Friday, 5 January 2018

இடியாப்பச் சிக்கல் 1

கறுத்தப் பூனையை மடியில வைத்துக்கொண்டு இருட்டில சகுனம் பார்ப்பது போலிருந்தது அந்த லாயரின் அலுவலகத்துக்குப் போன போது . அவ்வளவு பூனைப் படங்கள் சுவரில் தொங்கியது. எல்லாமே புஸ் வாக்னர் என்ற டென்மார்க் நாட்டு ஓவியர் வரைந்த படங்கள். ஒரு லாயர் எதுக்காக பூனைப்படங்களை முதன்மைப்படுத்தி காட்ட்சிக்கு வைத்திருக்கிறார் என்று விளங்கவில்லை. பூனைகள் அலட்டிக்கொள்ளாத புத்திசாலியான ஜீவன்கள். அது காரணமாக இருக்கலாம்.

                                                              ஒரேயொரு பிரேம் போட்ட படத்தில லாயர் லம்பர்ஷினி ஸ்போர்ட்ஸ் காருக்கு அருகில் வெற்றிக்கேடயம் ஒன்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிக்கும் படம் மாட்டி இருந்தது.
                                                              அந்த அலுவலகத்தில் நான் சந்திக்கப்போன சீனியர் லாயர் மட்டுமே ஒரேயொரு ஆண். அவருக்கு ஜூனியர் ஆக வேலைசெய்து கொண்டிருந்த இளையவர்கள் எல்லாருமே இளம் பெண்கள். தாய்வீட்டிலேயே அழகுக்கு அணிந்துரை எழுதியது போல இருந்தார்கள். ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்படட தொடரான அலி மக்கபேல் இல் வரும் கதாநாயகி அலி மக்கபேல் போலவே அழகான கட்டமைப்பில் உட்சாகமான வேலைச் சூழ்நிலையை இயல்பாகவே அமிர்தாஞ்சன வாசனையாகப் பரவவிடும் இளம் லாயர்கள்.
                                                             அந்த லாயர் நிறுவனம் ஸ்டோக்கோலமிட்க்கு வெளியே ஒரு அதிகம் பிரபலமில்லாத இடத்தில இருந்தது. அந்த இடத்துக்கு சொன்ஷுபாரி என்று படட உடனேயே நினைவுக்கு வந்தது மார்க்கிடின் கொள்ளுத் தாத்தா .
                                                          கார்ல் மார்க்ஸ் போலவே கொள்ளைத் தாடியோடு பருத்த உருவமான நிலச்சுவான்தரான திருவாளர் நர்டன்மார்க் சுங்கானில் சுருட்டு அடைஞ்சு பத்தவைக்கும் கறுப்பு வெள்ளைப் படத்தை அவள் எங்கள் வீட்டு முன்னறையில் மாட்டி இருந்தாள் . மார்க்கிட் சின்ன வயதில் அவள் வளர்ந்த அந்த இடத்துக்கு ஒரேயொரு முறை கூட்டிக்கொண்டுபோய்க் காட்டியும் இருக்கிறாள்.
                                                                  லாயர் அலுவலகத்தில் சவுகரியமான சோபா வரவேட்பு அறையில் போடப்பட்டு இருந்தது . ஒரு இளம் ஜூனியர் வந்து கொஞ்சநேரம் காத்திருக்கும் படி சொன்னாள். அவள் நெற்றிப் புருவ மயிர்களை மழுப்பி வழித்து கறுப்புப் பென்சிலால் அவுட்லைன் போட்டு இடதுபக்கக் கிளிச் சொண்டில் பியர்சிங் வளையம் கொழுவி இருந்தாள் .
                                                                    ஒரு சின்ன மேசையில் தானியங்கிக் எக்பிரஸோ கோப்பி மிஷின் இருந்தது. ஜன்னல்களில் திரைச்சீலை வெளியே உள்ள மரங்களை நிழலாக அசைத்துக்கொண்டிருந்தது . சோபாவுக்கு முன்னே இருந்த கண்ணாடி மேசையில் செழிப்பான அந்தூரியம் மலர்கள் ஒரு வாஸில் வைக்கப்பட்டிருந்தது.
