத்தில் கிடக்கிறது,



குந்தியிருக்கப் போடப்பட்ட
வேம்புக் கதிரைகளில்
மழையில் நனைந்து
சற்று முன் வெய்யிலில் உலர்ந்தது போல
எல்லா இடத்திலும் சுத்தமான
வெட்கப்படவைக்கும் மினுமினுப்பு



ஜோசனைகளில் நானோ
குப்பையாகவிருந்தேன்
பியானோ வாசிக்கும் இளம்பெண்
கண்ணை விட்டு அகலவில்லை
அவள்
பொன்நிறக்கூந்தல் முறுக்கேற்றியது



பாதிரியார் இப்போது
மரியாமத்தலேனாவை
ஜேசுநாதர் மன்னித்த கதை சொல்லுகிறார்
எண்ணநடையை நிறுத்தி
அதையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்



வழித்தவறுதலுக்குத் தடுப்பாக
சில வார்த்தையோடு
ஆமென் என்று சொல்லி ஒத்துக்கொண்டு
இருக்கையிலிருந்து எழுந்து
மறுபடியும் வீதிக்கு வந்துவிடடேன்.


...............................................................................

இது
இப்படி நடப்பது
முதல் முறை அல்ல
சிலநேரம் பொறுமையோடு
உடைப்புகளுக்குக் காத்திருந்தால் 
கடைசியாகவுமிருக்கப்போவதில்லை !



வேறென்ன
நாவல் எழுத்தலாமா ?
எண்ணிப் பின்வாங்கிவிட்டேன்.!



வாசிப்புக்கு விரும்பும்படியான
நீண்ட நேரத்தை
உள்ளிறங்கித் தேடும்அவகாசங்கள்
அழித்துக்கொள்வதென்றே
இன்றைய தலைமுறை !



கதை சொல்லும் ஆளுமை
அல்லது
கதையோடு செல்லும் லாவகம்
எதைக் கொண்டுவர நினைக்குதோ
அதை
ஏற்பதிட்குப் பதிலாக
ஆரம்பத்திலே நிராகரிப்புகள்தானே
அரங்கேறிவிடுகின்றன !



புதினம் என்ற சொல்
எந்த தடத்தில் இருந்ததோ
கிட்டத்தட்ட அதே இடத்திற்கு
குறுங்கதை வந்துசேர்ந்திருக்கிறது.





நினைக்கும் போதே பகீர் என்கிறதை .
நீட்டி எழுதிமுடிக்கும் போது
சப்பென்று

தொய்ந்துபோகும் சாத்தியங்களால்
இனியெப்போதும்
வளரவிடாமல் விட்டதை
தேடவேண்டிய அவசியமில்லை. !



சாதாரணமாகவே
எது இலக்கியமென்ற கேள்விகள்
துருத்திக் கொண்டு உறுத்த.
அமரகாவியம் எழுதவேண்டுமென
மனசு சொல்லவில்லை.
அது சாத்தியமும் அல்ல.



இப்படியே சொல்லிக்கொண்டே
சமாளிப்பதுதான் எரிச்சலூட்டுகிறது,
இது
இப்படி நடப்பது
முதல் முறை அல்ல !


.........................................................................................

என் நிழலே
இப்போதைக்கு எனக்குப்போதும்,
எதன்பொருட்டு
தனித்தனியாகிவிடுகிற
உணர்வுகளை அடைக்கிறேனென்று 
தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை !



உலர்ந்துபோன கண்ணீரோடும்
கடைசிப் புன்னகையோடும்
எல்லாமுமாக
பெரிய மனதொன்றை
மையமாகக் வைத்துக்கொண்டு
எழுத்தப்பட்ட உருப்படியான
புனைகதைகள் என்னிடமில்லை!



ஆச்சரியமாகவேயிருக்கு
அவசரமான தெரிவுகள் !
தேடிப்பார்த்தபோதெல்லாம் .
விவரங்களைப் பார்த்து
திகிலடைய வேண்டியிருந்தது,



அந்தக்
காலகட்டத்திற்கு பிறகு
ஆளுமையாக உருவெடுத்த
மனவெளியை வாசிப்பது பற்றி
எப்படி தெரியாமிலிருக்கமுடியும் ?



