Friday, 5 January 2018

ஹம்பர் சைக்கிள்..

அப்பாவிடம் ஒரு ஹம்பர் சைக்கிள் இருந்தது ! எதுக்காக சும்மா மொட்டையாக ஒரு சைக்கிள் இருந்தது என்று சொல்லாமல், மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீர் " எங்கட வீட்டில ஒரு யானை இருந்தது " என்று அவரோட புகழ் பெற்ற நாவலில் எழுதத் தொடங்குவாரே அதுபோல " அப்பாவிடம் ஒரு ஹம்பர் சைக்கிள் இருந்தது " என்று எழுப்பம் விட்டுச் சொல்லவேண்டி இருக்கென்றால், அந்த ஹம்பர் என்ற இங்கிலாந்துக் கொம்பனி அந்த அரிதானவகை சைக்கிளை உட்பத்திசெய்தார்கள்.

                                                           எங்கள் ஊரில வௌவாலுக்குத் தலைகீழாக நின்று தாம்பூலம் வைச்ச மாதிரி கிரவல் றோட்டுக்களை புழுதியால நிரவிர மாதிரி உழுதுகொண்டு திரிந்த மற்ற எல்லாச் சைக்கிளுக்கும் இல்லாத ஒரு சிறப்பான விசியம் ஹம்பர் சைக்கிளில் இருக்கு. அந்தப் பிரத்தியேகமான அடையாளமே அதன் வடிவமைப்பில் இருப்பதால் சடாரென்று அடையாளம் கண்டுபிடிக்கலாம்.
                                                                அப்பா கொழும்பில் ஒரு தனியார் வியாபார நிறுவனத்தில் தொடர்ச்சியாக இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக மனேஜர் ஆக வேலைசெய்துவிட்டு , கடைசிக்காலத்தில் எங்களின் வீட்டுக்கு வந்து எங்களோடு அவர் வாழ் நினைத்துக்குக் காரணம் அவரின் தமனி நாடிகளில் அடைப்பு ஏட்படுத்திய ஹார்டியா ஹார்ட் என்ற இருதய நோய்.
                                                      அதிக நாட்கள் அவர் உயிர் வாழும் உத்தேசங்கள் அவரிடமே இருக்கவில்லை போலிருந்தது அவரின் வரவு. அவருக்குப் பலவருடம் கொழும்பில் வைத்தியராக இருந்த இருதயசிகிக்சை நிபுணர் பேராசியர் ஆர் எஸ் தனபாலசுந்தரத்தை அவர் கடவுள்போல நம்பிக்கொண்டிருந்தவர். அந்தக் கடவுளையே கைவிட்டுப் போட்டு ஒருமுடிவோடுதான் வந்திருந்தார்
                                                           எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபிறகு தலைநகரில் இருந்த தன்னோட வியாபாரத் தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதியாக அவர்களின் தயாரிப்புகள் சிலதை எங்கள் ஊர் டவுனில் ஒரு சின்ன இடம் எடுத்து அதிலிருந்து விநியோகிக்கும் தொழில் செய்தார். சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த டவுனுக்கு காலையில் போவதுக்கும், மாலையில் திரும்பி வருவதுக்கும்தான் அவர் சைக்கிள் வேண்டினார், ஆனால் அப்பா எதட்காக ஹம்பர் சைக்கிளைத் தெரிவுசெய்தார் என்று சொல்லமுடியவில்லை.