                                                                           கொஞ்ச நேரத்தில் சீனியர் லாயர் இறுக்கிச் சாத்தப்பட்டிருந்த அவரோட கொண்டமேனியம் அறையத் திறந்துகொண்டு வெளியேவந்தார். அவர் கையில ஒரு நோட்டுப் புத்தகமும், ஹெவ்லட் அண்ட் பக்காட் மடிக்கணணியும், சில பென்சில்களும் இருந்தன, அலட்சியமான கண்களில் அளவுக்கு அதிகமாக நிறைய சட்டச் சிக்கலான கேஸ்களை லாகவமா வென்ற தைரியம் இருந்தது. அது எனக்கு நிறையவே நம்பிக்கை கொடுத்தது. ஏனென்றால் என்னோட கேஸ் ஒரு இடியாப்பச் சிக்கல் போன்ற கேஸ்.
" நீதானப்பா அந்த ஆள்.."
" ஓம் ஓம் ,,நான் தான் அந்த அப்பாவி "
" என்னது அப்பாவியா,,,,அதை நீ இப்ப சொல்லக்கூடாது ,, உன்னோட பெயர் இவளவு நீண்டதாக இருக்கே,,வாயுக்க நுழையுதே இல்லையே,,உன்னை எப்படி சுருக்கமாக கூப்பிடுவது,,"
" எனக்கு கிடுக்குப் பிடிபோல சுருக்கமான பெயர் இருக்கு "
" உன் பெயரைச் சொல்லி உரையாடினால்தான் நெருக்கமாக இருக்கும். வெளிநாட்டவர்களின் பெயர்களே சுவாரசியம்,,வாசித்து விளங்கிறதுக்கு அரை வேலை நாள் தேவை இல்லையா,, ."
" ஓம் ஓம்,,அதில ஒண்டும் பிரச்சினை இல்லை ."
" ஏனென்றால் இந்தக் கேஸ் எடுத்த எடுப்பில கவிட்டு முடிக்க முடியாத கேஸ்.,,நிறைய எடுக்கும்,,மாதக்கணக்கே எடுத்து கோடு கச்சேரி வாசல்படி என்று ஏறவைச்சு அலைக்கழிக்கலாம் ,,இப்பதான் வாசித்துப் பார்த்தேன் உன் கேஸ் "
" ஓ,,அப்படியா,,சிம்பிளா முடியாதா "
." அதுக்கு சான்ஸ் நிகழ்தகவுப்படி சொல்லுறது என்றால் பத்துக்கு ஒன்றுதான் இருக்கு..."
" ஓ,,அப்படியா,,"
" ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்கள் உனக்கு எதிராக சட்டப்படி வழக்குத் தொடுத்து இருக்கின்றன "
" அட..."
"பேந்துபார், என்ன அட போடுறாய்,, இந்த ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்களோடு தனக்கிறது,,புலியோடு வாலைப்பிடிச்சுக்கொண்டு ஓடுறது போல "
" அட..இது அநியாயத்துக்கு அகடவிகடமா இருக்கே "
"பேந்துபார், என்னப்பா,,,சின்னப் பிரச்சினையை இடியாப்பச் சிக்கல் போல ஆக்கிவைச்சுப்போட்டு சிம்பிளா முடியாதா என்று கேட்க்கிறாய் "
" இல்லை,,அதில்ல புலியின் வாலைப்பிடிக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம் வயித்தில புளியைக் கரைக்குது "
" வேற என்னெண்டு சொல்லுறது..புலியின் வாலைக் கைவிடால் புலி அடிச்சுக் கொண்டு போடும்..ஆனாலும் பார்க்கலாம்,,,ரெண்டு கேஸ் இதுபோல முன்னம் எடுத்து வாதாடி இருக்கிறேன்,"
"
" ஓ அதைக்கேட்க வயித்தில டின்பால் வார்த்த மாதிரி இருக்கு "
",,நீ முதல் பொய் புரட்டு புரளியை ஒரு பக்கமா உன்னோட மட்டும் வைச்சுக்கொண்டு எனக்கு உண்மையை சொல்லவேணும் ,,கொலையே செய்து போட்டு வந்திருந்தாலும் லாயரிடம் மட்டும் உண்மை சொல்லவேணும், மிச்சம் நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் "
                                                                                          என்று நிறுத்தாமல் சொல்லி முடிச்சுப்போட்டு, எனக்கு முன்னே சுற்றிக்கொண்டு இருந்த குஷன் கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு இருந்து கேட்டார் . நான் வாய்க்குள் நுழையுறமாதிரி நாலு சொல்லில் என் பெயரைச் சொன்னேன். கழுத்தில் கட்டி இருந்த டையை கொஞ்சம் இளக்கி லூசாக்கிப்போட்டு புஸ் வாக்னரின் பூனைகளை ஒருமுறை சரிபார்த்துப்போட்டு நோட்டில் என் பெயரை பிள்ளையார் சுழி போட்டு நோட்டுப் புத்தகத்தின் வலது மூலையில் குறித்துக்கொண்டார்.

