Wednesday 2 May 2018

அனுதாபங்கள் அவசியமில்லை

ஒரு ரெயில்ப் பயணத்தில் யாருமில்லாத முன்னிருக்கையில் சுவுடிஷ் மொழியில்  ஒரு கைவிடப்பட்ட சஞ்சிகை கிடந்தது. அதன் தலைப்பைப் பார்க்க உதோபியா என்று எழுதப்பட்டு இருந்தது. எத்தியோப்பியா எரித்திரியா போல இதுவும் ஒரு ஆபிரிக்க நாடாக இருக்குமோ என்று ஒருவித சுவாரஸ்யத்தில் பக்கங்களை  பிரட்டிப் பார்க்க அதில மருந்துக்கும் நான் எதிர்பார்த்தவைகள் இருக்கவில்லை. அதில இருந்ததெல்லாம் வில்லங்கமான கட்டுரைகள்.

                                                                  ஆங்கிலத்தில் " Utopia " என்ற சொல்லுக்கு விளக்கம் தேட அது  "  is an imagined community or society that possesses highly desirable or nearly perfect qualities for its citizens..." என்று தொடங்கி மிக நீண்ட வரலாற்றுத் தத்துவக் கோட்பாடு உள்ள விளக்கங்கள் நிறையவே இருந்தது. ஆச்சரியமாக உதோபியா என்று ஒரு இடத்தை ஸ்டோக்ஹோம் நகரத்து விளிம்பில் உள்ள ஆல்பி என்ற புறநகரத்தில் உருவாக்கி   இருப்பதாகவும் , இந்த சஞ்சிகையை அங்கே வசிக்கும் இளையவர்கள் வெளியிடுவதாகவும் அதில விபரங்கள் இருந்தது.

                                                              உதோபியாவுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்று எனக்குத் தெரியாது. அதை மொழிபெயர்த்து சொல்லவும் முடியவில்லை. பலசமயம் வார்த்தை வலைக்குள் சிக்கிக்கொள்ள முடியாதவாறு சில சொற்கள் தனித்துவமான தன்னிலை அர்த்தங்களுடன் இருக்கின்றன, அவற்றை மொழிமாற்றம் செய்தால் ஆதாரமான  செய்தி  கசங்கிப்போய்விடும் நிலைமையும் இருக்கு. 


                                                          எப்படியோ அந்நிய மொழியாக இருந்தாலும்  நமக்குத் தெரியாத எத்தனையோ சொற்கள் இன்னமும் அறிவதட்காகக் காத்திருக்குது போலிருக்கு. நாம் தானே " எங்களுக்கு எல்லாமே தெரியும் " என்ற திமிரெடுத்த மனப்பான்மையில் கண்டறியாதவன் கலியாணம் கட்டின உடன பெண்டிலை தலையில தூக்கிக்கொண்டு காடுமேடெல்லாம் அலைஞ்சானாம் என்பது போல  கெப்பம்  நிமிர்த்திக்கொண்டு திரிகிறோம்

                                                                 அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  


உடல் நலத்தில் 
எல்லை மீறிய ஒத்துழைப்புக்கள் 
மறுக்கப்பட்ட நண்பன் 
இறந்தகாலமாகிவிட்டான். 


வயது 40 கூட ஆகவில்லை.
இளமை மனைவி,
16 வயதான மகன்,

திசை வெறித்தபடி
அமர்ந்து கொண்டிருந்தனர்.



என்னைக் கண்டதும்
நிர்க்கதியாக்கி
நிரந்தரமாய்ப்  போய்விட்டாரே என்றாள்
ஆறுதல் சொல்லி
அகாலத்தை சமாதானப்படுத்த
எனக்குத் தெரியாது


ஆனால்
இறுக்கமான வெற்றிடத்தில்
பொருத்திப்பார்க்கும் உறுத்தலில்
சோகம் குறையவில்லை…

அம்மாவும் மகனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பிரிவின் இடைவெளிகளை
அர்த்தப்படுத்த
தன்பிடியில் விட்டுக்கொடுக்க
விதி முன்வரவில்லை.

