Friday, 5 January 2018

இன்னும் இடைவெளிகள் உள்ளது...!

" தமிழைப் பொருத்தவரையில் எல்லோருமே முப்பது வயசுக்குள்ளேயே இந்த ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக் கவிஞன் குடித்துவிட்டு வீடு திரும்பாமல் இருக்கிறான். எந்தக் கலகக்காரன் அண்டை வீட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் எல்லாக் கவிஞர்களும் சொந்தத்திலேயே கவிதைத் தொகுதி வெளியிட வேண்டும். எந்தக் கவிஞன் நூலக ஆணைக் குழுவில் கவிதை புஸ்தகங்களை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிக் கேட்கிறான். எல்லாமே ‘சிஸ்டம் ‘தான், இல்லையா. "  


                                                         இப்படி எழுதியிருப்பார் கவிஞ்சர் நம்பி எனப்படுகிற  விக்ரமாதித்யன், நியாமான கேள்விதான் இல்லையா ?

                                                      நிறைய எழுதிக்கொட்டியும்   இன்னும்தான்   தமிழ்  மொழியில்  உள்ள உணர்ச்சி உரசும் வார்த்தைச்  சூட்ச்சுமம்  அபூர்வமாகவே என் மனதைத் தொடுகின்றது. தமிழ் மொழியில் உரைநடை இலக்கியம் உள்வாங்கிய அளவு கவிதைமொழி அதிகம் பரிசோதனை செய்யப்படவில்லை என்று நினைப்பது.   கவிதை என்பதுக்கும் உரைநடை  என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. 

                                                                நல்ல கவிதைகள் என்று பொதுவாக கருதப்படுபவை எனக்கும்  எப்பவுமே விசேஷம்தான் . அதை ரெண்டு மூன்றுமுறை திருப்பி நேரமெடுத்து வாசிக்க வேண்டும் போலிருக்கும். அனுபவத்தைப்    பொறுத்தவரை என் அலைவரிசைக்கு ஒத்து வரும் பல  அமர்க்களமான கவிதைகளை  நான் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். தினம் தினம்  முகநூல் வாசலில் வந்து விழும் நூறு மல்லிகைப்பூக்களில்  நாமேதான்  நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்து  படிக்க வேண்டி இருக்கிறது.  
.

ஒவ்வொரு முறையும் 
நான் 
சேமித்து வைத்த வார்த்தைகள் 
வேறெங்கோ சேர்ந்து 
புகழ்பெற்று 
புல்லரிப்பாவுகளாகவே பரவுகிறது. 
சகித்துக்கொண்டு போனாலும் 
நிரந்தர இழப்பென்னும் 
மறக்க முடியாத 
ரகசியக் கதவுகளின்பின் 
உள்ளூர உடைவு நிகழத்தான்செய்கிறது 
அதுவும் 
ஒவ்வொரு முறையும் 
உந்திச்செலுத்துவதாக 
உறுதிமொழிகள் தந்த வார்த்தைகள் 
பெரிதான வாஞ்சையுடன் 
இன்னொருவரிடம் 
அடைக்கலமாகிவிடும் போது !

.
......................................................................................
.

நீங்கள் 
அதிகமதிகமாய் 
சகிப்புத்தன்மையிழந்து கொண்டே 
விமர்சித்த போதெல்லாம் 
பிரியங்கள் 
இல்லாத ஒரு ரகசியத்விடத்திலதான்
உங்கள் இஷடப்பட
இருத்திவைத்திருந்தீர்கள் ,
ஆராதனைகளுக்கும்
அழகியலுக்கும் இடையே உள்ள
முரண்பாடு உறுத்திக்கொண்டேயிருந்தது .
நிறைவேற்ற முயன்று முடியாமல்
காலம் தாழ்த்தி வரும்
இரங்கல்களில் அனுதாபங்களை
அப்போதும் தேடியதேயில்லை !