முன்யோசனை இல்லாமல்
போகிறபோக்கில் இப்படி
அடித்துவிட்டு செல்லும் கூட்டம்தான்
படைப்புக்கள் மீது
விழுந்து தெறிக்கும் வெளிச்சங்களில்
வெறுப்பை உமிழச்செய்கிறது.!



விமர்சனத்தில்
யாரையும் யாரோடும் ஒப்பிட்டுச்
சிலவற்றைச் சொல்லவரவில்லை .
நியாயப்படுத்தியும்
வேறுபடுத்தியும் சொல்லமுனைவதில்லை .



சாதனைகளை இல்லையென்றும்
சதாரணங்களை

அசாதாரணங்களாக்கும்
இந்த
அபத்தங்கள் தெரியாமல்
சாமர்த்தியமாக மேலெழுந்து
விவாதித்து நிறுவவும் முடியும்.



வேண்டாம்
இருட்டே துணையாக
என்வழியில் ஒதுங்கிப் போகிறேன்.!


.......................................................................................



நெருக்கமான
அதிகாலைப் புகையிரதம்,
திரும்பும் நிறுத்தத்தில்
கிட்டத்தட்ட நான்தான் கடைசியாக
நுழைத்து ஏற்றிக்கொண்டேன், 



இருக்கை விளிம்புகளில்
கனவுகளைப் பாதியாக விட்டுவந்த
அரை நித்திரை மனிதர்கள்,



ரெண்டுபக்கமும் ஜன்னல்கள்
சுழல்காற்றில் சருகுபோல
நகர்ந்தகொண்டிருக்கும் வேகம்,



நாயோடு ஏறியவள்
முழங்கால்களுக்கு நடுவேயதை
அதட்டி அமத்திவைக்கிறாள்,



ரெண்டு காதலர்கள்
இரவின் மிச்சத்தை வீணாக்காமல்
இறுக்கி அணைத்து முத்தமிடுகிறார்கள்,



எக்கோடியனில் இரங்கி
பிலாஸ்ட்டிக் கோப்பையில்
கையேந்தும் பிச்சைக்காரன்,



இதயத்தில் பற்றிக் கொண்ட
ஏதோவொன்றை நினைத்து

ரசிக்கிறார்
நடுத்தர நரை வயதுக்காரர்,



ஆழ்மனதிலிருந்து தோண்டிய
உதடுபிரியாச் சிரிப்போடு
தொடுதிரையில் விரலோடியபடி
சின்னவள்

இணையவலைவெளியில்,


நடைச்சுற்ற்றில்
ரெண்டுபேருக்கு நடுவில் நசிந்து
நிண்டுகொண்டிருப்பவளில்
முகமிழந்த களைப்பு ,



இடுங்கி உள்வாங்கிய கண்களில்
ஒரு வாழ்நாளில்
பிரிவுகளே மிச்சமாகிப்போன
ஈரக்கசிவோடு வயோதிபர்,



பூங்காவில் ஊஞ்சலாடுவதுபோல
எம்பி எம்பிக் குதிக்கும் குழந்தையை
அன்பாக தட்டுகிறாள் அம்மா,



அனேகமாக
என் மூலை இருக்கையிலிருந்து
கவனிக்க முடிந்த எல்லாமே
வடிவமைக்கப்பட்டதுபோலிருக்கு



பெரும்பாலும்
இனி வரும் இறக்க நிறுத்தத்தில்
இந்தபிரமை ஒழுங்கின்றிக் குலைந்துவிடலாம் !


.................................................................................................