மகனுக்காக வாழவேண்டுமென்றாள்
மூச்சு வெளியேறிய பின்னர்தான்
அதிகம் பொறுப்புகள்
காத்திருக்கிறதும் என்றாள்

எனக்கவள் சுருங்கிய முகத்தைப்
பார்க்கையில் அச்சமாக இருக்கிறது

விசுவாச மரணம்
எதையோ நம்பச் சொல்கிறது
தேர்வுசெய்துதான்
நிஜப்பிரதியை எடுத்துக்கொள்கிறது.

இறுதி
யாத்திரை ஏற்பாடுகளைக்
கவனிபவர்கள் வந்துவிட்டார்கள்

நான்
இன்னும் ஜோசித்துக்கொண்டிருக்கிறேன்
ருக்கும் வரையே எல்லாம்
பின் மிஞ்சுவது
நினைவுகள் மட்டுமே..!


..................................................................................

இப்படித்தானா
அப்படித்தானா எனத்தெரியாத 
ஒரு எதிர்பாராத 
மிதமிஞ்சி அலட்சியமான 
சடுதியைத் தேர்ந்தெடுத்து 
அந்த
விபத்து நடந்துவிட்டது


மின்னசைவில்
உள் நுழைந்த தண்ணி
விசைப்பலகையின்
விரல் அழுத்திய விலாசங்களையே
தேடியழித்து விட்டது



மிகமிக அவசரத்துடன்
மனவிரக்தியான கோபத்திலும்
பாதியிலேயே அணைத்து விட்டு
எழுந்து சென்று
பல்கனியில் அமர்ந்து விட்டேன்


இப்போதுதான்
அறுந்துபோன கணப்பொழுதுகளை
கைப்பிடிக்க முடியாத
காலத்தின் விந்தையை
திடீரென தொடக்கத்திட்கு
திசை மாற்றிவிட முடியாத
கட்டாயப்படுத்தல்
நம்பிக்கைகளோடு முரண்படுத்துகிறது

அடுத்த மடிக்கணனிவரை
நின்று கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
காத்திருப்பு பொறுமையிழந்து
கனதியானதாகத் தோன்றும்
உச்சக்கட்ட வெற்றிடத்தில்
ரசனையாகவே ரகளை செய்யும்
மவுனப் பெருமூச்சுக்கள்
என்னவெல்லாமோ சொல்லித்தருகிறது..


......................................................................................


இடறி விழுந்தபோது 
முழங்காலை நீட்டி உதைக்க 
நிமிரக்கஷ்டப்பட்டது
அப்பவும் 
சந்தேகம் வரவில்லை 


வெளிக்கதவு ஓட்டையில்
உள்கதவுத் திறப்பைப் போட்டு
நிமிண்டி முறிக்கப்பார்த்தேன்
அப்பவும்
ஒத்துக்கொள்ளவில்லை



அவசரத்துக்கு
நன்றாகத்தெரிந்த
ஒரு சொல்லின் எதிர்ச் சொல்
கண்ணாம்பூச்சி காட்டுது
அப்பவும்
நியாப்படுத்தமுடியவில்லை


ஐந்தாம்தட்டுக்கு
மாடிப்படிகளில்
ஏறிஇறங்கும் போதே
நெஞ்சோரம் வலியோடு
உள் மூச்சு வெளிவாங்குது
அப்பவும்
சமாதானம் சொல்கிறேன்

பின்சாம இரவுகளில்
வலது கையும்
தோள்மூட்டு எலும்புகளும்
கழண்டுபோவது போல
பிரிவினை கேட்குது
அப்பவும்
நம்பாமல் இருக்கிறேன்

ஆன்மீகத்தில்
அதிகளவு ஆர்வம் வர
பிறப்பையும் இறப்பையும்
ஒரு நாடகம்போல
ரசிக்கத்தொடங்குகிறேன்
அப்பவும்
ஏற்றுகொள்ள மனமில்லை

இன்னும் எவ்வளவு காலம்தான்
சமாந்தரமாகவே பயணித்து
நிஜத்தில் நிழலாகும்
வயதாவதை
அசட்டை செய்யமுடியும் ?