அந்த லாயர் பார்க்கிறதுக்கு சப்பிறானோ மாஃபியா படத்தில வாற டோனி கடல்பினோ போன்ற அகன்ற முகம் உள்ளவர். முகத்துக்கு பொருந்தாத முழுவியளம் போல இத்தாலியன் மூக்கு . ஸ்டிக் லார்சன் அண்டர்சன் பெயர் ஆதியான சுவீடிஷ் பெயர். காட்டுமாவிலங்கு மர வாட்டசாட்டமான தோற்றம். எல்விஸ் பிரெஸ்லி போல வடக்குத் தெற்கு வாடைக்காற்றில் அலைபாய்ந்து முன் நெற்றியில் விழும் நேர்த்தியான மயிர், ஜி ஜி பொன்னம்பலம் போல குறுக்கு விசாரணையில் வெருட்டி மருட்டும் கிரிமினல் லோயர் போலக் கண்கள் இல்லை. பூனைக்கண் போல பசுந்தாக இருந்தது அதில் அமுக்கமாக சந்தேகமும் இருந்தது .
                                                                     விலையதிகமான ஒமேகா ஸோர்னோகிராஃ பவுன் கைக்கடிகார மணிக்கூடு, லம்பர்ஷினி ஸ்போர்ட்ஸ் கார், டிரேஸ்மான் ட்ரேட்மார்க் கோட் சூட்டில் சீனியர் லாயரின் பந்தா அந்த இளம் ஜூனியர் லாயர் பெண்களின் சனிக்கிழமை இரவுகளை சந்தேகப்பட வைத்தது. நமக்கென்ன வந்தது வசதியானவன் அல்வா திண்ணுறான், வசதியில்லாதவன் வெறும்வாயில் அவலை மெல்லுறான். முதல் நான் போன விசயமே என்னோட முக்கிய அலுவல்
" புலிவாலைப் பிடிச்ச மாதிரி என்றால்,,,அதில இருந்து தப்ப குறுக்கு மறுக்க பாயும் வழியேதும் இல்லையா ,,அண்டர்சன் "
" இருக்குப்பா,,புலி ஒருநாள் காட்டுக்குள்ளே எசகு பிசகா எப்பாவது எங்காவது ரெண்டு மரத்துக்கு நடுவில தலைய கொடுத்து மாட்டிச்சுது என்றால் .வாலை உதறிப்போட்டு .தப்பி ஓடவேண்டியதுதான் ,,அதுதான் சாத்தியமான ஒரே சந்தர்ப்பம் "
" ஹஹஹஹஹஹஹ "
" பேந்துபார்,,இப்ப எதுக்கு சிரிக்கிறாய்..நான் சீரியஸ் ஆக சொல்லுறேன் "
" எங்கட ஊர்ல இப்படியான ஒரு கொசப்புக் கதை இருக்கு,,அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது அண்டர்சன் "
" ஓ,,அப்படியா,,அதென்ன கதை ,,சொல்லுப்பா கேட்பம் "
" ஒரு காட்டில ஒரு வடிவான பெண் சிங்கம் இருந்தது,,அதே காட்டில ஒரு தினவெடுத்த ஆண் நரியும் இருந்தது,, அந்த நரிக்கு சிங்கத்தில கொள்ளை ஆசை.....கொஞ்சம் வில்லங்கமான ஆசை "
" ஓகே,,பிறகு "
" ஒருநாள் அந்த சிங்கம் வேட்டை அவசரத்தில் வெட்டை ஒன்றுக்குள்ளால பாயும் போது விளாத்திக் காட்டுக்குள்ளே எசகு பிசகா ரெண்டு மரத்துக்கு நடுவில தலைய கொடுத்து மாட்டி பாட்டில விழுந்து படுத்திட்டுது "
" அட அட ,,பிறகு "
" நரி அந்த நேரத்தைப் பயன்படுத்தி செய்ய நினைச்சதை செஞ்சிட்டுது "
"கிழிஞ்சுது போ ..செய்ய நினைச்சதை செஞ்சிட்டுது ... ஹஹஹஹ,,பிறகு,,சொல்லு என்ன நடந்தது "
"செய்ய நினைச்சதை செஞ்ச நரி தப்பி ஓடிவந்து,,எங்கள் ஊர் வாசிகசாலையில் உதயன் பேப்பர் படிச்சுக்கொண்டு இருந்தது "
" வாவ்,,பிறகு ,,சொல்லுப்பா,,என்னமோ இனிதான் தலையில பானையைக் கவுக்கப்போறாய் போல இருக்கு "
" ஓம். ஒருமாதிரி தலையை வெளிய எடுத்த சிங்கமும் செய்ய நினைச்சதை செஞ்ச நரியத் தேடிக்கொண்டு அந்த வாசிகசாலைக்கு வந்தது, சிங்கத்தைக் கண்ட நரி டக்கென்று முகத்தை உதயன் பேப்பரால் மறைச்சுப்போட்டு தீவிரமா வாசிக்கிறமாதிரி பாவனையில் இருந்தது.."
