Tuesday 31 July 2018

வேறெதுவுமே நிகழவில்லை !

இலக்கிய  விசியம் தெரிந்தவர்கள் கவிதைமொழியில் இல்லாத எழுத்துக்களைக் கவிதை என்று வரையறை செய்வதில்லை. இது ஒரு பிரச்சினை. இவளவு களேபரத்துக்குள்ளும்   எழுதுவதின் உள் நோக்கிய குவிமைய மறைபொருள்க் கருத்தைக் கண்டு  பிடிக்க முடியாத,  சிந்தனை வரட்சியில்  இருக்கும் மனிதர்கள் எதையுமே  மேலோட்டமாக விளங்கிகொள்வதும் நடக்கத்தான் செய்கிறது.
                                                                                
                                                    உங்களுக்கு ஒரு விசியம் தெரியுமா ? நாயைப் பிடி பிச்சை வேண்டாம் என்று உலகம் ஹைப்பர் வேகத்தில் ஓடும் இன்றைய நாட்களில் இலகுவான பாவனையில் உள்ள மொழியின்  வரிகளில்  நாக்கு நனைச்சு விட்ட மாதிரிக் கவிதைகள்  எழுதுவது ஒரு பிரபலமான ஸ்டைல் ஆகி இருக்கு.  வாசிக்கும் எல்லாருக்கும் சுருக் என்று தலைக்கு ஏறுது. இப்படி எழுதுவதிலும்  ஒரு திரில் இருக்குத்தான் என்கிறார்கள்  , இப்ப எல்லாம் அதுதான் தேர்தல்கால  வாக்குறுதி போல சூடு பிடிக்குது.
                                                                               
                                                                 மேலோட்டமாக  கமக்கட்டில் கிச்சு கிச்சு மூட்டி விடுற மாதிரியான சின்னச் சின்ன வரிகளிலும் , யாருமே  நினைக்காத  கற்பனை எல்லைகளுக்குள்  அதை வாசிப்பவர்களைச்  செலுத்துகிற   அவை ஜப்பானிய ஹைக்கூ வடிவமா, புண்ணாக்கு வடிவமா, அல்லது புடலங்காய் வடிவமா என்பது போன்ற தர நிர்ணயம் எல்லாவற்றையும் தாண்டி ஏதோவொரு சம்பவம் , அனுபவம், காட்சி,  கனவை இழுத்து விரிப்பதால் வரும் வரிகளாக இருக்கலாம்.


                                                   அல்லது வெறுங்குப்பையாகவும் இருக்கலாம். உதவாக்கரைக்  குப்பைகளோடு குப்பையாக அதுவும் இருந்திட்டு போகட்டுமே. !


*


ஒரு 
கவிதையை எதிர்பார்ப்பவர்கள் 
தயவுசெய்து இதை வாசிக்கவேண்டாம் 
ஒரு 
கவிஞ்சனை அடையாம்காண்பவர்கள் 
நன்றியோடு இதைக் கடந்துவிடுங்கள்
ஒரு
மொழியில் வலியை வெறுப்பவர்கள்
கெஞ்சிக்கேட்க்கிறேன் மன்னித்துவிடுங்கள்
ஒரு
தப்பும் வழியை மறைப்பவர்கள்
அனுப்புகூர்ந்து அலட்சியமாயிருங்கள்
ஒரு
அவமரியாதையைத் தரநினைப்பவர்கள்
மரியாதையோடு மறந்துவிடுங்கள்
ஒரு
பொறாமையைப் பெரிதாக்கநினைப்பவர்கள்
இரக்கமுடன் சாந்தியடையுங்கள்
ஒரு
இயலாமையை ஒப்பிடஜோசிப்பவர்கள்
ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்
ஒரு
வெறுப்பை ஊதிக்கிளப்புவார்கள்
உங்களுக்குளேயே அடங்கிப்போங்கள்
ஒரு
ஆத்மாவின் அலைச்சலை விமர்சிப்பதை
அடக்கியே வாசியுங்கள்
ஒரேயொரு
விழுந்து கொண்டிருக்கும் தருணத்தில்
தாங்கிப்பிடிக்க முன்வருவார்கள் மட்டும்
இப்போது
என்னோடு வாருங்கள்
அந்தவொரு நன்றியோடு நானிருப்பேன்
உங்களுக்காக….



*

மனஓட்ட
விளக்கங்களோ
முடிவில்லாத
விதண்டா விவாதங்களோ
வெளிச்சமில்லாத ...
நீள் காத்திருப்புகளோ
நடைப்பயணங்களின்
வசீகரத்தைக் குறைத்துவிடலாம் !
உருவாக்கிவைத்திருக்கும்
சிக்கலானபாதை
நிறையத் திருப்பங்களோடு
ஆரம்பித்துவிடுகிறது
அதிலிருந்து
எத்திசை தெரிரிந்தெடுப்பதென்பதில்
மிகமுக்கியமான விஷயங்கள்
சிதறிவிடுகிறது !





*

பூங்காவனத்தின்
ஜவ்வனப் பிரமிப்புகளில்
ஆசுவாசம்தான்
என் கண்களுக்கு தெரிகிறது.
நேரம்தவறாமல் ...
காம்புகளில் விரும்பிப்பிரிந்து
மிதந்தபடியே
குறிப்பிலக்கில்லாமல்
காற்றழைந்து
கீழிறங்கிக்கொண்டிருக்கும்
பருத்திப்பிஞ்சுகள் !
அங்குலம் அங்குலமாக
சிதறல்களைக்
கூட்டிப்பெருக்குகிறார்கள் !
நான்
எனக்குரிய அலைச்சல்களோடு
கழித்துப்பிரித்துப்
பொருத்திப்பார்க்கிறேன் !





