Tuesday, 6 March 2018

செய்வதுக்கு ஒன்றுமேயில்லை..


சில வருடங்கள் முன்னம் நீண்ட கவிதைகள் ஒளிப்படங்களோடு எழுதியிருக்கிறேன். சில வாசக நண்பிகள், " ஏன்பா நாங்கள் என்ன நேர்சரி பிள்ளைகளா படம் பார் பாடம் படி எண்டு பிலிம் போட்டு காட்டினாலா, அல்லது நிலவைக் காட்டி நிலா நிலா ஓடிவா என்று சொன்னாலா எங்களுக்கு விளங்கும்,, எங்களுக்கு வார்த்தைகளில் உள்ள அர்த்தம், வரிகளின் உணர்ச்சி கனமாகி வாசிக்கும் போதே மனப்படமாகி விடுமென்றால் அது போதும் பா, " என்றார்கள் . அவர்கள் சொல்வதில் உண்மை இருந்ததால் ஒரு கட்டத்தில் ஒளிப்படங்கள் எனக்கும் சலித்துப்போய்விட்டது. நீண்ட கவிதைகள் அப்போது எழுதினது உண்மைதான் அதுக்கும் சில வாசக நண்பிகள், , " , ஏன்பா உனக்கு சிக் என்று சுருக்கமா அஞ்சு வரியில் எழுத தெரியாதா பா , ,இந்த நீண்ட அல்லாடல்களை வாசிக்க நேரம் ஒதுக்கினா வீட்டில பிராணநாதன் எங்களை ஒருபக்கமா ஒதுக்கி வைச்சிருவார் பா,,பார்த்துப்பா,பிறகு அந்தப் பாவம் பரம்பரைக்கும் உன்னைத்தான் பிடிச்சு உலைக்கும் பா , " என்று சொன்னார்கள், அவர்கள் சொன்னதில நியாயம் இருந்திச்சு. , காலம் போற போக்கின் வேகம் தெரியாமல் , சுருக்கி எழுதாமல் தெரியாத்தனமா அப்போது எழுதிப்போட்டேன், இப்ப அப்படி எழுவதில்லை. . இந்தக் கவிதைகள் என் முகநூல் சுவரில் சில வருடங்கள் முன் வலம்வந்தவை , நல்ல காலம் சேமித்து வைத்தேன், அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.





அந்தப் பெண் குழந்தையின் 

கேள்விகளில் 
நாலே நாலு விடயங்கள்தான்
உங்களுக்கான
உலகம் தெரிந்தவரையில்
விடை தெரியாமலிருந்தது

முதல்க் கேள்வி
எதற்காக வளர்ந்த மனிதர்கள்

அவசரமா ஓடுகிறார்கள் ?
அதுக்கு 
புதர் ஓரமாகவிருந்த 
கறுப்புப் பூனையை
கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தாள்


ரெண்டாவது கேள்வி
என்ன காரணமாக

அம்மா எப்போதும்
கையைப்பிடித்து இழுத்து
வழிகளையும் நடைபாதையையும் காட்டுறா ?
அதன் விளக்கமாக
சோலை முடியும் சாலை ஓரம் 
ஒரு மர அணில் விபத்தில் 
செத்துக்கிடந்தது

மூன்றாவதாக

மேகமில்லா வானம் ஏன் 

எல்லாவித நிறமாக இருக்கென்று நினைத்தாள்
பிறந்த நாளுக்குப்
பறக்கவிட்ட பல்வர்ணப் பலூன்கள்
போதுமான
காரணமென்று சமாதானமாகினாள் !


நாலாவது 
மிக முக்கியமனான கேள்வியின்

நடுவில்
குறுக்கிக்கொண்டு நானும் 
கும்பிட்டபடி நீங்களும் 
நிற்பதால்
இப்போதைக்கு அதை விட்டுவிடுங்கள்
அவள்
பெரிய மனுசியான பின்
அதுக்குவிளக்கம் சொல்லுவோம்!

...................................................................................................................................





அந்தக் குடிகாரன்
வெற்று விஸ்கிப்போத்தலை
வெறித்துப் பார்ப்பதில்
அவனின் தோல்விகள் எல்லாமே
மயக்கிக்கொண்டிருந்தது ,

யாரை நினைத்துக் குடித்தான்

என்பதே 
அவனைத் தவிர உலகத்தில்
யாருக்கும் முக்கியமில்லை
அவனின்
முகச்சவரம் செய்யாத
நீண்டநாள் எழுதிய கவிதை
விளங்கவேயில்லை
ஆதர்சங்களை இன்னும் அழகாக
அடுக்கியிருக்காலாமே
மூடிகளைத் தேடி எடுத்து
உப்பில்லாத நாக்கில் தடவிப்
பொருத்திப் பார்க்கிற நேரம்
எங்கிருந்து
என்ன வந்தது 
அங்கிருந்து நஞ்சு வந்தது போலிருக்கு
ஒரு மதுமயங்கியின்
உலகத்தில்
தொடக்கம் தெளிவாகவே இருக்கும்
முடிவுகள் என்னவோ
உத்தரவாதமாக
முரண்பாடாகவே இருக்கும்
போதை இறங்கும் இடையில்
நீங்கள் சொல்லும் எல்லா விளக்கமும்
அவனுக்குக் குழப்பமாயிருக்கும்
குடிகாரன் 
உங்களுக்குக்காக குடிப்பதில்லை
அவனுக்குக்காகவே 
நைத்துப் போன ஆத்மாவை 
அழித்துக்கொள்கிறான்
இன்னொருமுறை
பாதை ஓரமோ
புல்வெளியிலோவொரு
வெற்று விஸ்கிப் போத்தலைக் காணும்போது
பலவிதமான திருட்டுக்களில்
சந்தோசங்களைக் களவெடுத்த
கணத்தையும் நினைத்துக்கொள்ளுங்கள்
.................................................................................................................................




இரவுநேரத்தை

விலைபேசும் பெண்ணின்
மஸ்காராக் கண்களில்
மயில் அகவிக்கொண்டிருக்க
நகரமே
நீலப்படம் போலிருந்தது

நீண்ட குதியுயர்ந்த சப்பாத்தில்

அவள்
இன்னும்மின்னும் உயரமாகவிருந்தாள்
சாம விளக்குகள்
சாமந்திப் பூப்போல
மன்மதக் கன்னங்களை 
இடம்மாற்றிக்கொண்டிருந்தன.

மிகமிக இயல்பாக
கருங்கல்லுப் பாதையில்
வெட்டிவெட்டி
நடந்துகொண்டிருந்தாள்
நானோ 
ஓரமாக கவனித்துக்கொண்டே
கடந்துகொண்டிருந்தேன்.

மஞ்சள் அரைச்சுப்பூசி
மனதை மயக்கிய மச்சினியா 
அவளெனக்கு
எதற்காக நிமிர்ந்து பார்க்கவேண்டுமென்றுதான்
ஆசைகளை அடக்க நினைத்தேன்
அவள் கால்கள்
காலத்தைக் காலியாக்கிக்கொண்டிருந்தது.
மிச்சமுள்ள 
இச்சைகள் எச்சில்வழியவைக்க
கிட்டவாகப் போய்
ஒருதரம் ரசித்தேன்.

செவ்வாழைத் தொடைகளுக்கு நடுவில்
மிகப்பெரிய பணக்காரன் 
ஒருவன்
சில மணித்தியாலங்கள்
பிச்சைக்காரணாகியிருக்கலாம்.
......................................................................................................................................



அந்தப் புல்வெளியை
சமஜோசிதமாக இணங்கவைத்து
ஒரேயொரு கவிதைஎழுதும்
உதேசங்களுடன்தான்
மாலை முழுவதும்
காத்திருந்தேன்
சிணுங்கல் மழை
புதர்களைக் குளிப்பாட்டிவிட்டுத்
குளிரில் நடுங்கவைத்து
தலைதுவட்ட மறந்து
புருஷனுக்குச் சமைக்க
மேற்கால ஓடிக்கொண்டிருந்தது.


வெள்ளை மேகத்தை
கறுப்பு மேகங்கள்
மாத முடிவில்
கந்துவட்டிக்காரன் போல
திரத்திக்கொண்டிருக்க
சாம்பல் நிற அடிவானம்
நமக்கு எதுக்கு வம்பு என்பதுபோலப்
பதுங்கியது.


மார்பில் அடித்துக்கொண்டு
மிகத் தாழப்பறந்த
வில்லோப் பறவைகள்
விரல்விட்டு எண்ணவும்
அகலமான இறகுகளில்இடம் தரவில்லை,


இந்த இடத்தில்தான்
முன்னொரு போது
கார்க் கதவுகளை அகலத்திறந்து
உறைபனி விறைக்க வைத்த
உள்ளங்கைகளை
நெஞ்சோடு உரசிச்சூடாக்கிய
நினைவுகள் வந்தது.