" ஓ...பிறகு என்னப்பா நடந்தது "
" சிங்கம் கேட்டிச்சு,,ஆரப்பா இப்பிடி ஆர்வமா நியூஸ் பேப்பர் வாசிக்கிறது, எல்லாம் கேட்க நேரமில்லை. காட்டில ஆயிரம் சோலி போட்டது போட்டபடி கிடக்கு ,இண்டைக்கு என்ன தலையங்கம் அதையாவது சொல்லுப்பா எண்டிச்சு "
" பேந்துபார்,,முசுப்பாத்தியை.. அதுக்கு செய்ய நினைச்சதை செஞ்ச நரி என்னப்பா சொல்லிச்சு "
" இன்றைய அதிரடித் தலையங்கம் ............. ............... ..................... என்று சொல்லிச்சு "
" கிழிஞ்சுது போ..ஹஹஹஹா,,அதுக்கு சிங்கம் என்ன சொல்லிச்சு பா "
" ...................................... ............யேல்ல ..அதுக்குள்ளே தலையங்கமா போட்டுட்டாங்களே ,,எண்டிச்சு "
" கிழிஞ்சுது போ..ஐயோ சாமி ,,ஹாஹாஹா,,ஹாஹாஹா,,,நீ என்னப்பா வில்லங்கமான கேசில் என்னிட வந்து நின்றுகொண்டு சிரிப்புக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாய் "
                                                                                                                       என்று சொல்லிச் சிரிக்க அந்த இளம் ஜூனியர் லாயர்கள் அவர்களுக்கு முன்னுக்கு மேசையில் இருந்த வேலைகளை விட்டுப்போட்டு சீனியர் லாயரைப் பார்த்தார்கள்
" சரி,,விடு..இப்ப விசயத்துக்கு வாறன் ,,இன்னாருக்கு வாசிக்கிறேன் உன்னோட பேப்பர்களை,,,என்ன பொயிண்ட்ஸ் பிடிக்கலாம் என்று பார்ப்பம்,,கோப்பி குடிக்கப்போறியா,,அந்த மிஷினில் போட்டு எடுத்துக் குடி "
                                                                          என்று பழையபடி என்னோட பேப்பர்களை வாசிக்க தொடங்கினான். நான் பர்ராசிங்கம் பரியாரியின் கடுக்காய் பேதிக்குளிசை குடிச்ச மாதிரி கொஞ்சம் வயித்தில அசவ்கரியமா உணர்ந்தாலும் வெளிய காட்டிக்கொள்ளாமல் சும்மா புஸ் வாக்னரின் பூனைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் இயல்பாக எந்தக் கலவரமும் இல்லாமல் வாசித்துக்கொண்டிருந்தான்.

நான் லாயர்களை இவளவு அருகில் வைத்துப் பார்த்ததில்லை. துறைசார் நிபுணர்கள் எல்லாருமே அவர்கள் துறையில் கரைத்துக்குடித்தவர்கள். என்னோட கேஸ் தலைக்கு கயிறு போடுவது போல நின்றாலும் அவன் அந்த நேரமும் சட்டப்புத்தகத்தில் பொயிண்ட்ஸ் தேடுவது போலவே இருந்தது.
