Wednesday, 2 May 2018

ஒரு வெள்ளை மரம்.

நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் தெரிகிறது, நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இதில் எதை நாம் பார்க்கிறோம் ? " பார்க்கிறோம் " என்பது ஒரு எளிமையான வார்த்தை. ஆனால் உண்மையில் நாங்கள் பார்க்கும் கோணமும் தெரிவுகளும் நமக்கு இன்னொரு பரிமாணத்தை உணரவைக்கலாம் .,நமது மூளை ஏற்கனவே பதிவுசெய்து வைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தான் கண்கள் காட்சியை திரை இழுத்து விரித்து வைக்கின்றன .

                                                          நமது மூளையில் உள்ள ரசாயன கலப்பு விகிதம் மாறும் போது அது பார்த்தலின் எதிர்வினையை முற்றாக வேறுஒரு அனுபவமாக மாற்றும் என்று நரம்பியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  ஆங்கிலத்தில் இதை " சைக்கடிலிக்  எபெக்ட் " என்கிறார்கள் .பழமையான  சித்தர்களும் காலம் நேரம் காட்சி இந்த மூன்றையும்   " வெற்றிடத்தில்    வெறுமை நிலை " என்பதுபோல சொல்லி இருக்கிறார்கள்-

                                                   " இல்லாத மேடையில் எழுதாத  நாடகம் " என்று கவிஞ்சர் கண்ணதாசன் ஒரு சினிமா பாடலில் எழுதி இருக்கிறார்.  அதை ஆங்கிலத்தில் "  வேர்ச்சுவல் ரியாலிட்டி " என்கிறார்கள்.   எப்படியோ நம்மைச் சுற்றி ஒரு பார்த்து உணரக்கூடிய உலகம் நமக்காகவே காத்திருக்கு. அது வேற எப்பவுமே முரண்பாடாக இருக்குதா அதுதான்   எவ்வளவு கவிதைகள் எழுதக் காரணமாக இருக்கு!  அது போதுமே இப்போதைக்கு.!

                                                அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  


பூனைபோலவே 
வெய்யில் பதுங்கிக்கொண்டிருக்கும் 
விவர்மர நிழலில் 
அகன்ற தெருமுனை !

வளைத்துப்பிடித்துள்ள 
வீதியோரப் பூக்கடையில்
டூலிப்பையும்
ஆர்கேன்ஸாவையும் தவிர
மற்றதெல்லாமே
பெயர் தெரியா மலர்கள் !


முண்டுகொடுத்தபடி
அந்த கடை உரிமையாளன்
சிக்கரெட் பத்துகிறான் !


நான்
பிராங் காப்காவின்
" மேடமோர்போஸிஸ் " நாவலின்
நாட்பதியோராவாது பக்கத்திலிருந்து
நிமிர்ந்து பார்க்கிறேன் !


வண்ணங்களில்
மனதின் ஆதாரமான இருப்பு !


ஒரு
வயதான பணக்காரி
பத்துத் கன்றுகள் தெரிவுசெய்கிறாள் !


சுருக்கம் விழுந்தவளின்
வெறுமைக் கண்களை
நிறங்கள் விரித்துவிடுகின்றன!


அவளின்
வெளிறிய முகத்தில்
வீட்டின் வெற்றிடங்கள்பற்றிய
விபரங்கள் எழுதப்பட்டிருக்க
மழை லேசாகத்தூற ஆரம்பிக்கிறது !


மலர்கள்
போட்டிபோட்டு
சிரித்து விரியத்தொடங்குகின்றன !


பூக்கடைவைத்திருப்பவனின்
முகம்
வாடத்தொடங்குகிறது !


.....................................................................................

பயப்படவேண்டாம்
ஒரு
புதிதான யுகமென்பது
நுண்ணோவியனின்
காலமான ஆசையிலிருந்து 
விடுபட்டுக் கிளம்பிவருவதல்ல !


ஒரு
மோசமான
திக்குத்தெரியாத அலைச்சலில்
ஏதோவொருவிடத்தில்
நிஜமாகிப் பரீச்சயமாகிவிடும்
கவிதை ,


ஒரு
அர்த்தமில்லாத பாதையில்
தேவையிழந்து
அபத்தமாக முடிவடைந்த
யுத்தம்,


ஒரு
மனத் தைரியமிலாதவனுக்கு
கழுத்தளவு சாபங்களிலும்
விகசித்துக் கிடைத்துவிடும்
விமோசனம் ,


ஒரு
ஓவியனின் அசட்டைத்தனத்தில்
புதியவொரு திசையெடுத்துக்
கலைந்து போய்விடும்
நிறப்பிரிகைகள்


