Wednesday 25 July 2018

அடையாளங்களுடன் !




 கவிதைக்கான ஏகப்பட்ட விசியங்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டபடி இருக்கு. எவளவோ அபத்தமான கொன்செப்ட்கள் இன்னும் தொடப்படாமலேயே இருக்கு. ஏன் அதை யாரும் எழுதாமல் இருக்கிறார்கள் என்று  புரியவில்லை, அதைவிட எவளவோ ஸ்டைல் இன்னும் புதுமையாக பரிசோதனை செய்யப்பட வேண்டியும் காத்திருக்கு.


                                                               லத்தினமரிக்கன் " மேஜிக்கள் ரியலிசம் " ஸ்டைலில் , பாப்பிலோ நெருடாவின்  " சமகாலப்பயணிப்பு  உணர்வலை " போல , மார்க் ஸ்ட்ராண்ட்டின் " படம் கீறும் மொழி " வடிவில் ,   ஏன் நம்மவர்களால் தமிழில் எழுதமுடியவில்லை? நம்மிடையே கற்பனை வறட்சியா ? அல்லது நமக்கு ஒத்துவராத தத்துவங்கள் என்பதாலா ?

                                                         
                                                             ஒருவர் எழுதத் தொடங்கும் ஸ்டைலில் ஏன் மற்றவர்களும் ஈ அடிச்சான் கொப்பி போல எழுதுகிறார்கள் என்று   விளங்கவில்லை. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் போல  ஒரு நாளுக்கு நாலு இடத்தில ஒரே கவிதை நாலு விதமாக வார்த்தைகளை மாற்றிப்போட்டு நளினமான மாறுவேஷத்தில் உலாவருகுது !


                                                      " conceptual framework "." writing style " , " manner of expressing ", " specific contex thoughts," " language characteristic ", " way of approaching ", " reflection of personality, " " Word choice ", " sentence fluency " இவைகளை விளங்கினால்தான் ஓரளவுக்கேனும் நல்ல கவிதைமொழியில் எழுதமுடியும்  என்று ஒரு ஆங்கில விமர்சகர் எழுதியிருக்கிறார்.




*




சிலசமயம்
அதிக எளிமையாக
நெருக்கமாகிவிடுகிறது
விரக்தியோடு
தெரிவுசெய்யும்  முடிவுகள்  .
அப்போதெல்லாம்
கோபங்களை  தணிக்க
யாரைநினைப்பதென்று
மனதையும்தான்
வற்புறுத்தி
ஏற்கவைக்கமுடியவில்லை ,
பலசமயங்களில்
அதிர்ச்சி தரும்
வெஞ்சினக்   கணங்களையும்
நியமித்துவிட்டு
வெளியே  போய்விடுகிறது
பொறுமை  !




*
எதற்காகத்

தோல்வி  என்பதை
மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்கள் .
அநேக இடங்களில்
பொய்கள்தானே
உண்மைகளைவிடவும்
கவர்ச்சியாக
வெளிப்படுத்தப்பட்டனவே ,
மரணம் வரையும்
விரட்டித்   திரத்திச்சென்ற
கடைசிக் கனவுகள் 
வீழ்த்தப்பட்ட  தினமென்பதும்
ஒரு
சிதிலமாக உடைந்துபோன
குறியீடு !




*



திரும்பத் திரும்ப
வாழ்வு ஓடுகிறது.
சலிப்புற்றுப்
பளிங்குபோன்ற வெய்யில்
புல்வெளிகளில்
முழங்கை முகம் கொடுத்து
தலைசாய்த்துத்
தூங்கிவிழும் பொழுதுகளில்
நிழல்தரும்
பெரு மரங்களை  விடவும்
அடிப்பாதங்களில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
எறும்புகளை
அதிகம் நேசிக்கிறேன்.




*




விடுதலை

தூர வெளிச்சமென்ற 

புரிதலோடு  முன்னேறுவதில்

விடுபட்டுப்போனது

பேய்க்கனவு

மனித இருப்பை

உறுதிசெய்யமுடியாத

வரலாற்றில்

புரட்சி என்பதில்

எப்போதும் உடன்பாடில்லை .

தர்மயுத்தமென்பது

தியாகங்களால்   கிடைக்கும்

அறம் .


*



வாய்க்கால்க் கரைகளில்
தலையசைவுகளில் 
இசைந்து நின்று
கடைசிச் சொல்லுக்காகக்
காத்திருந்தார்கள்,

தரையிறங்குதல்,
சுற்றி வளைப்புகள்
முறியடிப்புகள் 
எல்லோருக்குள்ளும்
வெற்றிகரமான  திட்டங்கள்
இருந்துதானே உண்மை ,

பாதைகளை விட்டுவிட்டு
எல்லோருமே
சரணடைந்துவிட்டார்கள்                                                                       
அவர்கள்
ஊருக்குள் போனார்கள் ,
இவர்கள்
எங்கே போனார்கள் ?