                                                                           இந்த சின்னச் சிக்கல் என்னால்தான் இந்தளவு இடியாப்பச்சிக்கல் ஆனது. எவ்வளவுதான் நாங்கள் வாழ்க்கையில் பிளான் போட்டாலும் துரியோதனன் குதிக்காலில் சனியன் ஒட்டின மாதிரி வாழ்வின் தீராத பக்கங்களில் சில சம்பவங்கள் நம்மையும் மீறித்தானே நடந்தேறுகின்றன. லாயர் இப்ப தலையை நிமிர்த்தி , நடு நெற்றியில் சுட்டுவிரலை வைச்சு தேச்சுப்போட்டு ,,
" இச் இச் இச் இச் இச் ...இவளவு சிக்கல் இருக்கே இதுக்குள்ளே "
                                                                            என்றான். அவன் " இச் இச் இச் " என்று சொன்னவுடனே ஒரு ஸிவாவா லத்தின் அமெரிக்க நாய்க்குட்டி அவனோட ரூமுக்க இருந்து ஓடிவந்து, அவனோட மடியில பாய்ந்து ஏறி என்னைச் சந்தேகமாகப் பார்த்தது. ஜேம்ஸ் பொண்ட் படங்களில் பயங்கர வில்லன் ஒரு தனி அறையில் தனிக் கதிரையில் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு அவனோட காதலியோடு தோளில உரசிக்கொண்டு அலட்சியமாக இருந்துகொண்டு ஒரு முயல்குட்டியை மடியில வைச்சுத் தடவிக்கொண்டு
" மிஸ்ட்ர் பொண்ட் ,,இதுவரைக்கும் நீங்க செய்ததெல்லாம் வெறும் தூசு.. இனித்தான் உங்களுக்கு முக்கியமான வேலையே இருக்கு "
                                                                         என்று டயலாக் சொல்லுவானே அதுபோல இருந்தது அந்த நேரம் லாயரைப் பார்க்க . லாயர் வாசிக்கும் போதே சின்னச் சின்ன குறிப்புக்கள் பெஞ்சிலால் எழுதிக்கொண்டு இருந்தான். முடிவில் அந்தப் பேப்பர்களை என்னமோ ஆயுள் தண்டனை கேஸ் முடிஞ்சு ஜெயிலில் இருந்து விடுதலை கிடைச்ச மாதிரி மேசையில் எறிஞ்சு போட்டு என்னை நிமிர்ந்து பார்த்து.
" உன்னோட விளக்கம் என்னவும் சொல்லப்போறியா "
" இல்லை,,ஏற்கனவே அதை எழுதி இருக்கிறேன். என்னமோ அந்த ரெண்டு முக்கிய சுவீடிஷ் அரச அலுவலகங்களுக்கும் எதிராக என்னால .செய்ய நினைச்சதை செஞ்சிட்டேன் "
" ஹாஹாஹா ஓம்..பார்த்தேன்..நீ எழுதியுள்ளது சென்டிமென்டலா இருக்கே,, நீ கதைகிதை எழுதி விடுற கதாசிரியனா,,நீ எழுதின மறுப்புக் கடிதம் புனைவு போல இருக்கே,,,வாசிக்க டச்சிங்கா இருக்கு என்றது உண்மை "
" ஏன் அப்படி கேட்க்குறீங்க அண்டர்சன்,, என்னை லைட்போஸ்டில் கட்டி நெற்றியிலே சுட்டு போட்டாலும் கதை எழுதுறது மட்டும் கைவரவே வராது "
" ஏன்பா,,இப்பிடி பயங்கரமா சொல்லுறாய் "
" இதெல்லாம் எங்கள் நாட்டில ,எங்க ஊர்ல சிம்பிளா சந்திக்கு சந்தி ஒருகாலத்தில் நடந்தவிசியம்தானே... "
" நீ எழுதியுள்ள மறுப்புக் கடிதம் சென்டிமென்டலா இருக்கே, "
" அப்ப மனிதாபிமான அடிப்படையில் எழுதவா "
" டேய்,,இப்ப என்னத்துக்கு முந்திரிக் கொட்டை போல முன்னால பாயுறாய். இன்னும் உன் முதல் அப்பீலே போடவில்லை ,,பொறுமையா இருப்பா ..