.
..........................................................................
.
இன்றைக்கு வரைக்கும்
நியாயமாகவும்
வணங்காமுடித்தனமாவும் தெரிகிற
நான்
முற்றிலும் மாறிவிட்டதாக
அதீத தோழமை உணர்வுடன்
நீங்கள்
பிரகடனம் செய்த போது
உங்களுக்காக இவ்வளவுநாள்
வளைந்து கொடுத்த
பழைய பாதையிலிருந்து
எனக்கான
தனித்துவ இலக்குகளை
தேர்ந்தெடுத்தது பற்றி அறியாதிருக்கலாம் !

.
.......................................................................
.
நீங்கள் விரும்பும்
ஆனாலும்
பரிச்சயமான கோணத்தில்
நீங்கள் தேர்வுசெய்யும்
குறியீடுகளில்
இந்தப் பிழையைச் சரிசெய்ய
இன்னும் இடைவெளிகள் உள்ளது...!

.
..........................................................................................
.
கடந்துபோய் 
ஒரு
கணப்பொழுதின் 
எண்ணங்களை மறந்துவிட்டேன் என 
உண்மையாகவே ஒத்துக்கொள்ள 
எத்தனை பெரிதான 
ஆற்றமுடியாத துயரத்தை 
ஆத்மா சுமந்து வந்திருக்க வேண்டும்? 
நினைவுகளைப் பிரட்ட விரும்பாத 
அது குறித்த 
ஏக்க மனதைவிட 
கலவரமான விஷயம் வேறில்லை!

.
.............................................................................
.
பிரித்தறியமுடியாத வாசனையோடு 
ரெயில் பயணத்தில் 
என்னருகில் வந்திருந்தாள் 
எங்கேயோவொரு வயதில் பரிச்சயமான வாசனைதான் 
இப்போது 
வயதாகியதால் வாசனைகளும்
உணர்வுக்குள்
மாறிக்கொண்டிருக்கிறதால் மங்கிவிட்டதா ?
கொண்டை போட்டு
கலியாண வீட்டுக்கு வெளிக்கிட்ட
சுமங்கலி நாட்களின் வாசனையா ?
சரியாக சொல்லமுடியவில்லை !
ஓடிக்கொண்டிருக்கிற
நாலு பக்கமும்
கசிந்துகொண்டிருந்து அந்த வாசனை
ஏகாதசிக்குப் பிடுங்கிய
துளசி இலைகள் திறுநீரோடு
சேர்ந்து கொண்ட வாசமா ?
அதுவும் தெளிவில்லை !
தண்ணி போலவே
தளும்பிக் கொண்டிருந்தது அந்த வாசனை
வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய
நந்தியா வெட்டையும் கனகாம்பரமும்
கதைத்துக்கொண்ட வாசனையா ?
அதிலும் விபரமில்லை !
என்னை விழுங்குவதுபோல
நகர்ந்து கொண்டிருக்கிற நேரம் .
இயல்பாய் செயல்பட ஆரம்பித்து .
மூச்சுமுட்ட சுவாசித்து
சேமித்துக் கொண்டிருந்தேன் !
தலை துவட்டிய ஈரத் துவாயின் வாசமா ?
இருக்கவே முடியாது
என் நானும் நானும் ஒரு வாசனையே !
தலையைக் குனிந்தபடி
கடினமான அசௌகரியமாகவிருந்தும்
உள்சுவாசத்தில் உல்லாசமாகிகொண்டிருந்தேன் !
அல்லது
தள்ளி விலத்தி நின்ற
அந்த மூன்று நாட்களின் அவஸ்தை வாசனையா ?
ஹ்ம்ம்
இலகுத்தன்மையோடிருக்கிறதால்
எத்திசையிலும் நகரமுடிகிற தீர்மானம் !
வெட்கத்தை த் தள்ளிவிட்டு
அவளிடமே கேட்டிருக்கலாம்
அதட்குள் அவள்தான் எழுந்து போய்விட்டாளே !