*



மறைமுகமான
வெடிவைப்புக்களிலும்
உயிர்கள்
நம்மவர்களால்
நமக்கிடையிலேயே
பலியெடுக்கப்பட்டனவே ,
என்றேனும்
சமநிலை  உருவாகும்
ஒரு நாளில்
எல்லாக் கால்த்தடங்களும் 
நினைவுகூறப்படும் !.



*




தீச்சுடர்
தடம் மாறிய
தருணத்திலிருந்து,
கருத்துக்கள்
பின்வாங்கிய பாசறைகளில்  
தீர்க்க தரிசனங்கள் 
வாழ்விழந்த
காலத்தைப் போல
இடைப்பயணதில்  முடிந்துபோனது !

ஒவ்வொரு
திசைதவறிய  
தொலைதூரப்   பீரங்கிகளின்  
குண்டுச் சிதறறிலும்
பெருக்கெடுத்த
குருதியோட்டம்,

எளிதில்
மறந்துவிடமுடியாத
ஒரு சுட்டுவிரல்
இப்போதும்
அங்கேதான் குறிகாட்டுகிறது !



*



அவர்கள்
மண்டியிட்டுத் தப்பி  
வெகுதூரம் வந்துவிட்டபிறகும்
இப்போது
விவாதிக்கவும், ஆராதிக்கவும்
ஒரு
நினைவு நாள் !
மரனத்தோடு
சாய்ந்துகொண்ட
சம்பவங்களுக்குத் திரும்பும்
அந்தக்கணத்தில்,
சட்டென்று
உள்நுழைந்து  விடுகிற
ஒரு
துளிக்  கண்ணீர் 
ஒரு
வாய்விட்ட அழுகுரல்
ஒரு 
வலியின் கதறல்
ஒரு
மூச்சின் அடங்கல்  
உணர்த்திவிடுகிறது
இன்றுவரையில் 
பயணிக்கிறகதையையில்
இன்னும்
சொல்வதற்கு
நிறைய இருக்கிறதென்பதை  ,




*




இது
ஒப்பாரி போலிருக்கலாம்
இடம்,காலம்
எந்தக் குறிப்புகளுமில்லாத
கனதியான
தோல்விப்பாடல்.
ஒரு
தீர்க்கமான  முடிவோடு
ஆக்ரோஷமான   மெட்டு
ஆர்ப்பரித்து  ஆரம்பிக்கிறது,
காலமும் காற்றும்
எதிர்திசையில் நெருங்க
யுத்த களத்துக்கு
நிர்ப்பந்தமாக   இடம்பெயர்கிறது
பாதையை தேடுவதில்
ஆர்வங்களில்லை
திசைகளில்
எங்கெங்கோவெல்லாம்
பயணித்துக்கொண்டிருக்கிறது,
எளிமையான வரிகளில் 
மனிதர்கள்
இருப்பிடங்களை விட்டு
எழுந்து சென்றிருக்கிறார்கள்
காடுகளில்
மறைந்துகொள்கிறார்கள்
காடுகளில்ப்
பதுங்கி உறங்குகிறார்கள்.
கடலின்  முகத்தில்
காணாமல் போகிறார்கள்
வெடிச்சத்தங்கள்
நெருக்கமாக நெருங்க
கூட்டமாகக்
கொல்லப்பட்டார்கள்
வெகுதூரத்தில்  இருக்கிறது
அந்தப்
புதைகுழிகள்
வெறுமையோடு தனித்திருக்கிறது
நினைவு !




*





யாரிடமும்
எப்பொழுதும்
வெளிப்படுத்த விரும்பாத 
எதோவொன்றைக்
கண்களைக்கட்டி 
கடத்தியதைப் போல.
யுத்தத்துக்குள்
வாழ்ந்தவர்களுக்குத்தான்  தெரியும்
வெடிமருந்து நிரம்பிய
கந்தகக் காற்றின்
பாரம் !



*
அடுத்தடுத்து

மனதில்
இளம்  ரத்தங்கள்
ஒடிக்கொண்டிருக்கும் போது
எப்படி
நேரடி அறிமுகத்தில்
அடையாளங்களுடன்
திரும்புதல் சாத்தியம்  ?
எதற்கோ
அடிமைப்பட்டுக் கிடக்கின்றது
உரிமை கோரப்படாத
அந்தத்
தலைமுறை !










1 comment :

  1. அரசனின் எழுத்துவன்மை தனித்துவமானது.

    ReplyDelete