எல்லாச் சைக்கிளுக்கும் ஒரு இலட்சினை அதன் நெற்றியில் திருப்பதியில் போட்டசந்தன நாமம் போல இருக்கும். ஹம்பர் சைக்கிளுக்கு அப்படி இருக்கும். அதில் திடகாத்திரமான ஐந்து மடாக்குடியார் போலிருக்கும் இளம் ஆண்கள் ஐந்து திசையிலே நின்று ஒருவரோடு ஒருவர் தங்கள் மண்டையால ஒரே நேரத்தில் மோதுற மாதிரி இருக்கும். இதுக்கு என்ன அர்த்தம் என்று ஜோசித்தே என் மண்டை காஞ்சு போச்சு. ஆனால் அதில ஏதாவது அர்த்தம் இருக்கலாம், சிலநேரம் எங்க மோதினாலும் ஹம்பர் சைக்கிளுக்கு சொல்லும்படியான சேதாரம் வராது என்ற சைம்போல் ஆக இருக்கலாம் போலிருக்கு.
                                                             ஹம்பர் சைக்கிளின் முகத்தில் தெரியும் அடையாளமே அந்த போக் தான். கலியாணம் கட்டிய பெண்ணின் நெற்றியில் இருக்கும் குங்குமப் பொட்டு எப்படி சடாரென்று வேறுபடுத்தி அறிவதுக்கு உதவுமோ அதேபோல அந்த போக் இருக்கும். அதுதான் அந்த சைக்கிளின் முன்னம் சில்லுகளைக் கவ்விப்பிடிக்கும் போக் . அந்த போக் இரண்டு தனித்தனியான இரும்புக்குழாய்கள் இணைக்கப்பட்டு வெல்டிங் செய்யப்பட்டு இருக்கும். அது யோமெட்ரிக்ஸ் மெக்கானிஸ் பிசிக்ஸ்படி அதிகப்படியான தாங்குதிறன் உத்தரவாதம் கொடுப்பது. அறிவியல் ஓரளவு படித்த நாட்களில் இதெல்லாம் அறியமுடிந்தது.
                                                           முக்கியமா மற்ற சைக்கிள்களில் , அய்யர் வீட்டுப் பெண்கள் போல அழகாகவும், அதேநேரம் மென்மையாகவும் இருக்கும் ஏசியா என்ற ஜப்பான்காரனின் சைக்கிளில் எப்பவுமே பாரமில்லாத சைக்கிள். ஆனால் அதன் போக் எப்பவுமே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் உடையும். அப்படி உடைந்தால் உத்தரவாதமாக முன்னுக்கு முகம் குப்பிற விழுந்து மூக்கும் உடையும். ஹம்பர் சைக்கிளின் போக் என்றைக்குமே உடைந்ததாக வரலாறு இல்லை. இந்த மாதிரியான டெக்னீக்கல் விபரங்கள் தெரிந்து அப்பா ஹம்பர் சைக்கிள் வேண்டியிருக்க லாஜிக் இல்லை. அப்பாவுக்கு பிசினஸ் டாக்டிஸ் நல்லதெரியும் ஆனால் பிராக்டிகல் சயன்ஸ் தெரிந்த ஆள் அல்ல.
                                                            ஹம்பர் சைக்கிள் இங்கிலாந்தில் வெள்ளைக்காரன் வடிவமைத்த சைக்கிள் என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார் . வெள்ளைக்காரன் வடிவமைத்ததால் அதை முதன்மைப்படுத்தி வேண்டி இருக்கலாம். அதுக்கு ஒரு சான்றும் எங்கள் வீட்டின் சுவரில் படமாகத் தொங்கியது. கொழும்பில் அப்பா வேலை செய்த தனியார் வியாபார நிறுவனம் இங்கிலாந்தின் யூனிலீவர்ஸ் என்ற உலகளாவிய கொம்பனியின் இலங்கைப் பிரதிநிதியாக இயங்கி இருக்கு. அந்த யூனிலீவர்ஸ் நிறுவனம் தங்கள் இலங்கைப் பிரதிகளுக்கு ஒரு நட்ச்சத்திர ஹோட்டலில் கொடுத்த இரவு விருந்தில் கலந்துகொண்ட அப்பா, அந்த நிறுவன வெள்ளைக்கார இயக்குநர்களோடு சேர்ந்து எடுத்தப்படம் தான் அது.
                                                       அதில வெள்ளைக்காரன் கோட் சூட் டை என்று ஐரோப்பிய அடையாளங்களுடன் கையில விஸ்க்கி கிண்ணத்தை வைச்சுக்கொண்டு நிக்க , அவர்களோடு அப்பா வேட்டி , நஷினல் , சலவை என்று தமிழ்க்கலாச்சார விழுமியங்களுடன் நிக்க ,அந்தப்படம் கறுப்பு வெள்ளையில் இருந்தது.வெள்ளைக்காரன் வெள்ளையும் சொள்ளையுமாய் இருப்பதால் மேன்மையானவைகளில் முன்னோடியானவன் என்ற தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் இருந்திருக்கலாம்.
                                                             அதனால அந்தப் படத்தை என்லார்ச் செய்து எங்கள் வீட்டு வரவேட்பு அறையில் அவர் மாட்டி வைத்திருந்தார். அதுக்கு பின்னால் உள்ள செய்தி ஒருவேளை அவர் வெள்ளைக்காரர்களை பெரிய மனிதர்களாக நினைக்கும் ஒரு எடுகோள் இருந்திருக்கலாம். அதனால ஹம்பர் சைக்கிளை வேண்டுவதுக்கு அவர் தெரிவு செய்திருக்கலாம்