..............................................................................

ஐந்தாவது தட்டு
வெழிவிலத்தும் வாசல்
அகன்ற ஜன்னலை
அலைந்து வந்த காற்று திறந்தது

எலிவேற்றர்கதவருகே 
நான் 



படிப்படியா
மேலிருந்து இறங்கிவரும்
குதிக்கால் சப்பாத்துச் சத்தம்
யாராக இருக்கும்?
ஏழாவது மாடியில் வசிக்குமவளா?


ஹ்ம்ம்,,
அந்தக் கலையாத வெள்ளன்னமேதான்,

உலராத சுருள்முடி
கொரிடோரையே பறக்கவிட்ட சென்ட்

என்னைக் கவனிக்காமல்
படிப்படியாக இறங்கினாள்

செவ்வந்திப்பூக்களின்
மூச்சு முட்டல்களோடு
படிப்படியாக காமம் மேலேற
ஒரு நொடியின்
திடீர் முடிவெடுப்பில்
மெதுவாகப் பின்னுக்குப்
படிப்படியாக இறங்கினேன்

வளைவுகளில்
அவள் வளைவுகள்
இச்சையை அதிகரிக்க
இரகசிய ஆத்மாவின்
அசிங்கமான பக்கம்
படிப்படியா மேலேறிக்கொண்டிருக்க
நிதானமிழந்த ஒழுக்கம்
படிப்படியாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தது

வெளிக்கதவு வாசல்படியில்
வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்

பூனையின் நீலக்கண்கள்
புடையன்பாம்பின் கருநீலமாகி
ஒருபடி மேலேறியிருந்ததில்
படியளந்து திண்றதெல்லாம்
அப்பட்டமாகவே
பிடிபட்டது போலிருந்தது !


.................................................................................

புறக்கணிக்கப்பட்ட
அனுபவங்கள்
தரவிறக்க்கப்படுகிற
சில கனதியான நேரங்களின்
கொப்பளித்துவிடும்
கோபமாகி விடுகிறது


வார்த்தைகள்
ஒரு அரசியல் அகதிக்கு
களத்தில் நடந்ததை
புலத்தில் கொண்டுவந்து சேர்த்திட
ஆதரவுகள் இல்லவேயில்லை



முகத்தை முறித்து
தோற்றுப்போன மனிதனாக
கொடூரமான மொழியில்
பிரதி எடுத்துப்
பதிவாக்க வேண்டியுள்ளது


பொறுமையைக்
காத்திருக்க வைப்பதென்பது
அநிச்சயமான ஒரு நொடியில்
கைநழுவி விடுகிறது

ஒருபக்கத் தகவல்களும்
ஓரவஞ்சனைக் காட்சிகளும்
வெகுதூரத்தில்
பனங்கூடல்களுக்கும்
கிடுகுமட்டை வேலிகளுக்கும்

நடுவில் 
பிரிந்த திசைகளில்
முட்டிமோதி எரிச்சலூட்டுகின்ற
அவற்றை சேமித்து அடைகாப்பதில்
திக்கித் திணறல்களும் இருக்கிறது.

நினைத்து புளங்காகிதம் அடைவதில்
ஒரு பகுதி திருப்தி கொள்கிறது.

சராசரியாக வாழ்வதை
இப்போதைக்கு
விதியாக நினைப்பதை தவிர
வேறு வழியில்லை...


..............................................................................

பனிப்புகாருக்கென்று 
பிரத்தியேகமான வாசனைகள் 
ஏதுமிருக்கா ?