புல்வெளிக்கு
அதுவும் நல்லாவே ஞாபகமிருக்கலாம்
ஆனால்
எனக்கு இப்ப விபரிப்பு வேண்டும்
அதுவும்
புத்தம்புதியதான வரிகளில்
உரித்து எடுத்து எழுதக்
காற்றும் வார்த்தைகள் தரவில்லை,


கும்மிருட்டில் குந்தியிருந்து
மின்மினிப்பூச்சிகள்
புறப்பட்ட நேரம்
அவிட்டுக்காட்ட இனி எதுவுமில்லை
என்பதுபோல
இருள் அடாவடியாக நெருங்குவரை
அங்கேதானிருந்தேன்.


இருட்டின் இலக்கணத்தில்
வரிசைக்கிராமமாக எல்லாம் வந்தது
கவிதைதான் வரவேயில்லை !


.............................................................................................................................





என்னை
மதிக்கவேகூடாது என்பதுபோல
சீண்டிக்கொண்டிருந்தது
மந்தாரம் போட்ட வானம்
அப்பவும் உறுதியாக
மழையைப் பற்றி
இனி எழுதவதேயில்லை என்ற
முடிவோடுதான்
அந்த சதுக்கத்தில் இருந்தேன்,


அவசர மனிதர்கள்
ஆவேச வேகமாக
நடந்துகொண்டிருந்த
சப்பாத்து விழிம்புகளில்
எள்ளிநகையாடி
தூறலும் சாரலுமாக
அதுதான் எனக்கு முன்னே
வெறுப்புக் காட்டியது,


நானென்ன
விசுவாமித்திரனா
ஊர்வசிக்கும் மேனகைக்கும் மயங்க
சும்மா அசையாமல்
நடு மண்டையில் விழுந்து
நெற்றியில் உருண்டு
நாக்கில் ருசிக்கும்வரை
வழித்து விட்டுக்கொடுத்துகொண்டிருந்தேன்,


என்னதான் நடக்குமென்ற
நப்பாசையில்
நாலு மணித்தியாலம்
தெப்பலாகவே நனைத்தேன்
ஒதுங்கும் எண்ணங்கள்
அதுவரை வரவில்லை,


என் பிடிவாதங்கள்
தொடுவானம் வரை நீள
மழையதன்
புறம்போக்குப்புத்தியைக் காட்டியது
அதன் கடைசி அஸ்திரம் அதுவென்று
இடியும் மின்னலும்
முன்னமே சொல்லியிருக்கின்றன,


என்
உள் உடுப்புக்கள்
குளிரத் தொடங்கியபோது
மார்பிடைப் பள்ளத்தாக்கில்
முகம்புதைத்து இதம் தேடிய
உன்
சூடான வாசம் வந்ததடி,


நாசாமாப்போன மழை
நினைத்ததை சாதித்தேவிட்டது
நான்தான்
தோற்றுப்போனேனடி.!



...........................................................................................................




உயிர்வாழ்தலில்
சந்தேகமேயில்லாமல்
நிர்ணயிக்கப்பட்ட
அந்த நிறைவு நாள்
எப்போது சொல்லிவரும் ?


எல்லாக் கடன்களும்
இழுபறிப்பட்டாவது
கொடுத்துமுடிந்துவிட்டது,
எல்லாருக்கும்
நல்லவன் போலநடித்துக்
களைத்துவிட்டேன்,


சுவைநிரம்பிய எல்லாச்
சாப்பாட்டையும்
சாப்பிட்டு ஏப்பம்விட்டாகிவிட்டது,
வடிவமைக்கப்பட்ட உடைகள்
வேண்டிய மட்டும்
போட்டு அழகுகாட்டியாச்சு,


இனிப்
பார்ப்பது ரசிப்பதுக்கும்
சொர்க்கமே இறங்கிவந்து காட்டிய
இடங்களே
சலித்துப்போய்விட்டது,


நல்லதாக நாய்வாலை நிமிர்த்தி
நாலு வரி எழுதி
சிந்திக்க வைத்ததில்லை,
அதனால் என்ன
சிலநேரங்களில்
சிரிக்க வைத்திருக்கிறேன்,


கடமைகள் கனதியாகவிருந்தபோது
முடிந்தவரையில்
வசவு வார்த்தைகளோடே
பொறுப்புகளைப் பகிர்ந்தேன்,


இப்பிடியே
ஒரு வட்டத்தை இயக்குவதை
வாழ்க்கை என்கிறீர்கள் நீங்கள்
சரி
அந்தச் சுழற்சியில்
நான் எதற்கு
உங்களிடம் வந்து மாட்டினேன் ?



..............................................................................................................





இரவெல்லாம் 
இன்னொரு கனவு
அதில் நான்
மிகவும் விருப்பமாகி
ஆறுதல் தேடி எடுத்த
நெருக்கமான மனிதர்களுடன்
இறந்தகாலத்தில் வாழ்ந்தேன்,


கண் முழித்துப்பார்த்தால்
இன்னொரு நியக்கனவு
அதில்நான் உத்தரவாதமாகக்
கையைக் காலை ஆட்டி
வேலைக்கு ஓடிக்கொண்டு நடமாடுகிறேன்,


சொல்லும்படியாக
இதில்தான்
நரிபோல எல்லாரையும் முட்டாளாக்கி
நாட்டியமும் ஆடமுடிகிறது !
பிறகு
எதுதான் உண்மையான
விதியின் அதிகாலைக்கனவு ?


எதுதான்
அந்தரத்தில் நிரந்தரமான மயக்கம் ?
அல்லது
எதெல்லாம்தான் நிர்மலமான தெளிவு ?


சென்ற கிழமை நடந்த
அயல்வீட்டு அறிந்தவரின்
மரணச்சடங்கில்
சடைபின்னிய சின்னப் பெண்
சவப்பெட்டியைச்
அசையவிடாமல்க் கட்டிப்பிடித்து
" இன்னொருமுறை
எனக்காகவே வாழ்ந்துவிடு தாத்தா "
என்று சிதறிக் கதறுகிறாள்


" இன்னொருபரிமாணத்தில்
உன்
பிரியமான தாத்தா
இனிதான் உண்மையாகவே
உனக்காக வாழப்போகிறார் "
என்று சொல்ல நினைச்சேன்,


எனக்கோ
அறிவியல் அவலமான இடத்திலயும்
சப்அட்டமிக் பார்டிகல் குவாண்டம் பிசிக்ஸ்
புரிந்த அளவில் தெரியும்
அவளுக்கு
அளவில்லா அன்பு மட்டுமே தெரியும்,


அதுதான்
சாவின் பிரைச்சனையே !



.............................................................................................................................




காலமொரு
முடிவில்லா வேட்டை 
பாகப்பிரிவினை போன்ற 
சில போலியான சம்பவங்களோடு
இயல்பாகவேயது 
இயங்கிக்கொண்டிருப்பது போலிருக்க
சிலநேர அங்கீகாரம் பெற்ற
அது நிச்சயமாக
போலிப்பெருமிதங்களிலும்
புரிவில்லா அறிமுகத்திலும்
மையம் கொண்டது,


மணித்துளிகள்
கடிகார முட்களின் சுழற்சியில்
நொடிகளாக மரணிப்பதைப்
பார்த்துக்கொண்டே
உயிரின்
பிடியினை மேலும் இறுக்கமாக்கி
நேற்று நடந்ததில்
நல்லதே இல்லையென்றும்
இன்று கடப்பதில்
திருப்திகள் இல்லாமலும்
நாளைக்கு மட்டும்
வெற்றிகள் குவியுமென்ற
பிரபஞ்ச மாயையின்
நமபிக்கைச் சிக்கல்தான்
காலமென்று நீ சொல்கிறாய்,


நானோ
வெட்டவெளியில்
வெற்றிடமாகக் கைவிடப்பட்ட
இடத்தை நிரப்பும் ஈர்ப்புவிசையின்
மறுபிறப்பு என்கிறேன்,


உனக்கு கட்பனைமட்டுமே தெரியும்
அதனால்அப்படி நினைக்கிறாய்,


எனக்கு
ஒன்றுமில்லாததில்
அர்த்தம் கண்டுபிடிக்கத் தெரியாது
அதனால் இப்படிச் சொல்கிறேன்,



............................................................................................................