வாழ்க்கையில் சில சமயம் நடந்து முடிந்த சிலவற்றை நினைத்து நம்மை மறந்து சிரிப்பதுக்கும் , சில சமயம் நம்மை மறந்து குற்றவுணர்வில் வருந்திக்கொள்வதுக்கும் சில சம்பவங்களை அதே வாழ்க்கைதான் விட்டு வைத்திருக்கும் . அப்படியான ஒருசில சம்பவங்களின் தொகுப்பில் கட்டாயம் அந்த ஹம்பர் சைக்கிளும் ,அப்பாவும் பலவிசியங்களில் பிரிக்கமுடியாமல் பின்னப்பட்டு இருக்கிறார்கள். அதைவிடவும் அந்த சைக்கிள் சிலவருடங்களே எங்கள் வீட்டில் நின்றாலும் அது பதிவுசெய்துவிட்டுப் போன காலப்பெருவெளியை நிரப்பிய சம்பவங்கள் நிறையவே இருந்தது.
                                                                     ஓடிப்பழகவும் எங்கள் வீட்டில் ஒரு லொட்டு லொடக்கு சைக்கிள் அதுக்கு முன்னம் இருந்ததில்லை. முக்கியமாக, நான் உட்பட அடுத்தடுத்த வயதில் எங்கள் வீட்டில் இருந்த என் ஆண் சகோதர்கள் அந்த சைக்கிள் புதிதாக வந்த நேரம் எங்கள் வீட்டுக்கு ஒரு அஸ்வமேதக் குதிரை வந்ததுபோலவும், நாங்கள் எல்லாருமே ஒரே இரவில ராஜகுமாரர்கள் போல மாறிவிட்டது போலவும் உணர்ந்தோம்.அல்லது பகல்க் கனவு கண்டோம். அவ்வளவு சதோஷ வெளிச்சம் கொண்டுவந்தது அந்த ஹம்பர் சைக்கிள்.
                                                           ஆனால் எங்கள் ரோட்டு வீதியில் சிவனே என்று படுத்திருந்த நாய்களின் திகில்க் கனவிலே ஜமன் வந்ததுபோல நினைத்து இருக்கலாம், அதை உறுதிப்படுத்திற மாதிரியான நிறையக் காரண காரியத் தொடர்பு ஹம்பர் சைக்கிள் வந்த சில நாட்களிலேயே தொடங்கிவிட்டது .
                                                                 போக் தவிர மற்ற எல்லா விசயத்திலும் வெளிப் பார்வைக்கு வேறுபாடுகள் இல்லாமல் இருந்த ஹம்பர் சைக்கிள், மற்ற சைக்கிள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் நிறை அளவில் கொஞ்சம் பாரமான சைக்கிள். அதன் பொருத்துக்களில் இருக்கும் இரும்புச் சேர்க்கை அதுக்கு காரணமாக இருந்திருக்கலாம். 
                                                                   அல்லது இங்கிலாந்தில் வெள்ளைக்காரன் அப்படித்தான் சைக்கிளை காற்றிலே பறக்கிற மாதிரி டிசைன் செய்யாமல் நிதானமாக புவியீர்ப்பு விசையோடு அனுசரிக்க அப்படி வடிவமைப்பானோ என்றும் குழப்பமாக இருந்தது. அதன் பாரம் அதன் உறுதிக்கு இன்னொருவிதத்தில் சான்றிதழ் கொடுத்துக்கொண்டிருந்தது என்பது உண்மைதான் .