.
...........................................................................................................
.
எனக்குக் 
கொஞ்சமும் தெரியாமலேயே 
எனக்குள்ளேதான் நுழைந்துவிடுகிறது 
நீட்ட முடியாத கால்களின் 
வலி ,
முடிவு வரும் வரையில்
சமாளித்துவிடலாமென்கிற
சிநேகிதமான சமாதானம்
கலங்கல் நீரில் விழும் .
வெளிச்சங்களில்லா நிழல்,
ஒவ்வொரு
ஏமாற்றங்களுக்கும்
எதிர்பார்ப்புகளுக்குமிடையிலான
விழித்தபடியிருக்கும் அலைக்களைப்புகளில்
மனசிலும் இறுக்கிக் குத்திவிடுகிற
பரிதவிப்பு
எந்த எதிர்ப்புமின்றி அப்படியே சாய்ந்துவிடுகிறது, 

.
..........................................................................................................
.
எழுதியேவிடுவதென்று 
ஆயத்தமாகிவிடும்போதோ 
அல்லது 
தள்ளிப்போடும் உத்தேசங்கள் 
சோம்பலாகியே வீழும் போதோ 
தவறாமல்
பலசொற்கள் கடத்தப்பட்டுவிடுகிறது

.
............................................................................
.
அளவுக்கதிகமான சோம்பல்களுடன் 
இன்னும் கொஞ்சம் 
அலுப்புகள் சேர்த்துக்கொள்ள 
தற்செயலாக வெய்யிலைப் பார்த்தேன். 
கண்ணுக்குள் 
நேராகவே குத்தி
இப்போதே எழுந்துவிடு என்றது .
ஒரு
வெய்யில் விடியலில்
அசதியாகத் தூங்குபவன்தான்
உலகத்திலையே உருப்படாத உதவாக்கரை
எனக்கு நானே சொல்லிக்கொண்டே 

எழுந்துவிட்டேன்.
.
.....................................................................................
.
ஒரு
விடிகாலையில் வெய்யிலின் உத்தரவாதங்கள்
ஒரு நாள் முழுவத்துக்குமான
உட்சாக விநியோகம் ,
ஸ்டோக்ஹோலம் நகரம்
இன்று
வெய்யிலில் அபரிமிதமாக குளித்தெழும்பும் போலிருக்கு,
மையத்தைக் கடக்கும்போது
முகத்தை
மஞ்சள் நிறத்தோடு கொடுத்துக்கொண்டிருக்கும்
மனிதர்களின் ஆசுவாசத்தை
என்
மஹாலக்ஸ்மி விழுத்தியது திருப்தியே,
இப்போதைக்கு இது போதும்!
பின்மாலையில்
தென்மேக்குப் பருவக்காற்று
கொஞ்சலின் தூறல் போட்டு,
ஏப்பிரல் மழை
மந்தார வானத்திலிருந்து மெல்லவே
பெய்யுமென்ற
வானிலை அறிக்கையை
அதிகம்
கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை !

.
........................................................................................................
.
ஒரு
முழுமையான நாளை
முந்திக்கொள்ளும் இரவுகளும்
பிந்தி எழுந்துகொள்ளும் பகல்களும்
சுவாரசியமான இடத்திலிருந்தே
அசைக்கும் பயணங்களில்
தயவுசெய்து
என்னுடைய இடத்தில்
நீங்களாகவே
உட்கார நினைக்கவேண்டாம் !

.
..........................................................................
.
இப்போதுதான்
வயதை விட 

எதையாவது
சாதித்தேதீரவேண்டுமென்று 

தெரிகிறது.!
.
.............................................................................
.
இளவேனில் பருவத்தில்
பூக்கக் காத்திருக்கும் 

டுயூலிப் மலர்களோடு .
என் கால்களிழும்
பலங்களை 

சேர்த்துக்கொள்வதென்னவோ
இரண்டு கைகளையும்
தீர்க்கமாக இறுகப்பற்றுவது போல
இப்படியாவது உணரமுடிவதே
இந்த நிமிடத்திலும்
பெரிய நம்பிக்கைதரு விஷயம்தான் !