உன்
கடுங்கறுப்பு நிற

சின்னச் சப்பாத்துக்கள்
இனியுனக்குப் பொருந்தவேபோவதில்லை
அதன் வார்களையும்
நோகடிக்க விரும்பாமல்
தத்தித் தாவி நடைபயின்ற
வித்தைகளையுமது மறக்கவில்லை,

உன் உலகம் போலவே
பாதங்களும் இப்போது பெரிதாகிவிட்டது,
என் 
கனவுகள் போலவே
அதுவும் காலம்கடந்து விட்டது,

நீயிப்போது 
என்னைவிடஉயரமான
பெரியதனமான பெரிய மனுசி,

என்ன காரணமென்று 
சொல்லமுடியாததும்
விழுங்கமுடியாதுமான 
ஒரு
 நீண்ட பிரியமான நினைவில் 
மெல்லவே நோகாமல்த் துடைத்து
இப்பவும்தான் அதை
மிகமிக முக்கியமாக
எப்போதும் பார்க்கும்படியான
அடக்குத்தட்டில் வைத்திருக்கிறேன்,

நீ வரும்போது
அதைப் பார்ப்பாய் 
அதைப்பற்றிப் கேட்பாய்யென்று 
நப்பாசையுடன்நினைப்பது,

நீயோ அதைத்தவிர 
வேறெல்லாம் விபரிப்போடு கதைப்பாய்
காசுக்கொடுப்பனவுக்
கணக்கு வழக்குளில்
உனக்கு எப்போதும் தெளிவிருக்கும்,

அதிலுன் பிஞ்சுவிரல்களின்
அக்குள் வியர்வைவாசம் 
இப்பவும் அப்பியிருக்கு
அதுவும் 
எனக்குமட்டுமே தெரியும்,

இன்னொருமுறை 
நீயும் பிறக்கப்போவதில்லை
நானும்
அந்த வாசத்தில் சுவாசம் இருக்கும்வரை
இறக்கப்போவதில்லை.!
.


Sunday, 4 March 2018

டிம்பிள்.

டிம்பிளுக்கு எழும்பில  வலிக்குதா, அல்லது மேலோட்டமாக  நோகுதா என்று சொல்லுமுடியாதவாறு முனகிக்கொண்டு வெங்காயச் சாக்கில் ஒருபக்கம்  முண்டுகொடுத்துப் படுத்திருந்தது. ஒருநாளும் இப்படி அது படுத்து இருந்ததே இல்லை. ரெண்டு முன்னம் கால்களையும் நீட்டி  அதில முகத்தைப் போட்டு அடிக்கடி நிமிர்த்து பார்த்து,  பிறகு  வாலை ரெண்டுதரம் ஆட்டிப்போட்டு அரக்கப்பரக்க  வேலை உள்ளநேரமே வேலை இல்லாத மாதிரி  நிம்மதியில் இருக்கும். 

                                                     சில்லறைக்கடை வியாவாரத்தில் முன்னுக்கு வேகமாக இயங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணியத்துக்கு டிம்பிள் அப்பப்ப எழுப்பிக்கொண்டிருந்த ஈனச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது,வீதியால போற வாகனங்கள் எடக்கு முடக்கா குறுக்க கடக்கும் மனிதர்களுக்கு நுனி விளிம்பில் உரசுர மாதிரி சைட் கொடுத்து அபாயமாக எழுப்பும் ஹோர்ன் சத்தம் எப்பவுமே இரைச்சலாக இருக்கும் , 

                                                           மற்றப்படி சில்லறைக்கடைக்கு வார வாடிக்கையாளரோ அவர்களோடு சுப்பிரமணியமோ உரத்துக் கதைப்பதில்லை.

                                                              டிம்பிள் பகல் நேரங்களில் வெய்யில் அதிகமாக இருந்தால் கடைக்கு பின்னால புகையிலை சிப்பம் அடிக்கி வைச்சு இருந்த இடத்துக்கும் அரிசி மூட்டைகள் அவிட்டுக்  குத்தி நிமிர்த்திவைச்சு இருந்த இடத்துக்கும் நடுவில கிடைக்கும் இடத்தில படுத்து இருக்கும். அதன் பாதங்கள் வெக்கையில் வியர்த்துக்கொண்டிருக்கும்.. இப்ப அந்த இடத்தில இன்றோடு ரெண்டு முழுநாள் டிம்பிள் அசையாமல் படுத்துக்கிடந்தது

                                                               மனியம்    அடிக்கடி வந்து எட்டி எட்டிப் பார்த்தார். வலது கால் இடுப்புப் பொருத்தில் முற்றாக விலகியிருந்தது. சேனைக் கிழங்கு போல தொடை எலும்பு இடம்மாறி  துருத்திக்கொண்டிருந்தது. மெல்ல விரலால தொட்டுப் பார்த்தார். கீழே    வலது தொடைப்பாதம் வீங்கிய இடத்தில நல்லெண்ணெய் தடவிவிட்டார்.டிம்பிளின்  முகம் ஒருபக்கம் பீட்ருட் நிறத்தில வீங்கியிருந்தது.



ஒரேயொருநாள்  டிம்பிள் ஒரு பெரிய விளமீனை வாயில கவ்விகொண்டுவந்து, குசினி வாசலில் நின்ற  சுப்பிரமணியத்துக்கு  முன்னால போட்டுடு அவரோட முகத்தைப் பார்த்தது, மணியத்துக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது, டிம்பிள் களவெடுக்கும் எண்டு அவர் ஒருபோதும் நினைத்ததில்லை, அதைப் பழகியதுமில்லை, அப்படி ஒரு நிகழ்வை  அவர் விரும்பவுமில்லை, சனிக்கிழமைகளில் அவர் எப்பவுமே எலும்பும், சவ்வும் சேர்ந்த ஆட்டு இறைச்சி வேண்டி அரை அவியல் வைச்சு டிம்பிளுக்கு கொடுப்பார்  

" இதென்ன புதுவிதமான கூத்து,,எங்க இருந்து கிளப்பிக்கொண்டு வந்தனி சொல்லு,,டிம்பிள்,,இப்ப சொல்லு."

டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" சொல்லு,,இப்ப  சொல்லு,,இதென்ன கேடுகெட்ட  பழக்கவழக்கம் புதுவிதமா  இருக்கே ,",

 டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" சொல்லு,,இப்ப ஆரும் ஆக்கள் இங்கே தேடிக்கொண்டு வராமல் சொல்லு,,பரிசுகெடுக்க முன்னம் சொல்லு "

டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" இப்ப சொல்லபோறியா இல்லையா,,நாலு உதை விட்டன் எண்டா உண்மை தானா வெளிய வரும்,,அதுகுமுதல் சொல்லு "

டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" சொல்லு,,கெதியா சொல்லு,,முன்னுக்கு ஆட்கள் வந்து கடைவாசலில் நிக்குதுகள்  சொல்லு இப்ப "

இப்ப பின்னுக்கு மதிலால மசுக்குட்டி மாமி மணியத்தை கூப்பிடுற சத்தம் கேட்டுது, மானியம் போய் எட்டிப் பார்த்தார், அங்கே மசுக்குட்டி மாமி கிணத்துக்கட்டுக்கு பக்கத்தில இடுப்பில ரண்டு கையையும் வைச்சுக்கொண்டு நிண்டா, அவா முகத்தில கோபம் எள்ளும் கொள்ளுமா வெடிச்சுக்கொண்டு இருந்தது, மணியம் தலை மதிலுக்கு மேலால வெளிப்பட 

" மணியம்,,சொல்லிப்போட்டன்  வளர்ப்பிணியளுக்கு உந்த ஊத்தைப் பழக்கத்தைப் பழக்கிபோடாதை ,,இதுதான் முதலும் கடைசியுமா இருக்கவேணும் ,,"

" ஹ்ம்ம் "

" சும்மா வந்து வாலை ஆட்டிக்கொண்டு இருந்திச்சு நானும் பார்த்துக்கொண்டு இருந்தேன்,,    எழும்பி ஒருக்கா குசினிப்பக்கம் போட்டுவர கவ்விக்கொண்டு போட்டுதே "

" ஹ்ம்ம்,இங்கதான் கொண்டுவந்து வைச்சுப்போட்டு எண்ட முகத்தைப் பார்த்துக்கொண்டு நிக்குது,,கழுவிப்போட்டு கொண்டுவந்து தரவே "

" வேணாம்,,ஆனா மணியம்  இனிமேல் இது நடந்தா நல்லதுக்கில்லை சொல்லிபோட்டேன் "

சுப்பிரமணியம் உள்ளுக்குவந்து பார்த்தார் டிம்பிள் மீனை அப்படியே நிலத்தில வைச்சுக்கொண்டு இருந்தது, வாயில தொடவேயில்லை , சுப்பிரமணியம் நாடியத் தடவிக்கொண்டு நின்றார், டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது,   டிம்பிளுக்கு  மசுக்குட்டி சொன்ன கடைசி எச்சரிக்கையை சொன்னார், அதுக்கும் டிம்பிள் வாக்கு கொடுப்பது போல தலையைத் தாழ்த்தி   அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, , ,


அதுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, டிம்பிள் கொடுத்த வாக்கை அதன்பிறகு மீறியதில்லை.  அலுமினியத்  தட்டில சாப்பாடு போடும் போது டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும், பிறகு அவர் சாப்பாட்டை குழைத்து மசித்துக்கொண்டிருக்கும் போதும்  , அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்,, பிறகு சாப்பிடு என்று சொன்ன பிறகுதான் முகத்தை கீழே குனித்து சாப்பிடவே தொடங்கும் .