வேப்பமரத்துக் குயில் 
அதிகாலையே 
காதல் பொழியும் கூவல் 


விழுந்த மல்லிகை மலர்கள்
மழை ஈர மண்ணுக்கும் 
வாசனை கொடுப்பது



கொட்டாவி விடும்
வெள்ளை நிறத்துப்
பூனையைப் பார்த்துக்கொண்டிருப்பது



இப்படித்தான்
இசை தரும் பருவமும் கடந்து விட
இந்த
அம்சமான அனுபவம்
மவுனமாகி விழுங்குவதட்கல்ல





விவரணங்களாக்க்கி
எழுத்துவத்தட்குமல்ல
வாழ்நாள் சந்தோஷங்கள் வசப்பட்ட
நினைவுகளில் ஏற்றிவிட்டு
அதன்பாட்டில் அசைந்தாட
வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள்



மொட்டு முகை அவிழ்க்கும்
அதிகாலை மெட்டுக்கள்
காற்றுக்கே சொந்தம்
அதிலும்
சுரங்களையும் ராகங்களையும்
பிரிக்கவே வேண்டாம்



முக்கியமாக மொழியைவிட
இசை உருவமற்றது



சிலசயம் காற்றைவிடவும் மெல்லியது


நட்புப் போலத் தூய்மையானது


காதல் போலக் கனிந்துவிடுவது


அதன்
முடிவில்லா எல்லைகள் தரும்
அளவில்லாத சுதந்திரம்
ஆத்மாவை
அடுத்த கட்டத்துக்கு உயர்த்திவிடுகிறது..


................................................................................

கடைசி இரவுப்பேருந்து
மெல்ல வெளிக்கிட்டு
கும்மிருட்டுப் பாதையில் ஏறி
முன் வெளிச்ச உமிழ்வுகளோடு நகருது,



நெருக்கமான இருக்கையோடு 
முழங்கால்கள் இடிக்காதவாறு
நான்
குறுகி ஒடுங்கியிருக்கிறேன்,



ஜன்னல்களில்
பனிகலந்த மழைத்துளிகள்
தூக்கத்தைத் தட்டி எழுப்ப
குதிக்காலைச் சூடாக்கிக்கொண்டிருக்கிற.
மிதமான வெப்பம்
நினைவுகளைத் திடுக்கிடவைத்த
ஒட்டுமொத்த திட்டையும் வேண்டிக்கொள்கிறது



இந்தப் பயணத்திலு ம்
பாதைகள் பழகிய கோடுகளில்
முழுமைக்கும் கட்டுப்பாட்டுடன்
செலுத்துனர் கைகளை உதறிக்கொள்கிறார்



முன்னிருக்கையில்
நீண்ட பகலோடு கொஞ்சம் மேலதிகநேரம்
உழைத்துக் களைத்த
இளம்பெண்ணின் வியர்வைக்கூந்தல்





மூச்சில் ஆதிக்கம் செலுத்த
எவருமில்லாத இருக்கைகளில்
அக்கறையில்லாத
நடுநிசிக் காலத்தின் வாசனை.



விடிந்தால்போதுமென்பதில்
தீர்க்கமான தெளிவுடன்
விடிவெள்ளி நட்ச்சத்திரங்களும்
அடிவானத்துடன்

ஒப்பீடுகள் செய்யவில்லை,


சென்றடையும் இடம்பற்றிய
நம்பகத்தன்மையில் குழப்பமில்லை
அதனாலோ தெரியவில்லை
" நானென்றாலது நானும் அவளும் "
என்ற பாடலை முனுமுனுத்துக்கொள்கிறேன்.



அது
பேருந்தின் அசைவோடு
குரல் எடுத்து எதிர்பார்த்த மாதிரியே
தனிமையை நிரப்பிவிட
இன்றைய இரவின் கதையை
முடித்துவைத்துத்

திருப்திப்பட்டுக்கொள்கிறேன்!


நாளை
இன்னொரு பின்னிரவு !
இன்னொரு இயந்திரப்பயணம் !
இன்னொரு பழையபாடல் !
இன்னொரு பகல்க்கனவு !


...................................................................................

நான் 
பரீட்சயமில்லாத மொழியில் 
எழுதவிரும்பாத 
அந்நியன் !



