Saturday 30 May 2015

கவிஞர் தாககவி தண்ணிதாசன்.....

" சிலரை எப்படி ஏமாற்றுவதென்று சிலருக்கு தெரிந்திருக்கிறது. பாவப்பட்ட  அந்த  சிலருக்குத்தான் தெரிந்திருக்கவில்லை சிலர் எல்லா விதத்திலும் ஏமாற்றுகிறார்கள் ..." என்று கவிஞர்  தாககவி தண்ணிதாசன்  மிகவும் உருக்கமாக ஒரு ஸ்டேட்ஸ் போட்டு இருக்கிறார் அவரோட பழைய சுண்ணாம்பு உதிர்ந்து விழுகிற மண் சுவரில. 

                                   ஜெர்மனியில்  இருந்த நேரம் அவரும் உங்களையும் என்னையும் போல முன்னம் எல்லாம் இங்கே பேஸ் புக் டைம் லைன் வால் இல்தான் பதிவுகள் போடுவார், யாழ்பாணத்தில வசிக்கும் இப்போது , பல காரணங்களால் இந்த முகப் புத்தகத்தில் மேக் அப் போட்டு எல்லாருக்கும் சும்மா பொய்க்கு லைக்கும்,கொமென்ட்டும் போட சுயமரியாதை வளைஞ்சு நெளிய மறுத்ததால்,  இதை விட்டுப்போட்டு போய் அவரோட வீட்டு மண் சுவரில  இப்ப ஸ்டேடஸ் போடுறார்.. 

                                          அவரின் நடப்பு இலக்கிய முயற்சிகள் பற்றி டெலிபோனில தேங்காய் துருவுற மாதிரி துருவித் துருவி விசாரிச்சாலும் வெளிய வராத பல விசியம் அங்கே நடக்குது போல இருக்கு. தலைமறைவாக இருக்கும் அவர் நண்பர் கவிஞ்சர் வைரஸ் வைரவநாதன் எழுதும் கவிதைகளைப் பெற்றுத் தரச்சொல்லி கேட்டால்  அவரே கோவத்தில 

                              " நான் காதில பூ சுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். அவரை எனக்கு முன் பின் தெரியாதே பிறகு எப்படி அவர் அதை உங்களுக்கு  அனுப்பச் சொல்லி என்னிடம்  கூறுவார். வேறு ஏதாவது உருப்படியாய் பேசுங்கப்பா "   என்று திட்டுறார்.

                                ஜெர்மனியில் இருந்து கட்டுநாயக்கா போய் இறங்கின கையோட டொச்லான்ட் கழுகு படம் போட்ட யூரோபியன் யூனியன்  பாஸ்போட்டை கிழிச்சு எறிஞ்சு போட்டு இப்ப யாழ்பாணதில இருந்து கொண்டு,  கச்சான் அலுவா  கிண்டுற நேரம்  அடிப்பிடிக்க விடாமல் கிண்டுற கடைசிக் கிண்டில கவிட்டுக் கொட்டுற மாதிரி  உடன உடன  தாககவி தண்ணிதாசன்  சில நேரம் அளவுக்கு அதிகமாக அரிச்சந்திரன் ரேஞ்சுக்கு  நேர்மையாக நிலைத் தகவல் போடுவதால் பிரசினையும் வருகுது, 

                                        ஒருமுறை  பொஞ்சாதி பிள்ளைகள்  தன்னைத் தனியா விட்டுப் போட்டு நயினாதீவு தேர் , தீர்த்த,பூங்காவானத் திருவிழாவுக்குப்   போனதால் தான் தனியா வீட்டில  இருப்பதை  ஒரு மூன்று வரி ஹைக்கூ  கவிதையில் எழுதிப்போட, அதை வாசிச்ச கள்ளர்,  இரவு அவரோட வீடுக்குள்ள ஓட்டைப் பிரிச்சு இறங்கி, அவரோட வாயுக்க துணியை அடைஞ்சு போட்டு , அவரைக் கட்டிலோடு கட்டி வைச்சுப் போட்டு ,கிடந்த பெறுமதியான எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போயிட்டாங்கள் , அந்த நிகழ்வைத்தான் அவர் ஆங்கிலத்தில்  " And I won't cry out any more as  Time stands still as I gaze with lost " என்ற கவிதையில் எழுதி இருக்கிறார். 