பின்னேரங்களில் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு அதன் பாருக்காலா ஒரு காலை விட்டுக் கெந்திக்கெந்தி, எட்டாத ஹாண்டிலை எட்டிப்பிடித்து உந்தி உந்தி ஓடப்பழகியதுதான் எங்களின் இளமை வாழ்க்கையில் ஒரு பறவையின் முதல்ப் பறப்புப்போன்ற அலாதி அனுபவம். எனக்கு அப்படி இருந்தது. நிறைய கிடுகு வரிச்சுமட்டை வேலிகளை அது தடவி, வேலிக் கதியால்களை முறித்து அடிவேண்டி இருக்கு.
                                                                 எங்கள் ரோட்டில பலர் காங்கேசன்துறை சீமெந்து பாக்ட்ரியில் உட்பதிசெய்யப்பட்ட சீமின்ட் இல மதில் கட்டி இருந்தார்கள் . அந்தச் சீமெந்துச் சுவர் எப்படிப் பலமா இருக்கா என்று காங்கேசன் சீமெந்தின் கலப்படமில்லாத நம்பகத்தன்மையை விசாரித்திருக்கு. அந்தமாதிரியான அடிபாடுகளில் சீமெந்துச்சுவரோடு முழங்கை மூட்டு சொல்லிவெச்ச மாதிரி குத்து வேண்டியிருக்கு
                                                                        ரோட்டில படுத்திருக்கிற நாய்களுக்குத்தான் அந்த ஹம்பர் சைக்கிள் சிம்ம சொப்பனம் , நாய்கள் எப்பவுமே அதில இருந்து தப்ப ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் போட்டு வைச்சிருக்கும், நாங்கள் பாருக்கால காலைவிட்டு அகோர வேகத்தில போகிற ஒவ்வொரு நிகழ்விலும் நாய்கள் தப்பப் போட்டு வைச்சிருந்த ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் எப்பவுமே சிதறிவிடும். 
                                                                 பலநேரம் முன் சில்லால் முகத்தில உதையோ, அல்லது பின் சில்லு காலுக்குமேலால் ஏறி உழக்கியோ , அல்லது எசகுபிசகா மொத்தமாக ரெண்டு சில்லும் நடுவில மாட்டியோ உத்தரவாதமாக உடம்பில சேதாரம் வேண்டிக்கொண்டு குளரிகுளறி ஒடித்தப்புங்கள் ,
                                                                      என்னத்ததான் நாய்கள் நம்பிக்கையோடு தப்புவதுக்கு ஸ்ட்ராடஜிக் பிளானாகப் போட்டு வைச்சிட்டு படுத்திருந்தாலும் ஒருநாளும் நாய்களின் ஸ்ட்ராடஜிக் பிளான்ஸ் வென்றதேயில்லை, ஹம்பர் சைக்கிள் வெள்ளைக்காரன் லண்டனில் வடிவமைத்ததாலும் அதைச் செலுத்திய வட்ருக்ஸ் தேரோட்டிகளின் லகவதாலும் எப்பவுமே வென்றுகொண்டிருந்தது.
                                                                          சில நாட்கள் குறுக்க மறுக்க கடக்க நடக்கும் மனிதர்களிடம் தூஷணத்தில் திட்டு வேண்டிய அனுபவம் இருக்கு. உண்மையில் அந்த ஹம்பர் சைக்கிள் எங்களை விட அதுவே நிறைய அனாவசியத்துக்கு அடிவேண்டி இருக்கு. என் சகோதரங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லாருமே எப்போதும் தவறாமல் முழங்காலை சிராய்ச்சிக்கொண்டுவந்துதான் ஹம்பர் சைக்கிளை ஸ்டாண்ட்டில நிட்பாட்டுவோம் .
                                                                                ஹம்பர் சைக்கிளிலும் நிறைய நெளிவுகள் சுளிவுகள் யுத்தக்களத்துக்குப் போட்டு வந்த அடையாளமாக அங்கங்கே இருக்கும்,கொஞ்சம் ஒடிக்கழைத்த மூச்சுகளை ஆசுவாசமாக அப்போதுதான் வேண்டிக்கொள்ளும் ஹம்பர் சைக்கிள். முழங்காலை சிராய்ச்சிக்கொண்டுவந்து கொஞ்சநாள் நொண்டுறது .பிறகு அந்தப் புண் ஆறும்வரை ஹம்பர் சைக்கிள் நிம்மதியாய் நிக்கும். அதன் பிறகு பழையபடி பழையபடி சவாரித்தம்பரின் வண்டில்மாட்டு ஓட்டம் தொடங்கும்.
                                                                                         சில நேரம் அப்பா வேட்டியை முழங்கால் வரையில் மடிச்சுக்கட்டிக்கொண்டு எங்களுக்குப் பின்னால பாலன்ஸ் தவறி விழவிடாமல் சைக்கிளை பிடிச்சுக்கொண்டு மூச்சு இரைக்க இரைக்க ஓடிவருவார், அவர் உடல்நிலைக்கு இந்த மாதிரியான ஓடம் எல்லாம் ஒத்துவராது. ஆனாலும் நாங்கள் விழுந்துவிடக் கூடாது என்ற கரிசனையை அப்படிச் செய்திருக்கலாம்.