" சிக்கல் இருக்கே இதுக்குள்ளே "
" மனிதாபிமான அடிப்படை கட்டக்கடைசியில கையைக் காலை விழுந்து கெஞ்சிப் பிடிக்கிற டாக்டிஸ் பா "
" சரி,,ஒத்துக்கொள்கிறேன் ,,உங்களில் நிறைய நம்பிக்கை இருக்கு அண்டர்சன் "
" டேய் என்னோட வழக்கறிஞர் வாழ்நாளில் உன்னைப்போல எத்தனை கேஸைப் பார்த்திருப்பேன் தெரியுமா..எத்தினை அனுபவத்தில் புருட்ஸ் திண்டு நட்ஸ் போட்ட பனங்காட்டு நரி நான் தெரியுமா "
" சரி,,ஒத்துக்கொள்கிறேன் ,,அண்டர்சன் "
" இல்லைப்பா சட்ட ரீதியாக அதில விவாதம் செய்ய உன்னோட கடிதத்தில் ஒன்றுமேயில்லை..சட்ட்ம் என்று ஒன்று இருக்கே அதுக்கு மறுமொழி அதன் பாஷையில் எழுதினால்தான் எடுபடும் பா "
" அப்படி எனக்கு எழுத தெரியாதே,,அண்டர்சன் "
" அதுக்குத்தானே நாங்கள் சட்டப்புத்தகத்தைக் படிச்சுக்க கிழிச்சு வைச்சு இருக்கிறம்,,நான் எழுதுறேன் பார் , சட்டம் என்றால் நிறைய அவிழ்க்கமுடியாத முடிச்சுக்கள் உள்ள ஒரு சிக்கல் "
" ஓ,,அப்படியா,,அப்புறம் எப்படி நீதிமன்றத்தில் எதிராக வாதாடி வெல்லுறிங்க "
" ஓம்,,அந்த முடிச்சுக்களை அவிழ்க்க லூஸ் எண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே,,அப்படி சில விசயங்கள் சில சந்தர்ப்பத்தில் உதவிசெய்யும் பா "
" ஓ,,அதை வைச்சுக்கொண்டுதான்,,தொழிலை ஒட்டிக்கொண்டு இருக்கிறீங்களோ ,,எங்கட ஊர்ல இருந்த அருளம்பலம் அப்புக்காத்து இன்னொரு விளக்கம் சொல்லுவார் "
" யாருப்பா அ ரு ள ம்பழ ம் யா ப்பு க்கா து "
" அவரும் ஒரு லாயர்,,எங்கள் ஊர்ல இருந்த ஒரேயொரு லோயர் ,,அட்டனி அட் லோ,,பப்ளிக் பிரசிகியூட்டர் ,,அவர் சொல்லுவார் சட்டம் ஒரு பச்சைத்தண்ணி என்று "
" என்னப்பா இப்பிடி காத்தில கையை விசிக்கின மாதிரி அர்த்தமில்லாமல் சொல்லுறாய் "
" அவர் சொல்லுவார்,,,அந்தப் பச்சைத்தண்ணிக்கு உள்ளாள நெருப்புக்கொள்ளியை அணையாமல் கொண்டுபோற வித்தை பிடிபட்டவன் தான் சொல்லப்பட்ட பிரக்கிராசி என்று,,ஐ மீன் சக்ஸஸ்புல் லாயர் என்று "
" ஹஹஹஹ,,இது உண்மையில் லொயிக் ஆகத்தான் இருக்கு சரி ,,விடு,,இதெல்லாம்,,கேட்க எனக்கு நேரம் இல்லை,,ஆனால் சுவாரசியமாத்தான் இருக்கு, "
" ஒத்துக்கொள்கிறேன்,,,நானும் சும்மா அலட்டிப்போட்டேன் ,மன்னித்துக் கொள்ளுங்க அண்டர்சன் "
" மார்க்கிட் நிலாண்டர்ஸ் விக்கிடோரியா நூர்டான்மார் ,,உன்னோட.......... ...தானே "
" ஓம்.. "
" நாலு விசியம் செய்ய வேணும்,,செய்வியா,, ஒவொன்றாய் சொல்லுறேன்.. பார்க்கலாம்,,,வேர்ட் அவுட் ஆகுதா என்று "
" சரி,,அண்டர்சன் "
" முதலாவது.........ரெண்டாவது...மூன்றாவது....நாலாவது............... மார்க்கிட் இடமிருந்து எடுத்துத் தரவேண்டும் "
" என்னது ,,நாலாவது....? "
" பேந்துப்பார்..சின்னச் .சிக்கலை இடியாப்பச்சிக்கல் ஆக்கிவைச்சுப்போட்டு பதறுறாய்...மார்க்கிட் செய்ய மாட்டாளா "
" அதுதான் ஜோசிக்கிறேன்..ஏற்கனவே எனக்கும் அவளுக்கும் இடையில் சங்கிலி புங்கிலி கதவைத்திற நான் மாட்டேன் தேங்காய்ப்புலி என்று பிடுங்குப்பாடுகள் நிறைய நடந்தது "
" எனக்கு அந்த இந்தக் கதைகள் தேவை இல்லை,,அவளை வழிக்கு கொண்டுவந்தால் வழக்கில் சில விசயங்களை வெண்டுதரலாம் ,,என்ன சொல்லுறாய் "
" பார்க்கலாம்..அவளை வழிக்கு கொண்டு வரலாமா என்று.."
