Sunday 6 May 2018

எதைத் தேர்ந்தெடுப்பது?

ஸ்டோக்ஹொல்மின் நிறமே ஒரு காலத்தில் பொன்னிற முடியும், நீலக் கண்களும், வெளிறிய வெள்ளையுமாக இருந்தது இப்போது எல்லா நிறங்களும் மொழிகளும் பழக்க வழக்கம் பண்பாடு கலந்த சாம்பாரு போலாகி சுவிடீஷ் அடையாளமே பழங்கதையாகிவிட்டது. அதை ஜோசிக்க மன்டைக்குள் வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் என்ற பழமொழிதான் பாஞ்சுது.
                                                                     சுவிடீஷ் மக்கள் தவறாக ஒரு திட்டம் ஒன்றும் இல்லாமல் நிறைய பல்லின வந்தேறுகுடி மக்களை உள்வாங்கி விட்டார்கள் என்றுதான் விசியம் தெரியாமல் புலம்பிக்கொண்டு இருந்தேன். உண்மையில் சுவிடீஷ் அரசாங்கமே தங்கள் தலை நகரை லண்டன், நியூயோர்க் ,பரிஸ் போல பல்லிணக் கலாச்சார மக்களின் நகரமாக மாற்ற விரும்பியதாக ஒரு தகவலில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
                                                                          கஷ்ட்டம் யாரைத்தான் விட்டு வைக்குது. இண்டைக்கு அவர்களின் அந்த வினோதமான திட்டதுக்கு அதிகப்படியான விலை கொடுத்து அடியும் உதையும் வாங்கி வட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் சின்னாபின்னமாகி இருக்கு இன்றைக்கு இந்த நகரம்.

                                                       அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  


மும்மரமாகத்
தும்மும் 
மம்மல் முன்னிருட்டு 

மொடந்தையான
மரங்களில் 
வெள்ளைப் பனிப்பூக்கள் 

முட்டாக்குப் போட்டு மூடிய
புதர்களில்

தைமாத ஈரலிப்பு

கவனத்தை
சறுக்கி விழுத்தும்
குருணிக்கல் நடைபாதைகள்


விலாசம் இழந்ததால்
விறைத்துப்போன

தனிப்பறவை

கிசுகிசு கதைகளைக்
காவித்திரியும்
வெப்பம் தீராத காற்று


உருட்டிப் பொம்மை செய்யும்
விழிகளில்

மொழிபேசும் குழந்தைகள்

இடம்விட்டு
நகர வழியின்றி
நிலைக்குத்திய சிற்றோடை


சாட்டுக்கு எட்டிப்பாத்து
தலையை

உள்ளே இழுக்கும் சூரியன்

காலமில்லா பகலிரவில்
நேரம் தவறாத

சுவிடீஷ் மனிதர்கள்

சோம்போறி
ஜன்னல்களில்
பருவகாலச் சோடனைகள்


உத்தரவாதம்
தருகின்ற
உறைபனியின் உல்லாசம்


அனுபவத்தைக்
கடத்திச் செல்லும்
நேர்மையான கவிதைமொழி


நடுவில்
அந்நியமாக மாட்டிக்கொண்டு
நான்.!


................................................................................

இனியென் தேடல்
உள்ளிருந்து உந்துதல் தரும்
ஆர்வக்கோளாறுகள் அதிகமில்லாத
என்னைப் பற்றியது மட்டுமே


ஒரேயொருநாள் 
சொல்லாமல்ப் பறந்துவிடும்
படைப்பு

வார்த்தைகளற்ற
உயிர்வாழ்தலில்
அப்படியென்னதான் இருக்கிறது ?