சைக்கிள் எப்பவுமே புவியீர்ப்புக்கு நேர் குத்தாக ஒரு இடையறாத விசையில் இயங்கினால் விழாமல் ஓடும் என்ற ஐசக் நியூட்டன் சொன்ன அறிவியல் உண்மை அப்போதுதான் நடைமுறையில் பார்க்கமுடிந்தது. அதிலும் நாங்கள் முதன் முதல் பாலன்ஸ் பிடிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் அப்பா எங்களோடு ஓடிவந்திருக்கிறார். அது ஒருவிதமான ஆசிர்வாதம் போல இருந்திருக்கு.
                                                                          அவர் வேலைக்கென்று ஹம்பர் சைக்கிள் வேண்டிய அப்பாவை விடவும் நாங்களே ஒடிப்பழக அந்த ஹம்பர் சைக்கிளை பயன்படுத்தியதால், அதில எப்பவுமே குக்கல், விக்கல், சிக்கல், பிக்கல் , பிடுங்கல் போல சின்னச் சின்ன உடைவுகளோ, அல்லது குழப்பங்களோ அதென்ன மேனியெங்கும் வரும். அப்பா ஒருநாளுமே அதையிட்டு எதுவுமே சொன்னதில்லை அதைப்பற்றிக் கவலைப்பட்டு கடிந்துகொண்டதேயில்லை. 
                                                                 அதுக்கு அவரே அவரோட நோயோடு போராடிக் களைத்துப்போகும் கடைசிக்காலத்தில் எங்களோடு இருப்பதை உணர்ந்திருக்கலாம் .
                                                                            அதை அப்பப்ப திடீர் திடீர் என்று நடுச்ச சாமங்களில் நெஞ்சுக்குத்து வரும் போதெல்லாம் நெஞ்சைப் பிடித்து இருமியபடி சொல்லியும் இருக்கிறார். அதனால அந்தக் ஹம்பர் சைக்கிள் அவரைப் பொறுத்தவரையில் நிலையாமையின் இன்னொரு குறியீடாக இருந்திருக்கலாம். ஆனால் தவறாமல் ஹம்பர் சைக்கிள் நாங்கள் எவ்வளவுதான் குத்தி முறிச்சாலும் அது இயல்பாக ஓடவேண்டும் என்பதால் கிரீஸ் போட்டு போல்டஸ் மாத்தி அதைக் கழுவிப்பூட்டும் சடங்கை எப்படியும் மாதத்தில ரெண்டுமுறை விருப்பமாகவே செய்துகொண்டிருந்தார் .

