Tuesday, 3 March 2015

புலி வருகுது புலி வருகுது ....

யாழ்ப்பாணத்தில எங்களின் வீட்டுக் ஹோலில் என்னோட தாத்தாவின் ஒரு கறுப்பு வெள்ளைப் படம் சுவரில பெரிதாகப்  பிரேம் போட்டு அனாதையாகத் தொங்கிக்கொண்டு இருந்தது, அதில இருந்த தாத்தா சந்தனக்கடத்தல் வீரப்பன் போல அருவாள் மீசையை முறுக்கி விட்டு, கையில ஒரு புலித் தோலை ஒரு வேங்கைப் புலியையே சுருட்டி வைச்சிருக்கிற மாதிரி சுருட்டி வைச்சுக்கொண்டு, நெஞ்சில ஒரு புலிப் பல்லுப் போட்ட செயின் தொங்க விட்டு,முகத்தை இறுக்கமா வைத்து எவன் முன்னுக்கு வந்தாலும் முகத்தில குத்துவன் என்பதுபோல முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார், 

                                  இனி நான் சொல்லப்போறது   றீல் கதையெண்டால் என்னவெண்டு தெரியாத  அதால நான்  விடுற றீல் எல்லாத்தையும் உண்மையெண்டு நம்பிப் கொண்டு  இங்கிலிஸ் ரெகுலா திரில் படம் பார்க்கிற மாதிரி திகிலோடு  வாசிக்கப்போற உங்களுக்காகவே ,   அவர் போடிருந்த புலிப்பல்லு அவர் மலேசியாவில் சுட்டுக்கொன்ற ஒரு அப்பாவிப் புலியின் கொடுப்பு பல்லு என்ற உண்மைக் கதையும் அவர் நிராயுதபாணியாக வந்த ஒரு வேங்கைப் .புலியை  வேட்டையாடி அதோட பல்லப் பிடுங்கி தாயம் விளையாடிய கதையும். 

                         சின்ன வயசில் என்னோட பாட்டி, எல்லாப் பாட்டியும் போல இல்லாமல், பாட்டி சுட்ட வடையைக் ,காகம் சுட, அதைப் பிறகு நரி சுட.....இப்படி எல்லாம் சொதப்பல் கதை சொல்லாமல், பதினாறடி வேங்கைப் புலியைச் சுட்ட கதை,  இரண்டாம் உலக யுத்தத்தில் மலேசியாவை ஜப்பான்காரன் ஒரே இரவில்ப் பிடித்த கதை, இங்கிலிஸ்காரன் குதிகால் தெறிக்க ஓடித் தப்பின கதை, பல்லியைப் பிடிக்கிற மாதிரி மலே சைனாக்காரன் மலைப் பாம்பு பிடித்த கதை, அமரிக்கன் ஜப்பானில அணுக்குண்டு போட்ட கதை  எண்டு கொஞ்சம் அட்வென்ச்சர் கதைகள் சொல்லி வளர்த்தா,

                       பாட்டி இப்படி அம்புலிமாமா  கதைகளை சொல்லாமல் அமர்களமான ரியல் ஸ்டோரி கதைகளை அவிட்டு விட்டத்துக்குக் காரணம், மலேசியாவை இங்கிலிஸ்காரன் ஆண்ட நேரம் இலங்கையில் இருந்து படித்தவர்களை ஆங்கிலேயர் தெரிந்து எடுத்து மலேயா,சிங்கப்பூரில் வேலைக்கு நியமித்தார்கள். அதால  தாத்தா வெள்ளைகாரனுக்கு இங்கிலிஸ்ல சாம்பிராணி போட்டு, இன்றைய மலேசியா அன்றைய மலேயாவில் செரம்பான் என்ற இடத்தில் ரப்பர் தோட்டத்தில் கங்காணி வேலை பார்த்ததால். பாட்டியும் அவரோடு இழுபட்டுப் போய் அங்கே வசித்தா. அவா தான் புலியைச் சுட்ட கதையைச் சுடச்  சுடச் சொன்னா.