புரியாதவைகளை 
மெதுவாக உச்சரிச்சும்
சொல்ல விரும்பாதவன் !



இலட்சியங்களின்றி
வாழ்வதுக்காய்
முகத்தைச் சுளிப்பதுமில்லை !



இந்தப் பிடிமானம்
அதுதான்
ஆத்மாவைத் தழுவிக்கொள்கிறது !
எல்லார்
கைகளைப் பிடித்துக்கொள்கிறது !



கடவுளிடம் வேண்டிக்கொண்ட
நிசப்த கணங்களுடன்
தனித்திருப்பதாக
உணரவதை விடவும்
சருகுகளோடு
காற்றில் நடனமாடிக்கொண்டிருக்கும்
வெய்யில் போலவே
ஒன்றோடு ஒன்றைச்
சம்பந்தப்படுத்திக்கொண்டிருப்பதில்
நேரம் கடந்துவிடுகிறது !



உங்களில் யாரவது
என்
வார்த்தைகளை நம்புபவர்களாயின்
ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறுகள்தான்
இன்னமும் இன்னமும்
முயட்சித்துக்கொண்டிருப்பதுபற்றி
வெட்கமின்றி
மனித மனச்சாட்சியை
ஒத்துக்கொள்ளவைக்கின்றன !


...................................................................................

ஒருமுடிவோடு 
புன்னகையோடு

விரோதமாகியிருந்தவளை 
இன்னொருமுறை 
இயல்பாகச் சிரிக்கவைத்தவன்,



சின்னதான 
பிரியமான வார்த்தைகளில்
அவளின் நம்பிக்கையை
மீட்டெடுத்துக்கொடுத்தவன்



அரவணைப்பில்
ஆதாரமான அத்திவாரங்களைப்
பாசமோடு பலமாக்கியவன் .



வலி என்றவள்
சொல்லிமுடிக்குமுன்
உயிரோடு ஒட்டிக்கொண்டு
வழிந்துருகிவிடுபவன்,



மிகக குறுகிய
காலமுருவாக்கிய விபத்தில்
முடிவில்லாக் காதலுக்கு
விளக்கம் சொன்னவன்,





தன்னிரக்கமான அவளின்
பலவீனங்களையெல்லாம்
பலமென்று நிரூபித்தவன்,



அவளாகவே
இருள்செறி பாதைகளில்
பின்வாங்கிக்கொண்டிருந்தபோது
வெளிச்சங்களோடு
முன்னுக்கு வந்தவன் ,



அவளின் நீண்ட மவுனத்தை
பூக்களின் இதழ்களில்
தென்றலைப் போல மென்மையாக
வந்திறங்கும் வண்டுகளின்
மொழியில் புரிந்துகொண்டவன் ,



இப்படியான
ஒருவனால்
அவளுக்காகவே
ஆழமாக இறங்கியுள்ள
வேர்ச்சொற்களின் துடிப்புகளை
பேசிமுடிப்பதுக்கு
வார்த்தையாக்கமுடியாமலிருக்கலாம் !


.......................................................................................