.
........................................................................................
.
ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம் 
நுட்பமான தந்திரம் 
மனதை வடித்துவிடும் முடிவுகள் 
இவற்றோடுதான் 
எப்போதும் 
ஆழமான மனப்பதிவுகளாக 
கனவுமுடிகிறது !

.
.....................................................................................
.
நிறங்கள் அடர்தியானவொரு 
ஓவியத்தின் 
இருட்டின் நிழல்த் தெரிவுகள் 
அருகருகில் தடுமாற்றமாய் நிக்க 
இப்போதைய தேவையெல்லாம் 
ஒரு 
மூலையிலாவது 
பதுங்கியபடியிருக்கும் 
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும் 
முயட்சி மட்டுமே !

.
..................................................................................
.
என் 
முகவரி பிரபலமில்லை 
இப்போதும்தான் 
அதுவொரு கைவிடப்பட்ட பாதையொன்றில் 
காலத்தில் பாழடைந்த 
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர் தேடிவந்ததில்லை
நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !
என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியேதான் விட்டுவைத்திருக்கிறேன் !
சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,
மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !

.
..................................................................................................
.

குளிருக்கு 
மாங்கல்யத் தாலிகட்டி 
பதிவிரதைப் பவ்யத்துடன் 
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல 
வெய்யிலின் சூடான 
கோடை அரவணைப்புகளையும்
துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான முன்னறிவிப்புகளையும்
பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்
மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்
விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன் !

.
.....................................................................................

எதிர்பார்த்த வேகத்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் 
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு 
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !

.
..................................................................................
.
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !

.
......................................................................................
.
ஒரு 
பகல் பொழுதில் 
அலைகழிந்தே கழிந்துவிடும் நேரம் 
இருட்டில் தான் 
அதிகமான இடங்களை ஆக்கிரமிக்குது 
ஒரேயொரு 
மெழுகுதிரி தியாகமாகிடும் 
வெளிச்சச் சிதறல்களை 
நெஞ்சோடு நெருக்கமாக்கி 
ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்து 
ஒரு 
வாழ்வின் கதையை எழுதிவிட நினைக்கிறேன்
.
................................................................................................
.அதன் நிறம் 
என் கண்களுக்குத் தெரியவில்லை 
ஆனால் 
அந்த இரவு ஊதா நிறத்தில் 
விடியும்வரை முணுமுணுத்துக்கொண்டிருந்தது. 
எப்படிச் சரியாகச் சொல்லமுடிகிறதென்றால் 
அதை நானே 
என்னில் ஒருபகுதியாக உணர்ந்தேன்.
என் 
அடுத்த ஆத்மாவின் பகுதியில் 
கவிதை எழுதும் உட்சாகமெலாம் 
வறண்டுபோயிருந்தது, 
குளிர் காற்றின் 
கிசுகிசுப்பையும்
ஈரமான தீண்டலையும்
தேவதைகளை வர்ணிக்கும் 
தெய்வீக பாக்கியங்களையும் 
வசனங்களின் நடுவில் 
ஊடுருவி எகிறிப்பாயும் வல்லமையெல்லாம்
அதுக்கு நிராகரிக்கப்பட்ட 
நிபந்தனைகளாவேயிருந்தது . 
எண்ணங்களை மாற்றியமைப்பது பற்றியும் 
அதுவாகவே 
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.!
ஏதோவொரு 
கவிதைப் புத்தகத்தில் 
அது 
சத்தமில்லாமல் 
அடங்கிப்போயிருக்க வேண்டும் !
அல்லது 
உங்கள் சந்தேகப் பார்வையைச் 
சுண்டியிழுத்துக்கொண்டே 
அது இறந்தும் விடலாம் !
.
........................................................................................
.
தொலைபேசி இணைப்புகள்தான் 
இப்போதும் 
உடன்பிறப்பு உறவுப்பாலத்தை இனைக்கக் 
விருப்பமோடு காத்திருக்கு
நானாகவே நானிருக்கும் 
பழக்கத்தை வழக்கமாகி வைத்திருப்பதால்
அந்தப்பக்கத்தில்
நீங்கள்
உருவாக்கி வைத்திருக்கும்
அளவுக்கதிகமான ஆடம்பரங்களில்
எனக்கு
ஆச்சரிய அக்கறைகளில்லை !
.
..................................................................................................
.
அந்த 
தடுப்புகள் தேவையற்ற இளமையான 
தாய்லாந்துக்காரி 
இரவுகள் தந்துசெல்லும் 
மன்மத வாடைகளோடு 
வயதான மனிதரை
இறுக்கி இறுக்கிக் கொஞ்சுகிறாள்,
அவரோ
சொத்துப்பத்தெல்லாம்
எங்கோ எழுதித் தொலைத்ததுபோல
ஆயாசமாகவிருக்கிறார் !
அந்த சவுகரியமான
சரிவு இருக்கை ரெயில்பெட்டியில்
எங்கள்
மூவரையும் அநாதையாக்கித்
தவிக்க விட்டுக் கொடுத்துக்கொண்டு
குமஞ்சான் வாசம்
விசிறிப் பரவிக்கொண்டிருந்தது!
தாய்லாந்துக்காரி
தொடுதிரையில் வந்துகொண்டிருக்கும்
குறுஞ்சசெய்திகளுக்கு
சொண்டு இளகிவிடுவதுபோலச் சிரித்து
உடனுக்குடன் பதில் அனுப்புகிறாள்,
அது
இன்னுமொரு
வலையில் சிக்கிய
பணக்கார முதியவராக இருக்கலாம் !
மத்தியான ரெயில்
உயிர் உள்ளவரை தொடர்வது போல
மெதுவாக நகர்த்துக்கொண்டிருக்க
நான் அவளையே
பார்ப்பதை அவளும் பார்த்தாள்,
வயதானவர்
உறவுக்கென்ன அர்த்தமென்ன என்பதுபோல
ஜோசித்துக்கொண்டிருந்தார்,
அவள்
ரெண்டாம் முறை
முறைத்துப் பார்த்தபோது
உள்ளடக்கப் பண்புக்கூறு
மனசாட்சியை உரசியதால்
ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன் !
காடுவெட்டிகள்
வயதான மரங்களை
வெட்டிச் சரித்துக்கொண்டிருந்தார்கள்.....!
.
....................................................................................................