இன்றைய தினப்பயணம் 
திசையிழந்து தொடங்கியது 


மலை உச்சியான
என் வாழ்விடத்தில்
நிறையவே
மரங்களிருந்தும்
மண்ணெண்ணெய் வாசம்
பத்தடிக்கு முன்னே
உலகத்தையே அழித்துப்போட்டு
உறைநிலைக்குளிரின்
குரல்வளை இறுகிக்கொண்டிருந்தது



புரநகரத்தை
ஊடறுத்துக் கடந்தபோது
சவுக்காலை ஒன்றை
இழுத்து மூடிவைத்திருக்க
அந்த இடத்தில
பலநாள் குளிக்காத பிசாசின்
கழுத்து வியர்வை வாசம்


விளிம்புநகர எல்லை
மழையின் திரைச்சீலை

அடிச்சுப்போட்டுக்கொண்டு
அவடமெல்லாம்
மெதேன்வாயுவின் வாசம்
நடு நகரத்தையும்
சாம்பல் நிற நாக்கால்
நக்கிக்கொண்டிருக்க
சேறும் சகதியுமாய்
மூக்குச்சிந்திய
வீதியெங்கும்
மாட்டுச்சாண வாசம்

மத்திய ரெயில்வே சதுக்கத்தில்
நிறையப் பெண்கள்
முகம்சிவந்துலாவினார்கள்
அந்த இடத்தில மட்டுமே
றெக்ஸ்சோனா சோப்பு வாசம்

நீங்களே சொல்லுங்க
பனிப்புகாருக்கென்று
குறிப்பிட்ட வாசனைகள் ஏதுமிருக்கா ?

அல்லது
கார்த்திகைக் கூந்தல்களோடுதான்
உரசுகின்றதா ?


...........................................................................

திருடர்களுக்கு
இருட்டு கச்சிதமான வாய்ப்பு
எல்லாவிதமான
அடிப்படைகளின் படியில்
கால்களைத் தேய்த்துவிட்டுக் 
கவிதை எழுதலாம்


கோப்பிக் கப்பின்
ஆதர்சங்கள் இணையும்
வாழ்க்கை வரைபடத்தை
புரியாமலே
நாயர்கடையில் வாய்நாறும்
எவசில்வர் டம்ளரை
தேனீர்க் கோப்பை என்கிறீர்கள்



உருப்படாத காதல்
உப்பில்லாத சாம்பாறாகி
எத்தைனையோ வருடங்கள்


மிக மெல்லிய நட்சத்திரஒளியை
நாட்குறிப்பில்
விடியலென்று ஏற்றி வைக்கலாம்

பறக்கவிடாமல்
சிறகுகளை எழுதி எழுதியே
வானம்பாடியின்
சின்ன வானத்தை
துடைத்து அழித்துவிட்டீர்கள்

கொஞ்சமாக
இலையுதிர் இலைகள் இருக்கு
அதையும்
கூட்டி அள்ளிக்கொண்டு
குப்பை ஆக்குவீரகள்

வழி தவறிய மழையை
பாலத்காரமாய் இழுத்துவைத்து
எவளவு எழுதியும்
நீர் உண்ட மேக வரிகள்
நனையப் போவதில்லை

உயிரோடு இருப்பதை
நளினமாக வடிவமைக்கைப்பட்ட பொய்
என்கிறேன் நான்
அதை அபத்த மாயை என்கிற
நீங்கள்
மிகப் பெரிய உண்மையோடு
பேரம் பேசுகிறீர்கள் .


.....................................................................

மழையின்
ஒவ்வொரு துளியையும்
தனித்தனியாகப் பிரித்து
ஊடறுத்து அதன் நடுவே
நடக்க முயன்று 
தோற்றுப்போனேன்,


திரிச்சீலைபோலக்
குளிரை ஊதி அணைத்துவிட்டு
வெப்பமான மூச்சுக்களை
நகர்த்தி வைக்கும்
பதினாறு திசைகளும்
விறைத்துவிட்டது ,



முகத்தைச் சுழிக்கும்
முன்னிருட்டு இரவு
நட்ச்சத்திரங்கள் களவாடப்பட்ட
குற்ற வழக்கின்
விசாரணைகளை
ஒத்திப்போட்டுக்கொண்டேயிருக்கு,


விதைவையான காற்று
எல்லாவற்றிலும்
வாழாவெட்டியாகிவிட்ட
அமங்கலத்தை நினைத்துப் பின்வாங்குது,

இன்றைய மாலைக்கு
சோடனைகள் திணிக்கப்பட்ட
வாசனைகள் தேவையில்லை .