முதல்
மூன்று வரிகளை
இயல்பாக அதன்போக்கில்
வேண்டுமென்றே
கை நழுவ விட்டேன்



நாலாவது வரி 
நான் நினைத்ததுபோல வராமல்
கைவீசிக் கைவீசி
அது விரும்பியபடி வந்தது



அஞ்சாவதிலும்
ஓரளவுக்கு
என்ன சொல்லவாறேன் என்ற
கட்டுமானம் வீச ஆரம்பித்தது



ஆறாவதில்
வாயுபகவானையும்
நன்றியோடு இணைத்துக்கொண்டேன்



ஏழாவது
அரைவாசியில் புத்தியைக் காட்டி
சூறாவளியாக சுழன்றடித்து
சனியன்போலவே மாறியது



எட்டாவதைக்
கட்டி இழுத்து
மேக எல்லைக்குக்
கிட்டக்கொண்டு வந்தேன்



த்தாவது வரியில்
தென்றல் போல மென்மையான
பாதுகாப்பை உணர்ந்தேன்





பதினொன்றில்
வாடையும் பருவமும்
மறுபடியும் ஒன்று சேர்ந்தது





பன்னிரண்டில்
ஆச்சரியம் வைத்து
மேகங்களோடு மோதி
பதின்மமூன்றில்
அதிசயமாகியது


மிச்ச ரெண்டு வரிகளில்
திசைகளைத்

திருப்பி வைத்தபோது
எழுத்துக்கள்

மிதக்கத்தொடங்கின


பறவைகள்
கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி
எழுதிமுடித்
அந்தக் கவிதைக்குக்
" காற்று " என்று பெயர்வைத்தேன்.!





Thursday, 26 April 2018

வண்ணாத்திப்பூச்சியின் காதல்


என்னதான் நானே எழுதினாலும் இன்னும்தான்  கவிதை பற்றிய நிறைவான ஒரு கோட்ப்பாடு என்னிடம் இல்லை, அதனால அதை  அறிய  இலக்கிய விமர்சகர்கள் எழுதிய  கட்டுரைகளை  எப்போதும்  வாசிப்பது . அதிகம் அலட்டிக்கொண்டு இருக்காமல் " கவிதை விமர்சனம் " என்ற வகையில் " கவிதைகளின் நேரடித்தன்மை " என்ற தலைப்பில் வா.மணிகண்டன்  என்னும் கவிஞ்சர் எழுதிய நீண்ட கட்டுரையில் உள்ள ஒரு கருத்தை  சுருக்கமாக அப்படியே தருகிறேன். மிக எளிமையாக அதே நேரம் ஆழமான ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். 

                                                            " கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்."


                                                       ஒரு பானை பழஞ்சோறுக்கு  தொட்டுக்கொள்ள ஒரு துண்டு நாரத்தங்காய் உறுகாய்போல இப்படி சொல்லி இருக்கிறார் கவிஞ்சர் வா மணிகண்டன். அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


வண்ணாத்திப்பூச்சியின் காதல் 
எந்தவையென்று 
எப்பவாவது அதனிடம்
காற்றை முன் நிறுத்தி வைத்து 
விசாரித்திருக்கிறோமா ?
இல்லையே !
அதையெல்லாம் விட்டுவிட்டு
படிமங்களை
அதன் சிறகுகளில் ஏற்றி
பறப்பதைச் சிக்கலாக்கினோம் ,
நனவோடை உத்தி என்று
குறுக்குவழிகளில்
புத்தி சொல்லிக்கொடுத்தோம்,
தேடல் என்ற பிரயோகத்திலதன்
சுயநிர்ணயத்தை
மொத்தமாகக் களவாடினோம்,
தேர்வுசெய்த
தோல்வியின் விபரிப்புகளுக்கோ
கனவுகள் காணாமல்போதலுக்கோ
அதன் பெயரைப் பாவிப்பதுக்கு
முன் உத்தரவுகள் வாங்குவதில்லை,
பயங்கரமான சொல்லாடல்களில்
அதன் பெண்மைப் பாதுகாப்பே
பதறிக்கொண்டது,
திடீர் திருப்பங்களென்று
அதன் பழக்கப்பட்ட திசைகளை
மாற்றிவைத்தோம் ,
கவிதைமொழிப்பற்றி அதனுடன்
ஒருநாள்த்தன்னும்
கலந்துரையாடியதில்லை !
ஒதுங்கிக்கிடக்குமதன்
ரகசிய விருப்பங்களையும்
பிரத்யேகமாக சேர்த்து வைத்திருக்குமதன்
காதல் குறிப்புகளையும்
கணக்கில் எடுத்ததேயில்லை !
இப்படித்தான்
அதீத பலாத்காரங்களுடன்
தப்பிப்போகாதவாறு
கவிதைகளில் உள்நுழைக்கப்பட்டு
அடிவேண்டியே செத்துப்போன
அட்ப ஜீவன்
வண்ணாத்திப்பூச்சி !