ஒரு
காலூன்றமுடியாத கனவில்
சிறகுகள் ரெண்டும்
கறுப்புவெள்ளையாகவிருக்கும்
வண்ணாத்திப்பூச்சி ,


ஒரு
பராக்கிரமகாலத்தின்
கடைசிப் பெருமூச்சைப்
புழுதியோடு முந்தவிடும்
வீராதி வீரன் ,


இப்படித்தான்
முடியவே முடியாதென்று
வரிந்துகட்டிக்கொண்டிருந்த
அத்தனை கட்டுமானங்களும்
அழுத்தமாகவே
முடிந்துபோகிறது !


.................................................................................

காதலர்களின்
தளிர்மேனிமினுக்கிகொண்டிருக்கும்
முகப்பிரகாசங்களை
ஒரு
பஸ்தரிப்பிலிருந்து 
விழுங்கிக்கொண்டிருக்கிறேன் !


சூனியக்காரியின்
அசிங்கமான சிரிப்புப்போல
தெருவிளக்குகள்
கசியவிடும் நியோன் வெளிச்சம் !


சுயகட்டுப்பாடிளந்து
பின்புறத்தை உள்ளங்கையிளிறுக்கி
ரசனையோடு முத்தமிடுகிறவனோடு
துவண்டுவிடுகிறாள் அவள் !


இருட்டில்
முகத்தைத் தேய்த்துவிட்டு
சுளித்துக்கொண்டு
மேமாதக் காற்று !


நம்பிய காதல் வார்த்தைகள்
எல்லாமே பொய்யென்று
குற்றம் சாட்டும் அவளைத்
தூக்கியெறிந்து
கைகளை விசுக்கிச் சாடுகிறான்
அவன்!


குமுறல்களை
மரியாதையோடு கேட்டுக்கொண்டிருக்கும்
கருங்கல்லு வீதி
உச்சுக் கொட்டுகின்றது !


வெறிஏறிய கூச்சலோடு
ரெண்டு பெண்கள்
இடுப்பை வளைத்துக் கழுத்தை
சங்கப்படுத்துகிறார்கள் !


வழிப்போக்கர் போலவே
நெருக்கி நடந்துகொண்டிருக்கும்
இராத்திரி மனிதர்களின்
யாத்திரை !


ஏமாற்றங்களை
அலட்சியம் செய்துகொண்டிருக்கும்
இன்றைய இரவின்
காம இணைப்புகளை
அடுத்தக்கடத்துக்குக்
காலம் கொண்டுபோகுமா ?


ஜோசித்து முடிப்பதுக்குள்
இரவுபஸ் தரிப்பிடத்துக்கு வந்துவிட்டது !


.....................................................................................

எது 
உண்மைகளை ஒத்துக்கொள்ளும் 
அசல் வரிகள் 
எது 
சோடிக்கப்பட்ட 
நகல்ப் பிரதியெடுப்புக்கள் ?


ஒழுங்கின்றிக் கிடக்கும்
இருவேறு மூலைகளில்
அசாதாரணமான தொகுப்பாக
நிட்கிறது
பெயர்களை ஒளித்துவைத்திருக்கும்
கையொப்பங்கள் !


கண்களைக் குருடாக்கிவிடும்
பிரகாசத்தோடு
வெளிப்படுத்தப்பட்ட வர்ணங்கள்
எதையுமே மறைக்கவில்லை !


இறுதிக்கு முன்னதாக
இரக்கமற்ற எளிமையோடு
திடுக்கிடும்படியாக
மூன்று வாக்கியங்கள்
நிஜத்தை வெளிப்படுத்திவிட்டது


என்
பாதிதான் முடிக்கப்பட்டிருக்கும்
நடைப்பயணங்களில்
பாதங்களில் ஒட்டியிருக்கும்
மணல் துகள்கள்
அனுபவத்தை
வானம் முழுவதும் நிரப்பிவிடும் !


நீ
மரணத்தவிப்போடு
பழக்கமான
இடைச்செருகல்களைத்
திருத்தவேமுடியாது
இப்படியேதான் எழுதுவாய் !


என்
வயதாகிய துயரமும்
ரகசியமான ஆசைகளும்
சந்தோஷக்கொண்டாட்டங்களுக்கு
விட்டுக்கொடுப்பதில்
முன்னேறிவிடுகின்றன !


............................................................................