                    பாட்டியின் சிட்டுவேசன் அறிக்கைப்படி இயற்கையிலே கோபக்காரனான தாத்தா, ரப்பர் தோட்டத்தில் கங்காணி வேலை பார்த்ததால் வெள்ளைகார துரை, ஒரு பெரிய கல் வீடும் கொடுத்து, ஒரு துவக்கும் தாத்தாவுக்கு கொடுத்து,அதை எப்படி சரியா குறி தவறாமல் சுடுறது எண்டும் சொல்லிக் கொடுத்து இருகுரான்.  துரை ஏன் துவக்கு குடுத்தான் எண்டு சரியா அவா சொல்லவில்லை,அவருக்கு கீழே வேலை செய்த தோட்டக் தொழிலாளர் குழப்படி செய்தாலும் எண்டு வெருட்டக் கொடுத்த மாதிரிதான் அவா சாடை மாடையாய் சொன்ன நினைவு இருக்கு.

                       அது என்ன வகை துவக்கு எண்டும் அவாவுக்கு தெரியாது, எப்படியோ அது ஒரு புலியைச் சுடக் கூடிய துவக்கா இருந்து இருக்கு. அதைவிட அது பார்க்க ஒரு பயங்கர துவக்காத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் பாட்டியும்


                           " மலேயாவில் வாழ்ந்த காலம் முழுவதுமே அந்த துவக்குக்குப்  பயத்தில வாயே துறக்காமல் அந்த சுடுதண்ணி மனுசனோட உயிரைப் பிடிச்சு வைச்சு சீவியதைக் கொண்டுபோக வாழ்ந்தேன் " 

                 எண்டும் வேற உண்மையை மறைக்காமல் அந்த துவக்கு எவளவு பயங்கரத் துவக்கு  என்று சொல்லி இருக்குறா எனக்கு ...

                        தோட்ட தொழிலாளர் சின்ன லயன் போன்ற அந்தரித்த தகர வீடுகளில் ரப்பர் தோட்டத்துக்கு அருகில் காட்டுப்பகுதியில் காட்டை வளைச்சு பிடிச்சு வசித்துள்ளார்கள். புலி காலா காலத்துக்கும் பரம்பரையா அதுக்கு சொந்தமான அந்தக் காட்டுப்பகுதியில் சுயநிர்ணய உரிமையோடு ராங்கியாக வசித்து இருக்கு.

                         ஒரு மம்மல் நேரம் தோட்ட தொழிலாளர்கள் வளர்த்த ஒரு ஆடு கொஞ்சம் காட்டு விளிம்புக்குப் போய் புல்லு மேய, பசித்த புலி ஆட்டுக்கு மேல பாஞ்சு ஆட்டை மேஞ்சிட்டுது
 ஆனால் புலி ஆட்டின் கழுத்துக் குரல் வளயை அறுத்து போட்டு அலுவல் தொடங்கமுதல் ,அதுக்குள்ளே யாரோ ஆடு கத்தின அவல சத்தம் கேட்டு தகர பரல் அடிக்க புலி விட்டுடுப் போயிட்டுது,  பசிக்கு ருசி தேவையில்லை  என்றால்  புலி பேசாமல்  புல்லைத் திண்டுகொண்டு இருந்திருக்கும் ஆனால் ஆட்டு புரியாணி ருசி அதுக்கு தேவைப்பட  நாலு காலில்  பாஞ்சிருக்கு.  அந்த புரியாணிக் கனவுதான் புலியின் உயிருக்கு உலை வைக்க காரணமா இருந்தது. 