.........................................................................................

எதிர்பார்த்த வேகத்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் 
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு 
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !


.....................................................................................................

தனித்தனியாக நின்று 
இருட்டின் 
மொழிபெயர்ப்புகளை 
உறக்கமின்றி 
ஒன்றோடொன்று தொடர்பிளக்கச் செய்யும் 
கனவுகள் !
பயணமாகிக் கொண்டிருக்கும்
நெடுந்துராப் பாதையில்
அச்சம்தரும் அமைதி !
இருத்தலைப்
பொறுமையோடு அணுகிக்கொண்டிருக்கும்
வெவ்வேறு கணங்களில்
அருகருகே
வெளிச்சக் குறுக்கீடுகள் !
ரகசியமாகப் படர்ந்திருந்தாலும்
நிசப்தங்களை
நீட்டிக்கொண்டேயிருக்கும்
நிசி மவுனம் !
இதெல்லாம்
இயங்கக் காரணமாயிருக்கிற.
இரவின் குரலை
எப்போதாவது
கேட்டேவிடுவதென்று முயட்சித்த
அத்தனை நாட்களிலும்
முதலில்த் தூக்கம்
அப்புறம் தான் மற்றதெல்லாமென்று
சொல்லாமலே
விடிந்துவிடுகிறது !


...............................................................................................

முன்னெப்போதுமில்லாதவாறு 
உனக்கேயான 
ஒவ்வொரு நொடிகளையும் 
நினைவாக்கிவிடு !
வயதான தம்பதிகள் 
மர வாங்கில் நெருக்கமாகி
கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள் !
வாழ்ந்துகொண்டிருப்பதே
ஒருவிதமான
ஆதிக்கும் அந்தத்துக்குமிடையிலான
அட்புதமான குறுக்கீடு !
பள்ளிக்குழந்தைகள்
ஓவென்று கத்திச் சிரித்தபடி
பாதையைக் கடக்கிறார்கள் !
என்னை
முடிவில் திட்டுவதை நிறுத்து
நான்
கருவில் உருவான
பிறப்பின் ஆரம்பத்திலிருந்தே
உன்னோடு பயணிக்கிறேன் !
ராத்திரியின்
அளவுக்கதிமான ஸம்போகத்தில்
மேலாடைகள் கலைந்த
நகர வீதிகளின் நிசப்தம் !
உன்
இறுதிக்கணப் பாடலை
இப்போதே எழுதி எடுத்துக்கொண்டு
வீரனைப்போலவே காத்திரு !
காற்றின் திசைகளை
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தேவாலய மணிகள்
விட்டு விட்டு அடித்துக்கொள்கிறது !
என்
ஆத்மாவின் தேடலைப் புரிந்துகொண்ட
ஆழ்மனதின் கெஞ்சலுக்கு
இப்படித்தான்
கடைநிலை விளக்கம் தருகிறது
மரணம் !


..............................................................................

மனமகங்காரம் 
அவ்வளவு இலகுவாக 
சமயங்களில் விட்டுக்கொடுக்குதில்லை, 
மோனத்தை ஆனந்தமாக்கும் 
செப்படி வித்தைகளும் 
பிடிபடுகுதில்லை,
அப்பட்டமாகச் சொல்வதென்றால்
விழிப்புணர்வின்றி
நாளைகளை களவெடுத்து
இன்றோடு பொருத்திக்கொண்டு
அத்தமில்லாக்
காலத்தில் வாழ்ந்து போவது குறித்து
வருத்தப்படமுடியவில்லை !
மேன்மையானவொன்றை இழக்கிற
கவலை
உதறி எழ முடியாதவாறு
ஆக்கிரமிக்கிறது !
இன்னும் இன்னும் வேண்டுமென்ற
மனப்பான்மை
ஆழ்ந்த விவாதத்திறகுரிய
எளிதில் மறுக்கவியலாத
நோக்கங்கள் நோக்கி
வழி நடத்தும் பொறுப்பிருப்பதாகவும்
நம்பமுடியவில்லை !
புரிகிறதோ
இல்லையோ
ஆழ்மனக் கொந்தளிப்புக்களை
முடிந்தவரையில் அடக்கிக்கொண்டு
நேர்மையான
சிருஷ்டிகர்த்தாக்களுக்கு
உண்மையானதை விட்டுக்கொடுத்து
ஒதுங்க வேண்டியதுதான்.!