                                             எனக்கு மிகவும் பிடித்த சமகால இவோகேட்டிவ் ரக பொயட் இந்த கவிஞர்  தாககவி தண்ணிதாசன். அவர் எழுதிய சில கவிதைகள் உலக அளவில் இபோல வைரசை விட பீதியக்கிளப்பி இருக்கு , பல இலக்கிய மேடைகளில் அவர் கவிதைகள் வாசிக்கப்பட்ட போது பலருக்கு மைக்கிறேன் என்ற ஒற்றைத்தலைவலி நிரந்தரமா வரக் காரணமா இருந்து இருக்கு, டொச் மொழியில் மொழிபெயர்த்த அவர் யாழ்ப்பானத் தமிழில் எழுதிய,

                 " பிள்ளைப் பெறுவுக்கு சரக்கு தூள் அரைக்க வரவா  "  என்ற கவிதை வாசித்த பல ஜெர்மன்காரங்களுக்கு ஓட்டோBபான்  போல இருந்திருக்கு  . அவரோட " நான் இரவில  பெரிசா  சாப்பிடுறதில்லை " என்ற சில்வியா பிளாத்தின் கொண்பெஸ்சனல் ஸ்டைலில் எழுதிய  கவிதை உங்களுக்கு சாம்பிளுக்கு நாளைக்கு இங்கே போடுறேன். இரவில  அவர் பெரிசா  என்ன சாப்பிடுறதில்லை என்பதை சர் ரியலிஸ்டிக் ஸ்டைலில் சூட்சுமமா அதில எழுதி இருக்கிறார் என்கிறார்கள்.

                                  ஆனாலும்  பல சமயம் தாக சாந்தி செய்ய வழி இல்லாத நேரம், சில  பேஸ் புக் பதிவாளர்களால் தன்னால் ஒரு  மண்ணாங்கட்டியும் எழுத முடியவில்லை எண்டு புலம்புகின்றார் இந்தப்  கவிஞர் தாககவி  தண்ணிதாசன்.  இந்தப் படத்தில நவீன புதுக்கவிதை படிம உருவக வடிவாக வைன் கிளாசை , ஈசான மூலை எண்டு வாஸ்து சாஸ்திரம் சொல்லும் திசையை பார்த்தவாறு,  பின் நவீனத்துவ கோட்பாட்டில்  ஆல்பர்ட் காம்யு ஸ்டைலில்,

                     'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ " என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு  வம்ச விருத்தியாவது ஒழுங்கா நடக்கட்டும் எண்டு சரிச்சு தாக சாந்தி செய்பவர் தான்  பிரபல   கவிஞர்  தாககவி தண்ணிதாசன். உங்களுக்கு அவரைக் காட்ட வேண்டும் எண்டதுக்கு தான் இந்த விளாதிமிர் உலிச் உலியானவ் போல ஆட்டுக்கிடாய் தாடியோடு உள்ள அவர் தாக சாந்தி செய்யும் படம் போட்டு இருக்கிறேன் 