அதனாலயோ
சொல்லும்படியாகத் தெரியவில்லை
கோடுகளை மீறி
எந்தவிதமான கவலையுமின்றி
தன்போக்கில் திரிகிறது
கற்பனை,

மிச்சமிருக்கும் சம்பவங்களை
சோரம்போன
சில சொற்களில்
கள்ளமாகக் கடத்துவதுவதுக்குப்
போதுமானதாயிருக்கு
இப்போதைய தருணம்
.


...............................................................................

தயவுசெய்து 
எந்தக் கவிதையையும் 
உங்கள் 
தத்துவ வித்தைச்செருக்கில் 
விமர்சிக்க வேண்டாம் 


எந்தப் படைப்பாளியையும்
பாடை ஏற்றும் நோக்கத்தில்
பரிகசிக்க வேண்டாம்



நீங்கள் முருங்கைமரம் ஏறிய
விட்டுக்கொடுப்புகளின்
முட்டாள்த்தனங்களை
அப்பவே இவர்கள்
அறிந்தும்தெரிந்துமிருக்கலாம்


உங்கள் தம்பட்டங்கள்
உங்களைத் தவிர
உலகத் தகுதியானவையில்லை

கோபங்கள் இல்லை
அனுதாபங்கள் அவசியம் இல்லை
இப்போதைக்கு
கொஞ்சம் வழிவிட்டு ஒதுங்கி
நியாயமாக நில்லுங்கள்

பாதை ஓர நகர்வில்
பார்க்காத நேரத்தின்
வலிகளைச் சேர்த்துக்கொண்டு
முடிவு வழியில்
யாரோவொரு ஏதுமில்லாதவனின்

அல்லது

யாரோவொரு அதிபுத்திசாலியின்
விடை தெரியாமல் விட்டுச்சென்ற
விழுங்கவே முடியாத
கேள்விக் குறியியில்
மரணமே ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் !


..........................................................................................


தெருச்சுவரில் 
அபத்தமான ஓவியம் வரைபவன் 
தயங்கித் தயங்கிய 
கோடுகளையும் புள்ளிகளையும் 
சில கோணங்களையும் 
பல வளைவுகளையும்
சில பல சுழிப்புகளையும்
இணைத்துக்கொண்டிருக்கிறான் ,


வீடில்லாதா செய்திகள்
அவனின்
கலைந்த கற்றையான தலைமயிரிலும்
குளிப்பு முழுக்கு இல்லாத
விட்டேந்தியான வியர்வை வாசனையிலும்
முன்னுரை எழுதிக்கொண்டிருக்கு,



அவனின்
நிறத்தெரிவுகள்
அவனின் மனப்பிறழ்வுகள் போலவே
புரியமுடியாமலிருந்தது !


இந்தச் சுவர்
அவனுக்கென்றே பிரத்தியேகமான
தோல்விகளில் விடைதேடும்
நாட்குறிப்பாகவிருக்கலாம் !

சொல்ல முடியாத
வார்த்தைகளை அவன் காயப்படுத்தாமல்
மிக மிக மென்மையாகவே
மை விசுறும் கொள்கலனை
அசைத்துக்கொண்டிருக்கிறான் !

நான்
கொஞ்சநேரம்தான் அவடத்தில்
முழங்காலில் குந்தியிருந்து 
பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒரு
பெரிய கதையைப்
பகுதி பகுதியாக்கிப் புகுத்தி விடும்
நேர்மையான நேர்த்தியில்
நான்
இதுவரையில் 
வலிந்து எழுதிய 
எல்லா கவிதைகளும்
அர்த்தமிழந்துவிட்டது !







No comments :

Post a Comment