இவளவு வருடங்கள்
வாழ்க்கையில் தேடியெடுத்து
இல்லாத நிறங்களில்
இருப்பதாக நினைத்த ஓவியத்தில்
சாயம் கழண்டுபோகிறது


நிறைய விசயங்களில்
விஷத்தன்மையும்
கைவிடுதல்களும்
ஒத்துக்கொள்ளும் தோல்விகளும்
பெருமூச்சுக்களும்
சலிப்பான காத்திருப்புகளும்
உடல் வேதனைகளும்
மனவெளி விகாரங்களும்



அறிவுறுத்தல்களுக்கு மட்டும்
குறைச்சலே இல்லை
அதில் எனக்கானவைகள்
விறைத்துப்போன ஆத்மா
பரபரப்பாக எழுதித்தரும்
தலைப்புச்செய்திகள்


ஆனாலும்
நடப்பதைப் பார்த்துக்கொண்டு
நடந்தே நடந்துகொண்டிருக்கிறேன்


நாளை என்பது
குருட்டு நம்பிக்கைகளை
இறுகப்பற்றிக்கொண்டிருக்கும்
இன்னுமொரு

நாளையாகவேயிருக்கிறது..!

......................................................................................

நடப்பதையெல்லாம்
சகுனம் பிழைத்த பல
சந்தர்ப்பங்களில்
அடைப்புக் குறிகளுக்குள்
கேள்விக்குறிகளோடு
வைக்கவேண்டியுள்ளது


நடந்தே களைத்த
பாதை ஓரங்களில்
உறைபனியையும்
புலம்பித்தள்ளக் காரணங்கள்
ஏகப்பட்டது சேர்ந்துகொள்ள
ஒவ்வொரு
தட்டப்படும் கதவுகளும்
சலனமில்லா ஓசையின்றி
மூடப்படும் போது
திசைவழியில்
சேருமிடம் பற்றிய
எண்ணத்தை குலைத்துவிடக்கூடாத
ஒரேயொரு நம்பிக்கை
இப்பவும்
ஒத்திசைவாகவே இருக்கு




புயலோடு போராடும்
பறவைக்கு
பறப்பதுக்கு வானம் தருகின்ற
அந்த
நல்ல மனம் நினைவில் உள்ளவரை
ஆதரிக்கப்படும் மொழி
எங்கெல்லாமோ அலைந்து
தேடியெடுக்கப்பட
இத்தனை வருடங்கள்
பொறுத்த முடிவு
எப்படியோ வரத்தான்வேண்டும்!


.................................................................................

பன்னிரண்டு
மாதங்கள் கடத்திக் களைத்த
நடுச்சாம இரவு
கால்களை நீட்டிப்படுத்திருந்தது


ஜன்னலைத் திறந்த 
சரியான நேரத்துக்கு
சற்றுமுன்னர் தொடங்கிவிட்டார்கள்


பிறகு
முழக்கம் முகம்தடவித் தெளிய
இருள் வான வீதியெங்கும்
நீலச் சிவப்பையும்
மஞ்சளை முதன்மைப்படுத்தி
எல்லா நிறங்களையும்
கலந்தடித்து விசிறிய
வெளிச்சங்களின் வர்ணனைகள்


பிறகு
காற்றில் கனதியான கந்தக வாசனை
பிரபஞ்ச வெளியில் பூமி
எப்போதும்போலவே சுற்றிக்கொண்டிருக்க
மனிதர்கள்
கைகளை இறுக்கிக் குலுக்கி
நெஞ்சோடு மார்பை அனைத்து
முதுகில்
மெல்லெனத் தடவிக்கொடுத்து
புத்தம் புதிய புதுவருடம்
பிறந்துவிட்டது என்கிறார்கள்


எல்லாவிதமான
கொண்டாட்ட ஆரவாரமும்
அடங்கும்வரை
திரைச்சீலைகள் ஆடிக்கொண்டிருந்தது


நினைவுகளை
அவ்வளவு இலகுவாக
புதுப்பிக்க முடியவேயில்லை!


..........................................................................