.....................................................................................

முதல்முதலா 
உங்கள் வெளிறிய முகத்தைக் 
கதவை திறக்கச்சொல்லும் வெளியில்
காற்றோடு அறிமுகமாகித்தான் 
பார்த்தேன் !
என்
உறவுமுறை தேடிவந்த
உங்களுக்கு எதுக்கு
முகம் சட்டேன்று வெள்ளையானது ?
அது எனக்கும் புரியவில்லை !
தலைமுறைப் பிறழ்வுகள்
நீண்ட தூரங்களை அனுமதிக்கும்
பார்வைப்பரிமாற்றத்தில்
அளவில்லா அதிர்ச்சிகளை
நீங்கள்
எதிர்பார்த்திருக்க நியாயமில்லை !
ஒருவேளை
அந்த இடத்தில என்னை
பலவருடம் முன்னைய
பால்ய நாட்களில்
அடையாளம் கண்டிருக்கலாம் !
அதில் தான்
என்
வயதை நேரடியாகச் சந்திக்கிறீர்கள்,!
இரண்டாம் முறையாக
கதவைத்திறந்து நீக்கலாக விட்டு
காலத்தைக் கொஞ்சநேரம்
கசியவிட்டேன் !
நீங்கள்
மேம்படுத்தல்களில்லா
எனக்குரிய வாசனையை
அடையாளம் கண்டதுபோல
தலையைக் குனிந்துகொள்கிறீர்கள்,
தயைகூர்ந்து
அம்மாவின் சாயலோடிருக்கும்
என்னை
நானே
எனக்குள்ளே
பத்திரமாக வைத்திருப்பது பற்றி
யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் !


..........................................................................

சாதாரணமான பார்வையில்
எளிதாகவே
கவனிக்கப்படாமல் தப்பிவிடும்
சின்ன விபரங்கள்,
பிரத்தியேகமாக அனுபவங்கள் 
எதிர்கொள்ள விரும்பாத
நேரடியான யதார்த்தம்,
நீண்ட கதைகளாகவேண்டியதை
வரிகளுக்கிடையில் சுருக்கிவிடும்
நரித் தந்திரங்கள்,
நல்ல சந்தர்பங்களைத்
தள்ளிப் போட்டுவிடும்
அசந்த மன அழுத்தம்,
இன்னார் என்று பெயர்சொல்லி
இந்த இடத்திலென்று குறிப்பிடமுடியாத
இணைக்கப்பாடுகளற்ற
கணநேர சம்பவங்கள்,
எந்தச் சந்தேகங்களையும்
சிக்கலாகிவிடும்
போதையேற்றும் கற்பனை ,
நிறைவேற்றமுடியாத
மவுன வெளிகளில்
தனித்து நின்று கேலிசெய்யும்
மொழிப்பிரயோகம்.
சில உண்மைகளையும்
பல பொய்களையும்
நம்பும்படியாகவே
உருவாக்கிய விதம் ,
இவற்றோடு போராடித்தான்
ஆச்சரியங்கள் தருகின்ற
ஒரு கவிதையை
எழுதிமுடிக்கவேண்டியிருக்கு !


.......................................................