                அடுத்தநாள் காலை அவர்கள் எங்க தாத்தாவிட்ட வந்து வெளியே வாசலில் நின்று புலி மட்டன் புரியாணி சாப்பிட ஆசைப்பட்ட சம்பவத்தை சொல்ல,தாத்தா கேட்டுப் போட்டு,ஒண்டும் சொல்ல வில்லையாம் அவர்களுக்கு 


                    " பசித்த புலி இரவு எப்படியும் இரத்த வாடை தேடி வரும் ,ஆட்டை அந்த இடத்தை விட்டு எடுக்க வேண்டாம், "   எண்டு சொல்லிப்போட்டு

                     " எடடி அந்த துவைக்கை " 

                          எண்டு சொல்ல பாட்டி நடுங்கி நடுங்கி அதை எடுத்து கொடுக்க, காட்ரச் வெடியை அந்த துவக்கு சேம்பரில் வைச்சு , அதை லோட் செய்து  அங்கயும்,இங்கயும் குறி பார்த்தாராம்.

                                 அன்று பகல் முழுவதும் தாத்தா, ஹோலில பிரம்பு ஈஸி செயரில் காலுக்கு மேல காலைப் போட்டுக்கொண்டு,அதை ஆட்டிக் கொண்டு,டெக்னிகலா ஜோசிதாராம் எப்படி புலிக்கு வெடி வைக்குறது எண்டு,இடை இடையே துவக்கை தூக்கி ஹோல் முழுவதும் அங்கயும் ,இங்கயும் குறி பார்க்க, பாட்டி குசினியை விட்டே வெளிய வரவில்லையாம்,

                                பாட்டி அப்படி வீட்டுக்கையே பயந்ததுக்கு தற்பாதுகாப்புக் காரணம் நிறைய இருக்கு எண்டு சொல்லி இருக்குறா. தாத்தாவுக்கு குறி பார்த்து சுடக் கற்றுக் கொடுத்த வெள்ளைக்காரன் அவர் குறி பார்க்கும் திறமையை பாட்டிக்கு கதை கதையா சொல்லி இருக்கிறான்,அந்த தகவல்கள் அவர் எப்பவும் துவைக்கை கையில எடுக்கும் போதெல்லாம் சடார் எண்டு முன்னுக்கு வரும் எண்டு சொல்லி இருக்குறா......

                               எப்படியோ இரவு துவக்கை எடுத்துக்கொண்டு அவரோட தோட்டத்தில் தொழிலாளர் வேலை செய்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களையும் உதவிக்கு கூட்டிக்கிகொண்டு ரப்பர் தோட்டம் அவர் போன நேரத்தில் இருந்து பாட்டிக்கு நெஞ்சுக்க தண்ணி இல்லையாம்,

                              ஆனாலும் நிறைய சின்னப் பிள்ளைகள் இருக்கும் அந்த தோட்டக் தொழிலாளர்கள் வசிக்கும் சின்ன லயன் பகுதியில்,புலி நாளைக்கு சின்னப் பிள்ளைகளிலும் வாய் வைச்சுப் பாயலாம் என்றதாலும் , வேற யாரும் புலியை சுட அந்த இடத்தில இருக்கவில்லை என்றதாலும் அவா ஒண்டுமே சொல்லவில்லையாம், இரவு முழுவதும் தாயுமான சுவாமிகள் பாடல்களை படித்துக்கொண்டு விழித்து இருந்தாவாம்,

                           ஆடு செத்துக்கிடந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய ரப்பர் மரத்துக்கு மறைவில், புலியின் கால் தடம் போன பாதையைக் குறிவைத்து ,இரவு முழுவதும் அந்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களையும் உதவிக்கு கூட்டிக்கிகொண்டு போய் பதுங்கி இருந்த போதும் பசித்த புலி அன்றைக்கு இரவு வரவே இல்லை,

                               புலி ஏன் வரவில்லை எண்டு யாருக்கும் விளங்கவில்லையாம். யாருக்கு தெரியும்,தாத்தா ஹோலில பிரம்பு ஈஸி செயரில் காலுக்கு மேல காலைப் போட்டுக்கொண்டு,அதை ஆட்டிக்கொண்டு, டெக்னிக்கலா ஜோசித்த மாதிரி புலியும்,காட்டுக்குள்ள படுத்து இருந்து கொண்டு காலுக்கு மேல காலைப் போட்டுக்கொண்டு, அதை ஆட்டிக் கொண்டு, டெக்னிக்கலா ஜோசித்து இருக்கலாம் .