உறை குளிர்
காற்றின் விருப்பமில்லாக்
காதலோடு மல்லுக்கட்டி
அடைக்கலம் தேடத்தொடங்குகிறது


பார்த்துக்கொண்டிருக்க
நினைவெழுதிக்காட்டி
அள்ளிக்கொண்டு போகும் வீதிகள்


மழுங்குத் திருப்பங்களில்
ஒடித் தப்பிக்கிறது
மழை


எல்லா நிறமான மனிதர்களில்
யாருமே குடை பிடிக்கவில்லை .
ஆனால்
மழை தலைகளை
உரிமை எடுத்தபடியிருக்கிறது.


விறைத்து நடுங்கியபடி
பதுங்கிக்கொண்டேயிருக்கிற
தெருவிளக்குகள்
அணைத்துவிடும் போதெல்லாம்
பொண்ணுச்சி மலர்களின்
தளிர் மென்மையை
தனிமை இரவுகளுக்குள்
படபடப்புடன் சேர்ந்துவிடும் .


நேற்றுவரை
அழகற்றதை எழுதியதற்காக
விரோதம் காட்டிய நகரத்தின்
அடங்காத கோபம்
தனியாதபடியேதானிருக்கிறது




அழகை நிராகரித்தவன்
நான்
எனக்கு வெறுப்புக்கள் தருவதில்தான்
ஸ்டோக்ஹோலமின்
தெரிவுகள் பதுங்கியிருக்கு


ஆனால்
எனது நிலைப்பாட்டில்
இப்போதுவரை மாற்றமில்லை.!


...............................................................................

அர்த்தமில்லாத காலத்தோடு 
அனுசரணையாகி 
அமைதியாகவிருக்கிறேன்

நாளை பற்றிய அங்கலாய்ப்பில் 
நம்பிக்கைகளை 
பிரகாசமாகப் பூசிவைத்திருக்கிறேன்


உபதேசங்களை
எதிர்ப்பு மறுப்புகளின்றி
உள்வாங்கிகொள்கிறேன்


நேசிப்புக்களை
அதீத பிரயாசையோடு
நெருக்கமாக்கிவிடுகிறேன்


சிந்தனை சிக்கலாகும் போதெல்லாம்
பறவையின் சிறகில்
ஏறி அமர்ந்து கொள்கிறேன்


சின்னச் சின்னச் தோல்விகளில்
சின்னாபின்னமாகிவிடாமல்
இதயத்தின் வாசல்களை
இறுக்கியே மூடியிருக்கிறேன்


தூரல் மழை போல
ஆத்மாவை ஆதங்கம் நனைக்கும்போது
ஒரு விழுதுவிட்ட ஆலமரத்தை
மனதில் நினைத்துக்கொள்கிறேன்


எல்லா மனிதர்களுடனும்
நன்றே நலம் விசாரித்து
பணிவோடு நன்றி சொல்லி
சிரித்துப் பேசுகிறேன்


ஆனாலும்தான் என்ன
மிகவும் எளிதான கேள்விகளுக்கு
புரிந்துகொள்ளமுடியாத
கடினமான பரிமாணங்களில்
விடைகள் கிடைக்கும் போது தான்
சட்டென்று சடுதியாக
உடைந்துபோகிறேன்.!


...............................................................................

தேவதை உலகத்தில் இருந்து
இறங்கி வந்து
வெறுமனே நனைத்துவிட்டுச் செல்கிற
நிலம்
வெள்ளைப்பாயை விரித்துப்
பகலெல்லாம்
படுத்துறங்கி விட்டது


மரம்
வெண் பனிமழைக்கு
ஒதுங்கிக் கொள்ளவும்
குடையாகவே
விரிந்து
நின்றபடியே
விழித்துக்கொண்டிருக்கு.!


மேடுபள்ள
நடைபாதைகளையே
நிறை மாத
உறை பனி
சமனாக்கி வைத்திருக்க
நான்தான்
இடைவிடாமல் அதில்
குறுக்கு வழிகளைத் தேடுகிறேன்.


பொறுமையோடு
வெண்பனி
வெறுமையாக வைத்திருந்த
பக்கத்தில்
ஆயிரம் அவநம்பிக்கைகளுக்கிடையில்
அரிதாரம் பூசும்

அவசரப் பாதை
எழுதிக் கெடுத்த 

அபத்தமான கவிதையும்
உன்னில் மட்டுமே
ரசித்து உள்ளிறங்கிப் போகிறது!


