Tuesday 3 March 2015

ஹோல்மன்ஹோலன்.. ஒஸ்லோவின் கதை 002.

பிரான்ஸ் பாரிஸில் உள்ள காலச்சார நினைவுச் சின்னம் ஈபெல் கோபுரம் போலவே நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் விளையாட்டுக்கு என அமைக்கப்பட்ட செயற்கையான ஒரு இரும்பு வலைப்பின்னல் கட்டிட அமைப்பு ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழித்தடம்.

                                 ஒஸ்லோ நகரின் வடக்கு ,வடமேற்க்கு எல்லை விழும்பில் உள்ள பல மலைக் குன்றுகளில் உயரமான ஒரு குன்றான ஹோல்மன்ஹோலன் என்ற இடத்தில பல சிரமங்களுக்கு பின் இதை அமைத்து உள்ளார்கள். கொஞ்சம் ஒஸ்லோவில் இருக்கும் எந்த உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தாலும் இதைப் பார்க்கலாம். இதை எழுதிக்கொண்டு இருக்கும் மேசையின் அருகில் உள்ள ஜன்னல் ஊடாகவே என்னால் இதைப் பார்க்க முடியும் .

                                      நோர்வே மக்கள் பிறக்கும்போதே பனிச்சறுக்கு டெக்னிக்குகள் அவர்களின் ரத்த ஜீன் அமைப்புக்களில் சேர்த்துக்கொண்டு பிறப்பவர்கள். வயது ,பால் வேறுபாடு இன்றி அவர்களின் விண்டர் உறைபனிக்கால வெளிப்புற உற்சாகங்களில் முக்கியமானது ஸ்கி என்ற உறைப்பனியில் சறுக்கும் விளையாட்டு.

                                 அதில பல வகையான விளையாடுக்கள் இருக்கு, மிக உயரமான இடத்தில இருந்து இரண்டு கால்களிலும் கொழுவியுள்ள நீண்ட வழுக்கும் மெட்டல் தகட்டின் உதவியுடன் உந்தித் தள்ளி, உறைபனியில் வழுக்கி கீழ்நோக்கி வரும் போது இடையில் வீரமாகப் பறவைபோல காற்றில் மிதந்து மறுபடியும் தரையை வழுக்கித் தொடும் தீரமான விளையாட்டு .பார்க்கப் பயங்கரமான விளையாட்டு இந்த ஸ்கி ஜம்ப்பிங். ஆனால் இங்கே இளையவர்கள் பயப்பிடாமல் அதில பாய்ந்து விளையாடுவார்கள்.

                            நூறு வருடங்களின் முன்னர், நோர்வேயின் பல இடங்களில் உள்ள மலைகளின் உச்சியில் இருந்து சறுக்குவது போலவே இயற்கையாகவே சரிவான இந்த ஹோல்மன்ஹோலன் மலையில் இருந்தும் உறைபனியில் சறுக்கி இருக்குறார்கள். இரும்பில் கட்டப்படும் கட்டிட தொழில்நுட்ப வளர்ச்சி வந்தபோது சின்னதாக ஒரு உறைபனி சறுக்கு வழிதடம் கட்டிப் , பின்னர் அதை உடைத்துப்போட்டு இப்ப உள்ள இந்த தடம் கட்டி இருக்கிறார்கள்.

                                 2010 இல் நோர்வே உலக விண்டர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடத்த தெரிவுசெய்த போது இதை இன்னும் மொடேர்ன் ஆக்கி ஒஸ்லோ நகரத்தில் இருந்து நேராக இந்த மலை உச்சிக்கு மேல் நோக்கிப் போகும் மெட்ரோ ரயில்ப் பாதை அமைத்தார்கள் ,

                                 2010 இல் நடந்த உலக விண்டர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி சும்மா விடுப்பு பார்க்கப் போனபோது. கடைசி மெட்ரோ ஸ்டேஷன் இல் இறங்கி அங்கிருந்து, சில கிலோமீடர் தூரம் கால்களால் சறுக்கி, வழுக்கி ,வளைந்து வளைந்து சிவனொளிபாத மலை ஏறியது போல நடந்துதான் அந்த நிகழ்ச்சி பாக்க மலை உச்சிக்குப் போகவேண்டி இருந்தது.

                                  அந்த மலையில் நின்றே ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழித்தடத்தை நிமிர்ந்து அண்ணாந்து பார்க்க, அதன் உச்சியில் பாய தயாராக இருந்த வீரர்கள் சின்னப் பூச்சி போலதான் தெரிந்தார்கள். அவர்கள் சறுக்கிப் பாந்து அந்தரத்தில் பறந்து நேராக கீழே பவிலியனில் இருந்த பார்வையாளர் மேல வந்து இறங்குவது போல தான் இருந்தது. உண்மையில் இந்தக் கட்டிடத்தின் பிரமாண்டத்தை விட பாய்பவர்களின் நம்பிக்கை உயரமா இருந்தது. சறுக்கினால் சவுக்காலை போன்ற ஆபத்துள்ள விளையாட்டில் அப்படி நம்பிக்கை இருந்தால் தான் பாய முடியும்.