                              காக்கைப்பாடினியார்  சங்க காலத்திலேயே பொறுமையின்  எல்லையாக குமரியைக் குறிப்பிட்டுள்ள தமிழர்களுக்கு சொந்தமா மண்டையை பாவிச்சு ஜோசிக்கப் பஞ்சி என்றும், யாரவது ஒருவர் புதுவிதமா ஏதாவது தொடக்கினால் அதை " செட்டிநாட்டு பொம்பிளைகள்  மிளகாய்ப் பொடி அரைக்க மிட்டாசு ஜமிந்தார் அரவைக் கல்லுக்கு ஆராத்தி காட்டின மாதிரி " கொப்பி அடிச்சு ,சுடுற தோசைக் கல்லுக்கே நோகாமல் தோசை சுட்டு, உளுந்து வடை போல உல்டா பண்ணி,  உலக அளவில் பிரபலம் ஆகுறாங்க என்று  வெறுத்துப்  போய் இருக்கிறார்   
                                     அதனால   " வைக்கத் தெரியாதவன் " .... " ஐக் கொண்டு போய் மாச வட்டிக்கு " ..... "  சேட்டு  வீட்டில வைச்சாணாம் " என்ற மாதிரி பலர்  நொந்து போகிறார்கள்  என்றும்  அவரோட "இளிச்சவாயன்  கோப்பிரேசன் திணைவாகை " என்ற செய்யுளில்  பாயிரம் பாடி இருக்கிறார்.  

                                      இலங்கையில் அந்த நேரம்அவர் எழுதின தொடக்க நேரமே   திறணாய்வு வித்தகர்கள்  எல்லாம் ஒரு குழுவா மாறி  மாறி முதுகு சொறிஞ்சு,,தாங்க  எழுதுறதுதான் கவிதை என்று வல்லாதிக்கம் செய்து பலரை எழுதவே விடவில்லை . அதால பாதிக்கப்பட்டவர்  கவிஞர் தாககவி தண்ணிதாசன். அதை ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அவர்  எழுதிய " பேர்லின் சுவரில் மூத்திரம் பெய்தவன்  " என்ற நீண்ட கவிதையில் பதிவு செய்திருக்கிறார் 

                                             ஆனாலும்  அவர் கவிதைகளில் , சுதேசியத் தமிழ் மொழி வாசம்,  கவிதைமொழி உவமை, தனித்துவ  உருவகம்,  சொந்தமா சிந்தித்து எழுதும் இன்டலிஜென்ட் அதிகம் இல்லை என்றும்  ,அடுத்தவன் சரக்கில உல்டா பண்ணி  , சில மேற்கு ஐரோப்பிய மொழிபெயர்ப்புக் கவிதைகளை ஜலசா  பண்ணி எழுதியுள்ளதை அவரே ஒத்துக்கொண்டு , " எனக்கு யாழ்பாணத்தில ஆட்கள் இல்லாத  காணிக்க ,வேலிக்  கதியாலை தள்ளிப் போட்ட   பழக்க தோஷம் விடுகுதில்லை " என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

                                          பாவம்பா இவளவு நேர்மையா இருக்கும் அந்த  கவிஞர்பா அந்தாள்  தண்ணிதாசன் , ஏன்பா  " கடவுளின் மொழிதான் குழந்தைகளின் மொழி " எண்டு எப்பவும் அப்பாவியா சொல்லித்திரியும் அந்தாளிண்டயுக்க போய்க் கையைப் போட்டுத்  துலாவி எடுக்குரிங்களே ,  எடுத்து  இன்னும் எவளவு காலத்துக்குத்தான் கவுரவ எழுத்தாளர்கள் எண்ட பெயரில இப்படி அடிமாட்டு இலக்கியம் அடுத்தவங்களின் முதுகில ஏறி இருந்து ஓட்டுவீங்களோ தெரியலை.  இதைத்  தான் "  இல்லாத பிள்ளைக்கு பெயர் வைக்க அலைவது நல்லாகவே இல்லை " எண்டுறதாக்கும்..   

.......................... என்ன சீவியமடா இது !.
.
 .
                     


1 comment :

  1. ஹாஹாஹாஹா.... தாககவி தண்ணிதாசன் .. ம்ம்.. நிறைய இலக்கிய உலக விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க நகைச்சுவையாக...
    அந்தாள்ட பாட்டுக்கு இருக்க விடாம சைக் ....

    ReplyDelete