.......................................................................


அடங்காத ஆத்திரமோடு 
பிடிவாதங்கள் சேர்ந்து தின்ன
குளிர் வெளியேறமறுக்கும் 
சூரியப்பொங்கல் மாதம் 


விடியாத இரவுக்கள் 
நேரத்துக்கும் காலத்துக்கும்
சமாந்தரமாக வெளிச்சங்களை விழுங்குது


நாளையத்தினம்
என்னவாகவிருக்கும் என்பதை
புரிந்து கொள்ளத் தவறும்
அற்ப சோம்போறித்தனங்கள்
சுற்றிவளைக்குது


உதவும் கொள்கைகளும்
நடைமுறைக்கு குழப்பங்களும்
ஸ்டோக்ஹோலோம் நகரத்தின்
பிரமாண்டங்களோடு
நீர்த்து விடுகின்றன


பலநேரங்களில்
யாரோடும் கதைக்கவே விடுகுதில்லை
தனியறுநிலையில்
ஒதுங்கிப்போகும் பிடிவாதம்


பலியாக்கிவிடும் அவலத்தை
சோடனைகளோடு

பெரிதுபடுத்தவிரும்பவில்லை

முடிவான கடைசிப் புகலிடம்
நிறைவான நம்பிக்கை


நிறையவே வாழ்வில்ப்பிடிப்பு
நிறையவே சாதிக்க ஆசை
நிறையவே உதவும் மனது
இப்போதைக்கு இதுவேதான்
இருப்பு முன்னிறுத்தும் வாய்ப்புகளெனில்


எதைத் தேர்ந்தெடுப்பது?

.........................................................................

இருட்டிலிருந்து 
நான் நினைத்ததுபோலவே 
அவ்வளவு 
இலகுவாக வெளியேறமுடியாதிருந்தது
அந்த அடர்த்தியான வார்த்தை !


அதன் நிறம்
என் கண்களுக்குத் தெரியவில்லை
ஆனால்
அந்த இரவு ஊதா நிறத்தில்
விடியும்வரை

முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
எப்படிச் சரியாகச் சொல்லமுடிகிறதென்றால்
அதை நானே
என்னில் ஒருபகுதியாக உணர்ந்தேன்.


ன்
அடுத்த ஆத்மாவின் பகுதியில்
கவிதை எழுதும் உட்சாகமெலாம்
வறண்டுபோயிருந்தது,


குளிர் காற்றின்
கிசுகிசுப்பையும்
ஈரமான தீண்டலையும்
தேவதைகளை வர்ணிக்கும்
தெய்வீக பாக்கியங்களையும்
வசனங்களின் நடுவில்
ஊடுருவி எகிறிப்பாயும்

வல்லமையெல்லாம்
அதுக்கு நிராகரிக்கப்பட்ட
நிபந்தனைகளாவேயிருந்தது .


எண்ணங்களை
மாற்றியமைப்பது பற்றியும்
அதுவாகவே
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.!


ஏதோவொரு
கவிதைப் புத்தகத்தில்
அது
சத்தமில்லாமல்
அடங்கிப்போயிருக்க வேண்டும் !


அல்லது
உங்கள் சந்தேகப் பார்வையைச்
சுண்டியிழுத்துக்கொண்டே
அது இறந்தும் விடலாம் !






1 comment :

  1. விறைத்து நடுங்கியபடி
    பதுங்கிக்கொண்டேயிருக்கிற
    தெருவிளக்குகள்
    அணைத்துவிடும் போதெல்லாம்
    பொண்ணுச்சி மலர்களின்
    தளிர் மென்மையை
    தனிமை இரவுகளுக்குள்
    படபடப்புடன் சேர்ந்துவிடும் . ///

    அரசனின் தனித்துவம்
    அழகான கவிதைகள் இந்தத் தெரிவினுள்.

    ReplyDelete