.
செய்வினை சூனியம் போலவே
வேகமெடுத்துக் கடந்த காலம்
நினைவுகளை சுற்றிவைத்து
எதிர்காலத்தை
சூனியமாக்கிக்கொண்டிருப்பதிலிருந்து
தப்பமுடியவில்லையென்பது உண்மைதான்!
அவ்வளவு இலகுவாக
வரட்டுக்கவுரவதை உதறவிட்டுப் பேசுவத்துக்கு
உங்களையே ஆட்டுவிக்கும்
மனதில் உத்தரவுகள் இல்லை !
ஆனாலும்
உங்களுக்கேயுரித்தான
நேரமில்லை என்ற சமாளிப்பில்
நேர்மைகள் இல்லவேயில்லை !
.
.............................................................................................
.
தெருச்சுவரில்
அபத்தமான ஓவியம் வரைபவன்
தயங்கித் தயங்கிய
கோடுகளையும் புள்ளிகளையும்
சில கோணங்களையும் 
பல வளைவுகளையும்
சில பல சுழிப்புகளையும்
இணைத்துக்கொண்டிருக்கிறான் ,
வீடில்லாதா செய்திகள்
அவனின்
கலைந்த கற்றையான தலைமயிரிலும்
குளிப்பு முழுக்கு இல்லாத
விட்டேந்தியான வியர்வை வாசனையிலும்
முன்னுரை எழுதிக்கொண்டிருக்கு,
அவனின்
நிறத்தெரிவுகள்
அவனின் மனப்பிறழ்வுகள் போலவே
புரியமுடியாமலிருந்தது !
இந்தச் சுவர்
அவனுக்கென்றே பிரத்தியேகமான
தோல்விகளில் விடைதேடும்
நாட்க்குறிப்பாகவிருக்கலாம் !
சொல்ல முடியாத
வார்த்தைகளை அவன் காயப்படுத்தாமல்
மிக மிக மென்மையாகவே
மை விசுறும் கொள்கலனை
அசைத்துக்கொண்டிருக்கிறான் !
நான்
கொஞ்சநேரம்தான் அவடத்தில்
முழங்காலில் குந்தியிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
ஒரு
பெரிய கதையைப்
பகுதி பகுதியாக்கிப் புகுத்தி விடும்
நேர்மையான நேர்த்தியில்
நான்
இதுவரையில் வாழ்க்கையை வலிந்து
எழுதிய எல்லாக கவிதைகளும்
அர்த்தமிழந்துவிட்டது !
.
............................................................................
.
ஒரேயொரு
அழைப்பில் சொல்லிமுடிக்காத
இழப்புக்களின் பெறுமதியோடு
என்
தொலைபேசி இலக்கங்கள் சரியாகவே
இயங்கிக்கொண்டிருக்க
இந்தப் பக்கம்
இப்பவும் அப்பவும் எப்பவும் போலவே
நிறைய அன்புடன்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன் !
.
...........................................................................................
.
ஒரு பயணத்தின் முடிவு
இன்னொரு வாசலின் தொடக்கம்
இடைப்பட்ட
யாத்திரையின்
சொட்ப கணங்களுக்குள் சிக்கியுள்ள 
நம்பிக்கைகளை விபரித்துச்
சொல்லவேமுடியவில்லை !
நீண்டகால சந்தேகம்
தறிகெட்ட தற்பெருமை
ஒரு
திடீர் திருப்பத்தில்
இன்னுமொரு நம்பமுடியாத இடத்துக்கு
நாளையையும்
நகர்த்திவிடலாம் !
.
.....................................................................................
.
தேடுவாரற்று
ஓரக்கிடந்த சொற்கள்தான்
ஆச்சரியமாக விழிகளை உயர்த்தி
ஒரு
சலிப்புகள் மீதமாகும் 
மத்தியான வெயில் நாளில்
ஒரு
வாழ்விழந்த பெண்ணின்
முதிர்ச்சியடைந்த பொறுமையில்
ஒரு
ஆதரவுகளை அள்ளித் தருகிற
பின்மாலைப் பொழுதில்
ஒரு
குழந்தையின் விளக்கமுடியாத
கண்களின் வியப்பில்
ஒரு
நினைவுகளை நனைத்து
மூசிப்பெய்யும் மழைநாளில்
ஒரு
முகஸ்துதி விரும்பாத மனிதனின்
அழுத்தமான உதட்டசைவுகளில்
ஒரு
தடுமாற்றமில்லாமல் நெருங்கும்
கிளர்ச்சியான இரவில்
ஒரு
புரியமுடியாத உலகத்தின்
ஒட்டுமொத்தமான பேரழகில்
ஒரு
முக்கியத்துவம் கொடுத்து
பேரம் பேசிய சம்பவத்தோடு
ஒரு
ஒப்பீடோடு முரண்பட்டுக்கொண்டிருக்கும்
கட்பனைகளிடம் போய்ச் சேர்ந்து
இப்படியேதான் மறுபடியும்
ஒரு
கவிதையாகிவிடுகிறது !
.

2 comments :