                  இப்படி பயங்கர " அதிரினலின் கிக் " கொடுக்கும் விளையாட்டுக்களை ஓரமாக ஒதுங்கி நின்று பார்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதைப் பலமுறை உறைபனி சினோவில் நடக்கும் போதே வழுக்கி விழுந்து காலை உடைத்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் .

                                             அந்தக் ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடத்துக்கு அருகில் இருந்து கீழே பார்க்க ஒஸ்லோ நகரம் முகில்களுக்கு கீழே, நீலக் கடலின் விளிம்பில் இருக்கிறது தெரியாமல் சின்னதாக இருக்க, அந்த அழகு நகரத்தின் பூங்காக்கள் பச்சைத் திட்டுகளா இடை இடையே தெரிய , அந்த நகரத்தின் ஒஸ்லோ பியோட் கடல் விளிம்பில் இருந்த ஆர்க்கி புருக்கி உல்லாச வீடுகள் அம்மச்சியா குளக்கரையில் வளரும் மூக்குத்திப் பூ போல அமுங்கிக் கிடக்க, நகரத்தின் மிக உயரமான கண்ணாடி மாளிகை ராடிசன் பிளாசா ஹோட்டல் சூரிய ஒளியில் மின்னி மின்னி தாம்பாளம் போலத் தகதகக்க,

                                            ஏறக்குறைய மற்றைய உயரமான கட்டிடங்கள் எல்லாமே ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் சமமாகத் தெரிய, நகர விளிம்பில் இருந்த மலைகள் மிகச் சிறியதாக முழங்காலில் குந்தி இருந்து மண்டியிட , வளைந்து நெளிந்து ஓடும் ஒஸ்லோவின் நதி ஆர்கிஸ் எல்வா தாமோதரவிலாஸ் சாம்பாறு போலக் கலங்கி ஓட, பள்ளத்தாக்குகளுக்கு இரு பக்கமும் கலைத்துப்போட்ட படுக்கை விரிப்புப் போலத் தெரிந்தன அதிகம் உயரம் இல்லாத குருருட்டாலன் குன்றுகள்.

                                              விண்டர் காலத்தில் இந்த ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடதில் நோர்வே மட்டத்தில் ஒவ்வொரு வருடமும் போட்டிகள் நடக்கும், கனவுகளோடு வளரும் எதிர்கால நோர்வே நட்சத்திரங்களை அதில் உருவாக்குவார்கள். உலக அளவில் எல்லா நாடுகளில் இருந்தும் உறைபனி விளையாடுக்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடம் பார்க்க உல்லாசப்பயணிகளாக வருகிறார்கள்.

                        அந்த இடத்தில நோர்வேயின் விண்டர் விளையாட்டு வரலாறு சொல்லும் ஒரு முயுசியமும் இருக்கு. நோர்வே நாட்டு அரசரின் விண்டர் கால உத்தியோகபூர்வ விடுமுறை வாசஸ்தலம், மத்தியகால நோர்வே கட்டிடக்கலையில் முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம், மலை மேல் இருந்து உலகைப் பார்த்து உணவு உண்ணும் மொடேர்ன் ரெஸ்றோரென்ட் ஒன்றும் இருக்கு.

                           வியந்து பார்ப்பதுக்கு அதிகம் இல்லாத ,வெளி உலக சுவாரஸ்சியத்தை நாங்களே உருவாக்கவேண்டிய அவலம் நிறைந்த ,அமைதியான ,அடக்கமான ஒஸ்லோ நகரத்தில் " என்னைப் பார் என் அழகைப் பார், என்னைப் பார் என் வளைவுகளைப் பார் " என்று அழகான நீல நயனங்களில் நளினமாக நடக்கும் இளம் நோர்வே பெண்களுக்குப் போட்டியாக அழைப்பது போல கவர்ச்சியான ஒரு அமைப்பில் இருக்கும் ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதட அதிசயம் ஒஸ்லோவின் பிரத்தியேக லேன்ட் மார்க் .

                                  விண்டர் உறைபனிக் காலத்திலும் நேரத்தோடு வெளிச்சத்தைப் பறிகொடுத்து விட்டு, நீலநிறத்தை தொலைத்துவிட்ட வானத்தின் மயக்கும் மாலைப்பொழுதிலும், நேசம் இல்லாத மோசமான குளிர் காற்று முகமெல்லாம் வீசி அடிக்க " என்னைத் தொட்டு விட யாரும் இல்லை " என்று நிமிர்ந்து பார்க்க வைக்கிறது ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடம்.

நாவுக் அரசன்
ஒஸ்லோ17.02.15


.

No comments :

Post a Comment