" என்னபா பார்க்கலாம்,,என்னபா  சொல்லுறாய் "
" எப்படியோ நான் என்ன சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள்.. ஏற்கனவே நிறையப் பொய்யும் புரளியும் பித்தலாட்டமும் செய்து சொதப்பி வைச்சு இருக்கிறேன் "
" பேந்துபார்...பினாத்துறியே எனக்கு அந்த இந்தக் கதைகள் தேவை இல்லைப்பா நாலு விசியமும் செய்ய வேணும்,,செய்வியா "
" சரி,,ஆனால் முதலில் நீங்கள் அவளோடு நேரடியாக கதைக்க வேண்டும்  ஆண்டெர்சன்,, ,,.நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்.."
"என்ன சொல்லுறாய் " 
" நான் சொன்னால் அதுகள் மலைய கெல்லி எலிய புடிச்சானாம் கதை போலத்தான் அவளுக்கு விளங்கும்..பிரச்சினை அதிகமாகும் "
" சரி,,நான் கதைக்குறேன்,,டெலிபோன் நம்பர் தா ,,இப்பவே கதைக்குறேன் "
                                                                        இப்ப ஒரு ஜூனியர் அலி மக்கபேல் லாயர் வந்து
" ஸ்டிக் ,,,நாளைக்கு, மால்மோ டிங்கிறீட் பிர்மா ,கோட்ஸ் கேஸ், அதில அபிடேவிட் ,,கொஞ்சம் உதைக்குது, ஸ்டிக் ,,பழைய டேக்கில் வேறமாதிரி டிபென்ஸ் ,,இந்த வெர்டிக்ட்டில் இன்னொரு மாதிரி கொங்குலுசன்..ஒண்ணுமே புரியுதில்லை ஸ்டிக் ..., .இண்டைக்கு ரெயிட்டார் ஸ்டில் ,,கடைசி நாள் ,,இண்டைக்கு ..முடிச்சு அனுப்பவேணும் .. ஸ்டிக் "
                                                      என்று என்னவோ தலைக்கு வந்த அம்பைத் திசை திருப்பி தலைப்பாகையோடு போகவைக்கிற கேஸ்போல உள்ள ஏதோவொரு வழக்குப் பற்றி அவசரமாய் சொல்ல, லாயர் சடார் எண்டு எழும்பி
" கொஞ்சம் இரு,,இருந்து யோசி ,,நான் ஒரு பேப்பரில் கொஞ்சம் எடிட்டிங் செய்துபோட்டு வாறன்,,நல்லா யோசி ,,ஏதுமொரு ஐடியா உனக்கும் வரும் பா .."
 " சரி,,ஆனால் முதலில் நீங்கள் அவளோடு நேரடியாக கதைக்க வேண்டும் "
" முதல் மார்க்கிட் விசயத்தை யோசி,,ஓகே யா ,,சில நிமிடத்தில் நான் திரும்பி வாறன் "

நான்.யோசித்தேன்...இந்த சமுதாயத்தில் அல்ல எந்த சமுதாயத்திலும் எழுதிவைக்கப்பட்ட சட்ட்திட்ட்துக்கு எதிராக யாருமே இயங்காமல் அச்சொட்டாக எல்லாமே மிகக் கச்சிதமான ஒழுங்கமைப்பில் நடந்தால் ,போலீஸ்,,நீதிபதி,,வழக்கறிஞர்,,சிறைச்சாலை ஊழியர் ,,சிறைச்சாலை என்று எதுவுமே தேவையில்லை. இவளவு பேருக்கும் வேலை இல்லாமல் போகும்.
குற்றமும் தண்டனைகளும் இயங்கியலின் ஒரு மாற்றமுடியாத விதி. சீராழிவு அல்லது சீர்குலைவு என்று ஒன்று இல்லை என்றால் புதியன தோன்றும் இயக்கம் நடைபெறாது.
                                                                                                 இது பிரபஞ்ச அளவிலேயே நடக்குது என்கிறார்கள் , மொடேர்ன் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் இல் அதை " எண்டோபி " என்ற தியரியில் நிறுவி இருக்கிறார்கள். ஒவ்வொரு நானோ செக்கனிலும் மைக்கிரோ லெவலில் உள்ள சடப்பொருள்களில் சீரழிவு அல்லது சீர்குலைவு நடக்கிற அதே நேரம் யூனிவேர்சல் அளவில் கொஸ்மிக் ஸ்கேலில் கலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதி புதிய சூப்பர் நோவாக்கள் உருவாகுது என்கிறார்கள்.