                                               

சென்ற வெள்ளிக்கிழமை இரவுதான் அந்த சம்பவம் நடந்து இருக்கவேண்டும். எத்தினை மணிவாக்கில் நடந்தது என்று அவரால் கணிக்கமுடியவில்லை. டிம்பிள் இரவுகளில் எப்பவும் கடைக்கு வெளியே தட்டித் தாழ்வாரத்திலதான் படுத்து இருக்கும். சும்மா கிடக்கிற கல்லை எடுத்து எறிஞ்சு வெருட்டி விளையாடும் அரைகுறைப் பிறவிகளோடோ  , அல்ல அதன் இனத்து உறவுகள் வம்புக்கு இழுக்கும் வில்லங்கங்கள் என்று தேடிவந்தாலோ  அனாவசியமா எழும்பி இறங்கி, பாரதி சிலையாடிக்கோ அல்லது ரோட்டுக்கோ போகாது .

                                 பிறகு என்னதான் நடந்து இருக்கும் ?



சுப்பிரமணியம் ஒரு பழைய பஞ்சாங்கம், பாக்கிறதுக்கு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்புள்ள அவர் ஒரு நாளுக்கு ஒரு சுருட்டுதான் பத்துவார், சுருட்டை வாயில வைச்சு கொண்டு இருப்பார் பத்தவே மாட்டார் , ஆனால் பத்தினா, அது பத்தி முடியும்வரை அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார். அவர் கடையில் சேட்டுப் போட்டாமல் , கட்டி இருக்கிற சங்கு மார்க் சாரத்தை பொம்பிளையல் குளிக்கும்போது பாவாடையை உயர்த்திக் குறுக்குக் கட்டு கட்டுவது போலக் கட்டிக்கொண்டு புழுங்கல் அரிசி மூட்டைக்கு மேலே ஏறி இருப்பார் .


சுப்பிரமணியத்துக்கு அது விளங்கவேயில்லை . காலையில் திறக்கும் போது , டிம்பிள் எழும்ப முடியாமல் சவட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தார்.. பதறிப்போனார்.ஒரு சுருட்டை எடுத்து பத்த வைக்காமல் சொண்டில கொழுவிக்கொண்டு ஜோசித்தார். டிம்பிள் ஒவ்வொருநாளும் கடைக் கதவு திறக்க அந்த நீக்கலுக்கால  ஓடிவந்து காலை நக்கும். நாலுதரம் " நான் நல்லா இருக்கிறேன் "  என்று சொல்லிக் குரல்கொடுக்கும் . 

                                  அவர் முகத்தை வாஞ்சையோடு பார்க்கும்.  அவர் அதன் தலையை தடவிகொடுப்பார். இராத்திரி முழுதும் நல்ல சேவகன் போல காவல் காத்த நன்றியை அவர் அப்படித்தான் தெரிவிப்பார்.

                                                          

புதன் கிழமை, வியாழக்கிழமை ரெண்டுநாளும் டவுன் பக்கம் ஒரே அமளி துமளி.பகல் முழுவதும் மாறிமாறி  ரெண்டு பக்கமும் அடிபாடு.  கடல் பக்கம் செல் அடி தொடர  தரைப் பக்கம் சன்னங்கள் பறந்தது. பெல் ரக ஹெலி வந்து சுழன்று சுழன்று பிப்டி கலிபரால் முழங்கிக்கொண்டு இருந்தான். , நாலுதரம் சியாமா செட்டி போர் விமானம் குத்தி எழும்பி இலக்கில்லாமல் குண்டு  போட்டுது.

                                                        ஆவணி மாதம் பகல் எல்லாம் வீராளியம்மன் கோவில்  தீக்குளிப்புக்கு தணல் விழுத்தி இழுத்துப் பரவின மாதிரி  நெருப்பு வெய்யில்  .அதைக் கொஞ்சம் தணிக்க  பின்நிலவு நேரம். காற்று கைவீசிக்கொண்டு நடை பழகிக்கொண்டிருந்தது. அம்மச்சியாகுள  வெள்ளைவாய்க்காலில்  மாரி வெள்ளம் பாய்ந்து  வடிந்து ஒடிக்களைத்தமாதிரி   இரவுகள்  கொஞ்சம் அமைதியாதான் இருந்தது

                                                       டவுன் பக்கம். வெள்ளிக்கிழமை பகல் அசாதாரண அமைதி . ஆனால் திடீரெண்டு  இரவு முன்னேற்ற முறியடிப்பு சண்டை தொடங்கின மாதிரிதான் இருந்தது . அவ்வளவு பிக் அப் உறுமல் ஓட்டம். சுப்பிரமணியம் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு ஒவ்வொரு பிக் அப் உறுமலையும் கவனித்துக்கொண்டிருந்தார்.சில நேரங்களில் மனிதர்கள் இடம்பெயர்ந்து கோவிலடிப்பக்கம் போற சத்தங்களும் கேட்டது  . 

                                                                டிம்பிள் கடைக்கு வெளியே முன்னால சத்தமில்லாமல் படுத்திருந்தது. அதிகாலை போல அவர் தூங்கிப்போய்விட்டார் .




சுப்பிரமணியம் தனியாத்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டு இருந்தார் , அவருக்கு மனிவி பிள்ளைகள் இல்லை எண்டுதான் ஊருக்குள்ள அறிய்பட்டாலும், அவர் கடைக்கு பின்னாலா ஒரு பத்தி இறக்கி சின்ன இருட்டானா ரூமில , நிறைய யானைச் சோடாப் பெட்டிகளால் அந்த ரூம் வாசலை மறைச்சு அதுக்குள்ளே தான் சமைச்சு சாப்பிட்டுக்கொண்டு அந்த சில்லறைக்  கடையை மசுக்குட்டி மாமியிடம் வருஷக் குத்தகைக்கு எடுத்து  நடத்திக்கொண்டிருந்தார்.

                                                       நாலு பெரிய வீதிகள், ரெண்டுகிரவல் ஒழுங்கை வந்து சேர்ந்து கைவிரகள் இடுக்கில்  பிரிவது போலப் பிரியும்   பாரதி சிலையடியில்  ரெண்டே  ரெண்டு தெருவிளக்குகள்தான். ஒன்று ஞானப்பிரகாசம் ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. மற்றது கிணத்தடி வயிரவர் கோவிலுக்கு முன்னால அன்னமக்கா  வீட்டு வேலியோடு  இருந்தது. ரெண்டிலும் பல்ப் இல்லை. பதிலாக சில மண்ணெண்ணெய் விளக்கு முனுசுபால்டி தொங்க விட்டு ஒரு ஆள் வந்து பின்மாலையில் திரி பத்த வைப்பார்.

                                                   சில இரவுகளில் சிலநேரம் சண்டை டவுன் பக்கம் நடந்தால் ஹெலி வந்து அவடத்தைச் சுற்றி அடிப்பான் எண்டு அதை எரிய விடுறது இல்லை.

                                                                       டிம்பிள் சில நேரம் ஞானப்பிரகாசம் ஹோட்டலில் கொத்துரொட்டி போடுற கொத்து மேசைக்கு கீழே சிதறிக்கிடக்கும்  சின்ன சின்ன இறைச்சி துடுகளைத் தேடிப்போகும். அது எப்பவுமே ஞானப்பிரகாசம் ஹோட்டல் இரவு நடுச்சாமம் வியாபாரம் முடிச்சு இழுத்து மூடின பிறகுதான் .அளவுக்கு அதிகமாக தண்ணி அடிச்சுப்போட்டு பாரதி சிலையடியில் படுத்துக்கிடந்த கொண்டு முப்பது கோடி முகமுடையாள் ..எண்டு பாரதியாரையே கிண்டல் அடிச்சுப்  பாட்டுப்பாடி கொண்டிருக்கும் வெறிக்குட்டிகள் இருந்தால் தவிர மற்றநேரம்  பாரதி சிலையடி பிசாசு நடமாடும் அமைதி போலிருக்கும்.