அவன்
வெட்டையில் நின்ற
காட்டு மரங்களைப்பற்றி,

ஏத்துப்போடும்
வேட்டைக்காரர்களின்
இடியன் கட்டுதுத்துவக்குப் பற்றி,

ஆமணக்கு
இலைகளின் மேல்விழும்
வெளிச்சம் பற்றி ,

அதர் போட்டு அசையும்
அலியன் யானையைப் பற்றி,

கண்வளயத்தை நேரடியாகக்
கருக்கும்
வெய்யிலைப்பற்றி ,
துரமாய்ச் செல்லச் செல்ல

எதட்காக கிரவல்மண் பாதைகள்
சுருக்கிக்கொண்டுபோவதுபற்றி ,

எப்போதாவது
பொறுமையிழக்கும்
குளத்து முதலைகள்பற்றி ,


நீள் 
கதைகளாவே 
சொல்லிக்கொண்டிருந்தான் !

சிலநேரங்களில்
தலை அசையாமல்
சிலநேரங்களில்
ஓங்கியடித்துக் கொல்லப்போவதுபோலவும்
பார்த்துக்கொண்டிருந்தான்!


சலிப்பாகவும்
அபத்தமாகவுமிருக்குமென்று
வேறு
வழியில்லாமல்
அடுப்புத்¨தீயைக் கிளறி
தண்ணி ஊற்றியது போலவே
ஒன்பது வருடங்கள் முன்னர்
சரித்து விழுதப்பட்ட
முக்கிய சம்பவங்களைத் தொடவேயில்லை!


..............................................................................................

மெதுவாகவே
நெருங்கிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு
புளித்துப் புரைத்தட்டிக்
கிழித்துப்போட்ட நினைவுகளிலும் 
கொட்டி இறுக்கி
அணைத்துக்கொள்ளவேணும்
இனிமையான விசியங்களேயில்லை !


கைவிரல்களில்
பிசைந்துகசிந்து ஒட்டிக்கொண்ட
பாலப்பழ வாசனைகள்
ஏதோவொரு கதையைச் சொல்ல
பாசாங்குகளற்று
நன்றாகவே நினைவிருக்கு !


பிரஞ்சைக்குள்
பெயர்ந்து வந்த ஞாபக அடுக்குகளில்
உள் நுழைந்துவிடும்
விரோதங்களையும்
அசைபோடப்போவதுமில்லை !


ஒரு
மெல்லிய ஒளிக்கற்றை
மெல்ல
ஊடுருவியதுபோலவே
பாதிமயக்கத்தில்
நாங்கள்
இலக்கற்ற மாயைகளில்
திளைத்துக்கொண்டிருந்தபோதே
முற்றிலுமாக சரணடைந்துவிட்டது
விஷங்களும்
வேஷங்களும்
விஷமத்தனங்களும் நிறைந்த
புராதனமான புழுதி !


...........................................................................

கவனத்தை
மேலும் கீழும் ஈர்க்காமல்
முடியும்வரையில்
ஒரு
மரத்தின் பின்னாலே 
மறைந்து நிற்கிறேன்   !


ஓரக்கண்ணால் பார்ப்பதை
நிறுத்திவிட்டு
எல்லோரையும்விட
அதிகமாய்
அழுகிறார்கள் அவர்கள் !


துள்ளிக்கொண்டிருந்த
நாட்களின்
நினைவுகளில்
நாற்றமெடுக்கும்
குளிர்ந்த சேற்றுமண் !


அடித்து ஓய்ந்தபின்னும்
விழுந்துவிடாமல்
மூச்சுக்குத் திணறும்
காற்று !


ஒப்பாரிகளில்
மிதமிஞ்சிய சோகத்தைத்
நனைத்துப்பிழிகிறது
மழை !


வதந்திபோலக் கிளம்பியதால்
நையப்புடைக்கப்பட்டு
சிதைக்கப்பட்டு
மர்மமான வியாதியொன்றின்
பிரதியெடுப்புப் போல
அட்பாயுளில் இறந்து போகிறது
இந்த
அட்புதங்களை உருவாகும்
நிமிடம் !


...............................................................................

நட்பின்பிரகாரம்
அழைப்புக்கொடுத்தனுப்பிய
நான்குநாட்களின் பின்
ஒரு
அருவருப்பான பிசாசு 
ஓவியம் வரைவதைப் பார்க்கக்
சென்றேன் !


அந்தப் பிசாசின்
வரலாற்றில்
மேலோட்டமான பொய்கள்,

மெய்யியலில்
தத்துவமில்லா சமாளிப்புகள்,

நிக்கமுடியாமல்
பக்கம் தேடிச் சாயும்
வெற்றுக்கொள்கைகள்,

இதெல்லாம் வெறுக்கவைத்தாலும்
அந்தப் பிசாசு
மனதுக்குள் சிலாகிக்கவைக்கும்
என் சிநேகிதம் !