அப்பா ஹம்பர் சைக்கிளை எப்பவுமே ஒரு குறிப்பிட்ட ஒருவரிடம் தான் கழுவிப்பூட்டக் கொடுப்பார். அந்த சைக்கிள் திருத்துபவர் அப்பாவின் வயதில இருந்தார். அவர் " சைக்கிள் திருத்துமிடம் " என்று, நாலஞ்சு கம்பிக்கட்டு பிஞ்சுபோன டயறும் , லெக் எடுத்து சிதறிய ரிம்மும் தொங்கவிட்டு கிரீஸ் அப்பியபடி தகரத்தில் கரல் பிடிச்சுப்போய் ஒரு உழைப்பாளியின் வறுமையைப் பதிவுசெய்யும் போட் தொங்கிற கடை என்று எதுவும் வைத்திருக்கவில்லை அவரோட வீட்டுக்கு உள்ளே பத்தி இறக்கி வேர்க்சொப் வைத்திருந்தார்.
                                                                                அவரைப் பார்த்தால் யாருமே, வழமையாக வாடி வதங்கி காத்துப்போன டயர் போல இருக்கும் சைக்கிள் மெக்கானிக் போல இருக்க மாட்டார் , முதல் எடுப்பிலேயே யாருமே பார்த்து சைக்கிள் மெக்கானிக் என்று சொல்லமாடடார்கள். ஜலராக் கட்டை சுத்துற குஸ்தி பயில்வான் பொடி பில்டர் போல ஆரோக்கியமான தேகம். அதுவும் வாழ்க்கை அரைவாசி விழுங்கிய அந்த வயசில. எப்பவும் ஸ்ரீலசிறி ஆறுமுகநாவலர் போல உடம்பு முழுக்க திருநீற்றுப் பட்டை அடிச்சு இருப்பார். நிறைய சமயப் புத்தகங்கள் வைச்சிருப்பார்.
                                                                      அப்பாவும் அவரும் ஹம்பர் சைக்கிளும் சந்திக்கும் சில தருணங்கள் நானும் உடனிருந்திருக்கிறேன். அவர் அமைந்தகரை மறைமலை அடிகள் பெயரால் நடைமுறைத் தனித்தமிழ் இயக்கம் நடத்திய என் அப்பாவைக் கண்டவுடனே , தூய தமிழில்
" என்ன நடராசர், கண்டுகனகாலம் ,"
" சைக்கிள் கொஞ்சம் சத்தம் போடுமாப் போல இருக்கு ,ஞானாசிரியர் "
" என்ன நடக்குது,,என்ன நடந்தது,, என்ன நடக்கவேண்டும் "
"  அதைத் தாங்கள் தான் கண்டறிந்து சொல்லவேண்டும் ,ஞானாசிரியர்  " 
" சிந்துமணி வைரநடை ஸ்ரீ ராமன் போலிருந்த உந்துருளிக்கு என்ன வந்தது,, சொல்லும் நடராசர், "
" ஓம் ஓம், கொஞ்சம் பிரச்சினை குடுக்குது கண்டியலே  ,,ஞானாசிரியர்  " 
" உந்துருளிக்கு பரிகாரம் செய்யவேண்டும் போல இருக்கே நடராசர் ," 
 " ஓம் ஓம், ஞானாசிரியர் "
" இந்துசாதனம் கடைசி சஞ்சிகையில் தாங்கள் எழுதிய  கட்டுரை  வாசித்தேன் நடராசர் "
" மிகவும் சதோஷம் சந்தோஷம்  ஞானாசிரியர் "
" ஆறுமுகநாவலரின் முதன்மையான சீடன் ஒரு சாக்கு வியாபாரியா என்ற கட்டுரை பற்றி நிறய விசியம் கதைக்க வேண்டும் இண்டைக்கு நடராசர் "
                                                                                     இப்படித்தான் தொடங்குவார், என்னோட அப்பா நடராசர் தமிழ் மொழிக்கு உயிரைக் கொடுக்க நிக்கிற பயங்கரவாதி, அந்தாளோ சைவசயமத்துக்கு எல்லாத்தையும் இழக்கத்தயாரா நிக்கிற தீவிரவாதி. அப்புறம் ரெண்டுபேரும் கதைக்க சந்தர்ப்பம் கிடைச்சா ஆளை ஆள் தள்ளிவிழுத்தி கால நேரம் தள்ளிக்கொண்டு போவதே தெரிவதில்லை ,
                                                                                