கறுப்பு நிறத்தை 
நேருக்குநேர் சந்திக்க 
வெறிச்சோடிக்கொண்டிருக்கும் 
இரவுநேரத்தெருக்கள்,
கரண்ட் வயரின் 
மீதமர்ந்து பாடிக்கொண்டிருக்கும்
மோர்கோப் பறவைகள்,
சின்ன வெளிச்சக்கீற்று
வசீகரமான கட்பனையாக
அடிவைக்கத்தவறிய வேகத்தில்
முன்னோக்கி விழுந்தேன் !
விவரிக்கமுடியாத
பயங்கரவலி முள்ளந்தண்டில் !
மொத்த உலகமும்
என்
தோல்வியால் போர்த்தப்பட்டு
மென்மஞ்சளாக மங்கியது,!
மனதின்
கபடமான பகுதி
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்கிறது,
தடுமாறும் மற்றையபகுதி
பைத்தியக்க்காரத்தனமாக
முடித்து வைக்கப்போகிறதென்கிறது !
வயதாகும் வயது
மறைமுகமாகக் கிண்டல்செய்கிறது
என்பதே என்னோட சமாதானம் !
முற்றிலும் மாறுபட்ட
தொனியில்
முனகிக்கொண்டு எழுந்துவிட்டேன்!
விழுகிறதே
எழுவத்துக்குத்தானே
என்றுசொல்லி முடிப்பதுக்குள்
ரெண்டாவது முறையும் சறுக்கிவிட்டது!


.....................................................................................

என்னை
வேகமாக உந்திச் செலுத்தி
நான்
அறிந்திருந்கும்
முன்னரங்க எல்லைகளை 
உடைத்துக்கொண்டே தகர்த்து
வலிகளையே
வார்தைகளாக்கும்
மிக முக்கியமானவொரு
சம்பவத்தில் முழுமையடையாமல்
தொக்கி நிக்கிறேன் !
உள்வாங்கி உச்சக்கடத்தில்ப்
பாவிக்க வேண்டியிருந்த
கவிதைமொழி
கடைசி நேரத்தில்
புத்தியையைக் கபடமாகக்காட்டிப்
பின்வாங்கிவிட்டது !
ஒரு
குறிப்பிட்ட
பின்விளைவுச் செயல்பாட்டில்
கைகளை பிசைந்தவாறு
ஏதுமில்லாமல்
திரும்பிப் பார்க்கையில்
இழந்தவை அத்தனையும்
சமாதானம் சொல்லி ஈடாகுமாவெனும்
சின்னக் கேள்வியை
பெரிய வரலாற்றிடம் கேட்கிறேன் !
விட்டுக்கொடுப்புகளற்ற
கபடத்தனமான வரலாறு
அந்தக்
கனதியான கேள்விக்கு
சீரழித்துக் கொண்ட
மிருகத்தின் மூர்க்கத்துடன்
இப்போதும்
ஆம் என்றே பதிலுரைக்கிறது. !


.................................................................................

முடிந்தவரையில் 
உன் 
சின்னச் சிரிப்புக்குள் 
ஓராயிரம்
உணர்ச்சிகளை மறைத்துவிடு !
பார்வைக்கு எட்டியவரையில்
வசந்தகால மரங்கள்
பூக்கத்தொடங்குகின்றன !
அதிகமதிமாய்த்
துயரங்களோடு
அங்கலாய்த்துக்கொண்டே
அலைக்கழியாதே
நன்றாகவே நடந்தால்
கொண்டாடிவிடு !
முன்கோடைப் பறவைகள்
கீழ் வானத்தை
சின்னச் சிறகில் மிதந்து
இன்னுமின்னும் விரித்துக்கொண்டிருக்கின்றன !
தோல்விகளைத்
தூசிதட்டிக்கொண்டிருக்காதே
நாளைக்கான
அனுபவமாக்கிவிடு !
பார்வையற்றவொருவன்
மிகத் தெளிவாக
வழி தேடியெடுத்துக்கொள்கிறான் !
முன்னிருக்கும்
சவால்கள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் எதிர்க்கொள்ளு !
சின்னவனுக்கு
சைக்கிள் பழக்கும் அப்பா
முதன் முதலாகக்
கைகளை விடுவித்துக்கொள்கிறார் !
என்
அர்த்தத்தேடல்களைப் புரிந்துகொண்டு
ஆழ்மனதின் குரலுக்கு
இப்படித்தான்
உரைநடை விளக்கம் தருகிறது
வாழ்க்கை !