                                                                       வயிரவர் கோவிலில் ஒரு கருங்கல்லு நாய் சிலையாக செய்து வாசலில் வைத்து இருந்தார்கள். அம்மாவாசை  இருட்டுப்போல கறுப்பு அது . அதன் முகத்தில கண் எது காது எது என்று உற்றுப்பார்த்தால் தான் தெரியும் . அது முகத்தை ஒருபக்கமா திருப்பி சந்தியைப் பார்த்துக்கொண்டிருப்பது போலிருக்கும். சில நேரம் டிம்பிளும் அதுபோலவே பார்த்துக்கொண்டு கடை வாசலில் படுத்திருக்கும். அதுவேற இதுவேற.  வைரவரின் நாய் அவரோட பிரைவேட் வெயிக்கிள். டிம்பிள் சுப்பிரமணியத்தோட பெஸ்ட் பிரென்ட். 




பிக் அப் ஓடிகொண்டு வந்தவன். திடகாத்திரமான இளம்பொடியன்.மன்னார் மாவட்டம்.  பேசாலைக் கடலில கடலட்டை  பிடிக்கிற   தொழில் செய்த குடும்பத்திலிருந்து பதினாறு வயதில லீமா 16  பயிட்சிப் பாசறைக்கு  ட்ரைனிங் எடுக்கப் போனவன். நெஞ்சில ஹோல்சர் கட்டி இருந்தான். பக்கத்தில  வூட் பட் ஓரியினல் ரசியன் 
ஓடோமாட்டிக்   கலாஸ்னிக்கோவ் சேப்ட்டி மொட்டில அவனோட இடுப்போடு சாய்ந்துகொண்டு இருந்தது.

                                                          முறைப்படி வீதி ஒழுங்குகள் தியரியாகப்    பயின்று , ட்ராபிக் இன்ஸ்பெக்ட்டருக்கு பவ்வியமாக   ஓடிக்காட்டி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்காதவன். அநுமானைப் போல  இராசாவும்  பரசுராமன்  போல  சேவகன்களும் இருந்த  அந்த யுத்தகால நேரம்  பிக்அப்புகள்  ஓடித்திரிந்த எல்லாருமே  அப்படித்தான் இருந்தார்கள்.

                                                                  மழைக்கருக்கலில்   மின்னல் அடிச்சு மாதிரி ஹெட் லைட் போடாமல்   வேகமாக ஓடுவார்கள். புழுதிக்கால புகுந்து புழுதிக்கால தலையை வெட்டிக்கொண்டு  வெளியவாற மாதிரி இருக்கும்  பறக்கும் வேகம் .. பக்கத்தால  பிக் அப் வேகமெடுத்துப் பறக்கிற    சிலநேரம் பாரதி சிலையடியில்  சாரம் கட்டிக்கொண்டு விடுப்போடு ஆவெண்டு வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு   நிக்கிற ஆட்களின் சாரத்தையே  உயர்த்தி எல்லாத்தையும் காட்டிப்போட்டுத்தான் போகும்.

                    " பொடியள் இண்டைக்கு என்னமோ  பொறுத்த இடத்தில வைச்சு ஆமிக்காரனைப்  முறையாப் பிரட்டப் போறாங்கள் "

                                                      என்பது என்பது போன்ற கிசுகிசுப்புகளோடு அந்த ஆரவாரம் புழுதி அடங்கின கையோடு அமுங்கிப்போகும் 


பிக் அப் ஓடிக்கொண்டிருந்தவனுக்குப்  பக்கத்தில முன் சீட்டில இருந்தவன் வோக்கி செடில கதைத்துக்கொண்டு இருந்தான். அவன் விட்டுவிட்டு வெட்டிக்கொண்டு இருந்த உரையாடலை நேர்ப்படுத்த  நம்பரை ஏற்றியும் இறக்கியும் டுயுணர் கொன்றோழில்  சவுண்டை உயர்த்தியும்  உத்தரவு கொடுத்துக்கொண்டிருந்தான்.  கவுண்டர் பிரிக்குவஞ்சியில் ஆமிக்காரன் சிங்களத்தில  கதைக்கிறது வோக்கி செட்டில இடைஞ்சலாகவும் இரைச்சலாகவும் குறுக்கிட்டுக்கொண்டிருந்தது  

                                                      எவ்வளவு கெதியா முன்னரங்கம் போக முடியுமோ அவ்வளவு கெதியா கொண்டுபோய்ச் சேர் என்பதுதான் பிக் அப் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு  அதை ஸ்ட்ராட் செய்த நேரம் அவனால்க்  கொடுக்கப்பட்ட உத்தரவு.

                                                 பிக் அப் பழைய இஸ்ஸு ஜப்பான் வகை. நாலு சில்லும் டெர்ப்போ எஞ்சினுடன் நேராகக் கிராங்  சாப்ட்டில் இணைக்கப்பட்டிருந்தது. பறக்கும் சாத்தான் !  பின்னுக்கு பத்துப் பொடியள் எல்லாரும் ஹோல்சர் கட்டி துவக்குகளை மேல்நோக்கி நீட்டிக்கொண்டு நெருக்கி அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். நடுவில ஒரு பசுக்கா டார்பிடோ பாட்டில விழுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் முகங்களில் சண்டைக்குப் போகும் வீராவேசம் பூசணிப் பவுடர் போல பூசியிருந்தது.

                                                   பிக் அப் ஓடினவன் பாரதி சிலையடியில் இருட்டு மம்மிக்கொண்டு இருந்ததை பார்த்தான். அடிக்கடி ஓடிக்கொண்டு திரிந்த ரோட்டுதான்.சாமியம்மா ஒழுங்கை இறக்கத்தில மண் ஒழுங்கை முடிவில இருந்து கியர் போட்டு இழுத்து சந்தியால ஏத்தி வலது பக்கம் திருப்பின நேரம் சடார் எண்டு டயருக்க என்னவோ மாட்டினா மாதிரி சத்தம் வந்தது.கொஞ்சம் பிக் அப்பை வேகம் குறைத்து எட்டிப்பார்த்தான். பார்த்திட்டு

" சனியன் இந்தநேரம் வந்து குறுக்க மாட்டுதே "

என்று சொல்லி செட்டில கதைச்சுக்கொண்டிருந்தவனைப் பார்க்க அவன்,

" ச்சே இப்..இப்ப என்ன ?????????"

" டயரில் என்னமோ செருகிப்போடுது போல சத்தம் "

" எட்டிப் பாரடா,,முதல் டயரில் காத்து இறங்குதா என்று கவனிச்சியா"

" காத்து ஓகே, நாய் ஒண்டு அங்கால எகிறி விழுந்து கிடக்குது "

  " அது கிடக்குது சனியன்,  இப்ப  இதுவா முக்கியம்,,நிப்பாட்டாம அமத்தி   எடுத்துக்கொண்டு ஓடு,, ஆமி ரோமியோ நவம்பர் கட்டவுட் உடைக்கிற மட்டில நிக்கிறான் ,, இறங்கி அடிக்கப்போறான்.போல எடுப்பு எடுக்கிறான்." .

                                               என்றான் .பிக் அப் உறுமி எடுத்துக்கொண்டு பாரதி சிலைக்கு புழுதியை அப்பிப் போட்டு இருட்டில ஓடி மறைஞ்சிட்டுத்து.

                                                             
மணியத்துக்கு ஹிந்தி நடிகைகள் மீது அவ்வளவு மோகதாபம். அதுக்கு அவர் கடையே ஒரு  முன்மாதிரி . . மணியம்கடை என்று ஊருக்குள்ள எல்லாரும் அதைக் சொன்னாலும்  அவரோட சில்லறைக் கடைக்கே " ஹேமமாலினி ஸ்டோர் " எண்டுதான் பெயர் வைச்சு இருந்தார் .தனியா இருக்கிற மனுஷன் எல்லோரும்போல இல்லாமல் பிரத்தியேகமாக   சில விசயங்கள் அந்தாளுக்குப்  பிடித்துபோகுது. நமக்கு என்ன அதில நஷ்டமா இலாபமா என்பதுபோல யாருமே அதை அலட்டிக்கொள்ளவில்லை .

