Saturday 30 May 2015

" எலிங் " ஒரு நட்பின் கதை.

" எலிங் " என்ற ஒரு தனி மனிதனின் பெயரில் நோர்வேயிய மொழியில், 2001 இல் , நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் புறநகர் பகுதியான மஜாச்ற்றுவா என்ற டவுனில் வாழும் நட்பு தேடும் இரண்டு தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு காமடி போல எடுத்த படம் ,இன்றுவரை நோர்வே தயாரித்த ஒரு அருமையான படம் என்று சொல்லலாம். 

                                           பெண்களே இல்லாத அந்த படத்தின் இரு கதாநாயகர்கள் எவளவு சாதாரண மத்திய வயது மனிதர்களோ அந்த அவளவு சிம்பில் அதன் கதை,,ஆனால் அதைக் கனம் ஆக்குவது அதன் திரைக்கதை. மனிதர்களுடன் அதிகம் பழகாத,வாழ்கையின் வரிகளுக்கு நடுவில் தடுமாறும் மனிதர்களுக்கு  நகைசுவைஉணர்வு அதிகம், அவர்கள் வாழ்கை சூழ்நிலை பலசமயம்,அந்த உணர்வை வெளிப்படுத் சந்தர்பம் கொடுக்காவிடினும்! இது போல  "குருடன் பெண்டிலுக்கு அடித்த மாதிரி " கிடைக்கும் அரிய சந்தர்பங்களில் சும்மா பூந்து விளையாடுகின்றார்கள் அந்த இரண்டு மனிதரும்.!

                                               பழக்கம் என்பது ஒரு மோசமான  மிகப்பெரிய பலவீனம், சிலரிடமிருக்கும் சில பழக்கங்கள்தான் இயல்பாக எல்லாரும் போல வாழ விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் நாவல் வடிவில் வந்து அதிகம் யாரும் வாசிக்காத ஒரு கதையைக் கையில எடுத்து தயாரிக்கப்பட்ட, பழக்கம் என்பது  ஏமாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம், பலவீனங்களை நியாயப்படுத்தும் ஒரு மோசடிவேலை, இவை எல்லாம் நன்றாகவே தெரிந்தும்,  மாற்றிக் கொள்வது கடினம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டது  எலிங் படம்

                                  , சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் அந்த ஆண்டே ஒஸ்கார் விருதுக்குப் நோமிநெட் செய்யப்பட்டு, இந்தா அந்தா எண்டு பரபரப்பு கிளப்பினாலும் ,அதுக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை, என் அளவில் நான் நினைக்கும் காரணம் அந்தப் படத்தை ,நோர்வே மக்கள் எப்படி ஜோசிப்பார்கள், அவர்களின் வாழ்வியல் அடையாளம் என்ன,என்று   நோர்வேயிட்கு வெளியே வசிக்கும் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாதது  போல இருப்பது ஒரு காரணம், மற்றது நோர்வே மொழி விளங்கினால் தான் முழுமையாக அதற்குள் இறங்கி ரசிக்கலாம் போலவும் இருக்கு.

                                        கதை இதுதான், எலிங் அஸ்மா நோயால அவதிப்படும் ஒரு நாற்பது சொச்சம் வயசுள்ள ஒரு அப்பாவி,கொஞ்சம் எல்லாத்துக்கும் அதிகம் உணர்ச்சி ஆகும் நெர்வஸ் டைப் ,மிகவும் சட்டத்துக்கு பயந்த,வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடின வள்ளளார் ராமலிங்க சுவாமிகளின் இருபதாம் நூ ற்றாண்டு மறு பிரதி போன்ற மனிதர். நனைந்த கோழிக்குஞ்சைப் போல வெளிறிப்போன முகம், மழுப்ப சேவ் எடுத்த கன்னம், உடலுக்குப் பொருத்தமில்லாத ஜீன்ஸ் பேண்ட் , கலர் வெளிறிப்போன ஒரு விண்டர் ஜாகெட் என்று எளிமையா வாழும் எலிங் அவரோட அம்மாவோடதான் அவர் தனியா அந்த வயதுவரை  வாழ்ந்தார். 