                                                                            யூனிவேர்சல் அளவில் கொஸ்மிக் ஸ்கேலில் ஒப்பிடும்போது நான் செய்தது மைக்கிரோ லெவலில் உள்ள ஒரு சின்னக் குழப்பம், அதோடெல்லாம் ஒப்பிடும்போது ,,இப்பிடியே யோசித்துக்கொண்டிருந்தேன்
                                                                    சொன்ன மாதிரி சில நிமிடத்தில் திரும்பி வந்து ,
" என்னப்பா ஜோசித்துக்கொண்டு இருந்தாய்,,என்னாவது பொயிண்ட்ஸ் நீயாகவே எடுத்தியா..ஒரு அக்கா தங்கச்சி சாகப்போற அப்பனுக்கு மேலே போட்டுள்ள சொத்து வழக்கு கேஸ் நாலு வருடமா கிடந்தது இழுக்குது ,,அதுவும் ஜூடிக்கல் கோட்ஸ் மால்மோ சிட்டியில,, "
" இல்லை, வேற என்னமோ எல்லாம் யூனிவெர்சல் ஸ்கேலில் ஜோசித்துக்கொண்டு இருந்தேன் "
" அட,,,அதுக்கும் உன் வழக்குக்கும் என்னப்பா சம்பந்தம் "
" ஒன்றுமில்லை, ,அண்டர்சன் நீங்க மார்க்கிட்டுடன் இப்போதே கதையுங்க ,,சுருக்கென்று நடக்கிற அலுவலைப் பார்ப்போம் "
                                                                     மார்க்கிட்டுடன் லாயர் கதைத்தான். மார்க்கிட் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்க்கிட்டோட முதல் குளறுபடியே அவள் உதவி செய்வாள் என்று நினைக்கும் தருணங்களில் உதவவே மாட்டாள் . உதவ மாட்டாள் என்று நினைக்கும் சம்பவங்களில் தலையைக் கொடுத்து உதவுவாள். அவள் மட்டும் தானா இப்படி அல்லது உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரின் பொதுவான குணாம்சம் அதுவா என்று எனக்குத் தெரியாது.
                                                         லோயர் கதைத்து முடிய நானும் கதைத்தேன். சனிக்கிழமை வீட்டுக்கு வா என்று நாலடியில் சுருக்கமாகச் சொல்லிப்போட்டு போனை வைச்சிட்டாள் .
                                                             பழைய நண்பர்கள் அவர் அவர் பாதைகளில் பிரிந்து போனாலும் சில சந்திப்புகளில் கொஞ்சநேரம் நின்று பார்ப்பது போல மார்க்கிட்டுடன் பலவருடம் தொலைபேசியிலில் கதைத்துக்கொண்டு இருந்தாலும் நேரடியாக அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை ரெண்டு பேருமே உருவாக்கவில்லை. அதுக்குத் தேவையும் இருந்ததில்லை.
                                                                காலமும் இடமும் திணிப்புகள் அற்று சாதாரணமாய் மனதை ஈரமாகவே வைத்திருந்த ஓடைக்குளிர்மலரின் சுகந்தம் வீசிய இடைவெளிகளில் நிறையவே புரிந்துணர்வு சரியான பயணிப்புத் திசைகளைக் காட்டிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்
                                           சனிக்கிழமை,,,,
                                                               சொர்மலாந்து புல்வெளிப்பிரதேசத்தில் பாச்சல் குதிரைகள் சோம்போறித்தனமாக மேய்ந்துகொண்டிருந்தன , ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில் பேர்ச்பித்துளா மரங்கள் இலையுதிர்குளிர் வருவதுபற்றி விவாதம் செய்துகொண்டிருந்தன ,கேநேஸ்தா வடிசாளைப் புறநகரம் புழுதிக் காற்றில் எந்தக் கனவுகளும் இடைப்புகாமல் உறங்கிக்கொண்டிருந்தது பிளேன் அடைக்கல கிராமம் என்னைப்போலவே ஏதிலிகள் போலிறங்கும் பிளிக்கன் பறவைகளுக்கு திசைகள் காட்டி்ககொண்டிருக்க, மார்க்கிட் வசிக்கும் கிராமப் புற வீட்டுக்குப் போனேன்
...................இடியாப்பச் சிக்கல் 2...தொடரும்...................


No comments :

Post a Comment