                                                                  சிங்கி மாஸ்டர் ஒருவர்தான் ஒருமுறை சுப்பிரமணியிடம் கேட்டார் 

" மணியம்,,உதென்ன வடக்கத்தி பெடிச்சி,,ஹேமமாலினி பெயரில கடை போட்டு வைச்சு இருக்கிறியள்"

" ஏன் மாஸ்டர் இப்ப என்ன வில்லங்கம் அதில "

" இல்லை,,தேவிகா,,சாவித்திரி,,பத்மினி,,இவையளுக்கு என்ன குறைச்சல்   "

" யார் சொன்னது ஹேமமாலினி வடக்கத்தி எண்டு,,அவள் தமிழ்,,தமிழ் நாட்டில பிறந்த பொம்புளை "

" தமிழ் படம் ஒண்டிலையும் நடிச்சாப்போல நான் கேள்விப்பட்டது இல்லையே "

" அதுதான்,,,பிரச்சினையோ,,அந்த நேரம் சிவாஜி, எம்ஜியார் எல்லாம் என்னைப்போல கட்டைப் புட்டுக்கள்,,ஹேமமாலினி எழும்பின உயரமான பொம்பிளை,,"

" அட,,அட,,அதுக்கென்ன மணியம் "

" எங்கட ஹீரோக்கள் ஹேமமாலினியோட நடிக மாட்டினம் எண்டு எல்லோ சொல்லிப்போட்டினம் ,,அதாலதான் ஹேமமாலினி ஹிந்திக்கு போனது,,அங்கே ஹீரோக்கள் எல்லாம் நல்ல உயரம்,,நல்ல தோதான சோடி "

" ஓ..இப்பிடியும் எல்லாம் நடந்திருக்கோ."

 " ஓம்,,ஓம்,,இப்ப கதை விளங்குது தானே " 


பிக்கப் ஓடினவன் இரவு முழுவதும் முன்னரங்கத்தில் நின்றான். எதிர்பாத்த முன்னேற்ற சண்டை நடக்கவில்லை. ஆனால் பொசிசனில் அவதானிப்போடு   நித்திரை முழித்திருந்தது   களைப்பாக அவன் முகமெல்லாம் விடியாமலிருந்து .  காலையில் திரும்பி பிக்கப்பில் பாரதி சிலையடியைக் கடக்கும் போது, கொஞ்சநேரம் அவடத்தில நிறுத்தி இறங்கி சுற்றிப் பார்த்தான். அவனுக்கு இருட்டிலையும் டிம்பிளின் தோற்றம் கொஞ்சம் தெரிந்து இருக்கவேண்டும். அல்லது வேற என்னவும் காரணமா தெரியவில்லை. 


டிம்பிள் நாட்டிலையும் றோட்டிலையும் மழையோடு வெயிலோடும் வாழ்ந்து கெடும் தெருநாய்கள் போல இல்லை. இது உயர்ந்த உயர்குடி  வளர்ப்பு ரகம், டோப்போமான் வகையும் புள்டேரியர்  வகையும் கலப்பினமாக சேர்ந்த வகை. அதன் ரெண்டு கண்களும் கலப்பில்லாத  நீல நிறம்.தோற்றத்தில் அலாதியான  ஓரியினல் கார்னில்லொப்பஸ் ஜீன்கள் அதன் உடல்வாகில் விசேஷமாக  இருந்தது.   டிம்பிள் எங்கிருந்து மணியத்துக்கு கிடைத்தது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது. 

                                                         
                                                                           மணியம் ஒழுங்கா , ஸ்டைலா இல்லாட்டியும் அவர் வளர்த்த ஜீவனுக்கு   மொடேர்னா " டிம்பிள் " எண்டு பெயர் வைச்சு இருந்ததுக்கும் அதுதான் காரணம்  , கழுத்தில போட்டிருந்த பட்டியில் டிம்பிள் என்று கறுப்பு மார்க்கிங்  பேனையால எழுதி இருந்தார். ஒன்றுவிட்டு ஒருநாள்  அவர் கடையில விக்கிற ஆணைக்கோட்டை உதயசூரியன் நல்லெண்ணெய் போட்டு போலிஷ் பண்ணுவார். டிம்பிள் நல்லென்னைப் போத்தல் போல மினுக்குமினுக்கு எண்டு இருக்கும் . ஹிந்தி நடிகை டிம்பிள் கபாடிய போலதான் அதுவும் பவுசு விட்டுக்கொண்டு அவரோட காலுக்கை முகத்தைத் தேய்த்துக்கொண்டு திரியும்.

                                                    இனி அப்படி திரியுமா என்பது இப்போது மணியத்துக்கு கேள்வியாகி அது  சங்கடப்படுத்திக்கொண்டிருந்தது .


நாளுக்கு நாள் டிம்பிள், அசைவுகள் காட்டுவதிலும் , மூச்சு இழுத்து விடுவதிலும், முனகுவதிலும்   பின்வாங்கிக்  கொண்டிருந்தது . இன்றோடு ஒரு முழுநாள் இரவும் பகலும் கல்லுப்போல அசையாமல் கிடந்திட்டுது . சுப்பிர மணியம் ஒரு அலுமினிய சட்டியில் வைச்ச தண்ணியையும் அது ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அப்பப்ப அதுக்கு பழக்கமான வாடிக்கையாளர் முன்னுக்கு கடையில் வந்து நிண்டு  டிம்பிள் எங்க டிம்பிள் எங்க என்று விசாரிக்கும் குரல்களைக்  கனவுபோல மிதக்கும் வாசனைகளையோடு  அது தெளிவாக அடையாளம்கண்டுகொண்டிருந்தது.

                                                              சுப்பிரமணியம் முதலில் புண்ணியக்குஞ்சியிடம் என்ன செய்யலாம் என்று கேட்க நினைத்தார்.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.போல புண்ணியக்குஞ்சிக்கு நிறைய ஆட்களைத் தெரியும். அவருக்கு தெரிந்த அவரோடு ஜால்றா போடும் ஆட்கள் உருப்படி இல்லாட்டியும்   குஞ்சி எப்படியும் இப்படியான துயர நேரங்களில்  ஒரு ஐடியா கொடுப்பார் .

                                               அதனால  புண்ணியக்குஞ்சியைக் கையோடு கூட்டிக்கொண்டு வரச்சொல்லி சிங்கி மாஸ்டருக்கு ஒரு கட்டு வையண்ணாசீனா சுருட்டு கையில கொடுத்து ஒரு ஒரேன்ச்பார்லி சோடாவும் உடைச்சுக் கொடுத்தார்.   


சிங்கி மாஸ்டர் போல  ஊரில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல் அலையும் உள்ளூர் தத்துவஞானி . அன்றாடம் சாப்பாட்டுக்கே அல்லாடும் அறிவு ஜீவன் 

                                                  
அன்று இரவு கடை சாத்தும் வரைக்கும்  புண்ணியக்குஞ்சி தலைக்கறுப்பு பாரதி சிலையடிப்பக்கம் இல்லை.  , என்ன தாமதம், அல்லது குஞ்சி அவரோட செட் அப் சின்ன வீடுகளை நலம்விசாரிக்க  சிங்கள நாட்டுக்கு போயிடாரோ என்பது  என்ற செய்திகளோடோ  சிங்கி மாஸ்ட்டர் திரும்பி வரவேயில்லை. 

                                                       ஒரு முடிவோடு கடையை ஒரு நாள் இழுத்து மூடிப்போட்டு மிருக வைத்தியரிடம் டிம்பிளைக் கொண்டுபோக ஜோசித்தார் .வார விடுமுறை சனி, ஞாயிறு பொறுத்திட்டு, திங்கள் காலை அதை கொண்டுபோறதா டிம்பிளுக்கு பக்கத்தில இருந்து தடவிக்கொடுத்து சொன்னார்  அதை .  டிம்பிள் கண்ணைத் திறந்து கேட்டுது, மிருக வைத்தியர் என்ற சொல்லை அது முதன் முதலில் அன்றுதான் கேள்விப்பட்டது .  அதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்திருக்கலாம்.


திங்கக்கிழமை அதிகாலை  விடிய வீராளியம்மன் கோவில் துர்க்கையம்மன் மணி அடிச்ச கையோடு சீர்காழி கோவிந்தராஜன்  மின்னெறிஞ்சான்வெளிப்  பக்கமாக கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டிருந்த     லவுட் ஸ்பீக்கரில்  " தார் அமர் கொன்றையும்  சண்பக மாலையும் சாத்தும் ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே " என்று அபிராமி அந்தாதி தொடக்க  மணியம் ஒரு வெள்ளை எட்டுமுழ  வேட்டியும்,பீதாம்பர பட்டுச்   சால்வையும் எடுத்து வெளிக்கிட ஆயத்தமாகுமுன், ஒருக்கா எட்டிப் பார்ப்பம் என்று    டிம்பிளை வந்து பார்த்தார்.

                               டிம்பிளின் சிலமன் இல்லாமல்  சரிஞ்சு விழுந்துகிடந்த   முகத்தில  ஏற்கனவே மாட்டு இலையாங்கள் மொய்க்கத் தொடங்கியிருந்தது.