அவரோட தேகக்கட்டு முல்லைத்தீவு முத்திரை மரம் போல இருந்தாலும், முகத்தில ஒருவித விகாரம் இருந்தது. அவர் மூக்கு சப்படடையாக உள்வாங்கி அமுங்கிப்போய் இருக்கும். அவ்வளவு சின்ன மூக்கு அதில ரெண்டு சின்ன ஓட்டைகள் , சரியா சொல்வது என்றால் சொக்கன்கடை வடை போலிருக்கும். அதனால அவர் குரல் கீச்சிட்டான் சுடலைக்குருவி கத்துவது போலிருக்கும். சிலநேரம் அவர் வாயால கதைக்கிறாரா அல்லது காதலா கதைக்கிறாரா என்று குழப்பம் உண்டாக்கும்.
                                                                                            அந்தாள் அப்பா சைக்கிளைக் கொடுத்தவுடன் , சீட்டில நாட்டு வைத்தியர் போல ஒரு குத்து விடுவார், அதன் சத்தத்தை உன்னிப்பாகக் கனைப்பார், அடிச்சுப் பிழிஞ்சு தோய்ச்ச் வேட்டியை காற்றிலே விசுக்கிற மாதிரி நாலுதரம் உதறிப் பார்ப்பார்,ஐயர் பூசைக்கு கைமணியை அடிக்கிற மாதிரி ஒரு ஹாண்டிலில் மட்டும் பிடிச்சுக்கொண்டு அங்காலும் இங்காலும் பக்கவாட்டில சரிச்சு ஆட்டிப்பாப்பார்,

                                                                 பிறகு அவர் வீட்டு முற்றத்தில் ரெண்டு ரவுண்ஸ் ஓட்டிப்பாப்பார் . கொண்டுவந்து ஆடு அறுக்கிறதுக்கு கொழுவிக் கம்பியில் கட்டித் தொங்கவிடுற மாதிரி வேர்க்சொப் கூரையில இருந்து கட்டி இறக்கப்பட்ட ஒரு பழைய சைக்கிள் செயினில் உள்ள கொழுக்கியில் துக்காக்கி தொங்கவிடுவார் ! அவளவுதான் .
                                                                                            அவர் கணிப்புக்கள் சரியாக இருக்கும்படியாக தொடையில புண் நடையிலே காட்டுற மாதிரி ஹம்பர் சைக்கிள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கும் !
                                                                                    அதுக்குப் பிறகு அப்பாவும் அவரும் ஹம்பர் சைக்கிளை மறந்துவிடுவார்கள். சைக்கிள் பின்னம் சில்லில அசைந்தபடி தொங்கிக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும். அதிகமா அவர்தான் பேச்சைத் தொடங்குவார். அது திருமுருகாற்றுப்படையில் இருந்து, உமாபதி சிவாச்சரியார் , சிவஞ்ஞானபோதம் , எல்லாம் இறங்கித் துலாவி திருத்தொண்டர் புராணம் வரைக்கும் அலைந்து கொண்டிருக்கும். அப்பாவும் அவரும் தேவரம் பாடிய நாயனார்கள் காலத்துக்குள் நுழைந்து வெளியேறி புராண இதிகாச சமய விவாதங்களில் ஆழமாகிக்கொண்டிருப்பார்கள்.