                    அடுத்த நாள் இரவும் அவர்

  
                      " எடடி துவக்கை, நானே ஒரு பதினாறடி வேங்கைப் புலி . கேவலம் இந்தப் காட்டுப்புலி  எனக்கே  தண்ணி காட்டுது, இண்டைக்கு ஒரு முடிவோடதான் வாறது, புலியிண்ட நாரியை முறிசுப்போட்டு தான் மற்ற அலுவல்  " 

                        எண்டு சொல்லி வெளிகிட்டுப் போக ரெடியாக ,  பாட்டி நடுங்கி நடுங்கி அதை எடுத்து கொடுக்க, இந்த முறை நாடியைத் தடவி கொஞ்சம் ஜோசிதுப்போட்டு , கைப் பெருவிரலை காற்றில் சுழட்டி, ஒரு இடத்தைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி  , காட்ரச் வெடியை அந்த துவக்கு சேம்பரில் வைச்சு , அவர் அதை லோட் செய்து  அங்கயும், இங்கயும் குறி பார்த்தாராம். பாட்டி சடார் என்று தட்பாதுக்கப்புக்கு நிலை எடுப்பது போலக் குசினிக்க பாஞ்சிட்டா .

                     அவர் துவைக்கை தூக்கிக்கொண்டு போய்க் கொஞ்ச நேரத்தில் . வீட்டு சாமி அறையில் ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கில் இருந்த திரி சடார் எண்டு அணைஞ்சு போகவும்,அந்த இரவும் பாட்டி நம்பிகையோட தாயுமான சுவாமிகள் பாடல்களை படித்துக்கொண்டு விழித்து இருக்க,,

                                  அன்று இரவு புலி இனியும் பசி பொறுக்க ஏலாது எண்டு வந்து இருக்கு, புலி சருகில நடந்து வாற சத்தம் கேட்க உதவிக்கு கூட்டிக்கிகொண்டு போன அந்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களில் ஒருவன், 


           " துரை வெடிய வையுங்க.... துரை வெடிய வையுங்க " 

                   எண்டு சொல்லி சொல்லி நைசா இருட்டில சத்தமிலாமல் நழுவ,மற்றவன் விறுக்கு விறுக்கு ரப்பர் மரத்தில ஏறி உச்சிக்குப் ஏறிப் போயிட்டானாம்.

                                  ஆனால் புலி கொஞ்சம் மிலிட்டரி டக்டிகளா அந்த சிஸ்ட்டுவேசனைக் ஹான்டில் பண்ண, வைச்ச வெடி குறி தவற. புலி நாலுகாலில் அந்த பெரிய ரப்பர் மரத்தை நோக்கி எகிறிப் பாய, இரண்டாவது வெடிக்கு காட்ரச் சேம்பரில் வைச்சு , துவைக்கை லோட் செய்து  , ரெண்டாவது வெடி வைக்க டிக்கரில சுடு விரலை வைச்சு அமத்த , அந்த துவக்கோட  பயரிங் கொக் பின் எதிர்பாராதவிதமாக இறுகிட்டுது .......

நாவுக் அரசன்
ஒஸ்லோ.

.

4 comments :

  1. பிடித்த கதையை, பலமுறை படிப்பதும் , பிடித்த பாடலை பல முறை ரசிப்பதும் இந்த கதைக்கு பொருந்தும் .

    ReplyDelete
  2. மிகமிக நல்ல எழுத்து நடை..அற்புதமான திறமை . அருமையா இருக்கு அரசன்

    ReplyDelete