*


இப்போதுதான் 
புறப்பட்டுப்போனாள் !
இருட்டு 
விழுங்கிக் கொண்டது .
எவ்வளவு நேரமென்று 

தெரியவில்லை !
வானம் கவிந்திருந்து
மழை
எப்போது வேண்டுமானாலும்
தடமழிக்க
வருமென்பது போலிருந்தது.!
வழியனுப்பி
நினைக்க வைத்து விட்டு
விளக்குகள்
அணைக்கப்பட்ட
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
மறக்காமல்த்
தேடி வந்து விடுகிறது
காலடியோசை !


 *

 நம் 
நிகழ்கால யதார்த்தங்கள் 
ஒரேமாதிரி 
இருக்கப்போவதில்லை !
அடிக்கடி 
விருப்புக்களின்றி
நேசிப்புகள் மாற்றப்பட்டலாம் !
காத்திருக்கையில்
பழகிப் போன
உணர்ச்சி விஷயங்களும்
பழசாகிப்போன
பாவனை முகங்களும்
உங்களுக்கு நினைவு வருகிறதா?
தயவு செய்து
அபத்த தரிசனங்களை
அழித்துவிடுங்கள் !



*
வெப்பமான
முன்கோடை நாட்கள் ,
தேடுவாரற்ற
நிசிக்கலா நிலவு ,
மேலதிகமான ...

வியர்வை வாசனை ,
காற்று விசிறிக்கொடுத்த
மேப்பிள் மரநிழல்கள்,
நகரமுடியாத
நடுப்பகல் நேரம் ,
விலக்கமுடியாமல்
நினைவெழுதும்
நீ ,
எல்லாமே
முக்கியமானவை
என்
அனுபவத்தைப்போல




*
தூறல்கள்
தலையை நனைக்கிறது,
மென்குளிர்
அணைப்புகளோடு
கோபித்துக்கொள்ளும் ...
தோள்மூட்டு உஷாராகுது ,
மந்தாரமாகவே
துண்டு துண்டாகி
நினைவிலும் வலிக்கும்
கழுத்து எலும்புகள்,
நிமிர்ந்து பார்க்கும்போது
ஆடுதசைகள் இறுக்கிக்கொள்கிறது
ஆனாலும்
மேகங்களைப் பார்த்தேயாகவேண்டும் !
என்னைப்போலவே
ஒரு பறவை
கெண்டைத் தலையைத் திரும்பியபடி
சரிந்து பறந்து கடந்தது ,
அத்தோடு
வெறிச்சோடிப்போனது
மேல்வானம் !



*

மிகப் பிரத்தியேகமாக 

முழங்கியபடி
வெற்றிகரமான நாள்
என்றார்கள் !
வலிந்தெடுத்த ...
பரவசமான நிலையில்
வெறும் வார்த்தைகள்
நாலுதிசை நகர்வது போலிருந்தது !
கரகோஷங்கள்
பிளிறிய தருணங்களில்
கொஞ்சம்போல
ஆதி உயிர்ப்புகள்
முளைத்தெழுந்தது உண்மைதான் !
பிறகு
வெய்யில் தணிய
மழை தூறியது
வேறெதுவுமே நிகழவில்லை !



*


நேற்று
நேற்றேதான்
நாசமாப்போன நேற்றேதான்
அதுவும்
வேகமான ரெயில் பயணதில்
தொடர்பிழந்த இலக்கம்
வருடங்களின்பின் உயிர்ப்பித்த போதே
சந்தேகம் காற்றில் கனதியாகியது

அப்படியென்ன அவசரங்களில்
அப்பிக்கொண்டிருக்கும் காரணம் ?
எனக்கெடுத்துச் சொன்ன
முகம்தெரியாக் குரலின்
முடிவு வார்த்தைகளில்
பதுங்கிப் பதுங்கிய தொடக்கம்
இடை இடையில்
மனத்தைத் தேற்றிக்கொள்ளும்
உபதேச உத்தேசங்கள்
காலமாகியதை
ஒரேதிசையில் ஒருங்கிணைவாக்க
ஆத்மாவோடு ஆறுதல்ப்படுத்தும்
அர்த்தமில்லா சமரசங்கள்
அவன் இறந்துபோன
அந்த செய்தி உண்மையானபோது
வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது

ரெயில்
நான்தான்
பத்துநிமிட நேரங்கள்
நிரவமுடியாத நேசிப்பின் இழப்பில்
நிலைக்குத்திய வெறுமை வெளியில்
விழிகளை அசைக்கமுடியாது
ஸ்தம்பித்துவிட்டேன்



அப்போதும்
சந்தோஷத்தில் அசைந்தாடி
ஏறி இறங்கித் துள்ளிக்குதித்து
ரெயில் 

வேகமெடுத்துத்தான் 
ஓடிக்கொண்டிருந்தது…

*
அது
ஒரு பறவையின்
அவசர அழைப்பாயிருக்கலாம் ,
விடைபெறும்
மேகங்களைத் ...
திரத்திக்கொண்டிருக்கும்
சூழ்நிலை போலவுமிருக்கலாம் ,
கூர்ந்து கவனிப்பதால்
வெளிச்சங்கள்
வெறும் இருட்டாக மாறிவிடும்
என்னுடைய வானத்தில்
இரவெல்லாம்
கலந்துவிடுகிறது
அதன் கீச்சிடல் !









No comments :

Post a Comment