சுப்பிர மணியம் டிம்பிளைத் தூக்கி அந்த பீதாம்பர பட்டுச்   சால்வையால் சுற்றினார். கொஞ்ச நேரம் நின்று ஜோசித்தார். பின்னுக்கு மசுக்குட்டி மாமி வீட்டில நீண்ட வளவு இருந்தது. அதில ஒரு கிடங்கு அன்னமுன்னா மரத்துக்கு அருகில் வெட்டி அன்றைக்கு மத்தியானம் டிம்பிளை அடக்கம் செய்திட்டு. அந்த பீதாம்பர பட்டுச்   சால்வையை  நாலாக மடிச்சு  டிம்பிள் படுத்து  இருந்த இடத்தில மடிச்சு வைச்சிட்டு, அதுக்கு மேலே சுவரில் ஒரு ஆணி அடிச்சு டிம்பிளின் கழுத்தில அவர் போட்டு இருந்த பெல்ட்டைட் கொழுவி தொங்க விட்டு,  அதில ஒரு சின்னக் குத்து விளக்கு கொழுத்தி வைச்சார்.

                                             நாளே நாலுநாள்தான் அவர் டிம்பிள் இல்லாமல் இருந்தார். அவரிடம் வருத்தப்பட அனுதாபங்கள் இல்லை. திடமாக இருந்தார். சிங்கிமாஸ்டருக்கு மட்டும் டிம்பிள் பற்றி சொன்னார். சிங்கிமாஸ்டர் அதுக்கு 

                                                  " மணியம்  உனக்கு ஒண்டு சொல்லட்டே ,  பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.நூல் கொண்டு ஆடும் பொம்மைகளை ஆண்டவன் விரும்பியபடி ஆட்டுகிறான், விரும்பியபடி அறுத்துவிடுகிறான்,  இடையில் வாழும்போது  நமக்கென வந்தவர்கள் அவர்களுக்கான நேரங்களில் போய்விடுகிறார்கள் , நம்ம நேரத்துக்கு நாம் காத்திருக்கிறோம் "

                                                                  என்று சொன்னார் . பிறகு ரெண்டு பேரும் சுருட்டு குடிச்சுக்கொண்டு இருந்தார்கள் .மணியம் அன்று கடை திறக்கவில்லை. பின்னேரம் சின்ராசாவின் வீட்டுக்கு போய் மூக்கு முட்ட தென்னம் கள்ளு குடிச்சுப்போட்டு வந்து கடை வெளி வாசலில் படுத்திட்டார், பின்னிரவில் பிக் அப் ஓட்ட்ங்கள் அதிகமாக எழும்பிப்போய் உள்ளுக்கு டிம்பிள் கடைசியாக படுத்து இருந்த இடத்தில இருந்த பட்டுச் சால்வையை நீட்டி விரிச்சுப்போட்டு  படுத்திட்டார். 


'அதுக்கு அடுத்தநாள் அவர் காலையில் வீராளியம்மன் கோவில்  லவுட் ஸ்பீக்கரில்    அபிராமி அந்தாதி கேட்டுமுடிய மஞ்சள் தண்ணி தெளிச்சுக்கொண்டு கடையின் முன் கதவைத் திறக்க டிம்பிள் எப்பவுமே வாலை ஆட்டிக்கொண்டு நிக்கிற இடத்தில இன்னொரு ஜிஐவன் நின்று வாழை ஆட்டி, அவர் காலை நக்கியது, டிம்பிள் போலவே தோற்றம், அனால் நேரம் குறைவு., பிடிகிரி தூய்மை அதன் கண்களில் இல்லை,  கலப்பு இனம் போலிருந்தது .

                                                               ஆனால் அதன் கழுத்தில் பெல்ட் இருந்தது.பெல்ட் உள்ள ஜீவன்கள் வீட்டு வளர்ப்புகள். அவற்றுக்கு உரிமையாளர் இருக்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை இது என்னத்துக்கு இங்கே போன ஒன்றை இட்டு நிரவல் செய்ய வந்து நிக்குது என்று ஜோசித்தார், இன்னொருவரின் ஜீவனை ஆதரிக்க முடியாது, உடையவன் ஒருநாள் வந்து கூடிக்கொண்டு போய்விடுவான், அதைவிட வீண் பிரச்சனை வரவும் வாய்ப்பு இருக்கு

                                                              சுப்பிரமணியம் அதில பெயர் என்ன எழுதி இருக்கு என்று தேடினார், பெயர் ஒன்றும் இருக்கவில்லை.,அதனால அதுக்கு ஜீனத் அமன் ஹிந்தி  நடிகையின் அபிமானத்தில் ஜீனத் என்று பெயர் வைச்சார்.    ஜீனத்  கொஞ்ச நாள் முன்னுக்கும் பின்னுக்கும்  அவரோட காலுக்கு நிண்டு சுழண்டதுக்கு. ஆனால் அதன் கண்களில் நிராகரிக்கப்பட்ட கோபம் இருந்தது. அதை மணியம் கவனித்தார், ஆனாலும்    அதுக்கும் டிம்பிள் போலவே ஒரு குற்றம் குறை இல்லாமல் கவனிச்சார்.

ஒருநாள் பெட்டிசம் பாலசிங்கம்  மணியம் கடையில்  வந்து சந்தோசமாக  நிக்கிற ஜீனத்தைப் பார்த்தார். அவருக்கு சுருக் என்று தூக்கி வாரிப்போட்டது. !

                                                  ஊரில   ஒப்பரேஷன் செல்லத்துரை  வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் . அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக  சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும்.

                                                               பெட்டிசம் அதை ஒரு சமூக சேவைபோல தான் செய்தார் ,ஆனால் அவரின் சேவை பலருக்கு பீதியக் கிளப்புவதால்  அவரை ஊருக்குள்ள ஒருத்தருக்கும் பிடிக்காது . அயலட்டையில் யாருமே அவரோடும் ,அவரின் மனைவியோடும் கதைபதில்லை , நன்மை தீமையில் அவர்களை ஒதுக்கித்தான் வைத்து இருந்தார்கள் ,பெட்டிசம் மென்மையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார் , வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடீனேன்,," என்பதுபோல நிலம் அதிராமல் , தலையைக் குனிந்துகொண்டு போறது தெரியாமல் போவார் , வாறது தெரியாமல் வருவார் ,ஆனால் அவருக்கு ஊருக்குள்ள என்ன நடக்குது எண்டு கடுவன் பூனை போல எல்லாம் தெரியும் ,

                                                          பெட்டிசம் முக்கியமா, ஊருக்குள்ள விதானை வசதியான யாருக்கு கூப்பன் காட் கொடுத்திருகுரார் எண்டு A.G.A என்ற உதவி அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார் , A.G.A எந்த மதகு கட்டுற கொன்ட்ராகில எத்தினை சீமெந்து பாக்கை சுருட்டினது எண்டு G.A என்ற அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார், பெட்டிசம் தனிப்படவும் புரளியைக் கிளப்புவார் ,  ஒருவரைத் தவிர எங்கள் ஊரில் அவரோட  வேறு  யாரும் நேருக்கு நேர் நிண்டு கதைக்க மாட்டார்கள் , கதைச்சால் விளக்கெண்ணெய்க்க வெள்ளைப் பூடு போட்ட மாதிரி வில்லங்கம் வெடிக்கும் .

தொடரும்

Thursday, 1 March 2018

மகரந்த மணித்துளிகள்...


உலகப்புகழ் உம்பேர்டோ ஈக்கோ என்ற இத்தாலியன் எழுத்தாளர், தத்துவமேதை,இலக்கிய விமர்சகர் அதை அடி மடியிலேயே கையை வைச்ச மாதிரி " You are not Proust. Do not write long sentences. If they come into your head, write them, but then break them down. Do not be afraid to repeat the subject twice, and stay away from too many pronouns and subordinate clauses." என்று சொல்லி இருக்கிறார்,

                                                               ஆனாலும்  சில நேரங்களில் ஒருவர் எழுதுவதின் உள் நோக்கிய குவிமைய மறைபொருள்க்கருத்தைப் பிடிக்க முடியாது  கிச்சு  மூட்டி விடுற மாதிரியான சின்னச் சின்ன வரிகள் நினைக்காத பல கற்பனை எல்லைக்குள் அதை வாசிப்பவர்களை செலுத்துகிறத்தையும், சிந்தனை வரட்சியில் அதை மேலோட்டமாக விளங்கிகொள்வதும் நடக்குது."அப்படி நிலைமை இருந்தால்   In this case, we should not be ashamed of them, and we should not explain them. " என்று சொல்கிறார்   உம்பேர்டோ ஈக்கோ .

                                                              உம்பேர்டோ ஈக்கோ அந்த விசியதிலும் என்னைப்போல கத்துக்குட்டியாக எழுதும் பலருக்கு சப்போர்ட் செய்வது போல " We either use rhetorical figures effectively, or we do not use them at all. If we use them it is because we presume our reader is capable of catching them, and because we believe that we will appear more incisive and convincing." இப்பிடிப்  போட்டு வாங்கி இருக்கிறார் .