பலநேரம் நினைப்பது இந்தாள் எதர்க்காக சைக்கிள் திருத்திரா வேலை செய்யிறார் என்று. பேசாமல் நல்லை ஆதினத்தில போய் குருமகா சன்னிதானம் போல இருக்கலாம் என்று. ஆனாலும் வாழ்க்கையில் இப்படியான ஆழ்மனது விருப்பங்களுக்கு செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் சமூகத்தி சமாந்தரமாகப் பயணிக்கும் மனிதர்களை நாங்கள் சந்திக்கிறோம் தானே. 
                                                                                                  செய்யும் தொழில் என்பது ஒரு வாழ்வாதார உத்தரவாதம். அந்தக் கொம்போர்ட் சூன் உத்தரவாதமாக சில நம்பிக்கைகள் கொடுக்க அதன்மேல் கால்கள் இல்லாத கட்பனையோடோ. விருப்பங்களோடு நடந்துகொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம் பேர் இந்தப் பூமிக்கு போக்குகாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்களே !
                                                                            கழுவிப்பூட்டி புதிதாக கிறிஸ் அடைஞ்சு , போல்ஸ் உருளைகள் மாற்றியபின் ஹம்பர் சைக்கிள் முதன் முதல் வீட்டுக்கு வந்து நிட்கும் போது கஸ்தூரிக்கலைமான் போல பொலிவிருக்கும், அதை ஓட்டும் போது வெள்ளிப்பணம் அள்ளிவீசியது போல அதன் சில்லுகள் உருளும்போது எழுப்பும் சத்தத்தில் ஒருவித சொகுசுத்தனம் இருக்கும். 
                                                                     எல்லாம் ஒருநாள் கூத்துதான் !ரெண்டாம் நாளே அதை பழையநிலைக்கு கொண்டுவந்து சேர்த்திடுவம். அப்பா அதுக்கும் ஒன்றும் சொல்லவே மாட்டார். ஹம்பர் சைக்கிளையும் எங்களையும் ,நாங்கள் போட்டிருக்கிற அரைக்காட்சட்டையும் பார்த்து சிரிச்சுக்கொண்டிருப்பார்.
                                                                       எப்படியோ அன்றைய முதல் நாள் எங்கள் வீடு முழுவதுமே தலைவாழை இலைபோட்டு ஊரையே விருந்துக்கு அழைத்தது போல கலகலப்பா இருக்கும். அப்பா ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில வாழப்பழவாய்ப்பன் வேண்ட செலவுக்கு காசும் தருவார் ,ஆனால் அதை சொல்லும் விதம்   விசித்திரமான சிங்கள வார்த்தைகளையோடு வரும்   
" சாக்குப் பையில சில்லறையா சல்லி இருக்கு எடுத்துக்கொண்டு போங்கடா "
                                                                               இப்படித்தான் சொல்லுவார், காசை அவர் சிங்களத்தில் சொல்லும் சல்லி என்றுதான் சொல்லுவார், ஒருநாளும் காசு,பணம் என்று சொன்னதில்லை, சிங்களமொழி எனக்கு இப்ப தெரிவதால் அது தெரியும் . அதேபோல் சேட்டுப் பொக்கெட்டை சாக்குப்பை என்றுதான் அந்தநேரம் சொல்லுவார், ஏன்தான் அப்படி சொல்லுவாரோ என்று இன்றுவரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை,
                                                                                அந்தநேரம் சேட்டுப் பொக்கெட்டை சாக்குப்பை என்று ஏன்தான் எங்கள் அன்புக்குரிய அப்பா அப்படிச் சொன்னார் என்று என்னோட உடன்பிறப்புகளிடம் கேட்கலாம்தான், அதுகள்தான் பித்தம் தலைக்கேறி புளிச்சல் ஏவறை விட்டுக்கொண்டு இங்கிலீசிலையும், பிரெஞ்சிலேயும், டொச்சிலையும் பினாத்திக்கொண்டு வேலைக்கு ஆகாத மாதிரி எனக்கெதிரா நிக்குதுகளே.

ஒரு சைக்கிளில் இருந்து நாம் எதையும் வாழ்க்கைப்பாடமாக கற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மை என்று நினைப்பவர்களுக்கும் இனி வரப்போற கதைக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை . 

                                                                     நானும்தான் வாழ்க்கை பற்றிய உணர்வற்ற விடத்தல் வயதில் , நினைவுகளையோடு சமாந்தரமாகப் பயணித்த ஒரு பொருளின் பெறுமதி பற்றி அடிப்படை புரிதல் இல்லாத ஒரு காலத்தில் அந்த ஹம்பர் சைக்கிள் தொலைந்து போவதுகுக்குக் காரணமாயிருந்தேன், அந்த உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

டவுனில முனியப்பர் கோவிலுக்கு அருகில் இருந்த  ஒல்லாந்தர் கோட்டையைச் சுற்றி  முற்றுகை முறியடிப்பு என்று    யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ஆண்டுகளில் ஊர்ல இருந்து கொழும்புக்கு பயணிக்கும் பயணிகள் டவுனில் இருந்து வெகுதொலைவில் இருந்த ஒரு இடத்தில இருந்துதான் பிரயாணம் தொடங்குவார்கள். 

அந்த இடத்துக்கு தான் பின்னிரவிலும் கொழும்பில் இருந்து வரும் பயணிகள் வந்திறங்கி அவர்களின் வாழ்விடங்களுக்குப் போகக் காத்திருப்பார்கள். அப்போதெல்லாம்  இரவுகளில் வாகன வசதி இருக்காது. அவர்களை ஏற்றிக் கொண்டுபோய் விட சைக்கிள்களுடன் பலர் நிட்ப்பார்கள். சைக்கிள் தான் கால் டாக்சி போல அப்போது முக்கிய பப்ளிக் டிரான்ஸ்போர்ட் .


                                                                                           


No comments :

Post a Comment