பிசாசின் ஓவியக்கூடம்
பிணவாடை வீசும் கடலோரம் ,

சுவர்களில்
பேய்கள் கபாலத்தில் கூழ்குடிக்கும்
கறுப்பு ஓவியங்கள் ,

நிலமெல்லாம்
அநாதரவான ரத்தத் திட்டுக்கள்,

ஜன்னல்களில்
அடர்காட்டின் ரகசியங்கள் !


ஒரு மூலையில்
தலையில்லாத பெண்ணொருத்தி
நடனமாடிக்கொண்டிருந்தாள் !


பீதியெடுக்கும் பதட்டத்தில்
அந்தப் பிசாசு
வரையத்தொடங்கவிருந்த ஓவியத்தின்
தலைப்பை மட்டும்
தட்செயலாகக் கேட்டுவிட்டேன்.


" வானவில் "
என்றது மென்குரலில் பிசாசு!


...............................................................................

பறவைகளுக்காக
சொர்கத்தை விரிக்கும்
வசந்தகால விருட்சங்கள்,


மார்போடு இறுக்கியணைத்துப்
பாலூட்டும் 
இளம் பெண்னின் கண்களில்
நிரம்பிவழியும் திருப்தி,


வேகம் பிடிப்பதையும்
படபடப்பதையும்
ஓவியமாகிக்கொண்டிருக்கும்
காயம்படாத காற்று,


கயிற்றைப்போல
நெளிந்து செல்கிற
வாரயிறுதி வாகனங்கள்,


வடிவமில்லா மைதானத்தில்
தவளைப்பாச்சல் போடும்
வெள்ளைக் குழந்தைகள்,


துறைமுக முனையில்
ஒரு

பாய்மரக் கப்பல்,

அலைகரையொதுக்கத்தில்
ஆத்மாக்களுக்கு
நம்பிக்கைகளைக் கொடுக்கும்
கல்லறை,


அரைகுறை மேலாடையில்
மிகப்பருமனான பெண்ணொருத்தி
வேகநடை போகிறாள் ,


தெரிவதை விடவும்
அதிகமாகவே
பாக்கமுடியுமா ?

கேள்விக்கு
உதாரணமாகிவிடுகிறது
நானிருக்குமிந்த இடம் ! 


................................................................................

ஒரு
வெள்ளை மரத்தை
வர்ணிக்கும் பரவசத்தையாவது
எனக்குத் தாருங்கள் !


இத்தனை 
வெள்ளைக் குழந்தைகள்
அதுவும்
ஒரேபிரசவத்தில் !


போகோனியா மரத்துக்குக்
பூரித்துப்போன
கொண்டாட்டம் !


மழை பிழிந்து பெய்த
முன்வசந்த இராத்திரிகளில்
நெஞ்சு படக்குப்படக்கென்று அடிக்க
செவ்விதழ்
வண்டுகளோடு செய்த
காமக் கழியாடங்களை
ஒருபோதும் குறைசொல்லவேண்டாம் !


வஞ்சகமாகவே
மாலை நேரத் தென்றல்
பூந்துணர் பருவத்ட தொடக்கத்தில்
கருக்கலைப்புக்கு
உலுக்கிப்பார்த்ததும்
சத்தியமாய் உண்மைதான் !


பிடிவாதமான உறைபனி
மொட்டுக்களோடு
முட்டிமோதியபோது
அடிவயிற்றை இறுக்கிப்பிடிதுக்கொண்டே
தப்பிவிட்டது !


எப்படியோ
வெள்ளை மலர்களின் சுகப்பிரசவம்
சென்றகிழமை நடந்திருக்கு !
வாட்டி எடுக்கப்போகும்
கோடை வெய்யிலைத்
தனியாகவே சமாளிப்பது பற்றி
அலட்டிக்கொளவதில்லை !


இனி
தாலாட்டிப் பாலூட்டும்
தாய் மரம்
வாசனைகளோடு வந்திருக்கும்
பூங்காவனக் காதலர்க்கும்
கல்யாண ஊர்வலத்தை மறக்காமல்
மென்பூக்கள் சொரிந்து
தலைவாரிக்கோதிவிடுகிறது !
1 comment :

 1. பிடிவாதமான உறைபனி
  மொட்டுக்களோடு
  முட்டிமோதியபோது
  அடிவயிற்றை இறுக்கிப்பிடிதுக்கொண்டே
  தப்பிவிட்டது !////
  Amazing

  ReplyDelete