                                                                இன்னும் கொஞ்சம் அதிகமாக, கவிதைமொழியின் மிகப்பெரிய சாத்தியங்களில் பரிசோதனை செய்யும் எல்லாருக்குமே உத்வேகம் கொடுப்பது போல " If we think that our reader is an idiot, we should not use rhetorical figures, but if we use them and feel the need to explain them, we are essentially calling the reader an idiot. In turn, he will take revenge by calling the author an idiot." என்றும் சொல்லி இருக்கார் அந்தப் படிச்ச மனுஷன்.

                                                                 வழக்கம்போல முகநூலில்  எழுதிய    என்னுடைய  சின்னக் கவிதை போன்ற பதிவுகளை   வலைப்பூங்காவில் தூவிவிட்டு   உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !


திரைச் சீலை போட்டு 
மூடிய 
மங்கலான மூடுபனி,
உடம்பை வருத்தி 
உஸ்ணத்தை விழுங்கும் 
உலர்ந்த குளிர் ,
துருவ வாசம் 
மேலோடமாய்த் தடவிய 
ஊமைக் காற்று ,
எல்லாப் பக்கமுமிருந்தும்
நெஞ்சை அமுக்கும் 
அச்சம் தரும் அமைதி ,

......................................................................


நினைவுகள் 
பேசுகிற நேரங்களில்...
மார்போடு 
வெள்ளை இதழ்கள்
விழுந்த 
குடை மரங்கள் 
இரவோடிரவாக 

நிறங்களை இழந்தன..

..........................................................


இங்கேதான் 
சாலையோரம் 
மலர்களின் வாசனைக்குள் 
விலாவாரியாக 
சங்கீதம் தேடிய 
மேகத்தூது
வார்த்தைகள்
இளைப்பாறிக்கொண்டிருக்கிறன,
இனிமேலாவது
பாரிஜாதக் கவிதைகளின்
மயக்கத்தைக் கெடுக்க
சப்தமிட்டு நடக்காதீர்கள் !


..........................................................................


உலகத்தின் 
மீட்சியற்ற அழகிங்கே 
உறங்கிக்கொண்டிருக்கிறதென்று
வரைந்து விட்டதென்னவோ 
திருப்தியற்ற
பிரபஞ்சப் பேரழகிகளை
சளைக்காமல்
போட்டிபோட்டு
வர்ணித்த மொழியின்
கல்லறை வாசகம் தான் !


.............................................................

இடை இடையில் 
மனத்தைத் தேற்றிக்கொள்ள
உபதேச உத்தேசங்கள் ! 
ஒரேதிசையில் ஒருங்கிணைவாக்க
ஆத்மாவோடு ஆறுதல்ப்படுத்தும்
அர்த்தமில்லா சமரசங்கள்!
முகக் குரலின்
முடிவு வார்த்தைகளில்
தொடர்பிழந்த
அவளின்
அலைபேசி இலக்கங்கள்
வருடங்களின்பின் உயிர்த்தது !


......................................................................


நிறங்கள் ஒடுங்கிப்போய் 
வெள்ளையும் வெள்ளியுமா 
வெளிறிய வெற்றிடத்தில், 
காத்துக்கொண்டிருக்கும் 
கடமைகள் ,
கோலங்களில் 
விடுதலையாகி நிற்கின்ற 
பனிச்சறுக்கு வழி 
உறைந்து போயிருந்த 
பாளங்களில் 
மீண்டும்

பாதங்கள்...

............................................

நமதுயிரே தாயே
நமோ நமோ தாயே என்று
சிங்கக் கொடிகள்அசைந்தாடப்
பாடியதின் அர்த்தம் 
மொழி இடைவெளிகள் 
மதம் கொண்டு அதிகமாகி
அது
நிகழ்ந்தேவிட்ட போதும்
நமதிளமை நாடே
உன் எண்ணம் எல்லாம்
அடல் செறி துணிவருளும்
ஆனந்தமே.!


......................................................


குளிர்காலம்
மீதான கோபத்தையும்
வழியின்றி அகப்பட்ட 
வருத்தத்தையும்
தள்ளி வைத்து 
நினைவுகள் பேசுகிற
நேரங்களில்
றுக்கி விழுந்த 
ஞாபகம்
தவிர்க்க இயலாவிட்டாலும் 
மீண்டும் உந்தி
எழுந்ததை 

மறக்கவே முடியவில்லை.

................................................................

அவன்
இறந்துபோன
அந்த செய்தி உண்மையானபோது
ரெயில்
வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது 
நான்தான்
பத்துநிமிட நேரங்கள்
நிரவமுடியாத
நேசிப்பின் இழப்பில்
நிலைக்குத்திய
வெறுமை வெளியில்
விழிகளை அசைக்கமுடியாது
ஸ்தம்பித்துவிட்டேன் !


.................................................................

பெருத்து 
மீண்டும் மீண்டும் 
நிரப்பிக் கொண்டு 
வழிந்த தடங்களில்
தெருக்களின் 
பெயர்கள் அழிந்தன....
 விசையறு 
இரவு முழுவதும் 
பயங்காட்டியபடி
நட்சத்திரங்கள் 
மறையத் தொடங்க
பறவைகள் 
திசைகளை மறந்தன ..

................................................................

நல்லெழில் பொலி சீரணியில்
நலங்கள் யாவும் நிறைந்த
ஒவ்வொரு
நாட்களும்
உண்மையாகவேயிருந்தது
வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலைகள் சூழ்ந்த
ஒரு காலத்தில்
ஒவ்வொரு சிரிப்பிலும்
இயற்கையின் ஆசிர்வாதம்
நிறையவே இருந்த
தேசத்தில் !


......................................................................

நீங்கள் எதை வைத்து
நம்புகின்றீர்கள் ?
பிரியம் நிறைந்த
பலரின் பங்களிப்புக்கள்
கலந்திருக்கிற காலம் 
நம்மை எத்தனை நாள்
விட்டு வைக்குமென்று .?
மற்றபடி,
பூக்களையும் புன்னகையையும்
கை நிறைய
தயாராக வைத்திருங்கள்
இரண்டுமே வெகுமதிதான் !


....................................................................

எதிர்காலத்தில்
என்னவெல்லாம் வருமென்று
சிறு குறிப்புக் கூட
எழுதி வைக்கவில்லை
மாலையில் மெல்லவே 
மொட்டவிழ்த்த
ஒரு பூவைப் போல
துளியும் ஓசையின்றி
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடவே
ஒரு வழியாக
நாங்களே தூரங்களை
எல்லைப்புறம் வரையவைத்தீர்கள்!


........................................................

எளிமையான ஏற்பாடுகளில்
அந்தக்
காட்சி வரும் நேரம்
எனக்காகவே காத்திருந்தது,
முகத்தில் அடிக்கும்
வெய்யில் எழுந்து
நடக்குமென்கிறார்கள்
இனியும்
எதை ஆதாரமாக வைத்து
வெளிச்சங்களை
ஆவணப்படுத்தமுடியும் !


..................................................................

மிகப் பழைய
மரபுக்கவிஞன்
வெண்ணிலவை மேடையேற்றிய
பெருமைகளைத் தூசுதட்ட
நேற்றுக்காலை
எழுதத் தளம் கிடைத்த
புதியவன்
புல்லின் நுனுனியில்
ஊசலாடும்
பனித்துளியை விசாரிக்கிறான் !


..........................................................................

விடியலில்  
 பாதை தேடிவந்து 
தேன் உறிஞ்சிக்குடிக்கும் 
வண்டுகள் ,
மகரந்த மணித்துளிகள்
நாளொன்றில்  
கரைசேரவேண்டுமென 
மாலைவரை   
நெஞ்சமெல்லாம் 
ஏக்க மயக்கமாகவே 
சூரியகாந்தி  மலர்கள்   !

............................................................................

முன்நிலவுக்கால
விருந்தில் 
வெண்பனிப்  பொழிவு ,   
மணல்த்தக்காளி நிறத்தில 
ஜன்னத்திரைச்சீலை, 
வேப்பம் துளிர்கள் போல 
விடியத்தொடங்கும்   
வெய்யில்,
மந்திரலோகம் 
தூக்கமில்லாமல் 
தியானம்செய்யத்தொடங்கும் 
நேரம் !  

..................................................................

விரும்பாமலே 
வாழ சபிக்கப்பட்ட 
இந்த நகரத்தில் 
சந்தோச சிரிப்பை 
இழுத்து வெளியேவிட,
அடுத்த 
மஞ்சள் வெயில்
அதிசயமாக அதிரவைக்கும் 
நாள் வரை 
காத்துக்கொண்டு இருப்பதுக்கு 
காரணங்கள் ஏதுமற்ற 
நம்பிக்கை தருவது 
என் பொறுமை அல்ல 
உன் நினைவு.