                                   அம்மா இறந்து போக, அவரோட வாழ்க்கை சமூக உதவி, மனநிலை பாதிக்கப்படவர்களுக்கு  உள்ள நிலையில் வர,அவருக்கு ஒஸ்லோ கொமுன் என்ற முனிசுபால்டி ஒரு சிறிய அபார்ட்மென்ட், எலின் இன் இயல்பிலும் ,தோற்றத்திலும் எந்த விதத்திலும் ஒத்துவராத , பியோர்னே என்ற இன்னுமொரு தனி மனிதருடன் சேர்ந்து பகிர்ந்து வாழ கொடுகிறார்கள். அதில தான் இருளுக்குள் தீக்குச்சி உரசப்படுவது போலக் கதை சூடு பிடிக்குது...

                                        பியோர்னே என்ற மற்ற மனிதர்  ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வாற வில்லன் போல இருப்பார், நடந்தால் நிலம் அதிரும் உயரமான மனிதர்,பலமான கைகள், அகலமான முகம் அதில் கோரைப் புல் தாடி, கண்ணில மூர்க்கம் ,மூக்கு நுனியில் இயலாமையின் கோபம். அதிகம் படிக்காத எளிமையான சிந்தனை உள்ள, பார்க்கிற பெண்கள் எல்லாரோடும் படுக்க நினைக்கும், எதற்கு எடுத்தாலும் ஜோசிக்காமல் " வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ " எண்டு வாழ்கையை வன்முறையில் எதிர் கொள்ளும் மனிதர். 

                                                       முரட்டு பியோர்னே ஒரு மெக்கானிக் இருந்தாலும் அவருக்குள்ள ஒரு இளகிய நட்பு தேடும் இதயம் இருக்கு,அது படத்தின் முடிவில் வெளிவரும்., அதுக்கு எதிரா எலிங் நோர்வேயில்  பல வருடம் பிரதமரா இருந்த குறு கார்லம் புடுட்லான் என்ற அம்மணியின் கொள்கைகளிலும் ,அவாவின்  கட்சியான தொழித் கட்சியில் ஊறியவர், அரசறிவியல் என்ற அரசியல் படித்த அறிவாளி . இந்த முரண்பாடான இருவரின் அன்றாட வாழ்கை எப்படி குழப்பம் உருவாக்குது எண்டு அந்தப் படம் காமடியா சொன்னாலும் நிறைய அன்புக்கு ஏங்கும் தனி மனித இயல்புகள் அதில மறைமுகமா நாடித்துடிப்பு போல இருக்கு.

                                                            ஜோசிதுப்பார்த்தால் ,நாங்கள் எல்லாருமே எப்பவுமே ஒரு நல்ல இமேஜ் ஐ பொதுவெளியில் உருவாக்கி வைத்திருக்கவே விரும்புகின்றோம்! உண்மையான எங்களின் ,அன்பின் ஏக்கம் போன்ற நல்ல விசயங்களும்  , மிருக்க இயல்பு, அட்டகாசங்கள், போன்ற நெகடிவ் இயல்புகளும்   இலகுவில் வெளியே தெரியாது ! கோபம், பொறாமை, பயம் ,வரும் நேரங்களில் மட்டும்தான் பல ஆழ்மனது மனது  இயல்புகள் பழையபடி பதுங்கி வெழிவருகின்றது  என்கிறார்கள் சைக்காலிச்டுகள் ! 

                                                  பியோர்னேயின் குளறுபடி அடக்காசம் பிரேமுக்கு பிரேம் படத்தில வரும் அதை அந்த அப்பாவி எலிங் எப்படி சமாளிக்குறார்  எண்டு சொல்லும் படத்தின் முடிவில் நிறைய எதிர்பாராத திருபங்கள் நடக்குது,ஒரு கட்டத்தில் எலிங் ,அவர் சக ரூம் மேட் பியோர்னே போலவே வாழ்க்கையைச் சுவாரசியமா எதிர்கொள்ள பழகி விடுகின்றார்.அந்த இரண்டு மனிதர்களின் பரி சுத்தமான நட்பின் விளிம்பில் வடியும் அன்பு அந்தப் படத்தை ஒரு கவிதை ஆக்குது....

                                       எலிங் படத்தை நோர்வே மொழியில் பார்த்தால் தான் அதன் முழு வீச்சு விளங்கும்,அதை ஆங்கில சப் டைட்டில் இல் பார்த்தால் ஆதரமான சில விசியங்கள் அடிபட்டு, என்னவோ ஒரு கலைப் படம் போல இருக்கும் ,அதுதான் அந்தப் படத்தின் பலவீனம். எப்படியோ , தனிமை வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா விதமான  பொறுமைக்கும் , அனுசரிப்புக்கும் ,ஏமாற்றுதனத்திற்கும்,  துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியாக, காமடியக் களமாகக்  கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு.
.


No comments :

Post a Comment